Wednesday, September 16, 2015

பிரம்மனின் மூக்குத்தி ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 78)

காஃபியை முடிச்சுக்கிட்டு அறைக்கு வந்து  ப்ரெஷப் பண்ணிக்கிட்டு மீண்டும் கிளம்பறோம்.  கும்மோணத்தில் இன்று நமக்குக் கடைசி இரவு. வேறெந்த கோவிலுக்கும் இந்தமுறை போகலைன்னாலும் சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு மட்டும் போனால் தேவலைன்னு  இருந்தேன்.  மேலும் ஒரு ஷாப்பிங் வேற செஞ்சுக்கணும்.  இதுவும் 'அவர்' சம்பந்தப்பட்டதுதான்:-)

ரொம்ப இருட்டும் முன்னால் போய் வந்துடலாமேன்னு கிளம்பி கீழே வந்தால்... 'இங்கெ பக்கத்துலே ஒரு பிரம்மன் கோவில் இருக்கு'  என்ற தகவலோடு இருக்கார், நம்ம சீனிவாசன்.

ராயாஸ் க்ராண்ட் லே இருந்து வலது பக்கம் கொஞ்சதூரத்துலே இருக்கும் ஜெபி கோவில் தெருவில் ரைட் எடுக்கணும்.  (ஜகன்னாத பிள்ளையார் கோவில் தெருவாம்!) கொஞ்சதூரம் போய்  இடதுபக்கம் திரும்பினால் ப்ரம்மா கோவில் தெரு. மொத்தமே 800 மீட்டர் தூரம்தான். ஒரு முட்டு தெருவில் போய் நிற்போம்.

பிர்மன் கோவில்!  ஸ்ரீ வேதநாராயணப்பெருமாள், வலையப்பேட்டை அக்ரஹாரம்.  சௌராஷ்ட்ரா மக்கள் நடத்தும் கோவில். ரொம்பப் பெரிய கோவில் இல்லை. கோபுரவாசல், கொடிமரம் தாண்டுனதும் பெரிய ஹாலில் பிரகாரம். நடுவில் மூணு கருவறைகளோடு,  ஒரு அமைப்பு.  ப்ரம்மன், வரதராஜர், ஸ்ரீ யோகநரசிம்மர்.  மூவருமே  ரெவ்வெண்டு மனைவிகளோடு ஸேவை சாதிக்கறாங்க.  தெருவில் இருந்தே பெருமாளை ஸேவிச்சுக்கலாம்!
அரக்கனிடம் இழந்த வேதங்களை மீண்டும் பெற வேண்டி பிரம்மன் தன் மனைவிகளான சரஸ்வதி, காயத்ரி தேவிகளுடன் யாகம் செய்யறார்.  ஹோமத்தில் அக்னி சரியா வளர்ந்து எரியலை. ஏதோ தெய்வக்குத்தம் ஆகி இருக்கு.  அப்பதான் சரஸ்வதி தேவி கவனிச்சுப் பார்த்து,  ப்ரம்மனுக்கு நாலு தலைகள்தான் இருக்கு. ஆனால் காயத்ரிக்கு  அஞ்சு தலை இருக்கே. சரிசமானமா இல்லாமப்போனதுதான் குற்றமுன்னு கண்டுபிடிச்சு கைவிரல்களால் ஜாடை காமிக்கிறாங்க.


உடனே இதைக் கவனிச்ச காயத்ரி மாதா, தன்னுடைய அஞ்சாவது தலையை ஆன்மீக சக்தியால்  பிரம்மனின் பின்புறத் தலையோடு ஐக்கியம் செஞ்சுடறாங்க. பெண் முகமும் ஆண்முகமும்  ஒன்னாக ஆயிருச்சு.  ஆனால் பொண்ணின் மூக்குத்தி மட்டும் ஜொலிப்போடு இருக்கு.


தலைகள் ஈக்வலா ஆனதும் அக்னி வளர்ந்து யாகம் நடக்குது. கடைசியில் வேத நாராயணர்  அதிலிருந்து தோன்றி யாகத்துக்கான பலனைத்தந்து, அரக்கனை அழித்து  வேதங்களைத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து,'இனியாவது பத்திரமாப் பார்த்துக்கும்' என்றார்.

ஐயோ.... திரும்ப  அரக்கன் வந்து கொண்டுபோயிட்டால் என்ன செய்யறதுன்னு கலங்கும் பிரம்மனிடம்,  யோக நரசிம்ஹரா நான் இங்கிருந்து அரக்கனை  ஒரு கை பார்ப்பேன் என்றிருக்கார்.  அதான் அங்கே மூணு சந்நிதிகள்!
அந்த மூக்குத்தின்னு சொன்னேன் பாருங்க... அதை தரிசனம் செஞ்சுக்கறது ரொம்பவே விசேஷமாம்.  சில குறிப்பிட்ட நாட்களில்  தரிசனம்  செஞ்சுக்கலாம்.  மூலவர் பிரம்மன்  சிலையின் பின்பக்க சுவரின் மேல் ஒரு நிலைக் கண்ணாடி வச்சு அதுக்குத் திரை போட்டு வச்சுருக்காங்க. அந்த விசேஷ நாளில் திரையை விலக்கி வச்சுருப்பாங்க போல. பொதுவா சக்ரத்தாழ்வார் சந்நிதியில்  சக்ரத்தாரின் பின்புறம் உள்ள நரசிம்ஹரைக் கண்ணாடி வழியாப் பார்ப்போமே அப்படி.

இன்றைக்கு விசேஷம் ஒன்னும் இல்லையே. திரை மூடி இருந்தது.  இதுக்கான ஒரு கட்டணம்  கட்டியதும் (சின்னத்தொகைதான்) திரையை விலக்கிக் காண்பித்தார்கள்.  ப்ரம்மன் முகத்தில் காயத்ரியின்  மூக்குத்தி!

தினம் ஆறு கால பூஜை உண்டு.  திருப்பதி சீனிவாசருக்கும், ஆண்டாளுக்கும், சின்னதா சந்நிதிகள். தன்வந்த்ரிக்கும் சந்நிதி உண்டு.

அனுமதி வாங்கிக் கொஞ்சம் படங்களை  வெளிப்ரகாரத்தில் எடுத்துக்கிட்டேன்.


கோவில் கொஞ்சம் பழைய கோவில்தான். 1739 இல் கும்பகோணம் ஏரியாவில் வசித்த சௌராஷ்ட்ரா மக்கள்ஸ் சேர்ந்து  ஒரு  குளத்தின் நடுவில் இருந்த நீராழி மண்டபத்தில் வரதராஜபெருமாள் சிலையை பிரதிஷ்டை செஞ்சு வழிபட ஆராம்பிச்சாங்க. பஞ்சலோகத்தில் செஞ்சது. கூடவே அத்தி மரத்தில் ஒரு சிலையும் செஞ்சு அத்திவரதரா பூஜையும் நடக்குது, அப்படியே நம்ம காஞ்சி வரதராஜர் கோவிலில் இருக்காப்லெ. ஆனால் 40 வருசம் தண்ணிக்கடியில் விட்டெல்லாம் வைக்கறதில்லை.

கடைசியா 1915 மார்ச்  முப்பதாம் தேதி, அத்திவரதர் ஊர்வலம் முடிஞ்சு கோவில் பொக்கிஷத்துக்குள்ளே போனவர்தான். அவரை எல்லோரும் மறந்தே போயிட்டாங்க. இப்ப ரெண்டு வருசம் முன்னால்  கோவில் புதுக் கமிட்டி, பொக்கிஷக் கணக்கு வழக்கு பார்த்தப்ப,  அத்திவரதர் தேமேன்னு அங்கே இருப்பதையும் அவர் கடைசியா மக்கள் முகம் பார்த்து  98  வருசங்கள் ஆச்சுன்னும் சொல்லித்தான்  எல்லோருக்கும் தெரிய வந்துருக்கு.


பிரம்மன் யாக சமாச்சாரங்கள் எல்லாம் படக்கதைகளாக வரைஞ்சு வச்சுருக்காங்க.  பிள்ளைகளுக்கு விளக்கிச் சொல்ல எளிது.

இன்னொரு படத்தில் சுவாரசியமான ஒரு சமாச்சாரம் இருக்கு.  அரசிலாறு (காவிரியின் கிளை நதி) என்று சொல்றோமே  அதன்  அசல் பெயர் ஹரி சொல் ஆறு. ஒரு பட்டர் பூஜை நைவேத்தியங்கள் எல்லாம்  விநியோகம் செஞ்சு, காலிப்பத்திரங்களைக் கொண்டுபோய் ஆற்றின் கரையில் வச்சுச் சுத்தம் செஞ்சதும், அங்கேயே ஓரமா வச்சுட்டுக் கொஞ்சம் ஓய்வெடுக்கப் படுத்தவர் அப்படியே அசதியில் தூங்கிப் போயிடறார்.


ஆத்துலே தண்ணீர் போக்குவரத்து கொஞ்சூண்டு அதிகரிச்சு, பாத்திரங்களில் வந்து  மோதுது.  அப்பப் பாத்திரங்கள் எல்லாம் ஒன்னோடொன்னு லேசா இடிச்சுக்கும்போது  ஹரி ஹரி என்று சொல்றது போலவே கேக்குது. இது யார்றா...ஹரி ஹரின்னு சொல்றதுன்னு பட்டர்  கண்ணைத்திறந்து பார்க்க  ஆறுதான் ஹரின்னு பாத்திரங்களைச் சொல்ல வைக்குது!  ஆஹா...  ஹரி சொல் ஆறு என்றார். அதுதான் அப்படியே மருவி  அரசிலாறுன்னு ஆகிருச்சாம்! (வாவ்..க்ரேட்!)

பொதுவாக  நம்ம சிவன், விஷ்ணு  கோவில்களில் கோஷ்டத்தில் ப்ரம்மா இருந்தாலுமே பிரம்மனுக்குத் தனியாக் கோவில்கள்  அதிகம் கிடையாது.  ராஜஸ்தான் புஷ்கர் நகரில் ஒரு ப்ரமாண்டமான கோவில் இருக்கு.  அதன் விவரம் நம்ம ராஜஸ்தான் பயணத்தில் சொல்லி இருக்கேன். விருப்பமானவர்கள்  இங்கே க்ளிக்கலாம்:-)

தமிழ்நாட்டில் பிரம்மனுக்காக இருக்கும் ஒரே கோவில் இங்கே நம்ம கும்மோணத்தில்தான்.


நன்றி சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பி நேரா சக்ரபாணிதான்.
போன நேரம் சரி இல்லை.  கோவிலில் பவர் கட். ஜெனரேட்டர் வெளிச்சம் போறலை. இருட்டுக்குள் தட்டுத் தடுமாறிப்போய் மூலவரைக் கும்பிட்டுக் கிளம்பிட்டோம்.  ஆனால் நல்ல கூட்டம் இருந்தது கோவிலில். கும்மிருட்டு என்பதால்....மருந்துக்குக்கூட  ஒரு க்ளிக் இல்லை. மனசே ஒடிஞ்சு போச்சு :-(

அறைக்குத் திரும்புமுன் ஷாப்பிங். நம்ம ராயாஸ் க்ராண்ட்லே எக்கச்சக்கமா கும்மோணம் புகழ்  விக்கிரகங்களை,  எல்லா மாடி தளங்களிலும்  படிகள் முடியும்  ஹாலில்  அட்டகாசமா வச்சுருக்காங்க. எல்லாமே ஓரளவு பெரிய சைஸ். அள்ளிக்கிட்டுப் போகுது! ஆசை இருந்தாலும்....   அதிர்ஷ்டம் வேணாமா நமக்கு? அதிலும்  வெயிட் வெயிட்ன்னு நம்ம இவர் கண்குத்திப் பாம்பாவே கவனிச்சுக்கிட்டு இருக்கார்.




"  ஹைய்யோ!!!  நல்லா இருக்குல்லே! "

"ஆமாம். ரொம்ப நல்லா இருக்கு. வா போகலாம். அதான் படம் எடுத்துக்கிட்டேயே!"

வரவேற்பில் ஒரு சங்கு, சக்கரம் சுவரில் மாட்டி இருக்காங்க. கனம் இருக்காது. தகடுதானே! அது மட்டுமாவது கிடைக்குதான்னு பார்க்கலாம். ராயாஸ்லேயே கடையின் விலாசம் வாங்கி வச்சுருந்தேன். அங்கேதான் போறோம்.



கும்பேஸ்வரர் கோவிலாண்டைதான்  கடை. கண்டுபிடிச்சுப்போய்க் கேட்டால்  ஆர்டர் கொடுத்தால் செஞ்சு தர்ற ஐட்டமாம் அது. எவ்ளோ நாளாகுமுன்னதுக்கு ஒரு மாசம் என்ற பதில்.  கடைசியா ஒரு கேள்வி கேட்டுட்டுக் கப்சுப்ன்னு வந்துட்டோம். ஏழாயிரம் ரூபாய்.  அதிகமில்லையோ!
வேறெங்காவது கிடைக்குமான்னு சும்மா பாத்திரக்கடைகள் நிறைஞ்ச  இன்னொரு வீதியில் வந்தப்ப...  வாசலில் இருந்த 'பெரிய திருவடி 'வாவான்னார். இப்பெல்லாம் பித்தளைப் பாத்திரங்களையும் குடங்களையும் யார் வாங்கறா?  வார்ப்புலே போட்டு  சிலைகளா அடிச்சுத் தள்ளிக்கிட்டு இருக்காங்க.  சாமி சமாச்சாரம்தான் நிறைய! வெளிநாடு ஏற்றுமதி உண்டுன்னு என்னென்னவோ பில் புத்தகமெல்லாம் காமிச்சார் ஓனர்.





சங்கு, சக்கரம், திருமண் செட் ஒன்னு வாங்கினேன்.  பித்தளை. கொஞ்சம் கனம்தான். ப்ளெய்னா இல்லாம கீழே மணி வச்சுருக்கு. ஆணியில் மாட்டும் வகை.  எட்டு மாசம் அதுக்கு நேரம் வராம ஒரு நாள் நான் சாமி ஆடுனதில் சாமி ரூம் சுவத்தில் ஏறின:-)

போதும் வாங்குனதுன்னு  ராயாஸ்க்குத் திரும்பினோம்.  ராத்ரி டின்னருக்கு இட்லி கிடைச்சது.

நாளைக்கு வேற ஊர். கிளம்பவேண்டியதுதான்.  எட்டுமணி போல ரெடியா இருங்கன்னு சீனிவாசனிடம் சொல்லிட்டு அறைக்கு வந்து  கொஞ்சம் பேக்கிங்கை முடிச்சோம்.

ராயாஸில்  தங்கும் விருந்தினர்களுக்கு  நல்ல வசதிகள் இருக்கு.  உள்ளுர், அக்கம்பக்கக் கோயில்கள் விவரங்கள் அடங்கிய சின்ன புத்தகங்களை  தமிழ் & இங்லிஷில் அச்சடிச்சு வச்சுத் தர்றாங்க. அதில் ஆதனூர் கோவில் இருப்பதை  முதலில் கவனிக்கலை பாருங்க:-(


பேசாம அடுத்த முறை ஒரு வாரம் கும்மோணத்தில் தங்கி உள்ளூர் கோவில்களைப் பார்த்துக்கணும்.  எல்லாம்  பொக்கிஷங்கள். அப்படி அசட்டையா விட்டுட முடியாது!


 தொடரும்.............:-)


18 comments:

said...

ப்ரமன் மூக்குத்தி , ஹரி சொல் ஆறு கதைகள் அருமை. வெண்கல (பித்தளை ? )யானை அழகோஅழகு.சங்கு,சக்கரம் ,திருமண் மணிகளோடு அழகு .சுவரில் மாட்டினப்புறம் போட்டோ இருந்தால் பதிவில் போடுகள் .

said...

”சாமி ரூமில் சாமி ஆடினி” - சிறப்புப் பட்டம் ஒங்களுக்கு:)
ரொம்ப அழகா இருக்கு டீச்சர், ”திருமண்சங்காழி”த் தோரணம்!

அதுவும் பக்கவாட்டில்-கீழே அழகா மணி வச்சிக் கட்டி, ஒங்களுக்கு-ன்னு கிடைக்குது பாருங்க.. ஒங்க மூலப் பிறவியில் வைகுந்த நாட்டில் Museum Curator ஆக இருந்திருப்பீங்க போல?:)
---

என்னாது ஹரி சொல் ஆறு -> அரிசலாறு ஆச்சா? Total Dubakoor:)))))
ஐயகோ! அட பெருமாளே!
உன் மேலே கண்ட ”புராணப்” பொய் கதைகளை ஏத்துறாங்க, போகட்டும்! ஆனா அதுக்காக தமிழைக் கெடுக்கலாமா? பிச்சிருவேன் பிச்சி:) என்னே நம்ம செளராஷ்டிர மக்களின் கற்பனைத் தெறமை:))

டீச்சர், அது ”அரிசலாறு” அல்ல!
அரிசில்+ஆறு = அரிசிலாறு
அரித்துக் கொண்டு சில்லென ஓடுவதால் = அரி+சில் ஆறு!

”அரிசில்” கிழார் ஞாபகம் வருதா? சங்க இலக்கியக் கவிஞர்.. இந்த ஊரு தான்
தகடூர் பொருது வீழ்ந்த எழினியை ”அரிசில் கிழார்” பாடியது-ன்னு எத்தனை பாட்டு வரும் புறநானூறில்!

முழங்கும் திரைக் கை வாரி மோதி
அரிக்கும் புனல் சேர் **அரிசில்**
தென்கரை அழகு-ஆர் பூதூர் அழகனீரே

அரிசில், குரிசில், பரிசில் = இவையெல்லாம் சங்கத் தமிழ்ச் சொற்கள்!
தமிழ் மரபில், மதம் கலந்து கலந்து.. ஒவ்வொன்னுத்துக்கும் ”கதை” உருவாக்கியே, கதையை முடிச்சிட்டாங்களே:((

புளியங்-காடு -> திண்டி-வனம் ஆச்சு
மரைக்-காடு (மான் வாழ் காடு) -> வேதாரண்யம் ஆச்சு
முது-குன்றம் -> விருத்தாச்சலம் ஆச்சு
மயில்-ஆடு-துறை -> மயூரம்/ மாயவரம் ஆச்சு
இப்போ.. ”அரிசில்” ஆறு -> அரிசல் ஆறு ஆகி -> ஹரி சொல் ஆறா? No No No!:)

எந்தை திருமாலோ, என்னவன் முருகனோ.. யாரானாலும் சரி, தமிழைச் சிதைத்து, புராணப் புளுகினா.. கட்டி வச்சி ஒதைப்பேன் ரெண்டு பேரையும், சொல்லீட்டேன்:)


said...

வாங்க சசி கலா.

வீட்டில் சாமி அறையில் தகுந்த சுவர் அமையலை. கொஞ்சம் உயரத்தில் போட வேண்டியதாப் போச்.

said...

வாங்க கே ஆரெஸ்.

புனைவு அவுங்களுக்கு மட்டும் உரிமை இல்லையா?

இப்படி ஆன்னா ஊன்னா குதிச்சால்..... நீங்க சீத்தலை சாத்தனாக(வே) இருக்க வேண்டியதுதான்:-)

எப்படியோ.... ஹரி ஹரி என்னும் பெயர் காதில் விழுதே அதுவே.... இந்தக் காலத்துலே பெரிய விஷயம்!

said...

அனைத்தும் அருமை அம்மா...

said...

டீச்சர்..
சாமிமலை போகலையா இந்தப் பயணத்தில்? ராயாஸ் புத்தக அட்டைப் படங்கள் வெகு நேர்த்தி..
நீங்க யானைக் கட்சி, கோபால் சார் மான் கட்சியா?:)
நடுவுல காமதேனு, மயிலிறகோடு இருக்குதே! கண்டிட்டோ?

//ஹைய்யோ!!! நல்லா இருக்குல்லே! "
"ஆமாம். ரொம்ப நல்லா இருக்கு. வா போகலாம். அதான் படம் எடுத்துக்கிட்டேயே!"//

என்னே கோபால் சாரின் மேலாண்மைத் திறன்:) ஒங்க கலையார்வ ஆறு, கரைபுரண்டு ஓடாமப் பாத்துக்குறாரு:)
அப்பப்ப பயணக் கட்டுரையில், புருசன் - பெண்சாதி டயலாக் என்னை வெகுவாகக் கவர்கிறது; I like it, Please continue in this style:)

--
மூக்குத்தி பிரம்மா வாழ்க!:)
ஈசன்= அர்த்த நாரி போல், இந்தப் பிரம்மா= அர்த்த நாரி-முகி:)

//பொதுவாக நம்ம சிவன், விஷ்ணு கோவில்களில் கோஷ்டத்தில் ப்ரம்மா இருந்தாலுமே பிரம்மனுக்குத் தனியாக் கோவில்கள் அதிகம் கிடையாது.
தமிழ்நாட்டில் பிரம்மனுக்காக இருக்கும் ஒரே கோவில் இங்கே நம்ம கும்மோணத்தில்தான்.//

இருக்கே!
*திருப்பட்டூர் பிரம்மன் கோயில் - தனிச் சன்னிதி
*உத்தமர் கோயில் (திருச்சி) பிரம்மன் - தனிச் சன்னிதி
மற்றும் திருநெல்வேலி பிரம்ம தேசம், கரூர் பக்கம் கொடுமுடி,
தஞ்சை திருக்கண்டியூரில் தனிச் சன்னிதி இருக்கா-ன்னு தெரியலை.
மேல் விவரங்களுக்கு, கீதாம்மா அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்:)

said...

@ கே ஆர் எஸ்.

தனிச்சந்நிதிகள்தான். பிரம்மன் கோவில் என்ற பெயர்களில் இல்லையே!

சுவாமிமலை உட்பட வேறெங்கும் போகலை. ராமசாமியைக்கூட விட்டுட்டேன். போனமுறை போஞதுதான். இருந்த ரெண்டு நாளில் முன்னுரிமை 108 க்கே.

said...

\\ஒரு நாள் நான் சாமி ஆடுனதில் சாமி ரூம் சுவத்தில் ஏறின:-)\\ எங்க வீட்டுல சுவத்துல ஆனி அடித்தால் தான் சாமி ஆடுவாங்க. திரும்பின பக்கம் எல்லாம் ஒரு பெருமாள் போட்டா மாட்டுனா என்ன செய்வாங்க. ஆனா அந்த திருமண் செட் அருமை.

said...

கும்பகோணத்தில் தடுக்கி விழுந்தாலும் கோவில்தான் அருகே இருக்கும் , எல்லாக் கோவிகளையும் பார்க்க ஒரு வாரம் போதாது. நீங்கள் ஏன் கதைஒப் போட்டியில் கலந்துக்கக் கூடாது.

said...

எத்தனை தகவல்கள்....... அப்பாடி....

படங்கள் அனைத்தும் அழகு. சின்ன வயதில் கும்பகோணம் சென்றது. அதன் பிறகு போக வாய்ப்பில்லை.... இனிமேலாவது போக முடியணும்....

said...

இந்தக் கடைக்குதான் போய் ஒரு விஷ்ணு பொம்மை வாங்கினோம். பிரம்மனின் மூக்குத்தி அதிசயமாக இருக்கிறது.

திருச்சி பக்கத்தில் உத்தமர் கோவிலில் பிரம்மனுக்குக் கோவில் உண்டு அல்லவா..

said...

வாங்க பித்தனின் வாக்கு.

நானும் படங்கள் மாட்டி வச்சுருவேன். ஆனால் நோ ஆணி அடித்தல். ப்ளூடாக் போட்டு ஒட்டு வேலை. வேணாமுன்னா சுலபமா எடுத்துடலாம்.

இது கனம் என்பதால் ஆணி அடிக்க வேண்டியதாப் போச்சு. அலங்கார ஆணிதான்:-) திரைச்சீலை மாட்டும் கொக்கி:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அதான் அடுத்தமுறை ஒருவாரம் தங்கலாமான்னு....

போட்டியில் கலந்துக்கும் ஆர்வம் இல்லை. டெட்லைன் கொடுத்து எழுதுன்னால்... எனக்கு எழுதவே வராது:-(

கூந்தல் இருப்பவர்கள் அள்ளி முடிஞ்சுக்கட்டும்! நோ ஒர்ரீஸ்.

அழைப்புக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சந்தர்ப்பம் கிடைத்தால் விட்டுடாதீங்க கும்மோணத்தை! கொட்டிக்கிடக்குக் கலைப் பொக்கிஷம் அங்கே!

said...

வாங்க வல்லி.

ஆஹா.... விஷ்ணு பொம்மையா?

கண்ணுலே காட்டவே இல்லையேப்பா.......

உத்தமர் கோவிலில் தனி சந்நிதி இருக்குப்பா. ப்ரம்மன் பெயரில் கோவில் இல்லையே....

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நன்றிகள்.

said...

உங்கள் பதிவை தனித்தனியாக படித்ததை விட இப்போது மொத்தமாக படிக்கும் போது உங்கள் பயணத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் உங்கள் வாகன ஓட்டியில் முகம் தான் என் மனதில் வந்து போகின்றது. அவருக்கும் என் வாழ்த்துகள்.

said...

வாங்க ஜோதிஜி.

நம்ம வாகன ஓட்டி சீனிவாசனுக்கும், நமக்கு ஓட்டுனரா இருக்க ரொம்பவே பிடிக்குது. நாங்களும் இங்கிருந்து கிளம்புமுன் ட்ராவல்ஸ்க்கு அவர்தான் ஓட்டுனராக வேணுமுன்னு சொல்லிருவோம்.

நல்ல முறையில் அவருக்கும் தேவையான ஓய்வு கொடுப்பதாலும், இருட்டியபின் பயணம் செய்வதில்லை என்பதாலும் அவருக்கும் மகிழ்ச்சியே!