Monday, September 28, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். எட்டாம் நாள் )

இன்றே இப்படம் கடைசி:-)  ஆறு மணிக்கெல்லாம் தூக்கம் போச். சூரியன் வர்றதுக்கே  இன்னும் அரைமணி இருக்கு. காஃபியை முடிச்சுக்கிட்டுக் கீழே போனோம். இன்னும் செய்தித்தாள் வரலை. ஆனால் அக்வேரியஸ் ஆஃபீஸிலே  லைட் எரியுது.  ஓனர்  என்னவோ வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார்.  முதல்நாள் கணக்கு வழக்கையெல்லாம் பார்க்கிறாராம்.  இங்கேயே அவருக்கும் வீடு என்பதால் தினமும் காலையில் ஒரு மணி நேரம் வேலை செஞ்சுருவாராம்.

 மாசக்கணக்குலே வாடகைக்கு  விடறாரான்னு கேட்டு வச்சுக்கிட்டோம்.  அவுங்க ஏஜென்டுகள் மூலம் வர்றதுதான் மலிவாம். கொஞ்சம்  விவரங்களும் கொடுத்தார்.  அப்படியே கடற்கரை வாக்.  இன்றைக்குக் கிளம்பறோம் என்பதால்  எதைப் பார்த்தாலும் ரொம்பவே நல்லா இருப்பதுபோல் ஒரு தோணல்.



யாரும் யாருக்காகவும்  காத்திருப்பதில்லை என்பதைப்போல்  அஞ்சரையில் இருந்து  கடல்மண் சுத்தம், ஆறரைக்கு, சூரியன்,   ஏழே முக்காலுக்கு லைஃப்கார்ட்ன்னு  தானாய் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு.  எட்டரைக்கு அறைக்குத் திரும்பினோம்.
கோல்டன் ஸாண்ட் வேணுமுன்னு  வேறெங்கிருந்தோ தங்கமணலைக் கொண்டுவந்து  பீச்சில்  நிரவி வைக்கறாங்க.


பேசாம இன்னிக்கு  திமிங்கிலம் பார்த்துட்டு, ரெண்டு மணிக்குக் கிளம்பலாமான்னார் நம்மவர்.  'இல்லை. என்னுடைய தோழி ஒருவரின் மகளை சந்திக்கறதாச் சொல்லி இருக்கேன்.  அங்கிருந்து ஏர்ப்போர்ட் போகணும்.  எல்லாத்துக்கும் முன்னால் கொஞ்சநேரம் க்வீன் தெரு மாலில் சுத்தணும்' என்றேன்.

குளிச்சு முடிச்சு  ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துக்கிட்டு,  அபார்ட்மென்ட் நாம் வந்தபோது எப்படி இருந்துச்சோ அதே போல் ஒழுங்கு படுத்தினோம். மிச்சம்மீதி  சாப்பாட்டுப் பொருட்களையும், குப்பைகளையும் சேகரிச்சு டிஸ்போஸ் செஞ்சோம். பேக்கிங் முடிஞ்சது. புத்தப் பாப்பாக்களை  ஹேண்ட் லக்கேஜில் வச்சாச்சு. உடையாமல் பத்திரமாக் கொண்டு போகணும்.




நம்ம  அபார்ட்மென்ட் பூராவும்  பட்ரீஸியா ஃபிட்ஸராய் என்ற ஓவியர் வரைஞ்ச படங்களால் அலங்கரிச்சு இருந்தாங்க. ஸிம்பிள் ட்ராயிங்ஸ். நல்லா நீட்டா இருக்கு. க்ளிக்ஸ் ஆச்சு.

பத்து மணிக்கு செக்கவுட் செஞ்சுட்டு கிளம்பி இதோ ப்ரிஸ்பேன் நகர் நோக்கிப் போறோம். இங்கே மோட்டர்வே / ஹைவேக்களில் சாலையின் ஓரங்களில்  மரப்பலகைகள் அடிச்சு சுவர் போல ஒரு அமைப்பு.  அதில் அழகழகான ஸீனரிகள், படங்கள் இப்படிக் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு!   கண்ட இடங்களில் மக்களும், மாடுகளும், நாய்களும் குறுக்கே போகாததால்.....  நூறு, நூத்திப்பத்துன்னு  வேகத்தில் பாய்ஞ்சு ஓடும் வண்டிகள் அதுபாட்டுக்குப் போகுது.





பதினொரு மணிக்கெல்லாம்  ப்ரிஸ்பேன் சிட்டியின் உயரக்கட்டடங்கள் கண்ணில் பட்டன. சௌத் பேங் ஜெயண்ட் வீல் இதோ!.   அங்கெல்லாம் போகப்போவதில்லை. நேரா க்வீன் தெரு மால்தான். மாலுக்குப் பக்கத்திலேயே பார்க்கிங் தேடி அலைஞ்சு  ஒரு வழியா அடுக்குமாடி பார்க்கிங்கில் இடம் கிடைச்சது.


ச்சும்மா ஒரு சுத்து.  இப்பெல்லாம் மார்கெட்  என்ற சமாச்சாரத்துக்கு மதிப்பு உயர்ந்துக்கிட்டுப் போகுது.  உழவர் சந்தை!  இங்கேயும்  கஸினோவுக்கு வெளியே இருக்கும் சதுக்கத்தில் இன்றைக்கு மார்கெட். நமக்கு வேண்டாத அத்தனை பொருட்களும் விற்பனைக்கு இருக்கு!  விதவிதமான வாழைப்பழங்கள்.  உள்நாட்டு சரக்குதான்.  இங்கே ஆஸியில் வாழைப்பழ இறக்குமதிக்குத் தடை உண்டு.

 இஞ்சி உடம்புக்கு நல்லதுன்னு  விளம்பரப்படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.

ஆர்ட்டிச்சோக், குடைமிளகாய், பூக்கள், பழங்கள் குறிப்பாக பப்பாளி இப்படி......

சாலையைக் கடந்து திரும்ப மாலுக்கு வந்தோம். டிஃபன்னீஸ்லே  வைரம் ஸேலில் இருக்கு. ச்சீச்சீ.....  ஒரே புளிப்பு  !


பகல் சாப்பாடு ஜோ ஜோவில் இருக்கட்டுமேன்னு போனோம்.  வியாபாரம் கைமாறி இருக்கு போல.  சமையல்கட்டில் எட்டிப்பார்க்கும் நாயைக் காணோம்.  கருப்பு சிறுத்தைகள் மட்டும்  இடம் மாறி உக்கார்ந்துருந்தாங்க. நாயைப் பற்றி விசாரிச்சால், 'நான் புதுசு. வேலைக்குச் சேர்ந்து ஒரு வருசம்தான் ஆகுது. நான் நாயையே பார்க்கலை'ன்னு சத்தியம் செய்யறாங்க டூட்டி மேனேஜர் அம்மிணி.
சாப்பாடும் நல்லாவே இல்லை. டோஃபுவை  அள்ளிப்போட்ட சமையல். பிஸினெஸை  சீனர்கள் வாங்கிட்டாங்க போல!



 புதன் கிழமைதான். ஆனாலும் மாலில் நல்ல கூட்டம்.   கிளம்பி கார்பார்க்கிங் வந்தோம். ரெண்டு மணி நேரத்துக்கு  45 டாலர் சார்ஜ்.  வயிறு எரிஞ்சு போச்சு.  ஒரு கார்பார்க் இருந்தால்  ஒரே வருசத்துலே பில்லியனர் ஆகிடலாம் இங்கே!

முகநூல் சகோவின் மகளைத் தேடிப் போனோம். மெடிக்கல் காலேஜ் மாணவி. செல்லம் போல் இருக்காங்க.  கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் சொல்றாங்க. புள்ளையார் தான்  பிடிச்சவராம்.  என் மகளாகத்தான் நினைக்கத் தோணுச்சு.   ஒரு முக்கால்மணி நேரம்தான் சந்திப்பு.  ஆனால் எதோ பூர்வ ஜென்மத் தொடர்பா நினைக்கும்படி அமைஞ்சது. எனக்காக ஒரு பரிசுப்பொருள் கூட எடுத்து வச்சுக்கொடுத்த அன்பை மறக்க இயலாது.  இதேபோலத்தான் கோபாலும் நினைச்சாராம்.
கார் வரைக்கும் வந்து வழிஅனுப்பிய மகளைப் பிரியும்போது மனசுக்கு வலிச்சது உண்மை.
நேரா ஏர்ப்போர்ட்டுக்கே போயிடலாமுன்னு முடிவாச்சு.  20 கிமீ பயணம். டன்னல் வழியாகப் போகணும். டோல் ரோடுதான்.  ஏர்ப்போர்ட் உள்ளே பெட்ரோல் பங்க் இருக்குமுன்னு பார்த்தால்  இல்லை. வண்டியில் பெட்ரோலை நாமே நிரப்பிக் கொடுத்தால் நல்லது. இல்லைன்னா  அதுக்கு நிறைய சார்ஜ் செஞ்சுருவாங்கன்னார்  நம்மவர்.  பெட்ரோல் பங்கைத் தேடிக் கொஞ்சமா அலைஞ்சோம். நேவிகேட்டர்  இருந்ததால் தப்பிச்சோமுன்னு சொல்லணும்.


த்ரிஃப்டி  பார்க்கிங்லே வண்டியை விட்டுட்டு உள்ளே போய் சாவியைக் கொடுத்துட்டு நேராப்போய் செக்கின் செஞ்சுக்கிட்டு  செக்யூரிட்டி செக்கப்  போயிட்டோம்.  ஹேண்ட் லக்கேஜ்களை ஸ்கேன் பண்ணியதும், கோபால் பிரச்சனை இல்லாமப் போயிட்டார்.

நாந்தான் மாட்டிக்கிட்டேன். கையில் உள்ள வளையல்கள்......  கழட்டு கழட்டுன்னு கத்திக்கிட்டே ஆப்பீஸர் வர்றார்.  சட்னு கழட்டக்கூடிய சமாச்சாரமா?

அந்தாண்டை வரச்சொல்லி சைகை காமிச்சதும், அதேபோல் போனால் ஃபுல் பாடி ஸ்கேன் மெஷீன்.  சொன்னபேச்சைக் கேட்கவேண்டிய நிலை :-(
மேலே....சுட்ட படம்!

 ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள்ளே நிக்கறேன். நம்ம டென்டிஸ்ட்கிட்டே ஒரு எக்ஸ்ரே மெஷீன் இருக்கு. நாம் நின்னுக்கிட்டு இருக்கும்போதே நம்மைச் சுத்திக் கர்கர்ன்னுகிட்டே 360 டிகிரியில் படம் புடிச்சுரும். அதே போல இதுவும் கர்கர்.

 வெளியே அந்தப்பக்கம்  வந்ததும்,  ஸ்க்ரீனில்   ரெண்டு உருவங்கள்.  முன்னாலும் பின்னாலும் !  ஒரு உருவத்துக்கு  முழங்கை, தொடைகள், பாதம் எல்லாம்  மஞ்சள் பெயிண்ட் அடிச்சு வச்சுருக்கு.  இன்னொன்னு  கழுத்து, முதுகு, இடுப்புப்பக்களில் மஞ்சள் அழகியாக!


'கொஞ்சம்  இருங்க. ஒரு பொம்நாட்டி ஆப்பீஸர்  வந்து உங்களைப் பரிசோதிக்கணுமு'ன்னு  உத்தரவாச்சு.  கோபால் வேற முகத்தில் பீதியோடு எங்க  கேபின் பைகளை எடுத்துக்கிட்டு அந்தாண்டை நிக்கறார்.

 எலெக்ட்ரானிக் கட்டையோடு   ஆப்பீஸரம்மிணி  ஓடி  வந்தாங்க.  கட்டையை  உடம்பில் ஓட்டுனதும்  ஊஹூம்....  ஒன்னுமில்லை!

"ஸ்ட்ரேஞ்ச்!  ஒன்னுமே இல்லையே.... ஏன் இப்படி மஞ்சள் காமிக்குது?"

அப்பதான் எனக்கு விஷயம் விளங்குச்சு.  ஆஸ்பத்திரியில் வைக்க வேண்டிய மெஷீனை  இங்கே  கொண்டு வந்து வச்சுட்டாங்க. எனக்குச் சரியா உடம்பில் எங்கெங்கே  வலியோ, அதைக் காமிச்சிருக்கு!

இதை ஆப்பீஸரம்மணிகிட்டே சொன்னதும்,  தாங்கமுடியாமல் சிரிச்சுட்டாங்க. நாங்க எல்லோரும் ஈன்னு சிரிப்பதைப் பார்த்து நம்ம கோபாலுக்குப் போன உயிர் வந்துருச்சு:-))))


அடுத்து இமிகிரேஷன். எங்கூர்லே எல்லாம் மாடர்னா  ஆட்டோ சிஸ்டத்தில் இருக்குன்னா....  இங்கே  டொக் டொக்குன்னு  ஸ்டாம்ப் அடிச்சுக் கொடுக்கறாங்க.  இன்னுமா ப்ரிஸ்பேன் பழைய பஞ்சாங்கமா இருக்கு!  டூரிஸ்ட் குவியும் இடத்தில் இப்படியா?


அடுத்து டூட்டி ஃப்ரீ ஏரியா.  கொஞ்சநேரம் கரடியை வேடிக்கை பார்த்துட்டுத் திரும்பினால் இவரைக் காணோம். தேடிக்கிட்டு இருந்தப்ப, அந்த ஏரியாவில் உதவிக்காக இருக்கும் பெண், 'என்ன தேடறீங்க. நான் உதவி செய்யட்டுமா?' ன்னு கேட்டாங்க.

"என்னத்தன்னு சொல்வேன் யம்மாடி.... புருசனைக் காணோம்!"

"  ஐய்யய்யோ....  எப்படி இருப்பார்?"

"  எதையாவது வாங்கித் தொலைச்சுருவேனோன்னு பயந்த முகத்தோட இருப்பாரு...."

"அடடா....  இண்டியனா?  "

" ஆமாம்.... அம்மிணி"

கடைசியில் ஒரு பெஞ்சுலே உக்கார்ந்து  பையில் உள்ள சாமான்களை  திருப்பி அடுக்கிட்டு இருந்ததை, நாந்தான் கண்டுபிடிச்சேன்.


MAC கடையில் மகளுக்கு  வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டோம். விற்பனைப்பெண், மூக்குலே புல்லாக்கு போட்டுருந்தாங்க.

அந்த ஏரியாவில் இருந்து வெளிவரும்போது, 'கிடைச்சுட்டாரா?' னு கேட்ட உதவியாளருக்கு, 'கிடைச்சுட்டாரே'ன்னேன்.  தேடிக்கிட்டே இருந்தாங்களாமே:-))))


'வாங்க ஒன்னும் இல்லைன்னா  லவுஞ்சுக்குப் போயிடலாமா'ன்னார் நம்மவர்.

நமக்கு  மாலை ஆறரைக்குத்தான் ஃப்ளைட். கால் வலி இருக்கும்போது  வீணா எதுக்கு சுத்தணும்? இப்பத் தலைவலி வேற லேசா ஆரம்பிக்குது. லவுஞ்சுக்குப் போனால்  காஃபி குடிக்கலாம்.

லவுஞ்சில் நல்ல கூட்டம். பாடாவதியான உள் அலங்காரம்.  எங்க ஊர் பளபளால்லாம் இல்லை.  ஆளுக்கொரு கப்புச்சீனோ, கொஞ்சம் ஸ்நாக்ஸ். வலை மேய்ஞ்சுக்கிட்டு இருந்தோம். நெட்லே உக்கார்ந்தா  நேரம் ஓடிருது!



ஆறுமணிக்கு  ராச்சாப்பாடு  இங்கேயே ஆச்சு.  நமக்கு வேண்டாத சமாச்சாரங்கள் தான்.....  அதிகம்.  ஸாலட், மஃபின், டோநட் ....  பயமில்லாமல் சாப்பிடலாம்.

ஃப்ளைட் ஏறி மகா போரடிக்கும்  மணிகள்  கடந்து போச்சு.  நமக்கும் ப்ரிஸ்பேனுக்கும் ரெண்டு மணி நேர வித்தியாசம் இருக்கு.  கிறைஸ்ட்சர்ச் வந்து இறங்கும்போது  மறுநாள் வந்துருச்சு.  சரியா நடுராத்ரி  பனிரெண்டு அடிச்சது.

நம்மகிட்டேதான் சாப்பாடு ஐட்டங்கள் ஒன்னும் இல்லையேன்னு  பார்த்தால்....  வாத்து பழி வாங்கிருச்சு. அதை ஸ்கேன் செஞ்சப்ப ஆரஞ்சு  காமிச்சதுன்னு  ஒரு பத்துப்பேர் கொண்ட குழு அதை ஆராய்ஞ்சுக்கிட்டு நின்னாங்க. நம்ம அதிர்ஷ்டம்.... நாய்கள் இல்லை :-(  முக்கால் மணி நேரம் தண்டம்.  இந்நேரம் வீட்டுக்குப் போய் படுக்கையில் விழுந்திருக்கலாம்.  பத்து நிமிஷ ட்ரைவ்தான் வீட்டுக்கு.


கண்ணாடி வாத்து கைக்கு வந்ததும், டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம்.  சரியா  இரவு மணி ஒன்னு.

மறுநாள்  மாலை நாலுமணிக்குப்போய் நம்ம ரஜ்ஜுவைக் கூட்டி வந்ததும் வீட்டில் எல்லாம் வழக்கம் போல்:-)

ஆஸியின் ட்ராப்பிக்கல் நினைவுகளை விட்டுற வேணாமேன்னு  உள்ளூரில் இருக்கும்  ஆஸி கடையான கே மார்ட் போய்,  கோல்ட் கோஸ்டில் பார்த்து வச்ச செடிகளை  வாங்கியாந்தேன்.

எனக்கு ஆஸியிலேயே   க்வீன்ஸ்லேண்ட் மாநிலம்தான் ரொம்பவே பிடிக்கும்.  காரணம், இந்த  டே லைட் ஸேவிங்ஸ் என்ற அராஜகம் இல்லவே இல்லை.

பயணம் முடிஞ்சது.  அதன் நினைவுகள் மனசின் ஓரம்! ஒரு எட்டுநாள் பயணம்தான் என்றாலும், வழக்கமான இடத்தில் இருந்து புது இடத்துக்குப்போனால் வரும் மாற்றம் நல்லாத்தான் இருக்கு.  போற இடத்திலும் இன்னொரு வழக்கத்தை ஆரம்பிச்சுருவோம் என்பது வேற கதை:-)

பொதுவாகவே பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும்.

  ஆதலினால் பயணம் செய்வீர்!



12 comments:

said...

// " எதையாவது வாங்கித் தொலைச்சுருவேனோன்னு பயந்த முகத்தோட இருப்பாரு...."
கோபால் சார் நம்ப ப்ளாக்க படிக்கறதில்லையோ ?

said...

ஆனாலும் எங்க அங்கிள இவ்ளோ பயமுறுத்த கூடாது..... )

said...

பயணம் முடியுதேங்கற ஏக்கத்த உண்டு பண்ணிடுது உங்க எழுத்து .
அருமையான படங்கள் .
புத்த பாப்பாக்கள் photo என் இரண்டு மகள்களுக்கும் மிகவும் பிடித்து போனது.
பெரியவள் படம் பார்த்துவிட்டு எனக்கும் வாங்கி அனுப்புமா என்றாள் .!!
வீட்டில் அலங்கரிக்கும் புத்தபாப்பாக்களை இன்னொரு படம் எடுத்து பதிவிடுங்களேன் .

said...

:)

said...

டே லைட் ஸேவிங்ஸ் என்ற அராஜகம்.... Pls explain this madam

said...

வாங்க சிவா.

எழுத ஆரம்பித்த காலங்களில் இந்த அராஜகத்தைப் பற்றிப் புலம்பி எழுதுனது இந்தச் சுட்டியில் இருக்கு.

http://thulasidhalam.blogspot.com/2005/10/9.html

said...

வாங்க விஸ்வநாத்.

துளசிதளத்தின் முதல் வாசகரே நம்ம கோபால்தான். பகல் உணவு சாப்பிட வேலையில் இருந்து வீட்டுக்கு வருபவர், பதிவு வெளியிடும் நாட்களில் சாப்பாடு ஆனதும் பதிவை வெளியிட்டாச்சான்னு கேட்டு தொணப்பி அதை வாசிச்சுட்டுத்தான் திரும்ப ஆஃபீஸ் போவார். என்ன ஒன்னு..... படிச்சு முடிச்சதும் வாயைத் திறக்கமாட்டார்:-))))) அட்லீஸ்ட் நல்லா இல்லைன்னாவது சொல்லப்டாதா?

said...

வாங்க அபிநயா.

பயமா? பயந்துட்டாலும்........... :-)

said...

வாங்க சசி கலா.

புத்த பாப்பாக்கள்தான் இப்போ நம்ம வீட்டுக்கு வரும் விஸிட்டர்ஸ்களுக்கும் அட்ராக்‌ஷன் ஆகி இருக்கு!!!

said...

வாங்க புதுகைத் தென்றல்.

நன்றீஸ் :-)

said...

ஆதலினால் பயணம் செய்வீர்.....

உங்களோடு சேர்ந்து நாங்களும் எட்டு நாள் பயணம் போன உணர்வு. நன்றி டீச்சர்....

தொடரட்டும் பயணங்கள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணங்கள் முடிவதில்லைதானே:-)))))