Wednesday, September 23, 2015

படிப்புக்கொரு கோவில் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 80)

சோழபுரம், கீழணை, அணைக்கரை, மீன்சுருட்டி, சேத்தியாத்தோப்பு, மேல்புவனகிரி, புவனகிரி, கடலூர் என்று தெரிஞ்ச பெயர்களைக்  கடந்து  திருவஹீந்த்ரபுரம் வர்றதுக்கே  கிட்டத்தட்ட ரெண்டேகால் மணி நேரம் ஆகிருச்சு. அதிகமில்லை.  நூறு கிமீ தூரம்தான்.  ஒரு இடத்தில் சிங்கங்களையே ஒயரால் கட்டிப்போட்டுருந்தாங்க!

ஊருக்குள் நுழைஞ்சு கோவிலைத் தேடி வரும்போதே...   சீக்கிரம் போங்க. உச்சி பூஜை ஆரம்பிச்சாச்சுன்னு தகவல். நமக்கிடப் பக்கத்தில் இருக்கும் படிவரிசைகளில் பாய்ஞ்சு மேலேறிப் போறோம். அறுபதெழுபது  படிகளுக்கு மேல் இருக்கலாம். ஏகப்பட்ட  பிபி யில்  இருக்கும் நான்  மூச்சிறைக்க  நெஞ்சு படபடக்க ஏறிப்போனதில்  எத்தனை படிகள் என்று எண்ணும் பிறவிகுணத்தை மறந்துருந்தேன்.
 மேலே போய்ச் சேர்ந்தவுடன்,  நமக்கிடதுபக்கம் ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவர் சந்நிதி. பூஜைகள்  ஆரம்பிச்சுருந்தது.  ஜோதியில் கலந்தோம். நைவேத்யமாக  வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல், தயிர்சாதம் கிடைத்தது.  ஒரே லபக்.  க்ருஷ்ணார்ப்பணம்!

கூட்டம் முழுசும் இங்கேதான். சின்னதா ஒரு மலையும்,  மேலே கட்டி இருக்கும் கோவிலுமா இருக்கு. சந்நிதியை விட்டு வெளியே போய் இறங்கினா கண்ணெதிரிலொரு கல்யாணமண்டபம். கொஞ்சம் புதுசு போல!
சமூகக்கூடங்கள்  வேண்டித்தானே இருக்கு. வழக்கம்போல் எங்கே பார்த்தாலும் அது  மலை உச்சியாக இருந்தாலுமேகூட குப்பைகள்தான்.
இந்த சின்னமலைக்குப் பெயர் ஔஷத மலை. (ஆஷாட மலைன்னு  யாரோ  எழுதி இருந்தாங்க:-)   அப்படியே ராமாயண காலத்துக்குப்போகலாம். இலங்கையில் போர்!  நம்ம லக்ஷ்மணன், சண்டையில் அடிபட்டு மயங்கி விழுந்துட்டான்.  ராமன் , தம்பியை மடிமேல் தூக்கி வச்சுக்கிட்டு அழறார்.  காப்பாத்தணுமுன்னா.... இப்ப உயிர்காக்கும் மூலிகைகள் வேணும்.  தோ....... நான் போய்க்கொண்டாறேன்னு ஆஞ்சி கிளம்பிப் போயிருக்கார்.

இமயமலைப்பக்கம் எங்கோ இருக்காம் இந்த அபூர்வ மூலிகைகள்.
போனவர் பார்த்தால்  பச்சைப்பசேலுன்னு மூலிகைகள் நிறைஞ்ச குன்று கண்ணுக்கு எதிரில். ஆனால் எது  இந்த உயிர்காக்கும் மூலிகைன்னு  சரியான விவரமில்லை. யாரைப்போய் கேட்பது? இங்கே அப்படித் தகவல் சொல்ல யாராவது இருந்துட்டாலும் .......  எது என்னன்னு தெரியாமல் நேரம் போக்கினால் அங்கே தலைவரின் தம்பிக்கு ஆபத்து.  பேசாம மூலிகை மலையையே பெயர்த்தெடுத்துக்கிட்டுப் போக வேண்டியதுதான். எண்ணம் செயலாச்சு.  வாயு வேகமா, மனோ வேகமா வாயு புத்திரன் கிளம்பி மலையோடு  போய்க்கிட்டு இருக்கார்.  போற வேகத்தில் மலையின்  சின்னச்சின்ன  முண்டுமுடிச்சுப் பகுதிகள் அங்கங்கே கீழே  விழுந்துருது.   இப்படி விழுந்த பகுதிகள் எல்லாம்  அங்கங்கே  ஔஷத மலைகளாகவும், குன்றுகளாகவும் கிடக்கு.  அப்படி ஒன்னுதான் இங்கே இருக்கும் இந்தக் குன்றும்.....
இந்தக் குன்றின் மேல் நம்ம ஹயக்ரீவர் எப்படி வந்தாருன்னு பார்க்கலாம்.  தேவ அசுரர் யுத்தம் நடந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம். பல்லாயிரம் வருசங்களாகச் சண்டை போட்டே களைச்சுப் போயிருக்கார் பெருமாள்.  கொஞ்சம் ஓய்வெடுத்தால் தேவலை. அதுக்காக ரணபூமியில்  பாம்புப் படுக்கையில் கிடக்க முடியுமோ?  செத்தக் கண்களை மூடி ஒரு அஞ்சு நிமிட் இருந்தாலும் போதும்.  இது தேவலோக அஞ்சு மினிட் ஆக்கும், கேட்டோ.  உக்கார்ந்த மேனிக்கே, நாண் பூட்டிய வில்லின்  மேல்பாகத்துலே  தாடையை ஊனிக்கிட்டுக் கண்களை மூடி இருக்கார்.

தேவலோகத்தில் அப்பப் பார்த்து  யாகம் ஒன்னு நடக்குது. எல்லோரும் ப்ரஸண்ட், பெருமாளைத்தவிர. இவர் வந்தால்தான் யாகம் பூர்த்தியாகுமுன்னு  நினைச்ச இந்திரன்  இவரைத் தேடி வர்றான்.  கண் மூடி ஒரு உறக்கம். எப்படி எழுப்பலாமுன்னு  யோசிச்சவனுக்கு,  மடத்தனமா ஒரு ஐடியாக் கிடைச்சது.  கரையான் உருவம் எடுத்து வில்லின் நாணைக் கடிச்சு அறுத்தான். அது அறுந்த வேகத்தில்  வில்லின் நுனி  டாண்ன்னு தெறித்து நிமிரும்போது,  அதுலே முகத்தை ஊன்றிக்கிட்டு இருந்த  தலையை அப்படியே அறுத்துத் தூரத் தூக்கிண்டு போய் உப்பு சமுத்திரத்தில் போட்டது :-(   பெருமாள் தலையில்லாதவரா  திடுக்கிட்டு  நிக்கறார்.
இது இப்படி இருக்க,  குதிரை முகமுள்ள அரக்கன் ஒருவன், பராசக்தியை தியானிச்சுத் தவம் இருந்து  சில வரங்களையும், மரணமில்லாப் பெருவாழ்வையும்  வேண்டி நிக்கறான்.  நம்ம சாமிகள் இருக்காங்க பாருங்க....  ஒருவித அல்ப சந்தோஷிகள் என்றுதான் சொல்லணும். எவனாவது வரம் கேட்டால் அதிலுள்ள நன்மை தீமைகளையெல்லாம்  முன்னே பின்னே யோசிச்சுப் பார்க்காமல்,   'தவத்தை மெச்சினேன். என்ன வரம் வேண்டுமோ கேள்' னு  உதார் விடுவதுதான் எப்போதும்.

அரக்கன் அப்போ ரொம்ப யுனீக்கா இருந்தவன்.  தன்னைப்போலவே குதிரைத்தலை உள்ள ஒருவனால்தான் தனக்கு முடிவு இருக்கணுமுன்னு  கேட்டுக்கிட்டான்.  ஆமென்!

இப்போ தலையில்லாத பெருமாளுக்குத் தலை ஒன்னு அர்ஜெண்ட்டா வேண்டி இருக்கு. இந்திரன் பார்த்தான்....  ஒரே கல்லுலே  ரெண்டு மாம்பழமுன்னு  ஒரு குதிரையைக் கொன்னு அதன் தலையைப் பெருமாள் கழுத்துலே வச்சுட்டான். மயங்கிக் கிடந்த பெருமாள் உயிர்ப்புடன் எழுந்தார்.
எதிர்பார்த்ததே நடந்தது. குதிரைத்தலை அரக்கன் காலி!

ஆமாம்....  ஆனானப்பட்ட பெருமாளுக்கு  ஏன்  தலையே போறமாதிரி ஆச்சு?  பெண்டாட்டி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டதுதான் காரணம். வீட்டுலே எதோ சின்னதா வாக்குவாதம் வந்துருக்கணும். ச்சும்மா வாயை வச்சுக்கிட்டு இல்லாமல்  பெண்டாட்டி முகத்தைப் பற்றி பழிச்சுக் காட்டி இருக்கார்.  அவள் யார்? மஹாலக்ஷ்மி! அவளுக்கு ஈடு இணையா,  அழகிலாகட்டும் செல்வத்திலாகட்டும் யாரேனும் ஈரேழு உலகத்தில் இருக்கச் சான்ஸ் உண்டோ?   என்னதான்  புருஷன் சொல்லிக்கிட்டுப் போகட்டுமேன்னு இருக்கமுடியுதா? தன்மானம்னு ஒன்னு இருக்கோல்யோ?  என் முகத்தை  இவ்ளவு கேவலப்படுத்துன உங்க முகம்  ஒரு நாள் அறுபட்டு வீழக்கடவதுன்னு சபிச்சுட்டாள்.  அதான்....  முற்பகல் செய்யின் பிற்பகல் என்றதுக்கு  சாமி கூட தப்ப முடியாதுன்னு தெரிஞ்சுபோச்சு பாருங்களேன்!

புதுத்தலை வந்ததும் பெருமாளுக்கு தாகமா இருக்கு.  கருடர் ஓடிப்போய் விரஜா நதியைக் கொண்டு வர்றார். ஆதிசேஷனோ....  பாதாளத்துக்குப்போய் அங்கே ஓடிக்கொண்டிருக்கும் பாதாளகங்கையைக் கூப்ட்டு வர்றார்.  இப்படி  அடிபொடிகள் சேவை.....   கருடனுக்கும், பாம்புக்குமே ஆகாது என்றாலும் பெருமாள் சேவையில் சொந்தக் காழ்ப்புகளுக்கெல்லாம் இடமில்லையாக்கும், கேட்டோ!
இந்த ஔஷடமலையில்தான் நம்ம வேதாந்த தேசிகர், தவம் செய்யறார். ஸ்ரீ தேசிக தபோ மண்டபம்னு ஒரு சந்நிதி.  அப்போது அவருக்குப் பெரியதிருவடியின் தரிசனம் லபிக்குது!  இதே ஊரில் நாப்பது வருசகாலம் தங்கி பெருமாளைத் துதித்து தேவநாய பஞ்சாசத், அச்யுத சதகம், மும்மணிக்கோவை, இன்னும் சில சிற்றிலக்கியங்களையும்   இயற்றி இருக்கார். அவர் வாழ்ந்த வீடும், வீட்டின் கிணறும் இன்னமும் இருக்காம்.  ஸ்ரீ தேசிகர் திருமாளிகை.  இங்கே  தன்னுடைய உருவம்போலவே தன்கையால் செஞ்சு வச்ச சிலையும்  இருக்குன்னாங்க. நாம் போகலை.

இன்னொருக்கா வரணும் என்று பெருமாளை வேண்டிக்கிட்டேன்.
அஹீந்தன் என்னும் அநந்தன் வழிபட்ட க்ஷேத்ரம் என்பதால் திரு அஹீந்த புரம் (திருவஹீந்த்ரபுரம்) என்று பெயர் பெற்ற ஊர்  இது, இப்போ திருவந்திபுரமுன்னு  சொல்றாங்க.


மருந்துமலையில்  ஒரு காலத்துலே மூலிகைகள் நிறைஞ்சு இருந்துருக்கும். இப்போ....  குப்பைகள்தான்  எங்கே பார்த்தாலும் :-(   மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு.  ஏன் நம்ம சனம் இப்படி  இருக்குன்னு.......


இதுக்குள்ளே கீழே விடுவிடுன்னு படி இறங்கிப்போன நம்மவர் படிவரிசைகளுக்கு நேர் எதிரா இருக்கும்  ஸ்ரீ தேவநாதப்பெருமாள்  கோயிலுக்குள் நுழைஞ்சார். உண்மையில் இதுதான் நூற்றியெட்டு திவ்யதேசக்கோவில்களில்  ஒன்னு. படிப்பு படிப்புன்னு  ஊரே  அங்கலாய்ப்பதால்  ஹயக்ரீவர் புகழை எல்லாம் தட்டிக்கிட்டுப் போயிருக்கார். ஆனானப்பட்ட கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே ஞானம் உபதேசிச்சவர் இவர்.


பெரிய மதில்சுவருக்குப் பின்னே  பெரிய கோவிலாத்தான் இருக்கு. ஆனால் கோவில் மூடும் நேரம் என்பதால் விஸ்தரிச்சுப் பார்க்க முடியலை.
காலை 6 முதல் 11 வரைதான் கோவில் திறந்து வைக்கிறாங்க. ஆனாலும்  இப்போ மணி பனிரெண்டாயிருந்தாலும் அஞ்சு நிமிசமாவது உள்ளே  போய் தரிசனம் கிடைச்சது நமக்கு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேணும்.

 மாலைநேரங்களில் நாலரை முதல் எட்டுவரை  திறந்து வைக்கிறாங்க.  ஆனால் மொத்த சனமும்  மேலே மலையில் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் சந்நிதியில்தான் மொய்க்குது!   உலகிலேயே ஹயக்ரீவருக்குன்னு கட்டுன முதல் கோவில் இதுதானாமே!
மூலவர் தெய்வநாயகன் என்னும் தேவநாத ஸ்வாமி.  கிழக்குப் பார்த்து  நின்றகோலத்தில் ஸேவை சாதிக்கிறார்.  தாயார் ஹேமாம்புஜவல்லி.


ஒரு சமயம், தீவிர சிவபக்தனான  சோழ மன்னன் ஒருவன், இந்தக்கோவிலை இடிச்சுத்தள்ள முற்பட்டபோது,  தன்னுடைய கையில் சூலாயுதம் ஏந்தி, முக்கண்ணனாக தரிசனம் கொடுத்தாராம் பெருமாள். அதே போலத்தான் இப்பவும் ஜடாமுடியுடன், முக்கண்ணுமாய் இருக்கார். கைகளில் சங்கு சக்கரம் உண்டு.  வலது  உள்ளங்கையில் ப்ரம்மாவைக் குறிக்கும் தாமரை மலர் வேற!  இப்படி  மும்மூர்த்திகளுமாப் பெருமாள் நிற்பது இங்கே விசேஷம்!


இங்கே ஒரு சந்நிதியில் நாம் நாலைஞ்சு படி ஏறி  அந்தப்பக்கம்  கீழே பார்த்தால் பெருமாள் இருக்கார்.


திருமங்கை ஆழ்வார்  வந்து பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார்.

சின்னப்பிஞ்சுவுக்கு இன்றைக்குப் பொறந்தநாளாம். முட்டாய் கொடுத்தான். ஹைய்யோ....தங்கமே!  மனமாற வாழ்த்தினேன். நல்லாப் படிச்சுப் பெரிய ஆளா வரணும்!


திருப்பதிக்குப் பிரார்த்தனை செஞ்சுக்கிட்டுப் போகமுடியாதவர்கள் தேவநாதஸ்வாமியிடம்  சொல்லிட்டால் போதுமாம். இங்கேயே அவருக்கான காணிக்கைகளையும் செலுத்தினால்  ஆச்சாம்.   எப்படியும்  இவரே திருப்பதிக்கு நம்மை அனுப்பி வச்சுடுவாராம்!  எல்லாம் நம்பிக்கைதான்.  கடவுளே நம்பிக்கைதானே!

திருவஹீந்த்ரபுரம் தேவநாதப்பெருமாள் எப்படியும் இன்னொருக்கா என்னை இங்கே வரவழைப்பார் என்ற நம்பிக்கையுடன் அங்கிருக்கும்   கோவில்கடைகளில் சின்னதா ஒரு லக்ஷ்மிஹயக்ரீவர் வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம்.
இப்போ நேராப்போவது பாண்டிச்சேரிக்குத்தான்.  முப்பது கிமீ தூரம். பகல் சாப்பாடு அங்கே!

தொடரும்...........:-)


21 comments:

said...

Wishes for 11 years of Bloging, teacher garu...

said...

படங்கள் எல்லாம். அழகு... நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு...

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். வல்லி அம்மா நினைவு படுத்தினாங்க.

இங்கே வந்து ஆசிர்வதங்களை பெற்றுக்கொள்ளவும்.
வரும்போது மைலாப்பூர் ல் தந்த அக்கார வடிசலையும்
ஒரு தொன்னை அளவு கொண்டு வரவும்.

சுப்பு தாத்தா.
மீனாக்ஷி பாட்டி.
www.subbuthathacomments.blogspot.com
ஹயக்ரீவ சரித்ரம் knowing for first time.

said...

Anbhu. Thulasi, I am really happy to read your blog. Wonderful narration. I also enjoy travel as. well as your blog. When you discribe. about your travel., mentally I was also with you. Thank you!!! Please , can you put Lables to your blog . So that we can get help and guidance when we travel to that places. Thankyou again . With our wishes. Anu...

said...

நான் பிறந்து வளர்ந்தது கடலூரில் தான். திருவஹீந்திரபுரத்திற்குப் பல தடவைகள் சென்றுள்ளேன். கடலூரை விட்டு பிரிந்து 45 வருடங்கள் ஆகிவிட்டன. தங்களுடைய பதிவின் மூலம் ஹயக்ரீவர் பற்றிய செய்திகள் அறிந்தேன். படங்கள் கண்டவுடன் என்னுடைய பிள்ளைப் பிராயமும் கெடில நதியும் மற்றும் நினைவில் ஊற்றெடுத்தன. தங்களுக்கு நன்றி.

LIFCO பதிப்பகத்தார் திருவந்திபுரம் கோவிலுக்கு பல கைங்கர்யங்கள் செய்துள்ளனர்.

--
Jayakumar

said...

நான் பிறந்து வளர்ந்தது கடலூரில் தான். திருவஹீந்திரபுரத்திற்குப் பல தடவைகள் சென்றுள்ளேன். கடலூரை விட்டு பிரிந்து 45 வருடங்கள் ஆகிவிட்டன. தங்களுடைய பதிவின் மூலம் ஹயக்ரீவர் பற்றிய செய்திகள் அறிந்தேன். படங்கள் கண்டவுடன் என்னுடைய பிள்ளைப் பிராயமும் கெடில நதியும் மற்றும் நினைவில் ஊற்றெடுத்தன. தங்களுக்கு நன்றி.

LIFCO பதிப்பகத்தார் திருவந்திபுரம் கோவிலுக்கு பல கைங்கர்யங்கள் செய்துள்ளனர்.

--
Jayakumar

said...

திரு.கோபால் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! துளசி தளத்திற்கும் நல்வாழ்த்துகள்:)!

படங்களும் பகிர்வும் அருமை. பிறந்தநாள் சிறுவன் cute. விற்பனைக்கான வெண்கலக் சிலைகள் நுண்ணிய வேலைப்பாட்டுடன் அழகாக உள்ளன.

said...

11 வருடங்கள் ....ஆகா வாழ்த்துகள் அம்மா ....உங்கள் சுற்றுலாவும் ,சுவையான பதிவுகளும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்....

அழகான இடமும் ,படங்களும் .......அருமை

said...

அன்பு துளசி, மிக மிக சக்தி வாய்ந்த பெருமாள். தேவனாத பெருமாளின் அழகு சொல்லி முடியாது . கடலூர் ,திருவேந்திபுரத்தில் ஓரு நாள்

முழுக்கத் தங்கி பெருமாளைத் தரிசித்தோம். தேசிகருக்குக் கருடன் தரிசனம் கொடுத்து எழுதவைத்த
இடம். கருடதண்டகம் சொல்லிவந்தால் விஷப்பூச்சிகள் அண்டாது. நோய்கள் வராது என்ற முழு நம்பிக்கை.
கெடில நதியில் வெள்ளம் வந்த காலமும் உண்டு.
வெகு அழகான பதிவு துளசிமா. .வாழ்த்துகள்.

said...

நண்பர் வீட்டு திருமணத்திற்காக ஒரு முறை இங்கே சென்றதுண்டு. சிறு வயதில் சென்றிருந்தாலும் நினைவில்லை......

அழகிய கோவில். உங்கள் மூலம் மீண்டும் பார்க்கக் கிடைத்தது. நெய்வேலியில் இருக்கும் போது போனதுண்டு! அதன் பிறகு போக முடியவில்லை. போகணும்! பழைய நினைவுகளை மீட்பதற்காக!

said...

வாங்க மௌலி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க அபிநயா.


யானையாச்சேப்பா.... அதுதான்.....

said...

வாங்க சுப்புரத்தினம் ஐயா & மீனாக்ஷி அக்கா.

ஹைய்யோ!!!! எனக்கே எனக்கா!!!!!! இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்வேன்!!!!

said...

வாங்க அனு பாஸ்கர்.

முதல் வருகைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

கூடியவரை லேபிள் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். தமிழ்மணத்தில் சேர்க்கும்போது கூடுதல் லேபிள்களால் பிரச்சனை என்பதால், வெளியிட்டபின் மறுநாள் லேபிள்களைச் சேர்த்து வருகின்றேன்.

கருத்துக்கு நன்றி.

said...

வாங்க ஜயகுமார்.

ஆஹா.... ஹயக்ரீவர் உங்களை நம்ம பக்கம் கூட்டி வந்துட்டாரா!!!!

லிஃப்கோ பதிப்பகத்தார் கைங்கரியமா!!! நல்லா இருக்கட்டும்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

நாம் வாங்கியது வெண்கலமில்லை :-( ஃபைபர்ன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

தொடர்வருகை மனதிற்கு மகிழ்ச்சியே!

நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

ஒருநாள் முழுதுமா!!!! ஹைய்யோ!!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

மெயின் கோவிலைப் பூட்டும் நேரமாகிவிட்டதால் சரியாப் பார்க்கலை என்ற மனக்குறை எனக்கு இருக்கு.

எப்படியும் சீர்காழியைச் சுற்றி இருக்கும் பயணம் ஒன்னு பாக்கி. அப்ப இங்கேயும் எட்டிப்பார்க்க முடியுதான்னு பார்க்கணும்.

said...

திருவந்திபுரத்தில் உள்ள ஒவ்வொரு இடமும் எனக்கு ரொம்பவே அத்துபுடி. பல முறை சென்றுள்ளேன். இப்போது கூட மனைவி கிண்டலடிப்பதுண்டு. எப்படி வெளியே வந்துட்டீங்க என்று?

said...

வாங்க ஜோதிஜி.


ஆஹா... பலமுறைகளா!!!!! குன்றின்மேல் போய் அமர்ந்தால் மனசுக்கு அமைதியாக இருந்துருக்குமே!