Friday, September 25, 2015

ஐ ஆம் ஆன் மை ஓன்......( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 81)

ஹொட்டேல் அதிதியில் (பாண்டிச்சேரி) அறை புக் பண்ணி இருந்தோம். வலையில் தேடுனதுதான்.  அறை வசதியாத்தான் இருக்கு. நாலு நக்ஷத்திரமாம். இங்கே இருக்கும் ரெஸ்ட்டாரண்டிலேயே பகல் சாப்பாடு ஆச்சு.

'இங்கே இருக்கும் ஒரு தொழிற்சாலைக்குப் போக வேண்டியதா இருக்கு.  சாப்பாட்டுக்கு அப்புறம் போறேன். நீ தனியா சமாளிச்சுக்குவயா'ன்னார் நம்மவர்.  வெல்லம் தின்னக் கசக்குதா?  ஓக்கே. ரெண்டரைக்குக் கார் வந்து, அவர்  கிளம்பிப் போனதும் கொஞ்சநேரம்  வலை மேய்ஞ்சுட்டு, நானும் கிளம்பினேன்.


ஏற்கெனவே பாண்டிச்சேரிக்குப் பலமுறை வந்திருந்தாலும்  போகணுமுன்னு நினைச்ச  சில தேவாலயங்களைப் பார்க்க முடியாமல் போயிருதுன்னு இப்போ அவைகளுக்கே முன்னுரிமை.

முதலில்  Basilica of the Sacred Heart of Jesus போகலாம்.  1895 லே கட்டலாமேன்னு ஆசைப்பட்டுத் திட்டங்கள் தீட்டி, 1902 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிச்சு  ஒரு வருசத்துலே கட்டி முடிச்சு 1908  ஜனவரி 27,  திறந்து வச்சுட்டாங்க.  இப்ப வயசு  நூத்தி ஏழு நடக்குது.

கிறிஸ்த்துவத்தில் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தது. ரெண்டாயிரம் பேர் ஒரே சமயத்தில் பிரார்த்தனையில் பங்கெடுக்கும் அளவுக்குப் பெருசு!

நான் போன நேரம் சுமார் நாலு மணி இருக்கும். கோவிலில் ரெண்டொருவர்தான் இருந்தாங்க.  நம்ம ஹொட்டேலில் இருந்து  ரொம்பப்பக்கம்தான்.  ரெண்டு கிமீகூட இல்லை.  எம்ஜி ரோடுலே இருக்கு. ரயில்வே ஸ்டேஷன் பக்கம். ( இந்தியாவில் ஊர் ஊருக்கு ஒரு எம்ஜி ரோடு இருக்கு !  மஹாத்மா காந்தி ரோடு.)


கோதிக் ஸ்டைலில்  ரொம்பவே  உயரமான சீலிங் வச்சு சூப்பரா இருக்கு!  முகப்பில் இருக்கும் ரோஸ் விண்டோ , வட்டமான ஸ்டெய்ன்க்ளாஸ் அமைப்பு,  இங்கே எங்கூர் (கிறைஸ்ட்சர்ச்) தேவாலயத்தை நினைவு படுத்துச்சு.  ஹூம்.... நாங்கதான்  நிலநடுக்கத்தில் இப்படிப்பட்டப் பொக்கிஷங்களை இழந்துட்டு அம்போன்னு நிக்கிறோமே :-(


அலுவலகத்தில்போய் அனுமதி வாங்கிக்கிட்டுக் கொஞ்சம் படங்களைக் கிளிக்கினேன்.

 படங்களை ஆல்பத்தில் போட்டுருக்கேன். விருப்பம் இருந்தால் பாருங்களேன்.அடுத்துப்போன தேவாலயம், இதைவிட ரொம்பவே பழசு.  Immaculate Conception Cathedral.  மிஷன் தெருவில் இருக்கு.  இதுவும் அதிக தூரமில்லை.  இந்த சர்ச்சில் இருந்து  எல்லையம்மன் கோவில் தெருவழியாப் போனால் ஒரு ஒன்னரை கிமீ தொலைவுதான். பத்தே நிமிசத்தில் போய்ச் சேர்ந்தோம். வெள்ளைப் பூனைப் பாதுகாப்பாய் பின் தொடர்கிறார் நம்ம ட்ரைவர் சீனிவாசன்.

இந்தக் கோவிலும்  கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்ததுதான்.  உள்ளூர் மக்களுக்கு இதன் பெயர் 'சம்பா கோவில்' !  'செயிண்ட்  பால்' என்பது  அப்படியே  மரூவி   சம்பா ஆகி இருக்கு!
ப்ரான்ஸ் நாட்டை பதினாலாம் லூயி ஆண்டுக்கிட்டு இருந்த காலக்கட்டம்.  1689 இல்  ப்ரான்ஸ் நாட்டில் இருந்து மிஷனரிகள் இந்தியாவுக்கு (அப்ப இந்தியா என்னும் பெயர் இல்லை கேட்டோ!) ப்ரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த  இந்தப் பகுதிக்குக் கிளம்பி வர்றாங்க.  இங்கே ஒரு தேவாலம் கட்டலாமேன்னு அதுக்கான இடத்தை  வாங்கறாங்க.  அரசர் பண  உதவி செய்யறார். 1692 இல்  கோவில் கட்டியாச்சு. அப்புறம் டச்சு நாட்டினருடன்  நடந்த சண்டையில் சர்ச்சை இடிச்சுப் போட்டுட்டது டச்சு படை. அதெப்படி இடிக்கப்போச்சுன்னு அவசர அவசரமா இன்னொரு சர்ச் கட்டுனாங்க ஃப்ரெஞ்சு மக்கள்.  அதுவும் அதிக நாள் நீடிக்கலை.
1728 லே பக்காவா திட்டம் தீட்டி ஒரு பெரிய தேவாலயம் கட்ட ஆரம்பிச்சு எட்டு  வருசமா வேலைகள் நடந்து 1736 லே இப்ப இருக்கும் இந்த  தேவாலயத்தைக் கட்டி முடிச்சாங்க.

நான்   தேவாலயத்தை நோக்கிப் போகும்போதே கொஞ்சம் கூட்டம் அதிகமா இருந்தது கண்ணில் பட்டது. பரபரப்பா சிலர் இங்கேயும் அங்கேயுமாப் போய்க்கிட்டு இருந்தாங்க. கோவிலில் ஏதோ விசேஷம்போல, இந்த நேரத்துக்கு சர்வீஸ் நடக்குதேன்னு  போய்ப் பார்த்தால்......


சர்ச்சின் முன்னாள் ஃபாதர் ரெவரண்ட் க்றிஸ்டோபர் உள்ளே பெட்டியில் இருக்கார். நேற்று மரணமாம். இன்றைக்கு  சவ அடக்கம் நடக்கப்போகுது!  87 வயசாகுது. அவரைப்பற்றிய விவரங்களைத் தகவல் பலகையில் ஒட்டி வச்சுருந்தாங்க. உள்ளே நல்ல கூட்டம்.  நல்ல பங்குத் தந்தையா இருந்துருப்பார் போல!


அவருடைய ஆன்ம சாந்திக்கு  மௌனமா நானும்  பெருமாளை வேண்டிக்கிட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன்.


ஆச்சு  இன்னும் ஒரு இடம்தான் எனக்குப்போகணும்.  நம்ம லக்ஷ்மியைப் பார்க்கணும்.


மணக்குள விநாயகர் கோவிலுக்குப்போய் சேர்ந்தேன். இங்கேயும்  கோவில் பழுதுபார்க்கும் பணி நடந்துக்கிட்டு இருக்கு.  கும்பாபிஷேகம்  தை மாசம் வச்சுருக்காங்களாம்.உள்ளே போய் புள்ளையாரைக் கும்பிட்டு,  உள்பிரகாரம் வலம் வந்தேன்.  வெளியே எட்டிப் பார்த்தால் லக்ஷ்மியைக் காணோம். எப்போ வருவாளாம்னு  விசாரிச்சால், அஞ்சரை மணி ஆகுமுன்னு  அலுவலகத்தில் அர்ச்சனை சீட்டு விற்பவர் சொன்னார்.  இன்னும்  அரைமணி காத்திருக்கணுமோன்னு நினைக்கும்போதே...   சீனிவாசன்  ஓடோடி வந்து, யானை  அந்தப்பக்கம் நிக்குதுன்னார்.


கடை வரிசைகளைக் கடந்து அந்தாண்டை (அரவிந்த ஆஸ்ரமம் இருக்கும் பக்கம்)  போனால், சின்னச்சின்ன மணல் மூட்டைகளைப் பரத்தி வச்சுருக்கும்  விரிப்பில் நம்ம லக்ஷ்மி.  காலிலே கொலுசைக் காணோம்!  கொஞ்சம் இளைச்சு வேற போயிருக்காள் :-(  ஐயோன்னு இருந்துச்சு.


பாகரிடம், கொலுசு எங்கேன்னு கேட்டேன்.  ரிப்பேர் பண்ண அனுப்பி இருக்காராம்.  கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஜம்னு  கொலுசு வந்துரும் என்றார்.கோவில் கடைகள் ஒன்னில் ஒரு பொம்மை பார்த்தேன். துணி பொம்மைதான். நாட்டியப்பெண்மணி. நிகுநிகுன்னு  ஒல்லியா அழகான பெண். விலைதான் கொஞ்சம் அதிகமுன்னு தோணுச்சு. வாங்கிக்கலை.  சென்னையில் கிடைச்சால் பார்க்கலாம்.


 கோயில் பூனை

கண் எதிரில் அர்பிந்தோ ஆஸ்ரம். உள்ளே போனேன். சமாதியைச் சுத்தி வழக்கம்போல் சில அந்நிய நாட்டவர்கள்.  மனம் குவியலை.  வெளியே வந்துட்டேன்.   கொஞ்ச தூரத்தில் இருந்த  ஒரு  கடையில்  நானும் சீனிவாசனும் ஆளொக்கொரு காஃபி.

அறைக்குத் திரும்பிட்டேன்.  கோபால்  ஃபோன் செஞ்சார். கிளம்பியாச்சாம்.  இன்னும் அரைமணியில் வந்துருவாராம்.


தொழிலதிபர் நண்பருடன் கோபால்  வந்து சேர்ந்தார். இன்றைக்கு டின்னர்  அவரோடுதான்.  இங்கே ரெஸ்ட்டாரண்ட் சுமார்தான்னு சொல்லி வேறொரு இடத்துக்குக் கூட்டிப்போனார். 'ஆனந்தா இன்' என்ற பெயர்.


தேவையானதைச் சொல்லியாச். கடைசியா தயிர்சாதம் சொன்ன நண்பர்,  வெயிட்டரிடம், தயிர்சாதம் எப்படி இருக்கணுமுன்னு சின்னதா ஒரு லெக்ச்சர் கொடுத்தார்.

"அது என்ன தயிர் சாதம்ன்னதும்  கொழ கொழன்னு குழந்தைக்குப் பிசைஞ்சு ஊட்டும்வகையில்  கொண்டு வர்றீங்க? "

" ஜஸ்ட் லேசா  சூடு ஆறின சாதத்தில்  புளி இல்லாத புதுத் தயிரைப்போட்டுக்  கலக்கணும். சோறு அவ்வளவா பின்னமாகக் கூடாது.  மாதுளை, திராட்சை போன்ற  சமாச்சாரங்கள் இல்லாமல் ஜஸ்ட் லேசா கொஞ்சம் உப்பு மட்டும் சேர்க்கணும்.  தயிர் சாதம் ப்ளெயின் தயிர்சாதமா இருக்கட்டும்."


தலையைத் தலையை ஆட்டிக்கேட்டுக்கிட்ட பணியாளர்  உள்ளே போய்  செஃப் தனக்குத் தோணியபடி கலந்து கொடுத்த சோத்தைக் கொண்டு வந்தார். பணியாளர் கடமை, கஸ்டமர்  சொல்றதைக் கேட்பது மட்டுமே!


நண்பரின் மகன்,  ஸ்ரீலங்கா ப்ரிமியர் லீக்  க்ரிக்கெட் டீமில்  விளையாடறார்.  கொஞ்ச நேரம்  வீட்டுக் காரியங்கள் பேசிக்கிட்டு  இருந்தோம்.  ஐ மீன் அவர் பேசிக்கிட்டு இருந்தார் என்னிடம். நம்ம  கோபாலுக்கு ஒரே ஆச்சரியம்....  பலவருசங்கள் இவரோடு பழக்கம் இருந்தாலும் இதுவரை இவர்  இப்படி மனம் திறந்து பேசிப் பார்க்கவே இல்லையாம்!
 எனக்கும் பதிவுக்கு  மேட்டர் கிடைச்சதுதான்.  ஆனாலும்..........   இப்போ வேணாம்  :-)


என் ராசி அப்படி.  நான் பேசாம  தேமேன்னு கிடந்தாலும்.... என்னைத்தேடி  சமாச்சாரங்கள் வர்றது புதுசில்லை.  இங்கே நியூஸியிலும்தான்....   மேட்டர்ஸ் தேடி  வர்றதை என்னன்னு சொல்ல?


நண்பர் அதிதியில் கொண்டு வந்து விட்டுட்டு, நாம் திரும்பி சென்னைக்குப் போனதும் வீட்டுக்கு வரணுமுன்னு கேட்டுக்கிட்டார்.  இந்தப் பயணத்தில் முடியாது. அடுத்தமுறை பார்க்கலாமுன்னு  சொல்லி இருக்கேன்.


நாளைக்குப் பாண்டியை விட்டுக் கிளம்பறோம்.

குட்நைட்

தொடரும்.......:-)10 comments:

said...

போன வருஷம் போனபோது மணக்குள வினாயகரை பார்த்தோம் ....இந்த வருசமும் பிளான் போட்டாச்சு ....பார்க்கலாம் .....


சர்ச்சும் ....படங்களும் ...அழகு ....

said...

இரண்டு தேவாலயங்களுமே மிக அழகு. போக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. மறைந்த பாதிரியாரின் ஆன்மா அமைதி பெறட்டும்.

ரெண்டாவதாச் சொன்ன சர்ச்.. immaculate conception சர்ச்.. அது பாக்க சால்ஸ்பெர்க்ல பாத்த சர்ச் (சவுண்ட் ஆஃப் மியூசிக்லயும் வரும்) மாதிரியே இருக்கு.

தயிர்சாதம்னு நீங்க கேட்டதும் வந்ததும்.. வடிவேலு நகைச்சுவையை நினைவுபடுத்துது. ஊத்தப்பத்த எப்படியெல்லாமோ சொல்லி விவரிச்சுக் கேப்பாரு.. எல்லாத்தையும் கேட்டுட்டு சர்வர் “சாருக்கு ஒரு ஊத்தப்பேஏஏம்”னு சொல்லிருவாரு.

said...

பாண்டிச்சேரி..... நெய்வெலியிலிருந்து ரொம்பவே அருகில் என்பதால் பல முறை இங்கே சென்றிருக்கிறேன். என்றாலும் கிட்ட இருந்து ஒவ்வொண்ணையும் ரசித்துப் பார்த்ததில்லை..... :))) அப்பல்லாம் பதிவுலகில் இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!

எனக்கு ரொம்ப பிடித்தது, பாண்டி கடற்கரையில் பாறைகளில் அமர்ந்து கொண்டு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் கடல் அன்னையைப் பார்ப்பது......

said...

பாண்டிச்சேரியில் ஆரோவில் பார்க்கவில்லையா. என் தளத்தில் உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்

said...

அவருடைய ஆன்ம சாந்திக்கு மௌனமா நானும் பெருமாளை வேண்டிக்கிட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன்.

விநாயகர் சதுர்த்திக்கு பக்ரீத் வாழ்த்துகளை சேர்த்து சொன்னது போல சில மீம்ஸ்களைப் பார்த்தேன். இந்த வரிகளைப் படித்தவுடன் சிரித்து விட்டேன். ஒரு முறை பாண்டிச்சேரி சென்றோம். ஆனால் அவசரமாக வந்து விட்டோம். ஒவ்வொரு முறையும் தேவாலயங்களின் உள்ளே என்ன நடக்குது? என்று பார்க்க வேண்டும் என்ற ஆசையுண்டு.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஆஹா.... போகும்போது லக்ஷ்மிக்குக் கொலுசு போட்டாச்சான்னு பார்த்துட்டு வந்து சொல்லுங்க.

அவள் காலழகு இங்கே:-)

http://thulasidhalam.blogspot.com/2010/02/blog-post.html

said...

வாங்க ஜிரா.

கத்தோலிக்க தேவாலயங்கள் பெருசாதான் எப்பவும் கட்டறாங்க. பல இடங்களில் பார்த்திருக்கேன்.

சர்ச்சுக்குள் போனதும் சாமி கும்பிடணும். அது எந்தப்பெயரில் இருந்தால் என்ன? சாமி இஸ் சாமி! அம்புட்டுதான்:-)

ஊத்தப்பம்..... ஹாஹா எந்தப்படம்?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


உண்மைதான். பதிவரான பின் பார்க்கும் கண்ணோட்டமே வேற வகையாத்தான் இருக்கு:-)

எனக்குக் கல் பீச் விருப்பம் இல்லை. வெண்மணல் பீச் பிடிக்கும்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஒருமுறை ஆரோவில் போய், ஜஸ்ட் வெளிப்புறம் மட்டும் பார்த்திருக்கோம். அவ்வளவா மனசுக்குப் பிடிக்கலை.

said...

வாங்க ஜோதிஜி.

கிறிஸ்துவப்பள்ளியில் படிப்பு என்பதால் சர்ச்சுகள் மேல் வெறுப்பு இல்லை. மேலும் இங்கே நம்மூர் பிள்ளையார் கோவில்போல் மூலைக்கு மூலை சர்ச்சுகள்தான். ஒரு சர்ச்சில் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் கேரளப் பாதிரியார்கள் மலையாளத்தில் நடத்தும் சர்வீஸும் உண்டு. அதுக்கும் போய் வருவேன்.

எப்பவாவது சந்தர்ப்பம் கிடைத்தாலொரு முறை போய்த்தான் பாருங்களேன்!