Monday, September 07, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். ஐந்தாம் நாள் ) தொடர்ச்சி......

சொன்ன நேரத்துக்கு நண்பர்கள் வந்ததும்  வீட்டுக்குக் கூட்டியாந்து நம்ம அரண்மனையைச் சுத்திக் காமிச்சு, காஃபி டீ வேணுமான்னு 'கேட்டு' உபசரிச்சு, அவுங்க வேணாமுன்னு சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்டு எல்லோருமா கிளம்பினோம். பீச் வாக். நடக்கக் கொஞ்சம் கூட சோம்பல் படாத  அற்புத மனிதர்கள், லக்ஷ்மியும், பத்மநாபனும்.  கால் புதையப்புதைய மணலில் நடந்து (அதே ஒன்னரை கிமீ) சர்ஃபர்ஸ் பேரடைஸ் மெயின்  பீச் வாசலில் கரை ஏறினோம்.


இன்னிக்கு ஞாயிறு ஸ்பெஷலா, ஸர்ஃபர்ஸ் பேரடைஸில் Beachfront Markets என்று  கடற்கரைச் சாலை நடைபாதையிலேயே  கூடாரக் கடைகள் போட்டுருவாங்க. கிட்டத்தட்ட ஒரு  120 கடைகளுக்கு இடம் தருது சிட்டிக் கவுன்ஸில்.  எல்லாம் ஒரு நாலு மணி நேரத்துக்கு மட்டும்.  மாலை 4 முதல் 8 வரை. ஒன்பது மணிக்குப்போய்ப் பார்த்தால்  இடமே பளிச்ன்னு காலியா இருக்கும். அதேபோல்  மதியம் மூணு மணிக்குப்போனால் கடை  வரும் அறிகுறிகூட இருக்காது. ஜீ பூம்பா மேஜிக்தான்:-)வாரம் ரெண்டு நாட்கள், புதன், ஞாயிறுகளில் மட்டும்  வந்துபோகும் மார்கெட் இது.

காலநிலையைப் பொறுத்து கடைகளின் எண்ணிக்கை  அவ்வப்போது குறைஞ்சுரும் வேற. மழைக்காலம் என்றால் சுத்தம். இன்றைக்குக் கடைகள்  ரொம்பவே குறைவு.  ஒரு  நாப்பது இருந்தாலே அதிகம்.  போகட்டும், நமக்கு வெறும் வேடிக்கைதான்.  Geodes கிடைச்சால்  ஒன்னோ ரெண்டோ வாங்கிக்கணும்.

இருட்டில் ஒளிரும் டி ஷர்ட்ஸ்,  குடி பாட்டில்களை சப்பையாக்கித் தர்றோம்.   சுவர் அலங்காரமாத்  தொங்க விட்டுக்கலாம்னு ஐடியாவோட செஞ்சும் தரும் கடை, சின்னப்பசங்களுக்கான பொம்மைகள்னு  சில. ஒரு  ஆறேழு வருசத்துக்கு முன்னே வந்து சக்கைப்போடுபோட்ட மந்திரப்புழு (SLIDEYZ-MAGIC-WORM) இன்னும் ஸ்டெடியாப் போய்க்கிட்டு இருக்கு.  நம்ம  ரஜ்ஜுவுக்கு ஒன்னு  வாங்கலாமான்னா, வேணாம், குழந்தை பயந்துருவான்னார் நம்மவர்.

ஸ்டீல் ஸ்டீவ் , முதலையோடு வாக்கிங்  வந்தவர் அப்படியே  கொஞ்சம்  அசந்து காற்றில் உக்காந்து ஓய்வெடுக்கறார். காலடியில் முதலை. அவர் தினம் இப்படி பத்துப்பதினொறு மணி நேரம் உக்காரவேண்டி இருக்காம்.  அவர் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு,  பக்கத்தில் இருக்கும் உண்டியலில் காசு போட்டால் உங்களோடு கை குலுக்குவார். நாம்தான் 'யோகா நாட்டுலே' இருந்து வந்தவங்களாச்சே! அந்தரத்தில் அமர்ந்த ஸ்டீவை க்ளிக்கினோம்.  இந்தியாவில் இருந்து வந்த பயணிகள் குழு ஒன்னு இவரை ஆராய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு:-) பெரிய கூட்டமா வந்துருக்காங்க போல!

ராச்சாப்பாட்டுக்கு இன்றைக்குப் போகுமிடம்  அவியல். அதுவும் ஒரே கல்லில் ரெண்டு மாம்பழமா இருக்கணும்.   இந்த ரெஸ்டாரண்ட் சௌத்போர்ட்  மரைன்பரேடில் இருக்கு. ஸர்ஃபர்ஸ் பாரடைஸில் இருந்து  ஏறக்குறைய  அஞ்சு கிமீ தூரம். எப்படி அங்கே போகப்போறோம்?   ஒரு மாம்பழத்தை வச்சுத்தான்:-)

நானும் இங்கே இந்த  அஞ்சுநாளாக் கவனிச்சுக்கிட்டே இருக்கேன்....   ட்ராம் வண்டிகள் ரோடில் குறுக்கே நெடுக்கே போகுதே தவிர  பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பஸ்களைக் காணவே காணோம். லைட் ரயில்னு  இதைச் சொல்றாங்க. நகருக்குள்ளே  அங்கிட்டும் இங்கிட்டும் போய்வர  சொந்தக் கார்,  வாடகைக்கார்களைத் தவிர்த்தால்  ட்ராம் மட்டும்தான் இருக்கு.

நகரத்துக்கு இதுலே ஒரு நல்ல பயன் என்னன்னா....   பஸ்கள் ஓடி  காற்றை மாசுபடுத்துவதைப்போல்  இது செய்வதில்லை.  மின்சாரத்தால் இயக்கம். க்ளீன் ஏர்! சாலைகளிலேயே ட்ராம் பாதைகளைப் பதிச்சுட்டதால்  பஸ் ஸ்டாப் போல   ஒன்னு ரெண்டு கிமீ தூரத்துக்கு ஒன்னா அங்கங்கே ட்ராம் ஸ்டேஷன்கள்.  இதுக்கும் பெருசா இடம் தேவைப்படலை. நிறுத்தங்களில் எதிரும் புதிருமா  ப்ளாட்ஃபாரத்துலேயே  இதுக்குண்டான எல்லா ஏற்பாடும் செஞ்சுருக்காங்க.

ப்ராட்பீச் சௌத் முதல்  கோல்ட்கோஸ்ட் யுனிவர்ஸிடி ஹாஸ்பிடல்  வரை  மொத்தம் 14.2 கிமீ தூரத்துக்கு  இந்த  ட்ராம்/லைட் ரெயில் சர்வீஸ். மொத்தம் 16 ஸ்டேஷன்கள். கடற்கரை நகரம் என்பதால்  மெயின் ரோடுலேயே இதுவும். ஒரு ட்ராம் தொடருக்கு நீளமா ரெண்டே பெட்டிகள். (இடையிடையே  கதவுகள் வச்சு  பார்க்கறதுக்கு  ஆறு பொட்டிபோலத் தெரியுது)309 பயணிகள் ஒரே நேரத்தில் போகலாம். 80  இருக்கைகள்.   பாக்கி எல்லாம் ஸ்டேண்டிங்க். முக்கியமா, சுற்றுலாப்பயணிகளுக்கான  வசதிகளோடும் (ஸர்ஃப்  போர்டு கையிலே பிடிச்சுக்கிட்டுல்லே சனம் சுத்துது!)


எழுநூற்றியைம்பது படுக்கை வசதிகள் கொண்ட யுனிவர்ஸிடி  ஹாஸ்பிடல் நோயாளிகளுக்கான,  வீல்ச்சேருக்கான வசதிகளுடனும் இருக்கு. க்ரிஃபித் யூனி  மாணவர் நடமாட்டமும் (வருசத்துக்கு  இருபத்தியஞ்சாயிரம் மாணவர்கள்)வரப்போகும் காமன்வெல்த் விளையாட்டுகளை முன்னிட்டு  வருகைதரும் கூடுதல் சுற்றுலாப் பயணிகளையும் மனசில் வச்சே  எல்லாம் செஞ்சுருக்காங்க.

பதினைஞ்சு வருசமாத் திட்டம் போட்டு, போனவருசம் தான்(2014 ஜூன்)ரெயிலே ஓட ஆரம்பிச்சது.  இந்தப் பதினைஞ்சு வருசத்தில்  தேர்தல்கள் வந்து, வெவ்வேற  கட்சிகள்  ஆட்சியைப் புடிச்சுருந்தாலும்,  ஆரம்பிச்சு வச்ச வேலைகளைக் கிடப்பில் போடாமச் செஞ்சு முடிக்கும் சூத்திரத்தை நம்மூர் அரசியல்வியாதிகள்  பார்த்துப்படிப்பது நல்லது.  சட்டசபையில் திட்டத்திற்கு ஒருமுறை அனுமதி வாங்கிட்டால், அதன்பின் யார் ஆட்சிக்கு வந்தாலுமே  நடத்தி முடிச்சுடணும். பொதுமக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது தவறுன்னு  உணர்ந்தாலே போதும்.

 புதுசா பளபளக்கும் ட்ராம் வண்டிகள்  14 .  வார நாட்களில் காலை   அஞ்சு  மணிக்கு ஆரம்பிக்கும் சேவை நள்ளிரவு பனிரெண்டுவரைமட்டும். வார இறுதிகளில்  24 மணி நேர சேவை.  இன்னும் சொல்லப்போனால் வார இறுதிகளில்  பயணிகள் கூட்டமோ கூட்டம்தான். பார்க்கிங் சார்ஜ் கொள்ளை என்பதால்  தினப்படி வேலைக்கு வரும் சனம் இதுலேதான் வந்து போகுதாம்.


ஸ்டேஷன்களில் எல்லாம் தானியங்கிகள் மூலம் டிக்கெட் வாங்கிக்கலாம் என்றாலும், அப்படி வாங்கும் டிக்கெட்டுகளுக்கு அதிகக் கட்டணம் என்பதால் கோ கார்ட் வாங்கினால்  மலிவு என்று நண்பர் சொன்னார். இதை  விமானச் சேவையைத் தவிர்த்து மற்ற எல்லாப் பொதுச் சேவைகளிலும் (ரோடு, ரயில், படகுன்னு) பயன்படுத்திக்கலாமாம். (அதுசரி. பத்து டாலருக்கு எவன் ப்ளேன் டிக்கெட் தர்றான்?)
கார்டு விற்கும் கடைகள் அங்கங்கே  இருக்கு. பத்து டாலர் டெபாஸிட். பத்து டாலர்  பயணத்துக்குன்னு  ஆளுக்கு  இருபது டாலர். ஒவ்வொருமுறை ட்ராமில்  ஏறுமுன் ஸ்டேஷனில் இருக்கும் மெஷீனில்  கார்டைத் தொட்டு எடுத்துக்கணும்.  ட்ராம்விட்டு இறங்கிப்போகும்போதும் இன்னொரு முறை தொட்டுக்கணும். நம்ம பயணதூரத்தை அனுசரிச்சு அது அந்தப் பத்து டாலரில் இருந்து காசை கழிச்சுக்கும்.  டாப் அப் பண்ணிக்கணுமுன்னா கார்டு கடைகளுக்குப் போகலாம். இல்லைன்னா ஆன்லைனில் செஞ்சுக்கலாம். ஊரைவிட்டுப் போறோமுன்னா கடைசியில் கார்டை ஏர்போர்ட், ரயில் ஸ்டேஷன் போன்ற இடங்களில் அதுக்குண்டான  மெஷீனில் போட்டுட்டு நம்ம டெபாஸிட் உட்பட மீதி இருக்கும் காசையும் வாங்கிக்கலாம்.

கார்டை வாங்கிக்கிட்டு அடுத்துள்ள ஸ்டேஷனுக்குப்போனோம். தொட்டோம். ரெயிலேறினோம்.  நெராங் ஸ்டேஷனில் இறங்கினோம்.  இங்கேதான் பக்கத்துலே அவியல் இருக்குன்னு  நண்பர்கள் வழிகாட்டப் போய்க்கிட்டு இருக்கோம்............. நண்பர் செல்லில் 'நேவிகேட்டர்' சொல்ற பேச்சைக் கேட்டுக்கிட்டே நம்மை வழிநடத்தறார்.  அவுங்க ரெண்டுபேரும் நடைக்கஞ்சாதவர்கள். நாமோ? கிட்டத்தட்ட மூணு கிமீ நடந்துட்டோம். அப்பதான் தெரியுது,  நாம்  ஒரு ஸ்டேஷன் முன்னாலேயே இறங்கி இருக்கணும் என்பது !

ஒருவழியா அவியல் போய்ச் சேர்ந்தோம். சின்ன இடம்தான். ஒரு நாலைஞ்சு  மேசைகளுடன்  இருக்கை வசதிகள்.  சமீபத்துலே தொடங்குன கடைதான். ரெஸ்ட்டாரண்டு. வேலைசெய்யும் மக்கள்ஸ், திருவனந்தபுரத்தில் இருந்து  டைரக்ட் இம்போர்ட்.  மெனு கார்ட் கையில் வந்தது.  சரியாப் பார்க்கமுடியாத அளவுக்கு  முக்காலிருட்டு வெளிச்சம்.

கேரள சாப்பாட்டுத் தாலி இருக்கும் என்று எதிர்பார்த்தேன். மெயின்ஸ்....  தோரன்,  அவியல்,  இப்படித் தனித்தனியா... ஐட்டம்ஸ்.  எங்கூர்போல மெயின்ஸ் வாங்கினால் சோறு  இலவசம்  இல்லை. அதுக்குத் தனிக் காசு.  என்னவோ போங்க.....  ஜஸ்ட்  அ டேஸ்ட் ஆஃப் கேரளா!


ஆப்பம், தோசை, வடை,  பனீர்  டிக்கா, தோரன்,  எலுமிச்சம்பழ சாதம்,  வெறும் சோறு, பனீர் மஞ்சூரியன்னு  தேவைகளைச் சொல்லியாச்.  முதல் மூணு ஐட்டம்ஸ் ஓரளவு பரவாயில்லை.  தோரன்.....  வெறும்  முட்டைக்கோசை  மஞ்சள் போட்டு வேகவச்சு வந்தது! (டூமெரிக் ஸ்பைஸ் ஆடட்!) எலுமிச்சம்பழ சாதமும்  இதே வகை. வெறுஞ்சோற்றில் மஞ்சப்பொடிப் போட்டு, ரெண்டு சொட்டு எலுமிச்சம் ஜூஸைத் தெளிச்சாச்.
ஊணு நன்னாயிருந்நோ?

இல்லல்லோ...... தோரன்னு வச்சால்  அதிலே  கடுகு வறுத்திட்டு, மொளகு சேர்த்து, கருவேப்பிலை இட்டு,  முக்கால் வெவிச்ச பருப்பும்,  தேங்காப்பூவும்  சேர்த்து இளக்கண்டே? பின்னே  ஆ.... நாரங்காச்சோறு....  ஒன்னினும் கொள்ளில்லா....  வறுத்திடண்டே?  அண்டிப்பருப்போ, கப்பலண்டியோ இட்டோ?  வைப்பொக்க எவிடயா படிச்சது?  வல்லப்போளும் செய்து நோக்கியோ? அட்லீஸ்ட் சரிக்குள்ள சாதனம் கழிச்சுட்டுண்டோ?  இத்தரை மோசமாயிட்டு உண்டாக்கான்  யாரு படிப்பிச்சது?

மக்களு ஞெட்டிப்போயி.....  சரிக்குள்ள வகையில்  வைக்கணும். நெட்டில் தாராளம் ரெஸிபீஸ் உண்டு. ஒன்னு வாயிச்சு நோக்கு.

இன்னும் கொஞ்சம் லெக்சரடிச்சுட்டு, ரிவ்யூ எழுதும்போழ், கொள்ளில்லா, மஹா  மோசம்னு தன்னேன்னு எழுதாம் போகுந்நுன்னு  கொஞ்சம் 'மிரட்டி'ட்டு வந்தேன்.

இந்த அழகில் 'டிஸ்ஸர்ட்டினு  பாயஸம்  எடுக்கட்டே'ன்னு  கேட்டதும் ,  தைரியம் அதிகம்தான்னு தோணுச்சு!   வெளிநாட்டினரை நல்லா ஏமாத்தறாங்கன்னு  ....  ப்ச்.

அஞ்சே நிமிசநடையில் சௌத்போர்ட் ஸ்டேஷன்  வந்துருந்தோம். தோழி லக்ஷ்மி, நேத்து அருமையா சமைச்சு வச்ச அவியல் & தோரனுக்கு நேரெதிரா இப்படி இங்கே  கிடைச்சதை என்னன்னு சொல்ல?  முந்தி ஒருமுறை  இங்கே வந்து சாப்பிட்டாங்களாம்.  நல்லா இருந்துச்சுன்னுதான்  இன்றைக்கும் இங்கே வந்தோம் என்று சொன்னாங்க. போகட்டும்.  அடுக்களை இன்சார்ஜ் வேலையை விட்டுப் போயிருக்கலாம்!

ட்ராம்ரெயில் வர  அஞ்சாறு மினிட் இருந்தது. கோ கார்டை தொட்டு எடுத்தோம். தொட்டதும்  தொட்டாச்சுன்னு சொல்லும் எழுத்து வரலைன்னு  கோபால், அவர் கார்டை  ரெண்டுமுறை தொட்டார். தொடாமப்போனால் 227 டாலர் அபராதம்னு பார்த்ததும்  வித்தவுட்டை எல்லாம் எப்படிப் புடிப்பாங்கன்னு நண்பரிடம் கேட்டுக்கிட்டு இருந்தேன்.ட்ராம் வந்ததும் ஏறி உக்கார்ந்து  அடுத்த ஸ்டேஷன் வரும்போது,  நம்ம பெட்டியில் ரெண்டு  டிக்கெட் பரிசோதகர்கள் ஏறினாங்க. நம்ம கார்டை அவுங்க கையில் இருந்த மெஷீனில் தொடச்சொல்லியதைச் செஞ்சோம்.  மூணு கார்ட் ஓக்கே. கோபால் கார்ட்  அவர் டிக்கெட் எடுக்கலைன்னு  சொல்லுச்சு.  வித்தவுட்ப்பா!!!! ரெண்டு முறை தொட்ருக்கப்டாது!  போனகாசு போனதுதான். இனிமே இப்படிச் செய்யப்டாது. இன்னொருக்கா தொட்டுக்கோன்னு காசை கழிச்சது மெஷீன். எப்படிப் பிடிப்பாங்கன்னு  கேட்டதுக்கு நம்மாண்டையே டெமோ காமிச்சதைப் பாருங்களேன்:-)))))

Cavill Avenue ஸ்டேஷனில் இறங்கினோம். இங்கிருந்துதான் நாம்  முதலில் ட்ராம் எடுத்தோம். சர்ஃபர்ஸ் பாரடைஸ் மெயின் ஷாப்பிங் ஏரியா இங்கேதான்.  சாலையைக் கடந்துபோய்  டிஸ்ஸர்ட்டுக்காக   உள்ளே நுழைஞ்ச இடம் Chocolateria San Churro .  ஸ்பானிஷ் வகைகளாம்.   அவரவருக்குத் தேவையானவைகளை சொல்லிட்டு  இருக்கைகளில் இடம் பிடிச்சோம்.  அருமையான ருசி!   ஒருவேளை 'அவியலில்' கெட்டுப்போன நாக்குக்கு  இது ஒத்தடம் கொடுத்துருச்சோ!


மணலில் இறங்காமல்  தரை வழியாகவே  அபார்ட்மென்ட் வந்ததும்தான்   கால் நிம்மதின்னது. லக்ஷ்மி  தம்பதிகள்  வண்டியை எடுத்துக்கிட்டுக் கிளம்பினாங்க.  ரெண்டு நாளா நமக்குக் கம்பெனி கொடுத்தும்,  பலவகைகளில் உபசரித்தும், முக்கியமாக நமக்காக நேரம் செலவழிச்சும் காட்டிய அன்பை  மறக்க முடியாமல்  செஞ்சுட்டாங்க.


Many thanks to our dear  Paddy & Lakshmi for everything. 

கோ கார்ட், இருக்கட்டும். இன்னும் பத்து வருசத்துக்குப் பயன்படுத்தலாம். அதுக்குள்ளே  திரும்பவும் போகாமலா இருக்கப்போறோம்?

தொடரும்..........:-)


17 comments:

said...

எல்லாமே நம்ம ஐட்டமா இருக்கு. கிளம்பி வந்துடவா?

said...

"ஆரம்பிச்சு வச்ச வேலைகளைக் கிடப்பில் போடாமச் செஞ்சு முடிக்கும் சூத்திரத்தை நம்மூர் அரசியல்வியாதிகள் பார்த்துப்படிப்பது நல்லது. சட்டசபையில் திட்டத்திற்கு ஒருமுறை அனுமதி வாங்கிட்டால், அதன்பின் யார் ஆட்சிக்கு வந்தாலுமே நடத்தி முடிச்சுடணும். பொதுமக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது தவறுன்னு உணர்ந்தாலே போதும்" - ஏங்க..டீச்சர்..இந்த ஒவ்வொரு ப்ராஜக்ட்டுக்கும், அரசியல்வியாதிகளின் கட் (லஞ்சம்) கொடுக்கப்பட்டுவிடும். அப்புறம் புதுசா வர்ற அரசாங்கம் காசுக்கு (அவங்க பாக்கெட்டுக்கு) என்ன பண்ணும்? அதனால் பழைய பிராஜக்டை கிடப்பில் போடு..புது பிராஜக்ட் ஆரம்பி.. மற்ற ஊர்களில் ('நியூசி, அவுஸ்திரேலியா) அந்த டெக்னிக் தெரியலைங்கறதுக்காக, எங்கள் அரசியல் வியாதிகளைக் குற்றம் சொல்கிறீங்களே....

said...

அப்படியே ஸ்விஸ் ட்ராம் மாதிரி இருக்கு. ஆமனால் அங்கே வித்தவுட் ல போறவங்க நிறையவே இருப்பாங்க.
பிடிபட்டால் 100 ஃப்ராங்க்ஸ் தண்டனை. நீங்க இவ்வளவு சாடியும் அவங்க மாறினாங்களான்னு
அடுத்ததடவை செக் செய்துடுங்க துளசி. ஓட்டல் கடையைச் சொல்றேன்.


படங்கள் எல்லாம் பளிசுன்னு அழகா இருக்கு. நம்ம ஊரு வியாதிகள் என்றும் மாறாது.

said...

அதென்ன மேஜிக் வார்ம். அது என்ன செய்யும்?

அடடா! வெள்ளைக்காரன் இதை வாங்கித் தின்னுட்டு.. இதுதான் நம்மூர் சமையல்னு நெனச்சுக்குவான். தமிழ்நாட்டுல மட்டுந்தான் எலுமிச்சம்பழச் சோத்துல எலுமிச்சை இருக்கு. கர்நாடகாவுலயே மஞ்சப்பொடிச் சோறுதான். நிலக்கடலை மட்டும் நல்லா வறுத்துப் போட்டுருவாங்க. தயிர் இல்லாம தொண்டைல எறங்காது.

said...

அனைத்தும் பிரமிக்க வைக்கிறது...

said...

ரொம்ப அழகான இடமும் ,படங்களும் .......அழகு

said...

ட்ராம் வண்டி சூப்பர் அம்மா. அவ்ளோ அழகு!!!!

said...

மெரட்டிட்டு வந்த வரைக்கும் சரியே . நம்மூரு சாப்பாடு பத்தி, மோசம்னு வெளியாள் சொல்லிடக்கூடாது பாருங்க .

said...

வாங்க ஜோதிஜி.

என்ன கேள்வி? கிளம்பி வாங்க. குளிர் காலம் முடிஞ்சுருக்கு இப்போ!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஐயோ.... இவ்ளோ இருக்கா!!! இந்த டெக்னாலஜி தெரிஞ்சுறக்கூடாதேன்னு பெருமாளை வேண்டிக்கிட்டு இருக்கேன்!

said...

வாங்க வல்லி.

அடுத்தமுறை(யும்) ரிஸ்க் எடுக்க முடியாது. நாட் ஒர்த்:-(

இன்னும் வித்தவுட் இங்கே ஆரம்பிக்கலை. கொஞ்சம் நேர்மை பாக்கி இருக்குதான்:-)

said...

வாங்க ஜிரா.

இது ஒரு விளையாட்டுதான். மேஜிக் வொர்ம்னு யூட்யூப்லே பாருங்க. புழு அசைஞ்சு நடக்க தனி டெக்னிக் உண்டு:-))))

நமக்கும் இண்டியன் கடைன்னதும் வர்ற ஆசையை முதலிலே ஒழிக்கணும். பழகுன நாக்கு அலையுதே:-(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நல்ல சிஸ்ட்டம். எல்லோரும் பின்பற்றி நடந்தால் ஊருக்கே அழகு. ஆனால்.... நம் நாட்டில் கூட்டம் ஒரு பிரச்சனையாப் போயிருதே:-(

said...

வாங்க அநுராதா ப்ரேம்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க அபிநயா.

ஊரே மின்னலடிக்குதுப்பா. படு சுத்தம்! அதுவே அழகு இல்லையோ!

said...

வாங்க சசி கலா.

என்ன மிரட்டல் இதெல்லாம்? உடனே சரி செஞ்சுருவாங்களோ? நம்மாட்களைப் பற்றி இன்னும் உங்களுக்குத் தெரியலையேப்பா:-))))

said...

எல்லாமே அருமைதான் போங்க....இப்படிச் சொல்லி எங்களுக்குத் தகவல் தந்தாலும் சே பார்க்கணும் போல தோணுது..

அதுவும் கடைசில ஒரு ஃபோட்டோக்கள் போட்டுருக்கீங்க பாருங்க டெசர்ட் வகைகள்....யும்மி...ஸ்பாஆஆஅ நாக்கு துறு துறுக்குது.....

சகோதரி நம்ம ஊர்க்காரங்கள் அங்க வந்து ரெஸ்டாரன்ட் போட்ட அவ்வளவு நல்லா சமைக்கறது இல்லையாமே....மக்கள் எல்லாரும் நாக்கு செத்து இருப்பாங்க அதனால என்ன வேணா செஞ்சு போடலாம் அப்படினு....

இங்க கூட பாருங்க நார்த் இண்டியன் அயிட்டம் அப்படினு சென்னைல யாருக்கும் அவ்வளவா தெரியாது என்ன பேரு சொல்லிப் போட்டாலும் சாப்பிடுவாங்கனு ....சும்மானாலும் இதுதான் பன்னீர் பட்டர் மசாலா, மலாய் கோஃப்தா அப்படினு ஊரை ஏமாத்திக்கிட்டுருக்காங்க...என்னத்த சொல்ல...

படங்கள் அருமை...

கீதா