Monday, September 07, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். ஐந்தாம் நாள் )

ஜென்மத்துலே இவ்ளோ நடை நடந்ததே இல்லைன்னு சொல்லுபடியான நாளாகப் போயிருச்சு இன்னிக்கு!  காலையில் சீக்கிரமா விழிப்பு வந்ததும்....  இது வழக்கமா வீக் எண்டுகளில் நடப்பதுதானேன்னு.......  பாருங்க. வார நாட்களில் எல்லாம்  காலையில் கண்ணைத் திறக்கவே முடியாம  இருப்பேன். இவரும்  அசந்து தூங்கறாளேன்னு விட்டுருவார். அதிகாலை எட்டுமணிக்கு எழுந்து லோலோன்னு கத்திக்கிட்டே வேலையை ஆரம்பிக்கும் எனக்கு, இந்த வீக் எண்டுகள் மட்டும் வேற மாதிரி அமைஞ்சுருது. அவசரப்படாமல்  எழுந்துக்கணுமுன்னு  நினைச்சாலும்  ஆறு மணிக்கே முழிப்பு தட்டிரும்.  இன்றைக்கும் இப்படியே ஆச்சு.

சூரியனுக்கும்  இதே வழக்கமோ என்னவோ.... தண்ணிக்குள் இருந்துவெளியே வர முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தான். கண்முன்னே பீச் வெறிச்சோடிக் கிடக்க, மணல் இருக்கும் பகுதியில் யாரோ கேம்ப் ஃபயர் கொளுத்திவிட்டதுபோல் ஆடும் தீ  எரியும் வெளிச்சம். கெமெராவையே  பைனாகுலரா பயன்படுத்திப் பார்த்தால்.... வண்டி  ஒன்னு எரியுது!  வெறும் 20 மடங்கு Zoom ,இப்படித்தான் தெரியும். பேசாம பைனாகுலர்ஸ் கொண்டு வந்துருக்கலாம்.  கவனிச்சுப் பார்த்ததில்  அங்கங்கே  இதே போல.  அதிகாலை கடற்கரையைச் சுத்தம் செய்யும் டீம்  வொர்க் நடக்குது போல!

பச்சைவிளக்கு எரியும் படகு ஒன்னு கடலில்.  ரோந்து போட் போல இருக்கு. சாலையும், அடுத்துள்ள கட்டடங்களும் நல்ல தூக்கத்தில்! வரப்போறேன், வந்துக்கிட்டு இருக்கேன்னு கட்டியம் சொல்லிக்கிட்டு இருந்தவன்  ஆறரைக்குத் தலையைக் காமிச்சான். பெரிய வெள்ளைக்கார துரை.  கரெக்ட் டைமுக்குத்தான் வருவாராம்லெ.

காஃபி முடிச்சுக் கீழே போனதும்,  தினசரி  வைக்குமிடம்  போனால் காலி. இன்றைக்கு ஞாயிறு இல்லையோ!  எங்க பக்கங்களில்  தினசரிகளுக்கும்  ஞாயிறு லீவுதான்.  சனிக்கிழமை பேப்பர் வழக்கத்தைவிடக்  கூடுதல் பக்கங்களோடு வந்துரும்.

நடக்க பீச்சுக்குப் போறோம். எனக்கு ஒரு பழக்கமுண்டு....  அடுக்குமாடியில் நாம் இருப்பது எந்த தளம் என்று தெரிஞ்சுக்காட்டா தலை வெடிச்சுரும். ஹொட்டேல்களில் தங்கும்போது  ஜன்னல் கட்டைசுவத்தில் எதாவது அடையாளம் வச்சுட்டுப்போய்  வெளியே சாலையில் இருந்து  தெரியுதான்னு பார்த்துக்குவேன்.  அல்பசந்தோஷி!

இங்கேயும் ஒரு துப்பட்டாவை பால்கனி கம்பியில் கட்டி வச்சேன்.  அது தெரியுதான்னு  கடற்கரையில்  இருந்து பார்த்தால்........  சோம்பல்கலர் பச்சை சோபிக்காமல் போயிருச்சு. ஒருவழியா  மேமெராக் கண்ணை அதில் நிறுத்திப்பார்த்தால்  சோகமா இருந்தது. நாளைக்கு வேற ஒன்னு பளிச் நிறத்தில் கட்டிவிடணும்.

அதுக்குள்ளே படபடன்னு மழை.  ஒதுங்க இடமில்லை. நல்லவேளையா அபார்ட்மெண்ட் எதிரில்தான் இருந்தோம் என்பதால் திரும்ப வீட்டுக்கே போயிட்டோம். ஒரு இருபது நிமிஷம் போல  அடிச்சுப்பேய்ஞ்ச மழை சட்னு நின்னதும் வெயில் வந்துச்சு.  ஜாக்கெட்  போட்டுக்கிட்டு, குடையையும் எடுத்துக்கிட்டுத் திரும்பவும் பீச் வாக். போகுமுன்  மறக்காமல்  பால்கனியில் அதே துப்பட்டாவில்  ஒரு சிகப்புப் பையையும் கட்டித் தொங்கவிட்டேன்.

 எங்க நாட்டில் ப்ளாஸ்டிக் ஷாப்பிங் பைகளின் எண்ணிக்கைகளைக் குறைக்க  துணிப்பைகள்  அறிமுகப்படுத்தி இருக்காங்க.  பையைத் தூக்கிக்கிட்டுக் கடைக்குப்போகணும். ஒவ்வொரு சூப்பர் மார்கெட்டும் அவுங்கவுங்க லோகோ நிறங்களில் பை கொடுத்துருக்கு. இது இலவசம் இல்லையாக்கும். ரெண்டு டாலர் கொடுத்து வாங்கிக்கணும். இலவசமுன்னா,  யாரு பையைத் தூக்கிக்கிட்டுக் கடைக்கு வருவாங்க?

அப்பதான் நம்ம சார்லியைப் பார்த்தேன்.  தன் அம்மாவோடும், நண்பன் ஷேனோடும் வந்துருந்தான். அம்மாவின் ஒரிஜினல் பிள்ளை ஷேன் தான். அப்புறம்  மூணு வருசத்துக்கு  முன்னாலே ஒரு சமயம்  டாக் பவுண்டில்  சார்லியைப் பார்த்தவுடன், நம்ம பிள்ளைமாதிரியே இருக்கானேன்னு தத்து எடுத்துக்கிட்டாங்க சார்லியை.  ஷேனை விட சார்லிக்கு நட்புணர்வு அதிகமாம்! சொல்லிக்கிட்டு இருக்கும்போதே காலை நக்கிட்டுக் கைகளில் தாவி ஏறிக்கிட்டான்:-) கீழே இறக்கி விட்டதும், ஏதோ நம்மாள்போல காலடியில்  உக்கார்ந்து ஒரு போஸ். க்ளிக்:-)

பவுண்டில் வச்சுருக்கும் ஜீவன்களுக்கு  ரொம்பவே லிமிட்டட் ஆயுசுதான். . (வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்...இந்த மண்ணில்  இடமேது!) அதுக்காக அப்படியே நாளைக் கடத்திடமாட்டாங்க.  ஹெவியா விளம்பரம் எல்லாம் கொடுத்து, மக்களை வரவழைக்க  பாடுபடுவதுதான் நடக்குது.  அப்படி யாராவது பெரியமனசு பண்ணி தத்தெடுத்தாங்கன்னா அதிர்ஷ்டம்!  சார்லி அம்மாவின் நல்ல மனசைப் பாராட்டி நடையைத் தொடந்தோம்.

தூண்டில் (லைன்) போட்டு மீன்பிடிச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். க்ரீஸ் நாட்டுக்காரர். இங்கே  அஸ்ட்ராலியாவுக்கு இடம் பெயர்ந்து ஆச்சு வருசம் நாப்பத்தியஞ்சு. பீச்லே நின்னுக்கிட்டு மீன்பிடிச்சால் கிடைக்குமான்னா,  மணலில் நட்டு வச்ச குச்சியில் தொங்கும் பக்கெட்டைக் காமிக்கிறார். ஒரே வகையில் பெரிய மீன்கள். இதுவரை நாலு கிடைச்சுருக்கு. லஞ்சுக்குப் போதும். டின்னருக்குக் கிடைக்குதான்னு பார்க்கணுமாம்.  இந்த மீன்களுக்குப் புத்தி கொஞ்சம் கம்மி போல!  அலைவேகத்தில் கரைக்கருகில் வரும் சமயம் வாயை மூடிக்கிட்டு இருக்கத் தெரியலையே :-(


வானம் மீண்டும் இருளத் தொடங்குனதும், இன்னிக்கு நடை இம்புட்டுத்தான்னு  வீட்டுக்கு வந்துட்டோம். கடற்கரையில்  லைஃப் கார்டுகளுக்கான பயிற்சி நடக்குது. ஞாயிறு ஸ்பெஷல்!  குளிச்சு, ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சு  ஒன்பதே முக்காலுக்குக் கிளம்பியாச்சு. இன்றைக்கு சந்தைக்குப் போறோம்.


இது கர்ராரா  மார்கெட்ஸ். ஆஸியிலேயே  பெருசாம்.(இப்படித்தான் ஒவ்வொரு சந்தையும் சொல்லிக்கும்!)  சனி, ஞாயிறுகளில் மட்டும் காலை 7 முதல்மாலை 4 வரை வியாபாரம். மொத்தம் 10 ஏக்கர் நிலத்தை  வளைச்சுப்போட்டு நடக்குது. சுற்றுலாப்பயணிகள் தவறாமல் வந்து  போகுமிடமா ஆகி பலவருசங்கள் ஆச்சு.  சந்தைக்கு  வயசு இப்போ முப்பது! நானூறு கடைகளுக்கு மேல்! உப்பு முதல் தங்கம்வரை அனைத்தும் கிடைக்கும்:-)

நம்மூர்களிலே சந்தை மைதானமுன்னு ஒன்னு  அந்தக்காலங்களில் இருந்துச்சு. சந்தையன்னிக்கு வண்டிகளில் வந்திறங்கிக் கடை போட்டதும் கலகலன்னு இருக்கும் இடம், மறுநாள் காலையில் பார்த்தால் முதல்நாள் சந்தை கூடுன அடையாளம்கூட இல்லாமல் விரிச்சோன்னு  கிடக்கும். பசங்க விளையாடும் ப்ளே க்ரவுண்டா ஒரு ஆறு நாட்களுக்கும் சந்தைக்கு  ஒரு நாளுமுன்னு  பயன்பாடு. வாரச்சந்தை,  நாளுக்கு ஒரு ஊர்ன்னு  சுத்திச்சுத்திவரும் கடைகள்.

இங்கே சந்தை மைதானம் மட்டுமில்லை, கடைகளும் பெர்மனெண்ட். மின்சார இணைப்போடு பக்காவா இருக்கும் கடைகள். ஆனால் திறந்து இருப்பது மட்டும் சனி ஞாயிறுகளில் மட்டும். நல்ல ஐடியா.  மற்ற நாட்களில் வயித்துப் பிழைப்புக்கு வேலை. வார இறுதிகளில் மனம் விரும்பும் வேலைன்னு  நல்லாத்தேன் இருக்கு!


சமீபத்திய  வரவுன்னு driftwood glass vase எக்கசக்கமா வச்சுருக்காங்க. ஒன்னுபோல ஒன்னு இல்லை. ஒவ்வொன்னும் ஒரு விதம். ஆறு, கடல் போன்ற இடங்களில்  அடிச்சுக்கிட்டு வந்து சேரும் மரக்கட்டைகளின் முண்டு முடிச்சு டிஸைனுக்கேத்தபடி  அதுலே 'உக்கார்ந்துக்கும்' கண்ணாடிச் சாடி.  வேற நாட்டில் (பாலி?) இருந்து இறக்குமதி. ட்ரீட்டட் வுட் என்பதால் நமக்கு  இங்கே கொண்டுவரப் பிரச்சனை இருக்காதுதான்... என்றாலும்.....

என்னங்க ...நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். காதுலே வுழுதா?   அங்கென்ன பார்வை?



அலங்காரப்பொருட்கள் கலையம்சத்தோடு கொட்டிக்கிடக்கு! அரைவிலையாம்! அதனால் என்ன பர்மெனண்ட் கடையில்  விலையை 100% ஏத்திட்டு 50% ஆஃப் கொடுத்தால்  ஆச்சு. (அப்படின்னாலும் சிலபல பொருட்கள் அழகுதான்!) அதிலும் நம்ம யானைஸ் விதவிதமா!  துளசிதளத்தின்  (ஹெட்டர்) யானைகள் கூட இருக்கு. அஞ்சுக்குப்பதிலா ஏழு என்பதால்  சரி இல்லையாமே :-(

பாசிமணிகள் கடை ஒன்னு இழுத்துச்சு. அம்மாடி..... என்ன இப்படி!  சின்ன க்றிஸ்டல் மணிகள், உடைகளில் வச்சுத் தைக்கும் விதம் அலங்கார டிஸைன்கள், க்ராஃப்ட் வேலைகளுக்கானவைன்னு கொட்டிக்கிடக்கு.  நம்ம க்ருஷ்ணாவுக்கு  எதாவது தேறுமான்னு பார்த்தேன்.



ஏது க்ருஷ்ணா?

ஓ...  உங்களுக்கு இதுவரை சொல்லாமல்  விட்ட ரகசியத்தை உளறிட்டேனா? அடடா..  எப்படியும் உண்மை  ஒருநாள்  வெளிவரத்தான் செய்யும் என்பது எவ்ளோ உண்மை பாருங்க!  இவன் நம்ம ஜன்னுவின் தம்பி.    க்ருஷ்ணாஷ்டமிக்கு  உங்களுக்கு அவனை அறிமுகப்படுத்தலாமுன்னு இருந்தேன். இந்த ஃப்ளூ வந்து காரியத்தைக் கெடுத்துருச்சு:-( அதுக்காக அப்படியே விட முடியுமா? நேத்து  FB யில் சின்னதாச் சொல்லிட்டேன்:-)


மார்கெட் போறோமுன்னு நேத்து தோழியாண்டை சொன்னதுக்கு, ' கிச்சன் டிஸ்கவுண்ட்ஸ்' னு ஒரு கடையைப் போய்ப் பார்க்கச் சொன்னாங்க.  நல்லதாப்போச்சு.  நம்ம கேட்ஜெட் வீக்னெஸ் ஒன்னு  இருக்கே!  கடை கண்ணில் ஆப்ட்டதும் போனோம். தேவைன்னு  ஒன்னும் இருக்கலை. எதைப்பார்த்தாலும், 'அட!  இது நம்மாண்டை இருக்கே'ன்னு  ஞாபகம் வந்தது. கடை ஓனர், நம்ம நண்பரின்  உறவினர். நீங்க வருவீங்கன்னு  லக்ஷ்மி சொன்னாங்க என்றதோடு அறிமுகம் ஆச்சு. கொஞ்சநேரம் கப்பாமாறிட்டு (பாலக்காட்டில் இருந்து  பாம்பேக்கு போனவர்களின் மூணாம் தலைமுறையாக்கும்)நியூஸிக்கு வந்தால் வீட்டுக்கு வாங்கன்னு சொல்லி  ஃபோன் நம்பர் கொடுத்துட்டுப் பூக்கடைக்குள் நுழைஞ்சோம்!

வசந்தத்தைத் தேடும்  வாசமில்லா மலர்கள் என்றால் நம்புவதற்குக் கஷ்டம்தான்!  நியூஸியின் கார்டன் சிட்டி மக்களான நமக்கு எதற்கு செயற்கைன்னு  ஒரு விநாடி தோணுச்சுன்னாலும், விடமுடியலை.  ஆசைக்கு ஒன்னும் தேவைக்கு ஒன்னுமா ரெண்டு:-)

டெவில்ஸ் ஐவின்னு  நியூஸியில்  பெயர் இருக்கும் நம்மூர் மணி ப்ளான்டை  இந்த நாலுவருசமாத் தேடோ தேடுன்னு தேடிக்கிட்டே இருக்கேன். இதுவரைக்கும் ஆப்டலை. நம்ம ரமண் Bபாபிதான் ஆக்லாந்துலே இருந்து நியூஸி மணிப்ளான்ட்ன்னு ஒன்னு  கொண்டுவந்து கொடுத்தாங்க.  இது பார்க்க  வேறமாதிரி இருக்கு.  சரி  நாடுகள் தோறும் காசுகள் வேற!


மேலேபடம்: நியூஸி மணி பளான்ட்
கீழே படம்: நம்மூர் மணிப்ளான்ட்




காய்கறி, பழவகைகளில்  கோபால் தர்பூசனி வாங்கினார். நான் ஒரு நாலே நாலு வால்நட். எங்கூரில் கிடைப்பதைவிட மும்மடங்கு பெருசு!  மார்கெட் ஏரியாவுக்கும் கார்பார்க்கிங் ஏரியாவுக்கும் முன்னாலே  ஒரு  தோட்ட அலங்காரக் கடை.  ஒரு நாலைஞ்சு வயசு யானைக்குட்டி இங்கே இருந்தான்.  கூட்டி வரமுடியலை:-(

பகல் சாப்பாட்டுக்கு நேரமாச்சேன்னு  மார்கெட்டில் இருந்து நேரா  இன்னொரு  ஷாப்பிங் செண்டருக்குப் போனோம்.  இது சௌத்போர்ட் என்ற இடத்தில் இருக்கும் அஸ்ட்ராலியா ஃபேர். இங்கைக்கும் அங்கைக்கும் இடையே ஒரு பதினொரு கிமீதான். நம்ம சர்ஃபர்ஸ் பேரடைஸில் இருந்து ஒரு 4.6 கிமீ.



பஸிஃபிக் ஃபேர், அஸ்ட்ராலியா ஃபேர்ன்னுக்கிட்டு   பேர் வச்சுக்கிட்டு இருக்கும் இவையெல்லாம் பெரிய மால்களே!  240, 300ன்னு  கடைகள் அதுக்குள்ளே. ஒரு வசதி என்னன்னா, இவைகளில் எப்படியும்  ஒரு ஃபுட் கோர்ட் இருக்கும். அதில் ஒரு இந்தியன் கடையும்  இடம்பிடிச்சு உக்கார்ந்திருக்கும் என்பதுதான்.


இங்கே  சீன உணவுக்கடை ஒரு ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைலில் பெருசா இருந்தது. மாலிலும் ஏகப்பட்ட சீனர்களின் நடமாட்டம். ஷாங்காய் வந்துட்டோமா என்ன? சிங்கப்பூர் நூடுல்ஸ்னு  ஒரு கடையும்,  வழக்கம்போல் மற்ற ஃபாஸ்ட் ஃபுட் செயின்ஸ் சேர்ந்த  கடைகளும்தான். சுவாரசியப்படலை.  ஆனால் மாலில்  நடந்து களைத்த கால்கள் ஓய்வெடுக்கன்னு  ஒரு இடம்  இருக்கு. அருமை! இங்கேயும் 'அவர்கள்' இடம் பிடிச்சுருந்தாங்க:-)




எல்லா மால்களும் ஏறக்குறைய ஒன்னுதான். இப்பெல்லாம் ஷாப்பிங் ட்ரிப் போரடிச்சுக்கிடக்கு. பழைய காலம்போல  அந்தந்த ஊருக்குத்தகுந்தாப்லெ ஒரு ஸ்டைல் வச்சுக்கிட்டு  அங்கே போய் வாங்கும் அனுபவம் போயே போச்.

இங்கிருக்கும் கடைகளும் நாடு முழுவதும் கிளை பரப்பி அடியும் முடியும் ஒன்னுபோலவே  அமைக்கப்படுது. மால்களின் பெயர் மட்டுமே வேற. சரக்கெல்லாம் அதே அதே.  ஒரு சில கடைகள் மட்டும்  ஊரில் இருக்கும் நாலு  மால்களில் எதாவது ஒன்னில் மட்டும் இடம்பிடிச்சு எக்ஸ்க்ளூஸிவாக இருக்கவும் செய்யும். அப்படி ஒரு கடையைத் தேடிக்கிட்டுத்தான் இங்கே வந்தோம்.

வந்தவேலை முடிஞ்சதும்  மின்னல்வேகத்தில்  மற்ற கடைகளில் ஒரு  லுக் விட்டுட்டு, வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து ஒரு சின்னத்தூக்கம். மணி மூணரைகூட ஆகலை. நண்பர் தம்பதிகள் அஞ்சேகாலுக்கு   வர்றதாச் சேதி அனுப்பி இருந்தாங்க. நேத்து அவுங்க வண்டியில்  மறந்துபோய் விட்டுட்டு வந்த  கார்டிகனையும், கோபாலின் ஜாக்கெட்டையும்  கையோட கொண்டு வரச் சொல்லி பதில் சேதி அனுப்பியாச்.

இன்றைக்கு  ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துட்டதால், பதிவின் நீளம் கருதி, இதை ரெண்டாத் துண்டிக்கவேண்டியதாச்சு.  அடுத்த துண்டு  இன்னும் சில மணி நேர இடைவெளியில்:-))))


14 comments:

said...

அழகிய கடற்கரை உட்பட அனைத்தும் ஜோர்..

said...

ஆஸ்திரேலியா போகாமே சுத்தி பார்த்த மாதிரி இருக்கு சார்லி போஸ் சூப்பரா கொடுக்குது அம்மா. அப்புறம் அந்த குட்டி யானை மூணும் அவ்ளோ அழகு படங்களுக்கு நன்றி துளசி அம்மா.

said...

கடற்கரை காட்சிகள் மனதில் பதிந்துவிட்டன. அருமை.

said...

கடற்கரை காட்சிகள் மனதில் பதிந்தன. நன்றி.

said...

Welcome back டீச்சர். இப்போ ஒடம்பு தேறியிருக்கும்னு நம்புறேன். மறுபடியும் பதிவுகள் பறந்தோடி வர்ரதைப் பாக்க மகிழ்ச்சியா இருக்கு.

ஆஸ்திரேலியாவுல பீச்ல மீன் பிடிக்கலாமா? நல்லாருக்கே இந்த ஐடியா. நானும் அந்த கிரீஸ் நாட்டுக்காரர் மாதிரி தினமும் வந்திருப்பேன் :)

பூனைகளுக்குத்தான் உங்களைப் பிடிக்கும்னு நெனைச்சா.. நாய்களுக்கும் உங்களப் பிடிக்குதே.

சந்தைல வெங்காயம் அழகா இருக்கு. ஒரு பத்து கிலோ வாங்கி அனுப்புங்க. இந்தியாவுல வெங்காய விலை கூடிப்போச்சு. ஏழைகள் வெங்காயம் உண்பதால் விலை கூடிருச்சுன்னு இன்னும் யாரும் அறிக்கை விடலை. :))))

said...

இப்போதெல்லாம் உங்கள் வெளிநாடுப் பதிவுகளைப் படிப்பதை விட புகைப்படங்கள் பார்ப்பதில்தான் ஆர்வம் அருமையான படங்கள்.

said...

அற்புதம் !!! நியூஸி மணிப்பிளான்ட் ரொம்ப வித்தியாசமா இருக்கு . எல்லா யானைகளும் அழகு .
கோபால் அவர்கள் உட்கார்ந்துருக்கும் இடம், மேலே பூக்கள் பார்டர், கீழே பச்சை பசேல் செடிகள், அருமை !!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நன்றிகள்.

said...

வாங்க அபிநயா.

பயணக்கட்டுரைகள் பிடிக்கும் என்றால் நம்ம தளத்தில் வெளிநாடுகளும் உள்நாடுகளுமா நிறைய இருக்குப்பா. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

குஜராத், கம்போடியா, தாய்லாந்து இப்படி குறிச்சொற்கள் உண்டு. கூகுளித்தால் கிடைக்கும்:-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

இன்னும் பூரணகுணம் வரலை. பெட் ரெஸ்ட் என்பதால் அப்பப்பக் கொஞ்சம் எழுதி வைப்பதைப் போட்டுக்கிட்டு இருக்கேன். வைரல் ஃபீவராம். இன்னும் ரெண்டு வாரம் ஆகுமாம். பேச்சு இல்லை. லாஸ்ட் வாய்ஸ். அந்த சக்தி எழுத உதவுது:-)

நான் இந்தியாவில் நாய், ஃபிஜியில் நாயும் பூனையும், நியூஸி வந்தபின் பூனையாக அவதாரம் எடுத்துருக்கேன்:-)

அந்த வெங்காயம் பார்க்கவே ரொம்ப ஃப்ரெஷா இருந்துச்சு!

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

ஒரு படம் ஒரு 100 சொற்களுக்கு சமம் இல்லையோ!

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க சசி கலா.

ஊருக்குத் தகுந்த மணி ப்ளான்ட்.

கால்களுக்கு ரெஸ்ட் கொடுக்கும் இடம். நல்லா இருக்குல்லே!

said...

செம இடங்கள்! படங்களும் அருமை சகோதரி!

கீதா: அந்த நாலு கால் செல்லம் சோஊஊஊஊஒ ச்வீட்.....

கலைப்பொருட்கள் எல்லாம் கண்ணைப் பறிக்குதே......