Monday, September 14, 2015

தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். ஆறாம் நாள் )தொடர்ச்சி.

கோவிலில் இருந்து ஒரு 16 கிமீ தூரத்தில் ப்ரவுன்ஸ் ப்ளெய்ன்ஸ் என்னுமிடத்தில்  க்ராண்ட்  ப்ளாஸான்னு  ஒரு பெரிய ஷாப்பிங் மால்  இருக்கு.  மாலுக்கு நாலுபுறமும் கார்பார்க். அக்வா, அமித்திஸ்ட், சஃபையர், ரூபின்னு  (நினைக்கிறேன்)என்று  நவரத்னக்கற்களின் பெயர்களிலும், வண்ணங்களிலும்  இருக்கும். எந்தக் கலர் பார்க்கிங்கில் வண்டி விட்டோமுன்னு நினைவு வச்சுக்கலைன்னா நமக்குத்தான் தலை சுற்றல்.  அக்வாதான் எப்போதும்.  நமக்குப் பரிச்சயமான இடம்தான். அங்கே போய் பகல் சாப்பாடு ஆச்சு.


மாலுக்குப் பக்கத்தில் இருக்கும் மோட்டலில் ஒருமுறை தங்கி இருக்கோம். பக்கத்து கடையில் யானை போர்டு வச்சுருக்கும். அதுதான் நமக்கு அடையாளம்.  இப்பப் பார்த்தால் நமக்காக ஒரு பெரிய மஞ்சள் யானையே  நிக்குது!

மாலில் வாங்கிக்க ஒன்னும் இல்லை.  எல்லா மால்களையும் போலத்தான். இன்னும் சிம்பாவின் மவுஸ் குறையலையே!

கொஞ்சநேரம் விண்டோ ஷாப்பிங் செஞ்சுட்டு  நம்ம கோல்ட்கோஸ்ட்  ப்ராட் பீச்சுக்குப் போறோம்.  இந்த அபாரிஜினல் பெயர்கள் எல்லாம் எனக்குக் கொஞ்சம் பிடிக்கும். ஜிம்பூம்பா, பெரின்பா, பிம்பாமா இப்படி கேக்கவே நல்லா இருக்கும்!  ஹைவே முழுக்க இப்படிப் பெயர்களைப் பார்த்துக்கிட்டே போகலாம்.  ஹெலன்ஸ்வில் வாட்டர் வொர்ல்ட்  கண்ணுலே பட்டது.  கூட்டமே இல்லை போல!

ஸர்ஃபர்ஸ் பாரடைஸ்  சாலைக்குள் திரும்புனவுடன் ஜூபிடர்.  வழக்கமாப் போகும் ப்ரிஸ்பேன் கஸீனோவுக்குப் பதிலா இங்கே போகலாமுன்னு தோணுச்சு. அதென்ன  வழக்கமா(!) ன்னு கேட்காதீங்க.  பயணங்களில்  சிலநாட்கள் தங்குமிடத்தில் இது இருந்தால்  போய்வருவேன்.  லிமிட் எப்பவும் 20 டாலர்.  ஒரு  அனுபவத்துக்கும், அந்த அட்மாஸ்ஃபியருக்கும், காசுச் சத்தம் கேக்கவும் போறதுதான். இப்படி அமைவதும் ஒரு    ரெண்டு மூணு வருசங்களுக்கு ஒரு முறைதான். டைம்பாஸ் என்பதால் வெற்றி தோல்வி கணக்கில் இல்லை.

ஜூபிடருக்குப்போய் வண்டியைப் பார்க்கிங்கில் போட்டுட்டு மேலே போனோம். நெராங் நதியில் ஒரு செயற்கைத்தீவை உண்டாக்கி அதில் கட்டிப்  போட்டுருக்காங்க. இதுலேயே  கஸீனோவுடன் இணைஞ்ச ஹொட்டேலும் இருக்கு.  அதெல்லாம் நமக்கில்லை. வேணவும் வேணாம். ஹொட்டேலில் 592 அறைகள் இருக்கு.   ரூம் சார்ஜ் அதிகமில்லை. அதான்  காசு எடுத்துக்க கஸீனோ இருக்கே!  24 மணிநேரமும் திறந்திருக்கு. தூக்கம் வரலைன்னா ஆட்டம்தான்.
ஸ்லாட் மெஷீந்தான் எனக்கு. அதுவும்  பெட் ஆகக் குறைஞ்சதா இருக்கணும். ஒரு சென்ட்:-)  இங்கே எங்கூர் போலவோ, இல்லை ப்ரிஸ்பேன் போலவோ  நாணயங்கள் புழக்கம் இல்லை. நோட்டாப் போடுன்னுது மெஷீன்.  பையில் சின்ன நோட்டா ரெண்டு அஞ்சுதான் இருக்குன்னு ஆளுக்கு ஒன்னு எடுத்து மெஷினுக்குள் அனுப்பிட்டு ஆடத்தொடங்கினோம். பத்து நிமிசம் கூட ஆகலை. அம்பது சென்ட், கேம்பிள்ன்னு இவர்  அஞ்சை முடிச்சுட்டு உக்கார்ந்துருக்கார்.  எனக்கு  போவதும் வருவதுமா   அஞ்சுலேய ஏறக்கொறைய இருக்கு.

ஒரு மணி நேரம் ஆச்சு. போதும், போலாம் போலாமுன்னு தொணதொணக்கிறார். எனக்கும்தான் கொஞ்சம் போரடிச்சது.  கலகலன்னு காசு  அது ரெண்டு மூணு டாலரா இருந்தாலுமே அப்பப்பக் கலெக்ட் பண்ணிக்கிட்டு திரும்பப்போட்டு விளையாடும் மஜா எல்லாம் இங்கில்லை. நமக்குத்தான்  அதிர்ஷ்டமில்லை, அக்கம்பக்கத்துக் கலகல சப்தமாவது கேக்குதான்னு பார்த்தால்  ஊஹூம்....   வெற்றியும் தோல்வியும் ஓசைப்படாம நடக்கணும் போல!  கலெக்ட் போட்டதும், ப்ரிண்டட்  ரசீதைத் தள்ளுது.  திரும்பி அதையே உள்ளெ தள்ளிட்டு,  ஒரு சென்டை பத்தாக்கி  ஆடத்தொடங்கினா.... இவரே கையைக் கையை நீட்டி  இருபது, அம்பதுன்னு அமுக்கி விட்டுட்டு  அஞ்சே நிமிசத்தில் என் ஆட்டத்தை முடிச்சுவிட்டுட்டார்:-(


பெரிய கேம் நடக்கும் இடங்களில் ஜேம்ஸ் பாண்டுகளா உக்கார்ந்து ஆடிக்கிட்டு இருந்தாங்க சிலபேர்!
பொதுவா கஸினோக்களில் படம் எடுக்கத் தடை உண்டு.  மேலே படம்: கூகுளாண்டவர் அருளியது.


நாலரை மணிக்கெல்லாம் அபார்ட்மென்ட் வந்ததுட்டோம். கடலில் கயாக் பயிற்சி நடந்துக்கிட்டு இருக்கு.  கொஞ்சநேரம் ஓய்வு. ஒரு காஃபி . அப்புறம் நடைன்னு.....
இப்பப் புதுசா ஸ்கை பாய்ண்ட்ன்னு ஒன்னு கட்டி விட்டுருக்காங்க.  மனுஷனுக்கு அட்ரினல் த்ரில் வேண்டி இருக்காமே. அதைக் காசு பண்ணத்தான். ஒரு ஆளுக்கு குறைஞ்சபட்சம் 100 டாலர் ஆகிருது.  பார்க்கின் ஃப்ரீயாம்:-)




270 மீட்டர் உசரத்தில் இருந்து  360 டிகிரி வியூ.  77  ஆவது மாடிவரை லிஃப்ட். அப்புறம் நடக்கணும். 298 படிகள். இதுலே பாதுகாப்புக் கருதி அவுங்ககொடுக்கும் க்ளைம்ப் ஸூட் இன்னபிற அணிஞ்சுக்கிட்டு  நம்ம கனத்தை 138 கிலோவா ஆக்கிக்கணும்.  இல்லேன்னா காத்து தூக்கிக்கிணு போயிரும். காலுலே சங்கிலி குண்டுதான் பாக்கி.  அவுங்க ஸைட்லே வீடியோ போட்டுருக்காங்க. நீங்களே இங்கே க்ளிக்கிப் பாருங்க.


நம்ம வீட்டு கருடருக்கு ஆசைதான். நாந்தான் அதுக்குத் தகுந்த ஷூஸ் கொண்டு வரலைன்னு சொல்லி தடா போட்டேன். எத்தனையோ கட்டடங்களில் ஏறிப் பார்த்தாச்சு. அமெரிகா ரெட்டைக் கோபுரத்தைக்கூட பாக்கி வைக்கலை.  இன்னும் எதுக்கு?  எல்லாம் பார்த்தவரை போதும்.  இது சின்ன வயசு மக்கள்ஸ்க்கானது, என்றதும்  சரின்னு 'ஒத்துண்டார்':-) ஆனா....  சும்மாச் சொல்லப்டாது. அலங்கார விளக்குகளோடு இரவில் ஜொலிப்புதான். நம்ம அறையில் இருந்தே பார்க்கலாம்.



இன்றைக்கு மணல் வழி நடைக்குப் பதிலா தரை வழி நடை. பாரடைஸ் மால்வரை. இங்கேதான் மெயின் பீச் இருக்கு. வழி நெடுக விதவிதமான செம்பருத்திப் பூக்கள். காலநிலை நல்லா இருக்குமிடம். எங்கூர் போலவா?  ஹூம்.....


பெடஸ்ட்ரியன் க்ராஸிங் டிஸைன் ப்யானோ கீஸ்.  மெது நடையில் போனோம். கால் வலி இருக்கே.  பீச்சில் கூட்டம் இல்லை.  மாலில் கூட்டம்.  சிட்டிக்கவுன்ஸில்போட்டு வச்ச சிம்மாசனத்துலே  உக்கார்ந்து க்ளிக்ஸ்.   இருட்ட ஆரம்பிச்சுருச்சு.  மெதுநடையில் அறைக்கு வந்தப்ப மணி ஏழே முக்கால்.

நாளைக்கு ஒரு நாள்தான் நமக்கு. ஃப்ரிட்ஜ் சாமான்களைப்  பார்த்தால்  ரெண்டு நாளைக்குள் ஒழிச்சுக்கட்ட முடியாது போல.



ஃப்ரோஸன் சாப்பாட்டை  மைக்ரோ அவனிலும்,மசால் வடைகளை ரெகுலர் அவனிலும் வச்சு எடுத்து, முடிச்சோம்.  நாட் பேட்.  சீத்தாப்பழம்  பழுத்துருச்சு.  சாப்பிட்டால்....  சுவை ரொம்பவே சுமார்.  சீஸன் இல்லாத சமயத்துலே வாங்கினால் இப்படித்தான். ஆசையே துன்பத்திற்குக் காரணம்.






வலை மேய்ஞ்சுட்டு,  டௌன்லோடு செஞ்சு எடுத்துப்போன கதைகளை வாசிச்சுத் தூக்கத்துக்குள் போனேன். க்ரேஸி மோகனின் கதைகள்.  சிரிப்பே வரலை.  சினிமாவில் பார்ப்பதுதான் உண்மைச் சிரிப்பு.


குட்நைட்.

தொடரும்........:-)


19 comments:

said...

வழக்கம்போல் வேற்றுலகிற்கு அழகான புகைப்படங்களுடன் அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

said...

//க்ரேஸி மோகனின் கதைகள். சிரிப்பே வரலை. சினிமாவில் பார்ப்பதுதான் உண்மைச் சிரிப்பு//

me too:)
ஆனா.. கிரேசி வசனத்தால் கமலுக்குப் பெருமையா? கமலால் கிரேசி வசனத்துக்குப் பெருமையா? -ன்னு ரசிகச் சண்டையில் மாட்டீக்காதீங்க டீச்சர்:)

சப்போட்டா பழுத்துருச்சா? மிக்க மகிழ்ச்சி.. நான் ஒரு பங்கு எ

said...

முந்திய பின்னூட்டத்தில் பிழை:) சப்போட்டா பழுத்துருச்சா? மிக்க மகிழ்ச்சி.. நான் ஒரு பங்கு எடுத்துக்கட்டுமா? -ன்னு கேட்க வந்தேன்.. ரொம்பவும் type செய்ய முடியலை, அசதி! கை தவறிடுச்சி; தூங்கிட்டு பொறவு வாரேன்:)

அதே அட்டைப் பெட்டி, பருப்பு வடை.. இங்க நியூ யார்க்கிலும் வீட்டில் இருக்கு; 2 + 1 minutes in microwave;
ரொம்பவும் சுமார் தான்.. என்ன செய்ய? எனக்கு முடியாத போது, ரசஞ் சோறுக்கு அதான் உதவி செய்யுற நண்பன்:)

மஞ்ச யானை அழகு!
அந்தச் செம்பருத்திப் பூவும்..
ஒங்க மயில் வச்சித் தைச்ச சல்வார் கமீசும், ரொம்ப நல்லாருக்கு டீச்சர்:)

said...

ஒவ்வொரு இடமும் தான் எத்தனை அழகு...!

நன்றி அம்மா...

said...

உங்க ஃபோட்டோ சூப்பர் துளசி. கோபால் சார் ரசிச்சு எடுத்த அழகு தெரியுது :) ஹாஹா.

கேசினோ ராயல் நினைப்பு வந்தது ஜேம்ஸ்பாண்ட் பற்றிப் படித்ததும். டீச்சர் யு ஆர் ஆல்வேஸ் அப்டேடட் :)



said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்து வாசித்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க கே ஆர் எஸ்.


முதலில் உடம்பைப் பார்த்துக்குங்க. கவனம் தேவை.

அது சப்போட்டா இல்லை. சீத்தாப்பழம்!

மைக்ரோவேவில் வச்சா க்ரிஸ்ப்பா வர்றதில்லை. அதான் ஃபேன் பேக் அவன்லே ஒரு 10 நிமிட்.

மயில் டிஸைனைப் பார்த்துட்டுத்தான் வாங்கினேன். ரொம்பப்பழசு. ஆனாலும் பிடிச்ச ட்ரெஸ். பூனை, யானை, மயில் இப்படி இருந்தா உடனே வாங்கிருவேன்:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கு நன்றீஸ்.

said...

வாங்க தேனே!

ரசிச்சு எடுத்தா அழகாயிருவேனா!!!!!

பயங்கர அழகுப்பா. அதான் கெமெராவிலேயும் வருதுன்னு சொல்லப்டாதோ:-))))

காலம் ஓடும்போது கொஞ்சூண்டு நாமும் கூடவே ஓடலைன்னா எப்படி?

மாடர்ன் வொர்ல்ட். டீச்சருங்கதான் மாற்றங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கணும். பழைய நோட்ஸ் ஆஃப் லெஸன் வேலைக்கு ஆகாது:-)

said...

துளசி சிம்மாசனமும், உடையும் அழகு. காசினோ ராயல் தான் நினைவுக்கு வந்தது.

நம்ம ஊருக்கு இது இன்னும் வரவில்லை போலிருக்கு. உங்க தங்கக் கடரற்கரைப் பயணம்
ரொம்பவே சுகமா இருக்கு. இந்த வாரனம் இங்கே வெயிலோடு ஆரம்பித்திருக்கு. காலையில் குளிர் தொண்டையைக் கட்டுகிறது.
படங்கள் அத்தனையும் அருமை.

said...

ஃப்ரோசன் உணவு..... நமக்கு கஷ்டம் தான்.

படங்கள் அனைத்தும் அழகு. சிம்மாசனம் நல்லா இருக்கே!

said...

shucks!
படத்தைப் பார்த்த பின்னும், தூங்கிக்கிட்டே பின்னூட்டம் எழுதினா இப்படித்தான்.. சீதா->சப்போட்டா ஆகும்; sorry teacher:)
சரி, எவ்ளோ நாள் ஆச்சு பழுக்க?
ஒங்க பெண்ணை நினைச்சி வாங்குன சீதாப்பழம், இத்தினி பதிவு கடந்து வந்துருக்கா? ஆஆஆகா:)

said...

வாங்க வல்லி?

எந்த வானரம்? நானா:-)))))

ஓ.... வாரமா? வெயில் வாரமுன்னு சந்தோஷப்பட்டுக் கிடணும். நேத்து திடீர்னு மதியத்துக்கு மேல் 22 டிகிரி. ஊரே கொண்டாடிருச்சு!

நாந்தான் படுக்கையில் லொக் லொக் லொக் :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பயணங்களில் அறைக்கு வந்துட்டால் மீண்டும் சாப்பாடு தேடிப்போக சோம்பல் வந்துருது. அதான் ஃப்ரோஸன் ஒரு நாள்.

said...

@கே ஆர் எஸ்,

வாங்கி ஆறாம் நாள் அதுவும் நாலுநாள் செய்தித்தாளில் பொதிஞ்சு வச்சபிறகு சுமாராப் பழுத்தது.

said...

Unga koodavae oor suthana maari irukunga madam....

said...

வீட்டில் மூத்த மகளுக்கு அமெரிக்க என்றால் ஈர்ப்பு. லாஸ்வேகாஸ் பற்றி சொல்லும் போது இந்த சூதாட்ட கிளப்புகளைப் பற்றியும் சொல்வதுண்டு. எனக்கு ஆசை தான். எப்படித்தான் இழப்புகளை சமாளிப்பார்களோ? அதென்ன ஒவ்வொரு பயணத்திற்கும் விதவிதமான சூடிதார்களை வைத்திருப்பீர்களோ?

said...

வாங்க சிவா.

நல்லதுதானே? ஆர்ம்சேர் ட்ராவலர்ஸ் உலகெங்கும் இருக்காங்களே!

said...

வாங்க ஜோதிஜி.

இழப்பு சமாளிக்க முடியாம அதிகமாப் போனால் கஷ்டமே :-( நான் ச்சும்மா ஒரு பொழுதுபோக்காத்தான் .... நம்ம லிமிட் நமக்குத் தெரியணும் என்பதே முக்கியம்!

நான் சுடி போடுவதில்லை. ஸல்வார் கமீஸ் தான். சுடிக்கும் இப்ப கேவலப்பட்டுக்கிட்டு இருக்கும் லெக்கிங்ஸ் க்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. ரெண்டும் வெவ்வேற ஸ்டைல்.

ரெடிமேட் வாங்குவதில்லை. துணி எடுத்துத் தைப்பதுதான் எப்போதும்.

Pants & shirts போடுவதை விட்டாச்சு. இனிமேல் இப்படித்தான்.