பிரம்ம தேவர் தன் கையில் ஒரு தாமரைப்பூவை ஏந்திக்கிட்டு அன்னப்பட்சி வாகனத்தில் அமர்ந்து ஹாய்யா பூவுலகைச் சுற்றிப் பார்த்துக்கிட்டு பயணம் போறார். அவர் கையில் இருக்கும் தாமரையில் இருந்து ஒரு இதழ் புட்டுக்கிச்சு! காற்றிலே மெல்லப் பறந்து தவழ்ந்து பூமியிலே வந்து விழுந்த இடத்தில்தான் ஒரு குளம் தோன்றுச்சு. அதுதான் இந்த புஷ்கர் (புஷ்பம் உண்டாக்கிய ) தீர்த்ராஜ் ஸரோவர் என்னும் குளம்.
இன்னொரு கதையும் இருக்கு. அசுர குல அரசன் வஜ்ரநாபனோடு ப்ரம்மா போரிடும்போது, அசுரனைத் தன் கையில் உள்ள தாமரை மலரால் 'அடி'ச்சாராம்! அடியின் வேகத்தில் தாமரையில் ஒரு இதழ் புட்டுக்கிச்சு. அது விழுந்த இடம்தான் இந்த குளம். எப்படியோ கதையின் பின்பகுதி ஸேம் ஸேம்:-) இருந்துட்டுப் போகட்டும். புனைவுகள் பல வகை!
இதன் கரையில் பிரம்மதேவனுக்கு ஒரு கோவில் எழுப்பியது விஸ்வாமித்திர மகரிஷி. இந்த புஷ்கர் குளத்தாண்டை இருந்துதான் தவம் செஞ்சார். உக்கிரமான தவம். அதைக் கண்டு மனம் மகிழ்ந்து பிரம்மன் தோன்றி இவருக்கு ராஜரிஷி என்னும் பட்டத்தைக் கொடுத்தாராம். விஸ்வாமித்திரர் பிறப்பில் க்ஷத்திரியர். ஒரு சமயம் வசிஷ்டர் ஆஸ்ரமத்தாண்டை தன் பரிவாரங்களுடன் வரநேரிட்டது. வசிஷ்ட முனிவரைக் கண்டதும் பணிவோடு வணங்கினார் அரசர்
விஸ்வாமித்திரர். அவருக்கு ஆசி வழங்கி, இன்னிக்கு இங்கே ஆஸ்ரமத்தில் விருந்து சாப்பிட்டுப் போகணுமுன்னு அரசரைக் கேட்டுக்கிட்டார் வசிஷ்டர்.
எளிய ஆஸ்ரமக்குடிலில் இத்தனை பெரிய பரிவாரத்துக்கு சமைப்பது கஷ்டமுன்னு அரசருக்குப்பட்டது. அதெல்லாம் வேணாம். உங்க ஆசீர்வாதமே போதுமுன்னார். அத்தோடு விட்டிருக்கலாம். ஆனால்..... விதி யாரை விட்டது?
அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை. நிமிசத்துலே சாப்பாடு தயாராகிருமுன்னு சொன்னவர்.......தன்னிடம் இருந்த நந்தினி என்னும் பசுவைக் கூப்பிட்டு( நந்தினியின் மற்றொரு பெயர் சபலை) இத்தனை பேருக்கு இன்னின்ன பதார்த்தங்கள் வேணுமுன்னு ஆர்டர் கொடுத்த அடுத்த விநாடி மேஜிக் போல எல்லாம் ரெடியா வந்துருச்சு. சபலை காமதேனுவின் அம்சம்.
அரசர் விஸ்வாமித்திரரும் பரிவாரங்களும் நல்லா சாப்பிட்டுத் திருப்தி அடைஞ்சாங்க. நல்லா இருந்துச்சு விருந்துன்னு சொல்லிட்டுப் போகாம, அந்த பசு எனக்கு வேணுமுன்னு கேட்டார். அரசன் கேட்டால் கொடுத்துடணுமாமே? (ஐயோ..... தற்கால அரசியல்வாதிகள் ஞாபகம் வந்து தொலைக்குதே! நல்லதெல்லாம் தனக்கே வேணுமுன்னு அடியாட்கள் வச்சுக்கிட்டு அட்டகாசம் செய்யறாங்களே)
'இல்லை அரசரே. என்னுடைய பூஜை புனஸ்காரங்களுக்கு இந்தப் பசு ரொம்ப முக்கியமு'ன்னு பணிவா மறுத்துருக்கார் வசிஷ்டர். முனிவரை அடக்கத் தன் புதல்வர்களை ஏவினார் அரசர். முனிவரின் கோபப் பார்வை பட்டதும் அவர்கள் எரிஞ்சு சாம்பல் ஆனாங்க. அரசனுக்குக் கோபம் வந்துருச்சு. படைவீரர்களிடம் பசுவைக்கட்டி இழுத்துக்கிட்டு வாங்கன்னு கட்டளையிட்டார். பாவம் பசு!
" நந்தினி , தேவையான போர் வீரர்களையும் போர்க்கருவிகளையும் தா" ன்னதும் அடுத்தவிநாடி பெரும்படை தோன்றி அரசனையும் அவனது படையையும் ஓட ஓட விரட்டுச்சு. அரசனுக்கு ரொம்ப ஷேம் ஷேம் ஆகிப்போச்சு. நம்முடைய அரச அதிகாரத்தைவிட சக்தி வாய்ந்தது முனிவர்களின் வலிமை. நாம் எப்படியாவது முனிவர் ஆகிடணுமுன்னுதான் இங்கே புஷ்கரில் வந்து தவம் செஞ்சார். ராஜரிஷி பதவியையும் அடைஞ்சார்.
அப்புறமும் திருப்தி இல்லாம, இன்னும் கொடுந்தவம் செஞ்சு பிரம்மரிஷி பட்டமும் கிடைச்சது. அந்தப் பட்டம் கொடுக்கவந்த பிரம்மனிடம், நான் பிரம்மரிஷி பட்டத்தை வசிஷ்டர் கையால்(வாயால்) வாங்கணுமுன்னு விண்ணப்பிக்க வசிஷ்டர் அங்கே வந்து, நீர் பிரம்மரிஷின்னு சொன்னாராம். ஆக....'வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி' கிடைச்சது:-)
இன்னும் பவர் வேணுமுன்னு பயங்கர தவம் செஞ்சப்ப.... இதென்னடா வம்பாப் போச்சு. பவர் கூடிட்டா நமக்கெல்லாம் ஆபத்தாச்சேன்னு தேவர்கள் கூடிப்பேசி நைஸா தேவலோக அப்ஸரஸ் மேனகாவை இந்தப் புஷ்கர் குளத்தாண்டை அசைன்மெண்ட் கொடுத்து அனுப்பினாங்க. அவளும் குளிக்க வந்ததுபோல வந்து விஸ்வாமித்திரரை மயக்கி அவர் தவத்தைக் கலைச்சு அதன் பயனாக சகுந்தலை பிறந்து....... இப்படி கதைக்குள் கதையாப் போய்க்கிட்டே இருக்கு.
உலகத்தில் வேறு எங்கும் பிரம்மனுக்குன்னு தனியாக் கோவில் இல்லை. அப்படி கோவில் இல்லாத காரணமாச் சொல்றதுக்கு ஒரு கதையும் இருக்கு. ஒன் லைன் ஸ்டோரி என்னன்னா பொய் சொன்ன வாய்க்குக் கோவில் இல்லை!
பூமிக்கும் வானத்துக்குமாய் நின்ற சிவனின் அடி முடியைக் காணும் போட்டி வந்துச்சு. மஹாவிஷ்ணு அடியைக் கண்டுவர வராஹ ரூபத்தில் பூமியைத் தோண்டிக்கிட்டே போயிண்டுருக்கார். பிரம்மா தன் அன்னபட்சி வாஹனத்தில் ஏறி முடி காண மேலே மேலே போறார். ரெண்டு பேருக்கும் வெற்றி கிடைக்கலை.
அப்போ ஒரு தாழம்பூ இதழ் மேலே இருந்து கீழே வந்துக்கிட்டே இருக்கு. ப்ரம்மா அதை யார் என்னன்னு விவரம் கேட்க, அது சொல்லுது ' நான் சிவனின் முடியில் இருந்து தவறி விழுந்துட்டேன். அதான் கீழே பூமிக்குப் போய்க்கிட்டே இருக்கேன். எப்போ லேண்ட் ஆவேன்னு தெரியலை'ன்னது. ' எப்போ விழுந்தே? 'ன்னு பிரம்மன் கேட்க, அது பல வருசங்களாச்சுன்னதும் அம்மாந்தூரம் இன்னும் போகணுமான்னு பிரம்மா பயந்துட்டார்.
குறுக்கு வழியில் வெற்றியைத் தேடலாமேன்ற அல்ப ஆசையால், தாழம்பூவிடம் எனக்கு நீயே சாட்சியா இருக்கணும். என்றார். எதுக்கு சாட்சின்னு தாழம்பூ முழிக்க...... நான் சிவனின் முடியைக் கண்டேன். அப்போ அங்கிருந்து திரும்பும்போதுதான் நீயும் என் கூடவே வந்தேன்னு சொல்லப்போறேன்.; நீ ஆமாம்னு சொல்லணும் என்றார். தாழம்பூவுக்கு ஒரே பயம். பொய் சொல்ல எனக்குத் தெரியாதுன்னு தயங்குது. நோ ஒர்ரீஸ். நீ வாயையே திறக்க வேண்டியதைல்லை. ஆமாம்ன்னு தலையை மட்டும் ஆட்டினால் போதும் என்கிறார்.
அன்னப்பட்சியில் டபுள்ஸ் ஏறி பூமிக்கு வந்து சேர்ந்தாங்க ரெண்டு பேரும்.
அடியைக் கண்டுபிடிக்கமுடியலை என்ற தோல்வியை ஒப்புக்கொண்டு மூச்சு இறைக்க விஷ்ணுவும் வந்து சேர்ந்தார்.
அசட்டுத் தாழம்பூ அதே போல் தலையை ஆட்டினாலும் அதன் பேய் முழியைப் பார்த்து உண்மையைக் கண்டு பிடிச்சுடறார். உடனே சாபம் கிடைச்சது ரெண்டு பேருக்கும். ப்ரம்மாவுக்குத் தனியாக் கோவில் கிடையாது. தாழம்பூ பூஜைக்கு ஆகும் மலர்களில் இனி இருக்க லாயக்கில்லை. கூடாதுன்னு ஆனதும் அப்போதிருந்துதான். இது நம்ம தென்னிந்தியாவில் பரவலா இருக்கும் கதையும் காரணமும்.
அப்போ வடக்குக்கு? இருங்க சொல்றேன்.
பளிங்குப் படிகட்டுகளில் ஏறி கோவில் வாசலுக்குள் நுழைஞ்சோம். சின்னதா முற்றம் போல இருந்துச்சு. அதைத் தாண்டினதும் மூலவர் இருக்கும் கருவறைதான். வெள்ளி மாடத்தில் முழிச்சுப் பார்க்கும் கண்களுடன் நான்முகன் இருக்கார். ப்ராச்சீன் மந்திர். (அப்படின்னா கோவில் கட்டிய விவரம் ஒன்னும் இல்லை. ஆதிகாலம் முதலே இருக்குன்னு பொருள்!) சந்நிதிக்கு வெளியில் வெள்ளியில் செஞ்ச ஆமை உருவம் ஒன்னு தரையிலே பதிச்சுருக்கு. அங்கங்கே சுவரிலும் தரையிலும்ம் வெள்ளி நாணயங்களை பதிச்சு வச்சுருக்காங்க. ஒரு வகையான வேண்டுதல்களாம்.
மூலவருக்கு அருகில் சின்னதா ஒரு சிலை. காயத்ரி மாதாவாம். அரக்கர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க மூணு பக்கமும் ரத்னகிரி, சூர்யகிரி, நீல்கிரின்னு மலைகளை சிருஷ்டிச்ச பிரம்மன் இங்கே குளக்கரையில் யாகம் செஞ்சுக்கிட்டு இருந்தாராம். கடைசியில் யாகத்தில் ஆஹுதிகளைச் சமர்ப்பிக்கும்போது அருகில் இருந்த தர்மபத்னியைக் காணோம். தம்பதி சமேதராத்தான் இந்த சமர்ப்பணம் செய்யணுமுன்னு சாஸ்த்திரங்கள் சொல்வதால்... அங்கிருந்த குஜ்ஜர் குலப்பெண்ணான காயத்ரியைப் பரிசுத்தம் செஞ்சு பிரம்மா கல்யாணம் செஞ்சுக்கிட்டாராம். ஏதோ வேலையாப் போயிருந்த சரஸ்வதி திரும்பி வந்து பார்த்தால்.......
'அடப்பாவி..... பொண்டாட்டி கொஞ்சம் இங்கே அங்கேன்னு அவசர வேலையா சிலருக்குக் கல்விக் கண்ணைத் திறந்துட்டு வர்றதுக்குள்ளே ........ பொறுமை காக்காமல் உடனே வேற அஃபீஸியல் சின்ன வீடு வச்சுக்கறதா? உனக்கு பூவுலகில் கோவிலே இல்லாமப் போகட்டும். சாபம் விட்டேன்! இனி உன்கூட இருக்க மாட்டேன்' னு கோச்சுக்கிட்டு ரத்னகிரி மலையில் போய் உக்கார்ந்துக்கிட்டாங்க. அதைத்தான் சாவித்ரி கோவிலுன்னு சொல்றாங்க. அப்புறம் கெஞ்சிக்கூத்தாடுனதும் கொடுத்த சாபம் கொஞ்சம் நீர்த்துப்போக , '....போகட்டும். இங்கே புஷ்கரில் மட்டும்தான் உனக்குக் கோவில். வேற இடங்களில் கிடையாது. நானும் மலைமேல் இந்தக் கோவிலைப் பார்த்தபடியே இருப்பேன். நீ பாட்டுக்கு காயத்ரியையும் ஏமாத்திட்டு...... வேற வீடு செட் அப் பண்ணிட்டால்...... தொலைஞ்சே....ஆமாம்.'
சரி..... இந்தக் கதைகளில் இருந்து கிடைக்கும் நீதி என்ன?
பொய்(யும்) சொல்லக்கூடாது. பொண்டாட்டிக்குக் கோபம் வர்றமாதிரி நடந்துக்க(வும்) கூடாது.
மலைமேல் ஏறி இறங்க நேரமும் சக்தியும் இல்லாததால் கண்களை அனுப்பிச் சேவிச்சுக்கிட்டோம்.
இப்பவும் குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்த பூஜாரிகளுக்குத்தான் பிரம்மன் கோவிலில் பூஜை செய்யும் உரிமை!
Thursday, May 26, 2011
பிரம்ம தேவன்....((ராஜஸ்தான் பயணத்தொடர் 17)
Posted by துளசி கோபால் at 5/26/2011 03:48:00 PM
Labels: அனுபவம் Pushkar Rajasthan
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//பொய்(யும்) சொல்லக்கூடாது. பொண்டாட்டிக்குக் கோபம் வர்றமாதிரி நடந்துக்க(வும்) கூடாது.//
:))))
இதல்லவோ நீதி!!
பயணம் இனிதாய் தொடரட்டும்... நானும் தொடர்கிறேன்...
பிரும்ம தேவன் ராஜஸ்தான் பயணத்தொடர் 17 நன்றாக இருந்தது.
புகைப்படங்கள் தான் பழைய மாதிரி இல்லை, செல்போன் படம் பிடிப்பைஇ தவிர்த்து முன்போலவே நல்ல கேமரா உபயோகித்து
படம் பிடித்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.. (குறிப்பாக அந்த மலைமேல் உள்ள கோபுரம் படம்)
நன்றி
சிவஷன்முகம். கரூர்.
ஆன்மீகத்தை அப்படியே
அள்ளிப்பருக வசதியாக
உங்கள் நடை உதவுகிறது
நன்றி
வாங்க வெங்கட் நாகராஜ்.
நீதி இல்லாத கதைகள் உண்டா:-))))))
தொடர்வதற்கு நன்றிகள் பல.
வாங்க சிவஷன்முகம்.
அங்கேதான் கோவிலுக்குள் கேமெரா அனுமதிக்கலையே.
இதெல்லாம் யாரோ செல்லில் எடுத்தது போல. கூகுளாண்டவர் காமிச்சார். நான் சுட்டுக்கிட்டேன்.
அந்த சாவித்ரி கோவில் நம்ம கேமெராவில் எடுத்ததுதான். ஆனால் வெளிச்சம் போதலை. ரொம்ப தூரத்தில் இருக்கு. சரியா ஃபோகஸ் செய்ய முடியலை:(
வாங்க A R R.
இது ஆன்மீகமான்னு தெரியலை. கீழே ரெண்டு சுட்டிகள் இருக்கு பாருங்களேன் நேரம் கிடைச்சால்.
http://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_13.html
http://thulasidhalam.blogspot.com/2010/04/blog-post_14.html
'புட்டுக்கும்'னு எதுனா நீதி சொல்வீங்கன்னு பாத்தேன்.
வாங்க அப்பாதுரை.
நீதி இருப்பதைக் கவனிக்கலையா?
//பொய்(யும்) சொல்லக்கூடாது. பொண்டாட்டிக்குக் கோபம் வர்றமாதிரி நடந்துக்க(வும்) கூடாது.//
இல்லைன்னா லைஃப் புட்டுக்கும்:-)
கதைக்கு நல்ல நீதி சொல்லி இருக்கிறீர்கள் :))
கோபால் என்ற மூன்றெழுத்து என்றும்,
கோபம் என்ற மூன்றெழுத்து விளக்கி-
உண்மை என்ற நிலையில் நின்று,
அன்பு என்ற மூன்றெழுத்து சேர்த்து-
துளசி என்ற மூன்றெழுத்துடன் வாழ
வாழ்த்தும் உங்கள் அன்பு நெஞ்சங்கள்
Kobam, paapam
THE journey teaches us all these morals.
Nice narration tHULASI.
வாங்க மாதேவி.
நீதிக்கதைகள் பட்டியலில் இதை(யும்) சேர்க்கலாமா:-))))
வாங்க சிவஷன்முகம்.
நானும் 'நன்றி' என்ற மூணெழுத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
வாங்க வல்லி.
அதான் கோபம் சண்டாளம் என்று சொல்லி வச்சுட்டுப் போயிருக்காங்க!
Post a Comment