Friday, May 06, 2011

கொலைக்கருவிக்குக் கலையழகு என்ன வேண்டிக்கிடக்கு? ((ராஜஸ்தான் பயணத்தொடர் 9)

வளைஞ்சு நெளிஞ்சு போகும் மலைப்பாதையில் போறோம். உயரம் கூடக்கூட கீழே காட்சிகள் அற்புதமா இருக்கு. ஆரவல்லி மலைத்தொடர்களில் இது இருக்கு. கோட்டை வாசலுக்குப்போய்ச் சேர்ந்தோம். வண்டியை உள்ளே கொண்டு போகலாமாம்!!! அம்பது ரூ சார்ஜ். நல்லதாப் போச்சு! கார் ஓட்டுவதால் ட்ரைவருக்கு டிக்கெட் வாங்க வேணாம்! நமக்கு மாத்திரம் ரெண்டு!
மேலே போகும் வழியில் ஒரு சின்னக் கோவில். சமீபத்துலே கட்டிவிட்டதாக இருக்கணும். இது ஹனுமனுக்கு! என்ன பொருத்தம் பாருங்க...... அக்கம்பக்கம் இவர் இனத்தவர் நடமாட்டம். லங்கூர் வகைகள். வெளிறிய சாம்பல் கலர் மேனியில் நல்ல கருத்த முகம். கூட்டங்கூட்டமா வசிக்கும் குணமுடையது. பிள்ளைகுட்டிகளும் ஏராளம். காலை நீட்டி ஆள் போல உக்கார்ந்துருந்தார் ஒருவர். எங்கே பார்த்தாலும் காஞ்சுபோன மரங்களா இருக்கு. என்னன்னு உணவு கிடைக்குதுன்னு தெரியலை:(

நல்ல ஏத்தமா இருக்கும் பாதையில் போய் கோட்டை மதிள்சுவரையொட்டி இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்திட்டு இறங்கினால்.....கீழே அதலபாதாளத்தில் பழைய நகரம் ஆமெர் பரந்து விரிஞ்சுருக்கு.

இந்தப் பக்கம் ஒரு பத்துப்படி ஏறிப்போகும் இடத்தில் தகரக்கொட்டகையின் நிழலில் யானை நிற்பதுபோல ஒரு பீரங்கி! இதைப்பார்க்கத்தான் வந்துருக்கோம்! என்ன விசேஷமாம் இதுக்கு? 'உலகின் மிகப்பெரிய பீரங்கி'!!! ஜெய்வானான்னு இதுக்குப் பெயர். ஜெய் சிங் மஹாராஜாவின் பெயரை எல்லாத்துக்கும் வச்சுருக்காங்க. வெற்றி வெற்றின்னு எங்கும் இருப்பதும் வெற்றிக்குக் காரணம்(!!!)
மஹாராஜா சவாய் ஜெய்சிங் (இரண்டாமவர்) அரசாண்ட காலத்தில் உருவாக்கியது. இவர்தான் 1699வது ஆண்டு தன் பதினோரு வயசில் பட்டத்துக்கு வந்தவர். ஸவாய் என்ற பட்டம் இவருக்குத்தான் கிடைச்சது. போர்த்தளவாடங்களில் எதிரிகளை அழிச்சு ஒழிக்க முக்கியமான ஆயுதம் பீரங்கி என்ற எண்ணத்தால் அங்கே ஜெய்கட் கோட்டையிலேயே இரும்பை உருக்கும் ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சு இந்த பீரங்கியை 1720 வருசம் செஞ்சு முடிச்சார். இதன் எடை கொஞ்சம்தான். அம்பதே டன்!!! இதன் பேரல் மட்டும் 20 அடி நீளம். குண்டு வைக்கும் இடத்தின் விட்டம் பதினோரு அங்குலம். நூறு கிலோ வெடிமருந்து வச்சு வெடிக்கணும். பத்த வச்சால் 22 மைல் தூரம் பறந்து போய் வெடிக்கும். வேலை செய்யுதான்னு பார்க்க ஒரே ஒருமுறை பரிசோதனை செஞ்சாங்களாம். அம்புட்டுதான்..... அதுக்குப்பிறகு இந்த 'யானை' சும்மாத்தான் கிடக்கு!

இப்படிப்பட்ட சமாச்சாரம் ஒன்னு ராஜாகிட்டே இருக்குன்னு தெரிஞ்ச எவரும் அதன்பின் வாலாட்டலை போல! ராஜஸ்தான் மக்கள் கலைஅழகை விட்டு உயிர்வாழ மாட்டாங்க போல...... எதிரிகளை அழிக்கும் இந்த பயங்கரக் கருவிக்குக்கூட மரம், யானை, பறவைன்னு அலங்காரம் செஞ்சுதான் வார்ப்பு !!!!
கிட்டத்தட்ட நூத்திப்பதினைஞ்சு வருசம் கழிச்சுத்தான் மஹாராஜா ராம்சிங் (இரண்டாமவர்) ஆட்சி காலத்தில் பீரங்கி வண்டி ஒன்னு செஞ்சு அதுலே ஏத்திவச்சுருக்காங்க. எந்தப்பக்கம் வேணுமுன்னாலும் திருப்பிக்கும் வகையில் சக்கரம் அமைச்சதெல்லாம் ராஜா ராம்சிங் காலத்தில்தான்(1835 - 1880)

இயற்கையா இருக்கும் மலையைக் கூடியவரை சிதைச்சுப் பாழாக்காமல் கோட்டையைக் கட்டி இருக்காங்க. வட்ட வட்ட அறைகளைக் கட்டித் தண்ணீர் சேகரிப்பு, பள்ளத்தில் தேங்கும் நீரை படைவீரர்கள் குளிக்கும் குளமா மாத்திக்கிட்டதுன்னு இல்லாமல் இன்னும் காடாவே இருக்கும் பகுதிகளில் உள்ள காட்டுமிருகங்களுக்குக் குடிநீர் தொட்டியெல்லாம் கூட அமைச்சுருக்காங்க. கஜானா கூட தண்ணீர் அறைக்குக் கீழே தானாம். கொடிய மிருகங்கள் இப்பவும் இருக்காம். சிலசமயம் கண்ணுக்குத் தட்டுப்படுமுன்னு சொன்னார் கைடு. இந்நேரத்துக்கு வராதுன்னுன்னு நிச்சயமாத் தெரிஞ்சாலும் கண்ணை நட்டுச் சுத்தும் முத்தும் பார்த்தேன்.
இந்தப் பள்ளத்துலே தண்ணீர் குடிக்க விலங்குகள் வருமாம்
தண்ணித்தொட்டி ஒன்னு கட்டி விட்டு குழாய்வழியா தண்ணீர் ரொப்பி விடுவாங்களாம் அந்தக் காலத்தில்


மொட்டை வெய்யிலில் பொட்டைக் காடா இருக்கு! அடுத்த மலையில் இந்திய ராணுவம் பெரியபெரிய டிஷ், ஆண்டெனா போன்ற தளவாடங்களை அமைச்சு வச்சிருப்பது கண்ணில் பட்டது. இந்த மாநிலத்துக்குப் பக்கத்தில் அண்டை நாட்டின் எல்லை இருப்பதால் கூடுதல் பாதுகாப்பா என்னென்னவோ செஞ்சுருக்காங்க. எல்லாம் ராணுவ ரகசியம்!

பொதுவா ராஜஸ்தான் முழுசுமே ஒருவிதப் பதற்றத்தோடுதான் இருக்குன்னு தோணல். எதிரி(?) நாட்டுக்கு ரொம்பப் பக்கத்தில் இருக்கோம் என்ற உணர்வே............ இப்படியெல்லாம் ஆட்டி வைக்குது. பஞ்சாப் மாநிலமும் எதிரிக்குப் பக்கம் என்றாலும் அங்கே இப்படிப் பார்க்கலை. எல்லோரும் விவசாயத்துலே கவனமா இருந்துடறாங்க. தண்ணிக் கவலை இல்லை பாருங்க:-)
கோட்டை சுவர் அப்படியே.....நீண்டு போகுது
நல்ல வெய்யில் ஏறிப்போச்சு. காலையில் முதல்வேலையா கோட்டை கொத்தளத்தைப் பார்வையிட்டு இருக்கலாமேன்னு காஷிராம் கிட்டே கேட்டால்.... 'ஜந்த்தர் மந்த்தரில் மணி பார்க்கணுமே. 12க்குப் பின்னால் போனால் சூரியன் உச்சிக்குப்போய் நிழல் சரியா விழாதே'ன்றார், கையில் கடிகாரம் கட்டி இருக்கும் கைடு காஷிராம். இங்கேயும் வரிசைவரிசையா எக்கச்சக்கமான கட்டிடங்கள் மாளிகைகள் கோவில்கள் எல்லாமும் இருந்தாலும்......நமக்கு நேரம் இல்லாத காரணத்தால்..... கிளம்பிப் போகவேண்டியதாப் போச்சு. ஜெய்ப்பூரில் குறைஞ்சது மூணுநாள் தங்கினால் ஆற அமரப் பார்க்கலாம். அடுத்த இடமா ஆமெர் கோட்டைக்குப் படையெடுத்தோம்:-)

தொடரும்.............:-)

14 comments:

said...

கொட்டை சுவர் பார்த்தால் அப்படியே சீன பெருஞ்சுவர் ரேஞ்சுக்கு போகுதே.... அருமையான படங்களும் தொகுப்பும்.

said...

படங்கள் எல்லாம் வரட்சியைக் காட்டுது. குளிர்ச்சியாக எதுவுமே சிக்கலையா ?

பாவம் குரங்குகள்.

said...

அடுத்தது ஆமேர் கோட்டையா? நாங்க ரெடி... இன்னுமொரு முறை பார்க்க.... நல்ல பகிர்வுக்கு நன்றி.

said...

இந்தக்கோட்டைகளையெல்லாம் பார்த்தா பிரமிப்பா இருக்குது. இதையெல்லாம் கட்றதுக்கு எவ்ளோ சிரமப்பட்டிருப்பாங்க.. அனேகமா சுவருக்கான கல்லையெல்லாம் யானைகள்தான் சுமந்திருக்கும் இல்லியா..

said...

//அடுத்த இடமா ஆமெர் கோட்டைக்குப் படையெடுத்தோம்:-)//

:))
நானும் நானும்.. :)

said...

சரித்திரத் தகவல்கள் அருமையான புகைப்படங்கள் என அருமையான பதிவு.

said...

வாங்க சித்ரா.

பழம் தின்னுக் 'கொட்டை' போட்டவங்க கட்டுன சுவர்.... அப்படித்தான் இருக்கும்:-))))

said...

வாங்க கோவியார்.

வரண்ட பூமிதானே அது! நாங்க ஊருக்குள்ளே நுழைய அரைமணி நேரம் இருக்கும்போது மழை திடீருன்னு வந்து மனசைக் குளிர்விச்சது. கொஞ்சம் பெரும் தூறல்!!!!

குரங்கன்ஸ் பாவம்தான்:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோட்டையை விடமுடியாதாம் கோபாலுக்கு:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

பின்னே? யானை இல்லாம வேலை நடக்குமா??????

அதுகள் நடந்து போன வழியை அப்புறமா கல்கொண்டு பாவியிருப்பாங்க. ரோடும் போட்டாச்சு!

2 இன் 1 !!

said...

வாங்க சுசி.

கூட(வே) வருவதற்கு நன்றிப்பா.

said...

வாங்க டொக்டர் ஐயா.

உங்க வேலைத் தரக்கிலும் வாசிக்க முடியுதா? நன்றி நன்றி.

said...

பீரங்கிப் படத்தைப்போட்டு உதறவைத்து சண்டைப் பயம்காட்டக் கூடாது :(


கோட்டை மதில்சுவர் ரொம்ப நல்லா இருக்கு. தண்ணித்தொட்டி நல்ல முயற்சி.

said...

வாங்க மாதேவி.

அது 'சுடாத' பீரங்கிப்பா:-))))