Wednesday, May 18, 2011

சுருக்கமாச் சொன்னா.... சுடுகாடு! ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 12)

"ஆம்பளை வேணுமா பொம்பளை வேணுமா?"

"ஏன் தனித்தனியா ரெண்டு இருக்கா?"

"ஆமாம். ஒன்னு உங்க ஹொட்டேலுக்கு எதிரில்! இன்னொன்னு இந்தப் பக்கம் கொஞ்ச தூரத்தில்"

"எது நல்லா இருக்கும்?"

"ஆம்பளைதான்"

"அப்ப ஆம்பளைகளையே பார்க்கலாம்"

Gகாயட்டோர் போறோம். ஹிந்தி வார்த்தை கயே கா தோர் (Gaye ka Thor') என்பதுதான் மரூவி இப்படி ஆகிப்போச்சு. போனவர்களின் ஓய்விடம் இது. அதாங்க சுருக்கமாச் சொன்னா..... சுடுகாடு.
வெளிவாசல்


ராஜவம்சத்தினருக்கு மட்டும்தான் இங்கே எண்ட்ட்ரி. அதாவது போன பிறகு!
இங்கே இந்த ஊருலே ஆம்பளைகளுக்குத் தனியா ஒன்னும் பெண்களுக்குத் தனியா ஒன்னுமா பிரிச்சு வச்சுட்டாங்க. மரணத்திலும் இணை பிரியாமல் இருப்போம் என்ற வாக்குகள் அம்பேல்!

மஹாராஜா மான்சிங் ம்யூஸியம் அறக்கட்டளை இதை இப்போ ஏற்றெடுத்துப் பாதுகாக்கிறது. செத்தாலும் குடை பிடிக்கணும் என்றதுபோல் ஒவ்வொருவருக்கும் மண்டபம் கட்டி மேலே குடை போன்ற அமைப்பு வச்சுருக்காங்க. மண்டபத்தின் கூரையே குடை மாதிரி. சத்ரின்னு இதுக்கு ஹிந்தியில் பெயர். (royal Tomb, Royal cenotaph)

கோட்டைச்சுவர்களும் மலைகளும் பின்புலனில் இருக்க இந்த லொகேஷன் சூப்பரா இருக்குதுங்க!
பெரிய மண்டபம்


ராஜாக்கள் போன 'பிறகு' அவுங்கவுங்களுக்கு உள்ள மரியாதை அந்தஸ்து இவைகளைக் கணக்கில் கொண்டு கட்டுவாங்க போல இருக்கு, சின்னதும் பெருசுமா அதுபாட்டுக்கு ஏராளமா இருக்கு அந்த பரந்து விரிந்த வளாகத்தில். ரொம்பக் குட்டியா இருப்பது சின்னப்பசங்களுக்குன்னு நானா நினைச்சுக்கிட்டேன்.
சின்ன சமாதிகள்


குடை அமைப்பு இல்லாமல் வெறும் மண்டபமா இருப்பது எல்லாம் ராஜ குடும்பத்து ஆண்களோடது. எல்லாருமா பட்டத்துக்கு வந்து ஆட்சி செய்வாங்க? எத்தனை இளவரசர்கள்..... கடைசிவரை இளவரசர்களாகவே இருந்து வாழ்க்கை முடிஞ்சுபோகுது! அடிச்சுப்பிடிச்சு எல்லாரும் முதல்குழந்தையாப் பொறக்க முடியுமா?
அது இருக்கட்டும். இறந்தவர்களை எங்கே வச்சு எரிப்பாங்கன்னா...... தனியா அதுக்குன்னு இடம் இல்லை. எங்கே எரிக்கிறாங்களோ அதன்மேலேயே மண்டபம் எழுப்பிருவாங்க'ன்னு பதில் கிடைச்சது.
அழகான சமாதி

மஹாராஜா ஸவாய் ஜெய்சிங் அவர்களின் சத்ரிதான் இருப்பதிலேயே பெஸ்ட். வெள்ளைப் பளிங்குலே ஜொலிக்குது. ஒவ்வொரு மண்டபத்துக்குள்ளும் அந்த குறிப்பிட்ட ராஜாவின் ஃபேவரிட் சமாச்சாரங்களைக் கலையழகோடு செதுக்கி வச்சுருக்காங்க. ஒரு ராஜாவின் 'மண்டபத்தில்' திராட்சைக் கொத்துகளும் இலைகளுமா இருந்துச்சு. ஒயின் பிரியரோ என்னவோ? ஒரு சத்ரியின் தரையில் ரெண்டு சிங்கங்கள் !ஆனால் எனக்கொரு ஐடியா கிடைச்சுருச்சு. வரிசைவரிசையா யானைகளும் பூனைகளும் இருக்கும் 'மண்டபம்' உங்க கண்ணில் பட்டால்............. அது நம்மதுன்னு புரிஞ்சுக்கமாட்டீங்களா? மறக்கமாட்டீங்கதானே?
ஒவ்வொன்னாப் பார்த்துக்கிட்டே உள்ளே நடந்தப்ப சத்யம் சிவம், சுந்தரம் என்று எழுதிவச்ச மூணு வாசல் கட்டிடத்தின் முன்னே ஒரு ஆலமரம். என்னன்னு கவனிச்சால் அந்தக் கட்டிடம் ஒரு கோவில். மூலவராக ஸ்ரீ காய்ட்டேஷ்வர்! இடுகாட்டுச்சாமிதான்.
ஒரு சில பெரிய மண்டபங்களில் வரிசைவரிசையா சின்னச்சின்னதாவும் கட்டி வச்சுருக்காங்க. மொகலாயர்கள் ஸ்டைலிலும் தில்லி லோதி கார்டனில் இப்படிக் குட்டிச்சமாதிகளை வரிசையாப் பார்த்தது நினைவுக்கு வந்துச்சு.
காய்டேஷ்வர் மதில் சுவருக்குப் பின்னால் போய்கிட்டே இருக்கு சமாதிகள்


கோட்டைகளிலும் அரண்மனைகளிலும் பார்த்த சனக்கூட்டம் இங்கே இல்லை. ஓய்வெடுப்பவர்கள் நிம்மதி குலையாமல் இருக்கட்டுமுன்னு பெரிய மனசு பண்ணிட்டாங்க போல! அதுக்காக ஆடாம இருக்க முடியுமான்னு குரங்கன்ஸ் ஜாலியா சமாதிகளில் விளையாடிக்கிட்டு இருந்தாங்க

ராஜகுடும்பம் சரி. சாதாரண ஜனங்களுக்குத் தனியா வேறே இடம் ஒதுக்கி இருக்கான்னதுக்கு ஊருக்கு வெளியில் ஒரு இடம் இருக்குன்னார் காஷிராம்.

கைடு காஷிராம்.

பார்த்து முடிச்சுட்டு ஹொட்டேலுக்கு வந்தோம். நம்ம ஹொட்டேலுக்கு எதிர்ப்புறம்தான் ராஜகுடும்பத்துப் பெண்களுக்கான காய்ட்டோர் இருக்கு. அப்புறமாப் பார்க்கலாமுன்னு கொஞ்சம் தள்ளிப்போட்டது பிசகாப் போயிருச்சு.
மறுநாள் காலையில் ஊரைவிட்டுக் கிளம்பும்போது பார்த்துட்டுப் போகலாம் என்ற மெத்தனம். காலையில் 9 மணிக்குப்போனால், பத்துமணிக்குத் தான் திறப்போமுன்னு காவல்காரர் சொல்லிட்டார். ஒருமணி நேரம் காக்க முடியாததால் வெளியே இருந்து க்ளிக்கினதோடு சரி. கவலைப்படாதே.... எப்படியும் நீ இங்கே வரத்தான் போறெ. அப்பப் பார்த்துக்கோன்னார் கோபால்.
இன்னிக்கு மீதம் இருக்கும் நேரத்தில் பதிவர் சந்திப்பு நடக்கப்போகுது. நம்ம அன்புடன் அருணாவிடம் ஒரு பூங்கொத்து வாங்கிக்கலாமேன்னு கொஞ்சநேரத்துலே கிளம்பினோம்.

தொடரும்...................:-)

16 comments:

said...

நம் மன்னர்கள் எழுதி வைத்துள்ள கல்வெட்டுக்கள் போல மொகலாயர்கள் தங்கள் வீரதீரத்தை எந்த மொழியில் எழுதி வைத்துள்ளார்கள்? அது போன்ற குறிப்புகள் இருக்கிறதா?

said...

ஒரு இடம் விடறதில்லை :) எப்பவுமே இந்த சுடுகாடு சாதரணமா போகும்போது ஒரு வித அமைதி இருக்குமே அது இந்த ராஜாக்களின் சுடுகாட்டிலும் இருக்கா இல்லை மற்ற டூரிஸ்ட் ஸ்பாட் மாதிரி ஆயிடுச்சா :)

said...

தலைப்பும் - படங்களும் - தகவல்களும் - பொருந்தி போகிறது. பதிவர் சந்திப்பு பற்றிய அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறோம்.

said...

//மறக்கமாட்டீங்கதானே?//

கண்டிப்பா மறக்கமாட்டோம் :))

said...

போட்டோல பார்த்தா சுடுகாடு கூட அழகுதான்.. சுவாரசியமான தகவல்கள்

said...

அமைதி நிலையம்.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியே.....

இங்கும் கணவன் மனைவிக்கிடையே சண்டைவராமல் நிம்மதியாக தூங்கட்டும் என நினைத்திருப்பார்கள் போலும் :))

said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!

said...

வாங்க ஜோதிஜி.

மொகலாயர்கள் என்றால் அநேகமா உருது மொழியிலோ இல்லை அரபிக் மொழியிலோ இருக்கலாம். (ரெண்டும் வெவ்வேறா இல்லை ஒன்னா? ) நமக்குத்தான் அதைப் படிக்கத்தெரியாதே!

ஆனா ஒன்னு இதுவரை பார்த்த கோட்டை கொத்தளங்களிலோ இல்லை கோவில்களிலோ இல்லை தெருவோரப்பூங்கா, பாலங்கள் இப்படி எதிலுமோ 'பெயர் பொறிச்சு' வச்சுக்கலை! என்ன ராஜாக்களோ???

என்னவோ போங்க!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இங்கே படு அமைதி! குரங்கன்ஸ் கூட ஓசை எழுப்பாமல்தான் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. சுற்றுலாப் பயணிகள் யாருமே இல்லை நாங்க போனபோது.

இரவு நேரங்களில் 'காவியமா நெஞ்சின் ஓவியமா' பாடத்தான் தங்கமணிகள் கூட்டு இல்லை!

said...

வாங்க சித்ரா.

பதிவர் சந்திப்பு பற்றிச் சுடச்சுட அருணா எழுதிட்டாங்க. நானும் கொஞ்சூண்டு எழுதி இன்னிக்கு வெளியிட்டேன்ப்பா.

said...

வாங்க சுசி.

'பாலை' வார்த்தீங்க:-)))))

said...

வாங்க ரிஷபன்.

படு சுத்தமா வேற இருக்கு அந்த இடம்.

மனுஷன் இருந்தால் குப்பை. போனால் புனிதம்!

வருகைக்கு நன்றி

said...

வாங்க மாதேவி.

ஆஹா..... முக்கிய பாய்ண்ட் இதுதான் போல:-)))))

said...

வாங்க ஷர்புதீன்.

அட! இது நல்லா இருக்கே?

அரைக்கிணறு தாண்டி இருக்கேனா?

டீச்சருக்கு பாஸ் மார்க்(!! ?) தானே?

said...

தகவல்கள் நகைச்சுவையாக அருமையாக விளக்கமாக உள்ளன. பரிசுத்தமான பதிவு தான். நானே அந்த சுடுகாட்டுக்குத் தனியாக போய், ஆனால் தப்பிப்பிழைத்து திரும்பி வந்ததுபோல இருக்கு.

பாராட்டுக்கள். உங்கள் வலைப்பூவுக்கு பின் தொடர்பவராக வர ஆசை. அதற்கு Provisions எங்கே உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையே! Followers படங்களையே காணோமே!
தயவுசெய்து விளக்கவும்.

அன்புடன் vgk

said...

வாங்க விஜிகே.

தொடரும் சுட்டிக்கான உரலை இணைத்துக் கொள்ளவில்லை.

கூகுள் ரீடரில் நீங்கள் விரும்பினால் இணைத்துக் கொள்ள முடியும்.