Monday, May 02, 2011

ராஜா வீட்டுக் கூஜா (ராஜஸ்தான் பயணத்தொடர் 7)

அரண்மனை வளாகத்துக்குள்ளே போக மூணு நுழைவு வாசல்கள் வெவ்வேற பெயர்களோடு வெவ்வேற பக்கங்களில் இருக்கு. மூணடுக்கு வாசல் (Tripolia Gate ) வழியாப்போக ஆசைதான். ஆனால் நாம் அந்த ராஜகுடும்பத்துலே பிறக்கலையே.....
வீரேந்திரா வாசல் (வீரேந்திரா போல், கணேஷ் போல், மோர் போல் இப்படி எல்லா கேட்டுகளுக்கும் போல் (POL )என்ற பெயர் வாலா இருக்கு)வழியாப் போனோம். உள்ளே போய்ச் சுத்திப்பார்க்க ஒரு கட்டணம் வசூலிக்கிறாங்க. மஹாராஜா ஸவாய் மான்சிங்( இரண்டாமவர்) ம்யூஸியம் இதுக்குள்ளே இருக்கு. வாசலுக்கு நேரா ஒரு அழகான கட்டிடம். முபாரக் மஹல். சரியான பெயர்! வாழ்த்தி வரவேற்கும் மாளிகை.
கீழ்தளம் ராஜபுதனக் கட்டிடக்கலை. மேல்தளம் மொகலாயர்களின் கட்டிடக்கலைன்னு ரெண்டு வேலைப்பாடுகளும் சேர்ந்து அட்டகாசமா இருக்கு. உள்ளே டெக்ஸ்டைல் காலரின்னு ராஜ குடும்பத்து பாரம்பரிய உடைகளைக் கண்ணாடிச்சட்டங்களில் பாதுகாப்பாக வச்சு நமக்குக் காட்சிப்பொருளா ஆக்கி இருக்காங்க. கல்யாணம், பட்டம் கூட்டுதல், இளவரசிகளும் இளவரசன்களும் பிறந்த போது விசேஷமா உருவாக்கிய உடுப்புகள்னு ஏராளம். ஏகப்பட்ட அரசர்கள் ஆண்ட ராஜ்யமில்லையோ!!
காஷ்மீரத்துலே நெசவு செஞ்ச பாஷ்மீனா கம்பள உடுப்புகளும் அதுலே செஞ்சுருக்கும் கைவேலைப்பாடுகளும் பூத்தையல்களும் அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது. ஒவ்வொரு உடுப்புக்கும் மீட்டர்கணக்குலே துணி பயன்படுத்தி இருப்பாங்க போல. அப்படி சின்னச்சின்ன ப்ளீட்ஸ் வச்சு நாசுக்காத் தைச்சுருக்காங்க. பார்த்துக்கிட்டே வரும்போது மஹாராஜா ஸவாய் மாதோசிங் அவர்களின் உடைகளைப் பார்த்ததும்...........பிரமிப்பாப் போச்சு. ராஜா ரொம்ப செழிப்பானவர். ரெண்டு மீட்டருக்கு மேல் உசரம். மார்பளவு 1.3 மீட்டர். எடை வெறும் 225 கிலோ. இவருக்கு அஞ்சு மனைவிகள். 18 துணைவிகள். (இவர் 'பரம்பரை' ராசா. அதனால் பரவாயில்லை! ) ஆனால் என்ன துயரம் பாருங்க...... புத்திர பாக்கியம் இல்லை. அப்புறம் அவர் தன் நெருங்கிய உறவினரின் ஆண்குழந்தையை தத்து எடுத்துக்கிட்டார். அவர்தான் பின்னாளில் ஸவாய் மான்சிங் (இரண்டாமவர்) என்ற பெயரில் பட்டத்துக்கு வந்தார்.

என் துயரமெல்லாம், இங்கே படம் எடுக்க அனுமதி இல்லையே:(

இந்த ஸவாய் என்ற பட்டம் முதன்முதலா கிடைச்சது மஹாராஜா ஜெய்சிங் (ரெண்டாமவர்) அவர்களுக்குத்தான், ஆமெர் ராஜ்ஜியத்தை ஆண்டவர். பின்னாளில் ஜெய்ப்பூர் நகரை நிர்மாணித்தவர். இவர் பட்டத்துக்கு வந்தப்ப இவர் வயசு வெறும் பதினொன்னு. ஆனால் வீரத்தைல் யாருக்கும் சளைச்சவரில்லை. துருதுருன்னு இருந்தவரைப் பார்த்துட்டு மொகலாயப்பேரரசர் முஹம்மது ஷா எல்லா ராஜாக்களும் ஒன்னுபோல இல்லை. அவுங்களையெல்லாம் விட இவர் கால் பங்கு கூடுதல்(அப்போ ராஜபுதனத்தில் ஏகப்பட்ட சமஸ்தானங்கள், அததுக்கு சிற்றரசர்களா நிறைய ராஜாக்கள்) என்று ஸவாய்ன்னு புகழாரம் சூட்டினாராம். ( அவன் எல்லாத்துக்கும் மேலே ஒரு பிடி ஜாஸ்தி!)ஹிந்தியில் ஸவான்னா ஒன்னேகால். அதுமுதல் மஹாராஜா ஜெய்சிங் பரம்பரையில் வந்தவங்களுக்கெல்லாம் இந்த ஸவாய் கூடவே வந்துக்கிட்டு இருக்கு!


ரெண்டு நாளைக்கு முன்னே காலையில் பக்தியா இருக்கலாமுன்னு காஃபி குடிச்சுக்கிட்டே விஜய் டிவி ஆன் செஞ்சா ஆன்மீகச் சொற்பொழிவு நடந்துக்கிட்டு இருக்கு. அதுலே சொல்லிக்கிட்டு இருக்காங்க...... "கணவன் மனைவி குழந்தைன்னு இருந்தால்தான் குடும்பம். குழந்தை இல்லாதவங்க என்னதான் தானதருமங்கள் செஞ்சு நல்வாழ்வு வாழ்ந்தாலும் நரகத்துக்குத்தான் போவாங்க. சொர்க்கம் அவுங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது" அடப்பாவிகளான்னு இருந்துச்சு எனக்கு. இத்தனைக்கும் சொற்பொழிவாளர் ஒரு பெண். அப்போ..... சாமியார்களுக்கும் சந்நியாசிகளுக்கும் நரகம்தானா? என்னவோ போங்க..... இப்படியெல்லாம் பேச இவுங்களுக்கு எப்படி மனசு வருது குழந்தையின்மை என்பது அவ்ளோ பாவமா? இப்ப அங்கங்கே நடக்கும் சேதிகளைக் கேட்டாலும் தினசரிகளைப் பார்த்தாலும் குழந்தையில்லாதவங்க எப்பேர்ப்பட்ட புண்ணியசாலிகள்னு வியக்கத்தான் தோணுது. ஆன்மீகமுன்னா இதுவா...... என்னவோ போங்க:(
இந்த வளாகத்துலே முபாரக் மஹலுக்கு சுத்திவர ஏகப்பட்ட கட்டிடங்கள். எல்லாம் அப்போ அரசாங்க அலுவலுகளுக்காக இருந்துருக்கும். 36 கர்கானா ( Karkhana) ன்னு 36 வொர்க்ஷாப் வச்சு ஆயுதம் நகை நட்டு பண்டபாத்திரமுன்னு உருவாக்கும் வேலைகள் நடந்துருக்கு. இதுலே பதினோரு தொழிற்கூடங்கள் இன்னும் இயங்குது. விருப்பம் இருந்தால் அங்கேயும் போய்ப் பார்க்கலாம். நாம் போகலை. இன்னுமொரு பெரிய 'கேட் வாசலை'க் கடந்து அடுத்த பகுதிக்குப் போகணும். இது 'ராஜேந்த்ரா போல்'! வாசலுன்னு சொன்னாலும் சின்னதெல்லாம் இல்லை . ஒவ்வொன்னும் ரெண்டு யானை உசரத்துக்கு இருக்கு! அதுக்குண்டான கதவுகள்.....அப்பப்பா....... அரண்மனை பூராவும் விதவிதமான கதவுகள்! ரெண்டு மாசத்துக்கு முன்னே வந்துருந்தால்.....நம்ம PIT புகைப்படப்போட்டி 'கதவு'களுக்கு ஜமாய்ச்சு இருக்கமாட்டேனா!!!!


வாசலுக்கு ரெண்டு பக்கமும் பளிங்கு யானைகள், அவைகளின் கழுத்தில் மாவுத்தன்கள், அம்பாரிகள் என்று நமக்கு ஏகவரவேற்பு!!! சூரியவம்சத்து ராஜாக்கள் என்பதால்....யானைகளின் முகத்தில் ஜொலிக்கும் சூரியன்கள்!!! பகடித் தலைக் காவலர்கள்!! இருக்கட்டும் இருக்கட்டுமுன்னு சந்தோஷமாக் கதவைக் கடந்தால்.........பென்னம்பெரிய முற்றம். அரண்மனை முழுசும் ஏகப்பட்ட முற்றங்கள். இந்த முற்றங்களுக்குக்கூட தனித்தனி பெயர்கள் உண்டு. ப்ரீதம் நிவாஸ் சௌக், ஸர்வதோ பத்ரா சௌக்ன்னு ............ரொம்பப் பெருசுக்கு சௌக். சௌக்ன்னா அது நாம் சொல்வோமே சதுக்கம்.அதுதான். (நல்லதுதான். இல்லேன்னா......'அரண்மனை முற்றத்துக்கு வந்துடறேன்'னு கோபால் சொன்னா....எந்த முற்றமுன்னு தேடுவேன்? )இந்த ஸர்வதோ பத்ரா சௌக்லே நட்டநடுவா ஒரு மண்டபம். ஏகப்பட்ட வளைவு நெளிவுகளுடன் அலங்காரத்தூண்கள். மண்டபத்தைச்சுற்றி வர நீண்டுபோகும் மாடமாளிகைகள். அரசகுடும்பத்தினர் வசிக்கும் விசேஷ மாளிகைகள். தற்போதிய அரசர் ஊருலே இருக்கார் என்ற சேதியைச் சொல்லிப் படபடத்துப் பறக்கும் அஞ்சுநிறக் கொடி! சட்னு பார்த்தப்ப தேசியக்கொடின்னு நினைச்சுக்கிட்டேன். உத்துப் பார்த்தால் தேசியக்கொடி நிறங்கள் நடுவில் இருக்க (மைனஸ் அசோக சக்கரம்)அதுக்கு மேலேயும் கீழேயுமா சிகப்பும் நீலமும் இணைஞ்சுருக்கு ராஜா ஊரில் இல்லைன்னா மஹாராணியின் கொடி பறக்குமாம் அ(த்)து:-))))
சரி நடுமண்டபத்துக்குள்ளே போலாம் வாங்க. இந்த மண்டபம்தான் திவானி காஸ் Diwan-i-Khas என்று சொல்லப்படும். வேண்டப்பட்ட முக்கியமானவர்களை மகாராஜா சந்திக்கும் இடம். நம்ம பார்வைக்குத் தப்ப முடியாமல் ரெண்டு பக்கத்திலும் ரெண்டு கூஜாக்கள். இது ராஜாவின் கப்பல் கூஜா.

அந்தக் காலத்தில் ரயில் பயணங்களில் கூஜாவில் தண்ணீர் ரொப்பி எடுத்துப் போவோம். அதனால் இதுக்கு ரயில் கூஜான்னே பெயர். தண்ணீர் தீர்ந்துட்டா. அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கி ப்ளாட்ஃபாரத்தில் இருக்கும் குழாயில் இருந்து தண்ணீர் பிடிச்சுக்குவோம். தண்ணீருக்குத் தட்டுப்பாடு இல்லாமல், அதே சமயம் சுத்தமான குடிநீராக இருந்ததெல்லாம் மலை ஏறிப்போச்சு. இப்போ தைரியமா ஒரு வாய்த் தண்ணீர் குழாயில் இருந்து பிடிச்சுக் குடிச்சுடமுடியுமா? எங்கே போனாலும் தண்ணீரைக் காசு கொடுத்துல்லே வாங்கிக் கக்கத்தில் வச்சுக்கிட்டு நடக்க வேண்டி இருக்கு:(

எனக்கு கூஜான்னா கொள்ளை ஆசை. யாரையும் தூக்க விடமாட்டேன். நானேதான் கையில் தூக்கி வருவேன். என்ன ஒன்னு..... என்னை எங்க பெரியக்கா தூக்கிக்கணும். பாவம் அக்கா. எருமைமாடா இருந்துக்கிட்டு அக்காவை எப்படி வதைச்சிருக்கேன்னு நினைச்சா..... கொடியவள் இந்த துளசி! என்னையே நான் மன்னிக்க மாட்டேன்.


இங்கிலாந்து அரசர் ஏழாம் எட்வர்டுக்கு முடிசூட்டுவிழா. அழைப்பு வந்துருச்சு. மாட்சிமை தாங்கிய மஹாராணி விக்டோரியா அவர்களின் அழைப்பைத் தூக்கிக் கடாசிட முடியாது. ஆனால் அந்தக் காலத்துலே கடல் கடந்து போனால் தீட்டு, மஹாபாவம் இப்படி மதம் சார்ந்த கட்டுப்பாடுகள் ஒரு பக்கம் ஸவாய் மாதோசிங் மஹாராவைப் போகவிடாமல் தடுக்குது. ராஜாவோ சமயக் கட்டுப்பாடுகளை மீறாத இறைநம்பிக்கையுள்ளவர். என்ன செய்யலாமுன்னு 'யோசிச்சார். அரண்மனையின் ஆஸ்தான ஜோதிடர்கள், ஆச்சாரியர்கள் எல்லாம் கூடி விவாதிச்சு இருக்கலாம். எல்லாப் பாவங்களையும் போக்கும் கங்கை எதுக்கு இருக்காம், இப்படிப்பட்ட தர்மசங்கட சிச்சுவேஷனில் உதவாம? கூப்புட்டாகன்னு கிளம்புன மஹாராஜா.... போய் வர்றவரைக்கும் தண்ணியில்லாமத் தவிக்க வேணாமுன்னு 'ரெண்டே ரெண்டு' கூஜா நிறைய கங்கையை ரொப்பிக்கிட்டுக் கப்பலில் கிளம்பினார்.

இந்த கூஜா செய்யறதுக்காக கஜானாவிலே இருந்து இருபத்தி எட்டாயிரம் வெள்ளிக்காசுகள் எடுத்து அதை உருக்கித் தகடா அடிச்சு அதை அப்படியே வளைச்சு செஞ்சுட்டாங்க. குடத்துக்கு இருப்பதுபோல் தனித்தனியாச் செஞ்சு பத்தவச்சு அடிப்பதுபோல் இல்லாம பத்தவைக்கும் வேலையே இல்லாம முழுசாச் செஞ்சு முடிச்சவங்க வெள்ளிவேலை செய்யும் கோவிந்த்ராம், மாதவ் என்ற ரெண்டு நிபுணர்கள். இதுக்கே ரெண்டு வருசமாச்சு. எஸ்.எஸ். ஒலிம்பியா என்னும் கப்பலுக்குள் ஒரு கிருஷ்ணன் கோவிலை அமைச்சாங்க. கங்கை கூடவே வர்றாள். இதெல்லாம் நடந்தது 1902 வது ஆண்டு.

இந்த கூஜாக்கள்தான் இப்போ உலகிலேயே உள்ள வெள்ளிச்சாமான்களில் பெருசுன்ற இடத்தை கின்னஸ் புக்கிலே பிடிச்சுவச்சுருக்கு. இந்த கூஜா ஒவ்வொன்னும் 345 கிலோ எடை. சுற்றளவு 14 அடி 10 அங்குலம். இதன் உசரம் 5 அடி 3 அங்குலம். கொள்ளளவு 900 கேலன் ( 4091 லிட்டர்)

இதுலே தண்ணி ரொப்பவும், எடுக்கவும் தனி ஏணி. நகர்த்திக்கிட்டுபோக சக்கரம் வச்ச வட்டமான அடிப்பீடம். நாலுபக்கமும் எக்ஸ்ட்ரா கைப்பிடிகள் இப்படி பார்க்கவே அமர்க்களமா இருக்கு!
பாரம்பரிய உடை நெத்தியில் இருப்பது.....சூடாமணியா?


இந்த திவானி காஸ் மண்டபத்துக்குள்ளே நாம் நுழைஞ்சப்ப ராஜபுதனப் பாரம்பரிய அலங்காரத்தில் ஒருவரும் அவருக்கு கைகளில் மெஹந்தி (மருதாணி) போட்டுக்கிட்டு இருக்கும் இன்னொருவரும், அங்கிருத நாற்காலியொன்றில் சும்மா உக்கார்ந்துக்கிட்டு இருந்த ஒருவருமா மூணு பெண்மணிகள் நம்ம 'வரவேற்றாங்க':-) மருதாணி போட்டுக்கோன்னு உபசாரம் வேற ! பரவாயில்லை. இருக்கட்டுமுன்னு கௌரவமாச் சொன்னேன். ரெண்டு கையிலும் பூசிக்கிட்டா அப்புறம் கேமெரா பிடிப்பது எப்படி?

ஒரு பலகையில் சாமி வச்சு முன்னால் பூஜைத்தட்டு வச்சுருக்காங்க. உக்கார், பூஜை பண்ணலாமுன்னு ஆரம்பிச்சாங்க...... இதுவும் ஒரு வகையான.....ப்ச்..... போகட்டும். கொஞ்சம் தட்சணை போட்டுட்டுக் குங்குமப் பிரசாதம் வாங்கிக்கிட்டேன்.
கூஜாவை நல்லாப் பார்த்துக்கிட்டே இருங்க. பாக்கியை அடுத்த இடுகையில் பார்க்கலாம். கூஜா போரடிச்சால் ராஜாவின் துப்பாக்கிகளைப் பாருங்க. இதுவும் இந்த மண்டபத்துலேதான் இருக்கு:-)


தொடரும்........................:-)

14 comments:

said...

நல்ல கட்டுரை. மீண்டும் சென்று வந்த அனுபவம். அந்த ராஜா படம் உள்ளே இருந்ததை நான் புகைப்படம் எடுத்ததாக நினைவு. இருந்தால் அனுப்புகிறேன்....

said...

பிரமிக்க வைக்குது கட்டுரை..

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கிடைச்சால் கட்டாயம் அனுப்புங்க ப்ளீஸ்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அப்டீங்கறீங்க? தேறிட்டேனா?????

said...

ராஜா வீட்டூக் கூஜாவை நாங்களும் போட்டோ எடுத்து வந்தோம். நாம் அவ்வளவு பெரிய கூஜாவில் மன்னர் மாதிரி கங்கை தண்ணீர் எடுத்து செல்ல முடியாது.

வெள்ளி கூஜா அந்த காலத்தில் திருமணத்திற்கு சீர் கொடுப்பார்கள்.


பழைய கால கதைகளில் வரும் ரயில் பயண படங்களில் கூஜாவும், ஹோல்டாலும் கண்டிப்பாய் இடம் பெறும்.

said...

வாங்க கோமதி அரசு.

உண்மைதான். கையில் தூக்கிவர முடியாமல் ஃபோட்டோ மட்டும்தான் எடுக்க முடியுது:-)

ரயில்கூஜா ரெண்டு ஷேப்லே இருப்பதைக் கவனிச்சீங்களா? ஒன்னு குண்டு ஒன்னு முந்திரி!

குண்டு ஒன்னு ( என்னத் தவிர்த்து! )நம்ம நியூஸி வீட்டில் காட்சிப்பொருளா இருக்கு. கூடவே ஒரு அஞ்சடுக்கு டிஃபன் கேரியருடன்:-))))

said...

எவ்வளவு பெரிய கூஜா!
படிக்கப் படிக்கப் பிரமிப்பு அகலவே மாட்டேன் என்கிறது.

தண்ணிருக்கு வந்த சீர்கேடு ,இந்தக் கூஜா நாட்களை நினைவுகொண்டு வருகிறது$

அற்புதமான விவரங்கள். மகா பொறுமை உங்களுக்கு.

said...

வாங்க வல்லி.

எனக்கும் பிரமிப்புதான். ஒருவேளை அந்த கூஜாவை எனக்குக் கொடுத்தால் எப்படித் தூக்குவது என்று:-)))))

said...

நோத்துக்கு வராததால் கூஜாவை தூக்க முடியவில்லை மற்றவர்கள் தூக்கிவிட்டார்கள்.:)

"வெறும் 225 கிலோ".சிரித்துவிட்டேன்.

said...

வாங்க மாதேவி.

பரவாயில்லைப்பா. நமக்குன்னு ஒரு 'கூஜா' கிடைக்காமலா போகும்!!!!!

said...

கொடுத்து வச்ச (?) மகாராஜாக்கள்?
எவ்ளாம் பெரிய கூஜாக்கள்னுதான் தோணுது! வெங்கட் இடத்துல நான் கேட்ட கேள்வியோட அபத்தம் புரியுது!! :))

கூஜா இல்லை அது..! வெள்ளிக் குதிர்!

said...

இதுல தண்ணி அடைச்சு என்ன பண்றாங்க?
ராஜஸ்தான் பயணம் பத்தி இவ்வளவு விரிவா எழுதியிருக்கீங்களே?!

said...

வாங்க ஸ்ரீராம்.

//வெள்ளிக்குதிர்//

ஆஹா.... அப்டிப்போடுங்க!!!! மிகச்சரியான சொற்கள்!

ரசித்தேன்.

எனக்குத் தோணலை பாருங்க...

said...

வாங்க அப்பாதுரை.

ராசா கையோடு தண்ணீர் கொண்டு போக செஞ்ச கூஜா. இப்ப இது ச்சும்மா ஓய்வா கண்ணாடிப் பொட்டிக்குள்ளே காட்சி கொடுக்குது.

ராஜஸ்தான் பற்றி வெறும் 41 பதிவுகள்தான். அதுலே ஒரு பதிவர் சந்திப்பும் அடங்கும்:-)