Thursday, May 26, 2011

தீர்த்தங்களின் ராசா ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 16)

ஒரு பதினாறு கிலோ மீட்டர் மலைப்பாதையில் வந்து அடுத்த பக்கம் இறங்கினால் புஷ்கர் வந்துருது. அரைமணி நேரப் பயணம்தான். ஊருக்குள் நுழையும்போதே அலங்கார தோரண வாசலுக்கப்பால் ஆஞ்சநேயர் கோவில் ஒன்னு க்ளாக் டவர் போல ஒற்றைக் கோபுரத்துடன் அஞ்சடுக்கு மாடங்களாக! அதைக் கடந்து போனால். அழுக்குத்தண்ணீர் தேங்கின சாலையில் வழிமறிச்ச காவலர் வண்டி இதுக்கு மேலே போகக்கூடாது. இங்கேயே பார்க் பண்ணிக்கணுமுன்றார். 'யக்' இல்லை நாங்கள் ஹொட்டேலுக்கு போகணும் புக்கிங் இருக்குன்னதும் (தொலைஞ்சு போ) தலையை ஆட்டி வழி விட்டார்.
நறநறன்னு மண்ணு .... சின்னத்தெருவுக்குள் நுழையும்போது ரங்ஜி மந்திர்ன்னு சின்னதா ஒரு போர்டு. அதைத்தாண்டி இடப்பக்கம் திரும்பணுமுன்னு ஹொட்டேல்காரர்களின் தகவல் பலகை சொல்லுது. கடந்து போய் மாளிகை முகப்பில் வண்டியை நிறுத்தினோம். அட! உண்மைதாங்க., இது அரசகுடும்பத்தினருக்கான மாளிகையேதான். இப்போ ஹொட்டேலா மாத்தி இருக்காங்க.
முண்டாசு கட்டிய காவல்காரரைக் கடந்து சின்ன வரவேற்பு. முற்றம் நிறைய தளதளன்னு வாழைமரங்கள்! அறை ஒதுக்கியபோது (என்)வழக்கப்படி வ்யூ உண்டான்னு கேட்டேன். இருக்குன்னார் வரவேற்பாளர். ரெண்டாவது மாடி. லிஃப்ட் கிடையாது. மொத்தமே மூணு மாடிகள் உள்ள கட்டிடம்தான். படிகளேறி வெராந்தாவில் கால் வச்சதும் அனுமனின் வம்சாவளியினரில் ஒரு அம்மா குழந்தையோடு காட்சி கொடுத்தாங்க. பேஷ் பேஷ்ன்னு ரசிச்சுக் கண்ணைத் திருப்பினால்................ ஹைய்யோ!!!!!
மட்ட மத்தியான வெயிலில் உருக்கிவிட்ட வெள்ளிபோல தகதகன்னு ஜொலிக்கும் தண்ணீர். ப்ரமாண்டமான குளம். குளமா அது? கடலுன்னு சொல்லலாம். நேர் எதிர்க்கரையில் கூட்டமான கோவில்கள்! ஒரு கணம் மூச்சடைஞ்சு நின்னது நிஜம்!
சும்மாச் சொல்லக்கூடாது...... அரச மாளிகைன்னா அரச மாளிகைதான். எல்லா அறைகளுமே குளத்தைப் பார்த்தபடியே கட்டிவிட்டுருக்காங்க. நீள வெராந்தா. நெடுக அலங்காரத்தூண்களும் வளைவுகளுமா இருக்கும் கட்டைச்சுவர், ஒவ்வொரு அறைக்கு வெளியிலும் உக்கார்ந்து காட்சி பார்த்து ரசிக்க ஆசனங்கள். சுவர்களில் சின்ன மாடங்கள். . நிலைக்கண்ணாடிகள். அரசர் காலத்துப் புகைப்படங்கள். கண்ணனின் லீலா விநோத ஓவியங்கள் இப்படி. அப்பழுக்கு இல்லாத மின்னும் தரை!
அறைக்குள்ளே 'அந்தக் காலத்து' மரச்சாமான்கள். கட்டில், மர பீரோ, ரைட்டிங் டெஸ்க், நாற்காலிகள், ட்ரெஸ்ஸிங் டேபிள், ஓவியங்கள், தொங்கும் சரவிளக்குகள் எல்லாம் நம்மை அப்படியே சொக்க வைக்குது. கதவுகளுக்கான நிலை வாசலைச் சுத்தி பார்டர் போட்டதுபோல் கோலம்! சிம்பிள் அண்ட் ஸ்வீட்! குளியலறைக்குள் நுழையவும் அலங்கார வளைவு!!
உள்ப்புற முற்றத்தில் நெடுகத் தென்னைகள். மரத்தைச் சுற்றிப் படர்ந்து நிற்கும் மணி ப்ளாண்ட் கொடிகள். அழகான புல்தரை. அதன் நடுவில் ஒரு செயற்கை நீரூற்று. புல்தரைக்கு மறு கரையில் டைனிங் ஹால் என்று அருமையான இடமா இருக்கு! (அப்பவே க்ரீடம் ஒன்னு வாங்கியாந்துருந்தா ஒரு நாள், ஒரே ஒரு நாளாவது ராஜவாழ்க்கையை வாழ்ந்துருக்கலாம்)

நம்ம அறையில் கீதை உபதேசிக்கும்போது அர்ஜுனனுக்குக் காட்டிய விஸ்வரூபம். பழங்காலச்சித்திரம். அட்டகாசம் போங்க! தொலைபேசியை எடுத்து, 'யாரங்கே? ஒரு காஷ்மீரி புலாவ் கொண்டுவா(ங்க)'
ஸில்வர் சர்வீஸ்! அன்னாசி, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு இப்படிப் பழங்கள் சேர்த்து சமைச்ச புலாவ் வந்துச்சு! தலைப்பாகை அணிஞ்ச பணியாட்கள் தேவைக்கும் அதிகமான பணிவுடன் பரிமாறினாங்க. சாப்பாடு ஆனதும் கொஞ்சநேர ஓய்வுக்குப்பிறகு சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம்.
இந்த பேலஸில் கார் ஓட்டுனர்களுக்குத் தங்க இடம் ஏதும் ஒதுக்கலை. கொஞ்ச தூரத்தில் ஒரு பத்து நிமிச ட்ரைவில் இவுங்களோட இன்னொரு கேம்ப் ஹொட்டேல் இருக்கு. அங்கு ட்ரைவர்களுக்கு அறைகள் ஏற்பாடாகி இருக்குன்னதும் ப்ரதீப்பைப் போய் சாப்பிட்டு ஓய்வெடுக்கச் சொல்லி இருந்தோம்.

கோவில் எவ்வளோ தூரமுன்னு வரவேற்பில் கேட்டால் ரொம்பப் பக்கம்தான். பக்கத்துத் தெருவழியா நடந்தே போகலாமுன்னு சொன்னாங்க. சரின்னு வெளியே கால் வச்சால் நம்ம வண்டி அங்கே நிக்குது. ப்ரதீப் நல்ல தூக்கம். எழுப்ப வேணாமுன்னு நடந்தே போனோம். சின்ன ஏத்தமா இருக்கும் தெரு. ரெண்டு பக்கமும் ஜே ஜேன்னு கடைகள். அடிக்கும் மொட்டைவெயிலில் இருந்து நம்மைக் காப்பாத்த கடைகளின் முன்னால் துணிப் பந்தல்கள் போட்டுருந்தாலும் வெய்யிலும் சூடும் நம்மை விடுவதா இல்லை.
வெய்யிலில் நடப்பதோ என்னமோ ஒரு மாதிரி மயக்கமாவும் வயித்தைப் பிரட்டுவது போலவும் இருக்கு. சமாளிச்சுக்கிட்டு மெல்ல நடந்தேன்.
வயித்தைக் குளிர்விக்கக் குடும்பங்கள் கூட்டமா மோடாவில் உக்கார்ந்து மண் கோப்பையில் லஸ்ஸி குடிக்கிறாங்க. நமக்கு எதையும் வெளியில் கண்ட இடத்தில் சாப்பிட பயம். பந்தா காமிக்கலை. வயித்துக்கு அசுகம் வந்தால் பயணம் கெட்டுருமே:(
இனிப்பு விற்கும் கடைகளும் நிறைய இருக்கு. கரண்டியில் ஏதோ ஒரு மாவை மொண்டுக் கொதிக்கும் எண்ணெயில் ஊத்துனதும் அது பரவி பூரி சைஸில் ஆகுது. அதைக் கோரி எடுத்து சீனிப்பாகில் போட்டு ஊற வைக்குறாங்க. புதுமாதிரி இனிப்பா இருக்கேன்னு ஆசையா இருந்தாலும் வாய்க்குத் தடா போட்டேன்.
வெள்ளைக்காரர் நடமாட்டம் எக்கச்சக்கம். பல கடைகள் அவுங்க தேவைக்கு ஏத்தாப்போலவே வெள்ளி மோதிரம், ப்ரேஸ்லெட், ஸ்கார்ஃப் துணிமணிகள் இப்படி. வெள்ளையர் ஒருத்தர் வாழைப்பழங்கள் வாங்கி ஒன்னைத் தின்னுட்டுத் தோலை அங்கே திரிஞ்சுக்கிட்டு இருந்த மாட்டுக்குக் கொடுத்தார். அறிவு பூர்வமா சிந்திச்ச மாடு..... தோலை வாங்கிக்காமல் அடுத்த கையில் இருந்த வாழைப்பழம் தான் வேணுமுன்னுச்சு:-)
நம்ம மயிலை கபாலி குளத்தின் கரை ஓரமாவே தண்ணீரைப் பார்த்துக்கிட்டே கோவிலுக்குப் போவது போல இங்கேயும் குளக்கரை ஓரமாவே போகலாமுன்னு நினைச்சிருந்தேன். ஆனால்..... இந்தக் கடைத்தெரு குளத்தைச் சுத்தமா மறைச்சுருது. கடைகளுக்கு நடுவில் அங்கங்கே வரஹா காட், ஹோல்கர் காட், நர்சிங் காட், பத்ரி காட் இப்படி படித்துறைகள் குளத்துக்கு இறங்குது. படிகளில் இறங்கிப்போனால் சின்னதா சந்நிதிகளுடன் கோவில்கள்.
ரொம்ப முக்கியமானதாக இருக்கும் கஹூ (பசு)காட் அனுமன் கோவில் இது. ஆதரவில்லாத(?) பசுக்களின் நலன் வேண்டி அனிமல் சொஸைட்டி ஒன்னு இயங்குது. கோ மாதாவைப் புறக்கணிக்கலாமா?
இந்தக் குளத்தைச் சுத்தி மொத்தம் அம்பத்திரெண்டு படித்துறைகளும் ஐநூறு கோவில்களுமா இருக்கு. இங்கேயும் நிறைய கோவில்களை முகலாயமன்னர் ஔரங்கஸேப் அழிச்சுட்டார். தப்பிப்பிழைச்ச கோவில்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட கோவில்களுமா உள்ளவைகள்தான் இப்போது அங்கே! கார்த்திகை மாசப் பவுர்ணமியில் இந்தக் குளத்தில் முங்கி எழுந்தால் செஞ்ச பாவங்கள் எல்லாம் விலகி, 'போகும் நேரம் வந்து போனால்' நேரா சொர்க்கவாசம் கிட்டு(மா)ம். பெரிய குளத்தில் ஓரத்தில் அங்கங்கே சின்னதாத் தடுப்புகள் கட்டி சதுரமான தனித்தனிக் குளங்களாவும் செஞ்சு வச்சுருக்காங்க. குளத்தைப் பார்க்கும்படி பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைய இருக்கு. எல்லாமே ராஜகுடும்பத்தினரும் செல்வந்தர்களும் கட்டிவிட்டவைகளாம்.
அநேகமா ஒரு கிலோ மீட்டர் நடந்துருப்போம். இன்னும் கோவில் வரலையேன்னு விசாரிச்சால் இதோ ரொம்பப் பக்கம்தான். நேராப்போய் இடப்பக்கம் திரும்புங்கன்னாங்க. திரும்பினோம். நிறைய படிகளுடன் இருக்கு கோவில். படியில் பக்கவாட்டில் நாலைஞ்சு நாற்காலிகளில் காவல்துறையினர் உக்காந்து கதை பேசிக்கிட்டு இருக்காங்க. இந்தப் பக்கம் ஒரு எலக்ட்ரானிக் கேட். கைப்பை உள்ளே கொண்டு போகக்கூடாதுன்னு என்னிடம் காவலர் சொன்னார். அட ராமா........... ஒரு அறிவிப்பு போட்டுருக்கலாமேன்னால்.... தோ இருக்கேன்னு ஒரு போர்டைக் காமிக்கிறார். அதன்மேல் கண்டதையும் மாட்டி வச்சுருக்காங்க. எல்லாத்தையும் எடுத்துட்டுப் பார்த்தால் ஹிந்தியில் 'கூடாதுகள்' இருக்கு.


கூடாதுகள்

இப்பக் கையில் இருப்பதை என்ன செய்வது? கெமெராவுக்கும் செல்பேசிக்கும் தடாவாமே! நானிருக்க பயமேன்னு படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்துக்கு இடதுபுறம் சின்னதா இருந்த அறையை செருப்பு விடும் இடத்துலே இருந்த பையர் காமிச்சார். லாக்கர் ரூம்! ஒரு பத்து லாக்கர்கள். சாவி அதுலேயே மாட்டி இருக்கு. உள்ளே வச்சுப் பூட்டிட்டு சாவியை நாம் எடுத்துக்கிட்டுப் போயிடலாம். இருவது ரூ கட்டணம். பையில் இருக்கும் முக்கிய பொருட்களை எல்லாம் எடுத்து கோபாலின் பேண்ட் பாக்கெட்டுகளை ரொப்பிட்டு செல்ஃபோன்களையும் கேமெராக்களையும் காலிப் பையையும் லாக்கரில் வச்சுப் பூட்டினோம்.

தொடரும்.....................:-)

7 comments:

said...

மைக் டெஸ்டிங்.........
1
2
3

said...

மைக் டெஸ்டிங்....

இதோ வந்துட்டோம்ல...

குளக்கரையும் சாலை ஓர லஸ்ஸி, ஸ்வீட் கடைகளும் வா வா என்கிறது....

யார் அங்கே! சீக்கிரம் எனது ரதத்தினை கொண்டுவா... நெடும்பயணம் செல்ல வேண்டும்.....:)))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


அவசரமே இல்லை. எல்லா இனிப்பும் உங்களுக்கே!!!!

said...

நல்ல பதிவு.
நிறைய படங்கள்.
நிறைய விபரங்கள்.
நன்றி.

said...

வாங்க ரத்னவேல்.

வருகைக்கு நன்றி!

ஆளில்லாத கடையில் டீ ஆத்தறேனோன்னு இருந்தேன்:-)

said...

ஆஞ்சநேயரும் அஞ்சடுக்கில் அழகாய் ஏறிவிட்டார் :)

said...

வாங்க மாதேவி.

உயரம் அவருக்கு பிரச்சனையே இல்லை:-)))))