Monday, May 16, 2011

(நம்மைப்போன்ற) முக்கிய நபர்களைச் சந்திக்க....((ராஜஸ்தான் பயணத்தொடர் 11)

காளியைத் தரிசித்த கையோடு வலப்புறம் மேலே ஏறும் படிகளில் போனால் பெரிய விசாலமான முற்றத்தில் இருப்போம். சுற்றிவர அழகான கட்டிடங்கள்.வெளிப்புறம் இருக்கும் அலங்காரத்தூண்கள் எல்லாம் சிகப்பு மணற்கல் உட்புறம் இருக்கும் வரிசைகள் முழுசும் பளிங்கு கல்லால் ஆனவை இந்த ஆமெர் கோட்டையின் திவானி ஆம். என்னும் மண்டபத்தில். எது நடந்தாலும் தங்க்ஸ்க்குத் தெரியணும் என்ற குடும்ப நீதியின் படி மண்டபத்தின் இடப்புறம் இருக்கும் இன்னொரு கட்டிடத்தின் மாடியில் வரிசையா லேஸ் ஜன்னல் வச்சுருக்கார் ராஜா. ராணிகள் அதன்
வழியா நடப்பைப் பார்த்துக்கலாம். பின்னால் குறுக்கு விசாரணைக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை பாருங்க:-)



தசரா பண்டிகை, போரில் வெற்றி அடைஞ்சபின் நடக்கும் வெற்றி விழா, மஹாராஜாவின் ஹேப்பி பர்த்டே எல்லாம் இந்த மண்டபத்தில்தான் கோலாகலமா நடக்கும். மஹாராஜா மான்சிங் 1589 லே கட்டுனது. மொகலாய மன்னர்களின் கட்டிடக்கலையைக் கொஞ்சம் காப்பியடிச்சு அப்படியே ராஜபுதனக் கலையின் படி செடிகொடிகள் யானைத்தலை அலங்காரங்கள் எல்லாம் சேர்த்து ஒரு கலவையா இருக்கு!

ஒரு மூணு நூற்றாண்டுக்குப் பிறகு மஹாராஜ ஸ்வாய் ராம்சிங் (இரண்டாமவர்) இந்த மண்டபத்தின் பின்பக்கப் பகுதியை 1835 ஆண்டுவாக்கில் பில்லியர்ட்ஸ் விளையாடும் அறையா மாத்திக்கிட்டார். வெள்ளைக்காரர்களிடம் இருந்து படிச்ச விளையாட்டு. மண்டபத்தின் தெற்குப்பக்கம் 27 கச்சேரின்னு வரிசையா ஆஃபீஸ் அறைகள் இருக்கு. ராஜாங்க அலுவல்களுக்காக ஒதுக்கி இருக்காங்க. டோஷாகானான்னு பெயராம்.
கணேஷ் போல்

'கணேஷ் போல்' என்ற நடுவாசலுக்குள் நுழைந்தால்..... கண் எதிரே இன்னுமொரு பெரிய முற்றம். பக்கவாட்டில் இருக்கும் பாதைவழியாக் கூட்டிப்போறார் காஷிராம். சுரங்கப்பாதை போல நீண்டு கிடக்கு. வீல் சேர் கூடப்போகலாம். ரெண்டுபக்கமும் மழமழன்னு சுவர்கள். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸாம். எனக்கு நம்ம திருமலை நாயக்கர் மஹால் தூண்களின் வழுவழுப்பு நினைவுக்கு வந்துச்சு!

பாதை முடிஞ்சு வெளியில் வந்தால் பெரிய தோட்டம்., நாலு பாகங்களா (சார்பாக்) பிரிச்சு அடர்த்தியான செடிகள் வெட்டிவிடப்பட்டு இதுவும் ஒரு அழகா இருக்கு. நமக்கிடப்பக்கம் போகும் அகல வெராந்தாவுக்குப் பின்னே அந்தப்புற அறைகள். உள்ளே போய்ப் பார்க்கமுடியாதபடி சங்கிலித் தடுப்பு. படுக்கை அறைகளாம். சுக் மந்திர் என்று பெயர்! இயற்கையாக் கற்று வர லேஸ் பேட்டர்ன்களோடு ஜன்னல்கள். அறைகளின் சுவர்களுக்கு ஒரு பக்கம் பளிங்கு இடைவெளி ஒன்னு ஏற்படுத்தி அதன்வழியா இடைவிடாமல் தண்ணீர் சரிஞ்சு ஒழுகுமாம். காற்றும் தண்ணீரும் சேரும்போது ஜில்லுன்னு ஒரு காத்து!
சார்பாக்.வலப்பக்கம்கோடைகாலப்படுக்கைஅறைகள் .
வெளியே வரும் தண்ணீர் சின்ன ஓடையாகப்போய் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுமாம்.. தோட்டத்தில் நடுவில் இருக்கும் மேடையின் எல்லாப் பக்கங்களிலும் சலசலன்னு தண்ணீர் பாயும் ஓசையும் காதுக்கு இதமா இருக்குமாம். சுற்றி இருக்கும் நட்சத்திர டிஸைன் தொட்டிகளில் செயற்கை நீரூற்றுகள். இதெல்லாம் கோடைகாலத்துக்கான இடம். இதுக்கு நேர் எதிரா தோட்டத்துக்கு அந்தப் பக்கம் கண்ணாடி மஹல்.ஷீஷ்மஹல்.

உட்புற விதானம், சுவர்கள் எல்லாம் அலங்கார வேலைப்பாடுகளுக்கிடையில் கண்ணாடி பதிச்சு வச்சுருக்கு. நாம் பார்ப்பது வெளிப்புற வெராந்தாதான். உள்ளெ அறையைப் பூட்டி வச்சுருக்காங்க. அங்கேயும் மேலே உட்புறக்கூரையெல்லாம் இதே மாதிரிதானாம். இது குளிர்காலப் படுக்கை அறைகளாம். சின்ன மரஸ்டாண்டுகளில் தீபம் ஏற்றி அங்கங்கே வச்சுருவாங்களாம். அந்த சூடு மெள்ள மேலே எழும்பிப்போய் கண்ணாடிகளைச்சூடாக்குவதால் அறை முழுசும் கதகதப்பா இருக்குமாம். மேலும் விளக்கின் ஒளி கண்ணாடிகளில் பிரதிபலிப்பதால் நட்சத்திரக்கூட்டங்களில் சஞ்சரிப்பது போலத் தோணுமாம். இப்படின்னு ஒரு வத்திக்குச்சியைப் பத்தவச்சார் கைடு காஷிராம். நெருப்புத் துளி சுவர் முழுக்கத் தெரிஞ்சது!

ஒரு இடத்தில் முகம்பார்க்கும் கண்ணாடி பதிச்சுவச்சுருக்காங்க. நம்மை அதுக்கு எதிரே கொஞ்சம் தள்ளி நிக்கவச்சுட்டு கைடு க்ளிக்கிக் கொடுத்தார். இது இங்கே ஒரு ஃபோட்டோ பாய்ண்ட்,

ஷீஷ்மஹலின் வெளிப்புறமே நல்ல அகலமாத்தான் இருக்கு. இங்கே பாட்டு, நடனமுன்னு கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது கீழே கம்பளங்கள் பச்சை, நீலம், சிகப்புன்னு ஒவ்வொரு வகையா விரிக்கும்போது கண்ணாடி முழுசும் பிரதிபலிச்சு அந்த இடத்தையே வர்ணமடிச்சுருமாம். தலை தூக்கிப் பார்த்தால் கோடிக்கணக்காண துளசி.!
பளிங்குத் தூண்களின் அடிப்பாகத்தில் பூக்கள் பட்டாம்பூச்சிகள் வண்டுகள் இலைகள் இப்படிச் செதுக்கு வேலைகள். ப்ரமாதம்!

ஊரும் கோட்டைக்குள் வரும் வழியும்

அடுத்த நிலைக்குப் போறோம். அங்கிருந்து பார்க்கும்போது சுற்றி இருக்கும் மலை, கோட்டைச்சுவர்கள் படிகள், கீழே இருக்கும் குளம், அதில் கட்டி இருக்கும் மாடித்தோட்டம் எல்லாம் கண்ணுக்கு விருந்து.


கோட்டையைச்சுற்றி சில பாழடைஞ்ச மாளிகைகள் கோவில்கள் என்று ஊரில் பரவலா அங்கங்கே இருக்கு. ஒன்னு விடாமப் பராமரிப்பதும் சிரமம்தானே? ஊருக்குள்ளே வந்தோம். இங்கே ஒரு இடத்துக்குப் பத்து நிமிசம் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்னார் கைடு. நாம்தான் சூடு பட்ட பூனையாச்சே! அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு இழுத்தேன். 'சும்மா பார்த்துட்டு வாங்க நல்ல கைவினைப்பொருட்கள் எல்லாம் இருக்கு'ன்னார்.
ராஜஸ்தான் ஸ்மால் ஸ்கேல் காட்டேஜ் இண்டஸ்ட்ரி. முகப்பில் புத்தருக்கு ரெண்டு பக்கமும் பெரிய யானைகள் ரெண்டு. இயற்கை வண்ணங்கள் தயாரிப்பு, அதுலே ப்ளாக் ப்ரிண்டிங் செய்வது எல்லாம் ஒருத்தர் டெமோ காமிச்சார், மஞ்சள் வண்ணம் சூரியகாந்திப்பூ, பச்சையாக இருப்பது மாவிலையை அரைச்சதுன்னார். படம் எடுக்கத்தடை. அதைப் பார்க்காம க்ளிக்கிட்டேன்:(

அப்புறம் மூணாவது மாடிக்குக் கூட்டிப்போனார் இன்னொருத்தர். இங்கே பெட்ஷீட், ரஜாய் விரிப்புகள், புடவை, சல்வார்ஸூட் இப்படித் துணிவகைகள். ச்சும்மாப் பாருங்க சும்மாப் பாருங்கன்னு சொல்லியே நம்மை ரஜாய், பெட்ஷீட்ஸ் எல்லாம் வாங்க வச்சுட்டாங்க. நாங்களே எங்க செலவில் உங்க ஊருக்கு அனுப்பறோமுன்னு சொல்லி இதுவரை தமிழ்நாட்டுக்கு அவுங்க அனுப்பிய ஆர்டர்களையெல்லாம் ரெஜிஸ்டரைக் கொண்டுவந்து 'காமிச்சுக்கிட்டே' இருந்தார் இன்னொருத்தர்.

வெறும் ஐநூறு ரூபாய்தான்னு ரஜாய்களைக் காமிச்சுப் படிப்படியா உசந்த ரகத்துக்குப்போய் நல்ல பாஷ்மீனா நிறைச்சு, மெஷீன் வாஷபிளா இருந்ததை, விட மனசில்லை எனக்கு. அதுலே யானை ப்ரிண்ட் வேற !
சிங்கிள் க்வில்ட் வெறும் 100 கிராம் எடைதான்! இன்னும் இன்னுமுன்னு காமிக்க ஆர்வமா இருந்தவங்களை ஒரு கட்டத்தில் மீறி அங்கிருந்து பிச்சுக்கிட்டு நேரே கீழ்தளத்துக்கு ஓடி வந்தோம்.

பகல் சாப்பாட்டுக்கு எங்கியாவது போகலாமான்னா..... அதே வளாகத்துலே ஒரு இடம் இருக்குன்னார் காஷிராம். Zeeman Restaurant. சரின்னு போனோம். நல்ல சுத்தமான இடம். பிரதீப் ஒரு இடம்தேடி உக்கார்ந்துட்டார். நாங்க பேஸ்மெண்ட்லே இருக்கும் டைனிங் ஹாலுக்குப் போனோம். கைடும் வரட்டுமுன்னு கொஞ்ச நேரம் காத்திருந்துட்டு நாங்க சாப்பிட்டு முடிச்சு வெளியில் வந்தால் காஷிராம் சக கைடு ஒருவருடன் பேசிக்கிட்டு இருக்கார். காலையிலே சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுத்தான் கிளம்பினாராம்

தொடரும்...............::-)

12 comments:

said...

அழகான படங்கள். சூப்பர்! நாங்களும் நேரில் இருந்து இடங்களை பார்ப்பது போலவே, உங்கள் எழுத்து நடை அமைந்து இருப்பது, அருமை. அந்த இடங்களை காணும் ஆவலைத் தூண்டி இருக்கிறீர்கள்.

said...

கண்ணாடி போட்டோ பிரேம் சூப்பரு ;)

\\தலை தூக்கிப் பார்த்தால் கோடிக்கணக்காண துளசி.!\\

டீச்சர் டச் ;)

said...

கண்ணாடியில் தெரியும் ஜோடிக்கு கண்ணு படப் போது டீச்சர் :)

said...

லேஸ் ஜன்னல்…
கோடி கணக்கான துளசி…

அங்கங்கே உங்கள் டச்!

அருமையான வர்ணனைகள், ஆங்காங்கே புகைப்படங்கள்னு கலக்கலான ஆமேர் கோட்டை. நினைவுகளைத் தூண்டிச் சென்ற உங்கள் பகிர்வுக்கு நன்றி.

said...

மஹாராஜாக்களின் கலை ஆர்வம் இவ்வளவு அலங்காரங்களாக அமைக்க வைத்திருக்கிறது. அருமையான படங்கள், விபரங்கள். அருமையான கட்டுரை.

said...

வாங்க கோபி.

இடம் பார்த்து ப்ரேம் வச்சவன் மஹா ரசிகனப்பா!!!!!

said...

வாங்க சுசி.

ஐயோ..... சுத்திப் போட்டுருங்க:-)))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

'பார்த்து ரசித்த நபர்' கூடவே வர்றீங்க! மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு. நன்றிகள்.

said...

வாங்க டொக்டர் ஐயா.

கலை ஆர்வம் கோட்டையில் மட்டுமா? அடுத்த பதிவைப் பாருங்க:-)

said...

வாங்க சித்ரா.

இந்தியாவில் அழகான இடங்கள் ஏராளம். நமக்குத்தான் லீவில் வரும்போது போய்ப் பார்க்க முடிவதில்லை.

அதான் காலம் ரொம்பக் கடக்குமுன் ஒரு லீவுக்கு நம்ம வீடுகளைத் தவிர்த்து ஒரு புது இடமுன்னு வச்சுக்கணும்.

இந்தப் பயணங்கள் கூட தற்சமயம் இந்தியாவில் கொஞ்சநாள் வந்து இருக்க முடிஞ்சதின் விளைவே!

said...

கலைப்பொக்கிசங்கள், கோடைகால, குளிர்கால மாளிகைகள் திகைக்க வைக்கின்றன.

போட்டோ பிரேம் சூப்பர்.

said...

வாங்க மாதேவி.

கூடவே வந்தீங்களே..... போட்டோ ப்ரேமுக்குள்ளே வந்து நின்னுருக்கலாமுல்லே:-))))

நன்றிப்பா.