Tuesday, August 17, 2010

வெள்ளரிக்கா...பிஞ்சு வெள்ளரிக்கா...............( கம்போடியாப் பயணம் 9 )

ஒரு ஊர்லே ஒரு குடியானவன் இருந்தான். இவன் பெயர் பௌ. ( POU) அவனுடைய நிலம் மலைப்பகுதியை ஒட்டி இருந்துச்சு. அவனுக்கு தெய்வாதீனமா சில வெள்ளரி விதைகள் கிடைச்சது. தேவலோகத்துலே இருந்து வந்துச்சாம்(!) அவன் இதை தன்னுடைய நிலத்துலே நட்டுப் பயிர் செஞ்சான்.

வெள்ளரிக்காய்களாக் காய்ச்சுக் குலுங்குச்சு. அந்த நாட்டு வழக்கப்படி முதல்லே காய்ச்ச நல்ல காய்களை அரசனுக்குக் கொண்டுபோய் காணிக்கையாகக் கொடுத்தான்.

தின்னு பார்த்த அரசனுக்குத் தாங்கலை. அப்படி ஒரு ருசி. அமிர்தமா இருக்கு! (தேவலோக சமாச்சாரம் இல்லையோ?) பௌ வைக் கூப்பிட்டு, 'உன் நிலத்தில் உள்ள வெள்ளரிக்காய் முழுசும் எனக்கே வேணும். நீ யாருக்கும் கொடுக்கவோ விற்கவோ கூடாது'ன்னு 'ஆணை' போட்டதோடு, 'யாராவது உன் நிலத்துலே கால் வச்சா அவனை வெட்டிப்போடு'ன்னு சொன்னார். நாக்குலே சனி!

ஒரு சமயம் விடாம மழை நாலைஞ்சுநாள் அடிச்சுப் பெய்யுது. அப்போ பார்த்து ஒரு நாள் இரவு ராஜாவுக்கு வெள்ளரிக்காய் ஞாபகம் வந்து வாட்டுது. உடனே தின்னாகணும் என்ற வெறி. (மசக்கையா என்ன? ) பௌவின் வெள்ளரிக்காய்த் தோட்டத்துக்குக் கிளம்பிப்போறார். மழைக்காக தன்னுடைய பெட்ஷீட்டைத் தலையில் போட்டுக்கிட்டு இருந்தவர், வெள்ளரித்தோட்டத்துலே நுழைஞ்சதும் அங்கே காவலுக்கு வந்த பௌ, 'யாரோ திருடன் வந்துட்டான்'னு 'போட்டுத் தள்ளிட்டான்' ராஜாவை.

ராஜா சம்பிரதாய அரச உடுப்பில் இல்லாம நைட்டியில் இருந்துருப்பார் போல!

கொன்னவன், சவத்தை அங்கேயே குழி தோண்டி புதைச்சுட்டான்.

இங்கே அரசரைக் காணோம். தேடிப்பார்த்தும் கிடைக்கலை. படுக்கையில் இருந்தவர் எழுந்து எங்கே போயிருப்பார்? அறையில் எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு. ( சித்தார்த்தன் எல்லாத்தையும் விட்டுட்டுப் போனதைப் போலவோ?)

ப்ரச்சனம் வச்சுப் பார்க்கறாங்க.(ஜோசியம் பார்ப்பது போல சாமிகிட்டே குறி கேட்பது) ராஜா பூவுலகில் இல்லைன்னு சொல்லுது. அரசன் இல்லா நாடு சரிவராதேன்னு புது அரசனைக் கொண்டுவந்தே ஆகணும். ராஜாவுக்கோ சந்ததி இல்லை. அந்தக் கால வழக்கப்படி பட்டத்து யானையிடம் பூமாலை கொடுத்து அனுப்பறாங்க.

ஊருராப்போய்க்கிட்டு இருக்கு யானை. கடைசியில் போய் நின்ன இடம் பௌவின் வீட்டு வாசல். என்ன ஆரவாரமுன்னு வெளியில் வந்து பார்க்கிறான் பௌ. 'சட்'னு அவன் கழுத்தில் மாலையைப்போட்டு அப்படியே துதிக்கையால் தூக்கி தன் மேல் வசுக்கிட்டு, அரண்மனையை நோக்கிப்போறார் யானையார். என்ன அறிவு பாருங்க நம்ம யானைக்கு! இது வெள்ளை யானை வேற!!!

(வெள்ளைத்தோலுக்கு அறிவு அதிகமுன்னு அங்கேயும் மக்கள் நம்புனாங்க போல)

புது ராஜாவா பௌவுக்கு பட்டம் கட்டினாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விவரம் கிடைச்சு, தான் கொன்னுபோட்டவர்தான் ராஜா என்று தெரிஞ்சது. குழியைத் தோண்டி சவத்தை வெளியே எடுத்து அரசருக்குச் செய்யவேண்டிய முறைப்படி ஈமக்கிரியைகளை இந்த நாட்டில் இதுக்குன்னே கட்டி வச்சுருக்கும் ஒரு கோவிலில் செஞ்சு முடிச்சான் பௌ.

சாதாரணக் குடியானவன் மன்னனா ஆனதில் மந்திரிப் பிரதானிகளுக்கு அவ்வளவா விருப்பம் இல்லை. அதனால் ராஜா சொல்லுக்கு மரியாதை காமிக்காம கொஞ்சம் அசட்டையா இருக்காங்க. ராஜாவுக்குக் கோபம். எப்படி தன்னுடைய சொல்லுக்கு அவமரியாதை என்ற எண்ணத்தில் அரண்மனையை விட்டுத் தூரமா ஒரு இடத்துலே கட்டி இருந்த கோட்டைக்குள் போய் தங்கிட்டார்.

மலைச்சாதியில் ஒரு குறிப்பிட்ட இனத்தின் ஆட்களுக்கு க்மெர் மொழியில் சாம்ரே ன்னு சொல்வாங்களாம். பௌ அந்த இனம் என்பதால் அவன் தங்கி இருந்த கோட்டைக்கு சாம்ரே கோட்டைன்னு பெயர் வந்துருச்சு. க்மெர் மொழியில் சொன்னால் பெண்டீய் சாம்ரே. Banteay Samre.

தன்னை அவமதிக்கும் ஆள் யாரானாலும் சரி சிரச்சேதமுன்னு அறிவிச்சார் ராஜா. பயம் காரணமா அவமரியாதையை மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு வெளியில் பவ்யமா இருந்தாங்க மக்கள். கப் சுப்............அவச்சொல் அடங்குனதும் ராஜா அரண்மனைக்கே வந்து ஆட்சி செஞ்சு சுகமா இருந்தார்.

நீங்க இந்தக் கதையைப் படிச்சு முடிக்கவும் நாங்க 35 நிமிசம் பயணம் செஞ்சு 'பெண்டீய் சாம்ரே' வரவும் சரியா இருக்கு. மெயின் ரோடிலே இருந்து கொஞ்சம் ஒரு 500 மீட்டர் உள்ளே தள்ளி இருக்கு இது. மெயின் ரோடிலே பார்க்கிங், நம்ம டிக்கெட் செக்கிங் எல்லாம் இருக்கு. இறங்கி அந்த அகலமான செம்மண் பாதையிலே போறோம்.

சின்னப்பெண்கள் பலரும் விதவிதமான பொருட்களோடு நம்மைச் சூழ்ந்துக்கறாங்க. வாங்கு வாங்குன்னா என்னத்தை வாங்குறது? சும்மாச் சொல்லக்கூடாது.... பசங்க நல்லா ஆங்கிலம் பேசறாங்க. லிமிட்டட் வசனங்கள்தான். வேணாமுன்னு சொன்னா....'ஓக்கே. யூ க பை வென் யூ கம் பேக்'ன்னு சொல்லி கோவில் பாதையில் நம்மை அனுப்புதுங்க.பெயர் கேட்டால் சொல்லத்தெரியுது.பொருட்களைக் காமிச்சு விலை கேட்டா சடார்னு பதில் வருது. வேற எதாவது 'எத்தனையாவது படிக்கிறே? என்ன பள்ளிக்கூடம் ? வீடு எங்கே?' போன்ற கேள்விகளுக்கு பதில் ஒரு தலையாட்டலும் புன்சிரிப்பும்தான்.
அங்கோவாட் கோவில் கட்டப்பட்ட அதே காலக்கட்டத்தில்தான் இதுவும் கட்டி இருக்காங்க. இன்னும் சரியாச் சொன்னால் கோபுரங்கள் எல்லாம் அங்கோர்வாட் மினியேச்சர் மாதிரிதான் இருக்கு. ஒருவேளை அதுக்கு இதை மாடல் செஞ்சாங்களோ என்னவோ? அங்கோரில் இருக்கும் அதேவகைச் சாளரங்கள்.
அங்கோர்வாட் மாடல் கோபுரம்

ரெண்டாம் சூரியவர்மன் காலத்தில் பனிரெண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டுனது. இந்தக் கோவிலை Anastylosis முறையில் பழுதுபார்த்துருக்காங்க. ஒவ்வொரு கல்லா எடுத்துச் சுத்தம் செஞ்சு திரும்பி அதேமாதிரி அடுக்குவாங்களாம் இந்த முறையில். அப்பழுக்கில்லாத வேலை.
வெளியே இருந்து பார்க்கும்போது கோவிலின் அளவு தெரியலை. உள்ளே போகப்போக நல்லாப் பெருசாதான் வளர்ந்துக்கிட்டே போகுது. பொதுவா சுற்றுலாப்பயணிகள் வந்து பார்க்கும் அங்கோர் வாட்டைவிட்டு ரொம்பவே தள்ளி இருப்பதால் கூட்டமில்லாமல் இருக்கு இங்கே.


முகப்புப் படிகள் ஏறவே எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. இத்தனைக்கும் ஒரு அஞ்சு படிகள்தான். படிகளின் அகலம் ரொம்பக்குறைவா? இல்லே எனக்குத்தான் முதுமை ரொம்பவே வந்துருச்சா?
முகப்புலே இருக்கும் அலங்காரத்தில் ரெண்டு தேர்களில் நேருக்கு நேரா நின்னு போர் நடக்குது. சின்னச்சின்னதா நிறைய உருவங்கள். யார் என்னன்னு புரியலை. ஆனால் இது விஷ்ணு கோவில் என்று வகைப்படுத்தி இருப்பதால் கிருஷ்ணன் சம்பந்தமான உருவங்களா இருக்கலாம். ஒரு முகப்பில் பிள்ளையார். ரெண்டு பக்கமும் பெருச்சாளிகள் இருக்கு.
முன் மண்டபத்தில் பாதிப் பாதங்களுடன் ஒரு பீடம். புத்தர் சிலை(யாக) இருந்துருக்கணும்.


நீளமா இருக்கும் முன்மண்டபத்தைக் கடந்து போகும் வழி யொட்டி ரெண்டு பக்கமும் போகும் வெளிப்பிரகாரம். செந்நிற மணல்கற்களால் ஆன பெரிய சுவர்கள்.
மண்டபம் வழி நடந்து உள்ளே மூணு பகுதிகளாப் பிரிச்சுத் தனித்தனி வாசல்களைத் தாண்டிப் போனால் கல் தரை முடியும் இடத்தில் நமக்கு ரெண்டு பக்கமும் வெராந்தா போல ஒன்னு நடுவிலே இருக்கும் கோவிலைச் சுற்றிச் சதுரமாப் போகுது.
நமக்கும் நடுவில் தென்படும் கோவிலுக்கும் இடையில் ஒரு ஆறடி ஆழத்துக்கு பள்ளமான பிரகாரச் சுற்று. இப்போ இதுலே புல்தரை இருந்தாலும் அந்தக் காலத்துலே தண்ணீர் இருக்கும் குளம் தானாம். (அங்கே ஒரு கோவில் பணியாளர் காவலுக்கு இருக்கார்)

தண்ணீர் ததும்பி இருக்கும்போது கோவில் ரொம்ப அழகா இருந்துருக்கும் இல்லே?

வெராந்தாவில் சீரான இடைவெளியில் சின்னச்சின்னத் தூண்களா வரிசையா இருக்கு. மேற்கூரை இருந்துருக்குமோ? இல்லே அதெல்லாம் விளக்குத் தூண்களா இருக்குமோ?
இந்த மேடையில் இருந்து நடுக்கோவில் போக ஒரு பாலம்போல இணைப்பு இருந்துருக்கக் கூடாதா? கீக்கிடமா இருந்த படிகளில் இறங்கி மூச்சிறைக்க எதிர்ப்படிகளில் ஏறவேண்டியதாப் போச்சு. மொத்தம் பத்துப்படிகள்தான். ஆனால் படியா அது? ஒரு அங்குல அகலத்தில் காலை எப்படிப்பா வைக்கிறது? லேட்டா வந்துட்டேன்.....இன்னும் ஒரு இருபது வருசத்துக்கு முன்னேயே வந்து பார்த்துருக்க வேண்டிய இடம்.

வயசாக ஆக பயம் வந்துருது. பிராண பயம் இல்லை. அஞ்சடியில் விழுந்து உயிர் போயிடாது. விழுந்து காலை உடைச்சுக்கிட்டா நமக்கும் நம்மைப் பார்த்துக்கப்போற(??)வங்களுக்கும் கஷ்டம்.

இடைவெளி மூணாவது பிரகாரம்

நாலு வாசல் இருக்கும் நடுக்கோவில்னு போனால் அங்கே உள்ளுக்குள் இன்னொரு பிரகாரம் இருக்கு. அதுக்கும் நாலுபக்கமும் வாசல்கள். ரெண்டுக்கும் நடுவில் இடைப்பட்ட வெளியில் கருங்கல் பாவிய தரை.
அகழிகள் போல ஆழம்தான்.தண்ணியிலே மிதந்த கோவிலா இருக்கணும்!
மேடையில் கைப்பிடிச்சுவர்கள் வேற கட்டி வச்சுருக்காங்க. எல்லாம் அஞ்சுதலையாரின் உடல்கள். அங்கங்கே தலையைத் தூக்கிப் பார்க்கிறார்கள். கோவிலை மூணு சுத்தா உள்ளே, உள்ளேன்னு அம்சமா அமைச்சுருக்காங்க.
அரசர்கள் மதம் மாறுனவுடன் அடிபொடிகளும் அல்லக்கைகளும் முதலில் இருந்த கடவுளர்களின் உருவங்களைப் பெயர்த்தெடுத்துட்டு தற்போதைய அரசரின் இஷ்ட தெய்வங்களை வைச்சுருவாங்க போல. இப்படியே மாறி மாறி இப்போ..... ஒன்னும் இல்லாம வெறுமையாக் கிடக்கு சிலபல மாடங்கள்.
நாம் வெளியே வந்த வாசலில் பக்கத்து அறையின் மண்தரையின் நடுவில் ஒன்னும் நாலு மூலைக்கு நாலுமா, அஞ்சு சிவலிங்கங்கள்.
இளநீர் வாங்கிக் குடிச்சுட்டு பசங்க தொந்திரவு தாங்காமல் இவருக்கு ஒரு டீ ஷர்ட் வாங்கினோம்.

தொடரும்...................:-)))

33 comments:

said...

க தை பயங்கரமா இருக்கே..வெள்ளரிக்க சீவரமாதிரி சீவி இருக்காங்க..

said...

அங்கேயும் குழந்தை தொழிலாளர்களா?
இப்போ ஆட்சியில் இருப்பது மத சார்பற்ற அரசா அல்லது ?

said...

பிரம்மிப்பா இருக்கு.. கோவிலை கட்டுன அவங்களையும், கால்வலிய பொருட்படுத்தாம சுத்திக்காமிக்கிற உங்களையும் பார்த்து.....

said...

வெள்ளரிக் கதை,பயண அனுபவம், போட்டோக்கள் எல்லாமே சூப்பர்.

Anonymous said...

நம்மளை மாதிரியே கம்போடியாலயும் கதை விடறவங்க இருப்பாங்க போலிருக்கு. வெள்ளரிக்கதையைத்தான் சொல்றேன் :)

said...

//புது ராஜாவா பௌவுக்கு பட்டம் கட்டினாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விவரம் கிடைச்சு, தான் கொன்னுபோட்டவர்தான் ராஜா என்று தெரிஞ்சது. குழியைத் தோண்டி சவத்தை வெளியே எடுத்து அரசருக்குச் செய்யவேண்டிய முறைப்படி ஈமக்கிரியைகளை இந்த நாட்டில் இதுக்குன்னே கட்டி வச்சுருக்கும் ஒரு கோவிலில் செஞ்சு முடிச்சான் பௌ//

இப்போ எல்லாம் தெரிஞ்சே தான் போட்டு தள்ளறோம் :-)

//'ஓக்கே. யூ க பை வென் யூ கம் பேக்'ன்னு சொல்லி கோவில் பாதையில் நம்மை அனுப்புதுங்க//
இந்த நல்ல பழக்கம் மலேசியா-ல கூட இருக்கு...வாங்கட்டியும் நல்ல படியா பேசி அனுப்புவாங்க...
நம்ம பசங்களும் பேசுவாங்க...காது குடுத்து கேக்க முடியாது...

said...

உடனே தின்னாகணும் என்ற வெறி. (மசக்கையா என்ன? )
அங்கங்கே உங்கள் டைமிங்கும் நல்லா இருக்கு டீச்சர். அந்த பெண்னின் கள்ளமில்லா சிரிப்பும் அழகு டீச்சர். கோவிலும் நன்றாக உள்ளது டீச்சர்:))))))

said...

கோபால் ஜி நல்லா படமெல்லாம் எடுத்திருக்கிறார்.

said...

வாங்க கயலு.

அதான் பெயரிலேயே வெள், அரின்னு இருக்கே :-)))

said...

வாங்க விருட்சம்.

பிள்ளைகளைக் குழந்தைத்தொழிலாளி என்ர வகையில் சொல்ல முடியாது. அன்னிக்கு ஞாயித்துக்கிழமை. வியாபாரம் படிக்கும் அப்ரெண்டீஸ் ன்னு நினைச்சுக்கனும்.

அரசர் தலைமையில் நடக்கும் மக்களாட்சிதான் இப்ப.

அரசர், பிரதமரை நியமிப்பார்.

கம்போடியன் பீப்பிள்ஸ் பார்ட்டிதான் போன தேர்தலில் ஜெயிச்சு இருக்கு. நல்ல மெஜாரிட்டி. மொத்தம் 123 இடங்களில் 90 இவுங்களுது.
நல்ல பழமை வாய்ந்த கட்சி. ஆரம்பிச்சு 59 வருசம் ஆகுது. இதுதான் நாட்டில் பெரிய கட்சியும்கூட.

மத சார்பு இருக்கான்னு தெரியலை. ஆனா இங்கே இந்துமதக்காரர்கள் யாருமே இல்லைன்னு ஒரு இடத்தில் படிச்சேன். முழுசா அழிஞ்சு போச்சுன்றாங்க.

பிரதமரும் நல்ல அனுபவஸ்தர். கடந்த 20 வருசமா இவர்தான் பிரதமர்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ரொம்ப ஆசைப்பட்டு இருந்த இடம். அதான் வலி ஒருபக்கம் கிடக்கட்டுமுன்னு .... சுத்துனது.

அப்படியும் நடுவுலே நிறைய ஓய்வும் எடுத்துக்கிட்டேந்தான். இல்லேன்னா இன்னும் நாலு இடம் பார்த்துருக்கலாம்.

said...

வாங்க டொக்டர் ஐயா.

நீங்கல்லாம் நம்ம வீட்டுப்பக்கம் தவறாம வருவது ரொம்பவே மகிழ்ச்சி.

நன்றி.

said...

வாங்க சின்ன அம்மிணி.

நம்மூர் சாமிகளே போனப்பக் கூடவே கதைகளும் போயிருக்காதா? :-))))

said...

வாங்க டாடி அப்பா.

சிங்காரச் சென்னையின் ஸ்பெஷாலிட்டியே இந்தப் பேச்சுதானே:(

said...

வாங்க சுமதி.

பசங்களைப் பார்த்தா மனசுலே பாவமாத்தான் இருக்கு. ஆனால் யாரும் பிச்சைன்னு கையேந்தலைப்பா. அதுவே பெருமைதான்!

said...

வாங்க தருமி.

//கோபால் ஜி நல்லா படமெல்லாம் எடுத்திருக்கிறார்.//

அப்படியா? இருக்குமில்லே!!!!

said...

நம்ம ஊரு ராஜா அங்க போனா நம்ம கதைகளும் போகிறது:)எவ்வளவு பெரிய கோயில்கள் பா துளசி!!
அதென்ன அந்தப் பேர் சொல்லாதது எங்க பார்த்தாலும் சுருண்டு நீண்டு போய்க்கிட்டே இருக்கு!!
செம்மண் பூமிக்காரங்களுக்கே உரிய வழக்கம் னு தோணுது. ஒரு வேளை இதுவே நம்ம கதைல வர நாகலோகமா இருந்திருக்குமோ:))))
தான்க்ஸ் துளசி. பார்க்க முடியாத இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று பார்க்க வைக்கிறீர்கள்.
@தருமி, சார்,சைடில கோபால்ஜியைக் கூப்பிடறீங்களே. எல்லாம் டீச்சர் எடுத்த படமாக்கும்:)

said...

Teacher,

Asathiteenga, photos + commentory romba nella yerunthathu... "your words are worth for thousand pictures..." athu thaan correct !

waiting for next episode...

PS: marakame bill anupunga !!! ;)

said...

வாங்க வல்லி.

நம்ம பயணப்பதிவுகளுக்கு 'ஃபார் ஆர்ம்ச்சேர் ட்ராவலர்ஸ்'ன்னு விசேஷத் தலைப்பு கொடுக்கணும்ப்பா. போக ஆசை இருந்தாலும் போகமுடியாத இடங்களை நானும் இருந்த இடத்துலே இருந்தே படிச்சு மகிழ்ந்துருக்கேன்.

அதான் 'எல்லாத்தையுமே' விளக்கமா எழுதிக்கிட்டே போறென்.
போரடிக்காம இருக்கா?

நம்ம தருமி, மண்டபத்துலே யாரோ போட்டோ புடிச்சுக் கொடுத்துட்டாங்கன்னு நினைச்சுட்டார்:-))))))

said...

வாங்க ஸ்ரீநிவாசன்.

பில் இதோ ரெடி ஆகுது:-)))))

said...

ஏங்க துளசி,
நான் பார்த்த வரையில் உங்களை நடு நாயகமா வச்சி கோபால்ஜி போட்டோ எடுப்பார். அதான் இதுவும் அப்படி எடுத்ததுன்னு நினச்சேன். சரிங்க .. உடுங்க .. நீங்க எடுத்ததுன்னே வச்சுக்குவோம்.

//@தருமி, சார்,சைடில கோபால்ஜியைக் கூப்பிடறீங்களே. எல்லாம் டீச்சர் எடுத்த படமாக்கும்:)//

இப்படி வேற 'பார்க்காத சாட்சிகள்'!!!!

said...

வாங்க தருமி.

அதேதான் . பாயிண்டைக் கப்னு புடிச்சீங்க!!!!

நான் 'நடுநாயகமா' இல்லேன்னா அது நானே எடுத்தது:-)))))

பார்க்காத சாட்சி ஒருவேளை என் மனசாட்சியோ:-))))))

said...

பார்க்காத சாட்சி நம்ம வல்லிசிம்ஹன் தான்!

said...

Dear author,
Interestingly note that the khmer language is influnced by sanskrit and pali.pali the language was spoken by Bhuda and the sanskrit had been by the aryan race.here
we know The Buddha lived and taught in the northeastern Indian subcontinent some time between the 6th and 4th centuries.later his followers are classified two major
branches,Heenayanam n Mahayanam.the heenayanam or theravada influnced allover south east asia.here we are seeing all these religious mythology has been changed by the successors.so it is not wonder, that the statues including sanctum n sanctorum has been modified r destroyed.
thanx
shivashanmugam

said...

சரி சரி தருமி.:)
நீங்கதான் சார்னு கூப்பிடக் கூடாதுன்னு முன்னயே சொல்லி இருக்கீங்களே.
நான் அவங்க கூடக் கோவில்களுக்குச் சில சமயம் போயிருக்கேன். அப்ப எல்லாம் இந்த அம்மாதான் போட்டோ எடுக்கும். அதான் சாட்சி சொன்னேன். மெய் சாட்சி:))

said...

தருமி & வல்லி

ஸ்கோர் ஈவனா போயிருச்சு.

சபாஷ்:-))))

said...

வாங்க சிவஷண்முகம்.

நீங்க சொல்வது மெத்தச் சரி.

ரெண்டு பிரிவா இருந்த புத்தமதத்துலேயே இப்போ கூடுதலாப் பிரிவுகள் நிறைய வந்துருக்கே.

அப்போ அவுங்களுக்கும் புத்தர் விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்னு என்ற நம்பிக்கை வந்துருக்கலாம்.

பத்து இருக்கும்போது இன்னும் ஒன்னுரெண்டு கூட இருந்தால் என்னன்னு......

ஆனால்.... மதங்கள் பிடிச்சு மனுசனை ஆட்டி ஏற்கெனவே இருக்கும் கலைப்பொருட்களையும் சிற்பங்களையும் உடைச்சுச் சேதப்படுத்துவது அறிவீனம்தானே:(

said...

Here is an interesting legend.Believed that Funan, the earliest of the Indianized states, generally is considered by Cambodians to have been the first Khmer kingdom in the area. However there is no direct evidence of Indian rulers. These southeast asian regions took long periods for Indenization coz of natural barriers of sea and land.Here i think , it is helpful to our history lovers to leave this comment. The Great Ashoka sent his son Mahindra and daughter Sangamitra to propagate Bhudism in ceylon (srilanka).In this circumstances there was a possibility to propagate our Hinduism along with Bhudism not only Celyon but other Southeast Asia.

said...

வாங்க சிவஷண்முகம்.

சரித்திர ஆர்வமுள்ள உங்களை இங்கே நம்ம வகுப்பில் பார்ப்பது மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு.

உங்க கருத்துடன் உடன்படுகிறேன்.

said...

அரசனைக் கொன்றவர் பெள . அவருக்கு தண்டனையில்லையா?. கொன்றவனை அரசனாக ஆக்கியிருக்கிறார்களே

அது சரி, உங்கட ஊரில நில நடுக்கம் ஏற்பட்டது. நீங்கள் அச்சமயத்தில் கிறைஸ் சேர்ச்சில் இருந்தீர்களா?

said...

வாங்க அரவிந்தன்.

அது ரெண்டாம் பேருக்குத் தெரியாம நடந்த 'விபத்து' இல்லையோ!!!!

மாலை போட்டு அரசனா ஆக்குனது யானையாக்கும்:-))))

said...

அரவிந்தன்,

நான் கடந்த 16 மாசங்களாக இந்தியாவில் இருக்கேன்.

ஆனால் மகள் கிறைஸ்ட்சர்ச்சில்தான் இருக்காள்.

said...

பான்டேய் சாம்ரேயில் நான் எடுத்த புகைப்படங்கள் இதோ:

https://goo.gl/photos/Ziu6eHVV3kTVVAr67

- ஞானசேகர்