இதுவரை கண்ணுக்குத் தெரிஞ்சுக்கிட்டு இருந்த மூணு கோபுரங்கள் ஏதோ மந்திரம் போட்டாப்போல அஞ்சாத் தெரியுது. கண்ணைக் கசக்கிக்கிட்டுத் தாமரைக்குளம்போல அங்கிருந்த ஒன்னில் பிரதிபலிக்கும் கோவிலைப் பார்த்தால் அஞ்சு கோபுரங்கள்தான். மூன்றில் இடப்புறம் வலப்புறம் இருக்கும் கோபுரங்களுக்குப் பின்னால் இது ரெண்டும் இம்மாநேரம் ஒளிஞ்சிருந்துச்சு. எப்படி ஒரு துல்லியமான கணக்கு! அரைக்கிலோ மீட்டர் தூரம் வரை தெம்படவே இல்லை? இத்தனைக்கும் நாம் வந்தது ஒத்தையடிப்பாதையா என்ன? இருபது மீட்டர் அகலமான பாதை!
குளத்தைச் சுற்றித்தான் வலம்வந்து கோவிலுக்குப் போகும்படியான பாதை. அதுலே காலடி வச்சதும் ஒரு பிஞ்சு வந்து கிட்டே நின்னு கையில் இருக்கும் விசிறியைத் தூக்கிப்பிடிச்சு 'ஒன் டாலர்'னு சொல்லுச்சு.
வேணாமுன்னு நினைச்சாலும் கண்ணைப் பார்த்துச் சொல்ல என்னால் முடியலை. ஒன்னு வாங்கினேன். அது எவ்வளோ நல்லதாப் போச்சுன்னு கொஞ்ச நேரத்துலேயே தெரிஞ்சது. பிஞ்சு நல்லா இருக்கட்டும்''.
வரிசையா சுற்றுலாப்பயணிகளைக் குறிவைச்சு நடக்கும் கடைகள். நிழல்குடையுடன், ப்ளாஸ்டிக் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.பசங்க பிலுபிலுன்னு வந்து சுத்திக்குதுங்க. இதை வாங்கு அதை வாங்குன்னு . முக்கியமா எல்லோரும் சின்ன வயசு. அஞ்சு முதல் பதினைஞ்சு வரை.
நாம் வேணாம் வேணாமுன்னு சொல்லச்சொல்ல விலை இறங்கிக்கிட்டே போகுது. நமக்கு உண்மையாவே வேணாம்னு ............... ப்ச் பாவமாத்தான் இருக்கு. .
புல்வெளிக்கிடையில் ஓடும் மண்பாதையில் நடந்து கோவில் படிகளில் ஏறினோம். இந்த வாசல் வடக்குச்சுவரும் கிழக்குச்சுவரும் மூலையில் இருக்கு. அழகா நடுவிலே ஒரு வாசலும் தென்கிழக்கு மூலையில் ஒன்னும் இருக்கு.
இந்தப் படத்தைப் பாருங்க. வெளிச்சுற்றுக்கும் இப்போ நான் நிற்கும் இடத்துக்கும் எவ்வளோ இடைவெளி இருக்கு!
இடிஞ்சு விழுந்த தூண்களையும் கற்களையும் ஒரு இடத்தில் அழகா அடுக்கி வச்சுருக்காங்க. அதுவும் என்னமோ ஏதோன்னு பார்க்க சனம் அங்கேயும் போகுது.
பெரிய ரெட்டை வரிசை வெராந்தாவில் போய் நின்னால்.....கண்ணுக்கெட்டுன தூரம் வரை சுவரில் சிற்பங்கள் செதுக்கி வச்சுருக்கு. வரிசை வரிசையாக் கருங்கல்லை அடுக்கி வச்சுட்டுச் செதுக்குனாங்களா? இல்லை தனித்தனியாக் கல்லில் செதுக்கிட்டு அடுக்கி வச்சாங்களா? ஒரு வரிசைக்கல்லில் உடம்பும் அதுக்குக் கீழ்வரிசைக்கல்லில் கால்களுமா இருக்கே. பாதி உடல், காவாசி உடல் , இப்படித்துண்டுதுண்டாய் கற்களில் தெரிஞ்சாலும் முழு உருவமாவும் இருக்கே! செதுக்கும்போது ஏதாவது தப்பாச் செதுக்கிட்டால்? 'உடனே சிற்பியைக் கொன்னு போட்டுருவாங்களாம்' வீரா சொன்னார்.
கிரேக்கர்களின் தலைக்கவசம் போல் ஒருத்தர் போட்டுக்கிட்டுருக்கார்.
அப்படியா? கலைஞனுக்கு மனசில் பயம் வந்துட்டா..... கலைத்திறமை காணாமப் போயிடாதோ?
குதிரையும் யானையும், தேர்ச்சக்கரங்களும், வில்லும் அம்புமா போர்க்களக் காட்சிகள்தான் அநேகமா எல்லாமே. ராமாயணமுன்னு தெரியுது.....வானரப்படைகள் எக்கச்சக்கமா இருக்கே! சில இடங்களில் எண்ணெய்க் கையால் யாரோ தடவுனமாதிரி அடையாளம். அங்கே மட்டும்தான் பளிச்சுன்னு இருக்கு சிற்பங்கள். மற்ற இடங்க:ளில் சாம்பல் பூத்ததுபோல வெளிறி இருப்பது கண்ணுக்குச் சோர்வைத் தருது.
முடிவே இல்லாமல் நீண்டு போகும் போர்க்காட்சிகளின் நடுவே திடீர்னு எமலோகம் இருக்கு. மக்களுக்கு துரோகம் செய்த அரசனை தலைகீழாகத் தொங்கவிட்டு அடி பின்னுறாங்க. இன்னும் பலவிதமான சித்திரவதைகள் நடக்குது.
வழிகாட்டி இல்லைன்னா இதையெல்லாம் கவனிச்சு இருப்போமான்னு தெரியலை. இந்தப்பிரகாரம் முழுசுமே சுவர்ச்சித்திரங்கள்தான். ஒரு இடத்தில் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையறாங்க(ளாம்) அங்கே பழுதுபார்க்கும் வேலை நடக்குது. அதை நம்மால் பார்க்கமுடியாதேன்னு நினைச்சப்ப அது எப்படி இருக்கும் என்ற மாதிரியை வெளியே புல்தரையில் நிறுத்தி வச்சுருக்காங்க. தேவர் கூட்டத்துக்கு நடுவிலே ஹனுமன் ச்சியர்லீடரா நின்னு ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆகட்டும் இழுங்கன்னு ஆடிக்கிட்டு இருக்கார். அவர் வாலே கொடிபோல நீண்டு பறக்குது;-)
மகாபாரதக் காட்சிகள் இன்னொரு பக்கமா இருக்கும் சுவர்களில் இருக்காம். அங்கேயும் போர்க்களம்தானாம். நடுவில் பழுது பார்க்கும் பணிக்காக மூடிவச்சுருப்பதால் அங்கே இருக்கும் காட்சிகளைப் பார்க்கலை:(
இந்தப்பிரகாரத்தை விட்டு இன்னும் உள்புறமா இறங்கும் படியில் போய் சின்னதா இருக்கும் புல்வெளி முற்றம் கடந்து இன்னொரு பிரகாரத்துக்குள் படியேறிப் போனோம் ஒரு நாப்பது படிகள் இருக்கும் கொஞ்சம் கொஞ்சமா மேலே ஏறிப்போகுது பிரகாரங்கள்
மூணாவது பிரகாரம்
சுத்திவரக் கட்டிடங்களும் வெராந்தாக்களும் ஓட, ஒருபெரிய முற்றத்திலே போய்ச்சேர்க்குது இந்தப் படிகள். இந்தக் கட்டிடங்களின் மேற்கூரை டிஸைன் எனக்கென்னமோ நம்ம கும்பகோணம் பக்கம் இருக்கும் கோவில் மண்டபக் கூரைகளை நினைவு படுத்துச்சு. இதுக்குள்ளே நம்ம காலெல்லாம் கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்ச ஆரம்பிச்சாச்சு.
நாலாவது பிரகாரம். இதுலே நடுவிலுள்ள கோவில்தான் ஸ்ரீ வைகுண்டம்
இந்த முற்றத்தின் நடுவிலே நாம் ஆரம்பத்தில் வெளியே இருந்து பார்த்த அஞ்சு கோபுரங்கள் தலைக்கு மேலே அண்ணாந்து பார்க்கும் உசரத்தில் இருக்கு. வந்த சனமெல்லாம் அங்கங்கே உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டே கொக்குமாதிரி தூக்குன தலையை இறக்கலை.
கம்போடிய நாட்டின் பாரம்பரிய நடனக்குழு போல ஒரு ஏழெட்டுபேர் மயில், தேவதை, அரக்கன்னு வேஷங்கட்டிக்கிட்டு ஒரு பக்கம் இருக்காங்க. கலை நிகழ்ச்சி நடக்கப் போகுதா என்ன?
எதுவானாலும் முதல்லே மூலவரைப் பார்த்துட்டு வந்துடணும் படி எங்கேன்னு பார்த்தால் நாலு கோபுரமும் வாசல்கள்தான். ரெண்டு அங்குல அகலத்திலே செங்குத்தா மேலே போகுது!!! மேலே இருந்து கயிறு கட்டித் தூக்குவாங்களோ அந்தக் காலத்துலே? ஒருவேளை பாதங்கள் எல்லாம் குச்சிகுச்சியா இருக்கும் மனிதர்களோ? இல்லே யாருமே மேலே வரக்கூடாதுன்னு இப்படி வச்சுட்டாங்களோ?
ஏறவே முடியாத படிகள்
நல்லவேளை . நாலு மூலையிலும் இருக்கும் கோபுரங்களில் நம் கண்முன்னால் வலப்புறம் இருக்கும் கோபுரத்துக்கு மட்டும் மரப்பலகைப் படிகள் அமைச்சு பிடிச்சுக்கிட்டு ஏற கைப்பிடிகள் போட்டு அதை ரெண்டாப்பிரிச்சு ஏற ஒன்னு இறங்க ஒன்னுன்னு வச்சுருக்காங்க.
நம்ம வீரா, நிழலா இருந்த இடத்தில் போய் உக்காந்துக்கிட்டு மேலே இருப்பது வைகுண்ட்.. நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க. அங்கே விளக்கம் சொல்ல ஒன்னுமில்லைன்னார்.
மேருமலை மாதிரி டிசைன் செஞ்சுருய்க்காங்கன்னும் சொல்லக் கேள்வி.
கோபுரங்கள் எல்லாம் மேருவின் சிகரங்களைக் குறிக்குதாம். இதுலேயும் சிவ வைஷ்ணவ மக்களுக்குத் தக்கபடி எல்லாம் சொல்லிவச்சுட்டாங்கன்னு இருக்கு:-)))
கோவிந்தா...கோபாலான்னுன்னு சொல்லிக்கிட்டே (மனசுக்குள்ளேதான்) படியேறப்போனால் நமக்கு மாலை ஒன்னு கொடுத்தாங்க. கல்லும் முள்ளு ம் காலுக்கு மெத்தைன்னு பாடணுமோ? இதுலே BAKAN VISITOR னு போட்டுருக்கு. மெள்ளமெள்ள ஏறிப்போனேன். சுற்றி ஓடும் தாழ்வாரங்களும் நடுவிலே ஆழமான முற்றமுமா இருக்கு. அங்கங்கே அப்சரஸ்களின் புடைப்புச்சிற்பங்கள் ஒரு சில புத்தர் சிலைகள். ஏழுதலை நாகம் வளையம் வளையமா உடலைச்சுத்தி உசரமா போட்ட ஆசனத்தில் புத்தர் அமர்ந்திருக்க, நாகம் அவருக்குக் குடை பிடிக்குது.
நடுக் கோவில் அமைப்பு
நாலுபுறமும் கட்டம் கட்டி நடுவில் கூட்டல் குறி போல ஒரு அமைப்பு.ன்னு வச்சுக்குங்க. நட்ட நடுவில்தான் அஞ்சு கோபுரத்தின் மைய கோபுரம் நிக்குது. 65 மீட்டர் உசரம். கோபுரத்தின் கீழ் சந்நிதி. நான்கு பக்கமும் தனித்தனியா ஒவ்வொரு திசை பார்த்து. இதுலே ஒன்னில்தான் எண்கரப்பெருமாள் இருந்துருக்கார். அவரை அப்படியே அலேக்காத் தூக்கி கோவிலின் முதல் வெளிப்புறச் சுற்றுலே வச்சுருக்காங்க. (மற்ற சந்நிதிகளில் இருந்த மகாவிஷ்ணுவின் சிற்பங்கள் எல்லாம் இப்போ ம்யூஸியத்துலே வச்சுருக்கங்கன்னு நம்ம நா. கண்ணன் சொன்னார். நம்ம ஹொட்டேலுக்கு நேர் எதிரில்தான் இந்த அருங்காட்சியகம் இருக்கு. போய்ப் பார்க்கணும். ஆனால் கடைசிவரை எனக்கு வாய்க்கலை )
விஷ்ணு உறைந்த கருவறை
நாலு கட்டத்திலும் கல்பாவிய நாலு முற்றம். ஒரு முற்றத்துக்கு மட்டுமே நாம் இறங்கிப் பார்க்கலாம். மற்ற மூணிலும் நோ எண்ட்ரி சின்னம் போட்டுருக்காங்க:( ஆனால் நடுகோபுர நான்கு சன்னிதிகளை நாம் போய்ப் பார்க்க முடியும். ஒன்னில் புத்தர் நிக்கிறார். ஒன்னில் கிடந்துருக்கார். இன்னொன்னில் காலை மடிச்சுப்போட்டு உக்காந்து தவம் செய்கிறார்.ஆனால் யாருக்கும் பூஜை புனஸ்காரங்கள் இல்லை. அபிஷேகம் ஒன்னும் இல்லாம தூசி படிஞ்ச சிலைகள். பேருக்கு ஒரு விளக்கு கூட இல்லை. ஒரு சந்நிதியில் ஏதோ ஜோசியர் மாதிரி ஒருத்தரிடம் இளம் ஜோடிகள் கையை நீட்டிக்கிட்டு இருந்தாங்க. நீங்க பிரியாமல் இருப்பீங்கன்னு அவர் சொன்னது காதில் விழுந்துச்சு. 'ததாஸ்து'ன்னு நான் மனசுக்குள் சொல்லிட்டு வந்தேன்.
மேல் முற்றம் நாலில் ஒன்னு
கால் வலிக்குதேன்னு ஒரு நிமிஷம் உட்கார்ந்ததும் ஒரு கோவில் பணியாளர் வந்து அங்கே உட்கார அனுமதி இல்லைன்னும் மேலே ஏறி வந்த முப்பது நிமிசத்தில் கீழே இறங்கிடணும்னு சொன்னார். ஏறி வரும்போதே ஏன் கீழே இதைச் சொல்லலைன்னு தெரியலை.
பறவைப்பார்வை
அங்கிருந்து பார்க்கும்போது சுத்துவட்டாரமெல்லாம் ஏதோ லைட் ஹவுஸில் ஏறி நின்னு பார்ப்பது போலத்தெரியுது. ஹாட் ஏர் பலூனில் சிலர் கோவிலை எட்டிப்பார்த்துக்கிட்டு இருக்காங்க. மழைத்தண்ணீர் தேங்காமல் சட்னு வடிஞ்சு நேரா அந்த அகழிக்குப் போய்ச்சேரும் விதமா வடிகால் குழாயெல்லாம் ஆயிரம் வருசங்களுக்கு முன்னே போட்டுருக்காங்க. ஒவ்வொன்னும் பார்க்கப்பார்க்க பிரமிப்புதான்.
முடிஞ்சவரை (ரெண்டு பேருமா) க்ளிக்கிட்டு கம்பியைப் பிடிச்சுக்கிட்டே மெள்ள இறங்கிவந்தேன். வெயிலு போடுபோடுன்னு போடுது.
கலைநிகழ்ச்சின்னு நினைச்சது தப்பு. இங்கே இவுங்களோடு சுற்றுலாப்பயணிகள் தங்கள் கேமெராவில் படம் எடுத்துக்கலாம். ஒரு டாலர் ஒரு படத்துக்கு. நாமும் ரெண்டு எடுத்துக்கிட்டோம்.
கலைக் குழுவினருடன்
Wednesday, November 18, 2020
அங்கோர் வாட் உள்ளே போனால்..........( கம்போடியாப் பயணம் 3 )
Posted by
துளசி கோபால்
at
11/18/2020 02:12:00 PM
28
comments
Wednesday, August 25, 2010
மூன்று நாடுகள்...............( தாய்லாந்து, கம்போடியாப் பயணம் நிறைவுப்பகுதி )
ஹொட்டேல் வரவேற்பறையில் ஒரு ரெட்டை மாட்டுவண்டி டிஸைன் கண்ணை இழுத்துச்சு. சக்கரம் அச்சுலே இருந்து கழண்டு வராதபடி அருமையா ஒரு எக்ஸ்டென்ஷன் கட்டை கொடுத்து அமைச்சுருக்காங்க. அந்தக் காலத்து டிஸைனா இருக்கலாம். கண்டு பிடிச்சவர் தமிழ் சினிமா பார்த்துருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். வில்லன் கடையாணியைப் பிடுங்கி வச்சுருவார். இதை அறியாத நாயகன், காளைகளை விரட்ட, அது ஓடு ஒடுன்னு ஓட, கடையாணி இல்லாத சக்கரம் கொஞ்சம் கொஞ்சமா அச்சுலே இருந்து கழல..... நாமெல்லாம் பல்லைக் கடிச்சபடி இருக்கை நுனிக்கு வர ( இயக்குனர் விருப்பப்படி) பயங்கர த்ரில், இப்படிக் கட்டை வச்சு இருந்தா...பாழாய்ப் போகாதோ!!!!!
ரெண்டு மணிக்கெல்லாம் கிளம்பினோம். விமானநிலையம் வர மெயின் சாலையில் போகும்போது ரெண்டு பக்கமும் அட்டகாசமான ஹொட்டேல்கள் அணிவகுத்து நிக்குது. ஆஹா...... வரும்போது இருட்டுனதாலே இதெல்லாம் கண்ணில் படலை. சொல்லிவச்சாப்போலே எல்லாத்திலும் நுழைவு வாசலில் அஞ்சு தலை. அதென்னடா..... இங்கே இவர் மேலே அப்படி ஒரு ஈர்ப்பு!!!!மெயின் ரோடிலேயே நடைபாதையை அடுத்து தாமரைக் குளங்கள். பச்சைக்குப் பச்சை, அழகுக்கு அழகு. காசுக்குக் காசு.
ஏர்போர்ட் வாசலிலே போய் இறங்கிக்கலாம்
இருவது நிமிசத்துலே விமான நிலையம் வந்து சேர்ந்தாச்சு. உள்ளே செக்கின் செய்யப்போனால்...... ஒரு ஈ காக்கா இல்லை. சின்ன விமான நிலையம்தான். நாட்டின் டூரிஸம் வருமானத்துக்கு இதில்தான் முதலிடம். ராத்திரி எட்டரைக்கு ஒரு ப்ளைட் பாங்காக் போக இருக்குன்னாலும் பலநாட்களில் அது ரத்து ஆயிருமாம். நம்ப முடியாதுன்னு பாங்காக் ஏர்லைன்ஸ்காரர்களே சொல்றாங்க. நமக்கோ மறுநாள் காலை ஏழரைக்கு டெல்லி ப்ளைட் பிடிக்கனும். வம்பு வேணாமுன்னுதான் இப்பவே கிளம்பிட்டோம்.எண்ணி ஒன்பது பேர் நம்ம ஃப்ளைட்டில். வரும்போது கொடுத்த மாதிரியே வெஜிடபிள் சேண்ட்விச். ஒருவேளை வருசத்துக்கு மொத்தமா வாங்கி வச்சுருக்காங்களோ??? அதே 50 நிமிசப்பயணம். பாங்காங் நகரைக் கொஞ்சம் தாழ்வான உயரத்தில் பார்த்தேன். வாட்டுகள் அங்கங்கே தாரளமா இடம்பிடிச்சு இருக்குது.
பாங்காக் நகரின் நதி 'ச்சாவ் ப்ராயா'
சுவர்ணபூமியில் இறங்கினோம். பறந்த நேரத்தில் பாதியை விமானத்திலிருந்து எங்களைக் கூப்பிட்டுப் போன பேருந்தில் செலவு செஞ்சோம். அது என்னங்க, வேற ஊரிலே இறக்கிட்டாங்களா என்ன? போறோம் போறோம் போய்க்கிட்டே இருக்கோம். ஏழெட்டு கிலோமீட்டர் மெதுப்பயணம்.
எட்டு நாளைக்கு முன் இங்கே வந்து இறங்கினவுடன் ஓடுன வேகத்தில் அர்ரைவலில் இருக்கும் அழகான விஷயங்களைப் படம் எடுக்க விட்டுப்போச்சு. அதை இப்ப எடுத்து நம் கடமையை முடிச்சுக்கலாமுன்னு கேமெராவைத் தீட்டி வச்சுக்கிட்டுக் காத்திருந்தேன். ஆனா.....
பேருந்தைவிட்டு இறங்கி விமானநிலையக் கட்டடத்துக்குள் நுழைஞ்சால் கண்ணெதிரே குடியுரிமை வழங்கும் இடம். இந்தமுறையும் நோ ச்சான்ஸ்:(
நாளைக்குக் காலை ஆறு மணிக்கு இங்கே இருக்கணுமே என்பதால் நகருக்குள் போகாமல் விமானநிலைய ஹொட்டேலில் ஒரு இரவு தங்கிக்க ஏற்பாடு. நோவோடெல் (NOVOTEL). அவுங்களுடைய இலவச பிக்கப் வண்டியில் உக்கார்ந்தா..... அதுவும் இங்கே சுத்தி அங்கே சுத்தின்னு விமானநிலைய வளாகத்துலேயே வட்டம் போட்டு பத்துப் பதினைஞ்சு நிமிசம் சுத்திக்காட்டிட்டு நம்மளைக் கொண்டுவிட்டுச்சு.
தேவைக்கும் அதிகமான பிரமாண்டம் இங்கேயும். எங்கேயும் போக வேண்டாம். நல்லா ஓய்வு எடுக்கணுமுன்னு தீர்மானிச்சதால் சாப்பிடக்கூட கீழே போகாமல் ரூம்சர்வீஸில் முடிச்சுக்கிட்டோம். ஜன்னலில் பார்த்தால் கையெட்டும் தூரத்தில் விமானநிலையம் ஜொலிக்குது. நிமிசத்துக்கொரு விமானம் ஏறுவதும் இறங்குவதுமா இருக்கு. தரை ஊர்திகள் போக்குவரத்து ஏராளம். ஆனால் ஒரு சத்தமும் இல்லை. ஊமைப்படம் பார்த்துக்கிட்டு இருக்கேன்! நல்லத்தான் கட்டி இருக்காங்க! அமைதியோ அமைதி.
அதிகாலை அஞ்சரைக்கு எழுந்து குளிச்சுக் கிளம்பி விமானநிலையக் கட்டிடத்துக்குள் வந்து சேர்ந்தப்ப ஆறரை. அதான் இங்கே காஃபி வொர்ல்ட் இருக்கேன்னு அறையில் இருக்கும் காஃபியைச் சட்டை செய்யலை. ஆனா எப்படியோ அது இருந்தபக்கம் போகாம வேற பக்கம் திரும்பிட்டோம்போல! .
லேசான தலைவலி ஆரம்பிச்சது. இந்த காஃபிச் சனியனை விட்டொழிக்கணும். வேண்டாத சமாச்சாரத்தையெல்லாம் எப்படிப் பழக்கி வச்சுருக்கோமுன்னு லேசா ஒரு கோபம். (நல்ல காஃபி கிடைச்சதும் கோபத்தை மறந்துருவொம்லெ)
கோபால் புண்ணியத்துலே லவுஞ்சுக்குப்போய் லேசா ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் & காஃபியை முடிச்சுக்கிட்டு நம்ம கேட்டுக்கு வந்தோம்.இந்த முறை 'தாய் ஏர்வேஸ்' விமானத்துலே நம்ம இருக்கைக்கு முன் டிவி ஸ்க்ரீன் இருக்கு. நிகழ்ச்சிகள் அவ்வளவா சுவாரசியப்படலை. பெண் பயணிகளுக்கு 'ஆர்கிட் பூ ப்ரோச்' ஒன்னு கொடுத்தாங்க.
நாலரை மணிப் பயணம் முடிச்சு டெல்லியில் வந்து இறங்கினோம். அதே பழைய டெர்மினல்தான். புதுசு மறுநாள் முதல் பயனுக்கு வருதாம். 2 நமக்காக வந்து காத்துருந்த வண்டியில் சண்டிகரை நோக்கிக் கிளம்பிட்டோம். டெல்லி மா 'நரக'த்துக்குள்ளே போகலை. அதென்னவோ டெல்லி ட்ராஃபிக்லே மாட்டிக்க மனசே வரமாட்டேங்குது:( ஆனாலும் பிதாம்பூர் வரை கொஞ்சம் மெதுவான பயணம்தான். பகல் பனிரெண்டு மணி ஆகுது. போக்குவரத்து அதிகமில்லைன்னு ஓட்டுனர் சொன்னார்.
எல்லாம் நாம் விட்டுட்டுப்போன மாதிரியே இருக்கு. பத்து நாளுக்கு ஒரு மாற்றமும் இல்லை. வழியில் சாப்பிடன்னு இடம் தேடிக்கிட்டே ஹைவேயில் வந்து மூணு மணி நேரப் பயணத்தில் 'ஹவேலி'யை அடைஞ்சோம். அழகான செடிகள். கார் பார்க்கிங் ஏரியா நல்லாவே இருக்கு. அங்கேயே ரெஸ்ட் ரூம்ஸ் ஒரு பக்கம். நாட் பேட். சுத்தமாத்தான் இருக்கு. தோட்டத்தின் ஒரு பக்கம் ஒட்டைச்சிவிங்கி குடும்பம் ஒன்னு.
ஹவேலிபஞ்சாபி தாபாதான். ஆனால் மாளிகை செட்டிங்ஸ். பெரிய வளாகத்தில் இருக்கு. ஒரு பக்கம் ரெஸ்டாரண்ட், அதுக்கு நேர் எதிர்ப்புறம் கொஞ்சம் கடைகள். பயணிகளுக்கான பொருட்களா கேமெரா, பேட்டரிகள், குடிதண்ணீர் பாட்டில், ஷால், பரிசுப்பொருட்கள்ன்னு கிடக்கு. இடைவெளியில் கயித்துக் கட்டில்கள், ஒரு கிணறு. அதுலே தண்ணி இறைச்சுக் குடத்தைத் தலையில் சுமந்துகிட்டுப்போறாங்க ஒரு பெண். இன்னொருத்தர் தண்ணி இறைச்சுக்கிட்டு இருக்காங்க.
இந்தப்பக்கம் ரெண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமா பாங்ரா நடனம் ஆடிக்கிட்டே இருக்காங்க. ரெஸ்டாரண்டை ஒட்டி வெளியே பானிபூரி, குல்ஃபி, லஸ்ஸி, ஆலு டிக்கா, சாட் வகைகள் இப்படி தனித்தனியா அடுப்பு வச்சு சமைச்சுத்தரும் வகையில் அமைச்சுருக்காங்க. சாயந்திர வேளையில் கயித்துக்கட்டில்களில் ஹாயா உக்கார்ந்து வேணும் என்பதை வாங்கி உள்ளே தள்ளலாம். காசை வாங்கிப்போட்டுக்க கணக்குப்பிள்ளை ஒருத்தர், ஆனால்........... இந்தப்பக்கம் அம்மாவும் பொண்ணுமா ரெண்டு லேடீஸ், உக்காந்து தலைவாரி விட்டுக்கிட்டு இருக்காங்க. சாப்பாட்டுக் கடைவாசலில் இப்படி இருந்தா நல்லாவா இருக்கு? கண்டுக்காம உள்ளே போகவேண்டியதுதான்:)
மினி மீல்ஸ் வித் ஸ்வீட்ன்னு கொஞ்சம் சோறு, பருப்பு, கூட்டு, அப்பளம், கொஞ்சூண்டு பாயசம் நமக்கு. ஆனால் விலை கொள்ளை. 250 ரூ. ரெண்டு மீல்ஸ், அதிகமில்லையோ? ஹைவேன்னா இப்படித்தானாம். கோபால் சொல்றார்.
அங்கிருந்து ஒரு ரெண்டரை மணிப்பயணத்துலே வீடு வந்து சேர்ந்தோம். மணி சரியா நாலே முக்கால். முதல்லே நல்லதா ஒரு காஃபி போட்டுக் குடிச்சுட்டுத்தான் மறுவேலை.
இப்படியாக நம் தாய்லாந்து கம்போடியாப் பயணம் நிறைவுற்றது. இதுவரை பொறுமையாகக் கூடவே வந்த நம் வகுப்புக் கண்மணிகளுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
என்றும் அன்புடன்,
உங்கள் டீச்சர்.
பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.
ஆதலினால் பயணம் செய்வீர்!
Posted by
துளசி கோபால்
at
8/25/2010 04:20:00 AM
36
comments
Labels: Bangkok, Cambodia, India அனுபவம்
Monday, August 23, 2010
இந்தா...பிடிச்சுக்கோ ஒரு போனஸ்...............( கம்போடியாப் பயணம் 13 )
பேச்சுப்பராக்குலே கோட்டை விட்டுட்டேன்னு கொஞ்சம் தாமதமாத்தான் புரிஞ்சது. மலைக்கோயில் போயே போச்:( அதுக்காக ஓய்ஞ்சு உட்கார முடியுதா? மனம் தளராத விக்கிரமாதித்யனைப் போல் வேறென்ன கோவில் இந்தப்பக்கம் இருக்குன்னு நம்ம ஸ்மெய்யைத் தொணப்புனதில் இன்னும் கொஞ்ச தூரத்துல்லே லெஃப்ட்லே திரும்புனா வருமுன்னு சொன்னார்.
கழுத்தை அப்படியே லெஃப்ட்லே உடைச்சுக்கிட்டே போறோம். நெல்வயல்களுக்கிடையில் அங்கங்கே தாமரை வயல்கள். குளமுன்னு சொல்லலாமுன்னா கரையைக் காணோமே! புத்தருக்கு பூஜிக்கவோ? அதுவும்தான். ஆனால் முக்கியமா இது தாமரைக்கிழங்கு எடுக்கவாம். நல்ல மார்கெட் இருக்காமே இதுக்கு!தாமரைக்குளம்
மெயின் ரோடுலே இருந்து சட்னு பிரியும் ஒரு மண்ரோடுக்குள் வண்டி திரும்புச்சு. நம்மூர் கோவில்களில் இருப்பதுபோல ஒரு தோரணவாயில் வேற! ஒரு கால் கிலோ மீட்டர் போனதும் கூம்புகள் கண்ணுலே பட்ட ஒரு வளாகத்துக்குள் நுழைஞ்சோம். இந்தப்பக்கம் ஒரு பெரிய போதி மரம். நம்ம கோவில்களில் நாகப்பிரதிஷ்டைக்கு இருப்பதுபோல் சுற்றிவர மேடை. மேடையில் அங்கங்கே இறக்கை வைத்த காந்தருவன்கள்! ஹிந்துக்கோவிலா என்ன?இல்லையே.... அந்தப்பக்கம் சின்னதும் பெருசும் அலங்காரமாவும், படி சிம்பிளாவும் ஏகப்பட்ட ச்செடிஸ். சிலதுக்கு தனியா மூணடி உயர சுத்துச்சுவர். முழுசும் அஞ்சு தலையார் வளைஞ்சு நெளிஞ்சு நீட்டி நிமிர்ந்து (!) இருக்கார். குட்டிக்குட்டிப் பல்வரிசையா.... என்ன ஒரு சிரிச்ச முகங்கள்!!! இந்தப் பயணத்தில் நமக்கு இந்த ச்செடீஸ்களின் ரகசியம் ஒருமாதிரி பிடிபட்டுப் போயிருச்சு அரசர்களைபோல ரொம்ப முக்கியமானவர்கள் இறந்துட்டால் அவுங்க அஸ்தியை வச்சு அதுக்கு மேலே எழுப்பும் நினைவு மண்டபம் இது. புத்த மடங்களில் முக்கியமானவர்கள் பிக்ஷுக்களாச்சே. அவுங்க இறந்தாலும் இதே முறையில் ச்செடிகளை மடாலயத்துலே கட்டுவது ஒரு வழக்கமா இருக்கு. பிக்ஷுக்களின் 'ரேங்க்' அனுசரிச்சு இது ஆடம்பரமாவோ, அலங்காரமாவோ, இல்லை சாதாரணமாவோ இருக்கும்..
ச்செடீஸ்
சிரிச்சமுகம்வளாகத்தின் நடுவிலே ஒரு புத்தர் கோவில். அடுத்த கட்டிடம் பிக்ஷுக்களுக்கான பள்ளிக்கூடம். அட்வீயா மடாலயம். இந்தாங்க, உங்களுக்கு ஒரு போனஸ் ன்னு சொல்லும்படி புத்தர் கோவிலுக்குப் பின்பக்கம் புராதனக் கோவில். ரெண்டாம் சூர்யவர்மனால் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்ட ஆரம்பிச்ச ஹிந்துக் கோவில். முற்றிலும் முடியாத ஒரு நிலையில் அப்படியே நின்னு போயிருக்கு. நடுப்பகுதி மட்டும் அட்டகாசமா இருக்கு. அப்ஸரா சிற்பங்கள் எல்லாம் பாதிச் செதுக்கிய நிலையில் நிக்குது.
சிதைந்த கோவில் மேலும் பழுதாகாமல் இருக்க மரக்கட்டைகள் வச்சு சப்போர்ட் கொடுத்துருக்காங்க. இந்த இடம் 'வாட் அத்வீயா' ன்னு இருந்துருக்கு. இந்த கிராமத்துக்கும் அத்வீயான்னுதான் பெயரே. இதே பெயரையும், இதே இடத்தையும் எடுத்துக்கிட்டு பௌத்தமடம் ஒன்னு கட்டி இருக்காங்க அடுத்த வந்த காலங்களில்.ஹிந்துக்கோவில்
பழைய கோவிலைக் கிளிக்கிட்டு, புத்தர் கோவிலைப் பார்க்க வெராந்தாவில் ஏறினதும் சுற்றிவர இருக்கும் ஜன்னல் கதவுகளில் கண்கள் தானாவே போச்சு. தங்க நிறம். இழுக்காம இருக்குமா? என்னமோ உருவம் தெரியுதேன்னு பார்த்தால்..... கற்களைச்சுமந்து கொண்டு போகும் வானரன்கள். பாலம் கட்டவா? அட ராமா! ராமாயணம்! இங்கே எப்படின்னு ஒவ்வொரு ஜன்னலையும் விடாமல் பார்த்தேன்.ஹனுமன் தோளில் ராமன்
ராவணன் சீதையைக் கவர்தல்
வானரன்களின் வாகனங்கள்.
சேது கட்ட
முக்கால் வாசி வானரன்கள் புரியும் போர்தான். புலி, அன்னப்பறவைன்னு கிடைச்ச வாகனத்தை விடாமல் அதுலே ஏறி கையில் ஆயுதங்களுடன் போர் செய்யும் வானரன்கள். ஹனுமன் தோளில் உட்கார்ந்து அம்பெய்யும் ராமன், சீதையைக் கடத்திப்போகும் ராவணன் இப்படி ஏராளம்.கோவிலுன்னு சொன்னதும் பிரமாண்டமா இருக்குமுன்னு நினைக்காதீங்க. ஒரு பெரிய ஹால். கூரை மட்டும் சீனக் கலையைக் கொண்டது. பக்கச்சுவர்களில் ஜன்னல்கள். முன்பக்கம் நடுவிலே இடம் விட்டு ரெண்டு ஓரத்திலும் ரெண்டு வாசல். உள்ளே போனால் அமர்ந்த நிலையில் புத்தர் சிலை. பெருசா நடுவிலே ஒன்னும் கீழடுக்கில் பக்கத்துக்கு ஒன்னாக ரெண்டு சிறிய சிலைகள். முன்னால் பூஜைக்கான ஊதுவத்தி, பூக்கள் வகைகள். அமர்ந்து பூஜிக்கவும் தியானிக்கவும் தரையில் ஒரு விரிப்பு.
எனக்கு ஒரு சந்தேகம்........ மற்ற கோவில்களெல்லாம் ஒரு சமயம் இந்துக்கோவில்களா இருந்து புத்தமதக்காரர்களால் புத்தர் கோவிலாக மாற்றப்பட்டிருக்கு. ஏற்கெனவே அங்கே இருந்த சுவர்ச்சித்திரங்கள் சிற்பங்களில் இந்து இதிகாசங்கள் அப்படியே இருந்துருக்கும். ஆனால் இங்கே புத்தர் கோவிலைச் சீனக்கலாச்சார முறையில் கட்டியும் இங்கே ராமாயணம் ஏன் இருக்கு? புத்தர் வாழ்க்கைச் சரித்திர நிகழ்வுகளை ஏன் ஜன்னல் அலங்காரத்தில் உருவாக்கலை? இத்தனைக்கும் சாதாரண அளவுள்ள சன்னல்கள். யார்கிட்டேயாவது கேக்கலாமுன்னா..... வளாகத்துலே யாருமே கண்ணுக்குத் தெம்படலை:(
சாதாரண ஜன்னல்களுக்கு இப்படி ஒரு வேலைப்பாடா????
கோவிலுக்கு உள்ப்புற சுவர்களில் புத்தர் சம்பவங்களை சுவத்தில் வரைய ஆரம்பிச்சு ஒரு மூலையில் தொடங்கி நாலு படத்தோடு விட்டுருக்காங்க. இடத்தோட ராசியோ என்னவோ..... ஆரம்பிச்சது எதுவும் முடியமாட்டேங்குது. வாஸ்து சரி இல்லை, விவேக்கிடம்தான் கேக்கணும்ன்னு சொல்லிக்கிட்டேன்:-))))
அடுத்த கட்டிடத்தில் வகுப்பறை. அதை அடுத்து அலங்காரமா ஒரு தங்கச்செடி. இன்னொரு பக்கம் பிக்குகளுக்கான அறைகள் இப்படி வசதியா கட்டி வச்சுருக்காங்க. கூரைகளில் எல்லாம்கூடப் பெயர் சொல்லாததுகள்!
கூரை மேல் பாம்பு
ஊருக்கு வெளியில் இருக்கும் இந்தக் கோவிலை பொதுவா சுற்றுலாப்பயணிகள் பார்க்கத் தவறிடறாங்களாம். நமக்குக் கிடைச்சது லாபமுன்னு கிளம்பி வந்தோம். நம்ம ஹொட்டேலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில் கடைசி நிமிஷ ஷாப்பிங்குன்னு எட்டிப்பார்த்து(வாசலில் பெரிய யானைகள் நின்னுச்சேன்னு உள்ளே போனேன்) . 'உடல் ஊனமுற்றோர், ஏழைப்பெண்கள் அநாதைகள்' செஞ்ச பொருட்களாம். விலையைப் பார்த்தால் மயக்கமே வந்துருச்சு. இன்னொரு ஏழைப்பெண்ணின் எண்ணிக்கையைக் கூட்டவேண்டாமுன்னு வெளியில் ஓடிவந்தேன். கையில் வேற செல்லாத நூறுதான் இருக்கு இந்த நிமிசம்:-)
ஸ்மெய்யைக் காத்திருக்கச் சொல்லிட்டு அறைக்கு வந்து மீண்டும் ஒரு குளியல் போட்டதும்தான் மனசுக்குக் கொஞ்சம் சமாதானமாச்சு. மணிவேற ஓடிக்கிட்டே இருக்கு. டுக்டுக்கிலே மீண்டும் டவுனுக்கு வந்து பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு, பக்கத்துலே இருந்த வங்கியில் அந்த 'செல்லாத நூறை'க் காமிச்சுக் கேட்டால் குழப்பம் ஒன்னும் இல்லை. எல்லாம் அசலாக்குமுன்னு சொல்லி சில்லறை மாத்திக் கொடுத்தாங்க. இந்தப்பக்கத்துலே இருந்த பண முதலைகளைக் கிளிக்கிட்டுத் திரும்ப ஹொட்டேலுக்குப் போனோம். விமான நிலையம் போக டாக்ஸி வேண்டாம். பேசாம டுக்டுக்கிலே போலாம். அந்தக் காசு நம்ம ஸ்மெய்க்குக் கிடைக்கட்டுமேன்னேன். முதலில் ஆ.....ஊ....ன்னவர் பெட்டிகளை எப்படிக் கொண்டு போறதுன்னார் வீரா உக்கார்ந்த இடம் இருக்கேன்னதும் வெய்யிலா இருக்குன்னு ஆரம்பிச்சார். பதினைஞ்சு நிமிசத்துலே காய்ஞ்சுருவோமான்னு...... (நமக்கு) ஆமாம் போட வைக்கறதுக்குள்ளே......பெரும் பாடு.:-)
தொடரும்...........................:-)
நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
மாவேலி வருந்ந திவசம் மனுஷ்யரெல்லாம் ஒன்னுபோலே!
Posted by
துளசி கோபால்
at
8/23/2010 04:08:00 PM
14
comments
