Wednesday, November 18, 2020

அங்கோர் வாட் உள்ளே போனால்..........( கம்போடியாப் பயணம் 3 )

இதுவரை கண்ணுக்குத் தெரிஞ்சுக்கிட்டு இருந்த மூணு கோபுரங்கள் ஏதோ மந்திரம் போட்டாப்போல அஞ்சாத் தெரியுது. கண்ணைக் கசக்கிக்கிட்டுத் தாமரைக்குளம்போல அங்கிருந்த ஒன்னில் பிரதிபலிக்கும் கோவிலைப் பார்த்தால் அஞ்சு கோபுரங்கள்தான். மூன்றில் இடப்புறம் வலப்புறம் இருக்கும் கோபுரங்களுக்குப் பின்னால் இது ரெண்டும் இம்மாநேரம் ஒளிஞ்சிருந்துச்சு. எப்படி ஒரு துல்லியமான கணக்கு! அரைக்கிலோ மீட்டர் தூரம் வரை தெம்படவே இல்லை? இத்தனைக்கும் நாம் வந்தது ஒத்தையடிப்பாதையா என்ன? இருபது மீட்டர் அகலமான பாதை! குளத்தைச் சுற்றித்தான் வலம்வந்து கோவிலுக்குப் போகும்படியான பாதை. அதுலே காலடி வச்சதும் ஒரு பிஞ்சு வந்து கிட்டே நின்னு கையில் இருக்கும் விசிறியைத் தூக்கிப்பிடிச்சு 'ஒன் டாலர்'னு சொல்லுச்சு. வேணாமுன்னு நினைச்சாலும் கண்ணைப் பார்த்துச் சொல்ல என்னால் முடியலை. ஒன்னு வாங்கினேன். அது எவ்வளோ நல்லதாப் போச்சுன்னு கொஞ்ச நேரத்துலேயே தெரிஞ்சது. பிஞ்சு நல்லா இருக்கட்டும்''. வரிசையா சுற்றுலாப்பயணிகளைக் குறிவைச்சு நடக்கும் கடைகள். நிழல்குடையுடன், ப்ளாஸ்டிக் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க.பசங்க பிலுபிலுன்னு வந்து சுத்திக்குதுங்க. இதை வாங்கு அதை வாங்குன்னு . முக்கியமா எல்லோரும் சின்ன வயசு. அஞ்சு முதல் பதினைஞ்சு வரை. நாம் வேணாம் வேணாமுன்னு சொல்லச்சொல்ல விலை இறங்கிக்கிட்டே போகுது. நமக்கு உண்மையாவே வேணாம்னு ............... ப்ச் பாவமாத்தான் இருக்கு. . புல்வெளிக்கிடையில் ஓடும் மண்பாதையில் நடந்து கோவில் படிகளில் ஏறினோம். இந்த வாசல் வடக்குச்சுவரும் கிழக்குச்சுவரும் மூலையில் இருக்கு. அழகா நடுவிலே ஒரு வாசலும் தென்கிழக்கு மூலையில் ஒன்னும் இருக்கு. இந்தப் படத்தைப் பாருங்க. வெளிச்சுற்றுக்கும் இப்போ நான் நிற்கும் இடத்துக்கும் எவ்வளோ இடைவெளி இருக்கு! இடிஞ்சு விழுந்த தூண்களையும் கற்களையும் ஒரு இடத்தில் அழகா அடுக்கி வச்சுருக்காங்க. அதுவும் என்னமோ ஏதோன்னு பார்க்க சனம் அங்கேயும் போகுது. பெரிய ரெட்டை வரிசை வெராந்தாவில் போய் நின்னால்.....கண்ணுக்கெட்டுன தூரம் வரை சுவரில் சிற்பங்கள் செதுக்கி வச்சுருக்கு. வரிசை வரிசையாக் கருங்கல்லை அடுக்கி வச்சுட்டுச் செதுக்குனாங்களா? இல்லை தனித்தனியாக் கல்லில் செதுக்கிட்டு அடுக்கி வச்சாங்களா? ஒரு வரிசைக்கல்லில் உடம்பும் அதுக்குக் கீழ்வரிசைக்கல்லில் கால்களுமா இருக்கே. பாதி உடல், காவாசி உடல் , இப்படித்துண்டுதுண்டாய் கற்களில் தெரிஞ்சாலும் முழு உருவமாவும் இருக்கே! செதுக்கும்போது ஏதாவது தப்பாச் செதுக்கிட்டால்? 'உடனே சிற்பியைக் கொன்னு போட்டுருவாங்களாம்' வீரா சொன்னார். கிரேக்கர்களின் தலைக்கவசம் போல் ஒருத்தர் போட்டுக்கிட்டுருக்கார். அப்படியா? கலைஞனுக்கு மனசில் பயம் வந்துட்டா..... கலைத்திறமை காணாமப் போயிடாதோ? குதிரையும் யானையும், தேர்ச்சக்கரங்களும், வில்லும் அம்புமா போர்க்களக் காட்சிகள்தான் அநேகமா எல்லாமே. ராமாயணமுன்னு தெரியுது.....வானரப்படைகள் எக்கச்சக்கமா இருக்கே! சில இடங்களில் எண்ணெய்க் கையால் யாரோ தடவுனமாதிரி அடையாளம். அங்கே மட்டும்தான் பளிச்சுன்னு இருக்கு சிற்பங்கள். மற்ற இடங்க:ளில் சாம்பல் பூத்ததுபோல வெளிறி இருப்பது கண்ணுக்குச் சோர்வைத் தருது. முடிவே இல்லாமல் நீண்டு போகும் போர்க்காட்சிகளின் நடுவே திடீர்னு எமலோகம் இருக்கு. மக்களுக்கு துரோகம் செய்த அரசனை தலைகீழாகத் தொங்கவிட்டு அடி பின்னுறாங்க. இன்னும் பலவிதமான சித்திரவதைகள் நடக்குது. வழிகாட்டி இல்லைன்னா இதையெல்லாம் கவனிச்சு இருப்போமான்னு தெரியலை. இந்தப்பிரகாரம் முழுசுமே சுவர்ச்சித்திரங்கள்தான். ஒரு இடத்தில் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடையறாங்க(ளாம்) அங்கே பழுதுபார்க்கும் வேலை நடக்குது. அதை நம்மால் பார்க்கமுடியாதேன்னு நினைச்சப்ப அது எப்படி இருக்கும் என்ற மாதிரியை வெளியே புல்தரையில் நிறுத்தி வச்சுருக்காங்க. தேவர் கூட்டத்துக்கு நடுவிலே ஹனுமன் ச்சியர்லீடரா நின்னு ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆகட்டும் இழுங்கன்னு ஆடிக்கிட்டு இருக்கார். அவர் வாலே கொடிபோல நீண்டு பறக்குது;-) மகாபாரதக் காட்சிகள் இன்னொரு பக்கமா இருக்கும் சுவர்களில் இருக்காம். அங்கேயும் போர்க்களம்தானாம். நடுவில் பழுது பார்க்கும் பணிக்காக மூடிவச்சுருப்பதால் அங்கே இருக்கும் காட்சிகளைப் பார்க்கலை:( இந்தப்பிரகாரத்தை விட்டு இன்னும் உள்புறமா இறங்கும் படியில் போய் சின்னதா இருக்கும் புல்வெளி முற்றம் கடந்து இன்னொரு பிரகாரத்துக்குள் படியேறிப் போனோம் ஒரு நாப்பது படிகள் இருக்கும் கொஞ்சம் கொஞ்சமா மேலே ஏறிப்போகுது பிரகாரங்கள் மூணாவது பிரகாரம் சுத்திவரக் கட்டிடங்களும் வெராந்தாக்களும் ஓட, ஒருபெரிய முற்றத்திலே போய்ச்சேர்க்குது இந்தப் படிகள். இந்தக் கட்டிடங்களின் மேற்கூரை டிஸைன் எனக்கென்னமோ நம்ம கும்பகோணம் பக்கம் இருக்கும் கோவில் மண்டபக் கூரைகளை நினைவு படுத்துச்சு. இதுக்குள்ளே நம்ம காலெல்லாம் கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்ச ஆரம்பிச்சாச்சு. நாலாவது பிரகாரம். இதுலே நடுவிலுள்ள கோவில்தான் ஸ்ரீ வைகுண்டம் இந்த முற்றத்தின் நடுவிலே நாம் ஆரம்பத்தில் வெளியே இருந்து பார்த்த அஞ்சு கோபுரங்கள் தலைக்கு மேலே அண்ணாந்து பார்க்கும் உசரத்தில் இருக்கு. வந்த சனமெல்லாம் அங்கங்கே உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டே கொக்குமாதிரி தூக்குன தலையை இறக்கலை. கம்போடிய நாட்டின் பாரம்பரிய நடனக்குழு போல ஒரு ஏழெட்டுபேர் மயில், தேவதை, அரக்கன்னு வேஷங்கட்டிக்கிட்டு ஒரு பக்கம் இருக்காங்க. கலை நிகழ்ச்சி நடக்கப் போகுதா என்ன? எதுவானாலும் முதல்லே மூலவரைப் பார்த்துட்டு வந்துடணும் படி எங்கேன்னு பார்த்தால் நாலு கோபுரமும் வாசல்கள்தான். ரெண்டு அங்குல அகலத்திலே செங்குத்தா மேலே போகுது!!! மேலே இருந்து கயிறு கட்டித் தூக்குவாங்களோ அந்தக் காலத்துலே? ஒருவேளை பாதங்கள் எல்லாம் குச்சிகுச்சியா இருக்கும் மனிதர்களோ? இல்லே யாருமே மேலே வரக்கூடாதுன்னு இப்படி வச்சுட்டாங்களோ? ஏறவே முடியாத படிகள் நல்லவேளை . நாலு மூலையிலும் இருக்கும் கோபுரங்களில் நம் கண்முன்னால் வலப்புறம் இருக்கும் கோபுரத்துக்கு மட்டும் மரப்பலகைப் படிகள் அமைச்சு பிடிச்சுக்கிட்டு ஏற கைப்பிடிகள் போட்டு அதை ரெண்டாப்பிரிச்சு ஏற ஒன்னு இறங்க ஒன்னுன்னு வச்சுருக்காங்க. நம்ம வீரா, நிழலா இருந்த இடத்தில் போய் உக்காந்துக்கிட்டு மேலே இருப்பது வைகுண்ட்.. நீங்க போய்ப் பார்த்துட்டு வாங்க. அங்கே விளக்கம் சொல்ல ஒன்னுமில்லைன்னார். மேருமலை மாதிரி டிசைன் செஞ்சுருய்க்காங்கன்னும் சொல்லக் கேள்வி. கோபுரங்கள் எல்லாம் மேருவின் சிகரங்களைக் குறிக்குதாம். இதுலேயும் சிவ வைஷ்ணவ மக்களுக்குத் தக்கபடி எல்லாம் சொல்லிவச்சுட்டாங்கன்னு இருக்கு:-))) கோவிந்தா...கோபாலான்னுன்னு சொல்லிக்கிட்டே (மனசுக்குள்ளேதான்) படியேறப்போனால் நமக்கு மாலை ஒன்னு கொடுத்தாங்க. கல்லும் முள்ளு ம் காலுக்கு மெத்தைன்னு பாடணுமோ? இதுலே BAKAN VISITOR னு போட்டுருக்கு. மெள்ளமெள்ள ஏறிப்போனேன். சுற்றி ஓடும் தாழ்வாரங்களும் நடுவிலே ஆழமான முற்றமுமா இருக்கு. அங்கங்கே அப்சரஸ்களின் புடைப்புச்சிற்பங்கள் ஒரு சில புத்தர் சிலைகள். ஏழுதலை நாகம் வளையம் வளையமா உடலைச்சுத்தி உசரமா போட்ட ஆசனத்தில் புத்தர் அமர்ந்திருக்க, நாகம் அவருக்குக் குடை பிடிக்குது. நடுக் கோவில் அமைப்பு நாலுபுறமும் கட்டம் கட்டி நடுவில் கூட்டல் குறி போல ஒரு அமைப்பு.ன்னு வச்சுக்குங்க. நட்ட நடுவில்தான் அஞ்சு கோபுரத்தின் மைய கோபுரம் நிக்குது. 65 மீட்டர் உசரம். கோபுரத்தின் கீழ் சந்நிதி. நான்கு பக்கமும் தனித்தனியா ஒவ்வொரு திசை பார்த்து. இதுலே ஒன்னில்தான் எண்கரப்பெருமாள் இருந்துருக்கார். அவரை அப்படியே அலேக்காத் தூக்கி கோவிலின் முதல் வெளிப்புறச் சுற்றுலே வச்சுருக்காங்க. (மற்ற சந்நிதிகளில் இருந்த மகாவிஷ்ணுவின் சிற்பங்கள் எல்லாம் இப்போ ம்யூஸியத்துலே வச்சுருக்கங்கன்னு நம்ம நா. கண்ணன் சொன்னார். நம்ம ஹொட்டேலுக்கு நேர் எதிரில்தான் இந்த அருங்காட்சியகம் இருக்கு. போய்ப் பார்க்கணும். ஆனால் கடைசிவரை எனக்கு வாய்க்கலை ) விஷ்ணு உறைந்த கருவறை நாலு கட்டத்திலும் கல்பாவிய நாலு முற்றம். ஒரு முற்றத்துக்கு மட்டுமே நாம் இறங்கிப் பார்க்கலாம். மற்ற மூணிலும் நோ எண்ட்ரி சின்னம் போட்டுருக்காங்க:( ஆனால் நடுகோபுர நான்கு சன்னிதிகளை நாம் போய்ப் பார்க்க முடியும். ஒன்னில் புத்தர் நிக்கிறார். ஒன்னில் கிடந்துருக்கார். இன்னொன்னில் காலை மடிச்சுப்போட்டு உக்காந்து தவம் செய்கிறார்.ஆனால் யாருக்கும் பூஜை புனஸ்காரங்கள் இல்லை. அபிஷேகம் ஒன்னும் இல்லாம தூசி படிஞ்ச சிலைகள். பேருக்கு ஒரு விளக்கு கூட இல்லை. ஒரு சந்நிதியில் ஏதோ ஜோசியர் மாதிரி ஒருத்தரிடம் இளம் ஜோடிகள் கையை நீட்டிக்கிட்டு இருந்தாங்க. நீங்க பிரியாமல் இருப்பீங்கன்னு அவர் சொன்னது காதில் விழுந்துச்சு. 'ததாஸ்து'ன்னு நான் மனசுக்குள் சொல்லிட்டு வந்தேன். மேல் முற்றம் நாலில் ஒன்னு கால் வலிக்குதேன்னு ஒரு நிமிஷம் உட்கார்ந்ததும் ஒரு கோவில் பணியாளர் வந்து அங்கே உட்கார அனுமதி இல்லைன்னும் மேலே ஏறி வந்த முப்பது நிமிசத்தில் கீழே இறங்கிடணும்னு சொன்னார். ஏறி வரும்போதே ஏன் கீழே இதைச் சொல்லலைன்னு தெரியலை. பறவைப்பார்வை அங்கிருந்து பார்க்கும்போது சுத்துவட்டாரமெல்லாம் ஏதோ லைட் ஹவுஸில் ஏறி நின்னு பார்ப்பது போலத்தெரியுது. ஹாட் ஏர் பலூனில் சிலர் கோவிலை எட்டிப்பார்த்துக்கிட்டு இருக்காங்க. மழைத்தண்ணீர் தேங்காமல் சட்னு வடிஞ்சு நேரா அந்த அகழிக்குப் போய்ச்சேரும் விதமா வடிகால் குழாயெல்லாம் ஆயிரம் வருசங்களுக்கு முன்னே போட்டுருக்காங்க. ஒவ்வொன்னும் பார்க்கப்பார்க்க பிரமிப்புதான். முடிஞ்சவரை (ரெண்டு பேருமா) க்ளிக்கிட்டு கம்பியைப் பிடிச்சுக்கிட்டே மெள்ள இறங்கிவந்தேன். வெயிலு போடுபோடுன்னு போடுது. கலைநிகழ்ச்சின்னு நினைச்சது தப்பு. இங்கே இவுங்களோடு சுற்றுலாப்பயணிகள் தங்கள் கேமெராவில் படம் எடுத்துக்கலாம். ஒரு டாலர் ஒரு படத்துக்கு. நாமும் ரெண்டு எடுத்துக்கிட்டோம். கலைக் குழுவினருடன் 


 ஒவ்வொன்னா பிரகாரங்களைக் கடந்து வெளியே வர ஒரு அரைமணி நேரம் ஆச்சு. 'நீ உடைச்சால் நானும் உடைப்பேன்'னு அங்கங்கே சில தலை இல்லாத புத்தர்களும் இருக்காங்க. மேலிருந்து கீழ்தளம் வரை சதுர முற்றங்கள் அடுக்கடுக்கா இருக்கு. கடைகள் இருக்குமிடம் வந்து ஆளுக்கொரு இளநீர் குடிச்சோம். டாலருக்கு ரெண்டு. திரும்பவும் பலாப்பழத்தில் ஈ மொய்ச்சதுபோல் எதையாவது கொண்டுவந்து நமக்கு விற்பதிலேயே கருத்தா இருக்காங்க பிள்ளைகள். ஆறு டாலருக்கு அங்கோர் வாட் நெய்த ஒரு வால் ஹேங்கர் வாங்கினேன். நெத்தியில் இருக்கும் பொட்டைக் கவனமாப் பார்த்த ஒரு சின்னப்பெண் தனக்கும் ஒன்னு வேணுமுன்னு கேட்டுச்சேன்னு கைப்பையில் இருந்த அட்டையில் ஒன்னு எடுத்து வச்சுவிட்டேன். அடுத்த நொடி எனக்கு, எனக்குன்னு ஏகப்பட்ட பசங்கள். அந்த அட்டையில் இருந்ததெல்லாம் காலி. நானும் ஓசைப்படாம மதம் மாற்றிட்டு வந்துருக்கேன். ஒரு பையனும் ஓடிவந்து எனக்கும் வச்சுவிடுங்கன்னு கேட்டதும் அப்படியே ஆச்சு:-) எல்லாரையும் நிக்க வச்சு ஒரு படம் எடுக்கலாமுன்னா எங்கே? வந்த வேகத்தில் பறந்து போயிருச்சே சிட்டுக்கள்! அஞ்சு வாசலில் யானை வாசல் வழியா வெளியே வந்தோம். யானைப்பாதையில் ரெண்டு யானை:-) கார்பார்க்கில் போய் நம்ம டுக்டுக்லே உட்காரும் சமயம் எங்கிருந்தோ பறந்தோடிவந்த சிலர் நம்ம போட்டோவை ஒரு ஃப்ரேமில் போட்டு விற்க முயற்சிக்கிறாங்க. ஆஹா..... இவுங்கதான் நாம் முதலில் உள்ளே போகும்போது குறுக்கும் நெடுக்குமா வந்த கெமெராக்காரர்களா? நமக்குத்தான் மூணு மணி நேரம் ஆகி இருக்கு. அதுக்குள்ளே எல்லாம் ரெடியாக்கி வச்சதுமில்லாமல் எப்ப வர்றோமுன்னு கண் வச்சுக்கிட்டே இருக்காங்க பாருங்க!!! 'பேரம்' படியலை. வாங்கிக்கலை. 12 டாலர் கூடுதல் இல்லையோ? படங்களை ஆல்பத்தில்தான் போடணும். அது இங்கே:-) 



'அங்கோர் கோவிலைப் பார்த்தபிறகு செத்துப்போனால் கூட பரவாயில்லை'ன்னு ஒரு பழமொழி இங்கே இருக்காம். நெசமாவான்னு கேட்கத்தோணலை. அப்படித்தான் இருக்கும்!!!! 


 தொடரும்...........................:-)

28 comments:

said...

Supera iruku teacher.

Romba nala anubavichu eluthareenga.Ennakum poganum pola aasaya iruku.

said...

அன்பின் துளசி

இவ்வளவு விபரமா - ஒரு செய்தியக் கூட விடாம மனசில கன்ணுல நிறுத்தி - வந்த வுடனே இடுகையாகவும் இட துளசி ஒருவரால் தான் இயலும். எவ்ளோ விபரங்கள் - அப்பப்பா

பொறுமையா படிச்சேன் - மத மாற்றம் குற்றமில்லையா துளசி -

நல்வாழ்த்துகள் துளசி
நட்புடன் சீனா

said...

உங்களை மாதிரி ஊர் சுத்துனதை எழுதத் தெரிந்தால் நன்றாக இருக்கும்

:(

said...

ஏறவே முடியாத படிகள்...ஒருவேளை குதிரையில் வருபவர்கள் அப்படியே மேலே போவதற்காக இருக்குமோ என்னவோ?

said...

டீச்சர் நல்லாருக்கு.

போட்டோவுல ஒரு பொண்ணுக்கு குங்குமம் வைக்கிறீங்க பாருங்க. அது சூப்பர்.

said...

அழகிய படங்கள். இனிமையான அனுபவங்கள். நன்றாக இருக்கிறது

said...

படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது டீச்சர். பொட்டு வைத்ததும் அங்கிருக்கும் பெண்கள் எல்லாம் இன்னும் அழகாக இருக்கின்றனர் டீச்சர்:)))))

said...

இவ்வளவு படிகளை ஏறினீங்களா. உங்க காலும் பாதங்களும் என்ன பாடு பட்டதோ.

அழகுதான்.அதற்காக அங்க உயிரை விடணும்னு என்ன அவசியம்:)
இந்த மாதிரி படிகள் ஸ்ரிவைகுண்டத்துக்குப் போகத்தான் வச்சிருக்காங்களோ என்னவோ:)
விசிறி கொடுத்த பொண்ணு செல்லமா இருக்கு.
கலர் கலரா என்ன அழகு உடைகள் அந்தக் குழுக்காரங்களைத்தான் சொல்லறேன்.
பொட்டு வச்சா மதம் மாற முடியுமா துளசி,ஸ்விட்சர்லாண்ட் பூரா அந்த டீனேஜ் பசங்க, ஷாருக் கான்,கஜோல் புண்ணியத்தில் ஏகப்பட்ட பொட்டு வைத்திருக்கிறதைப் பார்த்திருக்கேன். எல்லாம் ஃபான்சிதான்:)

said...

பயணம் போகட்டும்.. நானும் வந்துகிட்டு தான் இருக்கேன்

said...

வாங்க விஜி.

இது ஒரு அனுபவமா இருப்பதால் 'அனுபவிச்சு' எழுதுனேன்:-)))))

said...

வாங்க ராஜ்.

ஒரு பொட்டு வச்சுவிட்டதுக்கு சுட்டி அனுப்புனா எப்படி?????

said...

வாங்க சீனா.

குற்றம்தான். ஆனா ஆஃப் த ரெக்கார்டா வச்சுடலாமா? :-)))

said...

வாங்க தருமி.

'கண்டதை' எழுதறேன்னு சொல்றீங்களா!!!!!

said...

வாங்க குமார்.

குதிரைக் குளம்படி கூட படிய முடியாத அளவு படிகளின் அகலம்!

பறக்கும் குதிரையா இருந்தால் பயன்!

said...

வாங்க ஆடுமாடு.

வருகைக்கு நன்றி. பதிவுலே இருக்கும் போட்டோவா?

அது பையன்!!!!

said...

வாங்க அரவிந்தன்.

கூடவே வருவதற்கு நன்றி.

said...

வாங்க சுமதி.

மக்களும் அசப்பில் இந்தியச் சாயலோடுதான் இருக்காங்க!!!!

said...

வாங்க வல்லி.

பொட்டு வச்சவுடன் மதம் மாற்றம் வராதா!!!!!!!!! ஹாஆஆஆஆஆ:-))))

நியூஸியிலேயும் நம்ம பள்ளிக்கூடப் பசங்க பொட்டு பொட்டுன்னு கேட்டு வாங்கிக்கும்.

ஃபேன்ஸியேதான்!!!


வைகுண்டம் முக்கியமா கால்வலி முக்கியமான்னு .......

said...

வாங்க நசரேயன்.

திரும்பிப் பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமில்லை....தனியாப் போறோமோன்னு ஒரு பயம் வந்துருச்சு.

கூடவே வர்றீங்களா? நன்றி நன்றி

said...

நான் இந்தா class -க்கு late . Attendance மட்டும் போட்டுடுங்க டீச்சர் :-)

//நெத்தியில் இருக்கும் பொட்டைக் கவனமாப் பார்த்த ஒரு சின்னப்பெண் தனக்கும் ஒன்னு வேணுமுன்னு கேட்டுச்சேன்னு கைப்பையில் இருந்த அட்டையில் ஒன்னு எடுத்து வச்சுவிட்டேன். அடுத்த நொடி எனக்கு, எனக்குன்னு ஏகப்பட்ட பசங்கள். அந்த அட்டையில் இருந்ததெல்லாம் காலி.//

எதாவது நாயர் சேட்டன் கிட்ட இதை சொன்ன நல்ல பொட்டு கடை ஒன்னு திறந்திடுவார் :-))

//யானைப்பாதையில் ரெண்டு யானை:-)//
ஒன்னு இந்தா இருக்கு..இன்னொன்னு எங்க?!!!

said...

வாங்க டாடி அப்பா.


இன்னொரு யானை?

யானை போட்டுருக்கும் சட்டையில் இருக்கு:-)))))

said...

அங்கோர் வாட்டில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை:

https://goo.gl/photos/oMALxobJM2C2XApq8

- ஞானசேகர்

said...

அங்கோர் வாட் வந்து நிற்கிறது!!!!!

said...

கொரோனாக்காலம் ஆதலால் மீள் பதிவா

said...

தருமி said...
உங்களை மாதிரி ஊர் சுத்துனதை எழுதத் தெரிந்தால் நன்றாக இருக்கும்

:(

8/09/2010 3:50 PM

இப்போ ... ரிப்பீட்டேய்

said...

ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் பார்த்தாலும், ரசித்தாலும் ஆசை அடங்காத கோயில்களில் இது முதலிடம்.

said...

வாங்க மாதேவி, ஜிஎம்பி ஐயா, தருமி, ஜம்புலிங்கம் ஐயா,

இது ப்ளொக்கர் பண்ண அநியாயம். இன்னொரு குழு, கம்போடியாப் பயணச்சுட்டி கேட்டாங்க. அவுங்களுக்கு அனுப்புமுன் ச்சும்மா ஒரு பதிவைப் படிச்சுப் பார்த்தேன். ஒன்னுரெண்டு தட்டச்சுப்பிழை இருக்கேன்னு அங்கே ரிப்பேர் பண்ணப்போய், அது எதோ புதுப்பதிவுபோல் பப்ளிஷ் பண்ணியிருக்கு.

மன்னிக்கணும்.

இனி நோ ரிப்பேர். பிழை இருந்தால் வாசகர்களே மனசுலே திருத்திக்கட்டுமுன்னு இருக்கணும் போல ! ஙே....

said...

அப்படித்தான் நினைத்தேன். அதுவும் நன்மைக்கே மீண்டும் கம்போடியா போய் வந்துவிட்டோம்.