Friday, November 27, 2020

பொகையிலைப் புராணம்........ (ரோட்டோருஆ பயணம் . பகுதி 17 )

நம்ம பக்கம் ரெட்டை நகர்னு சொன்னதும் ஹைதராபாத், செகந்திராபாத் நினைவுக்கு வர்றதைப்போல்.... நியூஸியில்  இந்த நேப்பியரும்,  ஒரு பதினெட்டு கிமீ தூரத்தில் இருக்கும் ஹேஸ்டிங்ஸ் என்ற ஊரும்  ட்வின் ஸிட்டின்னு பெயர்  வாங்கியிருக்கு.  உண்மையில்  நேப்பியர் சின்ன ஊர்தான், ஹேஸ்டிங்க்ஸ் கொஞ்சம்  பெரிய ஊர்.  அக்கம்பக்கத்துப் பேட்டைகளையும் சேர்த்துக்கிட்டு  முப்பத்தியேழு மடங்கு பெருசே தவிர,  சனத்தொகை கணக்கைப் பார்த்தால்... ஒரு இருபதாயிரம் தான் அதிகம்! 
இங்கே வந்தால் அங்கேயும்  போய்ப்பார்க்கணும் என்ற நியதிப்படி இதோன்னு கிளம்பிப் போறோம்.  மிஞ்சிப்போனால் இருவது நிமிட் போதுமே ! நேத்துப்பார்த்த  ஹார்பர் வழியில்தான் போறோம். ஏகப்பட்ட  ட்ரக்குகள், மரத்தடிகளோடு வரிசைகட்டி நின்னுக்கிட்டு இருக்கு.  ஒரு அழகான கட்டடம் கண்ணில்பட்டது. நேஷனல் டுபேக்கோ கம்பெனி லிமிட்டட்.  பாரம்பரியக் கட்டடங்களின் அமைப்பில் சேர்க்கப்பட்டுருக்கு.  அதனால் வெளிப்புறம்  வேறெதாவது மாற்றம் செய்யறோமுன்னு கை வைக்கப்டாது..கேட்டோ !
இந்தக் கட்டடமும், அந்த பெரிய நிலநடுக்கத்துக்குக்கப்புறம்  கட்டியதுதான் . அதுக்கு முன்னேயே 1922 லே இந்த ஊருக்கு வந்து பொகையிலை யாவாரம் ஆரம்பிச்சுருக்கார் Gerhard Husheer . ஜெர்மனி நாட்டுக்காரர். அப்பெல்லாம் புகையிலையின் ஆபத்தைப்பற்றி யாரும் ஆராயலை......  இந்த பீடி, சிகெரெட்டு வலிக்கும் (மலையாளச் சொல் ) வழக்கமெல்லாம் பெரிய ஆம்பளைத்தனமா இருந்துக்கு ஒரு காலத்துலே.... இதுலே ஸ்டைல்வேற  காமிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க.
புகையிலையை, மனுஷன் பயன்படுத்த ஆரம்பிச்சு எட்டாயிரம் வருசங்களாச்சுன்னு சொல்றாங்க. புகையிலையை வாயில் போட்டு அதக்கி வச்சுக்கறது,  பொடி தயாரிச்சு மூக்குக்குள்ளே  உறிஞ்சு அனுப்பறதுன்னுதான்  இருந்துருக்கு.    எங்க அம்மாத்தாத்தா அந்தக் காலத்துலே மூக்குப்பொடி நிறுவனம் ஆரம்பிச்சு, இங்கிலாந்துக்கு ஏற்றுமதி பண்ணியிருக்கார். சென்னையில் மூணு ரீடெய்ல் ஷாப்ஸ் வேற !   அவர் காலத்துக்குப்பின் பிள்ளைகள் பொறுப்பேத்துக்கிட்டு, ஆடம்பர வாழ்வில் எல்லாத்தையும் முழுங்கிட்டாங்க.  அம்மம்மா.... எப்பவாவது சொல்லும் கதைகளில் சிலசமயம் இப்படியான உண்மைகள் வந்துவிழும் ! 
புகையிலையைப் பைப்புக்குள் அடைச்சு அதன் தலையில் தீ வைக்கும் பழக்கம் கனவான்களுக்கே உரித்தானது.  நம்ம 'அய்யா' ஒருவரும் இப்படி இருந்தார். இப்ப விட்டுட்டேன்னு அவரே சொல்லியும் இருக்கார் !  உங்களுக்கு நல்லாத் தெரிஞ்சவர்தான். 


முழு இலையைப் பதமாக் காயவச்சு அதை இறுக்கமாச் சுருட்டி, அதன் தலையில் தீயை வச்சு 'குடிப்பது' உண்டு. சுருட்டுவதால் அதுக்கு சுருட்டுன்னே பெயர் !  நம்மூர் சுருட்டுக்கு இங்கிலாந்தில் ஒரு ப்ரேமி இருந்துருக்கார் !  திண்டுக்கல்லில் விளைஞ்ச புகையிலையை, திருச்சினாப்பள்ளியில்  ( உறையூர்தானே ? ) சுருட்டிப் பொட்டியில் அடுக்கி, இங்கிலாந்துக்கு அனுப்புவாங்களாம்.

இவுங்களுக்கெல்லாம் முன்னோடியா, பதினாறாம் நூற்றாண்டில் ஒரு ஃப்ரெஞ்சுக்காரர்தான்  புகையிலையைச் சுருட்டி, குடிச்சுப் பார்த்தவராம்! Jean Nicot என்ற பெயருடையவர். அதனால்தான் புகையிலையில் இருக்கும் ஊக்குவிக்கும் சமாச்சாரத்துக்கு  நிக்கோடின் என்ற பெயர் வந்துருக்குன்னு.... ஆராய்ச்சி போகுது..... 

சின்னபசங்க, வெடிக்காத ஓலைவெடியைப் பிரிச்சு, அந்த மருந்தையெல்லாம் சேகரிச்சு ஒரு காகிதத்தில் வச்சு, அதுக்குத் தீவச்சுப் பார்த்திருப்போம்தானே.... (அதை நாம்கூடத்தான் செஞ்சுருந்தோம், இல்லே ? ) அதே போல....    'குடிச்சு முடிச்சு'க் கீழே போட்ட கட்டக்கடைசி துண்டுகளைச் சேர்த்து ஒரு மாலுமி, காகிதத்தில் வச்சுச் சுருட்டி, சிகெரெட் என்ற சமாச்சாரத்தைத்   தொடங்கி வச்சுருக்கார். 


உறிஞ்சுன புகையை, வாய் வழியா விடாம, மூக்கு வழியா விடறது, கண் வழியா விடறதுன்னு மேஜிக் எல்லாம்  காமிச்சுக்கிட்டு இருந்துருக்காங்க...... அந்தக் காலத்துலே !  எங்க அப்பாவும் ஒரு மெஜிஷியன் என்று சொல்லிக்கொண்டு........ ஹாஹா....  அப்போ நாங்க சின்னப்புள்ளீங்க இல்லே !

இப்படியாகப் புகையிலை பயன்பாடு உலகமெல்லாம் பரவிப்போயிருந்த சமயம், நியூஸிக்கும் வந்துருச்சு.  நேப்பியரில் ஆரம்பிச்ச யாவாரத்தில்  வருஷத்துக்கு முப்பத்தியஞ்சாயிரம்  பவுண்டு லாபம் பார்த்துருக்காங்க. 1922 லே தங்கம் என்ன விலைன்னு பார்க்கணும்....   கூகுளாரைக் கேட்டால்.  ஒரு அவுன்ஸ் தங்கம்,   $20.67 ன்னு சொல்றார்.  சாதாரண அவுன்ஸா இல்லை ட்ராய் அவுன்ஸான்னு தெரியலை.... கூகுளாண்டவரை சரணடைஞ்சால்  ட்ராய் அவுன்ஸ், 1527 லேயே  தங்கம் வெள்ளி அளக்க  ஆரம்பிச்சுருச்சாம்.  அப்ப  31. 1 கிராம் !   ஹைய்யோ !

எல்லாம் நல்லாப்போய்க்கிட்டு இருக்கும்போதுதான் அந்த சரித்திரத்தில் இடம் புடிச்ச நிலநடுக்கம் 1931 ஃபிப்ரவரி மூணாம் தேதி வந்து ஊரையே  அழிச்சுருச்சு. 7.8  அளவுலே   ஒரு நூறு மில்லியன் டன் வெடிமருந்தைக் கொளுத்திவிட்டாப்லெ.... இருந்துச்சாம்.  256 பேர் மரணம், 400 பேருக்கு பலத்த அடி, காயம்..... 

நிலநடுக்கமுன்னாலே எனக்கு மனம் நடுங்கிருது.  எங்க ஊரில்  இப்போ சமீபத்துலே  (2011  ஃபிப்ரவரி 22 ) 6.2 அளவு நிலநடுக்கம்.  ஊருலே பாதி அழிஞ்சே போயிருச்சு. 185 பேர் மரணம், ஒரு ரெண்டாயிரம்பேருக்கு அடி, அதுலே  164 பேர் சீரியஸ்.....  இதைப்பற்றி நம்ம துளசிதளத்துலேயே விலாவரியா அழுது புலம்பியாச்சு.  நேரம் இருந்தால் இங்கே எட்டிப்பாருங்க......    ஆறு பதிவுகள்தான்......... சுட்டியிலிருந்து நூல்பிடிச்சுப் போகலாம்......ஆச்சு... இன்னும் மூணுமாசம் போனா பத்து வருஷம். இன்னும் நகரத்தை முழுமையாக் கட்டி முடிக்கலை........ப்ச்....


இந்தக் கணக்கில் பார்த்தால் நேப்பியர் எவ்வளவோ மேல்.....  நிலநடுக்கம் ஆன மூணாம் வருஷமே  நகரத்தைக் கட்டியெழுப்பிட்டாங்க.  டெக்னாலஜி அறிவு அதிகமா ஆகஆக  ஒவ்வொன்னா ஆலோசிச்சு, ஆராய்ஞ்சுன்னு எல்லாத்துக்கும் ரொம்ப நாட்கள் எடுத்துக்கறாங்க , இல்லே ?  

நேப்பியரில் 1931 இல்  சம்பவம் நடந்த பிறகு , 1933 லேயே புகையிலைக் கம்பெனி, அவுங்க கட்டடத்தைத் திரும்பக் கட்டியெழுப்பிட்டாங்க. அதான் ஏகப்பட்ட லாபம் சம்பாரிச்சுருந்தாங்களே.....   பணப்பிரச்சனையே இல்லை பாருங்க.....

திரும்பக் கட்டுனப்பச் சீக்கிரமாக் கட்டுனதோட இல்லாமல் கலையழகு மிக்க ஆர்ட் டெகோ கட்டடமாகவும் கட்டிட்டாங்க. நேப்பியரே  'ஆர்ட் டெகோ ஸிடி' என்ற பெயர் வாங்குனதுக்கு இவுங்கதான் காரணம் !   
ரோத்தமன் கட்டடம்னு இருந்த பழைய பெயர் போய், 'நேஷனல் டுபேக்கோ கம்பெனி லிமிட்டட்' னு பெயர் மாற்றமும் அப்போதான் ஆச்சு.  நியூஸியில் பாரம்பரியக் கட்டடங்களைப்  பாதுகாக்கும்  அமைப்பு ஒன்னு ஹெரிடேஜ் ட்ரஸ்ட் என்ற பெயரில் இயங்குது.  அவுங்களை மீறி, இந்த வகையில் இருக்கும் எந்தக் கட்டடங்களில் கை வைக்க முடியாது கேட்டோ.....

Pic Below from Google . Thanks
வாரநாட்களில் பொதுமக்கள் உள்ளே போய்ப் பார்க்க அனுமதிக்கறாங்க. நாம் போகலை. இப்போ  பக்கத்தூருக்குப் போய்க்கிட்டு இருக்கோமில்லெ?  
எதையாவது வழியிலே பார்த்துட்டாக் கொஞ்சம் (! ) அதைப்பத்திச் சொல்லலாமேன்னு ஆரம்பிச்சு..... அனுமார் வால் ஆகிப்போச்சு..... சரி வாங்க ஹேஸ்டிங்ஸ் போகலாம்....

தொடரும்  ............ :-)



8 comments:

said...

சிறப்பு நன்றி

said...

திருச்சிலேர்ந்து சர்ச்சிலுக்கு எதுக்கு சுருட்டு போச்சுன்னு நானும் யோசிப்பேன். ஏதானும் அல்லக்கை காரியம் ஆவதற்காக அனுப்பி ஆரம்பித்து வைத்திருப்பாரோ?

said...

எத்தனை தகவல்கள்.

ரோத்மன்ஸ் சிகரெட் நினைவுக்கு வந்தது. எத்தனை வகைகளில் புகையிலை பயன்பாடு! அதுவும் இத்தனை காலம்! இதனை அழிக்க முடியும் என்று தோன்றவில்லை.

தொடர்கிறேன்.

said...

டுபேக்கோ கம்பெனி உங்கும் இருந்தது ஆச்சரியம்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

ஹாஹா.... அப்படித்தான் இருக்கணும் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரோத்மன்ஸ், பரவலாத்தான் இருந்துருக்கு ! இந்தியக் கம்பெனிகள் வந்தாட்டு, இதுக்கு மவுஸ் போயிருச்சோ? நாட்டைவிட்டு வெள்ளையர் போனபோது இதுவும் போயிருக்கலாம்.

said...

வாங்க மாதேவி,

மனுஷனுக்குக் கெடுதி செய்யும் தேவையில்லாத சமாச்சாரங்கள் உலகம் முழுசும் பரவிக்கிடக்குதேப்பா.