கடந்த ஒரு மாசமா நம்ம துளசிதளத்தில் பதிவுகள் ஒன்னும் இல்லாம நின்னுபோச்சு..... காரணம்..... என்னன்னு சொல்ல.... அதுக்கும் ஒரு பதிவு போட்டால் ஆச்சு, இல்லே ? ஹாஹா
எண்ணி 24 மணி நேரத்துக்குள்ளே என்னெல்லாம் நடந்துருச்சு பாருங்க...
சனிக்கிழமை நவராத்ரி விழா ஆரம்பிச்சது. ப்ரஸாதங்களோடு கொலு ஆரம்பிச்சது. மறுநாள் ஞாயித்துக்கிழமை இரவு அடிவயிறின் வலப்பக்கம் லேசா ஒரு வலி.
நவராத்ரி வேலைகள் இருக்கேன்னு பனடால் ஒன்னு போட்டுக்கிட்டு வேலைகளைப் பார்த்தேன்.
மூச்சு விடும்போது மேலாக விட்டால் ஓக்கே. கொஞ்சம் ஆழமா விட்டால் பயங்கரவலி.
முந்தாநாள் வியாழனன்று நண்பர்கள் ஐவர, குடும்பத்தினரோடு வந்தாங்க. நடனம், பாட்டுன்னு கொலுசமயம் அருமை !
நேத்து வெள்ளிக்கிழமை காலை, வழக்கம் போலக் கோலம் 'அமைச்சேன்' :-)
கார்பெட் போட்டிருக்கும் வீட்டில் கோலம் போட முடியாததால் ஸ்டிக்கர்ஸ் கோலம்தான். ஒரு ஏழெட்டு டிஸைன்ஸ் வச்சுக்கிட்டு மிக்ஸ் அண்ட் மேட்ச்.
நிவேதனம்/ ப்ரஸாதம் இன்றைக்குப் பழம் மட்டும்தான். ஸ்வாமி நமஸ்காரம் செஞ்சுட்டு ஒரு பதினோரு மணிக்குப் பக்கத்துத் தெருவில் தோழி வீட்டுக்கொலுவுக்குப் போய்வந்தோம். இப்போ இந்தியர் கூட்டம் கொஞ்சம் கூடி இருப்பதால் ஒரு சில வீடுகளில் கொலு வர ஆரம்பிச்சுருக்கு !
மாலை இன்னொரு தோழி வீட்டில் டின்னர். அது முடிஞ்சு, இன்னொரு ஃபிஜி இண்டியன் தோழி வீட்டுக்கு அம்பாள் பூஜைக்குப் போகவேணும். ஒரே நாள் , ஒரே நேரம் என்பது கொஞ்சம் கஷ்டமே. பூஜைக்கு, லேட்டா வர்றேன்னு சொல்லியிருந்தேன்.
ஒரு ரெண்டுமணிவாக்கில் வலி கொஞ்சம் அதிகமா ஆகிப்போய் ஒரு எட்டு கூட நடக்க முடியலை. தாங்கமுடியாமல் போச்சேன்னு நம்ம க்ளினிக்குக்குப் ஃபோன் செஞ்சதும் மூணு மணிக்கு அப்பாய்ன்ட்மெண்ட் கிடைச்சுப் போனோம். அந்த 'இன்னொரு டாக்டரம்மா'தான் இருக்காங்க.
கோபால் வழக்கம்போல 'கூகுள் டாக்டரை'க் கேட்டதும், Gallbladder , Kidney stones, appendicitis னு அடிவயித்து வலிக்கான மூணு காரணம் சொல்லிட்டார்.
மூணு மணிக்கு 'அசல் 'டாக்டரைப் பார்த்து, பரிசோதனை செஞ்சதும் உடனே ஹாஸ்பிடலுக்குப் ஃபோன் செஞ்சு நம்ம நியூஸி ஹெல்த் இண்டெக்ஸ் நம்பரைச் சொல்லி, அவசரமா ஒரு செக்கப் பண்ணிக்க அனுப்பறேன்னுட்டாங்க.
இங்கே தனியார் மருத்துவமனைகள் கிடையாது. எல்லா ஊரிலும் ஒரு அரசாங்க ஆஸ்பத்ரிதான் இருக்கும். எங்கூர் நியூஸியின் தெற்குத்தீவின் மிகப்பெரிய ஊர் என்பதால் பெரிய சிகிச்சைன்னா மற்ற ஊர்களில் இருந்து இங்கே கூட்டிவந்து கவனிப்பாங்க. உடனே கவனிக்கணுமுன்னா ஏர்ஆம்புலன்ஸ் ஹெலிக்காப்டர் கூட்டிட்டு வரும். இப்ப ஆஸ்பத்திரி மொட்டை மாடியில் ஒரு ஹெலிபேட் கூட வச்சாச்!
இந்த ஊரில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் கம்பெனி நடத்தும் ஒரு ஹாஸ்பிடல் இருக்கு. நாமும் அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனி பாலிஸிதார்தான் என்றாலும், அங்கே ஆர்கனைஸ்ட் ஸர்ஜரி மட்டும்தான் செய்வாங்க. அவசர சிகிச்சைன்னா..... அரசாங்க ஆஸ்பத்ரிதான்.
டாக்டர் க்ளினிக்லே இருந்து வீட்டுக்கு வந்து காது, மூக்கு, கை, கழுத்துன்னு மூளி ஆக்கிட்டு, (அனுபவம் அதிகம் இருக்கே ) நம்ம ரஜ்ஜுவுக்கும், பறவைகளுக்கும் சாப்பாடு போட்டுட்டு தோழிக்குப் ஃபோன் செஞ்சு டின்னருக்கு வரமாட்டோமுன்னு சொல்லிட்டு, ஆஸ்பத்ரியில் நம்ம டாக்டர் சொன்ன Sara (Surgical Assessment and Review Area) வார்டுக்குப் போனோம். நமக்கான ஃபோல்டர் எல்லாம் ரெடியா வச்சுருந்தாங்க. நமக்கான அறையும் ரெடியா இருந்தது.
எல்லா விவரமும் கேட்டு எழுதிக்க , ஒருத்தர் மாத்தி ஒருத்தரா ஸர்ஜரி டீம்னு அஞ்சாறுபேர் வந்து விசாரிச்சுக்கிட்டே இருந்தாங்க. நம்ம உடலின் நோய்ச் சரித்திரம் முழுசும் ஒப்பிக்க வேண்டி இருந்தது. ஏற்கெனவே நம்ம ரெக்கார்ட் முழுசும் அங்கே இருக்குதான். க்ராஸ் செக்கோ என்னவோ..... வலியின் காரணம் கண்டுபிடிக்கணுமே.... ரத்தப்பரிசோதனைகள் முதலில்...... அப்புறம் ஐவி கொடுக்க குத்திவைப்பு. 'நில் பை மௌத்' என்பதால்..... ட்ரிப் ஏத்தறது ஒரு பக்கம்.
எக்ஸ்ரே, எம் ஆர் ஐ ரெண்டும் செஞ்சுக்கணும். காத்திருக்கணும். ஆஸ்பத்ரி வைஃபை நல்லா வேலை செய்யுது. அதனால் காத்திருப்பு ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை :-) நம்மவர் கவலை படிஞ்ச முகத்துடன் (!) அவருடைய மொபைல்ஃபோன் பார்த்துக்கிட்டு இருக்கார். நான்...... நவராத்ரி சமயத்தில் இப்படி வந்து மாட்டிக்கிட்டோமேன்ற கவலையில் என் மொபைலைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். அவரவர் உலகம் அவரவருக்கு ! காலம் எப்படி மாறிப்போச்சு பாருங்க....
எங்களுக்கு இது லாங்வீக்கெண்ட் சமயம். நிறைய விசேஷங்கள் நடக்கப்போகுது. இப்படி ஆஸ்பத்ரியில் வந்து உக்கார்ந்துருக்கேன்.... ப்ச்.....
மணி ஏழாகப்போகுது. நம்மவரை வீட்டுக்குப்போய் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு, ஒரு நைட்டி கொண்டுவரச்சொன்னேன். இவரும் எக்ஸ்ரே எடுத்தாட்டுப் போறேன்னார். எங்கே..... ஒரே பிஸியாம்...... ஏழரை போலக் கிளம்பிப்போனார். இவர் அந்தாண்டை போனதும், எக்ஸ்ரேக்குக் கூட்டிப்போக ஆள் வந்தாச்சு. ஜம்னு வீல்சேர்லே போறேன். ஆஸ்பத்ரிக்குள்ளே நோயாளி நடக்கவே கூடாது :-) நடக்க விடமாட்டாங்க ! போகும்போதே அங்கங்கே ஒரு க்ளிக். அதான் செல்ஃபோன் கையில் இருக்கே! சவாரியைத்தான் க்ளிக்க ஆள் இல்லை..... :-)
எக்ஸ்ரே பிரிவில் வீல்சேரோடு என்னை விட்டுட்டுப் போனார் ஆர்டர்லி. . கொஞ்ச நேரத்துலே X-ray technologist வந்து வீல்சேரோடு உள்ளே கூட்டிப்போய் எக்ஸ்ரே எடுத்துட்டுத் திரும்பக் கொண்டு வந்து வெயிட்டிங் ஏரியாவில் விட்டுட்டுப் போனாங்க. நுரையீரல் பாதிப்பு இருக்கான்னு பார்க்கும் எக்ஸ்ரேவாம். ஆச்சு. ரெண்டு மூணு வீல்சேர்களில் மக்கள்ஸ் வந்துக்கிட்டுத்தான் இருக்காங்க. கூடவே குடும்பம் தொடர்ந்து வருது. தனி ஆளா தைரியமா இருக்கறேன், நான் :-)
கொஞ்சநேரத்தில் ஆர்டர்லி ஒருத்தர் வந்து, நம்மைத் திரும்ப வார்டுக்குக் கொண்டு போனார். போகும் வழியில் ஒரு பெரிய ஜன்னலாண்டை நிறுத்தி, அங்கேப் பார்னு காமிச்சார். இருட்டிக்கிட்டு வர்ற நேரம். பறவைகள் அங்கிருக்கும் மரங்களில் வந்து அடைஞ்சுருக்குதுகள். கூடு கட்டிக்கத் தெரியாது போல..... மரக்கிளைகளில் உக்கார்ந்துக்கிட்டே தூங்குமாம் ! க்ளிக் ஆச்சு. டபுள் க்ளேஸ் கண்ணாடி ஜன்னல் என்பதால் படம் க்ளியரா இல்லை....
ப்ச்... இங்கே எங்கூர் ஆஸ்பத்ரியில் சுமார் பாதி இடங்கள் ஜிலோன்னு காலியா இருக்கும். நானும் , 'ஐயோ... இவ்ளோ இடம் வேஸ்ட்டாகுதே..... இதை ஹால், ரூம் னு பிரிச்சா எத்தனை நோயாளிகளுக்குப் படுக்கை வசதி ஆகும்'னு நினைச்சுக்குவேன்.
வார்டுக்குத் திரும்பியதும், மறுபடி ரத்தம் எடுத்தாங்க. நரம்பில் குத்தி வச்சுருப்பதால் அப்படியே உறிஞ்சுக்க வேண்டியதுதான். ட்ரிப் ஒரு பக்கம் உள்ளே போனாலும் கூட, எனக்கு வயிறு கவாங் கவாங்குது. பசியை மறக்க அறையைக்ளிக்கிக்கிட்டு இருந்தேன்.
அன்று இரவு ஒரு தோழி வீட்டுப் பூஜைக்கு லேட்டா வர்றேன்னு சொல்லி இருந்தது, நினைவுக்கு வந்ததும், ஹாஸ்பிடலில் இருப்பதால் வர இயலாதுன்னு சேதியைச் சொன்னேன்.
மகள், சேதி அனுப்பினாள். எந்தப்பேரில், எந்த வார்டில் இருக்கேன்னு..... மறுநாள் அவள் லாங் வீக்கெண்டுக்குக்காக ஆக்லாந்து நகர் போறாள். அவளுடைய பொறந்தநாளை அங்கே கொண்டாட வாங்கிய டிக்கெட் அது. ஆக்லாந்தில் கொரோனா திரும்பி வந்துருச்சுன்னு லாக்டௌன் செஞ்சு எல்லா ப்ளைட்டையும் நிறுத்தி வச்சுட்டாங்க. நாங்களுமே ஒரு கல்யாணத்துக்குப் போக டிக்கெட் எடுத்துருந்தோம். அந்தக் கல்யாணத்தையும் தள்ளிப்போட வேண்டியதாப் போச்சு. பத்துப்பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை. ஏர்லைன்ஸும் 'உங்க காசு எங்களாண்டை பத்திரமா இருக்கு. லாக்டௌன் முடிஞ்சாட்டு எப்ப வேணுமோ அப்போ இதைப் பயன்படுத்திக்கலாமு'ன்னு சொல்லிட்டாங்க. இப்படி மகளுடைய டிக்கெட்டுகளை, இந்த லாங் வீக் எண்டில் பயன்படுத்தறாள். மகள் & மருமகனுக்கு மூணுநாள் லீவு இருக்குல்லே !
'அம்மா இஸ் ஓக்கே. வர வேண்டாம். நீ ஊருக்குக் கிளம்பும் வழியைப் பாரு'ன்னு சேதி அனுப்பினாலும் கேக்கலை. டின்னர் முடிச்சுட்டு வர்றாங்களாம். அப்புறம்தான் தெரிஞ்சது , 'நம்மவர்' மகளாண்டை அம்மாவைப்போய்ப் பார்த்துட்டுப் போன்னு சொல்லி இருக்கார். அவள் திரும்பி வர்றதுக்குள்ளே எனக்கு 'ஏதாவது' ஆகிட்டால் என்ற பயம் போல ! ஹாஹா...
இவரும் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுத் திரும்ப வந்தார். கொஞ்ச நேரத்தில் மகளும் மருமகனும் வந்தாங்க. பொதுவாப் பேசிக்கிட்டு இருந்தோம். இன்னொரு முறை மெடிக்கல் டீம் வந்து விசாரிப்புகள் ஆச்சு. மகள், ஆதரவாக் கையைப் பிடிச்சுக்கிட்டு உக்கார்ந்துருந்தது எனக்குப் பிடிச்சிருந்தது. இவர் என்னென்ன சொல்லி வச்சாரோ ? மணி பத்து ஆகுது நீங்க கிளம்புங்கன்னு அவுங்களை அனுப்பி வைப்பதே பெரிய பாடாப் போச்சு :-)
அவுங்க போன கொஞ்ச நேரத்தில் எம் ஆர் ஐ ஸ்கேனுக்கு என்னைக் கூப்பிட்டுப்போனாங்க. கூடவே இவரும் வந்தார். பறவை ஜன்னல் பக்கம் பயங்கர இருட்டு. ஒன்னுமே தெரியலை. நரம்பில் எதோ சாயம் ஏத்திட்டு ஸ்கேன் பண்ணுவாங்களாம். அடடா.... என் தலைக்கு சாயம் ஏத்தப்டாதோ ?
ஏற்கெனவே சிலமுறை ஸ்கேன் அனுபவம் இருப்பதால் அலட்டிக்காம இருந்தேன். என்ன ஒன்னு, காது செவிடாறமாதிரி சத்தமா இருக்கும்..... ப்ச்..... ஆனால் எல்லாமே மாறிப்போச்சு போல.... ஒரு சத்தமும் இல்லாம ஸ்கேன் நடக்குது. சுத்திச்சுத்தி வருது! பரவாயில்லையே !!!!
முடிச்சுட்டுக் கொஞ்சநேரம் அங்கே வெளியே வீல்சேரில் வச்சுட்டாங்க. வயித்தைக் குமட்டிக்கிட்டு ஒரே 'டேஷ்' ஆரம்பிச்சது. பத்து நிமிட் போல....யக்...... ' டேஷ்' குவளையைக் கையில் பிடிச்சுக்கிட்டே திரும்ப வார்டுக்கு வந்தாச்.
அரை மணி நேரத்துக்குப்பின், சாப்பிட ஒரு ஐஸ்க்ரீமும், ஜெல்லியும் கொண்டு வந்து கொடுத்தாங்க. பச்சைக்கலர். நம்ம ஃபேவரிட் கலர் இவுங்களுக்கு எப்படித் தெரியும் ? கேஸ் ஹிஸ்டரியில் இருக்கோ ? ஹாஹா
ஒரு ரெண்டு ஸ்பூன் உள்ளே போனதும் திரும்ப 'டேஷ்' ஆரம்பிச்சது. போதுண்டா சாமி...... பெயின் கில்லர்ஸ் கொண்டு வந்து கொடுத்துட்டு அப்படியே 'டேஷ்' நிறுத்த இன்னொரு மருந்தும் நரம்பில் ஏத்திவிட்டாங்க.
நம்மவர் கொண்டுவந்த நைட்டிக்கு மாறிட்டு, இவரை வீட்டுக்குப் போகச் சொன்னேன். பதினொன்னரை ஆச்சு.
இன்னொரு டீம் வந்து பார்த்துட்டு, எக்ஸ்ரே & ஸ்கேன், ப்ளட் ரிப்போர்ட் க்ளியரா இருக்கு. மத்தபடி ஏன் வலின்னு கண்டுபிடிக்க முடியலை. நாளைக்கு இதைப் பத்திப் பேசலாம். உங்களை வேற வார்டுக்கு மாத்தறோமுன்னு சொல்லிட்டுப் போனாங்க. . ஸாரா வார்டில் மொத்தம் 12 கட்டில்கள்தான். நோய் என்னன்னு கண்டுபிடிக்க மட்டுமே இந்த வார்டு என்பதால் ... இடமாற்றமாம். மருந்து உள்ளே போனதும் வலி கொஞ்சம் மட்டுப்பட்டு இருக்கு. அப்படியே அசந்து தூங்கிட்டேன்.
பனிரெண்டே காலுக்கு ஆர்டர்லி வந்து கட்டிலோடு என்னைக் கூட்டிப்போய் வார்ட் 17 இல் கொண்டு விட்டார். இந்தப் பெரிய அறையில் 6 படுக்கைகள். ஒவ்வொன்னும் திரைச்சுவர். நமக்கு படுக்கை எண் 1. முதல் ரேங்க் :-) ஒரு நர்ஸ் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு, அவுங்கதான் என்னைக் கவனிக்கப்போவதாகச் சொல்லி, ப்ளட்ஷுகர், பிபி, பல்ஸ், எல்லாம் செக் பண்ணிட்டுப் போனாங்க. ஆண்களும் பெண்களுமாத்தான் இங்கே.... இருக்காங்க போல..... ஒரு ஆள் இருமும் சத்தம் கேட்டது. ராத்ரி முழுசும் நர்ஸுகளின் ஓயாத நடமாட்டம். ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு இருக்கும் ஆறு பேருக்கும் தனித்தனியா வந்து போய்க்கிட்டு இருக்காங்க.
மூணு மணிக்கு நமக்கான நர்ஸ் வந்து, சம்ப்ரதாயம் எல்லாம் செஞ்சுட்டுப் போனாங்க. பிபி ரொம்பவே இருக்காம். தூக்கம் கலைஞ்சு போச்சு..... அதான் இருக்கவே இருக்கே வைஃபை. டைம்பாஸ் ஆச்சு. ஆறுமணிக்கு வேறொரு நர்ஸ் நமக்கு. நைட்ஷிஃப்ட் முடிஞ்சு போச்சாம் மீகனுக்கு ! சம்ப்ரதாயச் செக்கப் ஆச்சு. பிபி இன்னும் குறையலை. ரத்தத்துலே சக்கரை அளவு அதிகமா காமிக்குது. இன்னும் காஃபித்தண்ணிகூடக் குடிக்கலை... அதுக்குள்ளேயா ? அடராமா!
பல் தேய்ச்சுட்டு வந்தேன். வார்டு மாறின சேதியை, நம்மவருக்கு வாட்ஸப் மூலம் அனுப்பினேன். அர்த்தராத்ரியில் எழுப்ப வேணாமுன்னுதான் இங்கே வரும்போது சொல்லலை. சேதி அனுப்புனதும் பதில் வருது, புது அறைக்கு வரும்போது, பழைய அறையில் இருந்து நம்ம ஃபோன் சார்ஜர் எடுத்துவந்தயா? இல்லையா பின்னே.... மறக்கற சமாச்சாரமா அது ?
நம்மவர், ரஜ்ஜுவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு, மகள் வீட்டுக்குப்போய் ஜூபிடருக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்துட்டு, வீட்டுக்கு வந்து குளிச்சுக் கடமைகளை முடிச்சு, ஸ்வாமி விளக்கேத்திட்டு, அதை க்ளிக்கிட்டு (எனக்கு எவிடன்ஸ் காமிக்க ) இவரும் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு, நம்ம தோட்டத்துப் பறவைகளுக்கு ப்ரெட் கிள்ளிப்போட்டுட்டு ஆஸ்பத்ரிக்குக் கிளம்புவதாச் செய்தி அனுப்பினார். ஸ்மார்ட் ஃபோன் கையில் இருப்பது நல்லாதான் இருக்கு!
எனக்கு ஏழேகாலுக்கெல்லாம் ப்ரேக்ஃபாஸ்ட் வந்தது. ஒரு ஸ்லைஸ் டோஸ்ட் ப்ரெட், வெண்ணை, கொஞ்சம் ம்யூஸ்லி, அதுக்கான பால், கொஞ்சம் டின் ஃப்ரூட். காஃபி டீ கொடுக்கத் தனி ஆள். அவுங்க வந்து எது வேணுமுன்னு கேட்டுட்டுக் கொடுத்தாங்க.
லேப்லே இருந்து ரத்தம் எடுக்க ஒரு டெக்னிஷியன் (Phlebotomists என்பது சரியான பெயர் என்று நினைக்கிறேன் ) வந்தாங்க. ஏற்கெனவே வலக்கை நரம்புலே குத்தி வச்சதில் இருந்து உறிஞ்சப்டாதோ ? இடக்கை முழங்கைப்பக்கம் எடுக்கப்போறேன்னு சொன்னாங்களா.... அங்கெல்லாம் எனக்கு நரம்பு கிடைப்பது கஷ்டம். இடக்கை விரலுக்குப் பக்கம் எடுங்கன்னதுக்குக் கேட்டாத்தாதானே? லெட் மீ ட்ரைன்னு சொல்லிக்கிட்டே முழங்கைக்குக் கீழே என்னென்னவோ செஞ்சு ரத்தம் எடுத்துக்கிட்டு, ஊசியை அப்படியே விட்டுவச்சுட்டுப் போனாங்க. அப்புறம் இன்னொருக்கா ரத்தம் எடுக்க வருவாங்களாம்.
இப்படித்தான் இங்கே நியூஸி வந்த புதுசில் நம்ம வீட்டுக்கு எதிர்வாடையில் இருக்கும் ஜி பி, (ஜெனரல் ப்ராக்டீஷனர்) க்ளினிக்கில் நம்ம குடும்பத்தைப் பதிஞ்சுருந்தோம். இப்பவும் நம்ம குடும்ப மருத்துவம் அங்கேதான். அப்போ ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்துட்டு, லேப் வரை போக நேரம் இல்லைன்னா.... இங்கேயே நர்ஸ் ரத்தம் எடுத்து லேபுக்கு அனுப்பிருவாங்கன்னதும், நல்லதாப் போச்சுன்னு இருந்துட்டேன். நர்ஸம்மா வந்தாங்க. ரொம்பவே வயசானவங்க. (அப்போ எனக்கு , இப்ப இருப்பதைவிட 32 வயசு குறைவு! )
நடுங்கும் கைகளால் என் இடக்கையில் ஒரு அஞ்சாறு இடத்துலே ஊசியைக்குத்திட்டு, நரம்பு கிடைக்கலைன்னதும், இன்னொரு கையிலே கிடைக்குதான்னு பார்க்கறேன்னு ஆரம்பிச்சாங்க. 'ஆளை விடும்மா..... சாமி. நான் லேபுக்கே போய்க்கறேன்'னுட்டேன். இடக்கை முழுசும் பொட்டுப்பொட்டாய் ப்ளாஸ்டர் போட்டு அலங்கரிப்பு வேற !
கொஞ்ச நேரத்துலே 'நம்மவரும்' வந்துட்டார். இப்ப வார்டு நர்ஸ் வந்து சம்ப்ரதாயம் சேவை ஆரம்பிச்சது. ரத்தத்துலே சக்கரை அதிகமா இருக்கறதால் அதுக்கு மருந்து கொண்டு வரேன்னு சொல்லிட்டுப் போனாங்க. நம்ம மாத்திரையே கைவசம் இருக்கு, கோபால் கொண்டு வந்துருந்தார்தான். ஆனால் ஆஸ்பத்ரியில் அவுங்க கொடுப்பதைத்தான் எடுத்துக்கணும்.
ஒரு ஒன்பது மணியானப்ப, நேத்து நம்மைப் பார்த்த ஸர்ஜிகல் டீம், அவுங்க தலைவரோடும், இன்னும் நாலு மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸுமா கூட்டமா வந்தாங்க. சரியா ஒன்பது பேர். நவக்ரஹம்தான் போங்க. நம்ம சரித்திரத்தை நேத்து எழுதுன மருத்துவர், தலைவரிடம் முழுசுமா வாசிச்சுக் காட்டினார். அப்புறம் வயிறு பரிசோதனை. ப்ரைவஸி வேணுமுன்னதும், கூட்டத்தில் ஆறுபேர் வெளியே போனாங்க.
பெண் தலைவர், வயித்தை அமுக்கி ஒரு வழி பண்ணிட்டாங்க. ஒன்னும் கண்டு பிடிக்க முடியலை..... (மர்ம வலி.... ஒரு வேளை கர்ம வலியோ !) எதுக்கும் இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் ஆராயணும். நீங்க ரெஸ்ட் எடுங்கன்னுட்டுப் போனாங்க. இது என்னடா நமக்கு வந்த சோதனை......
பதினொரு மணிக்கு மிட்மார்னிங் காஃபி/ டீ வந்தது . நாங்க ஆளுக்கொரு டீ குடிச்சோம். பனிரெண்டுமணி வாக்கில் ஸர்ஜிகல் டீம் லீடர், வந்து ப்ராப்லம் என்னன்னு கண்டு பிடிக்க முடியலை.... ன்னார். ( உக்கார்ந்து யோசிச்சும் கூடவா ?)
"அப்ப வீட்டுக்குப் போகலாமா ? "
'உங்களை வீட்டுக்கு அனுப்பலாம்தான். வலிக்காக பெயின் கில்லரா பனடால் எடுத்துக்குங்க. எழுதித்தரவா ?' ன்னார்.
"வீட்டில் ஏகப்பட்ட மாத்திரைகள் இருக்கு. வேணாம். வலி வரும்போது ஒவ்வொன்னு எடுத்துக்கிட்டுத்தான் இருக்கேன்."
சின்ன அதிர்ச்சி அவர் முகத்தில்! என்ன ஒன்னுதானா? ஊஹூம்....நாலு மணி நேரத்துக்கு ஒருமுறை ரெண்டு மாத்திரைகள் எடுக்கணும்.
சரின்னு தலையாட்டிட்டு, டிஸ்சார்ஜ் லெட்டர் தாங்கன்னால்..... அதை போஸ்ட் பண்ணிருவோம். நீங்க வீட்டுக்குப் போகலாமுன்னார். கையில் குத்தி வச்சுருக்கும் ஊசிகளை எடுக்க, நமக்கான நர்ஸம்மாவைக் கூப்பிட்டேன். கொஞ்ச நேரத்தில் (சந்தோஷமா) வந்தாங்க. இங்கே ஒன்னு சொல்லணும். ஒரு நோயாளியை இங்கே ஒருநாள் வச்சுருக்க அரசுக்குச் செலவு 800 டாலர்கள் ஆகுது. அதனால் ரொம்ப அவசியம் , ஆபத்து இல்லைன்னா வீட்டுக்கு அனுப்பிவிடுவதுதான் 'எல்லோருக்கும்' நல்லது :-)
ஊசிகளை எடுத்துட்டுப் ப்ளாஸ்டர் போட்டு ஒரு நிமிட் கூட ஆகலை. அதுபாட்டுக்கு குழாயைத் திறந்து வச்சுட்டாப்போல திபுதிபுன்னு தரையெல்லாம் ரத்தம் கொட்டுது. இன்னொருக்கா ஓடிவந்து சிசுருஷை பண்ணி ஒரு வழியா செட்டில் ஆச்சு. நமக்கான மாத்திரைகள் கீழே ஹாஸ்பிடல் பார்மஸியில் இருந்து இன்னும் வரலையாம். போகட்டும் நம்ம கைவஸம் இருப்பதை எடுத்துக்கலாம்.
மெள்ளக் கிளம்பி வர்றோம். 'நம்மவர்' வாசல் பெஞ்சில் உக்காரச் சொல்லிட்டு, வண்டியை எடுத்துவரப்போனார். இன்றைக்கு 'லேபர் டே' (நம்ம மே தினம் போல ) என்பதால் அரசு விடுமுறை. அதனால் நோ பார்க்கிங் சார்ஜ். நல்லதாப் போச்சு.
ஹாஸ்பிடல் பார்க்கிங் என்பது சமீபகாலத்தில் பெரிய தலைவலியாக இருக்கு. ஸிட்டிக்கவுன்ஸில் கார்பார்க்கில் போய் வண்டியை நிறுத்திட்டு (இதுக்குக் காசு அடைக்கணும்) ஒரு ஃப்ரீ ஷட்டில் மூலம் ஹாஸ்பிட்டலுக்குப் போகணும். அதேபோல் ஃப்ரீ ஷட்டில் மூலம் கார்பார்க்குக்குக் கொண்டு வந்து விட்டுருவாங்க. இப்போ ஒரு நாலைஞ்சு மாசமா இதை நிறுத்திட்டு, இன்னொரு இடத்தில் ஹாஸ்பிடலுக்கு ஒரு பார்க்கிங் ஏற்பாடு செஞ்சுட்டு, அங்கிருந்து ஹாஸ்பிடல் வரப் போக ஃப்ரீ ஷட்டில் ஏற்பாடு. எந்தொரு ஸல்யம் :-( இங்கேயும் பார்க் செய்யும் நேரத்துக்குக் காசு அடைக்கணும்.
ரெண்டுவாட்டித் தலையைச் சுத்திக் காது வழியா மூக்கைத் தொடணுமா ? யாரோட அபூர்வ ஐடியான்னு தெரியலை.... அந்தாள் மட்டும் கையில் கிடைக்கணும்..... சனம் கொதிச்சுக்கிட்டு இருக்கு..... உள்ளூர் எலக்ஷன் வரும்போது இருக்குன்னு.....பொருமிக்கிட்டு இருக்கோம்.
வீட்டுக்கு வந்ததும் , சட்னு குளிச்சுட்டு, நேத்து தோல்சீவி எடுத்துவச்ச அன்னாசிப்பழத்தை ஜூஸ் போட்டு, அதுவும் கடையில் வாங்கிய ட்ரை கச்சோரியுமா ஸ்வாமி நைவேத்யம் ஆச்சு. சட்னு சாதம் மட்டும் ஆக்கித் தச்சு மம்முவா ஒரு லஞ்சும். வலிக்காக ரெண்டு பனடாலை எடுத்துக்கிட்டுக் கட்டையைக் கிடத்தினேன்.
இன்றைக்கு நம்ம இண்டியன் க்ளப்பின் தீபாவளி விழா. பகல் ரெண்டு மணிக்கே ஊர்ப்பொது இடமான ஹேக்ளி பார்க்கில் கொண்ட்டாட்டம் ஆரம்பிக்குது. இந்த இண்டியன் க்ளப்பை ஆரம்பிச்சது 'நம்மவர்' என்பதால்..... நமக்குப் போய் வரணும்தான். 1997 இல் ஆரம்பிச்சுக் கொடுத்து வெற்றிகரமா இதுவரை நடக்குதேன்னு 'நம்மவருக்கு' ஒரு பெருமிதம் ! ஃபாதர் ஆஃப் த க்ளப் இல்லையோ !
எனக்கு உடம்பு சரியில்லாததால்.... போக இயலாதுன்னு ஒரு கலக்கம் முகத்தில் தெரிஞ்சது. தனியாப் போயிட்டு வாங்கன்னாலும் வேணாமுன்னார். அதனால் சாயங்காலம், மகள் வீட்டுக்குப்போய் அவளுடைய செல்லத்துக்குச் சாப்பாடு கொடுத்துட்டு, அப்படியே கிளம்பி ஹேக்ளி பார்க் போனோம்.
ஆரவாரமா மேடையில் நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு. நல்ல கூட்டம். சிலபல நண்பர்களைப் பார்த்து சில வார்த்தைகள் (எல்லாம் ஹேப்பி திவாலிதான், வேறென்ன ?) பேசிட்டுக் கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டுக் கிளம்பிட்டோம். ஏகப்பட்ட இண்டியன் தீனிக்கடைகள் ஸ்டால்ஸ் இருக்கு. ராச்சாப்பாடு இங்கேயே முடிச்சுக்கலாமுன்னா.... ஒவ்வொரு ஸ்டாலிலும் கூட்டமோ கூட்டம். வரிசையில் நின்னால் எப்படியும் முக்கால் மணி நேரம் ஆகும்...... எதுவும் வேணாமுன்னு கிளம்பி, வீட்டுக்கு வரும் வழியில் இருக்கும் பீட்ஸாக் கடையில் ஒரு பீட்ஸாவுக்கு ஆன்லைன் ஆர்டர் கொடுத்துட்டு, ரெடியா இருந்ததை வாங்கி வந்து டின்னர் முடிச்சாச்.
மறுநாள் வலியுடன் 'கழிந்தது' ! ஃரெவ்வெண்டு பனடால் வயித்துக்கு ஆகலை. நவராத்ரியில் சரஸ்வதி பூஜை இன்று. சுலபமா செய்யக்கூடிய பொட்டுக்கடலை லட்டு மட்டும் நைவேத்யத்துக்குச் செஞ்சேன். மத்தபடி கிடப்புதான். . ஹாஸ்பிடலில் சொல்லச் சொல்லக் கேக்காமல் முழங்கைக்குக் கீழே ரத்தம் எடுத்த இடம் கன்னங்கரேல்னு ஆகி இருக்கு. இது நிறம் மாறிக்கிட்ட மூணுவாரம் ஆச்சு. ப்ச்....
அதுக்கு அடுத்தநாள் விஜயதசமி. பொதுவா நம்ம வீட்டுலே விஜயதசமிக்கு நண்பர்களைக் கூப்பிட்டுச் சின்னதா ஒரு விழா நடக்கும். ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம்தான். இந்த முறை மகள் ஊரில் இல்லாததால் அடுத்துவரும் சனிக்கிழமைக்கு ஒத்திப்போட்டுருந்தேன். அது நல்லதாப் போச்சு. ஆனாலும் நாள் கிழமையை விட முடியுதா?
சின்ன அளவில் கொஞ்சமாச் சக்கரைப்பொங்கல், எலுமிச்சை சாதம், ததியன்னம், பாயஸம் மட்டும் செஞ்சு நாங்க ரெண்டுபேரும் உக்கார்ந்து ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிமுடிச்சோம்.
சாயங்காலம் ரெண்டு தோழிகள் வர்றதா ப்ளான் இருந்தது. ஒரு ஃபிஜி தோழி மகளுடன் வந்தாங்க. இவுங்க வீட்டுப் பூஜைக்குத்தான் போக முடியாமல் போச்சு. மகள் நடனம் கத்துக்கறாள். நம்ம கொலுவுக்கு ஒரு நடனமும் ஆச்சு. ரொம்ப அழகான பெண். அசல் 'மூக்குத்தி அம்மன்'தான். அவுங்க கிளம்பிப்போனதும் கொஞ்ச நேரத்தில் வர்றேன்னு சொன்ன தோழி வந்தாங்க. பாலக்காடு. கோவில் பூஜைகள் எல்லாம் அத்துபடி. ஊரில் குடும்பக்கோவில் இருக்கு !
ரெண்டு ஸ்லோகம் சொல்லி பெருமாளுக்கு நமஸ்காரம் ஆச்சு. பிரஸாதம்தான் டின்னர் :-)
லாங் வீக்கெண்ட் இன்றோடு முடிஞ்சது. மறுநாள் வேலைநாள். நம்ம குடும்ப டாக்டரைப் பார்க்கப்போகணும். போனதும் விசாரிப்பெல்லாம் முடிச்சுட்டு ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக்கொடுத்தாங்க. வீட்டுக்கு வரும்போதே லேப் போயிட்டு வந்தோம். மறுநாள் டாக்டரிடம் இருந்து ஃபோன் வந்தது. ரிப்போர்ட் ஒன்னும் சரி இல்லை. இன்னொருக்கா ப்ளட் டெஸ்ட்டுக்கும் அல்ட்ரா சௌண்ட்க்கும் எழுதிக்கொடுக்கறேன்னாங்க.
அதைப்போய் வாங்கிக்கிட்டு இன்னொருக்கா லேப் போயிட்டு வந்தோம். நல்லவேளை ஃபாஸ்டிங் டெஸ்ட் இல்லாததால் உடனுக்குடன் போக முடிஞ்சது. ஸ்கேனுக்கு நம்ம டாக்டரே புக் பண்ணிட்டாங்க. ஸ்கேன் சென்டரில் இருந்து கூப்பிட்டு நாள் நேரம் சொல்வாங்களாம். சொன்னாங்க....அங்கே என்ன பிஸியோ... நவம்பர் 11க்குத்தான்நாள். பத்தரை மணிக்குப் போகணும், வெறும் வயித்தோடு.
இதுக்கிடையில் அக்டோபர் 31 ஆம் தேதி, நம்ம வீட்டுலே ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் நல்லபடி நடந்தது. நம்ம யோகா க்ரூப்பில் இருக்கும் ஒரு தோழி (குஜராத்) கொஞ்சம் லட்டும், ருமால் ரோட்டியும் செஞ்சு கொடுத்தாங்க. 'நம்மவர் ' உதவியுடன் பிரஸாதங்களும், ரைத்தா, வெஜ் குருமான்னு செஞ்சேன். பாவம்..... 'நம்மவர்'. வேலை ட்ரில் வாங்கிருச்சு. 'பூஜைப்பலன் முழுசும் அவருக்கே கொடுத்துருப்பா'ன்னு நம்ம பெருமாளாண்டை சொல்லிட்டேன்.
நவம்பர் 11க்கு ஸ்கேன் எடுத்துட்டு வந்தாச்சு. இந்த வாரமும் லாங் வீக்கெண்ட் என்பதால் (எங்கூருக்கு அனிவர்ஸரி. ஷோ டே ! ) ரிப்போர்ட் டாக்டருக்குப் போய்ச் சேர்ந்தும் கூட, இன்னும் கூப்பிடலை. தீபாவளிப் பண்டிகை வந்துருச்சு. ஓரளவு வீட்டில் கொண்டாடிட்டு, நம்ம புள்ளையார் கோவில் & சநாதன தர்ம ஹால் பூஜைகளில் கலந்துக்கிட்டோம். சாயங்காலம் சமீபத்தில் ஆரம்பிச்ச கிறைஸ்ட்சர்ச் இண்டியன் தமிழ் அசோஸியேஷன் தீபாவளி விழாவுக்கும் போய் வந்தாச்.
அப்பப்ப வலிக்கு ஒரு மாத்திரை போட்டுக்குவேன். நேத்து நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலில் கோவர்தன கிரி பூஜையில் கலந்துக்கிட்டோம்.
இன்றைக்கு லாங் வீகெண்ட் முடிஞ்சு, வேலைநாள் ஆரம்பிச்சாச். பொறுத்துப் பார்த்துட்டு, நம்மவரே க்ளினிக் நம்பரில் கூப்பிட்டார். ரிப்போர்ட் வந்துருச்சாம். இதிலும் ஒன்னும் குறிப்பிடும்படி இல்லையாம். ஆல் க்ளியர் !
ஒரே மர்மம்தான் போங்க...... இன்னும் கட்டாமல் வச்சுருக்கும் ஏழு புடவைகளைக் கட்டி முடிச்சுடணும். அதுக்கப்புறம்தான் மர்மம் விடுபடுமுன்னு நினைக்கிறேன் :-) பெருமாள் என்ன நினைக்கிறாரோ ? க்யா மாலும் !
மேற்படிக் காரணங்களால் ஒரு வாரம் கேட்ட நவராத்ரி லீவு..... ஒரு மாசமா நீண்டு போச்சு.
தன்னிலை விளக்கம் போதுமுன்னு நினைக்கிறேன். ஆனது ஆச்சு......வர்ற புதன் முதல் துளசிதளத்தில் பதிவுகளைத் தொடர வேணும்.
வாசக நண்பர்கள் அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகளுடன் என் அன்பும் ஆசிகளும்! நல்லா இருங்க.
PINகுறிப்பு : லீவு லெட்டர் கூட பப்ளிஷ் ஆகாமல் கிடந்துருக்கு..... இப்பதான் பார்த்தேன். மாப்பு ப்ளீஸ்
16 comments:
நல்லபடியா உடம்பைப் பார்த்துக்கோங்க மா.
கடவுள் துணை இருப்பார் மா.
உடம்பு சரி இல்லைன்னாலும் இவ்வளவு நகைச்சுவையா, உற்சாகமா பேச, எழுத உங்களால தான் முடியும்.
take care ma
god bless you all
cheers
கடைசியில் colitis என்று சொல்லி omeprazole மாத்திரை கொடுப்பார்கள்.
Jayakumar
ஒரு மாச இடுகைகளை ஒரே இடுகையா, கொஞ்சம் சுருக்கமா போட்ட ஃபீலிங்.
ஒரு பிரச்சனையும் இருக்காது. கவலைப்பட வேண்டாம். இருந்தாலும் அரசாங்க ஆஸ்பத்திரி, ஓரளவு நல்ல சிஸ்டம் இருப்பதால் ரொம்ப சல்லியம் இல்லை என்று தோன்றியது.
மகன், மருமகள் படங்கள் காணோம். ஆஸ்பத்திரி பேக்ரவுண்ட் வேண்டாம் என்று நினைத்துவிட்டீர்கள் போலிருக்கு
ஏதோ ராமநாராயணன் அம்மன் படம் பார்த்த மாதிரி இருக்கு. அந்த ஃபீஜி அம்மனுக்கு வாழ்த்துகள்
பிரசாதங்கள் படங்கள் அருமை. அதிலும் லட்டு ரொம்ப அழகா இருந்தது. கோபால் சார் செய்த வெஜ் ரெய்த்தா, குருமாதான் எங்க இருக்குன்னு தெரியலை.
ஒரு நீண்ட த்ரில்லர். வலிதான் பாவம் எப்படி பொறுத்துக் கொண்டீர்களோ.
பாவம்மா துளசி.
கொலு படங்களும் எல்லாப் படங்களும்
சூப்பர்.
இப்ப ஆல் க்ளியர் சொல்லிட்டாங்கதானே.
நல்லா இருங்கப்பா.
எதை நினைத்தாலும் மனம் பயப்படுகிறது. மீண்டும் ஒரு இந்தியப்
பயணம் போக பகவான் சந்தர்ப்பம்
கொடுப்பார்,.
உங்களுக்கும் கோபாலுக்கும், ரஜ்ஜுவுக்கும் இனிய வாழ்த்துகள்.
இப்போ உடம்பு எப்படி இருக்கு? டேக் கேர். அதிகம் ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க. முக்கியமா பெரிய பெரிய பதிவு எழுது.
லீவ் கிராண்டட்.
நான் வகுப்பைப் பார்த்துக்கிறேன். யூ டேக் ரெஸ்ட்.
ஹாய் துளஸிக்கா .இப்போ ஹெல்த் நலம்தானே .எதோ இன்னிக்கு எட்டி பார்க்கணும்னு தோணி வந்தேன் .வந்தால் இங்கே உங்கள் அனுபவம் அச்சச்சோவ் .கவனம்க்கா வலி சில நேரம் நாம் சாப்பிடற உணவினாலும் வரும்க்கா .காலிப்ளவர் ப்ரோக்கோலி மஷ்ரூம் இதுங்க வயிற்றில் இப்படி வலி தரும் .உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க .ஏழெட்டு புடவைகளுக்கு மேட்சிங்கா மோதிரம் வளையலெல்லாம் வாங்கணும் மறந்துராதீங்க .உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பண்டிகைக்கால வாழ்த்துக்கள் .
கடந்த வலி கடந்து விட்டது. இறைவன் அருளால் நலமே இருங்கள்.
கொலு அருமை அம்மா
என் மகளுக்கு உங்கள் ரஜ்ஜு மாறும் கொலு ரொம்ப பிடிச்சு போச்சாம் .
இந்த உடல் நிலையிலும் உங்களின் முயற்சிக்கு பெருமாள் உங்களுக்கு பூரண நலம் கொடுப்பார் அம்மா
இப்போ எப்படி இருக்கீங்க ?
பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி !
@ ஜயகுமார்,
இதை ஏற்கெனவே கோபாலுக்குக் கொடுத்துட்டாங்க. ரெண்டு வருஷமா எடுத்துக்கறார் !
@ நெல்லைத்தமிழன்,
சின்ன திருத்தம்.... 'கோபால் சார் செய்த வெஜ் ரெய்த்தா, குருமாதான் ...' செய்த இல்லை.... 'உதவி செய்த'ன்னு இருக்கணும் :-)
இப்போ உங்களுக்காகப் படம் சேர்க்கலாமுன்னா ப்ளொக்கர் சொதப்பல். மன்னிச்சூ....
@ வல்லிசிம்ஹன்,
ஆல் க்ளியர்னு அவுங்க சொன்னால் ஆச்சா ? வலிக்கு இது தெரியலைபோல..... அப்பப்ப வலிச்சுக்கிட்டேதான் இருக்கு. ஜஸ்ட் ஒன் பனடால் ரிமைண்டர். மர்மவலி தானாகவே போனால்தான் உண்டு போல !
வாங்க கொத்ஸ்,
வகுப்புத்தலைவனா, லக்ஷணமா வகுப்பைப் பார்த்துக்குங்க. நீண்ட பதிவு எழுத...எங்கே போறது? அதான் கொரோனா கட்டிப்போட்டுருச்சே !
வாங்க ஏஞ்சல்,
மேட்ச்சிங் இங்கே நோ நோ..... நம்ம புடவைகளுக்கு, இங்கே சரிப்படாது.... உள்ளதைக்கொண்டு....பார்க்கணும் :-)
நேத்து காலிஃப்ளவர் கறி சாப்பிட்டதில் இருந்து வலி அதிகமானாப்லெ ஒரு தோணல்....
மருந்து சாப்பிடும்போது..... குரங்கை நினைக்கப்டாது இல்லே ? ஹாஹா
get well soon Thulasi
வாங்க கலா,
நன்றி !
Post a Comment