Monday, November 30, 2020

உச்சியிலே கிடக்குறாரு , அந்த ராசாமகன் ....... (ரோட்டோருஆ பயணம் . பகுதி 18 )

ஹேஸ்டிங்ஸ் போகும் சாலை அருமை. போற வழியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை   அங்கங்கே  சாலைக்கு ரெண்டு பக்கங்களையும் ஒட்டியே  பைன் மரக்காடுகள், அதுக்கந்தாண்டைக் கொஞ்சம்  உயரமாப்போகும்  குன்று வரிசைகள்.  வளைஞ்சு போகும் ஆறு.....




டவுன் சென்டருக்குப் போய்  வண்டியைப் பார்க் செஞ்சுட்டுச் சுத்திக்கிட்டு இருந்தோம்.  அவ்வளவாக் கூட்டமில்லை.  லஞ்சு டைம் என்பதால்  அக்கம்பக்கத்துலே வேலை செய்யும்  மக்கள்தான்  அங்கங்கே உக்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. நமக்கும்  எதாவது வாங்கிக்கணுமேன்னு பார்த்தால் 'பாலிவுட் ஸ்டார்' கண்ணில் பட்டது.  இருக்கட்டும். வேறெதாவது பார்க்கலாம்.....  நியூஸி மக்களுக்கு இப்பெல்லாம் ரொம்பவே பரிச்சயமான பெயர் இந்த பாலிவுட் :-)





இன்னொரு இடத்தில் பார்க்க ஸப்வே போல ஒன்னு. அங்கே எனக்குக் கூமரா ஃப்ரைடு கிடைச்சது. நம்மவர் ஒரு ஸான்ட்விச் வாங்கிண்டார்.  சிடி சென்ட்டரை விட்டால்  வேறொன்னும் இருக்கறாப்ல தெரியலை. இன்ஃபர்மேஷனில்  விசாரிச்சால்.... சனம் மலைப்பாதையில்  சைக்கிள் ஓட்டறதுக்குன்னே வருதாம். Walking Trails, Biking Trails.... 




Te Mata Peak என்ற பெயரில் ஒரு குன்று !   அங்கே போய் எங்கெங்கே எல்லாம் நடக்கலாமுன்னு  படம் எல்லாம் கொடுத்தாங்க.  விளக்கம் சொல்றப்பக் கொஞ்சம் தலையைத் தூக்கி என்னைப் பார்த்திருந்தால்....    முசப்பிடிக்கும் நாயா இதுன்னு  என் மூஞ்சைப்பார்த்தால் தெரிஞ்சுருக்கும்..... :-)
சரி சரின்னு தலையாட்டிக்கிட்டே அவுங்க சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டு,  இங்கே முக்கியமா இருக்கும் சமாச்சாரத்துக்கான இலவசக் கையேடுகளையும் வாங்கிக்கிட்டோம்.  Food and ' DRINK '    பழவகைகள்  ஏராளமாக விளைவிக்கும் பழத்தோட்டங்களுக்குப் பெயர் போனது இந்த ஊரின் சுத்துவட்டாரப்பகுதி.   ரெட் ஒயின் தயாரிப்பு விசேஷம் !  
கடைகளை நோட்டம் விட்டப்ப, ஒரு துணிக்கடையில் க்ளோஸ்டௌன் ஸேல். என்ன இருக்குன்னு எட்டிப் பார்த்தால்....அதிசயமா என்னோட சைஸுக்கே உடுப்புகள் இருக்கு.  80 % கழிவு !  விடமுடியுமா? ரெண்டு ஜாக்கெட்டும், ரெண்டு டாப்புமா ஆச்சு !  ஒரு கடையில் ரெண்டு கிளிகள்! 
Te Mata  Hill நோக்கிப் போறோம். ஒரு பதினொன்னரை கிமீ. இருவது மினிட் ஆச்சு.  நுழைவுப்பகுதியில் போர்ட் வச்சுருக்காங்க. திருடர்கள் ஜாக்கிரதை. அட ராமா......  


 இங்கத்துப் பழங்குடிகளான மவொரி மக்கள் வச்ச பெயர்   Sleeping Giant .  
  ஆதிகாலத்துலே   இங்கே இருக்கும் பழக்குடி மக்கள், வெவ்வேற குழுக்களா அங்கங்கே கிராமத்தை அமைச்சுக்கிட்டு வாழ்க்கை நடத்தறாங்க.  இந்தக் குழுக்களுக்குள்ளே எப்பப் பார்த்தாலும் சண்டை வந்துரும்.  இந்தப் பகுதியிலும்  ரெண்டு வெவ்வேற குழுக்கள்  இருந்துருக்காங்க.  நடுவில் குன்று இருந்தாலும் அதுலே ஏறி வந்து சண்டை போடறதுதான். சண்டை போட்டே சலிப்பு வந்துருது ஒரு குழுவினருக்கு.  ஆனால் அந்தாண்டை போனால் இன்னும் கொஞ்சம்  தேவைப்பட்ட சமாச்சாரங்கள், முக்கியமா சாப்பாட்டுச் சமாச்சாரங்கள்  கிடைக்கும் . ஒவ்வொரு முறையும் அந்தாண்டை போகக் குன்றில் ஏறினால் போதும்.....   சண்டை ஆரம்பிச்சுரும்.  குன்றுமேல் ஏறாமல் அந்தாண்டை எப்படிப் போக? அதுக்கு  என்ன செய்யலாமுன்னு குழுத்தலைவரிடம் பேசிக்கிட்டு இருக்கும் சமயம், தலைவரின் மகள் ஒரு ஐடியாக் கொடுக்கறாங்க. பொதுவா இப்படியான  ஆலோசனைகளில்  பெண்கள் கொடுக்கும் ஐடியாதான் சிறந்ததுன்னு மக்கள் நம்பிக்கை.

'எதிரிக்குழுத் தலைவனை, மயக்கிக் காதலில் விழச்செஞ்சுட்டால்.....  ' 
  
ஆஹா.....   யாரை அனுப்புவது ?    தலைவரின் மகளே சம்மதிக்கிறாள்.  ஐடியா சொன்னால் ஆச்சா ?  நடிப்புதானே ?  போகட்டும்.

எதிரிக்குழு தலைவன் நல்ல ஆக்ருதி உள்ளவன்.  இவளும் பேரழகி! திட்டத்தின்படி ஆச்சு. இவளுடைய நடிப்பு,  கடைசியில் உண்மைக் காதலாகிருச்சு....  (ஹா.... எத்தனை சினிமாவில் பார்த்துருக்கோம் ! ஹிஹி )

கொஞ்சநாள் போனதும்,  குன்றுகளுக்கிடையே ஒரு பாதை இருந்தால் நமக்கு வரப்போக நல்லா இருக்கும்  என்றவள்,  கடப்பாரை, மண்வெட்டி கொடுத்துருக்கக்கூடாதோ ?  வெறும் வாயால் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே.... காதலியின் ஆசையை நிறைவேத்தக் குன்றையே ஒரு கடி கடிச்சுட்டான்.....  வழி ஏற்பட்டது.....   ஆனால் கவ்வி எடுத்த  மண் போய் தொண்டையில் மாட்டிக்கிட்டு, மூச்சுத்திணறி மண்டையைப் போட்டுட்டான்..... அப்படியே குன்றின் மேல் விழுந்தவன் இன்றைக்கும் அங்கேயே கிடக்கான்!

ஒவ்வொரு மவொரிக்குழுவும்  இந்தக் குன்றுக்கான  கதையை ஒவ்வொரு விதமாச் சொல்லிக்கிட்டு இருக்கு !  இவரும் தூங்கிக்கிட்டே எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்கார். (செத்தவங்களுக்கு  மரியாதை கொடுக்கணும் ! ) 
நாமும் கொஞ்சம் மேலே போகும் பாதையில் போய், பார்க்கிங்லே  வண்டியை நிறுத்தினோம். முடிஞ்சவரை ஏறிப் பார்க்கணும். 
ஒரு இடத்தில்  நம்ம க்ராண்ட் கேன்யன் பயணத்தில்  (ப்ரைஸ் கேன்யனில் ) பார்த்தாப்லெ.....   ஒரு காட்சி. அளவில் ரொம்பச் சின்னது. பாறை அமைப்பு அப்படி இருக்குன்னு எனக்கொரு தோணல்.
கொஞ்சம் உயரமான இடங்களில் போய்ப் பார்த்தால் சுத்திவர  ஹோன்னு பரந்து கிடக்கும்  பூமியைப் பார்க்கலாம்.  உள்ளூர்  மக்கள் ஜோடி ஒன்னு,  அத்வானக் காட்டில்  சேர் கொண்டுவந்து போட்டு, அழகை ரசிச்சுக்கிட்டு இருந்தாங்க. இல்லே பயணிகளா இருக்குமோ ? என்னதான்  பார்க்கறாங்கன்னு நாமும் வண்டியை நிறுத்திட்டுக் கொஞ்சதூரம் ஏறிப்பார்த்தோம். பார்த்தால்............ கீழே ரொம்ப தூரத்தில் கொஞ்சம் வீடுகள் !  ஒரு ஆறும்  கூட  !    இந்த ஒரு குன்றோடு முடியும் சமாச்சாரமில்லை.... இது. இந்தாண்டை அடுக்கடுக்கா  அதுபாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கு! 




பூமி சரிஞ்சப்பக் கடலுக்குள் இருந்த நிலம் மேலே  வந்து இப்படி ஆகிப்போச்சுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. கடலுக்கடியில் இருக்கும்  கிளிஞ்சல்கள் சமாச்சாரங்கள் எல்லாம்  அங்கங்கே கல்லாகிக்கிடக்காமே !  சம்பவம் நடந்து சில மில்லியன் வருஷங்கள் ஆகி இருக்கலாமாம்.  நம்ம ஹிமாச்சல் கூட இப்படித்தானே !  இந்தப்பகுதியை பாதுகாத்துப் பராமரிக்க ஒரு அமைப்பு ஏற்படுத்திட்டாங்க.  விவரம் அடங்கிய மாடர்ன் கல்வெட்டும் புதைச்சு வச்சுருக்காங்க. பயணிகள் வந்து போக ஆரம்பிச்சதும், மேலே ஏறி வர கேட் எல்லாம் போட்டு வச்சாச்.  பாதுகாப்புக் கருதி, ராத்ரியில் மூடி வச்சுருவாங்க.

சுத்துமுத்துமாப் பார்த்து ரசிச்சும் க்ளிக்கியும் ஆச்சு.  மணி மூணாகப்போகுதுன்னு  கிளம்பி நேப்பியர் க்வாலிட்டி இன்  வந்து சேர்ந்துட்டோம். 
நல்ல வெயில் இருக்கேன்னு, 'நம்மவர்' நீச்சல் குளத்துக்குக் கிளம்பினார். இவர் எல்லாப்பயணங்களிலும் துணிமணிகள் எடுத்து வைக்கும்போது  முதலில் ஸ்விம் ஷார்ட்ஸ் எடுத்து வச்சுக்குவார்.  ஆனால் பயன்படுத்த நேரமே கிடைக்கறதில்லையாம். என்னோடு பயணம் செஞ்சால் ஊர் சுத்தவே சரியா இருக்குன்னா....  ஆஃபீஸ் வேலையாப் போகும்போது  இன்னும் சுத்தம்.... மீட்டிங், ஃபேக்டரி விஸிட்னு போயிருதாம்.  ஸிட்டியில் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து  ஒரு மணி, ஒன்னரை மணி தூர ட்ரைவிங் லேதான் ஃபேக்டரிகளைக் கட்டி வச்சுருக்காங்க. 

ரொம்ப நாளா நீந்தாம, இருந்ததால்,  தோள்வலின்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.  சாயங்காலம்  ஸ்நாக்ஸ், டீ ன்னு முடிச்சுட்டு  கடலைப்பார்த்துக்கிட்டுக் கொஞ்ச நேரம் பால்கனியில் உக்கார்ந்துருந்தோம்.

ராச்சாப்பாட்டுக்கு எதாவது வாங்கி வரலாமுன்னு கிளம்பி, பார்க்கிங் ஏரியாவில்  காராண்டை போறோம். எப்படித்தான் வந்துச்சோன்னு தெரியாமல் படபடன்னு ஒரு மழை. சட்னு வண்டிக்குள் போய் உக்கார்ந்துட்டோம்.  விடாமல் ஒரு மழை அடியடின்னு அடிக்குது. காமணி நேரம் அடிச்சு ஓய்ஞ்சது.  சின்னத் தூறல்தான். போயிட்டு வந்துடலாமுன்னு வண்டியை ரிவர்ஸ் எடுத்தால்....   டக்னு ஒரு சத்தம். எங்கெபோய் இடிச்சோமுன்னு பார்த்தால் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருந்த ஒரு பெரிய  வண்டியில் புல்பாரில்.....  அந்த  வண்டிக்கு ஒன்னும் இல்லை. நம்ம வண்டியில் லேசா பெயின்ட் போயிருக்கு :-( 

அட ராமான்னு புலம்பிக்கிட்டே  கடைக்குப் போயிட்டு வந்தோம். 

இவருக்குத்தான் மனசாகலை. யூ ட்யூபில், டூத்பேஸ்ட் வச்சு ஸ்க்ராட்ச் மார்க்ஸ் அழிக்கலாம் என்பதை நம்பி அந்த வைத்தியம் செஞ்சுபார்த்தார் :-)  

ஊஹூம்.......  

தொடரும்......... :-)



5 comments:

said...

இயற்கையின் அழகினைக் கொண்டுள்ள படங்கள் மிகவும் சிறப்பு.

said...

குன்றுகள் அழகாகத்தான் இருக்கிறது கதைதான்:) ரசனை.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

நியூஸி முழுசும் இன்னும் இயற்கை அழகு, கொட்டித்தான் கிடக்கு !

said...

வாங்க மாதேவி,

கதைகளுக்குப் பஞ்சமே இல்லை, மவொரிகளின் வாழ்க்கையிலே! நாஞ்சொல்லலை.... நமக்கும் அவுங்களுக்கும் எதோ தொடர்பு இருக்குன்னு :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !