Monday, November 23, 2020

கடலுக்கடியில்.......(ரோட்டோருஆ பயணம் . பகுதி 15 )

கிழக்கே பார்த்த பால்கனி என்பதால் சூர்யோதயம் பார்க்க முடிஞ்சது.  நல்ல மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சுட்டுக் கிளம்பி இருக்கான் சூரியன் !  மணி ஆறுதான்.  டேலைட் ஸேவிங்க்ஸ் இருப்பதால் ஏழுன்னு காமிக்குது கடிகாரம்! கன்யாகுமரியில் கோட்டை விட்டது, இங்கே நோகாமல்  கிடைச்சது. 

கடமைகளை முடிச்சுட்டுக் கிளம்பினோம். நம்ம ஹொட்டேலுக்கு எதிர்வாடையில் ஒரு 1.1 கிமீ தூரத்தில் இருக்கு நேஷனல் அக்வேரியம் ஆஃப் நியூஸிலேண்ட்.  ப்ரமாண்டமான கட்டிடம். 


எல்லாத்துக்கும் ஒரு கதை இருக்கறாப்ல, இதுக்கும் ஒன்னு இருக்கு! 1954 ஆம் வருஷம், இங்கே இருக்கும் ஒரு செருப்புக்கடையில்  கண்ணாடித்தொட்டியில் தங்கமீன் வளர்த்துக்கிட்டு இருக்கார் Les Mills.  தொட்டி கொஞ்சம் பெருசுதான்.  இவருடைய மகன், வேறொரு ஊரான வெலிங்டனில் இருந்து கொஞ்சம்   tropical fishகளை வாங்கியாந்து தொட்டியில் போட்டுருக்கார். எல்லோரும் ஒத்துமையா சந்தோஷமா இங்கேயும் அங்கேயுமா நீந்திக்கிட்டு இருக்காங்க.  

இதைப்பார்க்கவே கடைக்கு சனம் வந்து போய்க்கிட்டு இருக்கு!  விஷயத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்த உள்ளூர் க்ளப் ஒன்னு,  500 பவுண்ட் காசைக் கொடுத்து, (1967 ஜூலை வரை  இங்கத்துக் காசு பவுண்டு, ஷில்லிங், பென்ஸுதான் கேட்டோ ! )  பொதுமக்களுக்காக இங்கத்து  வார் மெமோரியல் கட்டடத்து பேஸ்மென்ட்டில் ஒரு அக்வேரியம் ஆரம்பிச்சுக் கொடுக்கச் சொல்லி, வேலை முடிஞ்சு   1957 டிசம்பர் மாசம் திறந்துட்டாங்க. 

இதுக்கப்புறம் ஒரு 19 வருஷம் கழிச்சு1976 இல், இப்போ நாம் பார்க்கும் பெரிய கட்டடமா வளர்ந்து போச்சு !!!!   வருஷத்துக்குப் பார்வையாளர் கணக்கு 230,082 ன்னு  புள்ளிவிவரம் சொல்லுது.  கதை இப்படியிருக்க,  சூப்பர் ஐடியா ஒன்னு வந்து,  2012 இல்  1.8 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொள்ளும் கண்ணாடித்தொட்டி கட்டிவிட்டாங்க. கடலையொட்டியே இருப்பதால் தண்ணீர் பிரச்சனை இல்லை! 

(முப்பத்தியெட்டு வருஷங்களுக்கு முன்னால் ஹாங்காங் ஓஷன் பார்க்கில் ஒரு அஞ்சுமாடி உசரத்துக் கண்ணாடித்தொட்டியில் மீன்கள் இருப்பதைப் பார்த்து அதிசயிச்சு நின்னுருக்கேன்!  கொசுவத்திதான் கேட்டோ ! )
085511     085648 பெரிய கல்வெளியில் கம்பீரமா நிக்குது அக்வேரியம். வெளிப்புறச் சுவரில் ஓவியங்கள் அருமை....  வெரி கலர்ஃபுல்  ம்யூரல்ஸ் !!  
 இங்கே பீச்சில் மணலையே காணோம்.... சின்னக்கல் பீச்சுதான். ஆனால் எனக்கு மணல்தான் பிடிக்கும். அதுவும் நல்ல சுத்தமான மணல் வேணும். இதுக்கு அஸ்ட்ராலியாவின் கோல்ட்கோஸ்ட் , Broad Beachதான் என் பெஸ்ட் சாய்ஸ் ! சனியன் கொரோனா, நம்ம நாட்டைவிட்டு எங்கேயும் போய்வர முடியாமல் வச்சு செஞ்சுக்கிட்டு இருக்கு.... ப்ச்......

அக்வேரியத்துக்குள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் உண்டு. நமக்கு சீனியர் சிட்டிஸன் ரேட்.  இங்கே நாம் சீனியர் சிட்டிஸன் 'ஆனதும்'  அரசு ஒரு 'கோல்ட் கார்டு' அனுப்பி வைக்கும். கட்டணம் இருக்கும் இடங்களிலும்,  சிலபல கடைகளில்  டிஸ்கவுன்ட்டுக்கும் அதைக் காமிச்சால் போதும்.

மில்லியன் காலத்துக்கு முற்பட்ட சுறா, வாயைத்திறந்து வரவேற்றது :-)

பொழுது போக்கன்னு ச்சும்மாப் பார்க்கும்  கலர்கலரா இருக்கும் மீன்வகைகள் இங்கே இல்லை.  கடல்வாழ், நதிவாழ் உயிரினங்கள் வாழ்க்கைமுறைகளைப் பார்த்துத் தெரிஞ்சுக்கும் வகையில்  கற்றல் சம்பந்தமான அம்சங்கள்தான்  அதிகம். வருஷத்துக்கு ஒரு முறை கடல் வாரம்னு ஒன்னு கொண்டாடுறாங்க. இந்தக் கடல்வாரம் நாடு முழுக்கக் கொண்டாடறாங்க.  நம்மூரிலும் உண்டு. ஆனால் இதுவரை எட்டிக்கூடப் பார்க்கலை....  ஒரு முறை போகணுமுன்னு நினைச்சாலும்  வாய்க்கலை. ஆனால் பாருங்க....  இப்ப நாம் வந்துருக்கோம் இந்த வாரத்தில் !  
 நம்ம ஊரில்  ட்ராப்பிக்கல் மீன்கள் , அழகு மீன்கள் விற்கும் கடைகள் இருக்கே தவிர, அக்வேரியம்னு  ஒன்னும் கிடையாது......  கடற்கரை, கரையோரப்பகுதிகள் சுத்தம் செய்யறதுன்னு ஆரம்பிச்சு, தினம் ஒரு ஆக்டிவ்விட்டின்னு எல்லா வயதினரும் கலந்துக்கும் வகையில் செய்யறாங்க. எல்லா வயதினருமுன்னால்......  0 முதல்..... 100+ வரை !  வருஷாவருஷம் எதாவது தீம் வேற !  இந்த வருஷம் (நாம் போனது 2018 !)" Healthy Seas, Healthy People  "  அக்வேரியம்  பார்க்கப் பள்ளிக்கூடப்பிள்ளைகளுக்கு இலவச அனுமதி!  
 நியூஸியின்  கான்ஸர்வேஷன் டிபார்ட்மென்ட், நாட்டின் இயற்கை அழகைப் பாதுகாப்பதில்  ரொம்ப கவனமாச் செயல்படுது என்பது எங்களுக்கெல்லாம் பெருமை! 
பிரான்ஹா மீன்களை முதல்முதலா இங்கேதான் பார்த்தோம்.  மாமிசம் தின்னும் மீன்கள் !   கத்திபோல கூரான பற்களாம்.  மனுசனோ, மற்ற உயிரினமோ கிடைச்சால், கை கால் விரல்களை அப்படியே  சீப்புலே இருக்கும் வாழைப்பழத்தை எடுக்கறாப்போல  வெட்டித் தின்னுருமாம்.  ஆனா சைஸ் என்னவோ சின்னதாத்தான்  இருக்கு!    இன்னும் கொஞ்சம் பெருசா, அமேஸான் நதியில் ஏராளமா இருக்காமே ! 

நெல்சன் என்ற ஊருக்கு ஒருமுறை போனப்ப, ஈல் மீன்கள் இருக்கும் ஒரு இடத்துக்குப் போயிருந்தோம். அதுகளும் மாமிசம் தின்னும் வகைதானாம்.  கொத்துக்கறியைச் சின்ன தட்டில் வச்சு விக்கறாங்க.  நாம் அதை வாங்கி, ஒரு குச்சியில் குத்தி நீட்டுனா, அதுகள் பாதி உடம்புவரை குளக்கரையில் போட்டுருக்கும் கல்லில் ஏறிவந்து வாயைத் திறந்து வாங்கிக்குதுங்க. கவனமாக் கொடுக்கணும். கையை வாயாண்டை கொண்டு போயிடாதீங்கன்னு எச்சரிக்கறாங்க. நாமும்  வாங்கிக்கொடுத்தோம். நல்ல நீளக்குச்சிதான். மகள் அப்போ சின்னவள்.    ஒரு கையால் ஊட்டும்போதே.... இன்னொரு கையால் அதன் தலையைத் தடவிப் பார்த்தாள். எனக்கு பயத்தில் உயிரே போயிருச்சு.... 
 
The Living Fossil  டுஆடாரா.....   


இதைப்போலவே   Snake-eating Twin-hinged Tortoise
ஆமைகளைப் பார்த்தோம். அபூர்வமாம்.


சாதாரண ஆமைகளும் இருக்கு.     தண்ணீருக்கடியில் நீந்தும் அழகைக் கண்ணாடிவழியாப் பார்த்து ரசிக்கலாம்.  
இதுக்குள்ளே பெங்குவின் ஃபீடிங் டைம்  வந்துருச்சுன்னு அங்கே போனோம்.  எல்லாம் சின்ன சைஸ். நாம் ஓமருவில் பார்த்தோமே அதே அளவு. ஒரு நார்மல் கோழி தான். 



சாப்பாடு கொண்டுவரும் நபரை ரொம்பநல்லாத் தெரிஞ்சு வச்சுருக்குதுகள்.  அதைப்போலவே  சாப்பாடு விளம்பும் நபர்களும் இதுகளை நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்காங்க. இப்படிப் பறவைகள், விலங்குகள், மனிதர்கள்  எல்லாம் ஒருவருக்கொருவர் அனுசரணையுடன் பழகுவது சுலபமில்லை. பலமாதங்கள் பொறுமையாப் பயிற்சி எடுத்துக்கணும்.  முக்கியமா நம்மை அதுகள் விரும்பி, பயமில்லாமல் பழகணுமுன்னா.... நம்ம மேல் ஒரு நம்பிக்கை வரும்படி நாம் நடந்துக்கணும். இதைத்தான்  You should  earn their trust னு சொல்றது.  







சாப்பாடு கொடுக்கும் நபர், கையில் ஒரு பக்கெட்டைப் பிடிச்சுக்கிட்டு உள்ளே வந்தார். 
அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்தவங்க , எதோ குரல் கொடுத்தாங்களோ என்னவோ.... பரபரன்னு சின்னக்கூட்டம் கூடிருச்சு..... 'கஞ்சி வரதப்பா'  

https://www.facebook.com/1309695969/videos/10219214956867295/

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fgopal.tulsi%2Fvideos%2F10219214956867295%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

இங்கிருக்கும் பசங்க எல்லோரும் எதோ ஒருவிதத்தில் மனிதர்களாலோ, மற்ற மிருகங்களாலோ பாதிக்கப்பட்டப் பாவங்கள். கண் போயிருச்சு, தலையில் அடி, ஒரு இறக்கை (!) உடைஞ்சு போயிருச்சு, அநாதையாக் கிடந்ததுன்னு  பல சோகக்கதைகள். இவுங்களுடைய பெயர்கள், மத்த விவரங்கள் எல்லாம் படத்தோடுப் போட்டு வச்சுருக்காங்க.  இந்தப்பகுதி ஊழியர்களுக்கும் விவரங்கள் எல்லாம் அத்துப்படி.  
பசங்க எல்லோரும் பரபரன்னு வந்து கொடுத்த மீனை முழுங்கிட்டுக் கொஞ்ச தூரம் தள்ளிப்போய் நின்னுக்கிட்டு இருந்தாங்க. சின்ன வயிறுதானே.... ஒரு ரெண்டு மீன்கள் போதுமுன்னுதான் இருக்கு போல....   எல்லாம் ஒரு இருபது நிமிட்தான்.  அந்த நபர் மட்டும் கொஞ்சநேரம் உக்கார்ந்துருந்தார்.  இன்னொன்னு வேணுமுன்னு யாராவது வருவாங்களோன்னு  பார்த்துக்கிட்டு இருந்தார். ..... சிலர் வீட்டுக்குள்ளேயும், சிலர் தண்ணீருக்குள்ளேயும், சிலர் கரையிலுமா அவரவர் வேலையைப் பார்க்கப்போனதும், நாங்களும் நம்ம வந்த வேலையைப் பார்க்கலாமுன்னு  அங்கிருந்து கிளம்பி வேறொரு பகுதிக்கு வந்தோம். 
Ocean Tunnel னு ஒரு அம்பது மீட்டர் நீளத்துக்கு  சுரங்கப்பாதை. நாம் ஒன்னும் செய்ய வேணாம். ட்ராவலேட்டரில் போய் நின்னால் போதும்.  நின்னு நிதானமாப் பார்க்கணுமுன்னால் நடுவில் நடந்தும் போகலாம். தலைக்கு மேலே கடல்!  ஏற்கெனவே சிலநாடுகளில் பார்த்திருப்பதால் அவ்வளவு  வியப்பா இல்லைதான்.

பெரிய சுறாக்களும்,  குட்டிகளும், கடற்பாறைகளுக்கிடையில்  வசிக்கும் (!) மீன்வகைகளும்,  ஸ்டிங்ரே என்னும் நீளவால் மீன்களும்...  வாலின் நீளம்பார்த்ததும்  ஸ்டீவ் இர்வின் நினைவு வந்தது. ப்ச்..... பாவம்.... இந்த வகை மீன் வால் நெஞ்சுக்குள்ளே போய் இதயத்தைத் துளைச்சுருச்சு. அவ்வளவு கூர்மையான வால்.  வால் முனையில் நிறைய முட்கள் போல எலும்புகள் இருக்குமாம்.  உள்ளே போயிட்டால், வெளியே வாலை எடுப்பது கஷ்டமாம். 102

அடுத்தாப்லெ இருக்கும் பெரியஹாலில்  அந்த ப்ரமாண்டமான கண்ணாடித்தொட்டியின் ஒரு பகுதி, சினிமாஸ்கோப் திரை மாதிரி இருக்கு.  தியேட்டர் ஃபீலிங் வருதே !  இங்கேயும் ஃபீடிங் டைம்தான்.  டைவர் உள்ளே இறங்கி  'சோறு' போடறார். குட்டிப்பசங்களுக்கு ஜாலி :-)

மீன்கள் தூங்குமான்னா.... தூங்கும். அப்பப்பத் தரையில் படுத்துக்கிட்டு(!) அசையாம இருக்குதுகள்.
அடுத்த பகுதி கிவிப் பறவைகளுக்கானது..... அப்புறம் டைனோஸார்கள்.....    பூமிப்பந்தின் நடுவில் எப்படி இருக்கும் என்ற விளக்கம் ,  பள்ளிக்கூடப்பிள்ளைகளுக்கான  லேப் இப்படி ரெண்டு மணி நேரம் விடாமல் சுத்தியிருக்கோம்.  ... போதும் கிளம்பலாம்...... ஓக்கே ?

தொடரும்......:-)







9 comments:

said...

அருமை சிறப்பு நன்றி

said...

//2012 இல்  1.8 மில்லிலிட்டர் தண்ணீர் கொள்ளும் கண்ணாடித்தொட்டி//
கொஞ்சம் சரி பண்ணுங்கோ.

 Jayakumar

said...

துபாயில் பார்த்தது தான்பெரிய அக்வேரியம்

said...

கடலுக்கடியில்...புருவங்களை உயர்த்திய புகைப்படங்கள்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜயகுமார்,

ஐயோ..... டாஸ்மாக் நினைவில் இருந்துட்டேனோ............

கவனிச்சுச்சொன்னதுக்கு மிகவும் நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா!

அங்கே எல்லாமே நல்லா இருக்குன்னு கேள்வி ! பார்க்கலாம், போக வாய்ப்பு அமையுதான்னு....

ட்ரான்ஸிட்லே இருந்ததோடு சரி. ....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

ரசித்தமைக்கு நன்றி !

said...

அருமை.