கடற்கரை நகரமுன்னா சொன்னேன்? அதை மாத்தித் துறைமுகநகர்னு சொல்லிக்கலாம். இங்கத்துத் துறைமுகம்தான் ஹீரோ. இதை வச்சுத்தான் ஊரின் பொருளாதாரம். இந்த ஊரில் இருக்கும் பாதி சனம், துறைமுகசம்பந்தமுள்ள வேலைதான் பார்க்கறாங்கன்னு நினைக்கிறேன். 99% சரக்குக் கப்பல்கள்தான். பன்னெண்டு வருஷங்களுக்கு முன் அத்தியே பூத்தாப்போல க்வீன் விக்டோரியா க்ரூஸ் சுற்றுலாப்பயணிகள் கப்பல் வந்துட்டுப்போச்சாம். ஆஹா.... இது போதாதா.... இன்றைக்கு வரைச் சொல்லிப் பெருமைப்பட்டுக்க !!!! இப்பெல்லாம் நிறைய க்ரூஸ் கப்பல் வந்து போகுதாம்.
ரெண்டு மணிக்கு முன்னாலேயே செக்கின் செஞ்சுட்ட மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல், அறைக்கு ஓடிப்போய் பால்கனிக் கதவைத் திறந்தால்..... ஆஹா...... எதிர்வாடையில் பார்க்கு போல ஒன்னு, அதுக்கந்தாண்டை கடல் ! இந்த ஊர் இருக்கும் பகுதியை ஹாக்ஸ் பேன்னு (Hawkes Bay ) சொல்றாங்க. ராயல் நேவி அட்மிரல் எட்வர்ட் ஹாக் என்பருக்கு மரியாதை செய்யும் வகையில் கேப்டன் குக்தான் இந்தப்பெயரை வச்சவர்.
ஆமாம்.... அதுக்கு ஏன் குக், பெயர் வைக்கணும் ?
நம்ம கேப்டன் ஜேம்ஸ் குக் இருந்தார் பாருங்க..... அவர் 'கண்டுபிடிச்சது' தான் இந்த நியூஸிலாந்து நாடே ! உண்மையில் நடந்தது என்னன்னு பார்த்தால் ஏபெல் டாஸ்மென் என்ற டச்சுக்கார மாலுமி 1642 ஆம் வருஷம் இந்தப்பக்கமாக் கப்பலோட்டிக்கிட்டுப் போனப்ப ஒரு நிலப்பகுதியைப் பார்த்ததா பேச்சுவாக்கில் சொல்லப்போக.... கண்காணாத இடத்தில் கடலில் கிடக்கும் நிலப்பகுதியைப் பற்றிய கனவு இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்துருக்கு போல. நாட்கள் கடந்து போய் பலவருஷங்கள் ஆகியும் கூட.... சுமார் 127 வருஷங்களுக்குப்பிறகு ஜேம்ஸ் குக் என்ற ப்ரிட்டிஷ்காரர், வீனஸ் கிரகம் சூரியனின் பாதையில் கடந்து போகுதுன்னு அதைப் பார்க்கக் கிளம்பறார். அவராண்டை சொல்லி அனுப்பறாங்க..... ஏற்கெனவே அங்கே இங்கேன்னு போய் நாடு பிடிக்கும் வழக்கம் அவுங்களுக்கு இருந்துருக்குல்லே ?
குக், தாஹித்தித் தீவு வரை வந்தவர், இன்னும் கொஞ்சம் தெற்காலே போயிப் பார்க்கலாமுன்னு வந்ததில் கப்பல் கொடிமரத்தின் மேலே ஏறி உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்த Nicholas Young என்ற சின்னப்பையன் (11 வயசுதான். உண்மையாவே யங், யங்குதான் இல்லே ? கப்பல் டாக்குட்டருக்கு எடுபிடியா வேலை செஞ்சுக்கிட்டு இருந்துருக்கான்! ) தூரத்துலே உயரமான நிலப்பகுதி தெரியுதுன்னு சொல்லவும், குக்கும் மத்தவங்களும் ஓடிவந்து பார்த்துட்டு, அந்தப்பக்கம் கப்பலைத் திருப்பிக்கிட்டுப்போயிருக்காங்க. அந்த ஏரியாவுக்கே ‘Young Nick's Head, ன்னு நாமகரணமும் ஆச்சு. அப்புறம் அங்கே உருவான ஊருக்கு Gisborne பெயர். அங்கே யங் நிகொலஸுக்கு ஒரு சிலை கூட வச்சுருக்காங்க. நாம் அங்கே போகலை. நேப்பியருக்கும் கிஸ்பர்னுக்கும் சாலை வழி போனால் மூணுமணி நேர ட்ரைவ்.
இதுதான் ஒரு பிரச்சனை...எதாவது சொல்ல ஆரம்பிச்சால்.... பேச்சு அப்படியே இழுத்துக்கிட்டுப் போயிருது.
மணி ரெண்டரை ஆகப்போகுது. வாங்க பகல் சாப்பாட்டுக்கு எதாவது ஆப்டுதான்னு பார்க்கலாம். பக்கத்துலே ஒரு கிமீ தூரத்துலே சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் மிட் ஸிடி ப்ளாஸா இருக்குன்னு உள்ளூர் மேப் சொன்னதால் அங்கே போனோம். நாஞ்சொல்லலை.... ஊர் ஊருக்கு வரைபடம், ஸ்ட்ரீட் கைடுன்னு வச்சுருக்காங்கன்னு !
எங்கெ பார்த்தாலும் வினியார்டும், ஒய்னரியுமாத்தான் இருக்கு. சனமும் இதைத்தேடித்தான் வருதாமே.... விளக்கப்படங்கள்தான்.....இடங்காமிக்குது..... கூட்டங்கூட்டமாப்போய் அங்கங்கே ருசிச்சுக்கிட்டே போவாங்களாம். நியூஸி ஒயின் உலகப்புகழ் பெற்றதுன்னு சொல்லிக்கறாங்க. எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைன்றதால் ஒன்னும் விஸ்தரிக்கலை. நம்மூட்டு திராக்ஷைத்தோட்டமும், ஜூஸும் எனக்குப் போதும்பா:-)
ஸிட்டிக்கவுன்ஸில் ஆபீஸாண்டையே விஸிட்டர்ஸ் இன்ஃபர்மேஷன் சென்டர் இருக்கு. 'முதலில் வயிறு'ன்னு தேடுனதில் பார்க்க நீட்டா இருந்த கேஃபே கண்ணில் பட்டது. ஒரு பாஸ்தாவும், சீஸ் கேக்குமா லஞ்ச் முடிஞ்சது.
அடுத்தாப்லே 'ட்ரேட் எய்ட் 'னு ஒரு கடை. இது எங்கூரிலும் இருந்தது. நிலநடுக்கம் வந்தபின் கடை காணாமப்போச்சு. எனக்குப் பிடிச்ச கடைகளில் ஒன்னு. உலகம் முழுசும் மக்கள் , முக்கியமாப் பெண்கள் செய்யும் கைவினைப்பொருட்களை வாங்கி, நியாய விலையில் விக்கறவுங்க. இது நியூஸியில் ஆரம்பிச்ச பிஸினஸ். அதுவும் ஆரம்பிச்சு வச்சது நம்ம ஊரில்தான். 1973 இல்... தொடங்கி இப்போ நாடெங்கும் இருக்கு! நம்ம வீட்டில் இருக்கும் டெர்ரகோட்டா பேனல் இங்கே வாங்குனதுதான். நடுவில் மஹிஷாசுர மர்த்தினி, ரெண்டு பக்கமும் லக்ஷ்மி சரஸ்வதி, புள்ளையார் , கார்த்திகேயன்னு( வடக்கே முருகன்னு சொல்றதில்லையாக்கும்! ) இருக்காங்க. சின்னதுதான்!
ஒரு காமணிபோல சுத்திட்டு அறைக்கு வந்தோம். கொஞ்சநேரம் ஓய்வு, வலைமேயல், கடலைப்பார்த்தபடி உக்கார்ந்து டீ குடிக்கறதுன்னு எல்லாம் ஆச்சு. எதிர்வாடை முழுசும் பார்க், ஸ்கேட் ஏரியா, ஜுனியர் பைக் ட்ராக், ப்ளே க்ரௌண்ட், காஃபிக்கடை, ஐஸ்க்ரீம் பார்லர்னு.... வரிசைகட்டி நிக்குது.... போதாக்குறைக்கு ஒரு பெரிய அக்வேரியமும் இருக்கு. அங்கே நாளைக்குப் போகலாம்.
இன்றைக்கு ரெண்டுபேருக்கும் மகிழ்ச்சிதரும் இடத்துக்குப் போகலாமுன்னு கிளம்பிட்டோம். 'நம்மவருக்கு' உசரத்தில் போய் ஏரியல் வ்யூ பார்க்கப்பிடிக்கும். டவர்கள் இருக்கும் ஊர்களில் விடமாட்டார். பருந்து..... பருந்து.... எனக்கு? கடல். கடல் பார்க்கணும். பார்த்துக்கிட்டே இருக்கணும். அது போதும்.
இந்த ஊரில் டவர் கட்டிவிடலை. ஆனால் இயற்கையே ஒரு இடத்தை மேலே கொண்டு வச்சுருக்கு. ப்ளஃப் ஹில் வ்யூ பாய்ன்ட். நம்ம ஹொட்டேலில் இருந்து சுமார் மூணு கிமீ தூரம்தான். சின்ன மலைப்பாதையில் வளைஞ்சு வளைஞ்சு மேலே போயிட்டோம்.
எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும் ?
அழகான தோட்டம்... தலையை அந்தப்பக்கம் திருப்பினா.... ஹைய்யோ..... துறைமுகம்......... செடிகொடி இருக்கட்டும், கப்பல் பார்க்கலாமுன்னு அந்தப்பக்கம் போயிட்டேன் !
ஒருபக்கம் கன்டெய்னர்கள் கொண்டுபோகும் கப்பல்கள்ன்னா..... இதைவிட எண்ணிக்கையில் அதிகமா மரங்கள் கொண்டுபோகும் பல்க் கேரியர்கள்..... அழகா வரிசையில் வார்ஃப் முழுசும் மரத்தடிகள்..... அடடடா..... பார்த்துக்கிட்டே நிக்கறேன் ! உயரத்துலே இருப்பதால் காத்து அப்படியே ஆளைத் தள்ளுது! கெமாராவைக் கை ஆடாமல் பிடிக்கறதே கஷ்டமா இருக்கு!
'சகல' வசதிகளோடு நகரசபை நல்லாவே பராமரிக்குது இந்த இடங்களை ! காலை 7 முதல், இரவு 9 வரைதான் இங்கே வரலாம். அப்புறம் மலைப்பாதையை மூடிருவாங்க. ரொம்ப நல்லது.... விஷமிகள் வேலையைக் காமிக்க முடியாதுல்லே ?
இருட்டுமுன் கீழே போகலாமுன்னு கிளம்பி மிட்ஸிடி ப்ளாஸாவுக்கு வந்தோம். ஷாப்பிங் ஏரியா முழுசும் காலி. சாப்பாட்டுக்கடைகள் ரெஸ்ட்டாரண்டுகள் மட்டுமே திறந்திருக்கு. நாமும் எதாவது ராச்சாப்பாடு வாங்கிக்கிட்டு அறைக்குப் போகணும்.
ஒரு இடத்தில் சின்னதாக்கூட்டம். முனிசிபல் தியேட்டராம். ரொம்பப் பழைய சமாச்சாரம். 1912 லே கட்டி இருக்காங்க. இதுவும் 1931 நிலநடுக்கத்தில் போயிருச்சு. ரொம்ப வருஷம் ஆட்டம்பாட்டத்துக்கு இடமில்லாமல் போயிருச்சு. அப்புறம் 1938 லே 1154 இருக்கை வசதிகளோடு புது தியேட்டர் கட்டியாச்சு ! சின்னச் சின்ன மாற்றங்களோடு இப்போ இருக்கும் அமைப்பு எப்படி இருக்குன்னு உள்ளே எட்டிப்பார்த்தால்... அட்டகாசமா இருக்கு! வரப்போகும் ஷோக்களின் விளம்பரத்தில் மைக்கேல் ஜாக்ஸன் இருக்காரு ! இன்றைக்கு வேறென்னமோ நடக்குது.... உள்ளூர் சமாச்சாரமாம். அதான் கூட்டம்.
சங்கத்தில் ஆர்டர் கொடுத்துட்டு, இருபது நிமிட்ஸ் இருக்கேன்னுச் சும்மா வேடிக்கை பார்க்கப் போனோம். நல்ல நல்ல இந்தியப்பொருட்கள் விற்கும் கடை ஒன்னு! சூப்பர்.
நாங்க சங்கத்துக்குத் திரும்பப்போய் ரெடியா இருந்த டேக் அவே வாங்கிக்கிட்டு அறைக்குப் போனோம். சங்கத்தின் உள் அலங்காரம் கூட நல்லா இருக்கு. நாற்காலிகளின் முதுகில் இருக்கும் படங்கள்? அட ! நம்ம வீட்டிலும் இருக்கே ! :-)
நல்லா ரெஸ்ட் எடுக்கணும். நாளைக்கு இன்னும் ஊர் சுத்தல் பாக்கி இருக்கு :-)
தொடரும்........:-)
4 comments:
பார்க்கப் பார்க்க ரசித்துக்கொண்டேயிருக்கத் தோன்றுகிறது.
கடல் காட்சிகள் மிகவும் அருமை.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா,
கடலின் வசீகரம் தனி வகைதான் !
வாங்க மாதேவி,
கடல்... அப்படியே ஆளை இழுத்துருதேப்பா....
Post a Comment