Wednesday, November 18, 2020

அடுத்த ஊருக்குப் போகுமுன் இன்னும் கொஞ்சம் சுத்திக்கலாமா ? ....... (ரோட்டோருஆ பயணம் . பகுதி 13 )

முஸ்கி:-)  உங்களையெல்லாம்  இங்கே லேக் டாப்போ மோட்டலில் ஒரு மாசமா நிறுத்தி வச்சுட்டேனில்லெ ?  மன்னிக்கணும்.  இனி பயணத்தைத் தொடரலாம். ஓக்கே ?

  முந்தியெல்லாம்  நாம் ஹொட்டேலில் தங்கினால்  முழுநாள் கிடைக்கும்.  எந்த நேரத்தில் செக்கின் செய்யறோமோ அதுலே இருந்து இருபத்திநாலுமணி நேரம். ஆனால் இப்பெல்லாம் ஹொட்டேல் இன்டஸ்ட்ரி வேற மாதிரி ஆகியிருக்கு.  செக்கின் பகல் ரெண்டு மணிக்கு. (சில இடங்களில் மூணு மணிக்கு..... ப்ச்  ) செக்கவுட் காலை பத்துக்கு.  அஞ்சுமணி நேரத்தை அப்படியே சாப்டுடறாங்கப்பா.... ( ஆனால் நம்ம சென்னை லோடஸ்ஸில் 24 மணி நேரக் கணக்கு இப்பவும் உண்டு ! )
காலையில் நிதானமா எழுந்தால் போதுமுன்னு நினைப்போம் பாருங்க..... அன்னைக்குத்தான்   விடியறதுக்கு முன்னேயே முழிப்பு வந்துருது.  எழுந்து ஜன்னல் வழியாப் பார்த்தால் ஏரியைக் காணோம். ஒரே இருட்டு.....  அடடா.....    ஏரிக்கரையில் காலையில் நடந்துட்டு வரணுமுன்னு  நினைச்சிருந்தேன்.  பொழுது விடியட்டுமேன்னு  கொஞ்சம் வலை மேய்ஞ்சுட்டு இன்னொரு குட்டித்தூக்கம் போட்டுட்டுப் பார்த்தால்  மணி ஏழு.  ஏரி இருக்கு. ஆள் நடமாட்டம் இருக்கு. ஒருத்தர் வாக் போய்க்கிட்டு இருக்கார்.

குளிச்சு ரெடியானபோது மணி ஏழே முக்கால். இனி எங்கே வாக் ?  காஃபி கேக்குதே நாக்கு ! அதையும் முடிச்சுட்டு,  காரில் வாக் போனால் ஆச்சு :-)
இன்னிக்குக் கிளம்பறோமுன்னு சொன்னேனில்லை .... போற ஊரிலும்  ரெண்டு மணிக்குத்தானே செக்கின்.  ஏரிக்கரையோரமாவே ஒரு லாங்க் ட்ரைவ் போயிட்டு அப்படியே  அந்த ஊருக்குப் போகணும்.  ரெண்டு ஊருக்கும்  இடையில் 142 KM. 2 hours drive ன்னு கூகுள்காரன்  சொல்றான் .

Taupo டவுன் வரை  இன்னொருக்காப்  போகலாமுன்னு போனால்  I Love Taupoவில் அனக்கமில்லை.  நேத்து அயர்ன்மேன் போட்டியில் பங்கெடுத்துக்க வந்த வேற ஊர்க்காரர் ஒருவர் அப்ப அங்கே வந்தார். கொஞ்சம் சின்னப்பேச்சு ஆச்சு.  முதல் பத்துக்குள் கூட வரமுடியலையாம். ஆனாலும் ஓடி முடிச்சேன்னார் . அதுதானே முக்கியம் இல்லையோ ? ஜெயிச்சால் நல்லது. ஆனால் ஜெயிப்பு மட்டுமே வாழ்க்கையா என்ன?  













நாமும் கொஞ்சம் க்ளிக்கிட்டு ஹார்பர் வரை போனோம்.  வீக்கெண்ட் கலகலப்பெல்லாம்  முடிஞ்சு போன திங்கக்கிழமை. ஏரிக்குமுன்னால் கொஞ்சநேரம் உக்கார்ந்து அழகை ரசிச்சுட்டுத் திரும்ப  அறைக்கு வந்து,  ஃப்ரிட்ஜில் வச்சுருந்த பழத்தயிரை முழுங்கிட்டு, செக்கவுட் பண்ணிட்டுக் கிளம்பிட்டோம். 
டவுனுக்கு எதிர்த்திசையில் திரும்பி ஏரியையொட்டியே இருக்கும் சாலையில் போறோம். நமக்கிடதுபக்கம்  லேக் டப்போ காடு, வலப்பக்கம் கடல்போல இருக்கும் கரைகாணாத ஏரி.... அழகும் அமைதியுமா.... ஹைய்யோ .....


 சின்னச்சின்ன ஊர்கள் அங்கங்கே   ...  சில இடங்களில் சாலை , ஏரியை விட்டுட்டுக் காட்டுக்குள்ளேயும் போகுது....   கூடுதல் சப்தம் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் ஆகாது என்பதால் எஞ்சின் ப்ரேக்கிங் ரெஸ்ட்ரிக்‌ஷன் உண்டு இதைப்போன்ற பகுதிகளில்....
வலப்பக்கம் ஸீனிக் ரிஸர்வ்னு போட்டுருந்த இடத்துக்குள் போனோம். மரக்கூட்டங்களைக் கடந்தால் ஏரி.  நிறைய  கருப்பு அன்னங்கள்!  நம்மைப் பார்த்ததும் ஓடி வருதுகள்.  மக்கள் பிக்னிக் வந்துட்டு,  ப்ரெட் போட்டுப் பழக்கி விட்டுருக்காங்க போல. நேத்து டேக் அவேயில் வந்த வெறுஞ்சோறு இருக்கே நம்மாண்டை.  இப்படி வரும் சோற்றைப் பறவைகளுக்குப் போடறதுதான்.  பொதுவாப் பறவைகளுக்கு ப்ரெட் கூடாது. சமைச்ச சோறு கொடுக்கலாம் என்றுதான் இங்கத்துப் பறவைப் பாதுகாப்புப் பிரிவு சொல்லுது. மக்கள் வாழும் பகுதிக்குள் இருக்கும் பறவைகளுக்குத்தான் இப்படி. மத்தபடி காட்டுக்குள் இருக்கும் பறவைகளுக்கு ஒன்னுமே கொடுக்கக்கூடாது. 105722  4484


கரையோரம் நடந்தோம். கேம்பர்வேனில் வந்த ஒருவர்,  துணி துவைச்சுப் போட்டுட்டு, பகல் சாப்பாட்டுக்கு மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தார். 4507 நாலைஞ்சுநாள் இங்கே இருப்பாராம். ஹூம்.... கொடுத்துவச்ச மகராசன்!  எனக்கும் இப்படி  கேம்பர் வேனில் ஊர் சுத்த ஆசைதான்.  அங்கங்கே நிறுத்தி எதாவது (! ) சமைச்சுச் சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்.  ஆசை இருந்து என்ன செய்ய ?  நமக்கு ஒத்துவருமான்னு பார்க்க வேணாமா ?  
நமக்குத்தான் இப்படித் தயக்கமே தவிர  நிறையப்பேர் இப்படி ஊர்சுத்திக்கிட்டு இருக்காங்கதான்.  இடுப்பளவு தண்ணீரில் நின்னு மீன் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க   அங்கங்கே சிலர். 
இவுங்களுக்காகவே  ஒவ்வொரு முக்கியமான ஊர்களிலும்  சூப்பர்லூ வசதி செஞ்சு கொடுத்துக்கிட்டு இருக்கு அந்த ஊர்களின் டவுன் கவுன்ஸில்கள். காசு கட்டினால் வெந்நீர்க்குளியல், டவல், சோப், ஷாம்புன்னு எல்லாம் அம்சமாக் கிடைக்குது. 



ஏரியைச் சுத்திவந்தது போதுமுன்னு நாமும் அடுத்துப்போக வேண்டிய ஊரான நேப்பியர் போகும் பாதையில் திரும்பினோம்.  போக்குவரத்து இல்லாத சாலை....... அங்கொன்னும் இங்கொன்னுமா மரங்களைக் கொண்டுபோகும் பெரிய ட்ரக்குகள் நடமாட்டம்.  ஏற்றுமதிக்குப் போற சரக்கு !  இதுக்குன்னே ஏராளமான மரங்களை நட்டுவச்சு வளர்த்துக்கிட்டு இருக்காங்க.

நேப்பியர் ஒரு  கடற்கரை நகரம்.   ஊரின் மொத்த ஜனத்தொகை  65 ஆயிரம்தான் !   1931 ஆம்  வருஷம், இங்கே ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தில்  பழைய ஊர் மொத்தமாவே அழிஞ்சு போய், இப்போ நாம் பார்க்கிறது புதுசாக் கட்டுன ஊர்.

டாப்போ ஏரியில் இருந்து இங்கே வரும் வழியில்  ஒரு நீர்வீழ்ச்சி கூட இருக்குன்றது இங்கே வந்தாட்டுதான் தெரிஞ்சது. சரியான  போர்டு எதாவது வச்சுருக்கக்கூடாதோ ?  இந்த சாலை நேஷனல் ஹைவே என்பதால் வேகம்  மணிக்கு நூறு கிமீ என்பதால்,   வச்சுருந்தும் நம்ம கண்ணில் படலையோ என்னவோ?  ஆளில்லாத சாலையில்  பறக்கறோமில்லே....  ப்ச்.....  போகட்டும்..... 
நிறைய தண்ணீர் பார்த்தாச்சுன்னு மனசை சமாதானம் செஞ்சுக்கிட்டேன்.  
ஊர் சமீபிக்கும்போதே ரோடுக்குப் பக்கத்துலேயே திராக்ஷைத் தோட்டங்கள்.  நல்லா கம்பிகள் வச்சு வளைச்சு விட்டுருக்காங்க.   ஒயின் தயாரிப்பு இந்த ஏரியாவில் அதிகம். கடலையொட்டிப் போகும் பாதையில் போறோம்.  போட் பார்க்கிங். எக்கச்சக்கமா  தண்ணியில் நிக்குதுகள்.  ஆளாளுக்குப் போட் வச்சுருப்பாங்களோ ! 
இங்கே ஹைதராபாத்  ரோடு இருக்கு ! 
இங்கே நாம் தங்கப்போகும் இடம் க்வாலிட்டி இன்.  கடலுக்கு முன்னால் இருக்காம். மரைன்பரேடு.  ஓஷன் வ்யூ என்றதால் இங்கே  புக் பண்ணினார் 'நம்மவர்'. என் கடலாசை இவருக்குத் தெரியாதா என்ன ?
கடற்கரைச்சாலைக்குள் நுழைஞ்சு போறோம்.  க்வாலிட்டி இன் கண்ணில் படவே இல்லை.  இன்னொரு சுத்து சுத்திவந்தால்  போர்டு கண்ணில் பட்டதே தவிர,  கட்டடதுக்குள் போகும் ட்ரைவ் வே கண்ணில் படலை. இன்னொரு சுத்துன்னு  சுத்தி வந்ததில்  கீழே இருக்கும் கடைகள் வரிசைப்பக்கம் நிதானமா வண்டி ஓட்டிக்கிட்டு வரும்போது,   கண்ணை நட்டுக்கிட்டு இருந்ததால் ஒரு இடைவெளி என்கண்ணில் பட்டது.    அதுக்குள்ளே நுழைஞ்சு போனால் சரிவான பாதை....   கொஞ்சம் கீழ் மட்டத்தில் கார்பார்க்.   மணி இன்னும் ரெண்டு ஆகலையேன்னு ரிஸப்ஷன் போனால் புண்ணியவான் அறைச்சாவியைக் கையில் கொடுத்துட்டார்.  அறை எண் 229 இல் துல்ஸி & கோபால் !  


தொடரும்...... :-)


4 comments:

said...

காடும் ஏரியும் கடலும் என அருமையாக இருக்கிறது.

said...

அருமை அருமை

said...

வாங்க மாதேவி,

ரசனைக்கு நன்றிப்பா !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !