Monday, August 23, 2010

இந்தா...பிடிச்சுக்கோ ஒரு போனஸ்...............( கம்போடியாப் பயணம் 13 )

பேச்சுப்பராக்குலே கோட்டை விட்டுட்டேன்னு கொஞ்சம் தாமதமாத்தான் புரிஞ்சது. மலைக்கோயில் போயே போச்:( அதுக்காக ஓய்ஞ்சு உட்கார முடியுதா? மனம் தளராத விக்கிரமாதித்யனைப் போல் வேறென்ன கோவில் இந்தப்பக்கம் இருக்குன்னு நம்ம ஸ்மெய்யைத் தொணப்புனதில் இன்னும் கொஞ்ச தூரத்துல்லே லெஃப்ட்லே திரும்புனா வருமுன்னு சொன்னார்.

கழுத்தை அப்படியே லெஃப்ட்லே உடைச்சுக்கிட்டே போறோம். நெல்வயல்களுக்கிடையில் அங்கங்கே தாமரை வயல்கள். குளமுன்னு சொல்லலாமுன்னா கரையைக் காணோமே! புத்தருக்கு பூஜிக்கவோ? அதுவும்தான். ஆனால் முக்கியமா இது தாமரைக்கிழங்கு எடுக்கவாம். நல்ல மார்கெட் இருக்காமே இதுக்கு!
தாமரைக்குளம்

மெயின் ரோடுலே இருந்து சட்னு பிரியும் ஒரு மண்ரோடுக்குள் வண்டி திரும்புச்சு. நம்மூர் கோவில்களில் இருப்பதுபோல ஒரு தோரணவாயில் வேற! ஒரு கால் கிலோ மீட்டர் போனதும் கூம்புகள் கண்ணுலே பட்ட ஒரு வளாகத்துக்குள் நுழைஞ்சோம். இந்தப்பக்கம் ஒரு பெரிய போதி மரம். நம்ம கோவில்களில் நாகப்பிரதிஷ்டைக்கு இருப்பதுபோல் சுற்றிவர மேடை. மேடையில் அங்கங்கே இறக்கை வைத்த காந்தருவன்கள்! ஹிந்துக்கோவிலா என்ன?
இல்லையே.... அந்தப்பக்கம் சின்னதும் பெருசும் அலங்காரமாவும், படி சிம்பிளாவும் ஏகப்பட்ட ச்செடிஸ். சிலதுக்கு தனியா மூணடி உயர சுத்துச்சுவர். முழுசும் அஞ்சு தலையார் வளைஞ்சு நெளிஞ்சு நீட்டி நிமிர்ந்து (!) இருக்கார். குட்டிக்குட்டிப் பல்வரிசையா.... என்ன ஒரு சிரிச்ச முகங்கள்!!! இந்தப் பயணத்தில் நமக்கு இந்த ச்செடீஸ்களின் ரகசியம் ஒருமாதிரி பிடிபட்டுப் போயிருச்சு அரசர்களைபோல ரொம்ப முக்கியமானவர்கள் இறந்துட்டால் அவுங்க அஸ்தியை வச்சு அதுக்கு மேலே எழுப்பும் நினைவு மண்டபம் இது. புத்த மடங்களில் முக்கியமானவர்கள் பிக்ஷுக்களாச்சே. அவுங்க இறந்தாலும் இதே முறையில் ச்செடிகளை மடாலயத்துலே கட்டுவது ஒரு வழக்கமா இருக்கு. பிக்ஷுக்களின் 'ரேங்க்' அனுசரிச்சு இது ஆடம்பரமாவோ, அலங்காரமாவோ, இல்லை சாதாரணமாவோ இருக்கும்..

ச்செடீஸ்

சிரிச்சமுகம்
வளாகத்தின் நடுவிலே ஒரு புத்தர் கோவில். அடுத்த கட்டிடம் பிக்ஷுக்களுக்கான பள்ளிக்கூடம். அட்வீயா மடாலயம். இந்தாங்க, உங்களுக்கு ஒரு போனஸ் ன்னு சொல்லும்படி புத்தர் கோவிலுக்குப் பின்பக்கம் புராதனக் கோவில். ரெண்டாம் சூர்யவர்மனால் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்ட ஆரம்பிச்ச ஹிந்துக் கோவில். முற்றிலும் முடியாத ஒரு நிலையில் அப்படியே நின்னு போயிருக்கு. நடுப்பகுதி மட்டும் அட்டகாசமா இருக்கு. அப்ஸரா சிற்பங்கள் எல்லாம் பாதிச் செதுக்கிய நிலையில் நிக்குது.

சிதைந்த கோவில் மேலும் பழுதாகாமல் இருக்க மரக்கட்டைகள் வச்சு சப்போர்ட் கொடுத்துருக்காங்க. இந்த இடம் 'வாட் அத்வீயா' ன்னு இருந்துருக்கு. இந்த கிராமத்துக்கும் அத்வீயான்னுதான் பெயரே. இதே பெயரையும், இதே இடத்தையும் எடுத்துக்கிட்டு பௌத்தமடம் ஒன்னு கட்டி இருக்காங்க அடுத்த வந்த காலங்களில்.
ஹிந்துக்கோவில்

பழைய கோவிலைக் கிளிக்கிட்டு, புத்தர் கோவிலைப் பார்க்க வெராந்தாவில் ஏறினதும் சுற்றிவர இருக்கும் ஜன்னல் கதவுகளில் கண்கள் தானாவே போச்சு. தங்க நிறம். இழுக்காம இருக்குமா? என்னமோ உருவம் தெரியுதேன்னு பார்த்தால்..... கற்களைச்சுமந்து கொண்டு போகும் வானரன்கள். பாலம் கட்டவா? அட ராமா! ராமாயணம்! இங்கே எப்படின்னு ஒவ்வொரு ஜன்னலையும் விடாமல் பார்த்தேன்.
ஹனுமன் தோளில் ராமன்

ராவணன் சீதையைக் கவர்தல்

வானரன்களின் வாகனங்கள்.

சேது கட்ட


முக்கால் வாசி வானரன்கள் புரியும் போர்தான். புலி, அன்னப்பறவைன்னு கிடைச்ச வாகனத்தை விடாமல் அதுலே ஏறி கையில் ஆயுதங்களுடன் போர் செய்யும் வானரன்கள். ஹனுமன் தோளில் உட்கார்ந்து அம்பெய்யும் ராமன், சீதையைக் கடத்திப்போகும் ராவணன் இப்படி ஏராளம்.
கோவிலுன்னு சொன்னதும் பிரமாண்டமா இருக்குமுன்னு நினைக்காதீங்க. ஒரு பெரிய ஹால். கூரை மட்டும் சீனக் கலையைக் கொண்டது. பக்கச்சுவர்களில் ஜன்னல்கள். முன்பக்கம் நடுவிலே இடம் விட்டு ரெண்டு ஓரத்திலும் ரெண்டு வாசல். உள்ளே போனால் அமர்ந்த நிலையில் புத்தர் சிலை. பெருசா நடுவிலே ஒன்னும் கீழடுக்கில் பக்கத்துக்கு ஒன்னாக ரெண்டு சிறிய சிலைகள். முன்னால் பூஜைக்கான ஊதுவத்தி, பூக்கள் வகைகள். அமர்ந்து பூஜிக்கவும் தியானிக்கவும் தரையில் ஒரு விரிப்பு.
எனக்கு ஒரு சந்தேகம்........ மற்ற கோவில்களெல்லாம் ஒரு சமயம் இந்துக்கோவில்களா இருந்து புத்தமதக்காரர்களால் புத்தர் கோவிலாக மாற்றப்பட்டிருக்கு. ஏற்கெனவே அங்கே இருந்த சுவர்ச்சித்திரங்கள் சிற்பங்களில் இந்து இதிகாசங்கள் அப்படியே இருந்துருக்கும். ஆனால் இங்கே புத்தர் கோவிலைச் சீனக்கலாச்சார முறையில் கட்டியும் இங்கே ராமாயணம் ஏன் இருக்கு? புத்தர் வாழ்க்கைச் சரித்திர நிகழ்வுகளை ஏன் ஜன்னல் அலங்காரத்தில் உருவாக்கலை? இத்தனைக்கும் சாதாரண அளவுள்ள சன்னல்கள். யார்கிட்டேயாவது கேக்கலாமுன்னா..... வளாகத்துலே யாருமே கண்ணுக்குத் தெம்படலை:(
சாதாரண ஜன்னல்களுக்கு இப்படி ஒரு வேலைப்பாடா????
கோவிலுக்கு உள்ப்புற சுவர்களில் புத்தர் சம்பவங்களை சுவத்தில் வரைய ஆரம்பிச்சு ஒரு மூலையில் தொடங்கி நாலு படத்தோடு விட்டுருக்காங்க. இடத்தோட ராசியோ என்னவோ..... ஆரம்பிச்சது எதுவும் முடியமாட்டேங்குது. வாஸ்து சரி இல்லை, விவேக்கிடம்தான் கேக்கணும்ன்னு சொல்லிக்கிட்டேன்:-))))

அடுத்த கட்டிடத்தில் வகுப்பறை. அதை அடுத்து அலங்காரமா ஒரு தங்கச்செடி. இன்னொரு பக்கம் பிக்குகளுக்கான அறைகள் இப்படி வசதியா கட்டி வச்சுருக்காங்க. கூரைகளில் எல்லாம்கூடப் பெயர் சொல்லாததுகள்!
கூரை மேல் பாம்பு

ஊருக்கு வெளியில் இருக்கும் இந்தக் கோவிலை பொதுவா சுற்றுலாப்பயணிகள் பார்க்கத் தவறிடறாங்களாம். நமக்குக் கிடைச்சது லாபமுன்னு கிளம்பி வந்தோம். நம்ம ஹொட்டேலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில் கடைசி நிமிஷ ஷாப்பிங்குன்னு எட்டிப்பார்த்து(வாசலில் பெரிய யானைகள் நின்னுச்சேன்னு உள்ளே போனேன்) . 'உடல் ஊனமுற்றோர், ஏழைப்பெண்கள் அநாதைகள்' செஞ்ச பொருட்களாம். விலையைப் பார்த்தால் மயக்கமே வந்துருச்சு. இன்னொரு ஏழைப்பெண்ணின் எண்ணிக்கையைக் கூட்டவேண்டாமுன்னு வெளியில் ஓடிவந்தேன். கையில் வேற செல்லாத நூறுதான் இருக்கு இந்த நிமிசம்:-)

ஸ்மெய்யைக் காத்திருக்கச் சொல்லிட்டு அறைக்கு வந்து மீண்டும் ஒரு குளியல் போட்டதும்தான் மனசுக்குக் கொஞ்சம் சமாதானமாச்சு. மணிவேற ஓடிக்கிட்டே இருக்கு. டுக்டுக்கிலே மீண்டும் டவுனுக்கு வந்து பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு, பக்கத்துலே இருந்த வங்கியில் அந்த 'செல்லாத நூறை'க் காமிச்சுக் கேட்டால் குழப்பம் ஒன்னும் இல்லை. எல்லாம் அசலாக்குமுன்னு சொல்லி சில்லறை மாத்திக் கொடுத்தாங்க. இந்தப்பக்கத்துலே இருந்த பண முதலைகளைக் கிளிக்கிட்டுத் திரும்ப ஹொட்டேலுக்குப் போனோம். விமான நிலையம் போக டாக்ஸி வேண்டாம். பேசாம டுக்டுக்கிலே போலாம். அந்தக் காசு நம்ம ஸ்மெய்க்குக் கிடைக்கட்டுமேன்னேன். முதலில் ஆ.....ஊ....ன்னவர் பெட்டிகளை எப்படிக் கொண்டு போறதுன்னார் வீரா உக்கார்ந்த இடம் இருக்கேன்னதும் வெய்யிலா இருக்குன்னு ஆரம்பிச்சார். பதினைஞ்சு நிமிசத்துலே காய்ஞ்சுருவோமான்னு...... (நமக்கு) ஆமாம் போட வைக்கறதுக்குள்ளே......பெரும் பாடு.:-)


தொடரும்...........................:-)

நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

மாவேலி வருந்ந திவசம் மனுஷ்யரெல்லாம் ஒன்னுபோலே!

14 comments:

said...

நல்லாருக்கு.

லொகேஷன் நம்மூர் மாதிரிதான் இருக்கு.

said...

துளசிக்குப் பொன்னோண வாழ்த்துகள். ஓண சத்யா கழிச்சோ?(அன்யெட்டியா)??
இது கொஞ்சம் மர்மமா இருக்கே. புத்தர் உள்ள. ஆனால் ராமாயணம் வெளியே,.
ராமரைப் புத்தராக்கிட்டங்களோ!!
எங்க பார்த்தாலும் வாலோட வந்துடறாருப்பா இந்தப் பாம்பு சார்/!!அப்ப கம்போடியாவுக்கு பை பை.மீண்டும் பயணத்தில் சந்திக்கலாம்:)எங்க ஊரிலயும் ஏகத்துக்கு மழை!

said...

Teacher,

As usual romba detaila explain pannitinga. Thamarai kulammum, thamarai kizhangum... nice to hear... Ungalukku onnu theriyuma ?

Especially Chinese, Vietnamese, all eat up till 200 different types of vegetables and fruits... they are so adventerous....

But, nama athae kathrikka, vendakka thaan...

said...

ஆமாம்ல்ல..புத்தர் கோவில்ல எதுக்கு ராமயாணம்...குட் கெஸ்டின் டீச்சர். ;))

உங்களுக்கும் ஓணாம் வாழ்த்துக்கள் டீச்சர் ;)

said...

ராமாயணக்கதவும், புத்தர்கோவிலும் நன்றாக உள்ளது டீச்சர்:))))

said...

வாங்க ஆடுமாடு.

சினிமாக்காரருக்கு லொகேஷன் மீதுதான் கண்ணு:-))))

said...

வாங்க வல்லி.

உள்ளே வெளியே, வெளியே உள்ளேன்னு ஒரே மர்மம்தான் போங்க!

ஓணசத்யா எல்லாம் இடுகைகளில் உள்ள படங்களைப் பார்த்துத்தான்.

கொஞ்சமா அடைப்ரதமனும், ஓலனும் செஞ்சேன்.

said...

வாங்க ஸ்ரீநிவாசன்.

கோபாலும் சொல்லி இருக்கார். சீனாவுக்கு அடிக்கடி போறாரே. நிறைய காய்கறிகள் எல்லாம் சட்னு ஒரு நிமிச வதக்கல்கள்தான். சுவை அதிகமாம்.

நாமெல்லாம் பாரம்பரிய சாப்பாட்டை விடமாட்டோம். மீனாட்சியம்மா சொன்ன தான் மட்டும்தான் குழம்புக்கு:-))))

said...

வாங்க கோபி.

புரியாத புதிர்களில் இது(வும்) ஒன்னு.

அப்படியே அடுத்தவருசம் எனக்கு ஓணம் வாழ்த்து சொல்லும்போது குற்றியலுகரமே போதும்:-))))

ஓணா(ம்)ன் வாழ்த்தா? :-))))))

said...

வாங்க சுமதி.

நன்றிப்பா.

said...

அன்புள்ள ஆசிரியருக்கு ,
கம்போடியா பயணம் 13.. மிகவும் அருமை .
இரண்டு நாட்களுக்கு முன்பே கருத்து தெரிவிக்க
வேண்டி இருந்தேன் .என்னுடைய ஜிமெயில் தொடர்பு
கிடைக்கவில்லை . நன்றி .

said...

நாங்களும் லபக் ந்னு பிடிச்சு படிச்சிட்டோம், அற்புதமான சிற்ப வேலைப்பாடா இருக்கு ஜன்னல்.

said...

வாங்க சிவஷன்முகம்.

சிரமம் பாராது நீங்கள் கொடுத்த பின்னூட்டங்களுக்கு நன்றி. கவனமான சரித்திரக்குறிப்புகள் அவை.

இன்னிக்குத்தான் கடைசிப்பகுதி வெளியிட்டு இருக்கேன்.

இன்றைக்குப் பதிவைத் தமிழ்மணத்துலே சேர்ப்பதும் பிரச்சனையா இருந்தது:(

said...

வாங்க கயலு.

அதான்..........கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது:-)))))