Friday, August 06, 2010

அங்கோர் வாட் ..........( கம்போடியாப் பயணம் 2 )

ஹைய்யோன்னு மூச்சடைச்சு நின்னேன்னு சொன்னால் இது கொஞ்சம்கூட மிகை இல்லை. வரும்வழியெல்லாம் அருமையான சாலையும் ரெண்டு பக்கங்களிலும் அடர்ந்த காடுகளும். ஒரு காலத்துலே இது முழுசுமே காடே காடு. புலிகளும் யானைகளும், பாம்புகளுமா உலாவித் திரிஞ்ச இடம். பாம்புப் புத்துகள் அங்கங்கே பெருசா வளர்ந்து நிக்குது. யானைகள் கூட நிறைய இருக்காம். ஆனால் புலிகள்? போன இடம் தெரியலை.

இந்தப் படம் உபயம்: கோபால்.
நம்ம ஹொட்டேலில் இருந்து நாலரை கிமீ தூரம்தான் அங்கோர்வாட். நேராப்போகும் சாலையின் குறுக்கே சட்னு ஒரு நதி. நல்ல அகலம். மறுகரையில் நதியின் நீளத்துக்கே இருக்கும் நீண்டு போகும் கட்டிடம். அட! ன்னு திறந்தவாயை மூடுமுன் வீரா சொன்னார் இது நதி இல்லை. வெறும் அகழின்னு. அந்த டி ஜங்க்ஷனில் இடப்பக்கம் திரும்பி அகழிக்கரையோரமாவே பயணம் செஞ்சு வலப்புறம் போகும் அகழியைத் தொடர்ந்தால் கோவில் முன்பகுதி. மூச்சடைஞ்சு நின்னது அப்போதான்.

வண்டியை விட்டு இறங்குனதும் சின்னதா ஒரு கும்பல் நம்மைவந்து சூழ்ந்துக்கிட்டாங்க. கைடு புக் வேணுமா? கோவில் படங்கள் வேணுமா? வேணாம். கைடு கூடவே வந்துருக்கார்.
இந்தப் படம் உபயம்: கோபால்.
அதிகாரபூர்வமா அனுமதி பெற்ற வழிகாட்டிகள் நம்ம வீராவைப்போல் பலர் அவுங்கவுங்க குழுக்களோடு நடமாடிக்கிட்டு இருக்காங்க. எல்லோருக்கும் யூனிஃபார்ம், பேட்ஜ் இப்படி நல்லாத்தான் இருக்கு. நம்பலாம்.
இந்தப் படம் உபயம்: கோபால்.
அகழிக்கு அப்பால் கோவிலின் வெளிப்புற மதில் சுவர். கோவில் மட்டும் ஒன்னரை கிலோமீட்டர் அகலமும் ஆயிரத்து முன்னூறு மீட்டர் நீளமும். இருநூத்திமூணு ஏக்கர் பரப்பளவு. இதுக்கு வெளியே அடர்த்தியான மரங்கள் நிறைஞ்ச காடு போல தோட்டம். அதுக்கும் வெளிப்புறமா சுற்றிவர நூத்துத் தொன்னூறு மீட்டர் அகலத்தில் அதுகேற்ற ஆழமுமா இருக்கும் அகழி. முன்னொரு காலத்தில் முதலைகள் ஏராளமாம். இந்தப் படத்தைப் பாருங்க. ஓரளவு விவரிப்பு புரியலாம்.
ஆண்டவர் அருளிய படம். பறக்கும் பலூனிலும் இருந்து பார்வையிட இந்த ஊரில் வசதி இருக்கு.
சைக்கிள், மோட்டர் சைக்கிள் எல்லாமும் நாள் வாடகைக்குக் கிடைக்குது

வாலுள்ளதும் வாலில்லாததுமா நின்னு ஒரு வரவேற்பு! கைப்பிடிச்சுவரில் நீஈஈஈஈஈஈஈண்டு படுத்து ஓய்வெடுத்துக்கிட்டே தலையை மட்டும் தூக்கி வா வான்னு கூப்பிடும் அஞ்சு தலையார். அவர் பக்கத்துலே வாலில்லாத சிங்கங்கள். அட ராமா? வால் எங்கே போச்சு?

தங்க வைர வால்கள் இழந்த சிங்கம்:(

சிங்கங்களே இல்லாத நாடா இது இருந்துருக்கு. அதிசயமா சிங்கங்களைப் பார்த்தவுடன் அதன் அழகுலே மயங்கி சிங்கச்சிற்பங்கள் அந்த நாட்டில் செஞ்சு அபூர்வமான மிருகத்துக்கு எல்லாமே அம்சமா இருக்கணுமுன்னு தங்கத்துலே வால் செஞ்சு வைரம், வைடூரியங்கள் பதிச்சு வச்சாங்களாம். பகைவர் படையெடுப்பில் வால்கள் எல்லாம் உருவப்பட்டன. இப்போ இந்த நிலையில் இருக்குதுங்க எல்லாம்.

வீரா சொன்ன கதையை நம்பலாமுன்னு நினைச்ச அதே சமயம் பாம்புகளை எனக்கு விளக்கினார். இந்த நீண்ட பாம்புகள்தான் அனந்தன். பாற்கடலைக் கடைஞ்சப்பக் கயிறாக ஆக்டு கொடுத்தார்.

ஐயோ...ராமா!!!! அது வாசுகி இல்லையோ?

சின்ன சமாளிப்புக்குப் பின் ஆமாமாம். இது அனந்தன்வாசுகி.

மெள்ளப்பேச்சுக் கொடுத்தேன். நிறைய இந்தியர்கள் வர்றாங்கதானே?

இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியா இருந்தது ரொம்பக் குறைவான எண்ணிக்கையிலாம். அதிகமும் வெள்ளைக்காரர்களுக்குத்தான் சேவை வழங்கி இருக்காராம். ஆனால் ஒரு இந்தியப்பயணி வந்தப்ப இவர்தான் வழிகாட்டியா இருந்துருக்கார். ரொம்ப நல்ல மனிதராம். நட்பானவராம். இவருடைய பெயருக்குப் பொருள் 'ஹீரோ'ன்னு சொன்னாராம்.

இதைச் சொல்லும்போதே இவர் முகத்தில் ஒரு பிரகாசம். சரிதானான்னு கேட்டார்.

ரொம்பச்சரி. வீரா என்னும் படத்தில் ஹீரோ வீராவேதான்.

இல்லையே....வீரான்னா வீரன், படைவீரன்னு வச்சுக்கலாம்.

ஒரு வீரன் ஹீரோ ஆகலாம். ஆனால் ஒரு வீரா ஹீரோ ஆகமுடியாது சினிமாவைத் தவிர.

அகழிமேல் இருக்கும் பாலத்தைக் கடந்து கற்கள் பாவிய அகலமான பாதையில் நடந்து போறோம். திடீர்னு நடுநடுவே கெமெராவும் கையுமா சிலர் நம் முன்னால் வந்து போறாங்க. ஐக்கியநாடுகளின் யூனிசெஃப் பிரிவு செலவையெல்லாம் ஏற்றெடுத்து இக்கோவிலைப் பழுதுபார்த்துக்கிட்டு இருக்காங்க. உலக பாரம்பரியச் சின்னமா இந்தக்கோவிலை அங்கீகாரம் செஞ்சு இந்த வேலைகள் நடக்குது.
முதல் பிரகார வாசல்


அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் கோவிலின் மூணு கோபுரங்கள் தெரியுது. ரெண்டு பக்கமும் கைப்பிடிச்சுவரில் பெயர் சொல்லாதது அங்கங்கே அறுபட்டுத் துண்டு துண்டாய்த் தொடர்ந்து வருது. வெளிப்புறப் பிரகாரம் முன்னே வந்து நிக்கிறோம். அஞ்சு வாசல். நடுவாசல் அரசருக்கு. இடப்புறம் இருக்கும் வாசல் படை வீரர்களுக்கு. அதுக்கு இடப்புறம் இருப்பது யானைகளுக்கு. இதே போல அரசருக்கு வலப்புறம் மந்திரிகள் 2 பிரதானிகளுக்கு. அதுக்கு வலப்புறம் ரேங்கில் இவர்களைவிடக் குறைஞ்சவர்களுக்கும் பொதுமக்களுக்கும்.
நடுவாசல்


எல்லோரும் இந்நாட்டு மன்னர்னு (மனசுக்குள்ளே பாடிக்கிட்டே) நடுவாசலில் நுழைஞ்சு போனோம். (கம்போடியாவில் அரசர் இருக்கார். ஆனால் ஓசைப்படாமல் ஒதுங்கி இருக்கார். படத்தை எங்கேயும் காணோம்.
இப்போ இருக்கும் அரசரின் பெயர் Norodom Sihamoni. கொஞ்சம் கவனிச்சுப்படிச்சால் நரோத்தம் சிஹாமணின்னு இருக்குல்லே? ஆஹா.....)
சாளரங்களின் அணிவகுப்பு.இந்தப் படம் உபயம்: கோபால்.
இந்தப் படம் உபயம்: கோபால்.
இந்தப் படம் உபயம்: கோபால்.
அப்சரஸ் மங்கையர் ஒன்னும் பேசாமல் நம்மைப் பார்த்தார்கள். ஏறக்கொறய மூவாயிரம் அப்சரஸ்களைச் செதுக்கித் தள்ளி இருக்காங்க. இன்னிக்கு சனிக்கிழமை வேற. எனக்கு ஒரு கோவிலுக்குப் போகணும். விஷ்ணுவா இருந்தால் கூடுதல் மகிழ்ச்சின்னு நினைக்கும்போதே அலங்கார ஜன்னல்கள் அடுக்கடுக்கா அடுத்தடுத்து நிற்கும் நீள வெராந்தா வழியா கூட்டிட்டுப்போறார் வீரா. ரொம்ப தூரத்துலே லேசா மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறம் கண்ணில் படுது. வழியெங்கும் தலை இழந்த சிற்பங்கள்.............தங்கக்குடையின் கீழ் நின்ற திருக்கோலத்தில் எண்கரத்தான். நம்ம பேயாழ்வார் பாடிய அட்டபுயகரத்தான்....... அவனோ இவன்? சங்கு சக்கரம் இல்லாமல், என்னமோ பிடிக் கொழுக்கட்டைப் பிடிக்கும் விதமா எட்டு கைகளையும். இறுக்கமா மூடி வச்சுருக்கான்! ஆனால் காதை வளர்த்து வச்சுருக்கானே? நம் குறைகளைக் கேட்டுக்கேட்டே காது தொங்கிப் போச்சோ?
தங்கக்குடையின் கீழ் எண்கரத்தான். இந்தப் படம் உபயம்: கோபால்.

புத்தர்ன்னு நினைச்சு புத்த மதக்காரர்களும், விஷ்ணுன்னு நினைச்சு ஹிந்து மதக்காரர்களும் வணங்க, வேடிக்கை பார்த்து வழிநடக்கும் வெள்ளைகாரர்கள்.
இங்கேயும் கட்டுக் கட்டா ஊதுவத்திகள்தான்.
இந்தப் படம் உபயம்: கோபால்.
படிகள் இறங்கி அடுத்த பிரகாரத்துக்குள்ளே போனால் இன்னும் ஒரு அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் மெயின் கோவில் தெம்படுது. அதை நோக்கி நடக்கும்போது ரெண்டு பக்கமும் மீண்டும் வாசுகிகள். பரந்த புல்வெளிகள். பக்கத்துக்கொன்றா பாதி இடிஞ்ச நிலையில் ஒன்னுபோல ரெண்டு கட்டடங்கள். லைப்ரெரிகளாம். ஓலைச்சுவடிகள் வச்சுருந்துருக்குமோ? முக்கியமான டாக்குமெண்ட்ஸ்களை கோவிலில் வைக்கும் பழக்கம் இருந்துச்சாம். வீரா சொன்னது.
நூலகம்


மெரினா பீச்சில் குதிரைச் சவாரி போல சூழலுக்குப் பொருத்தமில்லாமல் அலங்கார சேணம் போட்ட வெள்ளைக்குதிரை ஒன்னை நிறுத்தி அதன்மேல் ஏறி உக்காந்து போஸ் கொடுத்தால் படம் எடுத்துத் தரும் வியாபாரம் நடக்குது.
குதிரை வீரனாக இருக்க வேணாம் குதிரை ஏற. பக்கத்தில் ஸ்டூல் போட்டுருக்கு:-)

ஓ....ராஜகுமாரன் வெண்புரவியில் வாட்டுக்கு விஜயம் செய்கிறார்னு சொல்லிக்கலாம். ராஜான்னதும் நினைவுக்கு வருது. இந்தக் கோவில்கள் கட்டப்பட்டது பனிரெண்டாம் நூற்றாண்டில் அரசர் ரெண்டாம் சூரியவர்மன் காலத்துலே. க்மெர் சாம்ராஜ்ஜியம். ஆனால் இவையெல்லாம் 802 முதல் 1220 வரை கொஞ்சம் கொஞ்சமா நாலு நூற்றாண்டுகளாக் கட்டப்பட்டதுன்னும் சொல்லிக்கறாங்க.

'வ்ரா விஷ்ணுலோக்' னு அப்போ கோவிலுக்கு ஒரு பெயர் இருந்துருக்கு. இந்தக் கோவிலை வச்சுதான் இங்கே தலைநகரத்தை நிர்மாணித்ததாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இந்த அங்கோர் என்ற பெயரே சமஸ்கிரதச் சொல்லான, நகரா, நகர், என்ற சொல்லில் இருந்து வந்துச்சுன்னும் வாட் என்றது கோவிலைக் குறிக்குதுன்னும் சொல்லி கோவில்களின் நகரம் என்ற பெயரில் இந்த ஊர் அறியப்பட்டதுன்னும் சொல்றாங்க. சிடி ஆஃப் டெம்பிள்ஸ்.

இதே பெருமை நம்ம தமிழ்நாட்டுலே ஒரு ஊருக்கு இருக்கு. தெரிஞ்சவுங்க கை தூக்குங்க!

இந்த க்மெர் சாம்ராஜ்யத்தின் ஆட்சி (இப்போதைய) வியட்நாம், சீனா எல்லாம் கடந்து வங்காளவிரிகுடா வரையில் பரந்து இருந்ததாக ஒரு குறிப்பும் இருக்கு. இவ்வளவு புகழ்பெற்ற சாம்ராஜ்ஜியம் ( 802 முதல் 1463 வரை) ஏழு நூற்றாண்டுகளுக்குப் பின்னே அழிஞ்சு போனது எப்படி என்ற வியப்பும் நமக்கு வராமப்போகாது. இங்கே இதுமட்டுமில்லாமல் இன்னும் வெவ்வேற கோவில்கள் கட்டிப் போட்டு வச்சுருக்காங்க. தடுக்கி விழுந்தாக் கோவில்னு இல்லாம ஒவ்வொன்னுக்கும் ரெண்டு மூணு கிலோமீட்டர் இடைவெளி இருக்கு. எப்படி ஒரு அத்துவானக் காட்டிலே இப்படி எல்லாம் கட்டுனாங்க? இன்னும் விடுபடாத மர்மம்தான்.


இடைக்கிடையே தாய்லாந்து நாட்டுடன் சண்டை, அவுங்க வந்து இங்கே ஊரைப் பிடிச்சுக்கிட்டது எல்லாமும் நடந்துருக்கு. பதிமூணாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இலங்கையில் இருந்து வந்த புத்த பிக்குகளால் புத்தமதம் இங்கே வந்து காலூன்றி நிக்க ஆரம்பிச்சது. வர்மன் வம்ச அரசர்களில் ஸ்ரீந்தரவர்மன் (Srindravarman 1295 to 1308. ) என்றவர் புத்தமதத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவராக இருந்துருக்கார். (ஒருவேளை அப்போதான் இந்து மதக் கடவுளர்களின் சிலைகளையெல்லாம் எடுத்துட்டு புத்தர் சிலைகளை அங்கே வச்சுருக்கலாமோ?)

பதினைஞ்சாம் நூற்றாண்டுக்குப்பிறகு இந்தக் கோவில் இருப்பதையே எல்லோரும் மறந்துட்டாங்க. காட்டுவழியாப் பயணம் செஞ்ச சில புத்தபிக்குகள் இந்தக் கோவிலைப் பார்த்துட்டு தேவலோகத்தில் இருந்து கடவுள் நேரடியா வந்து சிருஷ்டித்த கோவில்னு சொன்ன 'கதை'களையும் மக்கள் நம்பிக்கிட்டு இருந்தாங்களாம். அடர்ந்த காட்டுக்குள் போய் ஆராய்ச்சி செய்யலை யாரும்னு சொல்லலாமா?


பல வெள்ளைக்காரகள் இந்தப்பக்கம் வந்து மெஷினரிகளா சுத்தித்திரிஞ்சப்ப இந்தக் கோவிலைப் பார்த்துருக்காங்களாம். ஆனால் யாரும் இதைப்பெருசா(?) எடுத்துக்கலை. ஹென்றி மோஹாட் (உச்சரிப்பு சரியான்னு தெரியலை) Henri Mouhot என்ற ஃப்ரெஞ்சுக்காரர் காடுகளைச்சுற்றி அலைஞ்சப்ப இந்த இடத்துக்கு வந்துருக்கார். இதைப்பற்றி எழுதி, இந்த சேதியைப் பரப்பினவர் இவர்தான்.
கற்கால நாகரிகத்தைப்பற்றின கண்டுபிடிப்புன்னு அப்போ எல்லோரும் நினைச்சுருக்காங்க. இது நடந்தது வருசம் 1860 இல். அடுத்த வருசமே இவர் மரணமடைஞ்சார். ஆனாலும் இவர் பத்த வச்ச நெருப்பு நல்லாவே பத்திக்கிச்சு. அடுத்த ரெண்டு வருடங்களில் ப்ரான்ஸ் இங்கே வந்து இடம்பிடிச்சு தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுனதுக்கு இவரும் ஒரு (மறைமுக) காரணம் என்றுதான் பேச்சு பரவலா அடிபட்டுருக்கு.

1863 முதல் ஃப்ரெஞ்சு நாட்டு காலனி ஆதிக்கம் இங்கே ஆரம்பிச்சு ஒரு தொன்னூறு வருசங்கள் ஓடிப்போச்சு.

பாருங்க....பேசிப்பேசி இதோ கோவிலுக்கு ரொம்பக்கிட்டே வந்துட்டோம்.

நாளைக்கு மீதியைப் பார்க்கலாம்.

தொடரும்..................:-)

39 comments:

DaddyAppa said...

"இந்தப் படம் உபயம்: கோபால்.'' :-))

நம்ம ஊர்ல கோவில் ல எல்லா tube light லேயும் இந்த மாதிரி பேர் எழுதி வெச்சிருப்பாங்களே! அந்த மாதிரியா இது?!!!

அத்தானை வெச்சு காமிடி ஏதும் பண்ணலையே!!! :-)))

படங்கள் எல்லாம் அருமை (கலக்கிடீங்க கோபால் சார்)

Aravinthan said...

புத்தர்ன்னு நினைச்சு புத்த மதக்காரர்களும், விஷ்ணுன்னு நினைச்சு ஹிந்து மதக்காரர்களும் வணங்க, வேடிக்கை பார்த்து வழிநடக்கும் வெள்ளைகாரர்கள்.
------------------------------------
நல்ல காலம் ஜேசு என்று நினைத்து வெள்ளைக்காரர்கள் வணங்கவில்லை.

Aravinthan said...

(ஒருவேளை அப்போதான் இந்து மதக் கடவுளர்களின் சிலைகளையெல்லாம் எடுத்துட்டு புத்தர் சிலைகளை அங்கே வச்சுருக்கலாமோ?)

வைச்சிருக்கலாம். ஏனெனில் இலங்கையிலும் தற்பொழுது தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சைவக்கோவில்கள் அழிக்கப்பட்டு புத்தகோவில்கள் அங்கே நிறுவப்பட்டு வருகின்றன.

ரசிகன் said...

அருமையான புகைப்படங்கள்.விளக்கமான பயணக்கட்டுரை.

சாந்தி மாரியப்பன் said...

//சிடி ஆஃப் டெம்பிள்ஸ்.

இதே பெருமை நம்ம தமிழ்நாட்டுலே ஒரு ஊருக்கு இருக்கு. தெரிஞ்சவுங்க கை தூக்குங்க!//

மதுரைதானே...

இந்தக்கேள்வியை குறிப்பா கேட்டதுக்கு ஏதேனும் உள்காரணம் இருக்கா :-)))
(அண்ணாவோட ஊராச்சே.. அதான் கேட்டேன் :-))

வே.நடனசபாபதி said...

//சிடி ஆஃப் டெம்பிள்ஸ்.

இதே பெருமை நம்ம தமிழ்நாட்டுலே ஒரு ஊருக்கு இருக்கு. தெரிஞ்சவுங்க கை தூக்குங்க!//

கோவில்களின் நகரம் - காஞ்சிபுரம்

ஸ்வாமி ஓம்கார் said...

எப்பொழுது இந்த ஊரின் படங்களை பார்த்தாலும்..

அங்கோருவாட்டி போகனும்
அங்கோருவாட்டி போகனும்னு தோனும்..
அந்த ஊரு பேரே அங்கோர் வாட்-னு அப்பறம் தான் தெரிஞ்சுது.

நல்லா இருக்கு

வல்லிசிம்ஹன் said...

"அவர்தான் பதிவே எழுதறார்னு போடாம விட்டீங்களே:)))
ஆனாலும் உங்களுக்கு....ஜாஸ்திதான். வீரன் ஹீரோ ஆகலாம். ஆனா, வீரா???ஹீரொபடமாகலாம்:")
இவ்வளவு தூரமா நடந்தீங்க!!!பாவம்பா. எனக்கென்னவோ இந்த ஊரு ராவணனோட ஊரா இருந்திருக்குமோன்னு தோணுது:)
அகழி,முதலை,காடு,சிங்கம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா:))))இந்தப் படம் உபயம்: கோபால்.''

Unknown said...

கோவில்களின் நகரம் நான் கும்பகோணம் என்பேன் என் ரங்ஸ் காஞ்சிபுரம் என்பார் ஏன் என்றால் அம்மா வீடு குடந்தை,மாமியார் வீடு காஞ்சிபுரம் எது கோவில் நகரம் என்று நீங்களே சொல்லுங்க டீச்சர்.சார் எடுத்த அனைத்து படங்களும் நன்றாக உள்ளது டீச்சர்:)))))

ரிஷபன் said...

படங்களும் விவரணையும் அந்த சூழலுக்கே கொண்டு போய் விட்டன..

yaadayaada said...

கோவில்களின் நகரம் கும்பகோணம்!

Unknown said...

நல்லதொரு புகைப்படப் பயணம்

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பகிர்வு துளசி.. விரும்பிப் படித்தேன்.. நன்றீ

துளசி கோபால் said...

வாங்க டாடிஅப்பா.

பொதுவா இவர் தன்னுடைய கேமெராவைக் கொண்டுவரவே மாட்டார். அப்படிக் கொண்டுவந்தாலும் க்ளிக்கரது அபூர்வம்.

இந்த முறை என்ன தோணுச்சோ..... எடுத்துத் தள்ளிட்டார். அங்கோர்வாட் லே 'படம்' எடுக்கறேன்னு வேண்டிக்கிட்டு இருந்துருப்பாரோ என்னவோ:-)))))

துளசி கோபால் said...

வாங்க அரவிந்தன்.

அழிக்கப்பட்டு...நிறுவப்பட்டுன்னா.....

மொத்தத்தையும் அழிச்சுடாம ....மூலவரை மட்டும் கிளப்பிடுவாங்களா?

இங்கே கவனமாப் பார்த்துப்பார்த்து 'சாமி'ன்னு அவுங்களுக்குத் தோன்றியதை மட்டும் பெயர்த்துருட்டாங்க:(


கொஞ்சநாளில் வெள்ளைக்காரர்களும் வணங்கலாம். இப்போ ஏசு நாதர் அருளிச்செய்த பகவத் கீதை வந்துருக்குன்னு கேள்விப்பட்டேன்!

துளசி கோபால் said...

வாங்க ரசிகன்.

ரசிப்புக்கு நன்றி.

துளசி கோபால் said...

வாங்க அமைதிச்சாரல்.

அடுத்துவந்த பின்னூட்டங்களைப் பாருங்க.

ஓட்டுகள் பிரிஞ்சு போயிருக்கு!

துளசி கோபால் said...

வாங்க நடன சபாபதி.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

நான் மனசில் நினைச்சதும் காஞ்சீபுரம்தான்.

துளசி கோபால் said...

வாங்க ஸ்வாமிஜி.

சிங்கைக்குப் போனபோது இதையும் 'கவர்' பண்ணி இருக்கலாமே நீங்க!

அங்கொருவாட்டி அங்கொரு வாட்டின்னு.....

பதிவர்களோடு சேர்ந்து நீங்களும் கெட்டுத்தான் போயிட்டீங்க:-))))

ச்சும்மா:-))))))))))))))

துளசி கோபால் said...

வாங்க வல்லி.

இது ஒரு நடையா? ஜஸ்ட் ஆரம்பம்.

நாளின் இறுதியில் கால்களைத் தலையில் வச்சுத் தூக்கி வரணும்போல ஆச்சு.

நெருங்கிய தோழி ஒருத்தரை பலதடவைகள் நினைச்சேன்!!

துளசி கோபால் said...

வாங்க சுமதி.

உங்க ரங்ஸ் கட்சிக்கு இதுவரை மொத்தம் 3 ஓட்டுகள்.

துளசி கோபால் said...

வாங்க ரிஷபன்.

அனுபவித்ததை எழுதுவதே ஒரு அனுபவமாப் போயிருச்சு. முதல் முறைக்குப்பின் எல்லாம், மனப்பயணம்தான்.

துளசி கோபால் said...

வாங்க யதாயதா.

புதுமுகம்?

வணக்கம்.

உங்க கட்சிக்கு ஓட்டுகள் 2

துளசி கோபால் said...

வாங்க கலாநேசன்.

குழந்தையின் பெயர் கலாவா?

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

துளசி கோபால் said...

வாங்க தேனம்மை.

ரசிப்புக்கு நன்றி.

வராதவங்களையெல்லாம் அங்கோர் வாட் இழுத்து வருதேன்னு வியப்புதான்:-))))

ஜோ/Joe said...

அருமை. அருமை.

சில வருடங்களுக்கு முன் இது போன்று நேரில் சென்று வாய்ப்பு எனக்கும் கிடைத்தது என்றும் இனிக்கும் அனுபவம்.

TBR. JOSPEH said...

ஒரு ப்ரொஃபஷனல் ஃபோட்டாகிராஃபருக்கு இணையா இருக்கு உங்க ஃபோட்டோஸ் எல்லாம். கோபாலுடையதும் சேர்த்துத்தான் சொல்றேன்.

அதோட ஒரு ப்ரொஃபஷனல் ட்ராவலோக் எழுத்தாளராவும் மாறிட்டீங்க. அந்த காலத்துல மணியன் விகடன்ல எழுதறா மாதிரி இருக்கு...

sury siva said...

//பாம்புப் புத்துகள் அங்கங்கே பெருசா வளர்ந்து நிக்குது. யானைகள் கூட நிறைய இருக்காம். ஆனால் புலிகள்? போன இடம் தெரியலை.

அப்பப வர்ற டூரிஸ்ட் தொந்தரவு தாங்காம, யானைங்க, புலிகள் எல்லாமே பாம்புப் புத்துக்குள்ளே ஒளிஞ்சிக்கினு
இருக்குங்களாம்.

அந்த கைடு கையை விட்டு பாக்க சொல்லி பாருங்க..! இல்லே ஒரு பெரிய குச்சியை வச்சு குத்தச்சொல்லுங்க..
யானையும் புலியும் ஓடிலே வெளி வந்திடும்.

சுப்பு ரத்தினம்.
http;//pujyagurujiviswanath.blogspot.com

துளசி கோபால் said...

வாங்க ஜோ.

ரொம்ப நாளுக்குப் பிறகு வந்துருக்கீங்க!!!! நலமா/

கட்டிடக்கலையின் அற்புதம் என்றுதான் சொல்லணும். இல்லையா???

இடிபாடுகளைப் பார்த்தால் மனசுலே லேசா ஒரு வலி:(

துளசி கோபால் said...

வாங்க டிபிஆர்.

ஒரு காலத்துலே நியூஸி பயணக் கதை எழுத வந்த மணியன் நம்ம வீட்டில் தான் தங்கினார். அப்போ அவர் வாரிசா நான் இருக்கணுமுன்னு வரம் கொடுத்துட்டாரோ என்னவோ!!!!!

துளசி கோபால் said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

நம்ம கைடுக்கு நடுத்துண்டம் ரொம்பவே பிடிக்குமாம்:-)))))

மத்தபடி கூட்டத்தைப்பார்த்து உள்நாட்டுக்கு ஓடி இருக்கணும் மத்ததெல்லாம்.

இப்போ இவ்வளவு செழுமையா இருக்கும் இந்த இடம் ஒரு சமயம் மழையில்லாமல் வறண்டு போயிருக்கு. நகரம் காலி ஆனது அப்போதான்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

ரிஷபன்Meena said...

எமரலாட் புத்தர் கோவிலில் ”அங்கோர் வாட்” மினியேச்சரைப் பார்த்த போதிருந்தே அங்கே போக வேண்டும் என்பது எனது ஆசை. இந்தக் கட்டுரை நான் அங்கே இருப்பது போன்றே உணர்வை ஏற்படுத்துகிறது.

துளசி கோபால் said...

வாங்க ரிஷபன் மீனா.

ஏன் அங்கியே நின்னுட்டீங்க? கோவிலுக்குள்ளே 'அடுத்த அடி' எடுத்து வையுங்க!

Kalai said...

"இந்தப் படம் உபயம்: கோபால்." இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

பார்க்கணும் என்கிற விஷ் லிஸ்ட்ல இதுவும் இருக்கு-கதிர்காமத்துடன்!

துளசி கோபால் said...

வாங்க கலை.

உண்மையை மறைக்கக்கூடாது பாருங்க தான்..... அதுவும் கோவிலில் நின்னுக்கிட்டு....:-)

கதிர்காமம் இப்பெல்லாம் போக முடியாதுன்னு நண்பர் ஒருவர் சொல்றார். அந்த முருகன் கோவிலை புத்தர் கோவிலா மாத்திட்டாங்கன்னு கேள்வி. நெசமாவா?:(

Kalai said...

பாத்தாச்சு! ஆங்கூர் வாட் கோவில் நுழைவாயிலில் ரெண்டு பக்கமும் இரண்டு பெரிய very old அரச மரங்கள் (also known as Banyan tree, Peepal tree, Boddhi tree, Bo tree, dem po tree) இருக்கு. வலப்பக்கம் இருப்பது standing விஷ்ணு சந்நிதிக்கு நேரில் இருக்கு.

Kalai said...

kathirkaamam-not yet. It is written for future!!

Kalai said...

Teacher, Banyan tree is aala maram NOT arasa maram. Please remove that from the AKA list. Thanks. What I saw was arasa maram, arasa maram, arasa maram!!!

Kalai said...

உலகின் மிகப்பெரிய ஆலயம் (அங்கோர் வாட்)
http://www.shakthionline.com/index.php/k2/item/498-2016-06-25-01-31-04