ஹைய்யோன்னு மூச்சடைச்சு நின்னேன்னு சொன்னால் இது கொஞ்சம்கூட மிகை இல்லை. வரும்வழியெல்லாம் அருமையான சாலையும் ரெண்டு பக்கங்களிலும் அடர்ந்த காடுகளும். ஒரு காலத்துலே இது முழுசுமே காடே காடு. புலிகளும் யானைகளும், பாம்புகளுமா உலாவித் திரிஞ்ச இடம். பாம்புப் புத்துகள் அங்கங்கே பெருசா வளர்ந்து நிக்குது. யானைகள் கூட நிறைய இருக்காம். ஆனால் புலிகள்? போன இடம் தெரியலை.
இந்தப் படம் உபயம்: கோபால்.
நம்ம ஹொட்டேலில் இருந்து நாலரை கிமீ தூரம்தான் அங்கோர்வாட். நேராப்போகும் சாலையின் குறுக்கே சட்னு ஒரு நதி. நல்ல அகலம். மறுகரையில் நதியின் நீளத்துக்கே இருக்கும் நீண்டு போகும் கட்டிடம். அட! ன்னு திறந்தவாயை மூடுமுன் வீரா சொன்னார் இது நதி இல்லை. வெறும் அகழின்னு. அந்த டி ஜங்க்ஷனில் இடப்பக்கம் திரும்பி அகழிக்கரையோரமாவே பயணம் செஞ்சு வலப்புறம் போகும் அகழியைத் தொடர்ந்தால் கோவில் முன்பகுதி. மூச்சடைஞ்சு நின்னது அப்போதான்.
வண்டியை விட்டு இறங்குனதும் சின்னதா ஒரு கும்பல் நம்மைவந்து சூழ்ந்துக்கிட்டாங்க. கைடு புக் வேணுமா? கோவில் படங்கள் வேணுமா? வேணாம். கைடு கூடவே வந்துருக்கார்.இந்தப் படம் உபயம்: கோபால்.
அதிகாரபூர்வமா அனுமதி பெற்ற வழிகாட்டிகள் நம்ம வீராவைப்போல் பலர் அவுங்கவுங்க குழுக்களோடு நடமாடிக்கிட்டு இருக்காங்க. எல்லோருக்கும் யூனிஃபார்ம், பேட்ஜ் இப்படி நல்லாத்தான் இருக்கு. நம்பலாம்.இந்தப் படம் உபயம்: கோபால்.
அகழிக்கு அப்பால் கோவிலின் வெளிப்புற மதில் சுவர். கோவில் மட்டும் ஒன்னரை கிலோமீட்டர் அகலமும் ஆயிரத்து முன்னூறு மீட்டர் நீளமும். இருநூத்திமூணு ஏக்கர் பரப்பளவு. இதுக்கு வெளியே அடர்த்தியான மரங்கள் நிறைஞ்ச காடு போல தோட்டம். அதுக்கும் வெளிப்புறமா சுற்றிவர நூத்துத் தொன்னூறு மீட்டர் அகலத்தில் அதுகேற்ற ஆழமுமா இருக்கும் அகழி. முன்னொரு காலத்தில் முதலைகள் ஏராளமாம். இந்தப் படத்தைப் பாருங்க. ஓரளவு விவரிப்பு புரியலாம்.ஆண்டவர் அருளிய படம். பறக்கும் பலூனிலும் இருந்து பார்வையிட இந்த ஊரில் வசதி இருக்கு.
சைக்கிள், மோட்டர் சைக்கிள் எல்லாமும் நாள் வாடகைக்குக் கிடைக்குது
வாலுள்ளதும் வாலில்லாததுமா நின்னு ஒரு வரவேற்பு! கைப்பிடிச்சுவரில் நீஈஈஈஈஈஈஈண்டு படுத்து ஓய்வெடுத்துக்கிட்டே தலையை மட்டும் தூக்கி வா வான்னு கூப்பிடும் அஞ்சு தலையார். அவர் பக்கத்துலே வாலில்லாத சிங்கங்கள். அட ராமா? வால் எங்கே போச்சு?
தங்க வைர வால்கள் இழந்த சிங்கம்:(
சிங்கங்களே இல்லாத நாடா இது இருந்துருக்கு. அதிசயமா சிங்கங்களைப் பார்த்தவுடன் அதன் அழகுலே மயங்கி சிங்கச்சிற்பங்கள் அந்த நாட்டில் செஞ்சு அபூர்வமான மிருகத்துக்கு எல்லாமே அம்சமா இருக்கணுமுன்னு தங்கத்துலே வால் செஞ்சு வைரம், வைடூரியங்கள் பதிச்சு வச்சாங்களாம். பகைவர் படையெடுப்பில் வால்கள் எல்லாம் உருவப்பட்டன. இப்போ இந்த நிலையில் இருக்குதுங்க எல்லாம்.
வீரா சொன்ன கதையை நம்பலாமுன்னு நினைச்ச அதே சமயம் பாம்புகளை எனக்கு விளக்கினார். இந்த நீண்ட பாம்புகள்தான் அனந்தன். பாற்கடலைக் கடைஞ்சப்பக் கயிறாக ஆக்டு கொடுத்தார்.
ஐயோ...ராமா!!!! அது வாசுகி இல்லையோ?
சின்ன சமாளிப்புக்குப் பின் ஆமாமாம். இது அனந்தன்வாசுகி.
மெள்ளப்பேச்சுக் கொடுத்தேன். நிறைய இந்தியர்கள் வர்றாங்கதானே?
இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியா இருந்தது ரொம்பக் குறைவான எண்ணிக்கையிலாம். அதிகமும் வெள்ளைக்காரர்களுக்குத்தான் சேவை வழங்கி இருக்காராம். ஆனால் ஒரு இந்தியப்பயணி வந்தப்ப இவர்தான் வழிகாட்டியா இருந்துருக்கார். ரொம்ப நல்ல மனிதராம். நட்பானவராம். இவருடைய பெயருக்குப் பொருள் 'ஹீரோ'ன்னு சொன்னாராம்.
இதைச் சொல்லும்போதே இவர் முகத்தில் ஒரு பிரகாசம். சரிதானான்னு கேட்டார்.
ரொம்பச்சரி. வீரா என்னும் படத்தில் ஹீரோ வீராவேதான்.
இல்லையே....வீரான்னா வீரன், படைவீரன்னு வச்சுக்கலாம்.
ஒரு வீரன் ஹீரோ ஆகலாம். ஆனால் ஒரு வீரா ஹீரோ ஆகமுடியாது சினிமாவைத் தவிர.
அகழிமேல் இருக்கும் பாலத்தைக் கடந்து கற்கள் பாவிய அகலமான பாதையில் நடந்து போறோம். திடீர்னு நடுநடுவே கெமெராவும் கையுமா சிலர் நம் முன்னால் வந்து போறாங்க. ஐக்கியநாடுகளின் யூனிசெஃப் பிரிவு செலவையெல்லாம் ஏற்றெடுத்து இக்கோவிலைப் பழுதுபார்த்துக்கிட்டு இருக்காங்க. உலக பாரம்பரியச் சின்னமா இந்தக்கோவிலை அங்கீகாரம் செஞ்சு இந்த வேலைகள் நடக்குது.முதல் பிரகார வாசல்
அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் கோவிலின் மூணு கோபுரங்கள் தெரியுது. ரெண்டு பக்கமும் கைப்பிடிச்சுவரில் பெயர் சொல்லாதது அங்கங்கே அறுபட்டுத் துண்டு துண்டாய்த் தொடர்ந்து வருது. வெளிப்புறப் பிரகாரம் முன்னே வந்து நிக்கிறோம். அஞ்சு வாசல். நடுவாசல் அரசருக்கு. இடப்புறம் இருக்கும் வாசல் படை வீரர்களுக்கு. அதுக்கு இடப்புறம் இருப்பது யானைகளுக்கு. இதே போல அரசருக்கு வலப்புறம் மந்திரிகள் 2 பிரதானிகளுக்கு. அதுக்கு வலப்புறம் ரேங்கில் இவர்களைவிடக் குறைஞ்சவர்களுக்கும் பொதுமக்களுக்கும்.நடுவாசல்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்னு (மனசுக்குள்ளே பாடிக்கிட்டே) நடுவாசலில் நுழைஞ்சு போனோம். (கம்போடியாவில் அரசர் இருக்கார். ஆனால் ஓசைப்படாமல் ஒதுங்கி இருக்கார். படத்தை எங்கேயும் காணோம்.
இப்போ இருக்கும் அரசரின் பெயர் Norodom Sihamoni. கொஞ்சம் கவனிச்சுப்படிச்சால் நரோத்தம் சிஹாமணின்னு இருக்குல்லே? ஆஹா.....)சாளரங்களின் அணிவகுப்பு.இந்தப் படம் உபயம்: கோபால்.
இந்தப் படம் உபயம்: கோபால்.
இந்தப் படம் உபயம்: கோபால்.
அப்சரஸ் மங்கையர் ஒன்னும் பேசாமல் நம்மைப் பார்த்தார்கள். ஏறக்கொறய மூவாயிரம் அப்சரஸ்களைச் செதுக்கித் தள்ளி இருக்காங்க. இன்னிக்கு சனிக்கிழமை வேற. எனக்கு ஒரு கோவிலுக்குப் போகணும். விஷ்ணுவா இருந்தால் கூடுதல் மகிழ்ச்சின்னு நினைக்கும்போதே அலங்கார ஜன்னல்கள் அடுக்கடுக்கா அடுத்தடுத்து நிற்கும் நீள வெராந்தா வழியா கூட்டிட்டுப்போறார் வீரா. ரொம்ப தூரத்துலே லேசா மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறம் கண்ணில் படுது. வழியெங்கும் தலை இழந்த சிற்பங்கள்.............தங்கக்குடையின் கீழ் நின்ற திருக்கோலத்தில் எண்கரத்தான். நம்ம பேயாழ்வார் பாடிய அட்டபுயகரத்தான்....... அவனோ இவன்? சங்கு சக்கரம் இல்லாமல், என்னமோ பிடிக் கொழுக்கட்டைப் பிடிக்கும் விதமா எட்டு கைகளையும். இறுக்கமா மூடி வச்சுருக்கான்! ஆனால் காதை வளர்த்து வச்சுருக்கானே? நம் குறைகளைக் கேட்டுக்கேட்டே காது தொங்கிப் போச்சோ?தங்கக்குடையின் கீழ் எண்கரத்தான். இந்தப் படம் உபயம்: கோபால்.
புத்தர்ன்னு நினைச்சு புத்த மதக்காரர்களும், விஷ்ணுன்னு நினைச்சு ஹிந்து மதக்காரர்களும் வணங்க, வேடிக்கை பார்த்து வழிநடக்கும் வெள்ளைகாரர்கள்.
இங்கேயும் கட்டுக் கட்டா ஊதுவத்திகள்தான்.இந்தப் படம் உபயம்: கோபால்.
படிகள் இறங்கி அடுத்த பிரகாரத்துக்குள்ளே போனால் இன்னும் ஒரு அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் மெயின் கோவில் தெம்படுது. அதை நோக்கி நடக்கும்போது ரெண்டு பக்கமும் மீண்டும் வாசுகிகள். பரந்த புல்வெளிகள். பக்கத்துக்கொன்றா பாதி இடிஞ்ச நிலையில் ஒன்னுபோல ரெண்டு கட்டடங்கள். லைப்ரெரிகளாம். ஓலைச்சுவடிகள் வச்சுருந்துருக்குமோ? முக்கியமான டாக்குமெண்ட்ஸ்களை கோவிலில் வைக்கும் பழக்கம் இருந்துச்சாம். வீரா சொன்னது.நூலகம்
மெரினா பீச்சில் குதிரைச் சவாரி போல சூழலுக்குப் பொருத்தமில்லாமல் அலங்கார சேணம் போட்ட வெள்ளைக்குதிரை ஒன்னை நிறுத்தி அதன்மேல் ஏறி உக்காந்து போஸ் கொடுத்தால் படம் எடுத்துத் தரும் வியாபாரம் நடக்குது.
குதிரை வீரனாக இருக்க வேணாம் குதிரை ஏற. பக்கத்தில் ஸ்டூல் போட்டுருக்கு:-)
ஓ....ராஜகுமாரன் வெண்புரவியில் வாட்டுக்கு விஜயம் செய்கிறார்னு சொல்லிக்கலாம். ராஜான்னதும் நினைவுக்கு வருது. இந்தக் கோவில்கள் கட்டப்பட்டது பனிரெண்டாம் நூற்றாண்டில் அரசர் ரெண்டாம் சூரியவர்மன் காலத்துலே. க்மெர் சாம்ராஜ்ஜியம். ஆனால் இவையெல்லாம் 802 முதல் 1220 வரை கொஞ்சம் கொஞ்சமா நாலு நூற்றாண்டுகளாக் கட்டப்பட்டதுன்னும் சொல்லிக்கறாங்க.
'வ்ரா விஷ்ணுலோக்' னு அப்போ கோவிலுக்கு ஒரு பெயர் இருந்துருக்கு. இந்தக் கோவிலை வச்சுதான் இங்கே தலைநகரத்தை நிர்மாணித்ததாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இந்த அங்கோர் என்ற பெயரே சமஸ்கிரதச் சொல்லான, நகரா, நகர், என்ற சொல்லில் இருந்து வந்துச்சுன்னும் வாட் என்றது கோவிலைக் குறிக்குதுன்னும் சொல்லி கோவில்களின் நகரம் என்ற பெயரில் இந்த ஊர் அறியப்பட்டதுன்னும் சொல்றாங்க. சிடி ஆஃப் டெம்பிள்ஸ்.
இதே பெருமை நம்ம தமிழ்நாட்டுலே ஒரு ஊருக்கு இருக்கு. தெரிஞ்சவுங்க கை தூக்குங்க!
இந்த க்மெர் சாம்ராஜ்யத்தின் ஆட்சி (இப்போதைய) வியட்நாம், சீனா எல்லாம் கடந்து வங்காளவிரிகுடா வரையில் பரந்து இருந்ததாக ஒரு குறிப்பும் இருக்கு. இவ்வளவு புகழ்பெற்ற சாம்ராஜ்ஜியம் ( 802 முதல் 1463 வரை) ஏழு நூற்றாண்டுகளுக்குப் பின்னே அழிஞ்சு போனது எப்படி என்ற வியப்பும் நமக்கு வராமப்போகாது. இங்கே இதுமட்டுமில்லாமல் இன்னும் வெவ்வேற கோவில்கள் கட்டிப் போட்டு வச்சுருக்காங்க. தடுக்கி விழுந்தாக் கோவில்னு இல்லாம ஒவ்வொன்னுக்கும் ரெண்டு மூணு கிலோமீட்டர் இடைவெளி இருக்கு. எப்படி ஒரு அத்துவானக் காட்டிலே இப்படி எல்லாம் கட்டுனாங்க? இன்னும் விடுபடாத மர்மம்தான்.
இடைக்கிடையே தாய்லாந்து நாட்டுடன் சண்டை, அவுங்க வந்து இங்கே ஊரைப் பிடிச்சுக்கிட்டது எல்லாமும் நடந்துருக்கு. பதிமூணாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இலங்கையில் இருந்து வந்த புத்த பிக்குகளால் புத்தமதம் இங்கே வந்து காலூன்றி நிக்க ஆரம்பிச்சது. வர்மன் வம்ச அரசர்களில் ஸ்ரீந்தரவர்மன் (Srindravarman 1295 to 1308. ) என்றவர் புத்தமதத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பவராக இருந்துருக்கார். (ஒருவேளை அப்போதான் இந்து மதக் கடவுளர்களின் சிலைகளையெல்லாம் எடுத்துட்டு புத்தர் சிலைகளை அங்கே வச்சுருக்கலாமோ?)
பதினைஞ்சாம் நூற்றாண்டுக்குப்பிறகு இந்தக் கோவில் இருப்பதையே எல்லோரும் மறந்துட்டாங்க. காட்டுவழியாப் பயணம் செஞ்ச சில புத்தபிக்குகள் இந்தக் கோவிலைப் பார்த்துட்டு தேவலோகத்தில் இருந்து கடவுள் நேரடியா வந்து சிருஷ்டித்த கோவில்னு சொன்ன 'கதை'களையும் மக்கள் நம்பிக்கிட்டு இருந்தாங்களாம். அடர்ந்த காட்டுக்குள் போய் ஆராய்ச்சி செய்யலை யாரும்னு சொல்லலாமா?
பல வெள்ளைக்காரகள் இந்தப்பக்கம் வந்து மெஷினரிகளா சுத்தித்திரிஞ்சப்ப இந்தக் கோவிலைப் பார்த்துருக்காங்களாம். ஆனால் யாரும் இதைப்பெருசா(?) எடுத்துக்கலை. ஹென்றி மோஹாட் (உச்சரிப்பு சரியான்னு தெரியலை) Henri Mouhot என்ற ஃப்ரெஞ்சுக்காரர் காடுகளைச்சுற்றி அலைஞ்சப்ப இந்த இடத்துக்கு வந்துருக்கார். இதைப்பற்றி எழுதி, இந்த சேதியைப் பரப்பினவர் இவர்தான்.
கற்கால நாகரிகத்தைப்பற்றின கண்டுபிடிப்புன்னு அப்போ எல்லோரும் நினைச்சுருக்காங்க. இது நடந்தது வருசம் 1860 இல். அடுத்த வருசமே இவர் மரணமடைஞ்சார். ஆனாலும் இவர் பத்த வச்ச நெருப்பு நல்லாவே பத்திக்கிச்சு. அடுத்த ரெண்டு வருடங்களில் ப்ரான்ஸ் இங்கே வந்து இடம்பிடிச்சு தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுனதுக்கு இவரும் ஒரு (மறைமுக) காரணம் என்றுதான் பேச்சு பரவலா அடிபட்டுருக்கு.
1863 முதல் ஃப்ரெஞ்சு நாட்டு காலனி ஆதிக்கம் இங்கே ஆரம்பிச்சு ஒரு தொன்னூறு வருசங்கள் ஓடிப்போச்சு.
பாருங்க....பேசிப்பேசி இதோ கோவிலுக்கு ரொம்பக்கிட்டே வந்துட்டோம்.
நாளைக்கு மீதியைப் பார்க்கலாம்.
தொடரும்..................:-)
Showing posts with label Cambodia அனுபவம். Show all posts
Showing posts with label Cambodia அனுபவம். Show all posts
Friday, August 06, 2010
அங்கோர் வாட் ..........( கம்போடியாப் பயணம் 2 )
Posted by
துளசி கோபால்
at
8/06/2010 04:14:00 AM
40
comments
Labels: Cambodia அனுபவம்
Subscribe to:
Posts (Atom)
