அக்கம்பக்கம் இருக்கும் நல்ல விஷயங்களைக் கண்டுக்கணும். த டைம் இஸ் ரன்னிங் ஃபாஸ்ட். மழைக்காலம் முடியட்டுமுன்னு காத்திருந்து, கிளம்பிட்டோம். வானிலை அறிக்கையை வலையில் பார்த்தால் கொஞ்சம் கொஞ்சம் மழைன்னு போட்டுருக்கு. சமாளிக்கலாமுன்னு குடையை எடுத்து வச்சுக்கிட்டார் கோபால்.
அம்ரித்ஸர் போறோம். ( இடங்களின் பெயர்களையும் நபர்களின் பெயரையும் நமக்கேத்தமாதிரி உச்சரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அது அதை அப்படித்தான் சொல்லப்போறேன்) சண்டிகர் நகரில் இருந்து 234 கிலோமீட்டர் தூரம். லூதியானா ஜலந்தர் வழி ஒன்னும் ரூப் நகர் ஜலந்தர் வழி ஒன்னும் இருக்கு. நம்ம ட்ரைவர் தேர்ந்தெடுத்தது ரூப்நகர் மார்க்கம்.
சண்டிகருக்கு ரெண்டு கைகளா பஞ்ச்குலா (ஹரியானா மாநிலம்) மொஹாலி (பஞ்சாப் மாநிலம்) இருக்குன்னு முந்தியே சொல்லி இருக்கேன். இப்போ நாம் பஞ்சாப் மாநிலத்துக்குள்ளே போகப்போறோம் என்பதால் மொஹாலி ( கொசுறுத்தகவல்: இங்கேதான் க்ரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதானம் இருக்கு)வழியே போய்க்கிட்டு இருக்கோம். இந்த மொஹாலியே ஒரு காலத்தில் அதாவது சண்டிகர் நகர் பஞ்சாபின் தலைநகரா நிர்மாணிக்கப்பட்டு, பிறகு 1966 இல் மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பார்வைக்கு வருமுன்பு, ரூப்நகர் மாவட்டத்தில்தான் இருந்துச்சு.
ரொம்பப் பழைய ஊர்தான் இந்த ரூப்நகர்.சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த இடங்களில் இதுவும் ஒன்னு. ராஜாக்கள் ஆண்ட காலத்தில் அரசர் ரோகேஷர் பதினோராம் நூற்றாண்டில் இந்த நகர்ப்பகுதியை ஆண்டு வந்தபோது தன்னுடைய மகன் ரூப் சென் பெயர் நிலைக்கட்டுமுன்னு ரூப் நகர்ன்னு பெயரிட்டாராம். ( ஹூம்......பெயர் நிலைக்க யாரெல்லாம் என்ன பாடுபடறாங்கன்னு உங்களுக்கே தெரியும்)
அம்பது கிலோமீட்டர்தான் சண்டிகரில் இருந்து. பஞ்சாப் என்ற பெயருக்குக் காரணமான பஞ்ச(ஐந்து) நதிகளில் சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டி இருக்கும் பாலத்தைக் கடந்து வர்றோம். கண்ணுக்கெதிரில் தூரத்தில் வெண்புறாபோல் பளிச்ன்னு ஒரு குருத்வாரா இருக்கு. அஞ்சு நிமிசம் பார்த்துட்டுப் போகலாம். பெரிய குருத்வாரா (பொற்கோவில்) போகுமுன் சாம்பிள் பார்த்தமாதிரி இருக்குமுன்னு ஒரு நினைப்பு!
சட்லெஜ் நதி
'பாபோர்சாஹிப்' னு இந்த குருத்வாரா(சீக்கியர்களின் கோவில்)வுக்குப் பெயர். அலங்கார நுழைவு வாசலில் உள்ளே வந்தால் பெரிய வளாகம். அழகான தோட்டம் கடந்து கோவில் வாசல்முன்னே வண்டியை நிறுத்தி உள்ளே போறோம்.
சாலையில் நுழைவு
ரெண்டாம் பிரகார நுழைவு வாசல்
கால் நனைக்க ஒரு ஓடை
குருத்வாரா
பக்தர்கள் காலைக் கழுவிட்டு உள்ளே வரும்படியான ஏற்பாடு. சின்ன ஓடையில் கால்வச்சுக் கடந்து அந்தப்பக்கம் கோவிலை நோக்கிப்போறோம்.
அலங்கார மேடையில் பட்டுத்துணி போர்த்தி வச்சுருக்கும் 'குரு க்ரந்த் சாஹிப் (சீக்கியர்களின் புனித நூல்) ஒரு பக்கம் திறந்து ஒருத்தர் ஒரு கையில் சாமரம் வச்சு வீசிக்கிட்டே மெல்லிய குரலில் வாசிக்கிறார்.
வணங்கிட்டு வெளியே வந்து சுற்றிப்பார்க்கப்போனால்......சுத்திவரத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நதி. அழகு அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுது! பின்பக்க முற்றத்தில் ஒரு சின்ன அறை தனியா நிக்குது. கண்ணாடி ஜன்னல்வழியா எட்டிப் பார்த்தால் ஒரு ஆஸ்டின் கார்.அட! விண்டேஜ் வண்டி! இது கார்ஷெட்டோன்னு நினைச்சால் ஒரு பெரிய போர்டு நிறைய பஞ்சாபி மொழியில் எழுதிவச்சுருக்காங்க. குரு கோபிந்த் சிங் பயன்படுத்திய வண்டியாம்.
சீக்கியர்களின் பத்தாவது குரு இவர். இவருடைய தகப்பனார் குரு Tegh Bhahadur அவர்களை முகலாய மன்னர் ஔரங்கஸேப், இஸ்லாம் மதத்துக்கு மாற்றம் செய்ய விரும்பினார். இவர் மதம் மாறினால் இவரைப்பின்பற்றும் மொத்தக் கூட்டமும் மதம் மாறும் என்ற நம்பிக்கை. காரியம் நினைச்சபடி நடக்கலை. குருஜியைக் கைது செய்து மூணு மாசம் பஸ்ஸி பத்தானா என்ற இடத்தில் வச்சு டார்ச்சர் செஞ்சபின் இரும்புக் கூண்டில் வச்சு டெல்லிக்குக் கொண்டு போனாங்க. தான் எப்படியும் திரும்பி வரப்போவதைல்லைன்னு உணர்ந்த குருஜி தன் ஒன்பது வயசு மகன் கோபிந்த் ராயை அடுத்த குருவா பிரகடனம் செஞ்சுட்டுக் கிளம்பினார். செல்லி சாந்தினி சௌக் லே வச்சு பொதுமக்கள் முன்னிலையில் குருவின் தலை கொய்யப்பட்டது:(
இங்கே குரு கோபிந்த் சிங் மக்களை சீக்கிய தர்மப்படி வழி நடத்திக்கிட்டு இருந்தார். முகலாயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் பகை அதிகமாகிக்கிட்டே இருந்த காலக் கட்டம். தங்கள் மதத்தில் வீரமுள்ளவர்களைச்சேர்த்து இன்னும் பலமான தற்காப்புப்படையா மாத்தணுமுன்னு குரு கோபிந்த் சிங் விரும்பினார்.
ஒரு சமயம் தன் முன் கூடி இருக்கும் கூட்டத்தைப் பார்த்து 'உங்களில் ஒருவரது தலை எனக்கு வேணும்'னு கர்ஜிச்சதும் கூட்டம் அப்படியே பயந்து மௌனமா நின்னுச்சு. மூணாவது முறை இவர் இப்படிக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த தயா ராம் என்றவர் தலை கொடுக்க முன்வந்தார். அவரைத் தன் கூடாரத்துக்குள்ளே கூட்டிப்போனார் குருஜி. சில நிமிசங்களில் 'தட்'னு ஒரு சப்தம். தலை கீழே உருண்டது:( ரத்தம் சொட்டும் வாளோடு வெளிபட்ட குருஜி இன்னொரு தலை வேணுமுன்னு கர்ஜிச்சதும் கூட்டம் மிரண்டது. அப்படியும் தரம் தாஸ் என்றவர் முன் வந்தார். மறுபடி ஒரு சப்தம். ரத்தம் சொட்டும் வாள். இப்படியே அஞ்சு பேர் தலை கொடுத்தாங்க!!
இதுக்குள்ளே குருஜிக்கு என்னமோ ஆகிருச்சு. நம்ம எல்லோரையும் போட்டுத் தள்ளப்போறாருன்னு கூட்டம் கலைஞ்சு ஓட ஆரம்பிச்சது. அப்போ கூடாரத்துக்குள்ளே இருந்து தலை கொடுக்க முன்வந்த அஞ்சு பேரும் கம்பீரமான உடைகளைத் தரிச்சு வெளியில் வந்தாங்க. இவுங்களை 'பஞ்ச்பியாரே'ன்னு குருஜி அழைச்சார். குருவுக்குப் பிரியமான ஐவர். இவர்களை வச்சு ஆரம்பிச்சதுதான் கல்ஸா என்னும் வீரர் பிரிவு. கல்ஸா (Khalsa) என்ற சொல்லுக்குப் பரிசுத்தம் என்று பொருள். PURE.
கல்ஸா பிரிவுக்கு குரு கோபிந்த் சிங் அவர்கள்தான் தந்தை என்று போற்றி அவரை விசேஷமா வழிபடுறாங்க. வீரத்தின் அடையாளமா ரெண்டு பக்கமும் கூர்மையாத் தீட்டிய நீளமான வாள் ஒன்னை எப்பவும் தோளில் தொங்கவிட்டுருப்பாங்க இந்தப் பிரிவினர்.
குரு கோபிந்த் சிங் இந்த பாபோர் சாஹிப் குருத்வாராவில் ஏறக்கொறைய ஒரு வருசம் தங்கி இருந்துருக்கார். அப்போது இறைவன் மேல் பல பக்திப் பாடல்களையும் ஸ்லோகங்களையும் எழுதி இருக்கார். இப்படி சீக்கிய மத ஸ்தாபகர் குரு நானக்ஜி முதல் குரு கோபிந்த் சிங்ஜி வரை பத்து குருமார்கள் எழுதியவைகள் எல்லாம் சேர்ந்து சீக்கியர்களின் புனித நூலான கிரந்தம் ஆனது. 42 வயது வரை வாழ்ந்த குரு கோபிந்த் சிங்ஜியின் மரணத்திற்குப் பிறகு (1708) இந்த கிரந்தப்புத்தகமே இனிவரும் காலங்களில் குருவாக இருக்கட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு குரு கிராந்த் சாஹிப், எல்லா குருத்துவாராக்களிலும் மிகவும் மரியாதைக்குரிய இடத்தை அடைஞ்சுருக்கு. புனித நூலை இடைவிடாது 24 மணி நேரமும் யாராவது ஒருத்தர் வாசிச்சுக்கிட்டே இருக்காங்க.
நாமும் மீண்டும் ஒருமுறை வணங்கிட்டு அங்கிருந்து கிளம்பினோம். ஜலந்தர் போகும் வழியில் சாலையை ஒட்டியே இடதுபுறம் நல்ல அகலமான வாய்க்கால் நம்ம கூடவே வருது. நடுவிலே சுதந்திரப்போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த வட்டத்தில்(Shahid Bhagat Singh Nagar District.) இருக்கும் Nawanshahr என்ற ஊரைக் கடந்தோம். எங்காவது பகத்சிங் அவர்களுக்கு நினைவிடம் இருக்குமான்னு கேட்டால் ...... விவரம் ஒன்னும் கிடைக்கலை.
வழி எங்கும் நாலைஞ்சு இடத்தில் டோல் கேட் இருக்கு. 'டோல்கேட் வரப்போகுது என்றதை மட்டும்' ஆயிரம் மீட்டர் லே வருது, ஐநூறு மீட்டர்லே வருதுன்னு கொட்டை எழுத்தில் ஆங்கிலத்துலே எழுதி வச்சுருக்காங்க. 11, 29, 38 ன்னு விதவிதமான கட்டணங்கள். பேசாம ரவுண்ட் நம்பரா வைக்கலாமுல்லே? பாக்கிச்சில்லறை ஒரு ரூபான்னா திருப்பிக் கொடுக்கறதே இல்லை. ரெண்டு, மூணுன்னா சாக்லேட். இது என்ன வியாபாரமுன்னு தெரியலை:(
டபுள் டெக்கர்
பெரிய ட்ரக்குகளை டபுள் டெக்கரா மாத்திக்கிட்டுப் புனிதப்பயணங்கள் போறாங்க மக்கள். ஏறி இறங்க ஏணிகூட கட்டி வச்சுருக்காங்க ஒரு ட்ரக்கில்!
ஜலந்தர் நகருக்குள்ளே போகாமல் பைபாஸ் ரோடு வழியா அம்ரித்ஸர் நகரை நோக்கிப்போனோம். அதுக்கு முன்னால் பைபாஸ் ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கும் ஹவேலியில் ஒரு 15 நிமிசத்துக்குச் சின்ன ப்ரேக். கணக்குப்பிள்ளை அதே கோலத்துடன் இன்னும் கணக்கு எழுதிகிட்டே இருக்கார். முகத்தில் ஒரு சிரிப்பும் இல்லை. இந்த ஹவேலி ஒரு செயின் ரெஸ்ட்டாரண்ட் வகையில் இங்கே வட இந்தியாவில் பல இடங்களில் ஹைவேயில் இருக்கு. நல்ல வசதி.
இங்கிருந்து நாம் போகவேண்டிய ஊருக்கு ஒன்னரை மணி நேரப்பயணம். சரியாப் பனிரெண்டரைக்கு அம்ரித்ஸர் போய்ச்ச் சேர்ந்தோம். கார்பரேஷன் கவுன்ஸிலர் முதல் எம். எல் ஏக்கள் எம் பி க்கள்ன்னு கூட்டம் கூட்டமா நம்மை அபிநந்தன், வெல்கம், ஸ்வாகத் சொல்லி வரவேற்றார்கள். இதென்னடா நமக்கு வந்த வாழ்வு????
தொடரும்.......................:-)
Tuesday, August 31, 2010
தங்கவேட்டைக்குப் புறப்பட்டேன் (அம்ரித்ஸர் பயணத்தொடர் - 1)
Posted by துளசி கோபால் at 8/31/2010 04:26:00 PM
Labels: Amritsar அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ஏணி வச்ச ட்ரக் சூப்பர்..
வேட்டைக்கு போய் வெற்றியுடன் வாருங்கள்.. :)
வரலாற்று விவரங்கள் விரிவாகிடைத்தது.
Teacher,
Neenga punjab pathi solla solla... Sardarji melae mariyathai kooduthu... sooper...
Konjam engalukaga, punjab dhaba vantha varalarai kandupidichu sollunga please....
-Sri
//இடங்களின் பெயர்களையும் நபர்களின் பெயரையும் நமக்கேத்தமாதிரி உச்சரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.//
சரிதான் டீச்சர். பொற்கோயில் விசிட் படிக்க ஆவலாய் இருக்கேன்
ஓஹோ! அமிர்தசரஸ் னு சொல்லணும்னு நினைத்தேன்.
பெயர் எப்படி இருந்தாலும் வரலாறு கிடைக்கிறதே. அதுவே அமிர்தம்தான். அப்ப குருஜி எல்லாருடைய தலையையும் வெட்டலையா!! என்ன ஒரு வீரம் பா.மஹா உழைப்பாளிகள்னு கேள்வி. இப்ப எப்படியோ. எழுதுங்க எழுதுங்க. பின்னாலியே வரோம்.
வாங்க கயலு.
பயணத் திட்டம் ஆரம்பிக்கும்போதே உங்க நினைவுதான்:-)
வாங்க ஸ்ரீநிவாசன்.
நல்ல சர்தார்கள் ஏராளமா இருக்காங்க. ஆனால் நாம் சந்திச்சவுங்க அவுங்க இல்லை என்பதுதான் உண்மை:-)))
தாபா என்பதே உணவகம் என்பதின் பஞ்சாபிப் பெயர். அந்தக் காலங்களில் ட்ரக் ஓட்டிகளில் பார்த்தீங்கன்னா.... 99 சதமானம் பஞ்சாபிகள்தான் இருப்பாங்க. பாடி கட்டாத வண்டிகளை டெலிவரி செய்ய ஓட்டிப்போவதைப் பார்த்திருக்கோமே!
எத்தனை நாளானாலும் அலுக்காம உழைப்பதில் இவுங்களை யாரும் மிஞ்ச முடியாது. இவுங்களுக்காகவே ட்ரங் ரோடுகளில் சாப்பாட்டுக்கடைகள் ஆரம்பிச்சதுதான். இதுக்கு தாபான்னு பெயர்.
நம்ம பக்கங்களில் பஞ்சாபி சாப்பாடுன்னதும் தாபான்னு பெயரோடு நகருக்குள்ளே கடைகள் வச்சுட்டாங்க. எல்லாம் வியாபாரத் தந்திரம்தான்.
இங்கே ஒரிஜனல் தாபாக்களைப் பார்த்தேன். விவரம் வரும் பதிவுகளில் வரும்.
வாங்க சின்ன அம்மிணி.
பொற்கோவில் படிக்க ஓடோடிவந்த உங்களை ஏமாற்றமாட்டேன் என் அம்மிணி:-))))
வாங்க வல்லி.
இப்பவும் உழைப்பாளிகள்தான். அதிலும் விவசாயிகள் உழைப்புக்கு ஈடே இல்லை. எப்படி பயிர்கள் தளதளன்னு வளர்ந்து பச்சைப்பசேர்னு கண்ணுக்குக் குளுமையா இருக்குங்கறீங்க!!!!
பஞ்சமே இல்லாத இடத்துக்கு பஞ்சாப் (பஞ்சம் ஆஃப்) பெயர் பொருத்தம் சூப்பர்:-)
தங்கவேட்டைதொடர் துவக்கமே நன்றாக உள்ளது டீச்சர்.குருத்வாரா,டபுள்டெக்கர் ட்ரக் அனைத்து படங்களும் அருமை டீச்சர்:)))))
பஞ்சாப் போறீங்க.. மக்கை கி ரோட்டி, சர்சோங் கா சாக் சாப்பிட்டுட்டு வாங்க. அப்படியே பொற்கோவில் தரிசனமும்... :-)))
அருமை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
சித்து (cricketer- sixer siddhu) படம் போஸ்டரில் ஜொலிக்கிறது
Thanks Teacher,
Ungalaoda porumayana bathilukku appuram, Sardarji mela ennum mariyahdai kooduthu.
Expecting a good feast from Punjabi Dhabas...
Thanks
-Sri
வாங்க சுமதி.
சோம்பல்படாம என் கூடவே வர்றீங்க!
நன்றிப்பா.
வாங்க அமைதிச்சாரல்.
பயணத்துலே மட்டும் இந்த சாப்பாட்டு விஷயத்தில் நான் கொஞ்சம் உஷார்தான். அந்தந்த ஊர் ஸ்பெஷல்களைக் கண்ணால் மட்டும் உண்பேன்:-)
வாங்க ராம்ஜி_யாஹூ.
சித்து அங்கே ஒரு தேசபக்திக்கான நினைவுச்சின்னமும் ட்ராஃபிக் ஐலண்டுத் தோட்டமும் தெருவின் நடுவில் கட்டி இருக்கார்.
ஸ்ரீனிவாசன்,
அடிப்படையில் எல்லா மனிதர்களும் நல்லவர்கள்தான்.
நாமும் பழகும் விதத்தில் பழகினால் அனைவரும் நல்லவர்களே!
தங்க வேட்டையா :) வருகிறேன் ஆவலுடன்.
வாங்க மாதேவி.
கூட்டமாப் போனால்தான் வேட்டைக்கு நல்லது:-)))
Post a Comment