Friday, February 26, 2010

கஜ்ராரே கஜ்ராரே தேரே காரே காரே நய்னா (குஜராத் பயணத்தொடர் 29)

என்னப்பா இந்த ஆட்டம் ஆடுறா? ஹைய்யோ..... சிரிச்சுச்சிரிச்சு வயிறெல்லாம் புண். ஆமடாவாடை விட்டுப்போகுமுன் பார்க்கவேண்டிய இடம் இதுன்னு பப்பன் நிர்ப்பந்திச்சுச் சொன்னதால் வந்துருக்கோம்.

லோதலைவிட்டுக் கிளம்புன நாப்பதே நிமிஷத்தில் ஆமடாவாட் எல்லைக்குள்ளே வந்துருந்தோம். அடையாளமா முன்னே நின்னது கோபுரத்தில் பறந்த கொடி, ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர். இந்த ஊரிலேயே ஏழெட்டு கோவில்கள் இவுங்களோடதுதான். பேட்டைக்கு ஒன்னு! எல்லாப் பெரிய நகரங்களைப்போலவே இங்கே மாலை நேரத்துக்கான ட்ராஃபிக் ஜாம் ஆரம்பமாயிருச்சு.

ஒரு நாற்சந்தியில் சிக்னலுக்கு நின்னப்பக் கண்னை ஓட்டுனா..... தேங்காயாத் தொங்குது ஒரு மரத்தில்! இது தேங்காய் மரமா? ச்சேச்சே..... இப்படியா ? தேங்காய், மட்டை உரிச்சே காய்க்குமா என்ன?
ஹனுமான் தாதா மந்திர். சாமிக்கு வேண்டிக்கிட்டுத் தேங்காய்களை அப்படியே கட்டித் தொங்கவிடும் வழக்கம். நியாயமாப் பார்த்தா இதுதான் வேண்டுதல். இல்லேன்னா நம்மைப்போலக் கோவிலுக்குத் தேங்காய் உடைச்சு அர்ச்சனை செஞ்சுட்டு, அது மறுநாள் சட்னிக்கு ஆச்சுன்னு வச்சுக்கறதா?

'பட்டம்' விட 'நூல்' ' ரெடி!

ஹொட்டேல் போய்ச்சேரச் சரியா ஒன்னரைமணி நேரம் ! நாளை விடியக்காலை விமானத்தைப் பிடிக்கணுமேன் னு ஏர்ப்போர்ட்க்குப் பக்கத்துலே (வெறும் அரைக்கிலோ மீட்டர் தூரம்) ரூம் போட்டுருந்தோம். ஒருமணி நேர ஓய்வு. விஷால்லாவுக்குப் போறோம். இங்கே போகாமத் திரும்புனா ஆமடாவாட் வந்ததுக்கு அர்த்தமே இல்லைன்னார் பப்பன்.

ஒருமணி நேர ஓய்வுக்குப்பிறகு விஷாலாவை நோக்கிப்போறோம். ஒரு இடத்துலே இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். கண்காணாத் தேசத்துலே தேனும் பாலுமா ஓடுதுன்னு வியாபாரிகளின் மார்கெட்டிங் யுக்தி. எதோ ஒரு சாக்குலே போய்ச்சேர்ந்துட்டால் போதுமுன்னு 'மாணவர் வேசத்துலே' வந்து குமியும் மக்கள். உண்மையாகவே கல்விக்காக வருபவர்கள் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. அவுங்க வந்து ஒழுங்காப் படிச்சுட்டு திரும்பிப் போயிடறாங்க. இல்லைன்னா நல்ல வேலை கிடைச்சு இங்கேயே தங்கிடறாங்க. மாணவர் விஸா கிடைச்சு இங்கே வந்ததும் அவுங்க வாரம் 20 மணி நேரம் வேலை செஞ்சுக்கலாமுன்னு ஒரு ஒர்க் பர்மிட்டும் கிடைச்சுரும். அதையே வச்சு வேலைதேடிக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா வகுப்புக்கே போகாம எந்த வேலை கிடைச்சாலும் சரின்னு.... இப்படி ஒரு கூட்டம் இருக்கு. அதைப் பற்றி இன்னொருநாள் பேசலாம்.
1978 மார்ச் மாசம் இந்த ரெஸ்ட்டாரண்டை ஆரம்பிச்சு இருக்காங்க. ஹிமயமலையில் 'பத்ரி விஷாலா' ன்னு இருக்கும் ரிஷிமுனிவர்கள் வாழும் முக்கிய கேந்திரத்தை நினைவுகூறும் விதமா அமைதியா சாந்தி நிறைஞ்சு இருக்குமுன்னு ஒரு எண்ணம். அங்கே இருப்பதைப்போலவே நொடியில் யோக நிலைக்குப் போகவும் மனம் அலைபாயாமல் இருக்கவும் ஏற்ற இடமுன்னு 'நினைச்சு' இங்கே இதை ஆரம்பிச்சுவச்சவர் ஒரு படேல்!
எப்படி நிம்மதி உடனே கிடைக்குமுன்னு அப்புறம் தெரிஞ்சது:-)

பழையகால கிராமத்தை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்திவச்சுட்டாங்க. 'சச்சின் வந்திருக்காஹ. அமிதாப் வந்துருக்காஹ. இந்திரா காந்தி வந்துருக்காஹ' இப்படி இங்கே வராத விஐபிகளே இல்லைன்னு சொல்லும் அளவுக்கு அவுங்க கெஸ்ட் லிஸ்ட் இருக்கு. அதுலே நியூஸி துளசியும் கோபாலும் வந்துருக்காஹன்னு சேர்த்தாச்சுன்னு வையுங்க:-)
முக்கால் இருட்டு வழியில் ரெண்டு பக்கமும் 'அசல்' லாந்தர் விளக்குகள். அங்கங்கே மரங்களிலும் தொங்குது இவை. ரெண்டு நிமிஷம் திகைச்சு நின்னு, இருட்டுக்குக் கண்கள் பழக்கப்பட்டதும் நகர்ந்தோம். 'பூனையாய் இருப்பது சுகம்' கூடையில் பூக்களை வச்சுக்கிட்டுவந்த பூக்காரர் ஒரு முழம் மல்லிச்சரத்தை எனக்கும் ஒரு ரோஸாவை கோபாலுக்கும் நீட்டினார். சின்னதா நாட்டு ஓடு வேய்ந்த ஒரு முன்வாசல். வரவேற்பு அங்கேதான். பெயர் விவரம் கேட்டு எழுதிக்கிட்டாங்க. கட்டணம் கட்டிட்டு உள்ளே போனோம். இதுதான் பாய்ண்ட். பில் எவ்வளோ வருமோன்னு மனசுலே கவலை இல்லாமல் 'நிம்மதி'யாக இருக்கணுமுன்னா முதலிலேயே காசைக் கட்டிட்டுப் போயிரு. அதுக்கப்புறம் எல்லாமே தானாய் வரும். கிடைச்சதை அனுபவிச்சுக்கிட்டுக் கவலையே இல்லாமல் நிம்மதியா இருக்கலாம்.

ஒத்தையடிப்பாதையில் நடந்து உள்ளே போனால் கிராமச்சதுக்கம். பஞ்சாயத்து வேணுமுன்னாலும் பண்ணிக்கலாம். ஆனால் மரத்தடி மேடையும் சொம்பும் மிஸ்ஸிங்! நாலு கயித்துக்கட்டில் போட்டு நடுவிலே சின்னதா தீக்கங்கு. கட்டிலில் உக்காந்து கணப்பிலே கைகளைச் சூடு பண்ணிக்கிட்டு அப்படியே 'கப்பா மாறாலாம்'. எந்த இடத்திலும் மின்சாரவிளக்கே கிடையாது. மண்ணெண்ணெய் ஊத்தி எரியவிடும் ஹரிகேன் விளக்கு மட்டுமே! 'கோபால் ஸாப்'ன்னுக்கிட்டே நம்மைத் தேடிவந்து பெரிய கண்ணாடித் தம்ளர் நிறைய பழரஸம் கொடுத்தாங்க. இன்னும் குடி(ங்க) குடி(ங்க)ன்னு நை நை........ போதுமப்பான்னு சொன்னாக் கேட்டால்தானே! 'அபி நை, அபி நை'ன்னு தலையை ஆட்டி ஆட்டியே...கைகளால் அபிநயம் பிடிக்கவேண்டியதாப் போச்சு.
கொஞ்சதூரத்துலே ஒரு கொட்டகையும் மேடையுமா அமைப்பு. கலைஞர்கள் பாட்டு பாடறாங்க. ஹார்மோனியத்தோடு வாய்ப்பாட்டு, தப்லா, ஷெனாய் மாதிரி ஒர் பீப்பி! மொத்தம் மூணுபேர். நேயர் விருப்பம் சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. சட்னு ஒரு பாட்டு கூட நினைவுக்கு வரலை:(
எதாவது பாடுங்கன்னதும் 'ஷ்யாமு பியா மோரி ரங் தே சுனரியா.......' இனிமையான பாட்டு. கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாத ஸ்வரத்தில் பீய்ங்ன்னு பீப்பி. தமிழ்நாடுன்னு தெரிஞ்சதும் கண்களில் ஒரு சந்தோஷம். கன்னியாகுமரியில் ஒரு விழாவுக்கு வந்து வாசிச்சாங்களாம்.
அதுக்குள்ளே சாப்பாடு ஆறிப்போகும். முதலில் சாப்பிட்டுட்டு நிதானமா ஆட்டம் பாருங்கன்னு ஆள் மேலே ஆள் வந்து கூப்புடுது. எல்லோருக்கும் தலையில் முண்டாசு. 'கிராம மக்கள் உடை'ன்னு ஒரு ஜிப்பா, தார்பாய்ச்சுக் கட்டுன வேட்டி. உயரம் குறைவான நீண்ட மேசை/பெஞ்சு. நீளப்பலகையை நாலைஞ்சு செங்கல் அடுக்கி அதுக்கு மேலே வச்சுருக்காங்க. பந்திப்பாய் மாதிரி நீளமான ஜமக்காளம். ஆனா சம்மணம் போட்டு உக்காரலாம். நமக்கு உக்காரச் சின்னதா மோடா கொண்டுவந்து போட்டாங்க. (என் முழி அப்படி இருந்துருக்கு!)உக்கார்ந்தாச்சு. ஆனால்..... எந்திரிக்க முடியுமோன்னு கவலை! அதைப் பிறகு பார்த்துக்கலாம்.
ஸாலட் வகைகள்ன்னு சின்னச்சின்ன தொன்னைகளில் ஒரு இருவதுவகைகள் கொண்டுவந்து அடுக்குனாங்க. தையல் இலையில் அடுத்து ரொட்டி வகைகள். மக்காச்சோளம், சோளம், மெத்தி(வெந்தயம்) கோதுமை ன்னு விதவிதமான தானியங்களில் செஞ்சது. நாலைஞ்சு கறி வகைகள், பஜ்ஜியா, டோக்ளா, சுட்ட அப்பளம், ஜிலேபி, ரவாலாடுன்னு இன்னொரு கூட்டம். மண் குவளைகளில் மோர், கெட்டித்தயிர், தண்ணீர்ன்னு ஒரு பக்கம். குஜராத்துக்கே உரிய கிச்சடி, கொஞ்சம் வாயைத்திறந்தா ஊட்டியே விட்டுருவாங்க! இன்னும் போட்டுக்கோ இன்னும் போட்டுக்கோன்னு அப்படி ஒரு உபச்சாரம். ஒரு நாலைஞ்சு வயிறை வைக்காதது கடவுள் செய்த குற்றம்.

நினைச்சதுபோலவே ஆச்சு. காலை மடக்கி ரொம்ப நேரம் ஆனதால் எழுந்திரிக்க முடியலை. என்ன ஒரு கஷ்டமப்பா:( கைகழுவும் இடத்தில் கைக்குத் தண்ணீர் வார்க்க ஒருத்தர். டவல் வச்சுக்கிட்டு இன்னொருத்தர். திரும்பி நம்ம மேசைக்கு வந்தவுடன் பழவகைகள் துண்டுகள் போட்டுக் கொண்டுவந்து நீட்டினார் ஒருத்தர்.
அடிமேலடி வச்சு மெள்ள நடந்தோம். பூஜையறைன்னு ஒரு குடிசை. குடிசை குடிசைன்னு சொல்றதுகூடச் சரியில்லே. எங்கேயும் சுவர்களோ கதவுகளோ இல்லை. கொட்டாய் (கொட்டகை)ன்னே சொல்லிக்கலாம். சுவத்துலே சில கிராமதேவதைகளின் படங்களை வரைஞ்சு வச்சுருக்காங்க. தரையில் பாய். உக்காந்து சாமி கும்பிடவாம்.

நல்ல பெரிய இடம்தான். மெழுகிய மண்தரைகள். அங்கங்கே கயித்துக் கட்டில்கள். ஓய்வெடுத்துக்கணுமுன்னா கால் நீட்டிப் படுத்துக்கலாம். கடைவீதிகள் போல ஒரு இடம். ஏழெட்டு ஸ்டால்களில் கைவினைப்பொருட்கள். ஒரு ஓவியர், ஒருத்தரை வரைஞ்சுக்கிட்டு இருந்தார். இன்னொரு பக்கம் பழையகாலப் பாத்திரங்களை வச்சு ஒரு அருங்காட்சியகம். இனிமே பழஞ்சாமான்களை இப்படிப் பார்த்தால்தான் உண்டு.

ஒரு திண்ணையில் பீடாக் கடை. நம் தேவைக்குச் செஞ்சு கொடுக்கறாங்க.

தெரியாத்தனமா ஒருமுறை ஜர்தா வச்ச பீடாவைத் தின்னுட்டு மயங்கி விழப்போய் ரோடோரத்தில் உக்காந்தேன். அப்பெல்லாம் செரங்கூன் ரோடில் ஓப்பன் சாக்கடை ஓடிய காலம். போலீஸ் பிடிச்சாலும் பரவாயில்லைன்னு சாக்கடையில் வாயில் இருந்த பீடாவைத் துப்பிட்டு..............ஐயோ! அதுலே இருந்து பீடான்னாலே பயம்தான்.

குல்ஃபி ஐஸ்கூட இருக்கு. ஆனா விஷாலாவுக்கு வரணுமுன்னா விசாலமான வயிறு இருந்தால்தான் கொடுத்த காசை நியாயப்படுத்த முடியும்!

பொம்மலாட்டக் கொட்டாய்க்குப் போனோம். அனார்கலி, ஜஹாங்கீர், வீர சிவாஜி(மராட்டியர்) ஔரங்கசீப், சில ராஜபுத் அரசர்கள்ன்னு அருமையா வரிசை கட்டி நின்னுருந்தாங்க. அரண்மனை விதூஷகன் கூட உண்டு. இளைஞர் அஷோக், பாட்டுப் பாடிக்கிட்டே டோலக் வாசிக்க, பெரியவர் தர்மேஷ்பாய் கண்பத்பாய் பட் ஆட்டுவிக்கிறார். 'ஆத்தாடி பாவாடை காத்தாட' என்ன ஒரு வேகம், நளினம், குலுக்கல்! இடைக்கிடையில் விதூஷகன் வந்து சிரிக்க வைக்கிறான். பாம்பு ஒன்னு சீறிப் பாய்ஞ்சு பொத்ன்னு நம்ம காலடியில் விழுந்துச்சு! போதுமான வெளிச்சம் இல்லாததால் படங்கள் எடுக்க முடியலை. ப்ளாஷ் போட்டுப்போட்டு ஆடும் வேகத்தைப் பாழாக்கவேணாம்தானே? எங்கேயும் மின்சாரம் பயன்படுத்தாததால் மைக் இல்லாத பாடல்கள்தான். வீட்டுலே விழா, இல்லை குழந்தைகள் பார்ட்டின்னா சொல்லுங்க. நான் வந்து ஆட்டுவிக்கறேன்னு கார்டு கொடுத்தார். தலையை ஆட்டி வச்சேன். எள்ளுப் பேரக்குழந்தைகள் வரும் நாளில் கூப்புடலாம்.
தனித்தனியா பொம்மைகளை படம் எடுத்தோம். கண்பத்பாய் ஒவ்வொன்னையும் விளக்கிச்சொல்லி எப்படி ஆட்டுவிக்கிறாருன்னு காமிச்சார். ஆனா கெமெராவில் இருந்து படங்களை கணினியில் போடும்போது மாயாஜாலம் போல எப்படியோ 98 படங்களைக் காக்கா கொண்டுபோயிருக்கு:( .

விஷாலா கிராமம் ஒரு புதுமையான அனுபவமாத்தான் இருந்துச்சு. சில நாட்களில் கூடுதல் விசேஷ நிகழ்ச்சிகளா இன்னும் பல கிராமீய நடனங்களும் நடக்குமாம். நம்ம வீட்டு விசேஷம் கல்யாணம், பிறந்தநாள் போன்றவைகளைக்கூட இங்கே கொண்டாடிக்க வசதி இருக்காம். மொத்த கிராமத்தையும் நமக்கே நமக்குன்னு வச்சுக்கலாம் ஒரு நாளைக்கு. செலவு ஒன்னும் அதிகமில்லை. அம்பானி குடும்பம் வந்து போன இடம்.அவ்ளோதான் சொல்வேன்:-)

பத்துமணிக்கு முன்னால் அறைக்குப் போகலாமேன்னு கிளம்பி வந்தோம். பப்பனுக்குக் கணக்குப் பார்த்து காசைக் கொடுத்துட்டு, அவர் மகளோட கல்யாணத்துக்குப் பரிசா இருக்கட்டுமுன்னு கொஞ்சம் தனியா பணம் கொடுத்தவுடன், சட் னு அவர் கண்கள் கலங்கிருச்சு. நல்ல மனுசர். பத்திரமாக் கொண்டுவந்து சேர்த்தாரே. (படம்: கோபால் பப்பனுடன்)

அப்புறம்?

இன்னொருக்கா சொல்லணுமா?பயணத்தில் கூடவே வந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. துவாரகை 'தீர்த்த' யாத்திரைப் பயனை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறேன்.

நன்றி கலந்த வணக்கம்.


பயணம் நிறைவு..................:-)

32 comments:

said...

கொஞ்சம் பெரிய தொடர் தான் இருந்தாலும் குஜராத்தில் இவ்வளவு இடம் இருக்கு என்று இப்போது தான் தெரிந்துகொண்டேன்.
எனக்கு தெரிந்தவர் ஒருவரின் மகன் கூட நியுஸில் படிக்கப்போய் அப்படியே வேலையும் வாங்கிட்டு படிக்கிறார்.ஒருவிதத்தில் செலவுக்கு ஓகே என்றாலும் காசு வாங்க ஆரம்பித்தவுடன் மூளை படிக்க மறந்துவிடுகிறது.

said...

சாப்பாடு பாத்தாலே சாப்பிடணும்போல இருக்கு.

நியூஸிக்கு மட்டும் இல்லை. ஆஸில ஒரு பெரிய கூட்டமே இந்தியால இருந்து வந்து மாணவர்கள்னு சொல்லிக்கிட்டு இருக்கு

said...

மிக அருமையான பயண தொடர் . எங்களுக்கு இவ்ளோ இடங்களை சுற்றி காமிததுகு நன்றிகள் பல .

said...

//ஆஸில ஒரு பெரிய கூட்டமே இந்தியால இருந்து வந்து மாணவர்கள்னு சொல்லிக்கிட்டு இருக்கு//

ella naatlayum irukanga

said...

//ஒரு திண்ணையில் பீடாக் கடை. நம் தேவைக்குச் செஞ்சு கொடுக்கறாங்க.//

பான் என்று கேட்காதீர்.. மீட்டாபான் என்றே கேட்டு வாங்குவீர்.:-)))) உடலுக்கு கெடுதி இல்லை..

டோக்ளா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா என்ன!!! ஒரு போட்டோவிலும் காணோமே :-))))

said...

வாங்க குமார்.

போணி ஆச்சு:-)

இது வெறும் சௌராஷ்ட்ரா பகுதி மட்டும்தான். இன்னும் ஏராளமான பகுதிகள் குஜராத்லே இருக்கே! வெறும் 7 நாட்களில் பார்க்க முடிஞ்சது இவ்வளோதான்.

இதுக்கும் க்ருஷ்ணனே புண்ணியம் கட்டிக்கிட்டார்.

//காசு வாங்க ஆரம்பித்தவுடன் மூளை படிக்க மறந்துவிடுகிறது.//

உண்மைதான்.

said...

வாங்க சின்ன அம்மிணி.

அதிலும் நம்ம நியூஸி அரசு ரொம்ப naive பாருங்க. ஸ்டூடண்ஸ் விஸாவில் மனைவி குழந்தைகளையும் கூடவே கொண்டுவர இடம் தருது. இங்கே அவுங்களுக்கு ஃபேமிலி சப்போர்ட் அது இதுன்னு உதவித்தொகையும் ஓரளவு கொடுக்குது. கடைசியில் டாக்ஸ் கட்டும் மக்களுக்கு எரிச்சல் வராம எப்படி இருக்கும்?

said...

வாங்க எல் கே.

கூடவே வந்ததுக்கு நன்றி.

போன இடுகையில் படப்பிடிப்பு விவரம் சரின்னு சொல்லலையே நீங்க????

said...

வாங்க அமைதிச்சாரல்.

படம் 9 பார்க்கவும். பஜ்ஜியாவுக்கு வலது புறம் உங்கள் 'டோக்ளா':-)

said...

//போன இடுகையில் படப்பிடிப்பு விவரம் சரின்னு சொல்லலையே நீங்க????/

illaye
pothuva neenga pathivula tara padangalai mattume naan parepn. athai patri nan ethuvum solla villai

said...

அட ராமா!!! 'படம் பார்த்துக் கதை சொல்'லா எல் கே?

said...

@teacher

tappa purinjikittenga.. neenga smayathula piccasa link kodupeenga. officela atha open panna mudiyathu veetla poi systemla ukknahta kutti vidathu so athaithan pathivula podra padthati mattum pappenu type pannen(lunch sapida pora avasaraithle fulla adikala)

said...

இது என்ன போங்கு ஆட்டம்? திரும்பி வந்தக் கதையை சொல்லவே இல்லையே!!

ஒத்துக்க மாட்டோம். பாகம் 30 போடுங்க!!

said...

துளசீம்மா! அருமையான எழுத்து. அதைவிட நான் பார்த்து ரசித்தது குஜராத்தி உணவு வகைகள். நமது சமையலை விட்டால், எனக்கு மிகவும் பிடித்தது குஜராத்தி சைவ உணவு தான்! என் ‘நல்ல’ காலங்களில் குஜராத் முழுக்க அலைந்து தேடித்தேடிப்போய் சாப்பிட்டிருக்கிறேன்! கடவுள் ஏன் இன்னொரு வயிறு தரவில்லையென்று ஏங்கவைக்கும் காலம்! என்ன, உங்களைப்போல் எழுதத்தான் வரவில்லை!

நன்றி, ரசித்துப்படித்தேன்!

said...

Thank you Tulsi amma. I've travelling along with you, the whole journey. Sutthi kattunathe pothum...punniyam ellam theva illa...thanks again.

said...

இன்னொருக்கா சொல்லணுமா டீச்சர்...உங்கள் பயணங்களுக்கு எப்போதும் ரசிகன் ;))

said...

ஆஹா...அப்படியா விஷயம்!!!

ஓக்கே எல் கே.

said...

வாங்க கொத்ஸ்,

க்ளாஸ் லீடரே அமர்க்களம் பண்ணா எப்படி? அதான் சுட்டி இருக்குல்லே!
அதையே பிடிச்சுக்கிட்டு மறுபடி குஜராத்தை 'இடம்' வருக:-)

said...

வாங்க பாரதி மணி ஐயா.

வராதவுஹ வந்துருக்கீஹ! சொகமா இருக்கீஹளா?

வயித்துக்கு கேடில்லாத அருமையான உணவு வகைகள்தான் இவை. காரம் வேணுமுன்னா மொளகாய் கடிச்சுக்கோன்னு சொல்றது எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

ஆனால்..... நியூஸியில் நம்ம குஜராத்திக் குடும்ப நண்பர் வீட்டுச் சமையலில் எனக்காகக் காரம் இல்லாமல் சமைச்சேன்னு சொல்வாங்க. வாயில் எடுத்து வச்சவுடன், உறைப்பில் தலையுச்சி முடியெல்லாம் பறக்க, நாக்கையே பிடுங்கி வீசிறலாமுன்னு தோணும்:-)))))

ரசிச்சதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

said...

வாங்க பாண்டியன் புதல்வி.

கூடவே வந்ததுக்கு நன்றிப்பா.

லக்கேஜோட ரெடியா இருங்க. அடுத்த பயணம் போகப்போறோம்!

said...

வாங்க கோபி.

ஒரு வாரம் ஓய்வெடுத்துக்கிட்டு உடனே புறப்பட்டுறலாம்:-)

said...

நான் கிருஷ்ணரைப் பாத்ததை விட சாப்பாடைத்தான் நிறையப் பார்த்து ம்ம்ம்ம்ம் என்று பெரு மூச்சு விட்டேன்:)ரொம்ப நல்ல தொடர். எல்லாரும்தான் பயணம் போறோம். எழுதத் தெரியணுமே:) நன்றி துளசிமா.

said...

அருமையான பயணக்கட்டுரை டீச்சர். குஜராத்தைப் பற்றி முழுசா சொல்லிட்டீங்க :)

இனி யாராவது குஜராத் போகனும்னு சொன்னா உங்க பதிவின் லின்ங் கொடுத்தா போதும். கைடே தேவையில்லை :)

said...

Holi ki shubh kaamna துளசி!!
நம்ம ஊர்ல student visa ல இருந்தா, 20hours per week வேலை செய்ய work permit உண்டு இல்லியா ?

said...

வாங்க வல்லி.

சரியாப்போச்சு. எனக்கு எழுதவருமுன்னு எனக்கே தெரியாத காலத்துலே இன்னும் நிறையப் பயணமெல்லாம் போனது வாசகர் செஞ்ச அதிர்ஷ்டமுன்னு நினைச்சுக்கணும்:-))))

said...

வாங்க நான் ஆதவன்.

குஜராத்தை இன்னும் முழுசாப் பார்க்கலையேப்பா. கண்டது கைமண் அளவு. காணாதது முழு குஜராத் அளவு:-)

said...

வாங்க ஜெயஸ்ரீ.

உங்களுக்கும் ஹோலிக்கா ஷுப் காம்னா.

ஆமாம். 20 மணிவரை வேலை செஞ்சுக்கலாம்.

இன்னிக்கு என்ன விசேஷமுன்னு தெரியலை. ஒத்தை மாட்டு வண்டியிலே பெருமாள் நம்ம வீடு இருக்கும் தெருக்களைச் சுற்றி மூணுமுறை வந்துட்டார்.

வீட்டுவீட்டுக்கு வரும்படி.

said...

"தேங்காய், மட்டை உரிச்சே காய்த்து தொங்குவது"
வேண்டுதல்களிலும் ஊருக்கு ஊர்மாற்றங்கள்.

"லாந்தர் விளக்கு" இதன் பெயரைக் கேட்டாலே நடுங்குமே நமக்கு..முன்னர் நெடும்காலம் இருட்டில் வாழ்ந்த துன்பங்கள்.

said...

வாங்க மாதேவி.

இருட்டுன்னாலும் இரவுகள் அமைதியாக இருந்த காலமாச்சே!

பொழுது சாய்ஞ்சதும் ஊர் அடங்கிரும்.இல்லே?

said...

மேடம் உங்க தொடர் படித்தே டயர்ட் ஆகி விட்டேன் :-) இப்ப தான் ஒரு வழியா முடித்தேன்.. கொஞ்ச நாள் படிக்க முடியல நீங்க என்னடான்னா சரசரன்னு பதிவா போட்டு தாக்கிட்டீங்க..ரீடர்ல உங்க பதிவு எண்ணிக்கையை பார்த்தே மயக்கம் ஆகி விட்டது..

அப்புறம்... உங்களுக்கு ரொம்ப பொறுமை.. சில பதிவுகளை கொஞ்சம் சுருக்கி இருக்கலாம் என்பது என் கருத்து... ஒருவேளை நான் மொத்தமா படித்ததால் அப்படி இருந்ததோ என்னவோ!

வாழ்த்துக்கள் ..சிறப்பான ஒரு தொடரை தந்தமைக்கு.

said...

வாங்க கிரி.

பயணமுன்னா சும்மாவா? அப்படித்தான் டயர்டு ஆகும்:-)

எனக்கும்தான் சுருக் எழுத ஆசை. வரதில்லைப்பா.

வேணுமுன்னா 'சண்டிகர் போய்வந்தேன்' ன்னு ரெண்டு சொற்களில் முடிக்கணும்!!!!

said...

நான் குஜராத் போன கதை இது:
http://jssekar.blogspot.in/2016/10/blog-post.html

- ஞானசேகர்