Sunday, February 07, 2010

அதோ அந்தப்பறவை போல.....(குஜராத் பயணத்தொடர் 17)

மூல் த்வாரகாவை விட்டு சுதாமாபுரி நோக்கி வண்டியை ஒரே விரட்டு. அவசரத்தில் போற போக்கில் 'கச்சடி'ன்னு ஒரு பேரைப் பார்த்ததா நினைவு,.சின்னதா ஒரு பாலம் கடந்தப்பத் தண்ணீர் தேங்கி நிற்குதே.... ஏதோ ஆறோ ஏரியோன்னு சுவாரசியமில்லாமக் கண்ணைத் திருப்பினவளுக்கு உலகத்து அழகெல்லாம் சட்னு .... அடடா அடடா..... வண்டியை ஓரங்கட்டுப்பா.....
இத்தனை பறவைகள், அதுவும் ஒரே இனம். தலையில் சின்னதா ஒரு பங்க் முடி! கொஞ்சம் மெதுவா வண்டியை ஓட்டச் சொன்னேன் பப்பனிடம். அடுத்த ரெண்டு நிமிசத்தில் பஞ்சுப்பொதிகளைத் தண்ணிரில் மிதக்கவிட்டுருப்பதைப்போல பெலிகன்கள், கரண்டிமூக்கன்கள். (ஸ்பூன்பில்)ஐரோப்பாவின் குளிருக்குப் பயந்து, விஸா இல்லாம விடுமுறைக்கு வந்துருக்கும் வெளிநாட்டுவாசிகளாம். பலபறவைகளின் பெயர் தெரியலை. ஒருத்தனுக்கு 'மிஸ்டர் பங்க்'ன்னு பெயர் வச்சேன். பைனாகுலர் கொண்டு வந்துருந்தா...கொண்டாட்டமா இருந்துருக்கும்.

உள்ளூர் எருமைகளும் இதுகளைச் சட்டையே செய்யாமல் குட்டையைக் குழப்பிக்கிட்டு இருக்குதுகள் ஒரு பக்கம்.
சுதாமாபுரி நகருக்குள் நுழையும்போதே ரொம்பப் பழைய கட்டடங்களும், அவ்வளவா பராமரிப்பு இல்லாத தெருக்களுமா இருக்கே என்னடான்னு தோணுச்சு. முதலில் நகரமையத்துத் தோட்டத்துள் இருக்கும் சுதாமரின் கோவிலுக்குப் போனோம். கோவிலைச் சுத்தியுள்ள தெருக்களில் அருமையான வேலைப்பாடுகளுடன் பழைய கட்டிடங்கள்.

இவர்தான் 27 பெத்த மவராசன். எல்லோரையும் பராமரிக்க முடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆனபிறகு, மனைவியின் சொல்கேட்டு, இளவயது குருகுலத் தோழனிடம் உதவி கேட்டுப் போறார். வெறுங்கையாப் போகணுமான்னு மனசுலே கலக்கம். ஏதாவது கொண்டு போகலாமுன்னா வீட்டுலேதான் ஒன்னுமில்லையே! 27 இருக்கும் வீட்டில் எது மிஞ்சுமுன்னு சொல்லுங்க. பசங்க பசியிலே ஆலாப் பறக்குதுங்களே! 'கொஞ்சம் இருங்க எதாவது தேறுதான்னு பார்க்கிறேன்'னு சொன்ன மனைவி கொஞ்சூண்டு அவல் எடுத்துட்டுவந்து தர்றாங்க. அதைத் துண்டுலே முடிஞ்சுக்கிட்டு நண்பனைப் பார்க்கப் போறார். த்வாரகை மன்னன், பலவருசங்களாப் பார்க்காதிருந்த பள்ளித்தோழன் வந்ததும் வரவேற்று உபசரிச்சு, அவரை தன் இருக்கையில் உக்காரச்சொல்லி நடந்துவந்து அலுத்துப்போனப் பாதங்களைக் கழுவி ஆசுவாசப்படுத்தறான்.

'வூட்டுலே அண்ணி, பசங்க எல்லாம் சௌக்கியமா அண்ணாத்தே.! எனக்காக என்ன கொண்டு வந்தீங்க?'ன்னு கேட்டதும் சுதாமருக்கு நா வறண்டு போகுது. மென்னு முழுங்கிக்கிட்டே...(வார்த்தையைச் சொன்னேன். அந்த அவலை மென்னுட்டார்னு நினைச்சுறாதீங்க.) அவல் பொதியை நீட்டுறார். சட்னு அதை வாங்கி அவசரஅவசரமாகப் பிரிச்சு அதுலே இருந்து ஒரு கைப்பிடி எடுத்து வாயில் போட்டு மென்னு தின்றான் இந்தக் கள்ளன்.

அதே நொடியில் இங்கே தரித்திரத்தின் பிடியில் சிக்கிக்கிடந்த சுதாமரின் வீடு பளிச்ன்னு மாடமாளிகை ஆகிருச்சு. எல்லோருக்கும் உடம்பில் புதுத் துணிகள், நகைநட்டுக்கள்ன்னு மேஜிக்தான் போங்க. செல்வத்துக்குன்னு இருக்கும் பளபளப்போடு மின்னும் முகங்கள்! வறுமை போயே போச்!

'பேஷ் பேஷ் இந்த அவல் ரொம்ப நல்லா இருக்கு'ன்னு சொல்லிக்கிட்டே இன்னொரு பிடியை எடுத்து வாயில் போடப்போனா.... ருக்மணி 'சட்;னு அந்தக் கையைப் பிடிச்சுட்டாளாம். 'எல்லாம் தின்னது போதும்.' ஒரு கண்ஜாடை!

நண்பர்கள் ரெண்டு பேரும் கொசுவத்தி ஏத்திக்கிட்டுப் பழைய கால நினைவுகளை அசைப்போட்டுச் சிரிச்சுப் பேசிக்கிட்டே இருக்காங்க. சுவையான விருந்து ரெடி ஆச்சு. சுதாமருக்குச் சாப்பாட்டைப் பார்த்ததும் கண் 'நிறைஞ்சது'. 'அங்கே 28 ம் கஞ்சிக்கில்லாம அழுதுக்கிட்டு இருக்கும் இந்நேரம். எனெக்கென்ன இம்மாம்பெரிய விருந்து கேக்குதா?' உள்ளூக்குள் ஒரு தேம்பல்.

கூச்சப்படாம எல்லாம் சாப்புடுங்கன்னு இங்கே கண்ணனும் மனைவியும் உபசரிக்கிறாங்க. தன்னோட வறுமையை வாய் திறந்து நண்பனிடம் சொல்லி யாசிக்க இவருக்கு வாய்வரலை. ஏதோ சாப்பிட்டேன்னு பேர் பண்ணினார். ராத்திரி பட்டு மெத்தையில் படுக்கை. க்ருஷ்ணனே மயில்பீலி விசிறியால் விசிறிவிட்டு தூங்குங்கன்னு பரிவோடு சொல்றான்.

துக்கத்துலே தொண்டை அடைக்குது. தூங்கியதுபோல் பாவனை செய்யறார். நல்ல தூக்கமுன்னு க்ருஷ்ணன் 'நினைச்சுக்கிட்டு' ஓசைப்படாம எழுந்து போறான். காலையில் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுக் கிளம்பும்போது, ஏதோ நினைவுக்கு வந்ததைப்போல் என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தீங்கன்னு கேக்கறான் கண்ணன்.

'தோழனுடன் ஏழமை பேசேல்' நினைவுக்கு வருது சுதாமருக்கு. 'ச்சும்மாத்தான் உன்னைப் பார்க்கவந்தேன். ரொம்ப நாளாச்சே 'நல்லா இருக்கியா' ன்னுதான்..........

"அண்ணிக்கும் பிள்ளைகளுக்கும் எங்கள் அன்பு. ரொம்ப விசாரிச்சதாய் சொல்லுங்க அண்ணாத்தே!"

வரும்வழியில் எல்லாம் வீட்டு தரித்திரத்தின் துக்கமும், நண்பனைச் சந்திச்ச மகிழ்ச்சியுமா மாறிமாறி மனசுக்குள்ளே ஓடிக்கிட்டு இருக்கு. வீடு இருக்கும் ஊர் (அப்போ இந்த ஊருக்கு என்ன பெயரோ?)நெருங்க நெருங்க 'தங்க்ஸ்கிட்டே தர்ம அடி வாங்கப்போறோமோன்னு வயித்துக்குள்ளே ஒரு. கலக்கல். வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைஞ்சாச்சு. அடிமேல் அடி வச்சு வீடு இருக்கும் பக்கம் நெருங்கினால்..... வீட்டைக் காணோம். ஒரு பெரிய மாளிகை நிக்குது அந்த இடத்தில். 'இதென்னடா.... நாம் இல்லாத நேரத்தில் இருந்த வீட்டையும் வித்துட்டு புள்ளைங்களோடு வேற ஊருக்குப் போயிருச்சா நம்ம தங்ஸ்?'

வாசல்பக்கம் எட்டிப் பார்த்தால் அந்த இருபத்தியேழில் சிலது நல்ல ஆடைஆபரணத்தோடு விளையாடிக்கிட்டு இருக்குதுங்க. அப்பாவைப் பார்த்ததும் துள்ளிக்கிட்டு ஓடி வருதுங்க. அப்பதான் இவருக்குப் புரியுது இந்த மாயக்கண்ணனின் மாயாஜாலம்!

அதுக்குப்பிறகு சீரும் செல்வமுமாய் பல ஆண்டுகள் வாழ்ந்தார்ன்னு கதையை முடிக்கலாம். எல்லாச் செல்வமும் குறைவற இருக்கேன்னு இன்னும் குடும்பத்தைப் பெருக்கி இருக்கமாட்டாருன்னு நம்புவோமாக.

இவர் கதையில் இருந்து நமக்குப் பாடம் நிறைய இருக்கு! 'எதுவுமே' அளவோடு இருக்கணும். ஆண்டவன் கொடுத்தார் கொடுக்கிறார்ன்னு வதவதன்னு பெத்துப்போடக்கூடாது! இல்லை பேச்சைக் கேக்கமாட்டோமுன்னு சொன்னா அட்லீஸ்ட் ஆண்டவன் நம்ம க்ளாஸ்மேட்டா இருக்கணும். ( G இல்லை, C )
இவருக்காக ஒரு அழகான கோவில் இந்த குளிர்ச்சியான தோட்டத்துக்கு நடுவில் இருக்கு. 12 இல்லை 13 வது நூற்றாண்டுலே கட்டப்பட்டக் கோவிலாக இருக்கலாமாம். இதை மகாராஜா பவ்சிங் புதுப்பிச்சுக் கட்டி இருக்கார். கோவிலுக்கு முன்னே இருக்கும் முன்மண்டபத்தை அடுத்து பிரமாதமான ரெண்டடுக்குக் கூடம் ஒன்னு இருக்கு. மேலே போனால் உப்பரிகையில் இருந்து பார்ப்பதுப்போல இருக்கலாம். இந்தக் கூடத்தில் ரொம்பப் பழையகாலத்து ஓவியங்கள் சில சுவரில் வரைஞ்சுருக்கு. மூக்குமுழியெல்லாம் தீர்க்கமா........ சூப்பர் போங்க.

சபரி ஆஸ்ரமத்தில் ராமலக்ஷ்மணர்கள். செல்லம்போல சிங்கங்கள்..

கோவிலுக்குப் படியேறும் இடத்தில் 'பரிக்ரமா'ன்னு ஒரு மேஸ் விளையாட்டு போல ஒன்னு சின்னதா ஒரு முக்காலடி அகலத்தில்.. முதலில் என்னன்னு புரியலை. பரிக்கிரமான்னு அடிமேல் அடி வச்சுக் கோவிலையோ புனிதத் தலங்களையோ சுற்றிவருவதைத்தான் சொல்வாங்க. இது என்னன்னு தெரியலையே. கூடுதலாக் குழம்புமுன் விளக்கம் கிடைச்சது பக்தை ஒருவரின் புண்ணியத்தால். அவுங்க நுழைவுன்னு போட்டுருந்த இடத்தில் ஏறிப்போய் அடிமேல் அடிவச்சு நடந்து கடைசியில் வெளியே வந்தாங்க. மொத்தம் 84 காலடிகள் வைக்கணும்போல. அதுக்குச் சரியான அளவில் அமைஞ்சுருக்கு இது.
'அட! நல்லா இருக்கே! நானும் போய்ப் பார்க்கவா?'ன்னு கேட்டதுக்கு, 'தலை சுத்தி விழப்போறே. நின்னு பார்த்தாலே புண்ணியம் கிடைச்சுரும். நீ வா' ன்னுட்டார் இவர். அதுவும் சரிதான். முந்தி மாதிரி ஒல்லி உடம்பா சட்னு தூக்க? க்ரேனுக்கு எங்கே போவார்:-)
சுதாமா குண்ட் என்று ஒரு கிணறு இருக்கு. குகைமாதிரி கீழே போகும் படிகள். மேலே நின்னே பார்த்துக்கிட்டேன். மூலவரை வலம் வரும்போது ஒரு மூலையில் அனுமன் கையை உயர்த்திக்கிட்டுக் கொயட்டா நிக்கறார்.
கண் தானாக் காலடியில் போச்சு. அப்பாடா......

இங்கே பிரஸாதமாக, சுதாமருக்குக் கண்ணன் சிசுருஷை செய்யும் படம், ஒரு சின்ன பேக்கட் அவல் கொடுத்தாங்க. ஸோ ஸ்வீட்.

சரித்திர நிகழ்வுகளில் இடம்பெற்ற ஊர்தான் இது. இப்போது இதன் பெயர் போர்பந்தர். மூளையில் மணி அடிக்குமே:-)


பயணம் தொடரும்..............:-)))))

31 comments:

said...

//'பேஷ் பேஷ் இந்த அவல் ரொம்ப நல்லா இருக்கு'ன்னு சொல்லிக்கிட்டே இன்னொரு பிடியை எடுத்து வாயில் போடப்போனா.... ருக்மணி 'சட்;னு அந்தக் கையைப் பிடிச்சுட்டாளாம். 'எல்லாம் தின்னது போதும்.' ஒரு கண்ஜாடை!//

மனைவியின் பார்வையில் பரிவு என்பதைவிட பவருன்னு சொன்னா சரியாக இருக்கும் போல :)

நல்லா சுவை பட எழுதி இருக்கிங்க.

said...

//இத்தனை பறவைகள், அதுவும் ஒரே இனம். தலையில் சின்னதா ஒரு பங்க் முடி!//

அவுங்க ஊர் லேட்டஸ்ட் ஹேர்கட் :-)).

என்னடா... மூன்றடப்புல ஒன்னையும் காணோமேன்னு பாத்தா இதுங்க எல்லாம் உங்களைப்பாக்க குஜராத் வந்துட்டுதுகள் போலிருக்கு!!!

காந்திதாத்தா ஊர்ல நம்மூரு குசேலனா!!!

said...

அனுமன் காலடியில் யாரு என்ன கதைன்னு தெரியறவரைக்கும் இதெ திகிலோட அனுமன் காலடிய பாத்துட்டிருப்போம் போலயே. :)

said...

//தோழனுடன் ஏழமை பேசேல் நினைவுக்குவருது சுதாமருக்கு//


நல்ல நினைவு.


பறவைகள் அழகு.

said...

படங்கள் அனைத்தும் மனதை அள்ளுகிறது...

said...

arumai

said...

இந்த சுதர்மனின் குருகுல வாசத்தின் போது குருமாதா இருவருக்கும் சுள்ளி பொறுக்க காட்டுக்குச் சென்ற போது திண்ண அவல் கட்டிக் கொடுத்தார்கள். மழையின் போது காட்டில் ஆளுக்கெரு மரத்தில் ஒதுங்குனார்கள்,அப்போது சுதர்ம்மா பசி பொறுக்காமல் கண்ணனின் அவலையும் சேர்த்து தின்று விட்டான்.அடுத்தவன் உணவை தின்ற பாவத்திற்க்காக சுதார்மா மிக்க படித்தவன் என்றாலும் வறுமையின் பிடியில் சிக்கினான்.திரும்ப அவல் கொடுத்தவுடன் பணக்காரன் ஆகிவிட்டான். ருக்மணி மூன்றாவது பிடி உண்ணும் போதுதான் நிறுத்தினாள். சாப்பிட்டால் கண்ணன் சுதர்மாவிற்க்கு அடிமை ஆகிவிடுவான் என்பதால் தடுத்து நிறுத்தினாள். இந்தக் கதையின் மூலம் அடுத்தவர் உணவைத் திருடக் கூடாது என்பதுதான். நன்றி டீச்சர்.

said...

நல்லாப் பார்த்தீங்க போங்க அனுமனை;)
ஒருவேளை குசேலன் தான் காந்தியா வந்து பொறந்தாரோ.
வேற ஒண்ணும் இல்ல. அந்தப் படத்தில குசேலர் காந்திஜி மாதிரி இருக்கார்:)

//
உள்ளூர் எருமைகளும் இதுகளைச் சட்டையே செய்யாமல் குட்டையைக் குழப்பிக்கிட்டு இருக்குதுகள் ஒரு பக்கம்.//
இந்த வாக்கியம் எனக்கு ரொம்பப் பிடிச்சது:)

பேர்ட் வாட்சிங் வேறயா!!
நல்லா இருக்குப்பா அந்தப் படமெல்லாம். சுதாமா கோவில் படத்துச் சிங்கம் கம்பீரம்.
மனுஷனோட உக்கார்ந்திருக்கே. இதிலிருந்து என்ன தெரியுது!!:))

said...

//எல்லாச் செல்வமும் குறைவற இருக்கேன்னு இன்னும் குடும்பத்தைப் பெருக்கி இருக்கமாட்டாருன்னு நம்புவோமாக.//

ஆமென் ..

said...

ஆஹா அற்புதமான தொகுப்பு . வாழ்த்துக்கள் !
தொடர்சிக்காக காத்திருக்கிறேன் .

said...

கடைசியில கலக்கிட்டிங்க..;))))

\'தோழனுடன் ஏழமை பேசேல்' \\

ஒஒஒ....இப்படி கூட இருக்கா!!! ரைட்டு ;)

said...

கோயில் அமைதித் தோற்றமாகத் தெரிகிறது.

"விஸா இல்லாம விடுமுறைக்கு வந்துருக்கும் வெளிநாட்டுவாசிகளாம்".
நம்மை நினைச்சுகிட்டேன் :((

said...

படங்கள் அனைத்தும் அருமை அக்கா!!

said...

வாங்க கோவியார்.

பரிவு இருக்குமிடத்தில்தான் பவரும் இருக்குமுன்னு புதுமொழி ஒன்னு வச்சுக்கலாமா?

said...

வாங்க அமைதிச் சாரல்.

வல்லியம்மா சொல்றதைப் பாருங்க. அசப்பில் குசேலர் காந்தியாம்! ட்ரெஸ் அப்படி!

நிதானமா இருந்தால் இன்னும் ஏகப்பட்ட வகைகளைப் பார்த்திருக்கலாம். நமக்குதான் காலில் .... சக்கரமாச்சே!

said...

வாங்க கயலு.

ஆமாம்ப்பா. இப்பெல்லாம் அனுமனைப் பார்த்ததும் நம்ம கண் 'சரேல்'ன்னு கால்பக்கம் பாயுது. விழுந்து கும்பிட இல்லை. பெண் வீழ்த்தப்பட்டுக் கிடக்கிறாளான்னு பார்க்கத்தான்.

said...

வாங்க கோமதி அரசு.

உங்கள் திருமணநாள் வந்துச்சாமே! சொல்லவே இல்லை!

இனிய வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க சங்கவி.

நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க எல் கே.

நன்றி.நன்றி

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ரெண்டு பிடியா? 'சுதா' சொன்னாச் சரியாத்தான் இருக்கு:-)))))

அடுத்தவனுக்குச் சேரவேண்டிய உரிமைகளைக் கொள்ளை அடிக்கிறவன் இப்போ பெரும்பணக்காரனால்லே இருக்கான்.

காலம் மாறிப்போச்சே:(

said...

வாங்க வல்லி.

என்ன தெரியுதா?

சிங்க வால் சூப்பு 'அதுக்கு 'நல்லதுன்னு யாரும் கிளப்பிவிடலைன்னு தெரியுது.

இப்ப எல்லா மிருகங்களையும் 'அதனோடு' சம்பந்தப்படுத்தி 'சூப், தைலம்'ன்னு காய்ச்சிடறாங்கப்பா!

said...

வாங்க தருமி.

//ஆமென்//

ததாஸ்து!!!!

said...

வாங்க சங்கர்.

ஆர்வத்துடன் காத்திருப்பா!!!!

நன்றியோ நன்றி.

said...

வாங்க கோபி.

இருக்கே இருக்கே:-)

said...

வாங்க மாதேவி.

அதெப்படி? நாம் விஸா இல்லாம வரமுடியும்? 'ஆர்ம்ச்சேர் ட்ராவலர் 'என்றால் ஓக்கே:-)

said...

வாங்க மேனகா.

வருகைக்கு நன்றி. எங்கே ஆளை ரொம்ப நாளாக் காணோம்?

said...

///க்ளாஸ்மேட்டா இருக்கணும். ( G இல்லை, C )///
உங்க லொள்ளுக்கு எல்லையே இல்லை. :))

said...

வாங்க விதூஷ்.

யாரும் கவனிக்கலையேன்னு கவலைப்பட்டேன்!

உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டேங்கீஸ்

said...

//உங்கள் திருமண நாள் வந்துச்சாமே! சொல்லவே இல்லை!//இனிய வாழ்த்து(க்)கள்.

வாழ்த்துக்கு நன்றி.

கல்யாணநாளுக்கு என்று பதிவுப் போட்டு அதில் என் திருமண நாள் 7ம் தேதி என்று எல்லோரிடமும் சொன்னேன்.

said...

மன்னிக்கணும் கோமதி அரசு. மிஸ் பண்ணி இருக்கேன்:(

உங்களை(யும்) ரீடர்லே போட்டுவச்சுக்கப் போறேன்.

said...

ஹிஹி.. நானும் கொஞ்சம் சூடிக்கிறேன்..
நல்லாவே இருக்கு.
இருபத்தேழு குழந்தைகளா! எப்படிக் கணக்கு போட்டாலும் இடிக்குதே.. ஆமா, அவருக்கு எதுக்குக் கோவில்?

குஜராத பயணமும் புத்தகமா போடுங்க. (பிஜி பயணப்புத்தகம் நல்லா இருக்கு.)