புதுக்கோவிலில் இரவு ஒரு ஒலியும் ஒளியும் காட்சி நடக்குதாம். அதைவிடக்கூடாதுன்னு தீர்மானிச்சுக்கிட்டோம். நேராப்போய் லாக்கரில் வச்ச பொருட்களை வாங்கிக்கிட்டோம். லாக்கர் வசதிகள் இரவு ஒன்பதுக்கு மேல் இல்லையாம். செருப்பையும் போட்டுக்கிட்டுக் கிளம்பும் சமயம் கோவிலுக்குப் பின்பக்கம் கடற்கரை, மேற்கே அஸ்தமிக்கும் சூரிய வெளிச்சத்தில் ஆரஞ்சுச்சாயம் பூசிக்கிட்டு இருக்கு. கெமெராதான் கைக்கு வந்துருச்சே. க்ளிக்கோ க்ளிக்தான். மணி என்னவோ ஆறாகுது. பேசாம அறைக்குப் போயிட்டு 'ஏழரை'க்கு வரலாமுன்னு இவர் சொன்னார். அப்படியே கைப்பை, கெமெரா எல்லாம் அறையிலே வச்சுட்டு வந்தால் ஆச்சு.
வண்டியை விட்ட இடத்துக்கு நடந்துவரும்போது எங்க திட்டம் மாறிப்போச்சு. வழக்கம்போல் நாந்தான் மாறுதலில் கையொப்பம் இட்டேன்:-) அறைக்குப்போய் என்ன செய்யப்போறோம்.?
பேசாம வரும்வழியில் பார்த்த பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வரலாம்.
தனியார் கோவில். எதோ ஒரு மடத்தின் நிர்வாகம். கொடிமரம் பளிச்ன்னு இருக்கு. சின்னதா ஒரு மண்டபம். அதையொட்டிய கருவறை. கம்பிக் கதவுக்குப்பின்னே பளிங்குச்சிலைகளா கண்ணன், பலராம், அனுமன் எல்லாம் இருக்காங்க. நேர் எதிரா குட்டியா ஒரு சந்நிதியில் பெரிய திருவடி. ஒரு பக்கச் சுவரில் திருப்பதி ஏழுமலையான் படம். இன்னொரு மாடத்துலே சின்னதா ஒரு புள்ளையார். ஈ காக்கை இல்லை. சந்நிதிக்கு முன்பு ரெண்டு பேரும் உக்காந்துக் கொஞ்ச நேரம் தியானம் செஞ்சோம். அப்புறம் வாழ்க்கை விசாரங்கள். இப்படி ஒரு அரைமணி நேரம் போச்சு.
சோம்நாத் கோவில் இருந்தபக்கம் கண்ணை ஓட்டினால்.... விளக்கு வெளிச்சத்தில் கோபுரம் ஜொலிக்குது.
பப்பனிடம் ஒலிஒளி விவரம் சொல்லி, பொருட்களையெல்லாம் வண்டிக்குள்ளே பத்திரப்படுத்தச் சொல்லிட்டு, 'நீர் வேணுமுன்னா ஹொட்டேலுக்குத் திரும்பப் போகலாம். நிகழ்ச்சி முடிஞ்சதும் செல்லில் கூப்பிடுவோமு'ன்னது பப்பனுக்குப் பரம சந்தோஷம். 'நல்லதாப் போச்சு. நான் வண்டியைக் கழுவணும். ஹொட்டேலில் அதுக்கு வசதி இருக்கு'ன்னுட்டுப் போனார்.
அந்த ஷாப்பிங் செண்டரைப்போய்ப் பார்த்துட்டு ஒலிஒளிக்குப் போகலாமுன்னு கிளம்பிப்போனால்...உள்ளே திறந்தவெளி முற்றம். அதைச் சுத்தி நிறையக் கடைகள். நினைவுப்பொருட்கள், சங்கு, சோழி பாசிமணி அலங்காரங்கள், பித்தளை, மாக்கல், கண்ணாடி, பளிங்கு இப்படிப் பலதரப்பட்ட பொருட்களில் செஞ்ச லிங்கங்கள். அதன் அளவுக்கேத்தமாதிரிச் செப்புச் 'சேஷன்'கள்ன்னு நிறைஞ்சு கிடக்கு.
சோர்வாடில் இருந்து திரும்பும்போது குடிச்ச இளநீர் அருமையா இருந்துச்சு. இங்கேயும் இளநீர் கொட்டிவச்சுருக்காங்க. குட்டிக்குட்டியாப் பிஞ்சாக்கிடக்கேன்னு நினைச்சதுக்கு எதிரா, அட்டகாசமான சுவை. தாகசாந்தி செஞ்சோம். இந்தப் பக்கமெல்லாம் இளநீர் அஞ்சே ரூபாய்தான்.
கோவில் வளாகத்துக்குள்ளே வந்தால் 'வல்லப் பாயை'ச் சுற்றி பீச்லே உக்கார்ந்திருப்பதுபோல மக்கள்ஸ் உக்காந்துருக்காங்க. அங்கங்கே தரையில் செருப்புக் கூட்டங்கள். நாமும் இங்கேதான் விட்டுட்டுப் போகணும். தொலைஞ்சு போச்சுன்னா..... இங்கே இருந்து முதலடுக்குக் காவல்வரை வெறுங்காலால் நடக்கணுமேன்னு பயம். எப்பவோ படிச்ச ஒரு குறிப்பு நினைவுக்கு வந்துச்சு. 'ஒரு செருப்பை ஒரு இடத்திலும் அதன் ஜோடியை வேற இடத்திலும் விட்டுவைக்கணுமாம்.' செஞ்சுருவோம். செஞ்சோம்.:-)
பாதுகாப்புப் பகுதியைக் கடந்து கோவிலுக்குள் போனால் 'கணகண'வென வாத்தியங்கள் முழங்க, மாலைநேர ஆரத்தி நடந்துக்கிட்டு இருக்கு. கூட்டமான கூட்டம். க்ளோஸ்டு சர்க்யூட் டிவியில் பூஜை தெரியுது. லிங்கத்தையும் ஆவுடையாரையும் எக்கச்சக்கமான பூக்கள் வச்சு அலங்கரிச்சுருக்காங்க. இது முடிஞ்சதும் ஒலி ஒளிக்கு டிக்கெட் தருவாங்களாம்.
காலரி போல் அமைச்சுருந்த கல் இருக்கைகளில் போய் அமர்ந்தோம். மெதுவாக் கூட்டம் வர ஆரம்பிச்சது. கோவில் கோபுரத்தில் உள்ள அடுக்குகளில் வரிசைகட்டி உக்கார்ந்திருந்தன புறாக்கள். அழகான விளக்குகளோடு இடதுபக்கம் உள்ள 18 மாடங்களும் ஜொலிக்குது அதைச் சுற்றிப் பயங்கரக்கூட்டம். சவுண்டு & லைட் ஷோ எந்தமாதிரி அரேஞ்ச்மெண்ட்ன்னு தெரியாம விழிச்சப்ப, 'படக்'ன்னு மாடங்களில் லைட் அவுட்! மணி எட்டு. அங்கிருந்த எல்லோரையும் வெளியே போகச் சொல்லிட்டாங்க. கோபுரத்திலும் இருட்டு.
திடீர்னு சத்தமான ம்யூஸிக்கோடு கோபுரத்தில் ஒரு 'ஓம்' ஆடியன்ஸ் வரவேற்பு. சோமன் செய்யும் அநியாயத்தை, தக்ஷனின் பெண்கள் அந்தப்புரத்தில் விவரிக்கும் சம்பவத்தில் இருந்து ஆரம்பிக்குது சோமனின் கதை! அழுத்தம் திருத்தமான கம்பீரமான குரலில் கதை சொல்றார் (மறைந்த நடிகர்) அம்ரீஷ் புரி. கூடவே இன்னொரு 'கதை'யும் சொன்னார்.
கோவிலில் முன்மண்டபம் நடனக் கலைக்காகவே கட்டப்பட்டதாம். ஒவ்வொரு இரவும் தேவலோக அப்ஸரஸ் ஒருத்தி, இங்கே வந்து சிவனுக்கு முன் நடனம் ஆடுவது வழக்கமாம். ஜல்ஜல் ன்னு சலங்க ஒலியுடன் அற்புதமான நடனமாம். இந்தச் சலங்கை ஒலியை மட்டும் கேட்ட அரசன், என்னதான் நடக்குதுன்னு பார்க்க ஒருநாளிரவு இங்கே வந்து ஒளிஞ்சு இருந்தானாம். நடனமும் சரி, ஆடுன மங்கையும் சரி...சூப்பர். என்ன நடந்துருக்கும்? சரியா ஊகிச்சு இருப்பீங்களே....கரெக்ட். காதலில் விழுந்தான் அரசன்.
அவன் ஒளிஞ்சு நின்னு பார்க்கறதை அவளும் ஒரு நாள் கண்டுபிடிச்சுட்டாள். சின்ன மோதல் அப்புறம் காதல், கலியாணம், குழந்தை, அரண்மனை வாழ்க்கைன்னு ஆயிருது. கல்யாணம், குழந்தைன்னு வந்தா வாழ்க்கையே புரட்டிப்போட்டமாதிரி மாறிப்போகுதே! இவளுக்கும் ஆச்சு.
சில வருசங்களானதும் 'ஹௌஸ் ஒய்ஃபுக்கு வரும் டிப்ரெஷன்' அவளுக்கு வந்துருது. 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேனே.....இப்பெல்லாம் நடனம் ஆட முடியலை..... பழைய வாழ்க்கையை ரொம்ப மிஸ் பண்ணறேனே.... ' கவலையில் உடம்பு கரைய ஆரம்பிச்சது.
ஆசை மனைவி துரும்பா இளைச்சுப் போனதையும், சதா அவள் முகத்தில் கவலையின் ரேகை படிச்சு களை இல்லாமப்போனதையும் கவனிச்ச அரசன், என்ன ஏதுன்னு கேக்கறான். விவரம் தெரிஞ்சதும் , நீ உனக்கு விருப்பமான பழைய வாழ்க்கைக்கே திரும்பிப்போகலாமுன்னு அனுமதி கொடுத்துடறான்.
அப்சரஸும், தினம் இரவு இங்கே வந்து ஆடத்தொடங்கினாள். ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி மீண்டும் இங்கே ஒலிக்கத் தொடங்குச்சு. இவதான் தேவமங்கையாச்சே. அரண்மனையில் இருந்துக்கிட்டே, இரவில்மட்டும் இங்கே வந்து இறைவன் முன் ஆடிட்டுப்போயிருக்கலாமேன்னு (என்னைப்போல) குதர்க்கமாக் கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது. கதைன்னு சொன்னாக் கேட்டுக்கணும். அதுவும் வில்லன் சொல்லும்போது ......... மூச்!
( வில்லன் நடிகர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருக்காங்க. நம்ம அம்ரீஷ் புரிகூட எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்கசீலர். நியூஸிக்கு படப்பிடிப்புக்கு வந்துருந்தார்.
மணாளனே மங்கையின் பாக்கியம்'ன்னு ஒரு பழைய சினிமா பார்த்துருக்கீங்களா? ரெண்டு மாசம் முன்னே கே டி வியில் க்ளாஸிக் மேட்னி ஷோவில் வந்துச்சு.
சவுண்ட் & லைட் ஷோ நல்லாத்தான் இருந்துச்சு. கொடுத்த 20 ரூபாய்க்கு வேல்யூ ஃபார் மணி! வந்து வந்துபோகும் வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் கோபுறப்புறாக்கள் கொயட்டா ஓசைப்படாம உக்கார்ந்துருச்சு. பழகிப்போயிருக்குமே அதுகளுக்கும்.
ஷோ முடிஞ்சவுடன், பளிச்ன்னு கோவில் வளாகம், 18 மாடங்கள் எல்லாம் விளக்குப் போட்டுட்டாங்க.
பப்பனுக்குச் சொல்லி வண்டி கொண்டுவரச் சொன்னோம். மெள்ள நடந்துபோய் முதலடுக்குப் பாதுகாப்புக்கருகில் போகவும் வண்டிவரவும் சரியா இருந்துச்சு. சுக்சாகர் உள்ளே இருக்கும் ஏஸி ரெஸ்ட்டாரண்டில் சப்பாத்தி & வெஜிடபிள் கறியோடு இரவுச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டோம்.
இந்த ரெஸ்டாரண்ட் இல்லாம, இதைத் தொட்டடுத்த கூரைக்கொட்டாயில் மக்கள்ஸ் உக்காந்து சாப்புட்டுக்கிட்டு இருக்காங்க. கார்டன் ரெஸ்ட்டாரண்டாம்! சாப்பாடு பார்க்கவே படுபிரமாதமா இருக்கு. ஏகப்பட்ட அயிட்டங்களோடு 'தாலி மீல்ஸ்'! அடடா.... நாகரீகம் என்ற பெயரில் நல்லதை மிஸ் பண்ணிட்டோமே.....
பயணம் தொடரும்.......................:-)
Thursday, February 11, 2010
வில்லன் சொன்ன கதை (குஜராத் பயணத்தொடர் 20)
Posted by துளசி கோபால் at 2/11/2010 06:02:00 AM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
//( வில்லன் நடிகர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருக்காங்க. நம்ம அம்ரீஷ் புரிகூட எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத ஒழுக்கசீலர்.//
நம்ம ஊர் நம்பியார் சார்,மற்றும் பலர் மாதிரி.
வில்லனுக்கு பயந்து ஹீரோவை, அதான்.. கோபால் அண்ணாவை இரண்டு பதிவுகளின் படங்களில் இருட்டடிப்பு செஞ்சதை கண்டிக்கிறோம் :-))))
வாங்க அமைதிச்சாரல்.
போணி!!!!
கோபாலுக்கு ரசிகர் பட்டாளம் பெருகுதேப்பா!!!!!
இனிமே படம் போட்டுத்தான் ஆகணும்:-))))))
கோபுரப் புறாக்களும், சோம்நாத் கோவிலும் அழகாய் வந்திருக்கு.
அமைதிச்சாரல் sonnathai nanum adarikaren..
ama unga peyar enna amaithisaaral
பயணக் கட்டுரை அருமை.
சோமநாத் கோவில் விளக்கு வெளிச்சத்தில் ஜொலிப்பது ,கொள்ளை அழகு.
நன்றி.
பயணம் நன்றாகவே தொடருகிறது.
புறாக்கள் பள்ளிக்கூடம் நல்லா இருக்கு.
மணாளனே மங்கையின் பாக்கியம் நல்ல படம். அதையும் இந்தக் கதைக் கேட்டுட்டுதான் எடுத்து இருப்பாங்களோ:) கோவில் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.
படங்கள் நல்லா வந்திருக்கு டீச்சர் ;))
ஹை... மீ த ஃபர்ஸ்ட்டா!!!!
இனிமே கத்திப்பழகிக்கணும். :-)))
வாங்க ராமலக்ஷ்மி.
நன்றிப்பா.
வாங்க எல் கே.
நானும் நன்றியை ரிப்பீட்டிக்கறேன்:-)
வாங்க கோமதி அரசு.
இன்னும் பக்கத்துலே போய் எடுத்துருந்தா அழகா இருந்துருக்குமோ என்னவோ?
ஆனாலும் 'நாட் பேட்'னு நினைச்சுக்கிட்டேன்.
வாங்க குமார்.
இட்லியுடன் போராடிக்கிட்டே தொடர்ந்து நீங்க பயணத்துலே கூட வருவதும் மகிழ்ச்சிதான்:-)
வாங்க வல்லி.
காதால் கேட்ட கதையை எடுத்துட்டாக் காப்பிரைட் பிரச்சனை இருக்காது:-)))))
தேவலோகக் கதைகள் ஏராளமா இருக்கும் நாடாச்சே நம்மது!
வாங்க கோபி.
பாடமும் கொஞ்சம் படிக்கணும். ச்சும்மாப் படம் பார்த்துக்கதை சொல் இல்லையாக்கும்:-)
அமைதிச்சாரல்,
நானும் 'கத்தி'ச்சண்டை நல்லாப்போடுவேன்:-)
விளக்கு வெளிச்சத்தில் கோபுரம் அழகு.
வாங்க மாதேவி.
அமானுஷ்ய இருளின் நடுவில் ஒளிரும் விளக்கு அழகுதானே1
Post a Comment