Monday, February 22, 2010

க்ருஷ்ண ம்ருகம் (குஜராத் பயணத்தொடர் 27)

ஸ்வாமிநாராயண் கோவிலில் இதைப் பத்தி விசாரிச்சப்ப....அங்கே ஒன்னும் இல்லைன்னு சொன்னதே ஒரு ஆவலைக் கிளப்பி இருந்துச்சு.வெலவாதார் தேசியப் பூங்கா, பவ்நகரில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தில். நெடுஞ்சாலையில் அம்புக்குறி பார்த்து லெஃப்ட் எடுத்தார் பப்பன். போறோம், போறோம், போய்க்கிட்டே இருக்கோம். கண்ணுக்குத் தெரியும்வரை பொட்டல் காடு. 'இருக்கா, இல்லையா'ன்னு தெரிஞ்சா, 'போகலாமா, வேணாமா'ன்னு முடிவு எடுக்கலாம். பத்துகிலோமீட்டர்வரை உள்ளுக்கு வந்துருக்கோம். ஒன்னும் இல்லை போல இருக்கு. எதுக்கும் அங்கே எதோ போர்டு தெரியுது அதுவரை போயிட்டுத் திரும்பிடலாம்.

கிட்டே போனதும் பளிச்சுன்னு ஒரு கேட்.' ப்ளாக்பக் நேஷனல் பார்க். வெலவாதார்'னு பெயர் போட்ட வெள்ளைக் கட்டடம் ஒன்னு. 'ஃபோர்வீல் ட்ரைவ் வண்டி வேணும். ஜீப்'ன்னு இழுத்தார் அங்கே இருந்த பணியாளர். நம்மகிட்டே நாலுசக்கர வண்டி இருக்குன்னதும் அதுக்கும் ஒரு தொகை வாங்கிக்கிட்டுச் சீட்டு கொடுத்தார். 'கைடு இருந்தால் தேவலை. ஆனா ஹிந்தி பேசத்தெரியணுமு'ன்னு சொன்னதுக்குத் தலையாட்டிக்கிட்டே ஒரு மாதிரி சிரிச்சார். அந்தச் சிரிப்புக்குப் பொருள் அப்புறமாத்தெரிஞ்சது. (ஆளுக்கு 20, காருக்கு 200, கைடுக்கு 50ன்னு ஒரு கணக்கு)

கைடு ஒருத்தர் வந்து உள்ளே இருக்கும் இன்னொரு கேட்டைத் திறந்துவிட்டு வண்டியின் முன்ஸீட்டில் உக்கார்ந்ததும் கிளம்பினோம்.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை காஞ்சபுல் வளர்ந்து நிக்கும் காட்டுவெளி. கொஞ்ச தூரத்தில் நிற்கும் ஒருசில பழைய கட்டடங்கள் (ட்ரெயினிங் செண்டராம்). வழிகாட்டி வாயைத் திறக்காம உக்கார்ந்துருக்கார். பெயரென்னன்னு கேட்டேன். ஹரிஷ். வண்டி போகும் ஓசைதவிர நிசப்தம். நம்ம ஆளே 'மேன் ஆஃப் ஃப்யூ வேர்ட்ஸ்'. அவருக்கே சகிக்கலை.


"எவ்வளவு பெரிய காடு?"

"ம்ம்ம் பெருசுதான்."

"மிருகங்கள் இருக்கா?

இருக்கணும்."

"அதோ அங்கே தெரியுதே ஒன்னு. அது என்ன வகை?"

"காலா ஹிரண்"

"குட்டிபோடும் சீஸன் எது?"

"ம்ம்ம்ம்ம்ம் " (ஒரு தலையாட்டல்)

"ஒன்னையும் காணாம்? இப்படியே வண்டியை திருப்பிடலாமா?"

"ஊஹூம்"

"அட! அங்கே தூரத்துலே பெருசா ஒன்னு இருக்கே...அது என்ன?"

"நீல்கை"

வண்டி நேராப் போய்க்கிட்டே இருக்கு. பப்பனுக்குப் பொறுக்கலை.

"என்ன கைடு நீ? ஒன்னுமே விளக்கம் சொல்லாம வர்றே? "

"என்ன இருக்கு சொல்ல. ரெண்டு மிருகம் இருக்கு. சொல்லியாச்சு அவ்ளோதான்."

"ஏம்ப்பா...எவ்ளோநாளா கைடு வேலை பார்க்கிறே? கைடுன்னா மளமளன்னு விவரங்களை அள்ளிவீச வேணாமோ?" (இதுநான்)

"நேத்துதான் வேலைக்கு வந்துருக்கேன்."

"போச்சுரா.... நேத்து எத்தனை பேரு வந்துருந்தாங்க? என்னன்னு சொல்லி விளக்குனே?"

"யாரும் வரலை"

"போச்சுரா.... அப்ப நாம்தான் ஹரீஷின் முதல் பயணிகள்!!"

"அட ராமா!! சரி. சொல்றேன் கேட்டுக்கோ. இது இந்தியாவில் விசேஷமா இருக்கும் ப்ளாக் பக்ன்னு சொல்லும் ஆண்ட்டிலோப் மான்களுக்கான சரணாலயம். பழங்காலத்துலே இதோட தோலைத்தான் ஆசிரமத்துலே இருந்து கல்வி பயிலும் ப்ரம்மச்சாரிகள் தோளில் போட்டுக்குவாங்களாம். இதுக்கு க்ருஷ்ணம்ருகம் னு பெயர் இருக்கு. இதன் தோலை க்ருஷ்ணாஜினம்னு சொல்வாங்க. "

மகாபாரதத்தில்கூட ஒரு இடத்தில் அர்ஜுனன், வில்லால் யந்திரத்தை அறுத்துத்தள்ளி வெற்றியடைஞ்சதும் த்ரௌபதி வந்து அர்ஜுனன் கழுத்தில் மாலையைப் போடறாள். அப்ப அவளுக்கு இவன் அர்ஜுனன் என்றே தெரியாது. போட்டிக்கு வந்த ஒரு இளைஞன் என்ற அளவில்தான் அறியப்பட்டவன். க்ஷத்ரியர்கள் மட்டுமே கலந்துக்க வேண்டிய சுயம்வரத்தில் பேர் தெரியாத ஒருத்தன் வந்ததுமில்லாம, ஜெயிச்சு அந்தப் பொண்ணையும் கட்டிக்கிட்டான்னதும் மற்ற ராஜகுமாரர்கள் எல்லாம் சேர்ந்து கலவரம் செய்யறாங்க. அப்போ அர்ஜுனன் போர்த்தியிருந்த க்ருஷ்ணாஜினத்தைப் பிடிச்சுக்கிட்டுக் கொஞ்சம்கூட பயமில்லாமல் த்ரௌபதி அவன்கூடவே போனாள். (நன்றி. வியாசர் விருந்து நூலில் இருந்து)
3408 ஹெக்டேர் இடத்தை வளைச்சுப்போட்டு இந்த தேசியப்பூங்காவை உருவாக்கி இருக்காங்க. இந்த இடத்துலே அவைகளுக்குத் தேவையான ஒருவகைப்புல் ரொம்பவும் அடர்த்தியா வளர்ந்து காடா நிக்குது. பரப்பளவை கிலோமீட்டரில் சொன்னால் 34.08 சதுரகிலோமீட்டர்கள். பூங்காவைத் தொடங்குன வருசம் 1976.
ஆம்பளைங்க எல்லாம் நெளிநெளியான நீளக் கொம்புவச்சுக்கிட்டுக் கருப்பா இருப்பாங்க. gogo glass போட்ட மாதிரி கண்ணுக்கு வட்டக் கண்ணாடி! (பொதுவா ஆம்புளைகளுக்கு இருக்கும் கலர் ப்ளைண்ட்னஸ் உங்களுக்குமா? அச்சச்சோ!!!)பெரிய ராஜா மாதிரிதான் எப்பவும் குறைஞ்சது 20 அந்தப்புர அழகிகளோட சுத்துவானுங்க. பொண்ணுங்க கொம்பில்லாத தலையுடன் இளம் ப்ரவுன் நிறத்தில் இருக்கும். சின்னக்குட்டிகள் பார்க்கவே ரொம்ப அழகு. துள்ளித்துள்ளிக் குதிச்சு ஓடுவது பார்க்கவே ப்ரமாதமா இருக்கும். சிலதுகள் ஆறேழு அடி உயரம்கூட துள்ளிப்பாயும்.
யாரும் வேட்டையாடாம விட்டா சராசரியா ஒரு பதினைஞ்சு வருசம் உயிர்வாழும் இந்த ஜீவன்கள். இதை 'காலியார்'னு சொல்றாங்க இங்கே.
நீல்கைன்னு சொல்றதுக்கு ஏத்தமாதிரி இந்த இனம் நீலநிறத்தோலுடந்தான் இருக்கு. பெரிய உருவம். நின்னால் ஒரு ஒன்னரை மீட்டர் உயரம். இதுவும் ஆண்டிலோப் இனம்தான். பெரிய தலையில் சின்னக் கொம்புகள். ஆம்புளைக்குத்தான் இந்த நீலக் கலர். அதுவும் வயசான ஆண்களுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவ். . பெண்கள் எப்பவுமே இள ப்ரவுண்தான். மாநிறம்! களையான முகம். கொம்பில்லை.
வலையிலேயும், சுற்றுலாப்பயணிகள் கையேட்டிலேயும் படிச்சு வச்சுக்கிட்ட விஷயத்தை ஹிந்தியில் எடுத்துவிட்டேன். தலையைத்தலையை ஆட்டிக் கேட்டுக்கிட்டே வந்த ஹரீஷுக்கு ஹிந்தி அவ்வளவாப் புரியாதுன்ற விஷயம் கடைசியில்தான் நமக்குத் தெரியவந்துச்சு:-)))))
பசங்க தண்ணீர் குடிக்கும் இடங்களா, சின்ன ஆழமில்லா குளங்கள் வெட்டித் தண்ணீர் நிரப்பி வச்சுருக்காங்க. தினமும் மாலையில் டாங்கர்லே தண்ணி வந்துருமாம். வண்டியைவிட்டு இறங்கிப் பார்க்க ஒரு இடத்தில் 'லுக் அவுட்' கட்டி இருக்கு. சதுரமான பாதையிலே திரும்பி புறப்பட்ட இடத்துக்கு வரும்போது கொஞ்சம் நிறைய கூட்டத்தை அங்கே இங்கேன்னு பார்த்தோம்.

சரணாலயத்தைவிட்டுக் கிளம்பும் சமயம், 'கைடுக்கு டிப்ஸ் கொடுங்க'ன்னு சொன்னார் பணியாளர். அது நியாயமா எனக்கில்லே கொடுக்கணும்?
'வாயைத் திறக்காம வந்ததுக்கு டிப்ஸ் எதுக்கு?'ன்னார் பப்பன்.

பத்துகிலோமீட்டர் பயணிச்சு மீண்டும் நெடுஞ்சாலையில் வந்து சேர்ந்தோம். பகல் சாப்பாட்டு நேரம். நல்ல இடம் ஒன்னு இருக்கு ஆனா முக்கால்மணியாகும் போய்ச்சேரன்னார் பப்பன். இந்தப்பக்கம் நெடுஞ்சாலைகளில் அங்கங்கே ரெஸ்ட்டாரண்டு, ஹொட்டேல்ன்னு சாப்பிடும் இடங்கள் அமைச்சுருக்காங்க. விலையும் அதிகமில்லை. சுத்தமாவும் இருக்கு. பரவாயில்லை. நம்ம பக்கங்களில் ஏன் இதைப்போல இல்லைன்னு மனக்குறையா இருந்துச்சு.

தொலேரா என்ற சின்ன ஊர். ஹொட்டேல் க்ருஷ்ணாவிலே ஏர்கண்டிஷன் ரூமைத் திறந்துவிட்டார் உரிமையாளர். நாங்க கொஞ்சம்கூட எதிர்பார்க்காத அள்வில் நல்ல சுத்தமான இடம். ஜன்னலுக்குப் பின்னால் பெரிய ஏரி. குஜராத்தி தாலி மீல்ஸ் கிடைச்சது. சிம்பிளாவும் நல்லாவும் இருந்துச்சு.

வெலவாதார் படங்கள் இங்கே ஆல்பத்தில்.


பயணம் தொடரும்..............:-)))))

23 comments:

Anonymous said...

பரவாயில்லையே. டூரிஸ்ட் கைடா போனா வேலை செய்யாம சம்பாதிக்கலாம் போலிருக்கு. :)
க்ருஷ்ணம்ருகம் கதை எனக்கு புதுசு.

said...

மிருகமெல்லாம் நல்லா இருக்கு. இதென்ன மான் வகையா. ப்ளாக் பக்!! அப்போ மான்தான்:)
ஏம்பா சாப்பாட்டைக் காமிச்சு வறுத்தெடுக்கறீங்க:)

வியாசர் விருந்தை இன்னோருக்கா படிக்கணும்.
வெலாவதார் படங்களைப் பார்க்கப் போறேன்.

said...

கைடு :))))))

அதென்ன டீச்சர் சோறை விட வெங்காயம் அதிகமா இருக்கே! :)

இந்தியாவுல தமிழகத்தை தவிர மத்த இடமெல்லாம் நல்லா தான் இருக்கும்னு தோணுது :(

said...

வாங்க சின்ன அம்மிணி.

ஒவ்வொரு இடுகையிலும் எதாவது ஒரு புதுத்தகவல் கொடுக்கணுமுன்னு ஆவல்.

மொழிதெரியாமல் வழிகாட்டியா இருக்கலாமாம்:-))))

said...

வாங்க வல்லி.

மான் வகைதான். அதான் வேகமாக் காலி ஆகிருது:(

said...

வாங்க நான் ஆதவன்.

இந்தப்பக்கமெல்லாம் வெங்காயம் நிறைய உண்டு.

நம்ம பக்கம்தான் ஒரே ஒன்னு. அவரும் போயிட்டார்.

said...

மொழி என்னங்க.. வழியே தெரியாமகூட வழிகாட்டியா இருக்கலாம். இப்பக்கூட நீங்கதானே அங்கே என்னா.. இங்கே என்னான்னு விசாரிச்சிருக்கீங்க :-))))

சல்'மான்' கான் ஒரு ப்ளாக்பக் ஐ வேட்டையாடி படாத பாடு பட்டுட்டார்.இங்கேயாவது அதுங்க நல்லா இருக்குதுங்களே!!!

said...

ஒரு சுற்றுலா சென்று வந்த உணர்வை தந்தது உங்களின் பதிவு . அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

said...

nalla vilakam

said...

அப்ப அவருக்கு ஹிந்தி தெரியாதாமா.. என்னத்துக்கு தலையாட்டினாராமா.. மரியாதை நிமித்தமா இருக்குமோ? ;)

said...

\\போச்சுரா.... அப்ப நாம்தான் ஹரீஷின் முதல் பயணிகள்!!"\\

;-))

எல்லா இடத்திலும் ஒரு ஆப்பு கிடைச்சிக்கிட்டே இருக்கும் போல.

said...

It looks like you gave the guide a tour and also trained him. :p

said...

“மான் கண்டேன் மான் கண்டேன் மானே தான் நான் கண்டேன்”

அருமை:)!

said...

நீலநிறத்தோலுடன் பெரிய உருவம். புதிதாக இருக்கிறது.

பிறவுண் நிறப் பொண்ணுங்க அழகாக இருக்கிறார்கள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

மானுக்கு ஒரு நீதி, மனிதனுக்கு ஒரு நீதின்னு இல்லாம சல்மான் தண்டனை(??) அடைஞ்சாரா இல்லையா?

said...

வாங்க கவிஞர் சங்கர்.

நல்லவேளை ஆராயப் புகாமல் அனுபவிச்சுப் படிக்கிறீங்களே! அதுக்கே ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிக்கறேன்.

said...

வாங்க எல் கே.

நன்றி.

said...

வாங்க கயலு.

ஒரு குத்துமதிப்பா...இந்த மத்ராஸி என்னவோ சொல்லுதேன்னு தலை ஆட்டிவச்சார்:-)

said...

வாங்க கோபி.

பதிவெழுத மேட்டர் கிடைச்சுக்கிட்டே இருக்குன்னு நினைச்சுக்க வேணும்:-)

said...

வாங்க சந்தியா.

நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லை! அதான் கைடுக்கு கைடு:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கவுஜ கவுஜ.....

மான் கண்ட கண்களுக்கு கண்டமானம் கவிதைப் பரிசா?

said...

வாங்க மாதேவி.

நீலத் தாத்தா அவர்!

said...

//தண்டனை(??) அடைஞ்சாரா இல்லையா?//

கேள்விக்குறிதான் :-))