Tuesday, February 23, 2010

காலயந்திரத்தில் பின்னோக்கி.....(குஜராத் பயணத்தொடர் 28)

முக்கால்மணி நேரத்துலே 4000 வருசங்களுக்குப் பின்னே போனது ஒரு அதிசயம்தான். ஏசு கிறிஸ்துகூட அப்போப் பிறக்கலைன்னா பாருங்க.
இந்த இடத்தைக் கண்டுபிடிச்சதே 1954 வருசம்தான். பண்டைய நாகரிகத்தின் அடையாளமா இருந்த ஹரப்பா மொஹஞ்ஜோதாரா பகுதி, இந்திய சுதந்திரம் அடைஞ்சபிறகு பாகிஸ்தானுக்குச் சொந்தமாயிருச்சு. அதே நாகரிகம் அங்கே மட்டுமில்லாம இன்னும் தென்பகுதியில் பரவி இருக்குமோன்னு ஒரு சந்தேகம். நதிக்கரையில் பிறந்ததுதானே நாகரிகம்ன்னு தொல்பொருள் இலாகாவின் வல்லுநர்கள் ஆராய்ச்சி செஞ்சு சபர்மதி ஆற்றுப் ப்ள்ளத்தாக்குப் பகுதிகளில் தோண்டிப்பார்த்துருக்காங்க. அடையாளங்கள் தட்டுப்பட்டு இருக்கு. விஞ்ஞானம் அவ்வளவா வளர்ச்சி அடையாத சமயத்தில் எப்படித்தான் பூமிக்கடியில் இருக்குன்னு தெரிஞ்சதோ!!!!
சௌராஷ்ட்ரா, கட்ச் பகுதிகளில் தேடுனப்பக் கிட்டதட்ட அம்பது இடங்களில் சிந்துசமவெளி நாகரிகம் பரவி இருந்தது தெரியவந்துருக்கு. அன்ரைய நாகரிகத்தின்படி சமுத்திரத்தைக் கடவுளாக் கும்பிட்டு இருக்காங்க. லோதல் என்ற இடத்தில் இருக்கும் வானுவதி சிக்கோடாரி மாதா கோவில் கடல்தேவதைக்கானதாம். இங்கே கடல்வழிக்கான பழங்காலத் துறைமுகம் ஒன்னு இருந்துருக்கத்தான் வேணும். 1850 வரை அங்கே படகுப்போக்குவரத்து நடந்த அடையாளங்கள் இருக்காம். பிப்ரவரி மாசம் 1955 லே தோண்ட ஆரம்பிச்சு மே மாசம் 1960 வரை வேலை நடந்துருக்கு.
சிந்துசமவெளி நாகரிகம் 2450 வருசங்கள் ஏசு பிறப்புக்கு முன் ஆரம்பிச்சது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமா இடம் பெயர்ந்து இங்கே லோதல் வந்ததுக்கு அநேகமாக 1150 வருசங்களாகி இருக்குமாம். இங்கே கிடைச்ச சுட்ட மண் பாத்திரங்களை வச்சு வருசம் கண்டுபிடிச்சு இருக்காங்க. படகு வந்து நிக்க, சாமான்கள் இறக்கன்னு நாலு ஒலிம்பிக் ஸ்விம்மிங் பூல் சைஸுக்கு மேலே இருக்கும் ஒரு பிரமாண்டமான இடத்தை, சரியாச் சொன்னால் 214 மீட்டர் நீளம் செங்கல் பதிச்சுக்கட்டி அதில் ஆத்துத் தண்ணீர் வந்து நிரம்பும் வகையில் கால்வாய் எல்லாம் வெட்டிவிட்டுருக்காங்க. செங்கல்கள் ஒவ்வொன்னும் அருமையா காத்திரமா பெரிய அளவில் இருக்கு. கோணல் மாணல் இல்லாம கட்டிடங்கள் சுவர்கள் எல்லாம் நூல் பிடிச்ச மாதிரி. ஆஹா.... ஒருவேளை உண்மையாவே நூல் கட்டி அளந்து இருப்பாங்களோ என்னவோ!!!
சாமான்கள் சேகரிச்சு வைக்கத் தனி இடம், கடைவீதிகள், கழிவு நீர் போகும் வழி, நல்ல தண்ணீர் வீட்டுக்குள் வரும்படியான அமைப்பு, கிணறு, பெரிய அடுப்படி, சுற்றுச்சுவர்கள், தானியங்களை அரைச்செடுக்கும் கல் இப்படி ஒவ்வொன்னும் பிரமிப்பா இருக்கு. சின்னதா ஒரு பைப்லைன் கூட டெர்ரகோட்டாவில் செஞ்சு புதைச்சு இருக்காங்க. சாக்கடைக்குழாய்??
இன்னொரு பக்கம் இறந்தவர்களைப் புதைக்கும் புதைகுழிகளும் சமாதிகளும் இருக்கு. ஒரு ஜோடியை ஒன்னாவே புதைச்சுருந்துருக்காங்க. அந்தக் காலத்து கோபாலும் துளசியாவும் இருக்கலாம். இந்த எலும்புக்கூடுகள் அங்கே தொல்பொருள் இலாகாவின் அருங்காட்சியகத்தில் இருக்கு. அனுமதிச் சீட்டு அஞ்சே ரூபாய்தான். (நம்ம பதிவுகளில் ஏற்கெனவே சில இடங்களில் குறிப்பிட்டதுதான் இது, இந்தியாவில் மத்திய அரசாங்க தொல்பொருள் இலாகா சம்பந்தமுள்ள எல்லா இடங்களிலும் அஞ்சு ரூபாய்தான் வசூலிக்கறாங்க).

அப்ப எப்படி இருந்துருக்குமுன்னு ஒரு ஓவியம் வரைஞ்சு வச்சுருக்காங்க இங்கே. அட! ரெண்டு யானைகூட இருந்துருக்கு!! அருங்காட்சியகத்தினுள்ளே படம் எடுக்கத்தடா ன்னு நாம் நாலைஞ்சு படங்கள் எடுத்தபிறகுதான் ஒருத்தர் வந்து சொன்னார். அச்சச்சோ.......

யானைத்தந்தம், தங்கம், செம்பு எல்லாம் உபயோகத்துக்கு வந்துருக்கு அப்பவே. நகைநட்டு, மீன்பிடிக்கும் கொக்கி, வேலைச்செய்யப் பயனாகும் கருவிகள் இப்படி பலதும் அங்கே காட்சிக்கு இருக்கு. சுடுமண்ணில் செஞ்ச பூச்சாடிகள், சின்னச்சின்னத் துளை உள்ள ஜாடிகள் இருக்கு. அந்தக் கால வடிகட்டி! சோறு ஆக்கிட்டு இதுக்குள்ளே ஊத்திட்டாக் கஞ்சி எல்லாம் வடிஞ்சுருக்குமோ?
டெர்ரகோட்டா பாத்திரங்களில் அழகான வேலைப்பாடுகள். நாய், மாடுன்னு மிருகங்கள், குழந்தைகள் விளையாட பொம்மைகள், சின்னசின்ன சக்கரங்களோடு வண்டிகள். வீட்டுச்சாமான்கள்ன்னு நாகரிகம் உச்சத்தில் இருந்துருக்கு. படம்புடிச்சு உங்களுக்குக் காட்டமுடியலையேன்னு மனசு நொந்து இருந்த சமயம், அங்கே விற்பனைக்கு இருந்த புத்தகங்கள் பார்வையில் பட்டுச்சு. வெறும் முப்பதே ரூபாய்க்கு படங்கள் நிறைஞ்ச ஒன்னை தொல்பொருள் இலாகாவே வெளியிடு இருக்கு. இங்கே ஆராய்ச்சிக்குழுவுக்குத் தலையா இருந்த எஸ் ஏ. ராவ் எழுதுனது. ஒன்னு வாங்கிக்கிட்டேன். இதுக்கு ஒரு 10 சதம் கழிவும் கிடைச்சது!

இதைப் படிக்கப் படிக்க ஏற்பட்ட வியப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எப்படிங்க பழையகால மனிதர்கள் இவ்வளவு சிந்திச்சுச் சிறப்பா வாழ்க்கை நடத்தி இருக்காங்க!!!

ஊருக்குப் பொதுவான இடத்தை கபளீகரம் செஞ்சுக்கும் புத்தி அறவே இல்லை! (ஏரிகளையும், பொது இடங்களையும் ஆக்ரமிச்சு அதை ப்ளாட் போட்டு வித்துப் பணம்பார்க்கும் உயர்ந்த பண்புகள் எல்லாம் எப்போ வந்து சேர்ந்துச்சுன்னு தெரியலையே.....)

படகுலே கொண்டுவந்த பொருட்களைச் சேதப்படுத்தாமல் பாதுகாத்து வைக்க அருமையான ஒரு அமைப்பு. வரிசைவரிசையான தெருக்கள், அவைகளுக்கான கழிவு நீர் வாய்க்காலை இணைச்சு அழுக்கை எல்லாம் கடலில் கலக்கும்படியான ஏற்பாடு.
செமி ப்ரஷ்யஸ் ஸ்டோன்னு சொல்றாங்க பாருங்க, அதுகளையும் தோண்டி எடுத்துருக்காங்க. பாசிமணிகளுக்கான ஒரு தொழிற்சாலையே இருந்துருக்காம்!

ஜோடிச்சமாதிகூட யோசிச்சுப் பார்த்தால்..... விவகாரம்தான் போல! ஆணும் பொண்ணுமாய் ஒரே சமயம் ' மேலே போய்ச்சேர்ந்திருப்பாங்களா? இல்லே யாராவது ஒருத்தர் போனதும் குழிச்சு மூடுன இடத்துலேயே பின்னாலே போனவங்களைக் கொண்டுபோய் வச்சுருப்பாங்களா? இல்லே இன்னொரு 'சதி'யாக இவன் போனதும் அவளையும் போட்டுத்தள்ளிப் புதைச்சு இருப்பாங்களா? ஒருவேளை ராஜஸ்தான் பாணியில் தீயில் இறக்கிவிடுவதைப்போல இவளைத்தானே குழியில் இறங்கச்சொல்லி மண்ணைப் போட்டுருப்பாங்களா? இல்லை....இவள் போன துக்கம் தாங்காமல் அவன் ஹார்ட் அட்டாக்கில் போயிட்டானோ?

இங்கே வந்தவுடன் முதலில் இந்தக் காட்சியகம் போயிருக்கணும். நாந்தான் இடும்பியாச்சே! எனக்கு வேற வழின்னுட்டு தோண்டிவச்ச இடங்களைப் பார்க்கப்போனோம். நீள நீளச் சுவர்கள் செங்கற்கள்ன்னு அதெல்லாம் என்னன்னே முதலில் புரியலை. தொட்டி கட்டிவச்சமாதிரிதான் பலதும். பல இடங்களில் மண்மேடுகள் நிக்குது. அதுக்கடியிலும் கட்டிடம் இருக்கும் என்பதுகூட முதலில் புரியலை. காட்சியகம் போனபின்புதான் 'இப்படி இப்படி இருந்துருக்குமுன்னு' வரைஞ்சுவச்சதைப் பார்த்ததும்...அட! அப்படியா!!!! ன்னு இருக்கு.

இந்த நகரம் இருந்த காலக்கட்டத்துலே மூணு முறை வெள்ளம் வந்து செங்கல்கட்டிடங்கள் இடிஞ்சு விழுந்து, மீண்டும் நகரைக் கட்டும்போது நிலத்தைக் கொஞ்சம் உயர்த்திக் கட்டுன அடையாளங்கள் இருக்காம். acropolis ன்னு குறிப்பிட்டு இருக்காங்க.
வணிக விஷயங்களுக்கான முத்திரைகள் பலவகையா செஞ்சுருக்காங்க. யூனிகார்ன்னு சொல்லும் ஒற்றைக்கொம்புக் குதிரை படம்கூட இதுலே இருக்கு. அந்தக் கணக்கில் பார்த்தால் ஒருவேளை நெஜமாவே அப்போ இந்தவகைக் குதிரை இருந்துருக்குமோ? கண்ணுலே பார்த்தவைகளைத்தானே பொம்மைகளாச் செஞ்சுருக்காங்க......இல்லே கற்பனை மிருகம்தானா......

இந்த இடத்தைப் பாதுகாத்துச் சுற்றுச்சுவர் எழுப்ப இப்பத்தான், இப்போதைய செங்கற்கள் வந்து இறங்கி இருக்கு. அதுக்குள்ளே நம்ம மக்கள் ஆட்டையைப் போடாம இருந்துருப்பாங்களா?? வெறும் அம்பதுவருசம் தானே ஆகி இருக்கு. இவ்வளவு சீக்கிரத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப அரசு யந்திரம் முடிவு செஞ்சதே ஆச்சரியமான விஷயம்தான்! உடனே....ஆஹான்னு மகிழவேணாம். வந்த கல்லை வச்சுக் கட்ட இன்னும் அம்பதுவருசம்(கூட) ஆகலாம்.

வாங்கிய புத்தகத்துலே இருந்த படங்கள் சிலவற்றை ஸ்கேன் செஞ்சு போட்டுருக்கேன். மற்றபடி வழக்கம்போல் ஃபோட்டோ ஆல்பம் பார்த்துக்குங்க.

கொசுறுத்தகவல்: 'ஆயிரத்தில் ஒருவன் செட் ' இங்கேதான் போட்டாங்கன்னு நம்ம பதிவர் ஒருவர் எழுதுனதைப் படிச்ச ஞாபகம். என்னங்க எல்.கே... இம்முறையாவது தகவல் சரியாச் சொன்னேனா?


பயணம் தொடரும்..................:-)

22 comments:

said...

என்ன டீச்சர் தொல்பொருள் ஆராய்ச்சில இறங்கிட்டீங்க போல இருக்கு? படங்கள் எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு.

***வாங்கிய புத்தகத்துலே இருந்த படங்கள் சிலவற்றை ஸ்கேன் செஞ்சு போட்டுருக்கேன்.***

நல்ல quality ஸ்கேனர்தான்! :-)

said...

பாடத்துல படிச்சது எல்லாம்...ம்ம்ம்..ஹோராம் படத்தின் தொடக்கம் கூட இங்க இருந்து தான்னு நினைக்கிறேன்.

said...

பிரம்மிப்பு டீச்சர்!

உண்மையிலேயே பெருமை பட வேண்டிய விசயம் தான்.

//
கொசுறுத்தகவல்: 'ஆயிரத்தில் ஒருவன் செட் ' இங்கேதான் போட்டாங்கன்னு நம்ம பதிவர் ஒருவர் எழுதுனதைப் படிச்ச ஞாபகம். //

ஹி ஹி...அடியேன் மட்டும் தான்னு நினைக்கிறேன்..

said...

பொண்ணுமாய் ஒரே சமயம் ' மேலே போய்ச்சேர்ந்திருப்பாங்களா? இல்லே யாராவது ஒருத்தர் போனதும் குழிச்சு மூடுன இடத்துலேயே பின்னாலே போனவங்களைக் கொண்டுபோய் வச்சுருப்பாங்களா? இல்லே இன்னொரு 'சதி'யாக இவன் போனதும் அவளையும் போட்டுத்தள்ளிப் புதைச்சு இருப்பாங்களா? ஒருவேளை ராஜஸ்தான் பாணியில் தீயில் இறக்கிவிடுவதைப்போல இவளைத்தானே குழியில் இறங்கச்சொல்லி மண்ணைப் போட்டுருப்பாங்களா? இல்லை....இவள் போன துக்கம் தாங்காமல் அவன் ஹார்ட் அட்டாக்கில் போயிட்டானோ?// super brain work.:) will come back.

said...

பிரமிப்பா இருக்கு.படங்கள் நிறைய பார்க்கக் கொடுத்ததற்கு நன்றி.

said...

இப்போ நீங்க history டீச்சர் ஆ? :-)
நான் கயா போயிருந்தப்போ nalandha university யோட மிச்ச மீதி கட்டிடங்களைப் பார்த்தேன்
அந்த காலத்துலேயே bath tub , சோப்பு வைக்கும் கேஸ் எல்லாம் கட்டி இருந்தாங்க.. பார்க்க ரொம்ப அழகா இருந்தது.
ஆனா பராமரிப்பு இல்ல.. :-(
Tour Coverage is excellent..

said...

துளைகள் உள்ள ஜாடி..மெழுகுவர்த்தி ஏத்தி வெச்சி அதை இந்த ஜாடியால் மூடிவெச்சா எப்படி இருக்கும்!!! கேண்டில் லைட் டின்னர் களை கட்டுமே :-))

said...

வாங்க வருண்.

தொல்பொருள் ஆராய்ச்சிதாம்ப்பா உண்மையில் சரித்திரம்!!!

ஸ்கேனர், நியூஸியில் இருந்து வாங்கி வந்ததாக்கும்.அதான் பளிச்:-)

said...

வாங்க கோபி.

சரித்திரத்தைத் தோண்டி எடுக்கணுமாம். அதான்:-)

said...

வாங்க நான் ஆதவன்.

ஆஹா..... நீங்களா 'அந்த'ப் பதிவர்!

பேஷ் பேஷ்

said...

வாங்க வல்லி.

எதையாவது பார்த்தமா.... போய்க்கிட்டே இருந்தமான்னு இல்லையேப்பா.......... இந்தக் குரங்குமனம் போடும் ஆட்டம்..... மாளலை:(

said...

வாங்க மாதேவி.

ஆமாம்ப்பா. நம்மைவிட ரொம்ப முன்னேறிய வாழ்க்கைப்பா அப்ப அவுங்களோடது. என்ன ஒன்னு....... வலையும் இணையமும்தான் இல்லை!

said...

வாங்க பத்மஜா.

இப்பன்னு இல்லைப்பா..எப்பவுமே நான் ஹிஸ்டரி டீச்சர்தான். நம்ம வகுப்பு சரித்திர வகுப்புதான்.

ஒவ்வொன்னையும் உக்காந்து யோசிச்சுத்தான் கட்டி இருக்காங்க!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஒருமுறை நானும் என் ஹாங்காங் தோழியுமா ஒரு பழம்பொருள் விற்கும் கடைக்குப் போனோம்.(ஆண்ட்டீக் கடை)

அங்கே இருந்த ஒரு சிம்னி விளக்கை(இதை முட்டை விளக்குன்னும் சொல்வாங்க)பார்த்துட்டு, தோழி சொன்னது 'இதை வாங்கிக்கலாம். டின்னர் ரொமாண்டீக்கா இருக்கும்'

'அடிப்பாவி. இந்தக் கணக்குலே பார்த்தால் எங்கநாட்டு ஏழைகள் வீட்டுலே தினம்தினம் ரொமாண்டிக் டின்னர்தான்'னு சொன்னேன்.

ஆனா இது ரொம்பச் சின்னத்துளைகள். கேண்டில் வெளிச்சம் அவ்வளவா வராது. இதுவும் நல்லதுதான். முக்காலரைக்கால் இருட்டுலே சாப்பாட்டுலே பூச்சி பொட்டு விழுந்தாலும் தெரியாது:-))))

said...

தொடரை விடுபட்ட இடத்தில் இருந்து படித்தேன். மிக அருமை.லோதலின் படங்கள் நன்று.
ஜோடியாக செத்துப் போனவர்கள் இருவரும், காதல் ஜோடிகள். தற்கொலை செய்து கொண்டதால். புதைக்கும் போது ஒன்னா புதைச்சிட்டாங்க. நேத்துதான் எங்கிட்ட வந்து சொன்னாங்க. அவங்க கதைக்கு சசிக்குமார் ரைட்ஸ் வாங்கியுள்ளார். நன்றி டீச்சர்.

said...

//இந்தியாவில் மத்திய அரசாங்க தொல்பொருள் இலாகா சம்பந்தமுள்ள எல்லா இடங்களிலும் அஞ்சு ரூபாய்தான் வசூலிக்கறாங்க//

தாஜ்மகால் தவிர எல்லா இடங்களுக்கும் ஐந்து ரூபாய் தான்.(எங்கயோ படிச்சது) தனிதனியா அடிச்சா செலவு அதிகம் பாருங்க எப்படியெல்லாம் அரசுக்கு காசு மிச்சப்படுத்துறாங்க இந்த தொல்பொருள் துறையினர்.

//யூனிகார்ன்னு சொல்லும் ஒற்றைக்கொம்புக் குதிரை படம்கூட இதுலே இருக்கு.// அது குதிரை அல்ல மாடு\எருது.

unicorn என்று சொன்னால் பொதுவாக ஒற்றைக்கொம்பு குதிரையை தான் நினைப்போம். சரியான பொருள் ஒற்றைக்கொம்பு மிருகம். உங்களுக்கு தெரியாததா?

said...

முக்கால்மணி நேரத்துலே 4000 வருசங்களுக்குப் பின்னே போனது ஒரு அதிசயம்தான்

.......... போனதும் இல்லாமல், எங்களையும் பதிவுலகம் மூலமாக கூட்டிக்கிட்டு போனதுக்கு நன்றி.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

எதுக்குப்பா இப்படி ட்ராஜிடி நியூஸெல்லாம் உங்ககிட்டே வந்து சொல்றாங்க?

said...

வாங்க குறும்பன்.

//தாஜ்மகால் தவிர எல்லா இடங்களுக்கும் ஐந்து ரூபாய் தான்.(எங்கயோ படிச்சது) //

இங்கே நம்ம துளசிதளத்தில்தான் படிச்சீங்க!

ஒற்றைக்கொம்பு என்னவோ நீங்கள் சொன்னது சரி. ஆனாலும் அதென்னவோ யூனிகார்ன்னு சொன்னதும் குதிரை வந்துருதேப்பா மனசுலே! எல்லாம் இந்த 'மை லிட்டில் Pony' பார்த்ததால் இருக்குமோ!

said...

வாங்க சித்ரா.

கூட்டிக்கிட்டுப்போனாலும் முரண்டு பிடிக்காமல் கூடவே வர்றதுக்கு நானும் நன்றி சொல்லிக்கறேன்ப்பா.

said...

///இதைப் படிக்கப் படிக்க ஏற்பட்ட வியப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.///

உங்க கட்டுரையை படிக்க படிக்க ஆர்வம் டீச்சர்.

said...

வாங்க ஸ்டார்ஜன்.

ஹப்பாடா.... அந்தவரை 'போர்'னு சொல்லாம விட்டீங்களே!!!!