Monday, June 11, 2007

நியூஸிலாந்து பகுதி 68

அடடே........... நல்ல நாடா இருக்கும்போல! பேசாம வந்து இருந்துறலாமா? தாராளமா வாங்களேன்.


இங்கே வந்து குடியேறவும், விதிகள் 2004 லே இருந்து தளர்த்தப்பட்டு இருக்கு. ஆட்சிக்கு லேபர் வந்தது முதல் 'பாயிண்ட் சிஸ்ட்டம்' கொண்டு வரப்பட்டிருக்கு. படிப்பு, அனுபவம், வயசுன்னு பலதுக்கு ஒவ்வொண்ணுக்கும் ஒரு மதிப்பெண் பாயிண்ட்ஸ் கொடுத்துருக்காங்க. அரசாங்கம் நிர்ணயித்த பாயிண்ட்ஸ் உங்களுக்கு இருந்தால் உங்க நாட்டிலே இருக்கும் நியூஸி ஹை கமிஷனுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். இப்ப எல்லா விவரங்களும் இணையத்துலேயே இருக்கு. உங்க விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். இங்கே வந்தபிறகு வேலை தேடிக்க வேண்டியது உங்க சமர்த்து. ஆனா முதல் ரெண்டு வருஷத்துக்கு உதவித் தொகை கிடைக்காது.



இதெல்லாம் சமீபத்துலே மாற்றி அமைச்சது. இதுக்கு முன்னே சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நிறையப்பேர் ஆதாயம் பார்த்துட்டாங்க. அரசாங்கம் இப்பத்தான் கொஞ்சம் முழிச்சுக்கிட்டது. இன்னும் உலக அரங்கில் நியூஸி 'naive'ன்னுதான் பேரெடுத்திருக்கு. நாங்க வந்த காலக்கட்டத்தில் இங்கே வேலை கிடைச்சால் மட்டுமே குடியேற முடியுமுன்னு இருந்துச்சு. அப்ப வந்தவங்க எல்லாம் வந்த மறுநாளில் இருந்து வேலைக்குப் போனாங்க.அரசாங்கத்துக்கும் சுமையா இல்லாம வரி செலுத்தும் மக்களாவே இருந்தது அந்தக்காலம்......



வரின்னு சொன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. இங்கே எல்லா இடங்களிலும் 'பேய்' வரி அந்தந்த நிர்வாகத்தினராலேயே வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்குப் போயிரும். வரி ஏய்ப்பு என்றதுக்கு இடம் இல்லை. அதென்ன பேய் வரி? நாந்தான் இப்படிச் சொல்றேன். இது 'Pay As You Earn' என்ற வகை. PAYE.



சரியான பேய்தான்:-) வரியை எடுத்துக்கிட்டுத்தான் மிச்சச் சம்பளப்பணம் நம்ம கைக்கு வரும். அதைச் செலவு செய்யும் சமயம் GST ன்னு இன்னும் ஒரு 12.5% பிடுங்கிருவாங்க. பல்லைக் கடிச்சுக்கிட்டு நாலு காசு மிச்சம்பண்ணி வங்கியில் சேமிச்சால்................ அதுக்குக் கிடைக்கும் வட்டியில் 20% வரியாப் போயிரும். welfare state என்ற பெயர் இருக்கறதால் உதவித் தொகைகளுக்குப் பணம் எப்பவும் வேண்டித்தானே இருக்கு?




65 வயசானவுடன், superannuation ன்னு ஓய்வூதியம் தருது அரசு. இன்னிக்குக் கணக்குலே ஒரு ஜோடிக்கு வாரத்துக்கு 511 டாலரும் 40 செண்டும். ரெண்டு வாரத்துக்கொருமுறை உங்க வங்கிக் கணக்குக்குப் பணம் வந்து சேர்ந்துரும். இதுலே தனி மனிதரா இருக்கறவங்களுக்கு, ஜோடியில் ஒருத்தர் மட்டும் 65 வயசானவரா இருத்தல், தனியாவே வசிக்கிறவங்க, தனி மனிதரா இருந்துக்கிட்டு மத்தவங்களோட வீட்டைப் பகிர்ந்து வாழுறவங்கன்னு பலவிதங்களுக்குத் தகுந்தாப்புலே பலவகை ஓய்வூதியம் இருக்கு. இவுங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வரி உண்டு.வருஷக் கடைசியில் அந்த வரிகளில் இருந்து கொஞ்சம் பணம் திருப்பித் தருவாங்க.



முதியோர்கள் எண்ணிக்கை வரவரக் கூடிக்கிட்டே போகுது. மக்களோட ஆயுட்காலம் வேற இப்பெல்லாம் நீடிச்சுக்கிட்டு வருதுல்லையா?அரசாங்கம் 'இனியும் இந்த பாரத்தைத் தாங்க முடியாது. உங்க ஓய்வுக்கு நீங்களே சேமிச்சுக்குங்க' ன்னு சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க.அந்த வயசை உங்க டீச்சர் எட்டு முன்பு இது அமுலுக்கு வந்தாலும் வந்துரும். எதுக்குமே வரிச் சலுகைன்னு கொடுக்காததால் சேமிப்பு, அதுவும் ஓய்வூதியம் வரும் தொகைக்குண்டான சேமிப்புன்றது ரொம்பக் கஷ்டம்தான்.



விலை மோரில் வெண்ணெய் எடுக்கறவங்களும் இருக்காங்கதான். வேற நாட்டில் இருந்து வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இங்கே பிள்ளைகளோடு சேர்ந்து இருக்கணுமுன்னு 'ரீ யூனியன்'னு சொல்லிக்கிட்டு வந்து, இங்கே தனியா வீடு எடுத்து தங்கிக்கிட்டு இங்கத்து 'சூப்பர்' வாங்கற ஆளுங்களும் இல்லாமலில்லை. அதான் சட்டத்துக்குள்ளெ இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தத் தெரிஞ்சவுங்களும் உண்டுதானே. மொதல்லே விவரம் புரியாம இதுக்கெல்லாம் கூடக் கொடுத்துக்கிட்டு இருந்த அரசாங்கம், இப்பக் கொஞ்சம் முழிச்சுக்கிட்டு குறைஞ்ச பட்சம் எவ்வளவு நாள் இங்கே தங்கி இருந்துருக்கணுமுன்னு சில நிபந்தனைகளை விதிச்சிருக்கு.



முதியோர்களுக்கும், கிடைக்கும் தொகை பலசமயம் போதவில்லைன்னும் இருக்கு. சொந்தமா வீடு இருக்கறவங்களுக்குப் பரவாயில்லை. வாடகை வீட்டில் வசிக்கும் முதியோருக்கு, கிடைக்கும் தொகையில் பாதி வாடகைக்கேப் போயிருது. இங்கே வீட்டு வாடகை, வாரக் கணக்குத்தான். சொந்த வீடு வைத்திருப்போர் அதிகம் உள்ள நாடுகளில் நியூஸியும் ஒண்ணுன்றதாலே 65 வயசுவரை வீடுன்னு ஒண்ணு சொந்தமா வச்சுக்காதவங்க ஒரு 25% இருக்குமாம்.



இதைப்போல்தான் இங்கே பிரசவத்துக்குண்டான செலவுகள் எல்லாமே இலவசமுன்னு இருக்கறதாலே, வெளி நாடுகளில் இருந்து விசிட்டர் விஸாவுலே வந்துட்டு இங்கே குழந்தை பிறந்த பிறகு திரும்பிப் போறவங்களும் இருந்தாங்க. இவுங்களுக்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்ன்னு இலவசத்துக்கு இலவசம், அப்புறம் அந்தக் குழந்தைக்கு இங்கத்துக் குடியுரிமை. இதையும் இப்ப மாற்றி அமைச்சுருக்காங்க. குடியுரிமை இல்லேன்னா, பி.ஆர் இருக்கறவங்களுக்கு மட்டுமே இலவசம். மத்தவங்களுக்கு இல்லைன்னு சொல்லி இருக்கு அரசு. குழந்தை மட்டுமில்லை, இதய அறுவை சிகிச்சைக் கூட இப்படிச் செஞ்சுக்கிட்டுப் போனவங்க இருக்காங்க. இதனாலே மக்கள் செலுத்தும் வரிப்பணம் விரயமாகுது. எல்லாம் ஒரு ஒழுங்கு முறைக்குள்ளெ வரணுமுன்னு மக்கள் விரும்பறாங்க.



இங்கேயுள்ள சுற்றுலாத்துறையும் அருமையான வசதிகள் செஞ்சு வச்சுருக்கு. பனிமலைச் சிகரங்களில் மலை ஏற, இங்குள்ள காடுகளில் சுற்றித்திரியன்னு வரும் பயணிகள், எதாவது ஆபத்துலே மாட்டினாலும் நல்ல முறையில் அவுங்களைத் தேடிக் கண்டுபிடிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யறாங்க.



'நேஷனல் பார்க்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துன நாடுகளில் நியூஸியும் ஒண்ணு. இங்கே இதுவரை இப்படிப் பதினாலு பார்க்குகள் இருக்கு. மொத்தம் எட்டு மில்லியன் ஹெக்டேர் நிலங்கள். அங்கங்கே தங்கும் இடங்கள், மற்ற வசதிகள் எல்லாம் ரொம்ப நல்லமுறையில் ஒழுங்கு செஞ்சிருக்காங்க. இதைப் பத்தித் தனியா ஒரு பதிவு அப்புறமா எழுதுவேன். காடுகளுக்குள்ளே நுழையும்போது, அங்கிருக்கும் வரவேற்பறை/ தகவல் அலுவலகத்தில் உள்ள ரெஜிஸ்டரில் நீங்க எத்தனை மணிக்கு, இல்லேன்னா எத்தனையாவது நாள் திரும்பறதா உத்தேசமுன்னு எழுதி வச்சுட்டுக் காட்டுக்குள்ளேப் போகணும். அதே போல திரும்ப வந்தவுடன் அதில் வந்துட்டோமுன்னு பதிஞ்சுட்டுப் போகணும். குறிப்பிட்ட நாளில்/நேரத்தில் நீங்க திரும்ப வரலைன்னா, உடனே 'சர்ச் பார்ட்டி' உங்களைத் தேடக் கிளம்பிருவாங்க. இதுலே முக்காலே மூணுவீசம் சர்ச் பார்ட்டி ஆளுங்க தன்னார்வத் தொண்டர்கள்தான்.



நிறைய இடங்களில் இப்படி தன்னார்வத் தொண்டர்கள் பல்வேறு விஷயங்களில் உதவி செய்யறாங்க. இவுங்க இல்லாட்டா அரசாங்கம் தன்னுடைய கடமைகளை ஒழுங்காச் செஞ்சு முடிக்கறதுகூடக் கஷ்டமுன்னு உணர்ந்திருக்கு. வருஷம் ஒருமுறை இந்தத் தொண்டர்களின் பணிக்கு அங்கீகாரம் தெரிவிக்கறதுக்காக அந்தந்தத் துறைகளில் விருந்துக்கு ஏற்பாடு செஞ்சு,அரசு நன்றி தெரிவிக்குது. பொதுவா இங்குள்ள மக்கள் பலர் வாரம் சில மணி நேரங்களைச் சமூகத்தின் நலனுக்குச் செலவளிக்கறதுக்குத் தயாராவே இருக்காங்க. நானும் ஒரு குழந்தைகள் லைப்ரரியில் 12/13 வருசம் வேலை செஞ்சுருக்கேன். அந்தப் பகுதிக்கு சிட்டிக் கவுன்சில் புதுசா ஒரு பெரிய லைப்ரரியைக் கட்டுனதாலே, நம்மளுதை மூட வேண்டி வந்ததால்தான் வேலை போயிருச்சு. புதுசைப் பத்திய விவரம் இங்கே ( இப்ப அதுக்குப் பதிலா பதிவெழுதும் வேலை வந்துருச்சு.....எல்லாம் உங்க போறாத காலம்!)

26 comments:

said...

சூப்பரு!!
நல்லாத்தான் ஆசையை கிளப்புறீங்க டீச்சர்!! :-D
Immigration டிபார்ட்மென்ட்ல உங்களுக்கு ஏதாவது கமிஷன் தராங்களா??? ;-)

said...

வாங்க CVR.

ஆசையைக் கிளப்பிட்டேனா.......?

'எண்ணித் துணிக கருமம்'

said...

65 வயசானவுடன், superannuation ன்னு ஓய்வூதியம்
ஏங்க தமிழ்நாட்டு மேல் இவ்வளவு கோபம்?
இதைப்படிக்கும் ஆட்கள் அடுத்த தேர்தலுக்கு இதை கொண்டு வந்து சீட்டை பிடிக்கப்போகிறார்கள்.:-))
இந்த மாதிரி தான் ஆஸ்திரேலியா போகலாம் என்று எல்லா விபரங்களை இணையத்தில் படித்து பார்த்த போது 45 வயதுக்கு மேல் சான்ஸ் இல்லை தெரியவந்தது.இதை படிக்கும் போது 45 வயதாகியிருந்தது. :-((

said...

இந்த ரூல்ஸ் எல்லாம் மாத்துறதுக்கு முன்னாடி கிளாஸ் வெச்சுருந்தா உபயோகப்பட்டு இருக்கும். இப்போ....

போங்க டீச்சர்!!

said...

நேஷனல் கட்சி வந்தா நம்ம மாதிரி வேலைக்குப்போறவங்களுக்கு கொஞ்சமாவது வரி விலக்கு குடுப்பாங்கன்னு நினைக்கறேன். அப்போ Welfare -ர்‍‍க்கு பணம் எங்க இருந்து கிடைக்கும்.
எப்படியோ குற்றங்கள் அதிகமாகாம இருந்தா சரி

said...

//இங்கே வந்தபிறகு வேலை தேடிக்க வேண்டியது உங்க சமர்த்து//

நம்ம ஊரு படிப்புத்தான் அங்கு மதிப்பே இல்லையே.
நியூஸிலாந்தில் நான் பழகிய டாக்ஸி ஓட்டுனர்கள் எல்லோரும் இந்தியாவில் மெத்த படித்தவர்கள். பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் இந்திய M.B.B.S மருத்துவரை சந்தித்தேன். இந்திய M.B.B.S வைத்துக்கொண்டு அங்கு practice செய்ய முடியாது. NZ/AU/UK யில் மற்றுமொரு course படிக்க வேண்டும்.

இந்தியாவில் 5 கம்பெனிகளுக்கு GM மாக இருந்த என் நெருங்கிய சொந்தக்காரர்,அங்கு வந்த புதிதில் clerk வேலை பார்த்தார். பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த அவர் மனைவி store keeper ராக இருக்கிறார்.

எந்த வேலையும் இழிவல்ல. எந்த வேலை செய்தாலும் நியூசிலாந்தில் பிழைப்பு ஓடும்.

மற்றவர்களுக்கு ஆசையை கிளப்பிவிடும் அதே நேரம் மறுபக்கத்தையும் பதிவது நல்லது.

said...

Have you been a member of, or belonged to, any group of people that had/has objectives or principles based on an assumption that persons of a particular race or colour are inherently inferior or superior to other races or colours?
என்னங்க இப்படியெல்லாம் கேட்கிறார்கள்.No... No.. என்று சொடுக்கி சொடுக்கி கை போய்விடும் போல இருக்கு.:-))

said...

welfare state னா வரி கொடுத்துதானே ஆகனும்...
தர்மம் னா என்ன?
தன் சம்பாத்தியத்தில் கொஞ்சம் எளியவர்களுக்குக் கொடுப்பதுதானே?
இந்த உணர்வு சமுதாயத்தில் மங்கியபொழுது,அரசு அப்பொறுப்பைக்
கட்டாயப் படுத்துகின்றது(வரிவிதிப்பின் மூலம்)

நாம் செய்யதவறினால், அரசு செய்யவைக்கின்றது

"சொந்த சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி-கிளியே.."

said...

வாங்க குமார்.


ஒருவேளை தேர்தலில் ஜெயிக்கறதுக்காக இந்த வாக்குறுதி கொடுத்தால்........
நடைமுறையில் தமிழ்நாட்டில் இதைக் கொண்டுவரும் சாத்தியதை
உண்டான்னு தெரியலை. ஒருவேளை இதிலும் தேட்டை போட்டுக்குவாங்க
நம்ம வாதியின் அடிப்பொடிகள்(-:

வயசு வரம்பு 45தான். ஆனா உங்க சந்ததிகள் வர முயற்சிக்கலாமில்லையா?

இணையத்துலேயே எல்லா விவரமும் இருப்பது இப்ப எவ்வளோ வசதியாப் போச்சு
பாருங்க.

said...

வாங்க கொத்ஸ்.

வகுப்புலே எடுத்தவுடனே இதைச் சொல்லி இருந்தா ..........வகுப்புலே
அட்டெண்டன்ஸ் கொடுக்கக்கூட ஆள் தேறியிருக்க மாட்டாங்களேப்பா:-)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

வரியைக் குறைச்சால் மக்களுக்கு வருங்கால சேமிப்புக் கிடைக்கும். ஆனா வேலைக்கே
போகாமல் பல தலைமுறைகளா உதவித் தொகையில் மட்டுமே காலத்தை ஓட்டறவங்க,
மனம் மாறி உழைக்க முன்வரணும் இல்லையா?

said...

வாங்க சிவகாசி ஸ்ரீனிவாசன்.

நலமா? புதுசா இருக்கீங்க?

நியூஸிப் பகுதி பார்த்தீங்கல்லே......... 68 பதிவுகளாப் போய்க்கிட்டு இருக்கு. படிப்புக்குத்
தகுந்த வேலை, படிப்பை முதலில் அங்கீகாரம் செய்யறதில்லைன்னு பல வகுப்புகளில்
புலம்பிக்கிட்டுத்தாங்க இருக்கேன்.

இப்போ புதுசா, எலக்ட்ரீஷியன், ப்ளம்பர் வேலைக்கு ஆள் தேவைன்னு சொல்றாங்க.
நம்ம நாட்டு மக்களும் இதுக்குண்டான டிப்ளமோ படிச்சுருந்தால் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் அவுங்களும் இங்கே வந்து முறைப்படி ஒரு கோர்ஸ் செய்ய வேண்டி இருக்கும்.
ச்சும்மா அனுபவம் மட்டுமே இருந்தால் நடைமுறைக்கு சரிவராது. அததுக்குப் படிச்சிருக்கணும்.

ஊர்லே பெரிய வேலை செஞ்சவுங்க, இங்கே வேலை இல்லைன்னு தெரிஞ்சும் வராங்கன்னா அது
அவுங்க ச்சாய்ஸ்தானே? இல்லீங்களா? பலர் பிள்ளைகளுக்காக இப்படி வந்துடறாங்க. எந்தவிதமான
கேப்பிடேஷன் ஃபீஸ் இல்லாம எல்லாப் படிப்பும் படிக்க முடியுதுன்றதும் ஒரு காரணம்.

இங்கே ஒருத்தர் வந்து பெட்ரோல் பங்குலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர் ஊர்லே நல்ல கம்பெனியில்
ஜி.எம்.னு சொன்னார். ரெண்டு மாசத்துக்கு மேலே தாக்குப் பிடிக்க முடியாமத் திரும்பப் போயிட்டார்.
அதனால்தான் நானும் சொல்றேன், இந்த பாயிண்ட் சிஸ்டம் சரி இல்லைன்னு.

said...

வாங்க சிஜி.

நீங்க சொல்றது மெத்தச் சரி. ஆனா இது எல்லாருக்கும் எப்பவும் பொதுவா இருந்தால் நல்லது.
இப்பப் பாருங்க, நம்மையெல்லாம் ஓய்வூதியத்துக்கு நீயே சேர்த்து வச்சுக்கோன்னு சொல்றாங்க.
இவ்வளவு வரிகளைக் கட்டிட்டு என்னன்னு சேர்க்கமுடியும்? சரி. இன்னின்ன காரியங்களுக்கு
வரிச்சலுகைன்னு சொன்னாலாவது பரவாயில்லை. கட்டாய சேமிப்புக்கு வரிச்சலுகைன்னாவது
தேவலை. ரெண்டு பக்கமும் பார்க்கணும் இல்லையா? அமெரிக்காவிலே சொந்த வீடு வாங்கினா,
கடன் முடியும் வரை வரிச்சலுகை இருக்குன்னு நண்பர் சொன்னார். இங்கே கறந்துக்கிட்டுத்தானே
விடறாங்க. பல்லைக் கடிச்சுச் சேமிச்ச காசுக்கும் வட்டியில் வரி அதுவும் ச்சின்னப்பிள்ளைங்க வச்சுருக்கற
ஜூனியர் கணக்கும் விதிவிலக்கில்லைன்னா எப்படிங்க?

said...

டீச்சர் உங்க ஆசீர்வாதத்துல 65 வயசுக்குள்ளயாச்சும் அங்கன வந்து செட்டில் ஆகப் பாக்குறேன்.. அப்புறம் கடைசியா சொல்லிருக்கீங்களே
//( இப்ப அதுக்குப் பதிலா பதிவெழுதும் வேலை வந்துருச்சு.....எல்லாம் உங்க போறாத காலம்!)//

இது.. இதுதான் டீச்சரம்மா.. எல்லாம் எங்க போறாத காலம்தான்.. பாடாய்ப் படுத்துதே..

said...

வாங்க உண்மைத்தமிழரே.

65 க்கு வரமுடியாது. 45க்கே உள்ளே நுழையமுடியாதுன்னு குமார் சொல்லி இருக்கறதைப்
படிக்கலையா? (-:

இணையத்துலே பாருங்க. நிறையத் தகவல் கொட்டிக்கிடக்கு.

போதாத காலத்தை எங்கேன்னு போய்ச் சொல்லி அழ? ஹூம்...........

said...

இவ்வளவு வரி யாரு கட்டறது. ஆளைவிடுங்க சாமி.

ஒரு கொஞ்சம் அழகாச் சுத்தமா இருக்கேனு பார்த்தா இப்படித்தான்
வரி போட்டு விரட்டுவாங்க போல.
இந்த ஊரிலேயும் சர்வ வசதியும் இங்க பிறந்தவங்களுக்கு இருக்கு. வேலை செய்ய வந்தவங்களுக்கு எல்லாமெ காஸ்ட்லி.
"வரின்னு சொன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. இங்கே எல்லா இடங்களிலும் 'பேய்' வரி அந்தந்த நிர்வாகத்தினராலேயே வசூலிக்கப்பட்டு அரசாங்கத்துக்குப் போயிரும். வரி ஏய்ப்பு என்றதுக்கு இடம் இல்லை. அதென்ன பேய் வரி? நாந்தான் இப்படிச் சொல்றேன். இது 'Pay As You Earn' என்ற வகை. PAYE."//

:-))))))))))))))))))))))))))))))

said...

வாங்க வல்லி.

வரி மட்டுமா? பல இடங்களில் இப்பெல்லாம் user pay ன்னு வந்துருச்சு.
'வசதி பண்ணி வச்சுருக்கு. உனக்கு வேணுமுன்னா காசு
கொடுத்துப் பயன்படுத்திக்கோ'ன்னு:-))))

said...

ஏற்கனவே நமக்கு அந்த நாட்டு மேலையும், ஆஸ்திரேலியா மேலையும் கண்ணு இருக்கு. ஆனா என்ன நம்ம வெவசாயம் அங்க எடுபடுமான்னுதான் தெரியல. நீங்க வேற சூட்டை கெளப்புறீங்களே டீச்சர். ஒரு தடவை சுத்தி பார்க்கவாவது வழிகிடைக்குமான்னு பார்க்கனும்.

said...

வாங்க இளா.

//ஒரு தடவை சுத்தி பார்க்கவாவது வழிகிடைக்குமான்னு பார்க்கனும்.//

இந்தியாவுலே இருந்து டிக்கெட் எடுத்தா உண்மைக்குமே மலிவு. அதுவும் இப்பெல்லாம்
ஆஸ்தராலியா, நியூஸி, சிங்கைன்னு ஒரு பேக்கேஜ் டூர் இருக்காமே. இங்கே கூட்டங்கூட்டமா
மக்கள் சுற்றுலான்னு வராங்க. அதிலேயும் தெலுங்குக்காரங்க கூடுதல்.

நிறையப்பேரை 'மால்'களில் சந்திச்சோம்.

said...

பழைய பதிவுகளை படிக்காமல் விமர்சித்ததற்கு மன்னிக்கவும். பதிவுகளுக்கு புதியவன். ஆக்லாந்திலும் டனிடனிலும் 6 மாதங்கள் தங்கி வேலை பார்த்தேன். இந்நாள்வரை பார்த்த நாடுகளைப் பற்றி என்னுடைய அனுபவத்தை எழுதலாம் என ஒரு பதிவு ஆரம்பித்திருக்கிறேன்.

http://yaathumoore.blogspot.com/

said...

என்னங்க சிவகாசி ஸ்ரீனிவாசன்,

மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டீங்க.

//ஆக்லாந்திலும் டனிடனிலும் 6 மாதங்கள் தங்கி வேலை பார்த்தேன்.
இந்நாள்வரை பார்த்த நாடுகளைப் பற்றி என்னுடைய
அனுபவத்தை எழுதலாம் என ஒரு பதிவு ஆரம்பித்திருக்கிறேன்//

உங்க கண்ணோட்டத்தில் கட்டாயம் எழுதுங்க. ஒவ்வொருத்தர் அனுபவமும் வெவ்வேறதானே? அதன் மூலம்
நாங்க கத்துக்கறதுக்கு எதாச்சும் இருக்குமே.

வெகுஜன ஊடங்கங்களுக்கு மாற்றாத்தான் இப்ப வலைப்பதிவுகள் இருக்கு. இணையம் எப்படி
நம்மையெல்லாம் இணைச்சிருச்சுன்னு பாருங்க!

said...

துளசி, இங்கேயும் மிஸ்டர்.க்ளீன் இருக்கு.
2 fரான்க் கொடுத்துப் பயன்படுத்தலாம்.
படு சுத்தம்.

said...

CST பத்தி சொன்னீங்க,Interest tax பத்தி சொன்னீங்க ஆனா இன்கம் டாக்ஸ் பத்தி சொல்லவே இல்லயே.
Overall very informative.

said...

வாங்க மணிப்பயல்.

'விடிய விடிய ராமாயணம் கேட்டு...........................' ன்ற கதையா இருக்கு! அதான் பேய்வரின்னு
சொல்லியாச்சே! உங்க வரியைப் பிடிச்சுக்கிட்டுத்தான் சம்பளம் கைக்கு வரும். அதனாலே கவலையே
படவேணாம்:-)

மேலதிக விவரங்கள் எல்லாமே நெட்லே இருக்கு.' டாக்ஸ் நியூஸிலாண்ட் 'னு தேடுனா எல்லா விவரமும்
உங்க கண்முன்னே! அதான் ஒளிவு மறைவே இல்லையே:-))))

said...

சுத்தமா சம்பந்தம் இல்லாதனாலே
இந்தப்பாடத்தை சாய்ஸ்லே விட்டுட்டேன்.

said...

என்னங்க பெருசு,

ச்சாய்ஸ்லே விட்டுட்டீங்களா?
அப்ப இத்தனை நாள் தப்பான வகுப்புலே வந்துட்டதாலெதான் ச்சும்மா
ஆஜர் மட்டும் கொடுத்துட்டு இருந்தீங்களா?
இல்லை, தூங்கறதுக்குக் கடைசி பெஞ்ச் வசதியா இருந்துச்சா? :-)))))