Thursday, June 21, 2007

எ.கி.எ.செ? பகுதி 3

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

ப்ரிஸ்பேன் நகர வீதிகளில் அப்படியே நடந்து திரிஞ்சுக்கிட்டு இருந்தோம். மணி இப்போ மூணுதான். 25 டிகிரி வெய்யில்.கொஞ்சம் அறைக்குப்போய் ஓய்வெடுக்கலாமுன்னு ஒரு எண்ணம். மாலையில் மறுபடியும் 'மாலை' நோக்கிப் பயணம்.எல்லாம் க.கெ.கு.சுவர்தான். இந்த மால்களுக்குன்னு ஒரு வசீகரம் இருக்குங்க. அங்கே போனா பொழுதே போயிருது. எத்தனை வகை மக்கள். ச்சும்மா ஒரு இடத்துலே உக்காந்து வேடிக்கை பார்த்தாவே போதும்! அதுவும் இந்த குவீன் ஸ்ட்ரீட் மால் ஒரு திறந்தவெளி மால்னுதான் சொல்லணும். தெரு முழுசும் ரெண்டு பக்கமும் ரெண்டு ப்ளாக் நீளத்துக்குக் கடைகள்.வாகனங்கள் போக்குவரத்துக்கு அங்கே தடா. அதனாலே கவலையே இல்லாமல் குறுக்கும் நெடுக்குமா அலைஞ்சுக்கிட்டு இருக்கும் மக்கள் கூட்டம். கட்டிடம் எதுக்குள்ளேயாவது நுழைஞ்சு கீழே பேஸ்மெண்ட் போயிட்டோமுன்னா அடித்தளத்துலேயே ஊர்ந்து கடைகடையாப் போய்க்கிட்டே இருக்கலாம். அங்கங்கே ஃபுட் கோர்ட்(Food Court ) னு ஏராளமான உணவு வகைகள். இந்திய சாப்பாடுன்னு விக்கறவங்க ஒரு மலேசியன் இஸ்லாமியர் குடும்பம். அங்கேயே ச்சுடச்சுட 'நான்' பண்ணித் தர்றாங்க.

வழக்கமான ரூட்லே ( பார்றா.......ஒரு நாளில் வழக்கம், பழக்கமெல்லாம் வந்துருது!) போகாம 'ஆன்' தெருவுக்குள்ளே நுழைஞ்சோம். நடைபாதையில் சுள்ளி வச்சு தீ மூட்டி அதுலே ஒரு தூக்குச்சட்டியை வச்சுச் சூடா காப்பித்தண்ணி காய்ச்சுறாங்க, அஞ்சு 'வெள்ளை'க்காரங்க:-)

கிட்டப் போனதும் முழு விவரமும் கிடைச்சது. 1988லே உலக எக்ஸ்போ (World Expo ) நடந்தப்ப 'ஹுயூமன் ஃபேக்டர்'ன்னு சில சிற்பங்களை ஃபைபர் க்ளாஸ்லே செஞ்சு காட்சிக்கு வச்சுருந்தாங்களாம். அதுலே இருந்து ஒண்ணை ச்சிட்டிக்கவுன்ஸில் வாங்கி இங்கே வச்சு நகரை அழகுபடுத்தி இருக்காங்க. அதை அடுத்து ஒரு அழகான தேவாலயம்.

Ann Street Presbyterian Church 1840லே ஆரம்பிச்சு, வெவ்வேற இடத்துலே வழிபாடுகள் நடத்திட்டு,இப்ப இருக்கும் இடத்திலே 1854 லே கட்டுனது. இன்னும் இதுலே வழிபாடுகள் நடந்துக்கிட்டு இருக்கும் குவீன்ஸ்லாந்துலேயே பழமையான தேவாலயம்(Presbyterian Church) இதுதானாம். 1871லே நடந்த தீ விபத்துலே எரிஞ்சுப்போய், வெறும் சுவர்கள் மட்டும் தப்பிச்சதாம். அதையே புதுப்பிச்சு கட்டி இருக்காங்க.
அதைச்சுத்தி இருக்கும் அடுக்கு மாடி நவநாகரிகக் கட்டிடங்களுள் இது அப்படியே எதோ காலத்தில் உறைஞ்சாப்போல நிக்குது. அந்த செங்கல் சிகப்பும் ஒரு அழகாத்தான் இருக்கு.

அதுக்கு எதிர்வாடையில் நகரசபைக் கட்டிடம். பிரிட்டிஷ்காரர்கள் ஸ்டைலில் நிக்குது. முதல் மாடி முகப்பில் பெரிய பெரிய தூண்கள். (King George Square) அழகான முன் தோட்டம். அதில் தாமிரத்தில் செஞ்சு வச்சுருக்கும் மாடர்ன் சிற்பங்கள். சிற்பங்கள்னுகூடச் சொல்ல முடியாது. நவீன கலைப்பொருட்கள்னு வச்சுக்கலாம். கட்டிடத்தின் வலது பக்கம் இந்த நகரின் அரசுச் சின்னத்தில் இருக்கும் ஈமுவும், கங்காருவும் சிற்பமாகவே இருக்குமிடம், இப்போ எதோ பராமரிப்பு வேலைகள் நடக்கறதாலே மூடப்பட்டிருக்கு.

இதைக் கடந்து பக்கவாட்டில் திரும்புனா............. Anzac Square 'வார் மெமோரியல்' . உலகப்போர்கள் ரெண்டிலும் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை தரும் நிமித்தமாக் கட்டப்பட்டது. ரோமன் கட்டிடக்கலையின் சாயலில் வட்டமா தூண்கள். நடுவிலே அணையா ஜோதி. அந்த வளாகம் முழுசும் கீழே சுத்திவர இருக்கும் தோட்டத்தில் சிற்பங்களோ சிற்பங்கள். எல்லாம் வெவ்வேறு போர்களை நினைவூட்டுது. அந்தப் போர்களில் வீர மரணம் அடைஞ்சவங்களை எப்பவும் மறக்கக்கூடாதுன்ற உயர்வான எண்ணத்துக்கே மரியாதை செலுத்தணுமுன்னு தோணிப்போச்சுங்க. அடிபட்ட ஒரு ராணுவவீரரைக் காப்பாத்திக் கூப்பிட்டுப்போன ஒருத்தரும் இங்கே ஒரு சிலையில் இருக்கார். படியேறி மேலே வந்தால் நேர் எதிரே செண்ட்ரல் ஸ்டேஷன். இங்கிருந்து எல்லாப் பகுதிகளுக்கும் ரயில் போகுது. ஏர்ப்போர்ட் வரைக்கும் ரயிலிலே போகலாம். ரொம்ப வசதியா இருக்கு.

'எங்ககிட்டே ரயில் டிக்கெட் வாங்குனா ரெண்டு டாலர் லாபம். பத்தே டாலருக்கு ஏர்ப்போர்ட் போயிறலாம்'னு அறிவிப்பை ஹொட்டல் லாபியில் பார்த்தது நினைவு இருக்கு. Airtrain Service. ஒரு ஆளா இருந்தா இது உண்மையாவே லாபம்தான். ரெண்டு மூணுபேருன்னா டாக்ஸிதான் வசதி. இல்லேன்னா ரயிலடி வரை பெட்டிகளை உருட்டிக்கிட்டே வரணுமே!

ஒவ்வொரு தெருவாக் கடந்து எலிஸபெத் தெருவிலே நடந்தா செயிண்ட் ஸ்டீபன் கதீட்ரல் கம்பீரமா நிக்குது. சிட்டி மையத்துலே நாலுமுறை நடந்தாவே இந்த குவீன், ஆன், எலிஸபெத், சார்லெட், மேரி, மார்கரெட்ன்னு எல்லாத் தெருவும் பழகிரும்.

குறுக்கே போகும் தெருவுக்கெல்லாம் பொம்பளைப் பேருங்க. நெடுக்கே போறதுக்கெல்லாம், வில்லியம், ஜ்யார்ஜ், ஆல்பர்ட்,எட்வர்ட்னு ஆம்பளைங்க பேர்! வாழ்க்கைன்ற தறியிலே ஊடும் பாவுமா ஆண்களும் பெண்களும் இருக்கணுமுன்றஒரு தத்துவம் இங்கே ஒளிஞ்சிருக்கோ?

1850லே கட்டுன தேவாலயம் இந்த செயிண்ட் ஸ்டீபன் கதீட்ரல். கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கணும் அந்த உள் விதானத்தை. அம்மாடி.......... எவ்வளோ உயரம். அந்த உயரம் காரணமா சின்னக் குரலில் பேசுனாலும் கணீர்னு கேக்குது. சந்நிதானத்தைப் பார்த்து நாம் நின்னோமுன்னா நமக்கு இடப்புறம் அழகான பளிங்குச் சிலைகளா ரெண்டு தெய்வங்கள். பக்கத்துலே மெழுகுவர்த்தி ஏத்தறதுக்குள்ள எல்லா வசதிகளும் இருக்கு. இவர்தான் பரி. ஸ்டீபன் போல.ஒரு சிறுவனைக் கைப்பிடிச்சுக்கிட்டு நிக்கறார். நான் முதலில் இவரை செயிண்ட் கிறிஸ்டோபர்னு நினைச்சேன். ஒருவேளை அவர் கையில் இருந்த தடி காரணமான்னு தெரியலை. சந்நிதிக்கு அந்தப்பக்கம் சுவத்துலேயே பதிச்ச இன்னொரு பளிங்கு சிற்பம். இயேசுநாதரும் அவருடைய ரெண்டு சீடர்களும் உக்காந்துருக்காங்க. நடுவிலே ஒருமேஜை. அதைக் கடந்து வலப்புறம் திரும்புனா........ ஞானஸ்நானம் கொடுக்க தீர்த்தம் வைக்கும் பளிங்குப் பாத்திரமும் அதுலே இருந்தே அதேபளிங்கு உருகி, சீலையாகி அதுலேயே உருவானதுபோல ஒரு பெண்ணும், கருவில் உள்ள குழந்தையும்! எப்படி வர்ணிக்கறதுன்னே புரியலை. உங்களுக்காக படமாவே எடுத்துக்கிட்டு வந்துட்டேன். ஆலயத்தில் இருக்கும் ஸ்டெயின் க்ளாஸ் (stained glass windows)அலங்காரமெல்லாம் ஜெர்மனி, ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, அயர்லாந்துன்னு பல இடங்களில் இருந்து வந்துருக்கு.

மறுவாசலில் வெளியே வந்தால் பிரமாண்டமான வெங்கல மணி. ரெண்டடி உயரக் காங்க்ரீட் மேடையில் நிக்குது.2856 கிலோ எடையாம். விலை ரொம்ப சல்லிசு. 250 பவுண்டுதான். ஆனா இது 1887 லே இருந்த விலை. கப்பலில்வந்து இறங்கி, 1888லே கோவிலில் பிரதிஷ்டை. திருமதி கெல்லியின் அன்பளிப்பு. தானம் கொடுத்துட்டு அதோட விலையையும்போட்டுட்டாங்களே !!! ( நம்மூரில் 'கோவிலில் ட்யூப் லைட்' ஞாபகம் வருது)
தொடரும்.............

17 comments:

said...

//வாழ்க்கைன்ற தறியிலே ஊடும் பாவுமா ஆண்களும் பெண்களும் இருக்கணுமுன்றஒரு தத்துவம் இங்கே ஒளிஞ்சிருக்கோ?//

ஹ்க்க்கும்.. டீச்சர், இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை? போகட்டும்.

நீங்க நியூசிக்கு டிக்கெட் அனுப்பும் போது ஆஸி வழியாவே அனுப்புங்க. இங்க எல்லாம் வரும் போது, ஒரு பழகுன ஊரு மாதிரி உணருவேன் இல்லையா?! :))

said...

// உங்களுக்காக படமாவே எடுத்துக்கிட்டு வந்துட்டேன். //

ரொம்ப நன்றிங்கோவ்.

வழக்கமா வர்ற தெருன்னு எப்படியும் ஒரு தெரு வந்துரது நமக்கு மட்டும்னு நினைச்சேன்

said...

வாங்க கொத்ஸ்.

கொஞ்சம் தத்துவம் பேசலாமுன்னா விடமாட்டீங்க போல இருக்கே:-)

டிக்கெட் என்ன டிக்கெட்............. லாட்டோ விழட்டும். ஒரு ப்ளேனையே
ச்சார்ட்டர் பண்ணா ஆச்சு:-)
( இங்கே நம்ம தளத்துலே முன்பதிவு செஞ்சுக்கணும்,ஆமா)

said...

வாங்க இளா.

//......... வழக்கமான தெரு.......................//

நாமெல்லாம் அடிப்படையிலே ஒண்ணுதானே?

சுருக்கமாச் சொன்னாச் செக்குமாடுகள்னு........ .
இல்லேன்னா 'வண்டித்தடம்,
காட்டுக்குள்ளெ பாதை' ன்னு வச்சுக்கலாமா?
பழகுன பாதைதான் பத்திரமா இருக்கு.

said...

பல நேரங்கள்ல தொலைஞ்சு போய்ட்டு நம்ம தெருவுக்கு வரும்போது இருக்கிற சந்தோசமும், ஒரு பாசமும்./. ஆஹா. தொலைஞ்சு போய் பாருங்க தெரியும் மக்களே

said...

முதலில் எழுத நினைத்தை இ.கொத்தனார் எழுதி பதில் வாங்கிட்டார்.
ஆமாம் அந்த மணி "அடிக்க" இல்லையா?தாம்புக்கயிரை காணோம்.

said...

டீச்சர்
அந்தச் சிலை என்ன சிலை?
ஒருத்தன் துப்பாக்கி எடுத்துக்கிட்டு ஓடறான்?
இன்னொரு புறம் இரண்டு பேர் தோள் மேல கை போட்டுக்கினு போறாங்க!

இந்தத் தத்துவத்தையும் கொஞ்சம் விளக்குங்க ப்ளீஸ்!
(கொத்ஸ் சொல்வதற்கு எல்லாம் பயப்பட வேண்டாம் :-)

said...

சிலையெல்லாம் பாத்துட்டு கோபால் சிலையாயிட்டார் போல இருக்கே.
பளிங்குச்சிலைகள் ரொம்ப அழகு.

said...

//தறியிலே ஊடும் பாவுமா ஆண்களும் பெண்களும்....//

ட்டீச்சர்,நீங்க எங்கேயோ போய்ட்டீங்க

said...

வாங்க குமார்.

ஒரு அரையடி மனுஷன் இருந்தாத்தான் ரெண்டடி உயரத்துலே இருக்கும்
மணிக்குத் தாம்புக்கயிறைக் கட்டி மணியடிக்க முடியும்:-))))

கனம் கூடுதல்னு ஒருவேளை மணியை கீழேயே வச்சுட்டாங்களோ?

said...

வாங்க KRS.

1942 -1945 வரை நடந்த சண்டையில்

South West Pacific campaign பிரிவில்,
அடிபட்ட ஆஸி வீரரை,
Papua New Guinean ஆள் ஒருத்தர் காப்பாத்திப் பத்திரமான
இடத்துக்குக் கைத்தாங்கலாக் கொண்டு போனதை நினைவுகூரும் சிலை
அது.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

கல்லிலே கலைவண்ணம் கண்டு நிக்கிறார் கோபால்:-))))

said...

வாங்க சிஜி.

பாருங்க, உங்களுக்குப் பாராட்ட(?)த் தெரியுது. நம்ம கொத்ஸ் என்னவோ
'ஓவர்'ன்னு சொல்றார்.

said...

//வாழ்க்கைன்ற தறியிலே ஊடும் பாவுமா ஆண்களும் பெண்களும் இருக்கணுமுன்றஒரு தத்துவம் இங்கே ஒளிஞ்சிருக்கோ?//

தெருப் பெயர்களிலும் வாழ்க்கைத் தத்துவத்தை (எத்தனை த) கண்ட டீச்சர். வாழ்க வாழ்க... உலக மகா சிந்தனை.....யப்பா

said...

நன்றி அம்மா, இதுகுறித்த முழு விவரங்களுக்காக தேடிக்கொண்டிருக்கின்றேன்

said...

மால் பக்கம் போறதே வேடிக்கை பார்க்கத்தானே. வாங்க வேண்டாம்பா. சும்மா பார்த்துட்டுப் போய்க்கினே
இருக்கலாம்.இந்தத் தறி ஊடு பாவு எல்லாத்தையும் எல்லாரும் பார்த்துச் சொல்லிட்டாங்களே.
வசனம் வேற எழுதத் தெரியலியே.
இப்படிச் சொல்லலாமா ,துளசி டீச்ச்சரும் சரித்திரமும் போல நெருக்கமான தெருக்கள்னு எழுதலாமா.
சூப்பர் படங்கள் அதிசூப்பர் குறிப்புகள் வழக்கம்போல:-)))

said...

துளசி உங்களை எட்டுப் பதிவு போட அழைக்கலாமா.
நான் இன்னும் எட்டு போடலை. உங்களை ரிசர்வ் (!!!!) செய்துட்டுப் பதிவுக்குப் போலாம்னு இருக்கேன்.
சரினு சொல்லிடுங்கப்பா.