பேசாம நாளைக்குக் கிளம்பி கோல்ட்கோஸ்ட் போயிறலாம். ப்ரிஸ்பேன்லேதானே இடமில்லை. அங்கத்து ஆட்களெல்லாம் இங்கேயில்ல இருப்பாங்க. இன்னிக்குச் சுத்துனது போதும். சீக்கிரம் இருட்டிருது வேற. பொழுதோடப் போய்ச் சேரலாமுன்னு திரும்பி மோட்டர்வேயைப் புடிச்சோம். பக்காவா எல்லா விளக்கமும் போட்டுத் தலைகாணி சைஸுலே ப்ரிஸ்பேன் ரோடு மேப் புத்தகம். ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு,புத்தகத்துலே அந்தப் பக்கத்தையும் திறந்து வச்சுக்கிட்டு, எங்கே எப்ப இடது பக்கம் திரும்பணும், எந்த இடத்துலே வலது, எதுக்கப்புறம் நாம திரும்பற பகுதின்னு சொல்லிக்கிட்டேப் போயிறலாமுன்னா வரிசையா அடுத்தடுத்த பக்கங்களில் இல்லாம பக்கம்138 போய்சேருவது பக்கம் 118 ன்னு இருக்கு. 224 லே இருந்து 244 தான் கனெக்டிங் பக்கம். பக்கங்களை உருட்டிக்கிட்டே நான்வழி சொல்றதுக்குள்ளே முன்னாலே சரசரன்னு கிளைவிட்டுப் பரவும் லேன்கள். ரெண்டு பக்கமும் நவ்வாலுன்னு எட்டு லேன் பாதை.
எந்தப்பக்கம் திரும்பப்போறோம். ரைட்டுக்கு மாத்தணுமானு இவர் கேக்கறப்ப............ லெஃப்ட் லே ஸ்லோ லைன்லே போய் எக்ஸிட்லே வெளியே போயிறலாமுன்னு சொல்லி, வெளியே வந்ததும் ஓரங்கட்டிக்குங்கம்பேன். எதுக்குன்னு இவர்முழிக்கும்போது........... நாம் திரும்ப வேண்டிய இடத்தைத் தாண்டியே ரொம்ப நேரமாச்சு. எது என்னன்னு பார்க்கறதுக்குள்ளே இம்மாந்தூரம் வந்துட்டுருக்கோம்(-: இன்னொருக்கா மேப்பில் ரூட்டைக் கண்டு பிடிச்சு பழையபடி மோட்டர் வேயில் கலந்துக்கலாம்.போட்டும், நாமும் சுத்திப் பார்க்கத்தானே(???) வந்தோமுன்னு சிரிச்சுக்கறதுதான். GPS இருக்கும் வண்டியா இருந்தா நல்லதுன்னு முந்தியே கேட்டும், அவுங்ககிட்டே இல்லைன்னுட்டாங்க. அதான் 'நல்ல ரூட் மேப்' இருக்கேன்னு பதில் வருது.(மேப் மட்டும் இருந்து என்ன பயன்? )
சாலைகள் ரொம்ப நல்லா இருக்கறதாலே எல்லா வண்டிகளும் 110 கி.மீ வேகத்துலே எதோ ராமபாணம் போலச் சீறிப்பாயுதுங்க. இதுக்கு நடுவுலே நாம மாட்டிக்கிட்டு, அந்த வேகத்துக்கு ஈடு கொடுத்துப் போகலைன்னா விபத்து நிச்சயம்.ஒரு முறை லாஸ் ஏஞ்சலீஸ்லே இப்படிக் கிளைகிளையாப் பிரியும் வழியில் போனப்ப ரொம்ப பிரமிப்பாவும் பயமாவும் இருந்துச்சு.ஆனா அப்ப வண்டியை ஓட்டுனது அங்கத்து ஒரு ட்ரைவர்தான். அந்த அளவுக்கு இங்கே இல்லேன்னாலும்கூட எனக்கு இது கொஞ்சம் 'திக்திக்'தான். (ஒரு ஸ்பகாட்டி ஜங்ஷனை நினைவுப்படுத்திக்குங்க.) ஒரு வழியா சிட்டிக்குள்ளே நுழையறப்ப,'கவனமாப் பார்த்துக்கிட்டே ' ரைட் லேனைத் தவறவிட்டாச்சு. நேராப்போங்க. வேற இடத்துலே ரைட்டைப் புடிச்சுத் திரும்பலாமுன்னு போய்க்கிட்டே இருக்கோம். வலது பக்கம் 'கப்பா( Gabba) ஸ்டேடியம்'னு போர்டு தெரியுது. அட, இங்கேதான் நாளைக்கு அந்த ரக்பி கேம். திடுக்குன்னு கண்ணுலே படுது 'சதர்ன் க்ராஸ் மோட்டல்'. என்ன ஒரு ஒத்துமை பாருங்க. அந்தக் காலத்துலே கேப்டன் குக் நியூஸியைக் கண்டுபிடிச்ச பயணத்துலேயும் இந்த சதர்ன் க்ராஸ் என்னும் நட்சத்திரக் கூட்டம்தான் வழி காட்டுச்சாம்.
மோட்டலுக்குள்ளே போய் இடமிருக்கா?ன்னு கேட்டதுக்கு 'அதே பதில்'. நாளைக்கு இல்லை. நாளான்னைக்கு இருக்கு.அறையைப் பார்க்கலாமான்னு கேட்டுச் சாவி வாங்கிக்கிட்டுப் போய்ப் பார்த்தோம். அறை எண் 4.முதல் மாடி. கிச்சனெட், அதையொட்டி டைனிங்,கொஞ்சம் இடைவெளிவிட்டு கட்டில் அப்புறம் பால்கனி. பாத்ரூம் அருமையா இருக்கு. தாராளம். எடுத்துக்கறோமுன்னு சொன்னோம்.மூணு நாளைக்கு வேணுமுன்னு சொன்னதும், அப்படீன்னா இன்னொரு அறையைத் தரோம். அதையும் பாத்துட்டு வாங்கன்னாங்க.
அதே முதல் மாடிதான். அறை எண் 4 A. தனியா படுக்கை அறை, அதே மாதிரி அட்டகாசமான பாத்ரூம், பால்கனி, தனிஅடுக்களை,சமைச்சுக்கப் பாத்திரங்கள், மைக்ரோவேவ், டைனிங் & ஸிட்டிங் ரூம், டிவி, 2 ஏர் கண்டிஷனர், வாஷிங் மெஷீன், ட்ரையர், இன்னும்அயர்ன் போர்டு, இஸ்திரிப்பெட்டின்னு சகலமும் அம்சமா இருக்கு. பேசாம இங்கியே குடிவந்துறலாம் கையை வீசிக்கிட்டு! 4 & 4Aரெண்டுத்துக்கும் சேர்த்து இருக்கு அந்த பால்கனி.
கீழே வந்து வரவேற்புலே இருந்த பிஜியன் பெண்மணி( மோட்டல் ஓனர்)கிட்டே 'யெஸ்' சொல்லிட்டு, இது என்ன இடமுன்னு சாவகாசமாக் கேட்டோம். 'கங்காரு பாயிண்ட்'. ரொம்பப் பிடிச்சுப்போச்சு இந்தப் பேர். திரும்பக் கப்பா வழியாவே வந்தோம். கிரிக்கெட்டு மேட்ச்ங்க இங்கேதான் எப்பவும் நடக்குமுன்னு ஞாபகம் வந்துச்சு. ஒரு வழியா ராச் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு ரூமுக்குப் போயிரலாம்.நாளைக்குக் காலி செய்யணும். பேக்கிங் வேற இருக்கே. வழக்கம்போல 'மால் காலி' . அரை இருட்டில் ஆணும் பெண்ணுமாஓய்வா 'அக்காடா'ன்னு உக்கார்ந்துக்கிட்டு இருக்கு ரெண்டு வெங்கலச் சிலைகள். நமக்கு இந்தியன் சாப்பாட்டைத் தேடி ஓடற தெம்பு இல்லை. எது கிடைக்குதோ அதுன்னு பார்த்தப்ப, ஒரு டோனர் கபாப் கடை(க்ரீக்) தெரிஞ்சது. நம்ம சப்பாத்திமாதிரி ஒண்ணுலே நமக்கு வேணுங்கற கோழி, இல்லை ஆட்டிறைச்சியை வச்சு கூடவே இலைதழை, தக்காளி, வெங்காயமுன்னு நிரப்பி, கூம்புப் பொட்டலமாச் சுருட்டிஅதுக்குன்னு இருக்கும் ரெண்டு மூணு 'சாஸ்'களை அதன் தலையிலே ஊத்தித் தருவாங்க.
டோனர் கபாப் பத்தித் தெரியாதவங்களுக்கு மட்டும்:
இதுக்குண்டான இறைச்சிகளை மைய்ய அரைச்சு, ஒரு பெரிய உருளையில் அடைச்சு, ராட்சஸக் கபாப் போல இருக்கும். இந்தஉருளை அப்படியே அந்தரத்தில் தொங்கி, சுத்திக்கிட்டே இருக்கும். ஒரு பக்கம் மின்சாரத்தகடுகளில் இருந்து வரும் சூட்டில் இந்த இறைச்சி வெந்துக்கிட்டே இருக்கும். வேணுங்கறப்ப அதைக் கத்தியால் சுரண்டி எடுத்துச் சப்பாத்தியில் வைப்பாங்க.
மேற்படிச் சமாச்சாரங்கள் இல்லாம நமக்கு வெஜிடபிள் சவுலாக்கியும் செஞ்சு கொடுக்கறாங்க. ஆர்டர் கொடுத்துட்டுக் காத்திருந்தப்ப,ஒரு இந்திய முகம் நம்மளைப் பார்த்துச் சிரிச்சது. இது போதாதா? சொந்த ஊர் மும்பையாம். நேத்து வந்து இறங்குனாராம்.இன்னிக்குக் காலையில் வேலையில் சேர்ந்துட்டாராம். ஸ்ட்ரக்ச்சுரல் எஞ்சிநீயர். இதுக்கு முன்னாலே அரபுநாட்டுலே வேலை செஞ்சாராம். ஒரு மகன், நாலைரை வயசு. வீடு பார்த்ததும் ரெண்டு வாரத்துலே குடும்பம் வரப்போகுதாம்.ம்ம்ம்ம்....நல்லா இருக்கட்டும்.
வேலைவாய்ப்புகள், ச்சின்ன வேலை முதல் பெருசுவரை அங்கே எக்கச்சக்கமா இருக்கு. தகுதி இருந்தா உடனே வேலை கிடைச்சுருது. தினப்பத்திரிக்கையிலும் வேலைக்கான விளம்பரங்கள் ஒரு ஏழெட்டுப் பக்கம் வருது.பெரிய நாடா இருக்கறதுலேஇப்படி அட்வான்டேஜ் இருக்குல்லே!
காலையில் ஒம்போதரைக்கெல்லாம் கிளம்பிட்டோம். கரவாத்தாக் காடுகள் வழியாப் போகலாமுன்னு எண்ணம். 320 வகைமரஞ்செடிகளும், 160 வகை உயிரினங்களும்( மனுஷன் நீங்கலாக) இருக்காம். நடந்துபோகறதுக்காவே அருமையானபாதைகள் 9 கிலோ மீட்டர் தூரத்துக்குப் போட்டுவச்சுருக்காங்க. இந்தக் காடு, பிரிஸ்பேன் நகரைவிட்டு வெளிவந்த ஒரு இருபது இருபத்தியஞ்சு நிமிஷத்துலெ வந்துருது. மொத்தம் 660 ஹெக்டேர்களாம். ஒவ்வொரு மாசமும் கடைசி ஞாயிறு காலைஒரு குழுவாச் சேர்ந்து நடக்கலாம்.(Karawatha Forest Protection Society bushwalk) அவுங்களோடு போனோமுன்னாஎங்கெங்கே என்னென்ன உயிர்கள் இருக்குன்னு சொல்வாங்க. நமக்கும் எளிதா இருக்கும். நமக்கு இப்பச் சான்ஸ் இல்லைன்றதாலேச் சும்மா அந்தப் பக்கம் ஒரு ரைடுதான். நேத்தும் அதுவழியா வந்தப்ப எதாவது மிருகங்கள் தென்படுதான்னு இருந்தேன். இன்னிக்கும் அதுவழியாவேதான் போனோம். காட்டை அடுத்துப் புதுக்குடியிருப்புகள் கட்டிக்கிட்டு இருக்காங்க. எல்லாம் தனித்தனி வீடுகள். ஒரு நாள் வீட்டு வாசலில் கங்காரு வந்து நிக்குமோ என்னவோ?
அங்கிருந்து போனது பீன்லே(Beenleigh )வுக்கு. எனக்கு இந்தப் பேர் ரொம்பப் பிடிச்சுப்போயிருச்சு. இதுக்கு முன்னாலெ இங்கே பயணம் வந்தப்பெல்லாம் ரயில் வண்டியில் ரொபீனா(Robina. இதுவும் ஊர்ப்பேருதான்)வரை போகும்போது இந்த பீன்லே ஸ்டேஷனைப் பார்த்துருக்கேன். ( எல்லாம் வண்டிக்குள்ளெ இருந்துதான்) ரயில்பாதையை ஒட்டி இருக்கும் வீடுகளில் வாழை, மா, தென்னைமரங்கள், மரவள்ளிக்கிழங்கு, சேம்பு, மல்லின்னு செடிகள் எல்லாம் பச்சப்பசேல்ன்னு இருக்கறதைப் பார்த்து இந்த ஊர்மேலே ஒரு பிரியம் விழுந்துருச்சு. கோல்ட்கோஸ்ட் போகவும் இதே ரயிலில் வந்து நெராங்( Nerang) என்னும் ஊரில் இறங்கிக்கணும்.இங்கிருந்து பஸ்லே கடற்கரை ஊருக்குக் கொண்டுபோவாங்க. ரயில் & பஸ் எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் வாங்குனாப்போதும். இந்த ஊருக்கு ஒரு ஸ்டேஷன் முன்னாலே ஹெலன்ஸ்வேல்(Helensvale) என்ற ஊர். நம்ம ரயிலில் வரும் இளவயசுக்காரர்கள் இங்கெ கூட்டமாக இறங்கிருவாங்க. தீம் பார்க்குகள் இங்கே இருந்து ஆரம்பிச்சுருது.
Dreamworld, whitewater world, wet'n'wild water world , sea world, warner brothers movie world,ன்னுஎல்லாமே 'உலகங்கள்'தான். ஒவ்வொண்ணுக்கும் நுழைவுச்சீட்டுக்குன்னு தீட்டிருவாங்க. நாலைஞ்சுக்குச் சேர்த்தும் ஸ்பெஷல் டிக்கெட் கிடைக்கும். கோல்ட்கோஸ்ட்லே நீங்க தங்குறதா இருந்தால் அங்கேயே பல இடங்களில் 'தீம் பார்க்' டிக்கெட் ஸேல் லோல்படும். இங்கே இருந்து வாங்கிக்கிட்டுப் போறதைவிட மலிவாவும் கிடைக்கும். நம்ம ஸ்டீவ் இர்வின்(க்ரோக்கடைல் ஹண்ட்டெர்) நடத்திக்கிட்டு இருந்த முதலை ஷோ நடக்கும் Australia Zoo, இன்னும் பலவிதமான பொழுதுபோக்கு ஐட்டங்களும் நிறைஞ்ச இடம்தான் இந்தப் பகுதிங்க. இந்தமுறை இதுலே எதுக்கும் நாங்க போகலை. மகள்கூட வந்தால்தான் ஒரு 'ரைடு' விடாமப் போகணுமுன்னு திட்டம் போட்டுருவா. நானும் கத்திக்கிட்டே எல்லாத்துலேயும் போயிருக்கேன்)
பீன்லேவை ஒரு சுத்து வந்துட்டு அப்படியே போகவேண்டியதுதான். இந்த இடம் ப்ரிஸ்பேன் நகருக்கும் கோல்ட்கோஸ்ட்க்கும் ஏறக்குறைய நடுவுலே இருக்கு. அரைமணி நேரப்பயணம்தான் ரெண்டு பக்கமும். நிறையப்பேர் காரைக் கொண்டுவந்து ரெயில்நிலையத்துலே நிறுத்திட்டு, ரயிலைப் புடிச்சு வேலைக்குப் போய்வராங்க. ரயிலும் காருமா ரகளையாத்தான் இருக்கற இடத்துலே ஒரு பெரிய சூப்பர் மார்கெட் கட்டி வச்சுருக்கும் கில்லாடித்தனம் நல்ல வியாபாரத் தந்திரம். சூப்பர் மார்கெட்ன்னா,இங்கே நான் பார்த்தவரையில் ரெண்டே ரெண்டு நிறுவனங்கள்தான் கொடிகட்டி வாழுது. வுல்வொர்த் ( இது நியூஸியிலேயும் இருக்கு) &கோல்ஸ்( Coles). வேலையை விட்டு வந்து, கையோடு ஷாப்பிங்கை முடிச்சுக்கிட்டு வீட்டுக்குப் போயிறலாம்.
சொல்ல மறந்துட்டேனே....... இந்த கோல்ட்கோஸ்ட் ஹைவே ஒரு டோல் ரோடு. கட்டணம் அதிகமில்லை. வெறும்ஒரு டாலர்தான். அதுவும் போகும்போது மட்டும். பரவாயில்லையே!
தொடரும்...........
படங்கள் போட முடியாமக் குழப்புது இந்த ப்ளொக்கர். உதவி வேணும் ப்ளீஸ்.
Wednesday, June 27, 2007
எ.கி.எ.செ? பகுதி 5
Posted by துளசி கோபால் at 6/27/2007 08:44:00 AM
Labels: Goldcoast ஆஸ்ட்ராலியா., அனுபவம்/நிகழ்வுகள், சுற்றுலா
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நீங்க டோனர் கபாப் அப்படின்னு சொல்லும் ஐயிட்டத்தின் பெயர் ஷவர்மா என இந்தப் பக்கத்தில் சொல்வார்கள். இது பற்றிய விக்கி குறிப்பு இதோ.
அட! இன்னிக்குக்கூட நான் ப்ர்ஸ்ட் இல்லையா?
வாங்க கொத்ஸ்.
நீங்க சொன்ன ச்சுட்டியில் பார்த்தால் இதே சமாச்சாரம்தான் வேற பெயரில்!!!!!
விக்கியில் வருமளவுக்கு இது இத்தனை ஃபேமஸ்ஸா? தெரியாமப்போச்சே(-:
வாங்க சிஜி.
இந்தியாவிலிருந்து நீங்கதான் ஃபர்ஸ்ட்:-))))
நான் கூட யூரோப்பிலேருந்து ஃபர்ஸ்ட்.!!
நானும் கத்திக்கிட்டே எல்லாத்துலேயும் போயிருக்கேன்*///
ஜஸ்ட் இமாஜின்.::)))
ஃபலாஃபல் இங்கே நல்லா இருக்கு.
ஸ்பாகெட்டி ஜன்க்ஷனா
அதிலேயும் சாப்பாடுதானா:)))))
வாசல்ல கங்காரு வந்தா ஆரத்தி சுத்தி வரவேற்க வேண்டியதுதான். ஜிகேக்குத் துணயா இருக்கும்...
வாங்க வல்லி.
இங்கே ஃபலாஃபல் நல்லால்லே(-: தொண்டையில் விக்குது.
கங்காரு மட்டுமுன்னா பரவாயில்லைதான். ஆனா பலவகை 'பெயர் சொல்லாதது'
இருக்காமே(-: ஜிகே அப்ப பாவம் இல்லையோ!
Post a Comment