Sunday, June 17, 2007

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

மணி அஞ்சரைகூட ஆகலை, இப்படி மசமசன்னு இருட்டிக்கிட்டு வருதே'ன்னு ஒரு சலிப்பு.குளிர்காலமாம். இப்படித்தான் சீக்கிரம் இருட்டிருமாம். டாக்ஸி ஓட்டி சொல்றார்.வளைஞ்சு ஓடும் ஆற்றை ஒட்டியே போகும் ரோடு. ஆற்றின் குறுக்கே இருக்கும் பாலங்களில் மினுக் மினுக்ன்னு விளக்கு தோரணங்கள்.

ஜ்யார்ஜ் வில்லியம் ஹோட்டல். பேரே 'பிடுங்கித் தின்னுற மாதிரி' இருக்குல்லே? ஆனால் உஷார்! இருக்கும் இடம், லொகேஷன் அருமை. குவீன் தெரு மாலுக்கு ரெண்டே ப்ளாக்தான். ஏழாவது மாடி.நல்லவேளை மின் தூக்கி இருக்கு. அதைவிட்டுக் காரிடாரில் கால் வைத்தால் எதோ த்ரீ டி maze லே போறது போல வலது திரும்பி நேராப்போய், இடது திரும்பி, நேராப்போய், வலது திரும்பி, நாலடி வச்சு,ஒரு கதவுலே முட்டிக்கலாம். அதைத் திறந்தால்..................

உழக்குலே கிழக்கு மேற்குப் பார்க்கறாப்போல ஒன்னரை மீட்டர் இடம். மூக்கை நீட்டிக்கிட்டு முகத்தில் மோதும் விதமா 45 டிகிரி கோணத்தில் ஒரு கண்ணாடி பதிச்ச அலமாரி. அலமாரிக்கும் வலது பக்கச் சுவருக்கும் இடைவெளி ஒரு அரை மீட்டர்( இருந்தாலே கூடுதல்) அதுலே சைடு வாகாத் திரும்பித்தான் போக முடியும். அப்படிப் போயிட்டா, நீங்க முட்டி விழறது ஒரு படுக்கையில். படுத்தபடி மெள்ளத் திரும்புனா,அட்டாச்சுடு பாத்ரூம். திரும்பாம மேலே பார்த்தா ஒரு டிவி. இது எல்லாத்துக்கும் மேலேன்னு அங்கே(வேறெங்கே? மேலேதான்) ஒரு ஏர் கண்டிஷனர். (படத்துலே பார்த்தா .................ம்ம்ம்ம்ம்ம்ம்)
என்னதான் இது சிட்டியின் முக்கிய பாகத்துலே இருக்கற இடம்னு சொன்னாலும், அதுக்காக இப்படியா?ஒரு சதுர அங்குல இடமும் விடாம 'அலங்கரிச்ச' அறை. அந்த ஒன்னரை மீட்டர்லே ஒரு சன்னமான மேஜை, அதுக்கு ஒரு நாற்காலி. மேலே, அலமாரிக்கும் சுவத்துக்கு இடையில் ஒரு பலகை அடிச்சு அதில் மின்சாரக் கெட்டில். காஃபி, டீ போட்டுக்கலாமாம். ஆனால் 'ப்ரெட் டோஸ்ட்டரை உபயோகப்படுத்தாதே'ன்னு அறிவிப்பு. புகை வந்தவுடனே ஃபயர் அலாரம் அடிச்சு, விட்டத்தில் இருந்து படுக்கையில் பூ மழை பொழியுமாம்.
போட்டும், இப்படியாவது மழை வந்தால் ஆகாதா? அதான் அஞ்சு வருசமா மழையே இல்லாம காஞ்சு கிடக்காமே! திடுமுன்னு ஒரு இரைச்சல். என்னவோ ஏதோன்னு நடுங்கிக்கிட்டே இவரைப் பார்த்தால், 'சூடா இருக்கே'ன்னு அந்த ஏர்கண்டிஷனரை ஆன் செஞ்சிருக்கார். இப்ப என் முறைன்னு நான் டிவி ரிமோட்டை எடுத்துக்கிட்டேன். விரலை ஓடவிட்டா..................டக் டக் டக் டக் டக்! எண்ணி அஞ்சே சானல். அதுலே ரெண்டு வரிவரியா வருது. இன்னொண்ணு கறுப்பு வெளுப்புலே. என்னடான்னு பார்த்தால் இன்னொரு சானலின் ரிப்பீட்டு இது. உருப்படியா வர்றது ரெண்டே ரெண்டுதான்னு புரிஞ்சது. ஓஓஓஓஓஓ........இதைத்தான் 'அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை'ன்னு சொல்றமோ?

இது(வும்) இணையத்துலே பார்த்துத் தெரிவு செஞ்ச இடம்தான். முந்தி ஒருக்கா 'கோல்ட் கோஸ்ட்'லே இப்படி ஒரு இடத்தை இணையம் மூலம் புக் பண்ணிட்டு, நேரில் பார்த்தப்ப ................... அது ஒரு பெரிய கதை. அப்பாலே ஒருநாள் சொல்றேன். 'சூடு பட்ட பூனை'யா 'இந்த முறை ரெண்டே நாளுக்கு மட்டும் அறை எடுத்துக்கலாம். அப்புறம் அறை நல்லா இருந்தா இன்னும் அஞ்சு நாளுக்கு நீட்டிக்கலாமு'ன்னு சொன்னேன். இவர்தான் போய் இறங்குனவுடனே மறுநாளுக்கு அறை தேடிக்கிட்டே இருக்கணுமா? மூணு நாளைக்கு எடுக்கலாம். நமக்கும் அறை தேட நேரம் இருக்கும்னு சொன்னார்.

முகம் கழுவிக்கிட்டுக் கொஞ்சம் ஃப்ரெஷா வெளியே கிளம்புனோம். நல்லாவே இருட்டிப் போயிருந்துச்சு. ரொம்ப மெதுவா நடந்தாலும் அஞ்சு நிமிஷ நடையில் குவீன் தெரு மாலுக்குப் போயிரலாம். இதுலே ரெண்டு இடத்துலே ட்ராஃபிக் லைட்கள். என்னமோ மெஷின் துப்பாக்கியாலே சுடறமாதிரி 'டட்டட் டட்டட்'னு சத்தம் போட்டுக்கிட்டேப் பச்சை மனுஷன்' வரும்போது தெருவைக் கடக்கணும். சில சாப்பாட்டுக் கடைகள் மட்டுமே திறந்திருக்கு. மத்தபடிமாலே ஜிலோன்னு கிடக்கு. தலையில் நீல விளக்கோட ரெண்டு போலீஸ் கார்கள் மாலின் நடுப்பகுதியில் ஓரமா நிக்குது. 'விஷமி'களுக்கு எச்சரிக்கை. இங்கே சனி ஞாயிறுகளில் சாயங்காலம் அஞ்சோடு கடைகண்ணிகள் க்ளோஸ்.ஆளரவமே இருக்காது. அப்படி ஒண்ணும் பெரிய மாற்றம் இல்லை. சில வருஷங்களுக்கு முன்னே பார்த்த மாதிரியேதான் இருக்கு எல்லாமே, போலீஸ் கார் உள்ப்பட. நாளைக்குப் பொழுது விடிஞ்சு ஊருக்குள்ளே போனால் மாற்றங்கள் கண்ணுக்குத் தெரியுமோ என்னவோ?

ராத்திரியில் வயித்தைக் காயப்போடக் கூடாதேன்னு 'சப்வே'யில் சாப்பாட்டை(!) முடிச்சுக்கிட்டு, குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் மறக்காம வாங்கிக்கிட்டோம். துளித்துளியாக் குடிச்சு நாளைக் காலைவரை ஒப்பேத்திக்கணும்.வெறும் 600 மில்லிக் குடிதண்ணீர் மூணு டாலர். வெளியே இறைஞ்சு கிடக்கும் கோக் வகையறா 99 செண்ட்.இங்கே தண்ணிக்கு நிஜமாவே 'வாழ்வு'தான். அஞ்சு வருசமா மழை இல்லையாம். அணைத் தண்ணீர் ரிசர்வ் வெறும் 20%தான் இருக்காம். அதனாலே ஒரு மனிதருக்கு 140 லிட்டர் தண்ணின்னு இப்ப அரசாங்கம் சொல்லுது. இப்படிக் காஞ்சுகிடக்குமா ஒரு நாடு? ஹூம்.........

எல்லாம் பூட்டி இருந்தாலும் அங்கங்கே கண்ணாடி ஜன்னல் ஊடாக எல்லாம் தெரியறமாதிரி பளிச்சுன்னு'விண்டோ ட்ரெஸ்ஸிங்' செஞ்ச ரெண்டு தெருக்களை இணைக்கும் குறுக்குப் பாதைக் கடைகள். ஆர்கேடுகள். அனக்கமில்லாத அமைதி. அட்டகாசமான கப்புகளுடன் ஒரு டீக்கடைக் கூட இருக்கு.
பக்கத்துத் தெருவழியாகத் திரும்பி வரும் வழியில்............. அட! இங்கே பார்றா!! பெஞ்சு மேல் ஒய்யாரமாப் படுத்து ஓய்வெடுக்கும் கங்காரு. அதுக்கு மனமகிழ்வூட்ட ட்ரம்பெட் வாசிக்கும் ரெண்டு கங்காருகள், ச்சும்மா அங்கே நின்னுக்கிட்டு இதை வேடிக்கைப் பார்க்கும் கங்காருன்னு ஒரு ச்சின்ன கங்காருக் கூட்டம்.

எந்த ஊர் இதுன்னு சொல்ல மறந்துட்டேனே.................. ப்ரிஸ்பேன்.
ஆஸ்ட்ராலியாவின் மூன்றாவது பெரிய நகரம்.

தொடரும்...................

18 comments:

said...

அதுதானே பாத்தேன். இன்னும் ப்ரிஸ்பேன் பத்தி ஒண்ணும் நீங்க சொல்லக்காணமேன்னு. ஆனாலும் அந்த ஷொகேஸ்ல‌ பாத்துட்டு நீங்க வாங்குனதுன்னு முதல்ல நினச்சேன். அப்பறமா இன்னும் படிச்சப்பறம் இல்லன்னு ஏதோ கடைன்னு தெரிஞ்சுது

said...

கங்காருக்கள் சூப்பர்...வரி வரியா இருக்கே! வரிக்குதிரை மாதிரி வரி கங்காருவா டீச்சார்? :-)

//வெறும் 600 மில்லிக் குடிதண்ணீர் மூணு டாலர். வெளியே இறைஞ்சு கிடக்கும் கோக் வகையறா 99 செண்ட்//

நீங்க கோக்கில் இருந்து நீரை மட்டும் பிரிச்சி எடுக்கும் ஒரு பறவையைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா?

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

//இன்னும் ப்ரிஸ்பேன் பத்தி ஒண்ணும் நீங்க சொல்லக்காணமேன்னு...//

அப்படியெல்லாம் ரசிகப்பெருமக்களை ஏ 'மாத்திருவேனா' என்ன?
இதோ ஓடோடி வந்தேன் இந்தக் கதை சொல்(லி)ல.

நம்மூட்டு ஷோகேஸ் யானைகளும், பூனைகளும், புள்ளையாருமால்லே
இருக்கும்:-)))

said...

வாங்க KRS.

//நீங்க கோக்கில் இருந்து நீரை மட்டும் பிரிச்சி எடுக்கும்
ஒரு பறவையைப் பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா?//

அப்படி ஒண்ணு இருந்தா எடுத்த தண்ணியையெல்லாம் அது தானே குடிச்சுறாதா?
ஏமாந்துபோய் நமக்குத் தருமா என்ன?

( இந்த தண்ணீரை மட்டும் பிரிச்சுடுக்கும் பறவைன்னதும், எனக்கு அன்னப்பறவை
நினைவு வருது. அது பாலை ஒரு பாத்திரத்திலும், தண்ணீரை ஒரு பாத்திரத்திலும்
வச்சால், தண்ணி வேணாமுன்னுட்டு பாலை மட்டுமே பருகுமாம். இது எங்க
தமிழ் ஆசான் ஒரு முறை சொன்னது)

said...

தேவையில்லா பொருட்களில் இருந்து பண்ண அந்த கங்காரு சூப்பர்.
2வதோ 3 வது படத்தில் "துண்டு" காய போட்டு இருப்பதை படம் எடுத்துள்ளீர்கள்?ஏதேனும் விசேஷமா?இல்லை அந்தூரில் அப்படித்தான் காயப்போடுவார்களா?:-)))))

said...

வாங்க குமார்.

//............... "துண்டு" காய போட்டு இருப்பதை படம் .............//

லொள்ளுதான்:-)))))

ஒருவேளை கடைக்காரங்க, காயப்போட்ட துண்டை எடுக்க மறந்துட்டாங்களோ? :-))))

said...

ஆக, பணம் பண்றதுக்கு மெல்போர்ன்ல ஹோட்டல் கட்டினாப் போதும்னு சொல்றீங்க.
செய்துடலாம்.
எங்க Zermattஅளவு இல்லாட்டாலும்
சின்ன ரூம்தான்.
உள்ளவரக் கதவாவது பெரிசா இருந்ததா.:)))))

said...

வாங்க வல்லி.

இது ப்ரிஸ்பேன் நகர்.

இன்னிக்குக் காலையில் மெல்பேர்ன்லே CBD யில் ஒரு ஆள்
துப்பாக்கி வச்சுக்கிட்டு கண்டமானம் 6 ரவுண்டு சுட்டு ஒருத்தர்
மரணம், இன்னும் சிலர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்(-:

said...

இங்கே மட்டும் என்ன...
பாலைவிட தண்ணீர் விலை அதிகம் தானே?

said...

//இங்கே தண்ணிக்கு நிஜமாவே 'வாழ்வு'தான். அஞ்சு வருசமா மழை இல்லையாம். அணைத் தண்ணீர் ரிசர்வ் வெறும் 20%தான் இருக்காம். அதனாலே ஒரு மனிதருக்கு 140 லிட்டர் தண்ணின்னு இப்ப அரசாங்கம் சொல்லுது. இப்படிக் காஞ்சுகிடக்குமா ஒரு நாடு? ஹூம்.........//

அப்பாடா.. இனிமே பிரிஸ்பேனுக்கு மெட்ராஸ் எவ்வளவோ தேவலைன்னு சொல்லி மனசைத் தேத்திக்கலாம்..

said...

அக்கா, சவுக்கியமா இருக்கீங்களா??? நியாபகம் இருக்க்க்க்க்க்காஆஆஆஆஆ??? :)

வீ எம்

said...

பிரிஸ்பேன் கொள்ளை அழகு.பேசாம ஒரு நடை போய் சிட்னியில் பேரனை பார்த்துவிட்டு பிரிஸ்பேனும் போகனும்.
கங்காருவை எப்படி கொண்டாடுகிறார்கள்,ஆனால் நம்ப ஊரில் சிங்கத்தை வேட்டையாடி மகிழ்கிறோம்

said...

வாங்க சிஜி.

பால் விலை கம்மியா? அதான் கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம்
தாராளமா நடக்குதா? !!!!!

said...

வாங்க உண்மைத்தமிழரே.

//அப்பாடா.. இனிமே பிரிஸ்பேனுக்கு மெட்ராஸ்
எவ்வளவோ தேவலைன்னு சொல்லி
மனசைத் தேத்திக்கலாம்..//

உங்க மனசு தேறணுங்கறதுக்காகவே இன்னும் பல விஷயங்கள்
அடுத்த பகுதிகளில் வரப்போகுது பாருங்க:-))))

said...

வாங்க வி.எம்.

நலமா? உங்க பழைய பதிவு துளசியக்கா ( துர்கா மாதா) இப்ப போனவாரம்
திடீர்னு தமிழ்மணத்துலே வந்ததும் திகைச்சுத்தான் போயிட்டேன்:-))))))

ஓஹோ....... ஞாபகப்படுத்தத்தான் இப்படி மீள்பதிவா? :-)

said...

வாங்க தி.ரா.ச.

//கங்காருவை எப்படி கொண்டாடுகிறார்கள்,ஆனால்
நம்ப ஊரில் சிங்கத்தை வேட்டையாடி மகிழ்கிறோம்//

பாவங்க கங்காரு. தேசிய மிருகமுன்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே அதோட
இறைச்சி 'சூப்பர் மார்கெட்'லே விற்கறதைப் பார்த்தேன். போதாக்குறைக்கு
அங்கே முதலை இறைச்சிகூட 'டெலிகஸி'யா இருக்கு.

'ஆஸிகளுக்கு நோ செண்டி'

said...

ஆஹா ஆஹா! அடுத்த தொடரா. சூப்பர். நம்மளைத்தான் படிக்கவுடாம ஆணி புடுங்க வைக்கிறாங்க. இருந்தாலும் எப்படியாவது வந்து படிச்சுட மாட்டோம்....

said...

வாங்க கொத்ஸ்.

வகுப்பு லீடரைக் காணொமேன்னு நடுங்கிட்டேன். ஆணி புடுங்கல்ஸ்?

இது மினித்தொடர்தான். ஒரு இருபத்தி எட்டுக்குள்ளே முடிச்சுறமாட்டேன்? :-)