Tuesday, June 19, 2007

எ.கி.எ.செ? பகுதி 2

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?


நண்பர் ஒருத்தர் , காலை பத்துமணிக்கு வரேன்னு சொல்லி இருந்தார். அதுக்குள்ளெ எழுந்து கடமைகளை ஒப்பேத்தி,குவீன் தெரு மாலுக்கு வந்தோம். ஹப்பாடா........... சூப்பர் மார்கெட் திறந்திருக்கு. முதலில் பாய்ஞ்சது தண்ணீர்பாட்டிலுக்கு. ஒன்னரை லிட்டர் 99 செண்ட். பார்த்தவுடனே தாகம் அடங்கிருச்சு. அப்படியே காய்கறி, பழங்கள் பகுதிக்கு வந்தால்............நெருப்பை மிதிச்சேன். ஒரே தீப்பொறி பறக்கும் விலைகள். வாழைப்பழம் 7 டாலர். ஆப்பிள் (ராயல் காலா) 5. தக்காளிப்பழம் கெட்ட கேடு 10 டாலர்! வயித்தெரிச்சலை அணைக்க தர்பூசணி மட்டும் 2 டாலர். அழகா பெரியதுண்டமா, பழத்தை நாலா வகுந்து வச்சிருக்கு. எப்படித் தின்னறது? வெட்டி எடுக்க கத்தி வேணாமா?

ப்ரேக் ஃபாஸ்ட்க்கான சாமான்கள், கொஞ்சம் பால் எல்லாம் வாங்கிக்கிட்டோம். மனசென்னவோ தர்பூசணி மேல்தான்.அறைக்கு வரும்போதுதான், பேசாம ஒரு கத்தி வாங்கிக்கலாமுன்னு தோணுச்சு. பகல் ரெண்டுவரை 'வுட்டி பாய்ண்ட்' என்ற இடத்தில் இருந்தோம். கடற்கரையை ஒட்டி இருக்கும் பகுதி. கடலைப் பார்க்கும் விததில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒண்ணுபிரமாண்டமாய் கட்டிக்கிட்டு இருக்காங்க. தண்ணீர் கொஞ்சம் உள்வாங்கி இருக்கும் இடத்தில் ச்சின்னதா ஒரு pier.அதையொட்டி வார் மெமோரியல். இதுக்கு எதிர்வாடையில் RSA கட்டிடம்.

திரும்பி வரும்போது ஜ்யார்ஜ் தெருவில் மாலுக்குப் பக்கத்தில் கொண்டு விட்டுட்டு நண்பர் போயிட்டார். தெருக்களோட பேர் எல்லாமே, ஆன், ஆல்பர்ட், மேரி, எலிஸபெத், மார்கரெட், சார்லெட், ஆலிஸ், எட்வர்டு, வில்லியம், ஜ்யார்ஜ்ன்னுஒரே ராயல் ஃபேமிலி அங்கத்தினர் பேருங்கதான். அங்கத்து மாலுக்குமே 'குவீன் ஸ்ட்ரீட் மால்'ன்னு பேர். ஆமாம், குற்றவாளிகளாப் பார்த்து இங்கே ஆஸ்தராலியாவுக்கு நாடு கடத்துன அரச குடும்பத்தின் மீது இவ்வளோ பற்றும் பாசமுமா? செஞ்சது மிக பெரிய குற்றங்கள்னு சொல்ல முடியாதாம். சிலர் பசிக்காக ரொட்டியைத் திருடுன குற்றம் செஞ்சவங்களாம்.கண்காணாத தேசத்துக்குக் கப்பலில் அனுப்பி வச்சது அரசாங்கம். அப்புறம் கொஞ்சம் 'ஆராய்ஞ்சு' பார்த்ததில் இன்னும் தகவல்கள்கிடைச்சது. ஒரு வேளை, நல்ல நாடா(வே)ப் பார்த்து(!) நாடு கடத்தி விட்டதுக்காக(வே) இந்த ராஜ விசுவாசமோ?

எப்படியும் வகுப்புக்கு வந்தது வந்தீங்க, அப்படியே நம்ம அண்டை நாட்டுச் சரித்திரம் 'கொஞ்சூண்டு' தெரிஞ்சுக்கறதுலே என்ன தப்பு? இடைக்கிடையில் தெரிஞ்சதைச் சொல்லவா?

நாங்க இதுக்கு முன்னேயே சில முறைகள் இங்கே ப்ரிஸ்பேனுக்கு வந்துட்டுப் போயிருக்கோம். அது பதிவர் ஆகும் முன்பு. இனிமேல் ப.மு & ப.பி. ன்னு காலத்தைப் பிரிச்சுக்க வேண்டியதுதான்:-)

ஆஸ்ட்ராலியாவுக்கு வெள்ளையர்கள் வந்து செட்டில் ஆகி இப்ப 219 வருஷம் ஆகுது. அவுங்க வந்து இறங்கியது சிட்னி பக்கம்தானாம். இந்த 219 வருசங்களில் நாடு நல்ல நிலமைக்கு முன்னேறி இருக்கு. இவுங்களுக்கு முன்பே அங்கே இருந்த பழங்குடிகள் 'அபாரிஜன்'களாம். இவுங்க இங்கே வந்து அறுபதாயிரம் வருசம் இருக்குமுன்னு சொல்றாங்க. லத்தீன் மொழியில் 'அபாரிஜின்' னு சொன்னா 'ஆரம்பத்துலெ இருந்தே இருக்கறதாம்'!(aborigine = from the biginning)

நாட்டை மொத்தம் ஏழு பகுதிகளாப் பிரிச்சிருக்காங்க. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவீன்ஸ்லாந்து,வெஸ்டர்ன் ஆஸ்தராலியா, நார்தர்ன் டெரிடரி, சதர்ன் ஆஸ்தராலியா டாஸ்மானியா இப்படி ஏழாப் பிரிஞ்சிருக்கு நாடு.தலைநகரம் இருக்கும் ஊர் கேன்பரா, ஆஸ்தராலியன் கேப்பிடல் டெரிரரின்னு தனி அந்தஸ்தோட இருக்கு.

என்ன யோசிக்கிறீங்க? எதாவது 'சட்'னு நினைவுக்கு வருதா? ம்ம்ம்ம்ம் நம்ம நாடு........அதே, அதே!! ஒவ்வொரு பிரிவும் ஒரு மாநிலம்(ஸ்டேட் ). தனித்தனி அரசாங்கம். அதுக்குன்னு முதல்வர், மற்ற மந்திரிகள் உள்ள சபை. அப்புறம் மொத்த நாட்டுக்கும் பொதுவா ஒரு பிரதமர், அவருடைய பாராளுமன்றம்னு இருக்கு. அடடா......... அச்சு அசலா நம்ம நாடேதான். புரிஞ்சுக்கறது ஒண்ணும் கஷ்டமே இல்லை:-) ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கு.
(இதுதான் அந்தக் கெஸ்ஸோவாரி )

ஜனாதிபதிக்குப் பதிலா கவர்னர் ஜெனரல். இன்னும் மாட்சிமை தாங்கிய மகாராணியின் ஆளுகைக்கு உட்பட்ட சுதந்திர நாடுதான். சுதந்திரம் கிடைச்சது ஜனவரி முதல்தேதி 1901. போச்சுரா........ சுதந்திர தினமுன்னு கிடைக்கும் ஒரு நாள் லீவு அம்பேல்(-:

நாட்டின் மக்கள் தொகை போன வாரம்தான் 21 மில்லியன் கணக்கைத் தொட்டுச்சுன்னு நம்மூர் டிவியில் சொன்னாங்க.எம்மாம் பெரிய நாடு! அக்கம்பக்கம் பிக்கல் பிடுங்கல் இல்லாத தனி நாடு. முழுக்கண்டமும் இப்படி ஒரே நாடாஅமைஞ்சிருக்கு பாருங்க. அதிர்ஷ்டமய்யா அதிர்ஷ்டம்!

அப்படி மொத்த அதிர்ஷ்டமும் ஒரே மண்ணுலே போனா எப்படின்னு பாதிக்குப் பாதி பாலைவனம் & வெறும் செம்மண் பூமி.. ஒண்ணும் விளையாது. அதுவும் நாட்டுக்கு நட்ட நடுவாக் கிடக்கு கல்லும் மலையுமா (-: சுத்திவர இருக்கற ஊர்களில்தான் ஜனங்க இருக்காங்க. வெய்யில் மட்டும், குளிர் மட்டுமுன்னு சில இடங்கள். எல்லாம் கலந்து கட்டி இருக்கறதுன்னு பல இடங்கள்னு ஒரு மார்க்கமாத்தான் இருக்கு இந்த நாடு.

இந்த நாட்டைப் பத்தி நினைச்சவுடனே மனசுலே வரும் படம் காங்காரு. இதுலே மட்டும் 60 வகைகள் இருக்காம்.அதுலேயும் 'ரெட் கங்காரு'ன்னு சொல்றது ரொம்பவே விசேஷமாம். ரொம்பப் பெரிய சைஸ். ஆண்கள் கிட்டத்தட்ட90 கிலோ எடை. ரொம்ப உயரமா வேற இருக்குங்க. எழுந்து நின்னா சிலது ஏழடிக்கு வருதாம். அம்மாடியோவ்! ஆனால் பொண்ணுங்க மட்டும் கூடிப்போனா 30 கிலோ. கொடி இடைக் கங்கா(ரி)ருகளோ?

கங்காருக்கு அடுத்ததா கொஆலா(KOALA) வையும் ஞாபகம் வச்சுக்கணும். இது ஒரு அபாரிஜன் பேர். இதுக்கு அர்த்தம் 'குடிக்காதது' (no drink) . இங்கே 'குடி' ன்னா அது வேற குடி. அட... இது வெறுந் தண்ணி. இந்த மிருகங்கள் தண்ணீயே குடிக்காதாம். அப்ப தாக சாந்தி? இதுங்க தின்னுற இலையிலே இருக்கும் ஈரப்பதம்தான். ஒரே ஒரு வகை இலையை மட்டுமே இதுங்க தின்னும். அதுதான் யூகலிப்டஸ் இலைகள். முதல்தடவையா அந்த நாட்டுக்குப் போனப்ப,வழியில் பார்க்கற இந்த வகை மரங்களில் கொஆலா இருக்கான்னு அண்ணாந்து அண்ணாந்து கண்ணை நட்டுக்கிட்டு இருப்பேன். ஊஹூம்....... ஒண்ணும் தட்டுப்படலை(-: அப்புறம்தான் தெரிஞ்சது இதுங்களோட இனமும் கொஞ்சம் கொஞ்சமா அருகி வர்றதாலே அங்கங்கே சரணாலயம் ஏற்படுத்தி இதுகளை வச்சு வளர்க்கறாங்கன்னு. அந்திசாயற நேரம் தவிர மத்த சமயமெல்லாம் தூக்கமே தூக்கம் தானாம்.

ஒரு தடவை 'லோன் பைன்' கொஆலா சரணாலயம் (Lone Pine Koala Sanctuary in Brisbane) போனப்ப எடுத்தபடம் இதோ உங்களுக்காக.

இந்த கங்காரு, கொஆலா வகைகளைத்தவிர இந்த நாட்டுக்குன்னே பல ஸ்பெஷல் மிருகங்களும் இருக்கு. 'ப்ளாட்டிப்பஸ்,டிங்கோ, டாஸ்மானியன் டெவில், ஃப்ரில் நெக் லிஸ்ஸர்டு,பிக்மி போஸ்ஸம்,கடல்பசு' ன்னு எக்கச்சக்க வகைகள்.' கெஸ்ஸோவாரி'ன்னு கூட ஒரு பறவை தலையில் ஹெல்மெட்டு வச்சுக்கிட்டு இருக்கு. இதைப் பத்தியெல்லாம் நம்ம ஆஸி பதிவர்கள் நிறைய எழுதலாம்.
(கடல் பசு)
தொடரும்..........


21 comments:

said...

நிறைய நண்பர்கள் ப்ரிஸ்பேன் தான் போயிருக்காங்க. எல்லாரும் ஆஸ்திரேலியா போக சொல்ல காரணம் இந்தியா மாதிரி தட்பவெப்பம்னு.
நாமளும் போகலாமான்னு ஆசையா இருக்கு உங்க போட்டோவைப்பாத்தா

said...

டீச்சர், எங்கள விட்டுட்டு நீங்க மட்டும்
எக்ஸ்கர்ஷன் போயிட்டீங்களே,
சரி, சரி இதுக்கெல்லாம் நாங்க ஸ்டிரைக் செய்ய மாட்டோம்.

வரும்போது ரெண்டு கிரேட் fபாஸ்டர்ஸ்
வாங்கி வரவும்.

said...

// கிரேட் fபாஸ்டர்ஸ்//
Repeat. Btw, History and Geography lessons are good

said...

எ.கி.எ.செ
என்ன கிடைச்சு என்ன செய்ய- எனக்கு இப்படித்தான் தோனுகிறது.பெருசுக்கு வாங்கும் போது எனக்கும் 1 கிலோ வாழைப்பழம் வாங்குங்க.:-))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி..

ஆசையே துன்பத்திற்குக் காரணமாம். கவனம்!

ஒரு இடத்துக்குச் சுற்றுலா போய்வர்றது வேற, அங்கியே
தங்கி வாழ்க்கை நடத்துறது வேற இல்லையா?

முன்னதில் எல்லாம் ப்ளஸ். பின்னதில் பலது மைனஸ்.

அதனால் 'எண்ணித் துணிக கருமம்':-)

said...

வாங்க பெருசு.

இந்த வகுப்பு உங்களுக்கு okay தானே?

அதென்ன posters? நேரில் பார்க்க வேண்டியதை நேரில்தான் பார்க்கணும்:-))))

said...

வாங்க இளா.

//History and Geography lessons are good//

for who?

anyway Thanks:-)

said...

வாங்க குமார்.

ஆமாம். தலைப்பைச் சுரு(ட்டு)க்குனா தப்பா? :-)))))

//பெருசுக்கு வாங்கும் போது எனக்கும்
1 கிலோ வாழைப்பழம் வாங்குங்க.:-))//

பெருசு கேட்டது பழமா? !!!

இங்கே நம்மூர்லே கிலோ 1.79தான்.

said...

//வெட்டி எடுக்க கத்தி வேணாமா?//

பாஸ்டனில் இருக்கும் வெட்டி பிரிஸ்பேன் வந்து ஏன் கத்தி எடுக்கணும்? சரி போகட்டும். ஒரு மாலில்தானே இருக்கீங்க. அங்க இருக்கும் புட் கோர்ட் போயி பிளாஸ்டிக் கத்தி 4-5 பார்சேல் பண்ண வேண்டியதுதானே... இதில் என்ன குழப்பம்? :))

//இடைக்கிடையில் தெரிஞ்சதைச் சொல்லவா?//
சொல்லுங்க டீச்சர். (ஆனாலும் பசங்களுக்கு எல்லாம் எம்புட்டு ஆர்வம் அப்படின்னு வர ஆனந்த கண்ணீரைத் தொடைச்சுக்கிட்டு ஆட்டத்தை ஆரம்பியுங்க!)

//இனிமேல் ப.மு & ப.பி. ன்னு காலத்தைப் பிரிச்சுக்க வேண்டியதுதான்:-)//

அப்போ மா.மு, மா.பி??? (அதாங்க மாதாமகி ஆகும் முன் / பின்!!)

//(aborigine = from the biginning)//

அவங்க பார்க்கச் சின்னதாகத்தான் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேனே!!

//ஆஸ்தராலியன் கேப்பிடல் டெரிரரி//
உங்களுக்கும் ட / ர கன்பியூஷன் போல!! ;-)

//முழுக்கண்டமும் இப்படி ஒரே நாடாஅமைஞ்சிருக்கு பாருங்க.//
அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்! ஆஸ்திரேலியா எனப் பொதுவாகச் சொன்னாலும் பல நாடுகள் இக்கண்டத்தில் இருக்கின்றன. Oceania என்ற பெயரில் வழங்கப்பட்டால் நியூசி கூட இக்கண்டம்தான்.

வெறும் ஆஸ்திரேலியா என எடுத்துக் கொண்டால் கூட நியூ கினியா போன்ற நாடுகள் இக்கண்டத்தில் உள்ளன.

//கொடி இடைக் கங்கா(ரி)ருகளோ?//

பார்த்து. கங்காரி... பியாரி பியாரி பியாரி... ஒய்யாரி.... வாடி வாடி வாடி அப்படின்னு நம்மாளுங்க பாட்டு எழுதிடப் போறாங்க!! :))

//இதைப் பத்தியெல்லாம் நம்ம ஆஸி பதிவர்கள் நிறைய எழுதலாம்.//

ஆஸி பதிவர்கள் எழுதலைன்னா என்ன, நியூசி பதிவர் எழுதலாமே!! :))

said...

//பெருசு கேட்டது பழமா? !!!//

ஒண்ணுக்கு ரெண்டு பேர் பழமா இருக்கீங்க. (ஆனா டீச்சர், உங்க சிரிப்பை எல்லாம் பார்த்தா அப்படித் தெரியலை!!) அவரு கேட்ட ஐட்டமே வேற!!

said...

வாங்க கொத்ஸ்.

எட்டு எட்டாப் பிரிக்கச்சொன்னது உங்க வாழ்க்கையை.
இந்தப் பதிவை இல்லை:-)))))

ஆனாலும் இவ்வளவு கவனமா ஊன்றிப்படிக்கும் க்ளாஸ் லீடரை நினைச்சு,
இங்கே ஆனந்தமே கண்ணீரா பொழியுது!


கண்டம் பெருசுன்னதும் இப்படித்துண்டம்போட்டுக்கறமாதிரி அக்கம்பக்கத்து
நாடுகள் எல்லாம் வந்து ஒட்டிக்கப்பாக்குதே.

ஓஷியானா ன்னு சொல்லிக்கிட்டுத்தான் இப்ப ஆஸிக்கும் நியூஸிக்கும் ஒரே கரன்ஸி வேணுமுன்னு
அங்கே ஒருத்தர் கிளம்பி இருக்கார். எங்க 'அம்மா' செமக்கோவத்துலே இருக்காங்க.

பெருசு, எதாவது விபரீதமாக்கேட்டு, வகுப்பை திசை திருப்பப் பார்க்குதா என்ன?

said...

மக்களே,

பெருசு கேட்டது புரிஞ்சுருச்சு:-

ரெண்டு crate......:-))))

நம்ம வகுப்பு குஜராத் மாநிலம்:-)

said...

//ஒன்னரை லிட்டர் 99 செண்ட். பார்த்தவுடனே தாகம் அடங்கிருச்சு. அப்படியே காய்கறி, பழங்கள் பகுதிக்கு வந்தால்............நெருப்பை மிதிச்சேன். ஒரே தீப்பொறி பறக்கும் விலைகள். வாழைப்பழம் 7 டாலர். ஆப்பிள் (ராயல் காலா) 5. தக்காளிப்பழம் கெட்ட கேடு 10 டாலர்!//

இப்பத்தான் மன்ச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷமா கீது..

said...

எ.கி.எ.செ பேரே சரியாத்தான் இருக்கு.நடுல புள்ளி வைக்கிற பிரச்சினை தவிர நமக்குப் படித்து அனுபவிக்கத்தான் தெரியும் புட்டுப் புட்டு ஆராயத் தெரியாது.
அதனால எனக்கு ஃபாஸ்டர்ஸும் வேண்டாம்:-)))

//ஒரு இடத்துக்குச் சுற்றுலா போய்வர்றது வேற, அங்கியே
தங்கி வாழ்க்கை நடத்துறது வேற இல்லையா?//

இதுதான் உண்மை.எனக்கு இப்ப எல்லாம் நாம இந்த உலகத்துக்கு வந்ததே சுற்றுலா தானோனு வேற தோணுது.:-)

said...

present, teacher!

said...

வாங்க உண்மைத்தமிழரே.

//இப்பத்தான் மன்ச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷமா கீது..//

இதுக்கே இப்படிச் சொல்லிட்டா எப்படி? இன்னும் குளிரக்குளிர சந்தோஷமான
விஷயங்கள் உங்களுக்கான ஸ்பெஷலா
வரப்போகுது பாருங்க. வெயிட் அ நிமிட்:-))))))

said...

வாங்க வல்லி.

//இதுதான் உண்மை.எனக்கு இப்ப எல்லாம் நாம இந்த உலகத்துக்கு
வந்ததே சுற்றுலா தானோனு வேற தோணுது.:-) //

இ(த்)து............


சுற்றுலாவுக்குள் ஒரு சுற்றுலா:-)))))

said...

வாங்க தருமி.

ஆஜர் போட்டாச்சு.

இப்பவாச்சும் 'மண்டபத்துலே' இருந்து வெளியே வந்தீங்களே:-)))))

said...

june 21 ச்சின்ன நாள் வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகளுக்கு நன்றி ப்ரசன்னா.

இன்னிக்கு ( ஜூன் 22)தான் ச்சின்ன நாள் !!!!

இதைத் தாண்டியாச்சுன்னா கொஞ்சம் மனசுலே ஆசுவாசம். இனிமே பகல் நேரம்
கூடும், குளிர் போயிருமுன்னு(??) ஒரு 'நம்பிக்கை'தான்:-)))))

said...

http://nirmalaa.blogspot.com/2007/06/blog-post.html

இதைக் கொஞ்சம் கவனியுங்க துளசி :-)