Monday, June 25, 2007

எ.கி.எ.செ? பகுதி 4

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?


ச்சும்மா குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டவேணாமுன்னு ஒரு காரை, Hertz லே வாடகைக்கு எடுத்துக்கிட்டோம். ஏற்கெனவே இங்கே நியூஸியில் இருந்து பதிவு செஞ்சு வச்சது. சாவியைக் கையில் வாங்கும்போது 'என்ன கலர்?'னு கேட்டா.......'நீங்க போட்டுருக்கும் உடுப்போட நிறம்தான். 'பர்கண்டி'ன்னு சொல்றார் அந்த ஆள்:-)



'ஊர் சுத்தறது' ஆரம்பிச்சது. சிட்டியை விட்டு வெளியே போற வழியில்தான் அரசாங்கக் கட்டிடங்களும், பொட்டானிக்கல் கார்டனும் இருக்கு.பார்க்கிங்தான் இங்கே ஒரு பெரிய கஷ்டம்,வண்டி நிறுத்த இடமே கிடைக்கறது இல்லை. அப்படியே ஓட்டிக்கிட்டு வந்தவுடன் ஒரு பெரிய பாலத்தைக் கடக்கும்போதே கிளைகிளையாப் பிரிஞ்சு ஆரம்பிச்சுருது அவுங்க மோட்டர் வே. சரியானபடி டைரக்ஷனைக் கவனிச்சு 'ஓட்டுனருக்கு'ச் சொல்லலைன்னா தொலைஞ்சோம். ( யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே, பெண்ணுங்களுக்கு மேப் படிக்கத் தெரியாதுன்னு. மெய்யாலுமா? )



ச்சும்மா சொல்லக்கூடாதுங்க. ரோடுகளின் தரம் அபாரம். ரொம்ப நல்லா பராமரிச்சு வச்சுருக்காங்க. காரில் எங்கியாவது காணாமப் போகணுமுன்னாக்கூடச் சான்ஸே இல்லை. கண்ணுலே இருந்து தப்பமுடியாத அளவுலே அறிவிப்புகள் வேற. எங்கே பார்த்தாலும் புதுசு புதுசாக் குடி இருப்புகள் கட்டிக்கிட்டு இருக்காங்க. கட்டிடத் தொழிலாளிகளுக்கு வேலை இன்னும் ஒரு முப்பது வருசத்துக்கு கேரண்டி.
இந்த' குவீன்ஸ் லேண்ட்'ன்னு சொல்றமே இந்த மாநிலம் முந்தி நியூ சவுத் வேல்ஸ் கூடத்தான் இருந்துச்சாம். இந்த மாநிலம் அங்கிருந்து பிரிஞ்சது 1859 லே. அப்ப இங்கிலாந்தின் மாட்சிமை பொருந்திய மகாராணி விக்டோரியா அவர்கள்தான் இதை பிரகடனம் செஞ்சு, இதுக்கான பத்திரத்தில் கையெழுத்துப் போட்டாங்க. அதனாலேதான் குவீன்ஸ் லேண்டுன்னு பெயரும் வந்துருச்சு.




இப்ப இதுதான் ஆஸ்தராலியாவில் ரெண்டாவது பெரிய மாநிலம். இங்கே வெள்ளையர்கள் கால் பதிக்குமுன்பே, ஒருநாப்பது அம்பதாயிரம் வருசங்களுக்கு முன்னாடியே இங்கே வந்துட்ட அபாரிஜன்கள் வாழ்ந்துக்கிட்டு இருந்த இடம்.ஏன் இந்த இடத்துக்கு மட்டும் ஸ்பெஷல்? இருக்கே! முக்கியமானது காலநிலை. வருசம் பூராவும் ஏறக்குறைய ஒண்ணுபோல ரொம்பச் சூடாவும் இல்லாம, குளிரும் இல்லாம மிதமான கால நிலை. 28 டிகிரிவரை போகும். அவ்வளோதான். குளிர்காலத்திலும்,பகலில் இதே சூடு இருந்தாலும், ராத்திரிகளில் பத்து டிகிரிக்குக் கீழே போறது இல்லை, பொதுவா. காத்துலே ஈரப்பதமும் ஜாஸ்தி. ( இட்லி மாவு நல்லா புளிச்சுரும் இல்லே? ஹூம்........என் கவலை எனக்கு)




இந்த மாநிலத்துக்கு 'சன்ஷைன் ஸ்டேட்'ன்னுச் செல்லப்பேர் இருக்குன்னா பாருங்க. இதோட கிழக்குப் பகுதியிலே இருக்கும் கடலை ஒட்டிய பகுதிகள் எல்லாம் இந்த கால நிலைக்காகவேக் கொண்டாடப்படுது. வடக்கே போகப்போக,மகர ரேகை, குறுக்காப் போகுறபடியாலே வருசம் முழுசும் அருமையான வெய்யில். வடக்கே இன்னும் மேலே போனா Cape York என்ற இடம்( முனைப் பகுதி) பூமத்திய ரேகைக்குப் பக்கத்துலெ போயிருது! இந்த நாட்டோட வரைபடத்தைப் பார்த்தீங்கன்னாவே இது புரிஞ்சுபோயிரும்.
குவீன்ஸ்லாந்தின் ஜனத்தொகையும் , நியூஸியின் மொத்த ஜனத்தொகையும் ஏறக்குறைய ஒண்ணுதான். ஆனா நிலத்தோட பரப்பளவுன்னு பார்த்தா ஆறரை மடங்கு பெருசு! கடற்கரைப் பகுதிகளை ரொம்ப நல்லாப் பராமரிக்கிறதுமில்லாம,அதுகளைக் கொண்டு வருமானம் கிடைக்க நல்லாவே வழி செஞ்சு வச்சுருக்காங்க. வருசம் முழுசும் சுற்றுலாப் பயணிகள் நிறைஞ்சு வழியுறாங்க. விண்ணை முட்டும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இந்தப் பகுதிகளில் ஏராளம். இவ்வளவு இடம்இருக்கும்போது ஏன் உயரத்துலே போகணும்? கண்ணுக்குக் கடல் தெரியணுமுல்லெ? ஒவ்வொரு பகுதிக்கும் ஒருஅட்டகாசமான பேர். அந்தப் பேரே அங்கிருக்கும் நிலையைப் பளிச்சுன்னு வெளிச்சம் போட்டுக்காட்டுற மாதிரிதான்.கோல்ட் கோஸ்ட், சன் ஷைன் கோஸ்ட், சர்ஃபர்ஸ் பாரடைஸ், ப்ராட் பீச், ஃப்ளையிங் ஃபிஷ் பாய்ண்ட்'ன்னு 26 புகழ்பெற்ற கடற்கரைகள் இருக்கு.




வெளியாட்கள் வரவர இங்கே இருந்த பழங்குடிகள் மெல்ல மெல்ல உள்நாட்டை நோக்கிப் போயிட்டாங்க. உள்நாடுன்னா,பசுமை கிடையாது. முக்காவாசிப் பாலைவனம்தான்(-:


( ஒண்டவந்த பிசாசு.............. ஊர் பிசாசை விரட்டுன கதைதான்)



நாங்க(ளும்) ப்ரிஸ்பேன் நகருக்கு வெளியிலே வந்து, ஒவ்வொரு பகுதியாப் பார்த்துக்கிட்டே கண்ணுலே எதாவது மோட்டல் தெம்படுதான்னு போறோம். க்ளே ஃபீல்ட், விண்ட்ஸர், நியூ மார்கெட்ன்னு ஆங்கிலப் பேருங்க இல்லாம பல இடங்களில் பழங்குடிகள் வச்ச பேர்( மட்டும்) நிலைச்சு நிக்குது.' நுந்தா, புலிம்பா, யெரோங்கா, வூலூங்கப்பா,கொரிண்டா, கூமெரா,முராரி, காலம்வேல்'ன்னு அட்டகாசமான பேர்கள். இந்த அபாரிஜின்களுக்கும், நம்ம தமிழ்நாட்டு இருளர்கள் என்னும் மலைப்பகுதி மக்களுக்கும் உருவ ஒற்றுமை இருக்கறதாவும், கோண்டுவானா காலத்தில் ஆஸ்ட்ராலியாவும், இந்தியாவும் பக்கம்பக்கம் ஒட்டி ஒரே நிலப்பரப்பா இருந்ததாவும், அதுக்கப்புறம் கண்டங்கள் விட்டுவிலகிப் போனதாவும் படிச்ச ஞாபகம். அதுலே இந்த பழங்குடிகள் உடலெல்லாம் ஒரு சாம்பல்போல ஒண்ணைப் பூசிக்கிறதும், நட்சத்திரங்களையும்,ஆகாயத்தையும் பார்த்து வழிபடறது, தீ மூட்டி அதன் மூலமா ஆகாயத்துலே எங்கியோ இருக்கும் முன்னோர்களைத் தொடர்பு கொள்ளுறது இதெல்லாம்கூட அவுங்க நம்மாட்கள் என்ற எண்ணத்தை உண்டாக்குதுன்னும் 'தெய்வத்தின் குரல்'புத்தகத்தில் படிச்சதையும் வச்சு இந்தப் பெயர்களுக்கும் நம்ம தமிழ்ப்பெயர்களுக்கும் எதாவது சம்பந்தம் தோணுதான்னு மனசுக்குள்ளே ஒரு குடைச்சல். இப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லைன்னு வேறு சில ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்களாம்.



எது எப்படியோ, நாங்க போய்க்கிட்டு இருந்த வழியிலே காலம்வேல்னு போர்டு பார்த்ததும், வெற்றிவேல், வீரவேல்ன்னுஅந்தப்பகுதிக்குள்ளெ நுழைஞ்சோம். புதுப்புது வீடுகள் நிறையக் கட்டிக்கிட்டு இருக்காங்க. அநேகமா எல்லாமே ரெட்டைவீடுகளா இருக்கு. கட்டும் முறையும் இங்கே நியூஸியில் கட்டும் விதத்தைவிடக் கொஞ்சம் வேறுபட்டு இருக்கு. ரொம்ப இதைப்பத்தித் தெரியாதுன்னாலும், 'நமக்கும் வீடு கட்டுன அனுபவம்' ஒண்ணு இருக்கே. எனெக்கென்னமோ வீடுகள்அவ்வளவு இடைவெளி இல்லாம நெருக்கியடிச்சு நிக்குதுன்னு ஒரு தோணல். அங்கங்கே இருக்கும்ஷாப்பிங் செண்டர்களையும் நாங்க விட்டுவைக்கலை. வேடிக்கை மட்டுமில்லை, எல்லா இடத்திலும் ஒரு ஃபுட் கோர்ட் இருக்கு.ரெஸ்ட் ரூம்களும் நமக்குத் தேவையா இருக்கே.



காலம்வேல் ஷாப்பிங் செண்ட்டர் கொஞ்சம் சின்னதுதான். ஒரு சுத்து சுத்துனதில், அங்கெ ஒரு வெஜி & ப்ரூட்ஸ் கடையில் முலாம்பழமும், தர்பூசணியும் வாவான்னு கூப்புடுது. 'இனிமேத் தாங்காது'ன்னு, பக்கத்தில் இருந்த சூப்பர் மார்கெட்டில் நுழைஞ்சு, ஒரு கத்தியை வாங்கிக்கிட்டோம். அதுக்கு ஒரு மோல்டட் உறையும் இருக்கு. நல்ல பாதுகாப்புதான். பெரிய பெட்டிக்குள்ளே மறக்காம வச்சுக்கணும், திரும்பப்போகும்போது. இல்லேன்னா ஏர்போர்ட்லே மாட்டிக்குவோம்.



அந்தப் பகுதியில் கட்டிக்கிட்டு இருக்கும் ஒரு குடி இருப்புக்குப் போய்ப் பார்த்தோம். அறைகளில் மின்விசிறிகள் போட்டுக்கிட்டு இருந்தாங்க. அது என்னச் சிக்கனமோ, விளக்கும் விசிறியும் ஒரே யூனிட். நல்லாவே இல்லை(-:ஒரு சில வீடுகள் மட்டும் தனி வீடுகளா இருந்துச்சு. இங்கே தண்ணீர் கஷ்டம் இருக்குன்றபடியால்,கட்டாய மழைநீர் சேகரிப்புக்கு ஏற்பாடு செஞ்சுக்கணுமுன்னு ச்சிட்டிக் கவுன்ஸில் விதி இருக்கு. இப்பக் கட்டிக்கிட்டு இருக்கும் வீடுகளில் 5000 லிட்டர் டேங்க் பூமியில் புதைச்சுடறாங்க. ஏற்கெனவே கட்டுன வீடுகளில் அழகழகான டிஸைன்களில் வாங்கித் தோட்டத்தில் பொருத்தி இருக்காங்க. பிள்ளைகள் விளையாடும் ஜங்கிள் ஜிம் டிசைனில் கூட ஒரு வீட்டில் இருந்துச்சு. வீட்டின் வெளிப்புறச்சுவர் நிறத்துலேயே அதுக்குப் பெயிண்டும் அடிச்சு வச்சுடறதாலே பார்க்கறதுக்கு eye sore இல்லாம இருக்கு. தோட்டத்துக்குத் தண்ணீர் இதன்மூலமாத்தான் ஊத்தணுமாம். வீட்டின் மற்ற உபயோகங்களுக்குத்தான் அந்த 140 லிட்டர் தண்ணீர். தற்சமயம் தினம் ஒரு ஆளுக்கு 149 லிட்டர் சராசரியா செலவாகுதுன்னு டிவியிலே சொன்னாங்க. நல்ல தோட்டம் இருக்கற வீடுகளில்,இந்தத் தோட்டத்துக்குத் தண்ணீர், மழைநீர் சேகரிப்பு டேங்க் மூலம்'ன்னு அறிவிப்புப் பலகை வச்சுருக்காங்க.



சூரியனின் கிருபை எப்பவும் இருக்கறதாலே 'சோலார் ஹீட்டிங் ஹாட் வாட்டர் டேங்க்' எல்லா வீடுகளிலும் இருக்கு. ஆனாலும் கரண்ட் பில் குறையாதுன்னு நினைக்கிறேன். சூட்டுக்குத்தான் ஏ.சியும் ஃபேனும் வேண்டி இருக்கே. ஒரு பகுதியில் போகும்போது, 'கவனம் தேவை. இந்தத் தெருவில் தண்ணீர் தேங்கும் அபாயம் இருக்கு.வெள்ளப்பகுதி'ன்னு சாலைப் பராமரிப்பு அறிவிப்புப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்துச்சு. அஞ்சு வருசமா மழை இல்லை இங்கே!




இன்னும் ஒரு மோட்டலும் கண்ணில் படலை. இங்கே நியூஸியில் ஹைவேயில் இருந்து சிட்டிக்குள்ளே வரும் மெயின்ரோடில் எதோ அணிவகுப்பு போல நிறைய மோட்டல்கள் இருக்கும். ஊருக்குள்ளெ வர்றவனை அப்படியே 'கப்புன்னு' அமுக்கிப்புடிச்சுப் போட்டுக்கும் விதமா. இங்கே என்னன்னா இதுவரை ...........



இங்கே நியூஸியில் இருந்து கிளம்பறதுக்கு முன்னேயே வலையிலே மோட்டல்களைத் தேடுனோம். எல்லா ஹொட்டல்,மோட்டல்களிலும் 23 ஆம்தேதி இடமே இல்லைன்னு தெரிஞ்சது. அப்பவாவது அது ஏன், எதுக்குன்னு விசாரிக்கத் தோணலை. வலையிலே விடுபட்ட இடம் இருக்கும். நேரில் பார்த்துக்கலாமுன்னு வந்துட்டோம். இப்பப் புதிர் விடுபட்டுச்சு.நியூ சவுத் வேல்ஸ்க்கும், குவீன்ஸ்லேண்ட் அணிக்கும் அன்னிக்கு ரக்பி மேட்ச் இருக்காம். (state of origin cup ) அதான் ஊருலே ஒரு இடம் பாக்கி இல்லாம நிறைஞ்சு கிடக்கு. 'அட!. ஆமாம். எப்படி இதைக் கவனிக்காம கோட்டை விட்டேன்'ன்னு கோபால் முழிக்க, 'ஆமாம் இவரெல்லாம் ஒரு ரக்பி ஃபேன்'னு நான் எதிர்ப்பார்வை விட...........



தொடரும்.

20 comments:

said...

//eye sore இல்லாம இருக்கு. தோட்டத்துக்குத் தண்ணீர் இதன்மூலமாத்தான் ஊத்தணுமாம். வீட்டின் மற்ற உபயோகங்களுக்குத்தான் அந்த 140 லிட்டர் தண்ணீர். தற்சமயம் தினம் ஒரு ஆளுக்கு 149 லிட்டர் சராசரியா செலவாகுதுன்னு டிவியிலே சொன்னாங்க. நல்ல தோட்டம் இருக்கற வீடுகளில்,இந்தத் தோட்டத்துக்குத் தண்ணீர், மழைநீர் சேகரிப்பு டேங்க் மூலம்'ன்னு அறிவிப்புப் பலகை வச்சுருக்காங்க.//
ஜெயலலிதா கொண்டு வந்த மழை நீர் சேகரிப்புத்திட்டம் கூட நல்ல திட்டமாத்தான் இருந்துது. ஆனா எத்தனை பேர் இன்னும் அத பராமரிக்கராங்கன்னு தெரியல. இப்பத்த அரசாங்கம் என்ன நெனச்சுருக்கு மழைநீர் சேகரிக்கரத்ப்பத்தின்னு தெரிஞ்சுக்க ஆசைதான்

said...

டீச்சர் சொல்வது,'மழைநீர் சேகரிப்பு';
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டது,
'மழைநீர் அறுவடை'[மழைநீர் பூமியில் புகுத்தப்படும்]

said...

//( யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே, பெண்ணுங்களுக்கு மேப் படிக்கத் தெரியாதுன்னு. மெய்யாலுமா? )//

அதெல்லாம் மத்தவங்களுக்கு. நீங்க இத்தனை மாணவர்களை மேய்க்கும் மே(ய்)ப்பாளினி ஆச்சே!!

//முராரி, காலம்வேல்//
வேலைப் பற்றிச் சொன்ன நீங்கள் மாலை மறந்தது ஏன் அப்படின்னு கே.ஆர்.எஸ். கோபிச்சுக்கப் போறாரு. எதுக்கும் ஒரு பதில் தயார் பண்ணி வெச்சுக்குங்க.

//ஆமாம் இவரெல்லாம் ஒரு ரக்பி ஃபேன்'னு நான் எதிர்ப்பார்வை விட....//

இதுக்கெல்லாம் மட்டும் உடனே அவரைப் பார்த்திடுங்க. பாதி நாள் இணையத்துலதானே வாழ்க்கை. நீங்க பார்த்துச் சொன்னா என்னவாம்? :))

said...

//யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே, பெண்ணுங்களுக்கு மேப் படிக்கத் தெரியாதுன்னு. மெய்யாலுமா?//

இப்படி மிரட்டினால்...நாங்க என்னத்த சொல்லுறது...?:-)

//எப்படி இதைக் கவனிக்காம கோட்டை விட்டேன்'ன்னு கோபால் முழிக்க, 'ஆமாம் இவரெல்லாம் ஒரு ரக்பி ஃபேன்'னு நான் எதிர்ப்பார்வை விட...........//

அண்ணலும் நோக்கினார் அவளு(ரு)ம் நோக்கினாள்(ர்)...?

////முராரி, காலம்வேல்//
வேலைப் பற்றிச் சொன்ன நீங்கள் மாலை மறந்தது ஏன் அப்படின்னு கே.ஆர்.எஸ். கோபிச்சுக்கப் போறாரு//

ஹலோ கொத்ஸ்...நல்லாப் பாருங்க கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுக்கினு! முராரி ன்னு சொல்லிட்டு அப்புறம் தான் காலம் வேல்-ன்னு டீச்சர் சொல்லி இருக்காங்க! அதனால்...நாரதா இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? :-)))

said...

ரவி, பெயர் லிஸ்டில் சொல்லி இருக்காங்க. ஆனா விரிவாச் சொன்னது எல்லாம் வேலைப் பற்றி மட்டும்தானே. நான் சொன்னது புரியாத மாதிரி நல்ல பையன் வேஷம் போட்டீங்க, என் கிட்ட மின்னரட்டையில் சொன்னது எல்லாம் டீச்சர் கிட்ட போட்டுக் குடுத்திடுவேன். :)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

நல்ல திட்டங்களை எந்த அரசாங்கம் கொண்டுவந்தாலும் பாராட்டணும். அதே சமயம்
அடுத்துவரும் அரசும் அதை தொடர்ந்து நடத்தணும்.

இப்ப தமிழ்நாட்டுலே இந்த மழைநீர் சேகரிப்பு இன்னும் அமுலில் இருக்குன்னு
நினைக்கிறேன். தெரிஞ்சவுங்க யாராவது சொல்லுவாங்கன்னு நினைக்கிறென்.
நம்ம சிஜி சொல்றாரு பாருங்க 'அம்மா'வோட திட்டமே வேறன்னு.

said...

வாங்க சிஜி.

இந்த அறுவடைக்கும் சேமிப்புக்கும் இன்னும் கொஞ்சம் விளக்கம் தந்தா
நல்லா இருக்கும். சேமிப்பு புரிஞ்சுருச்சு. அறுவடைன்னா.........??????

said...

வாங்க கொத்ஸ்.

இன்னிக்கும் பிரிச்சு மேய்த்தல்தானா? :-)))))


வேலில் இருக்கும் மாலில் போய் 'வேலை' வாங்காமக் 'கத்தி' வாங்கிட்டேன்.

//பாதி நாள் இணையத்துலதானே வாழ்க்கை//

அப்ப மீதிநாள்? :-))))))

said...

வாங்க KRS

//நாரதா இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? :-))) //

நன்மையில் முடியணும் ( ததாஸ்த்து)


கொத்ஸ் & KRS

மின்னரட்டையில் எங்க 'தலை'களை உருட்டுறீங்களா? :-))))

said...

துளசி,யார் தலை எல்லாம் உருண்டதோ..
முதல்ல போட்ட பின்னூட்டம் எங்கப்பா போச்சு.
இந்தக் கொத்ஸும்,ரவியும் சத்தம் போட்டுக் கவனத்தைக் கலச்சுட்டாங்கப்பா.:)))

நம்ம ஊரிலேயும் நிறையத் தண்ணீர் வர இடத்தில் இந்தச் சிக்கனத்தைக் கடைபிடிச்சா நல்லா இருக்கும்.

said...

துளசி: அறுவடை ன்னா இன்னா?


கிணறு அல்லது ஆழ்குழாய்க் கிணறு[bore] உள்ள வீடுகள்

கிணறு ,ஆ.கி அருகே தொட்டி tank
கட்டப்படும்;தொட்டியின் அடிப்பாகம்
காங்கிரீட்டால் மூடப்படாது;தரைப்பகுதியாகவே இருக்கும்.

தொட்டியில் கீழிருந்து மேலாக,மண்ல் ,சிறு ஜல்லிகள்,பெரிய சைஸ் ஜல்லிகள் நிரப்பப்படும்

வீட்டின் மேற்பகுதியிலும் தரைப்பகுதியிலும் விழும் மழைநீர்
குழாய்வழியே தொட்டியில் விடப்படும்;பூமியில் சோர்ந்துவிடும்

இப்படி எல்லா கட்டிடங்களிலும் வீடுகளிலும் செய்யப்படுவதால்
நிலத்தடி நீர்மட்டம் உயரும்

100% வெற்றிகரமானது என்று அறிவிக்கப்பட்டது.உள்ளாட்சித்தலைவர்களும் அதிகாரிகளும் செயல்படுத்தினர்.

ஒருமுறை செயல்படுத்திவிட்டால் அது தொடர்வதில் சிக்கல் ஏதுமில்லை
கணிசமான வெற்றிதான்.

மழைநீர் சேமிப்பில் அவ்வீட்டிற்கு மட்டுமே பயன் கிட்டும்[சரிதானா?]
அறுவடையில் வீட்டிற்கு மட்டுமின்றி
நாட்டுக்கும் பயன் கிட்டும்

said...

//அப்ப மீதிநாள்? :-))))))//

கோகி சேவைதான் வேற என்ன?!!!

said...

டீச்சர்...நெறைய பதிவுகள் போட்டிருக்கீங்க. பாக்காம விட்டிருக்கேன். எல்லாம் கால நேர வித்தியாசம் செய்ற வேலை.

பொண்ணுங்களுக்கு மேப்பு படிக்கத் தெரியாதுன்னு சொல்றது ஒரு விதத்துல உண்மைதான். என்னோட தோழிகள் சிலரே மேப்பை உத்து உத்துப் பாத்துக்கிட்டிருப்பாங்க. அது ஏனோ...அப்படித்தான் போல. கார்ல ஜிபிஎஸ் சிஸ்டம் இருந்தா பிரச்சனையில்லை. அதுவே வழியைச் சரியாச் சொல்லீருது. இங்க அது ரொம்பப் பிரபலமா இருக்கு.

said...

வாங்க வல்லி.

தண்ணீரை அநாவசியமா செலவு செய்யக்கூடாதுன்னு எங்க பாட்டி அந்தக்
காலத்துலேயே சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அப்பெல்லாம் இப்படித் தண்ணீர்ப்பஞ்சம்
வருமுன்னுகூட நினைக்காத காலம்.

இனியாவது எல்லோரும் கடைப்பிடிச்சாத்தான் எதிர்காலத்துக்கு நல்லது

said...

சிஜி,

விளக்கத்துக்கு நன்றி.

நிலத்தடி நீரை அங்கங்கே பம்ப் வச்சு எடுத்து குடிதண்ணீர்
வியாபாரம் ஜோரா நடக்குதுன்னு செய்தி வந்துக்கிட்டு இருக்கே.

அதெல்லாம் இப்படிச் சேரும் தண்ணீர்தானா?

அப்ப வீட்டுவீட்டுக்கு மழைநீர் சேமிப்புத் தொட்டி வேண்டாமா?

சென்னையில் இது எந்த அளவுலே இருக்கு?

உறவினர் வீடுகளில் பார்த்த ஞாபகம் இல்லை(-:

said...

கொத்ஸ்,

//கோகி சேவைதான் ....//

ரொம்ப டிமாண்டிங் சேவை இது. வாயைத் திறக்காமலேயே ஆட்டி வைக்கிறான்:-)

said...

வாங்க ராகவன்.

எல்லாப் பொண்களும் இந்தக் கணக்கில் இல்லை. அங்கங்கே விதி விலக்கு
இருக்குமே:-))))))

//என்னோட தோழிகள் சிலரே மேப்பை உத்து உத்துப் பாத்துக்கிட்டிருப்பாங்க//

எல்லாம் பொடி எழுத்து. அதாலேதான்.............

said...

டீச்சர், 8 போட வாங்க... உங்களை அழைத்திருக்கிறேன்.

http://tcsprasan.blogspot.com/2007/06/8.html

said...

நல்ல திட்டம்னாலே அத மீற்றதில்ல சிலருக்கு சுகம் உண்டே...[ஹெல்மட் திட்டம் போல]

said...

சிஜி,

ஹெல்மெட் திட்டம் கடைப்பிடிக்கலைன்னா உயிருக்கு ஆபத்தாச்சே.

'தன்' உயிரையும் மதிக்காத மக்களை என்னன்னு சொல்றது? அப்படியா
வாழ்க்கை வெறுத்து இருக்காங்க? !

'சுகத்தைப் பார்த்தா சோகம்' வந்துருமே!