நேத்து ஒரு சாவு நிகழ்ச்சியிலே கலந்துக்கிட்டேன். கூட வேலை செய்யும் நண்பரின் மனைவி தான்
இறந்துட்டாங்க! வயசும் அதிகம் கிடையாது. வெறும் 68தான். நம்ம ஊர்லேதான் 40 வயசானாலே முதியவர்னு
பட்டம் கட்டிடுவாங்க. இங்கே 50 வயசுலேதான் வாழ்க்கையே ஆரம்பிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க!!!
நம்ம ஏரியாவுலேதான் இருக்காங்கன்றதாலே அடிக்கடி இவுங்களைச் சந்திக்கற சந்தர்ப்பம் வாய்க்கும். அவுங்க
'நேரா' இருப்பாங்க. நல்லா நிமிர்ந்து நடப்பாங்க. எங்களைப் போல'கூன்' போடறதில்லை:-)
நண்பர் இங்கே ராணுவத்திலே வேலை செஞ்சு ஓய்வு பெற்றவர். சிங்கப்பூர், ஃபிஜின்னு பல இடங்களிலே வேலை
செஞ்சிருக்கார்.அருமையாப் பாடுவார். எப்போதும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். இப்பத்தான் போனமாசம் 70-வது
பிறந்தநாள் கொண்டாடினார்!!!
வெள்ளைக்கார ஊருங்களிலே ஜனங்க 'சோறு இல்லேன்னாலும் காரு வச்சிருப்பாங்க'ன்னு நான் சொல்றதை
மறுக்கறமாதிரி, இவர் காரு வச்சுக்கலை!!! இவுங்க ரெண்டுபேரும், அக்கம் பக்கம் எங்கெபோனாலும் ஒண்ணா
நடந்துதான் போவாங்க. ஒருவேளை இந்த வயசிலும் ஆரோக்கியமா இருக்கறதுக்கு இந்த 'நடை'யும் ஒரு
காரணமுன்னு எப்பவும் நினைச்சுக்குவேன்.
இங்கே குளிர்காலம் ஆரம்பிச்சுருச்சுல்லே, அதனாலே வழக்கமா எல்லா வருசமும் போட்டுக்கறமாதிரி
ஃப்ளூ ஊசி ரெண்டு வாரத்துக்கு முன்னாலே நண்பரின் மனைவி போட்டுக்கிட்டாங்களாம். அதுக்கப்புறம்
அவுங்களுக்கு காய்ச்சல் வந்து அஞ்சுநாளாக் கஷ்டப்பட்டாங்களாம். ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்காங்க.
அங்கே ரத்தப் பரிசோதனை செஞ்சப்ப, இவுங்களுக்கு,'லுகேமியா'ன்னு சொன்னாங்களாம். திங்கள் முதல்
சிகிச்சை ஆரம்பிக்கலாமுன்னு முடிவு செஞ்சாங்களாம். இது நடந்தது சனிக்கிழமை. அன்னிக்கு ராத்திரி
தூங்குனவங்க, மறுநாள் எழுந்திரிக்கலையாம்!!!! 'ஹார்ட் அட்டாக்!!!!!!
என்ன அமைதியான சாவு பாருங்க!!! கொடுத்துவச்ச புண்ணியவதி!!!!!
காலையிலே பத்தரைக்கு 'ஃப்யூனரல்' வச்சிருந்தாங்க. அங்கே போய்ச் சேர்ந்தா, நல்ல கூட்டம். எல்லோரும்
அநேகமாக் கறுப்பு உடையிலே வந்திருந்தாலும், ஏதோ 'பார்ட்டி'க்கு வந்தமாதிரி சளசளன்னு பேசிக்கிட்டு
இருந்தாங்க. சின்ன அடக்கமான ஹால். ரொம்ப சிம்பிளா அலங்கரிச்சு இருந்துச்சு! நடுவிலே இருந்த மேடைமேலே
அழகான சவப்பெட்டி! அதும்மேலே ரொம்ப அழகான வெள்ளைப் பூங்கொத்து மலர் அலங்காரம்!!!
'டாண்'னு பத்தரைக்குப் பாதிரியார் உள்ளே நுழைஞ்சாரோ இல்லையோ, எல்லாப் பேச்சும் 'டக்'னு நின்னுபோச்சு!
ஒரே நிசப்தம்!!!!
ச்சின்னதா ஒரு பிரார்த்தனை முடிஞ்சது. மகனும், மகள்களும் நாலு நாலு வார்த்தை பேசினாங்க. நண்பர் தன்னுடைய
45 வருட மணவாழ்வைச் சுருக்கமாகவும், நகைச்சுவையோடும் பேசி எல்லோரையும் உரக்கவே சிரிக்கவச்சார்!
அதன்பின் அவரே ஒரு பாட்டையும் பாடினார். நல்ல பாடகர் என்பதால் அருமையாக இருந்தது!!!! ஏதோ ஒரு கலை
நிகழ்ச்சியிலே கலந்துக்கறமாதிரி இருந்ததே தவிர துக்கம் கொள்ற சம்பவமா இல்லே!!!
ஆச்சு, எல்லோருக்கும் நன்றி உரை சொல்லி, சவப்பெட்டியை வெளியே கொண்டுபோய் அதுக்கான வண்டியில்
ஏத்தியாச்சு! சரியா 50 நிமிஷம்தான்!!!!
எல்லோரும் வெளியே வந்தோம்!! நண்பர் எல்லோரையும் தனித்தனியாகப் பார்த்துக் குசலம் விசாரிச்சு, நன்றி சொல்லி
சந்தோஷமான முகத்துடன், சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கிட்டிருந்தார்! பெட்டி அதுபாட்டுக்கு வண்டியிலே 'தேமே'ன்னு
இருந்துச்சு! அங்கேயே பக்கத்து ஹாலிலே 'ரெஃப்ரெஷ்மெண்ட்'க்கு ஏற்பாடு செஞ்சுருக்காருன்னும், அதுலே நாங்க
எல்லாம் கலந்துக்கணுமுன்னும் அன்போட வேண்டிக்கிட்டு இருந்தார்!!!!!
சாவுக்குப் போய் சாப்டுட்டு வர்றது நம்ம கலாச்சாரத்துலே கிடையாதில்லையா? அதனாலே நன்றி சொல்லிட்டுத்
திரும்பினேன்.
கவலையான முகத்தோட இதுலே கலந்துக்கப் போனவங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே கலைஞ்சு போனோம்!
அப்ப நினைச்சுகிட்டேன், 'என்ன அருமையான பிரிவு உபசாரம்'னு!!! பாதிரியார் சொன்னதுமட்டும் மனசுலே
திரும்பத்திரும்ப வந்துக்கிட்டு இருந்துச்சு! 'இவுங்க இந்த வாழ்க்கையிலே இருந்து வேற ஒரு 'பெட்டர் லைஃப்'க்கு
போயிருக்காங்க!!!!!'
மரணத்தை வெல்ல யாராலுமே முடியாதப்ப அதையும் மகிழ்வோட ஏத்துக்கிட்டு கொண்டாடுறது எவ்வளவு
சிரேஷ்டம்!!!!!
Friday, June 03, 2005
மரணத்தைக் கொண்டாடினர்!!!
Posted by துளசி கோபால் at 6/03/2005 03:00:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
சீனக்கலாச்சாரத்திலும் கிட்டத்தட்ட இந்த மாதிரியான ஒரு நிலைதான், வசதிக்கேற்ப 3 நாட்கள் அல்லது 5 நாட்கள் சடங்குகள் நடக்கும்,தொடர்ந்து மத பாடல்கள் பாடப்படும், அழுகை இருக்காது, தடபுடலான விருந்தும் உண்டு, இதிலே மலர் வளையங்களோடு பல விதமான வேலைப்பாடுகளுடன் கூடிய விரிப்பு துணிகளும் வைப்பர்
நன்றி குழலி!
நாம்தான் அழுது புரண்டு அட்டகாசம் செஞ்சுடறோம் இல்லே?
நாம கொஞ்சம் உணர்ச்சிவசப்படரவங்க. ஆனாலும் "இந்திய மதத்துல" கொள்கைகளுக்கு பஞ்சமில்லை. இது போல 10ஆம் நாள் கதை சொல்லி, இறந்தவங்களுடைய சிறப்பை போற்றி புது துணி கொடுத்து, இனிப்பு/காரம் பரிமாறி ...எல்லாம் பண்ணுவாங்க. கொள்கை என்னன்னா - 10 நாள் அழுது அழுது முடிச்சுரணும் அதுக்கும்மேல நீட்டிக்கிட்டே போகக்கூடாது. அவ்ளொதான்.
மேல சொன்ன விஷயம் பிஞ்சுல பழுத்த மாதிரி...ரொம்ப சீக்கிரமா (இறப்பை) மறக்க வைக்கிறது. இல்லைன்னா இறப்பை முன்னாலெயெ உணர்ந்தவங்க...
இது என்னொட சின்ன கருத்து..
நான் ஒரு சில வெள்ளையர்களின் மரண நிகழ்வுக்கு ஜரோப்பாவில் சென்றிருக்கிறேன். யாரும் அழவில்லை. சந்தோஷமாவும் இல்லை. மிகவும் அமைதியாக நல்லாக இருந்தது.
வாங்க தாசரதி.
ஆமாங்க, உண்மைதான்.
பின்குறிப்பு: பதில் சொல்ல'கொஞ்சம்' தாமதமா போயிருச்சு! மன்னிக்கணும்.
வாங்க baleno.
ஆர்ப்பாட்டம் இல்லாம அமைதியா இருப்பதும் ஒரு அழகுதான்.
கருத்துக்கு நன்றி.
Post a Comment