Thursday, June 23, 2005

என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 11

வலைப்பதிவு படிக்கற ஜனங்கள் கூடிக்கிட்டேப் போறாங்கன்னு ஒரு செய்தி கிடைச்சது!
இதுலே புதுசா நம்ம 'வீட்டுக்கு வாரவங்களுக்கு' நம்ம பழைய பிரதாபத்தைப்பத்தித்
தெரிஞ்சுக்கணுமாம். இதைத்தான் 'பொதுமக்கள் வேண்டுகோளை முன்னிட்டு'ன்னு
சொல்றது போலெ!!!!அதனாலே இப்ப அங்கே எழுதிக்கிட்டு இருக்கற தொடரை,இனிமெ இங்கெயும் போட்டுறலாமுன்னு
நினைச்சேன். இது வரைக்கும் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க விரும்பற(!) மக்கள் இதுலே
http://www.maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=166
படிக்கலாம்!

இந்த 10 பகுதியை ஒவ்வொண்ணா இங்கெயும் போட்டு ஒரு 10 நாளை ஓட்டியிருக்கலாம்.
ஆனா, இந்த பொல்லாத மனசாட்சி ஒத்துக்க மாட்டேங்குதே!!!!

திடீர்னு பாதியிலே இருந்து தொடங்கறதை மன்னிச்சுடுங்க!!!


********************************************************************


என் செல்ல( செல்வ)ங்கள்!!! பகுதி 11


மறுநாள் பொழுது நல்லபடியா விடியலை(((-:

நம்ம ராக்கியும் சோஃபியும் போயிட்டாங்க! புள்ளைங்க மட்டும் புதருக்குள்ளெயே இருக்குதுங்க. ச்சின்னதாக்
குலைக்கற சத்தம் மட்டும் அப்பப்பக் கேக்குது.

சாப்பாடெல்லாம் அங்கெ கொண்டு போய் வச்சிட்டு வரேன். தயங்கித் தயங்கி வந்து சாப்பிடுதுங்க.
பாக்கவே பாவமா இருக்கு! ஒரு வாரம் இப்படியே போச்சு. அதுக்கப்புறம் நம்ம வீட்டு ஒனரோட
சொந்தக்காரங்க வந்திருந்தப்ப, இதுங்களைப் பார்த்துட்டு அவுங்களுக்கு 'நாய்க்குட்டிங்க
வேணும்' சொன்னாங்க. 'சட்'னு பிடிக்கறது கஷ்டம்ன்றதாலே, நாங்களே கொண்டுவந்து தர்றதாச்
சொன்னோம்.

அங்கே பல இந்தியக்குடும்பங்கள் வசிக்கறதே கரும்புக்காட்டுக்கு மத்தியிலேதான். 99 வருசம்
ஒப்பந்தம் போட்டுக்கிட்டு, நேடிவ் ஃபிஜியன்களிடமிருந்து இடத்தை வாங்கி அங்கெல்லாம்
கரும்பு பயிர் போட்டு வளர்ப்பாங்க. பிரிட்டிஷ்காரர்கள் ஆண்ட காலத்திலே இங்கே கரும்புத்
தோட்டத்தில் வேலை செய்யறதுக்காக கொண்டுவரப்பட்டவங்களோட வம்சாவளியினர்தான்
இவுங்கெல்லாம்! காட்டுக்குள்ளேயும் காவல் வேணுமே! அதனாலே எல்லார் வீட்டிலேயும்
அநேகமா ரெண்டு மூணு நாய்ங்க இருக்கும்!

ரொம்பவே கஷ்டப்பட்டு இதுங்களைப் பிடிச்சோம். கொண்டுபோய் கொடுத்துட்டும் வந்தோம்.
அப்பத்தான் இதுங்களை நான் ரொம்பப் பக்கத்துலே பார்த்தேன். சோஃபியோட வகையில்தான்
இருக்குதுங்க. அழகான பட்டுப்போல ரோமம்!!! கண்ணுலே மட்டும் பயம் இருந்துச்சு!!!

இப்பல்லாம் நம்ம ச்செல்லமியாவ் கூடவே இன்னொரு ஜிஞ்சர் பூனை வர ஆரம்பிச்சது! பார்த்தவுடனே
அது 'பையன்'ன்னு என் மனசுக்குப் பட்டது. நல்ல உயரம். ஊளைச்சதையெல்லாம் இல்லாம நல்லா
'ட்ரிம்'மா இருந்தது. கண்ணுலே கறுப்பு முழி மட்டும் பெருசு! அதுக்கு 'வட்டக் கண்ணு'ன்னு பேரு வச்சேன்.

நம்ம பூனைங்க எல்லாம் சுலபமா 'தமிழ்' கத்துக்கிச்சுங்க! 'தமிழ்'லே சொன்னா எல்லாம் புரியுது!!
நம்ம ச்செல்லமியாவ் மட்டும் நித்திய கர்ப்பிணியா இருக்கு. நாலுநாலு குட்டிங்களா போட்டுக்கிட்டு
இருக்கு. அதுங்க யாரும் நம்ம வீட்டுலே வர்றதில்லை. பக்கத்து வீட்டுப் பூணைங்களாச்சே!

இதுக்கு நடுவிலே என் மகள் பிறந்தாச்சு. குழந்தைக்கு ஆறுமாசமானப்ப, நடக்க ஆரம்பிக்கறப்ப
மாடிப்படியிலே விழுந்துட்டா என்ன செய்யறதுன்ற பயத்துலே வேற வீடு மாறிப் போனோம். அதுவும்
மாடி வீடுதான், ஆனா நாம போனது கீழ்த்தளம்!!!! அந்த வீட்டுலே முன்னாலே ஒரு பரந்த புல்வெளி.
அதையொட்டி வேலி. வேலின்னா கம்பியெல்லாம் இல்லை, ஜஸ்ட் ச்சின்னச்சின்ன செடிங்க/மரங்கள்
வரிசை இருந்துச்சு. நம்ம வீட்டுலே இருந்து பார்த்தால் தூரக்க மெயின் ரோடும், அங்கே இருக்கற
நம்ம ஃபேக்டரியும் தெரியும்.ரோடுக்கும் நம்ம வீட்டுக்கும் இடையிலே ஒரே கரும்புக்காடுதான்.

இந்த வீடு இருக்குறது நாங்க முதல்லே இருந்த வீட்டுக்கு நேரே இருக்குற தெருவுலெதான். அதனாலே
நம்ம ச்செல்லமியாவ் தினமும் ரெண்டு மூணு முறை வந்து போய்க்கிட்டுத்தான் இருந்துச்சு!
அதுக்கப்புறம் நம்ம பக்கத்து வீட்டு( ரெண்டு பக்கமும்) நாய்ங்களொட எதாவது தகராறான்னு தெரியலை,
வரவு நின்னு போச்சு!

ஒருநாள் வாசலிலே ஒரு புது நாய் வந்து உக்காந்திருந்துச்சு. விரட்டலாமுன்னு பார்த்தா, நொண்டிக்கிட்டே
ஓடுது! ஐய்யய்யோ, பாவம்! இருந்துட்டுப் போட்டுமுன்னு விட்டேன். எங்க இவர் அதை பார்த்துட்டு
வீராவேசமா விரட்டப் போனார். அப்பத்தான் தெரியுது அது 'புள்ளைத்தாய்ச்சி'ன்னு. அப்படியே அதுவும்
இடம் புடிச்சிருச்சு. ஆனா இப்ப நாய்ங்கெல்லாம் வீட்டுக்கு வெளியிலேதான் !!!!

பிரிட்டிஷ் பெயிண்ட்ஸ் விளம்பரம் வருமே, அதுலே இருக்கறதைப் போல ஒண்ணும் வீட்டுக்கு வர ஆரம்பிச்சது.
இவ்வளவு அழகான ஃபாரீன் நாயை யாரு , வேணாமுன்னு விட்டான்னு பார்த்தா, அதுக்கும் 'வீடு' இருக்கு!!!
ஆனாலும் ச்சும்மா நம்ம வீட்டை வட்டம்போடுதுங்க!!!

இதுக்குள்ளெ மகளுக்கும் பேச்சு வரத்தொடங்குச்சு. மழலையிலே இந்த நாய்ங்களையெல்லாம்
கூப்புடறது கேக்க சுகமா இருந்துச்சு.மகளை ஸ்ட்ரோலர்லே உக்கார வச்சவுடனே இதுங்க
எல்லாம் வந்து அவளைச் சுற்றி உக்காந்துக்கும்!!!!

சடைச்சு, நொண்டி, ப்ரவுணு,ஸ்கேம்பின்னு கூட்டம் கூடிக்கிட்டே போகுது!!!!

நொண்டிக்கு நாலு புள்ளைங்க! அதுலே ஒண்ணு, எங்க இவரோட கார்லே அடிபட்டுச் செத்துருச்சு.
கெட்ட நொண்டி! புள்ளைங்களை ஒழுங்காப் பாத்துக்கத் துப்பில்லேன்னு அதுக்குத்தான் சரியான திட்டு!

இவருக்கு மனசுக்கு ரொம்ப 'பேஜாரா'ப்போச்சு!!! மறுநாளே அதையும் அதோட குடும்பத்தையும்
ஃபேக்டரியிலே வேலை செய்யற ஒருத்தர் வந்து கொண்டு போயிட்டாரு.

ஃபிஜியிலேயும், மிருகங்களோட பாடு இந்தியா மாதிரிதான்! தனி கவனிப்பு, மிருக வைத்தியம் எல்லாம்
கிடையாது!!!! ஜனங்க இந்தியாவிலிருந்து வந்தவங்கதானே!!! ச்செல்லமா வளர்க்கறதுன்ற பேருக்கே
இடமில்லே!!! அப்பப்ப அங்கங்கே சாப்பிட்டுக்கிட்டுத் தெருவிலே சுத்திக்கிட்டு இருக்கறதுகள்தான்
அதிகம்!!!!

நாமும், நமக்குன்னு நாய் வச்சுக்கலை. வீட்டுக்கு வர்றதுங்களுக்கு மட்டும் சாப்பாடு போட்டுக்கிட்டு
இருந்தோம்! ஆறு வருசத்துலே எத்தனை எத்தனை நாய்கள்ன்றதுக்குக் கணக்கே இல்லாமப் போச்சு!


ஃபிஜி ஒரு 'ட்ராப்பிகல் ஐலேண்ட்' என்றபடியாலே அடிக்கடி புயல் வந்துரும்!!!! அப்ப மட்டும் எல்லா
நாய்களையும் வீட்டுக்குள்ளே வச்சிருவோம். புயல் அடங்கறவரை, மிரண்ட பார்வையோட, முக்கிக்கிட்டு
முணங்கிக்கிட்டு இருக்கும் இதுங்கெல்லாம்!!!! வெளியே விட்டதும், எங்கே பாத்தாலும் தண்ணி ரொம்பி
ஓடிக்கிட்டு இருக்கறதைப் பாத்தும் பயந்துடுங்க. புயலும் மழையும் சேர்ந்து ஊரையே வெள்ளக்காடா
ஆக்கிரும். தெருவிலே எல்லாம் படகுலே ஆளுங்க போய், சேதத்தைப் பார்வையிடுவாங்கன்னா பாருங்க,
எவ்வளவு வெள்ளப் பெருக்குன்னு! நல்ல வேளை, நம்ம வீடு இருந்தது ஒரு மேட்டுப் பகுதி!!!!இப்படி இருக்கறப்பதான் நாங்க ஃபிஜியை விட்டுட்டு, இங்கே நியூஸிக்கு வந்து சேர்ந்தோம்.

முதல் பகுதியை மறுபடிப் படியுங்க. இங்கிருந்துதான் இது ஆரம்பிக்குது!

வந்த ரெண்டாம் நாளே குடியிருக்க இடம் கிடைச்சிட்டது! கூடவே ஒரு பூனையும் வீட்டுக்குள்ளே
வந்துருச்சு! கொழுகொழுன்னு அழகா இருக்கு! ரொம்பப் பதுசாவந்து ஜன்னல்மேலே ஏறி, கண்ணாடிக்குப்
பக்கத்தில் உக்காந்து குளிருக்குச் சுகமா வெய்யில் காயுது!!!!

அதோட பூர்வீகம் என்னன்னு கொஞ்ச நேரத்துலேயே தெரிஞ்சுடுச்சு. பின்பக்கத்துலே இருக்கற
மோட்டல் பூனை! அதுக்கு 'மோட்டல் மியாவ்'னு பேரு வச்சுட்டேன்.

எல்லா நாய்களையும் விட்டுப் பிரிஞ்சுட்ட மகளுக்கும்( எனக்குமே!) ஒரு கூட்டாயிருக்கட்டுமேன்னு
ச்சும்மா இருந்துட்டேன். அதுவும் சமத்தா சாப்பாட்டு நேரத்துக்கு 'மோட்டலுக்கு' வேலியைத் தாண்டிக்
குதிச்சுப் போயிரும். பகல் முழுக்க எங்களொட இருக்கும்!!!! அதுகூடவே மோட்டல் ஓனரோட பொண்ணும்
அநேகமா என் மகளொட வயசுதான் இருக்கும், வர ஆரம்பிச்சது!!!!

மத்தியானம் வந்துக்கிட்டிருந்த அந்தப் பொண்ணு, கொஞ்ச நாளுலேயே காலையிலும் வரஆரம்பிச்சது.
அப்புறம் அப்புறம் பொழுது விடிஞ்சவுடனே வந்துரும். குளிருக்குப் பயந்துக்கிட்டு, நாங்க எல்லாம்
காலையில் ஏழரைக்கு மேலேதான் எந்திரிப்போம். இந்தப் புள்ளைக்குமட்டும் குளிரு இல்லை போல.
உள்ளூர் ஆளுங்களாச்சே! குளிரு பழகியிருக்கும்தான், அதுக்காக ஆறு, ஆறரைக்கு வந்து வாசக்
கதவை 'தடதட'ன்னு தட்டுறது கொஞ்சம் ஓவராயில்லை!

'மக தூங்கிக்கிட்டு இருக்கா. அதனாலே அப்புறமா விளையாட வா'ன்னு சொன்னாலும் கேக்காது.
'நான் உக்காந்து டி.வி. பாக்கறேன். உங்க மக எழுந்திரிக்கும்போது எழுந்திரிக்கட்டும்'னு பதில்
சொல்லுது. இது என்னடா 'சல்லியமா'ப்போச்சே!!!!

தினமும் விளையாட வருதேன்னு 'சாக்லேட்' வாங்கி வச்சுக்கிட்டு ஒண்ணு கொடுக்கறதும் வழக்கமா
இருந்தது. ஒரு நாள் வீட்டுலே 'சாக்லேட்'ஏதும் இல்லெ. என்னடா செய்யறது? ச்சின்னப்பொண்ணாச்சேன்னு
யோசிக்கறேன். அப்பப் பாத்து மகளும் எழுந்திரிச்சு 'பிரேக்ஃபாஸ்ட்'க்கு ரெடியாயிட்டா. அன்னைக்குக்
காலையிலே நம்ம வீட்டுலே டிஃபன் பூரி. அதையே அந்தப் பொண்ணுக்கும் குடுத்தேன்.

தட்டைக் கையில் வாங்கிக்கிட்டுக் கொஞ்சநேரம், அந்தப் பூரியை முறைச்சுப்பார்த்துக்கிட்டு
உக்காந்திருந்த பொண்ணு, 'நான் வீட்டுக்குப் போறேன்'ன்னு சொல்லிட்டு தட்டை மேஜைமேலே
வச்சுட்டு ஓடுச்சு. அதுதான் நம்ம வீட்டுக்கு அதோட கடைசி விஜயம்!!!!!!

அப்புறம்தான் நினைச்சேன், இந்தப் பூரியாலே அந்தப் பொண்ணை ஓட்டமுடியுமுன்னு முன்னேயே
தெரிஞ்சிருந்தா , எப்பவோ இந்தப் பூரியைச் செஞ்சிருக்கலாமேன்னு!!!!!!


இன்னும் வரும்!!!!!

8 comments:

said...

///அப்புறம்தான் நினைச்சேன், இந்தப் பூரியாலே அந்தப் பொண்ணை ஓட்டமுடியுமுன்னு முன்னேயே
தெரிஞ்சிருந்தா , எப்பவோ இந்தப் பூரியைச் செஞ்சிருக்கலாமேன்னு!!!!!!///

:-) :-) :-))

said...

:oD

said...

முத்து & ஷ்ரேயா,

நன்றி!!!!

said...

துளசி அக்கா,

உங்களின் எளிமையான, பேசுவது போன்ற எழுத்து நடை நன்றாக இருக்கிறது.

- சலாஹுத்தீன்

said...

அன்புள்ள சலாஹுதின்,
நலமா? உங்களை 'சிங்கை'யில் சந்திப்பேன் 'னு நினைச்சிருந்தேன்!
என்னா 'நடை'? இப்படித்தான் எழுத வருது. இலக்கணமா எழுதுனா, மனசுக்குப்பக்கத்துலே வரமுடியாம அன்னியப்பட்டு
( இது வேற அன்னியன்!) போவுதுல்லெ.

என்றும் அன்புடன்.
துள்சி

said...

அக்கா, மரத்தடிக்கு ஓடணுமா இப்ப?., கப்பு, கோபால் நலமா?

said...

அன்புள்ள மரமே,
'மரத்தடி'க்கு ஓடுனா என்ன? இனம் இனத்தோட சேராதா?

கப்புவும், கோபாலகிருஷ்ணனும் நல்ல சுகம்தான்!

said...

அன்புள்ள துளசி அக்கா,

சிங்கையில் நீங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு நான் வருவேன் என்று சொன்னதை இன்னும் நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி. (( நான் வருவேன்னு சொல்வேன், ஆனா எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது! )) சிங்கை நண்பர்கள் நிறைய அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்திவிட்டார்கள். இதுவரை ஒன்றில் கூட கலந்துகொள்ளவில்லை. அதற்கு சோம்பேறித்தனமும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போய்விடும்?

- சலாஹுத்தீன்