Wednesday, July 03, 2024

காஃபி வித் கரடி (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 10 )

தொங்குபாலத்துலே இருந்துக் கிளம்புன  ஏழாவது நிமிட் க்ரௌஸ் மௌன்ட்டென் ( Grouse Mountain ) அடிவாரத்துக்கு வந்துட்டோம்.  இந்த டூர் கம்பெனிகள் எல்லாம் பக்கத்துப் பக்கத்துலே இருக்கும் இடங்களை நல்லாவே  பார்த்துவச்சுக்கிட்டு அதுக்கேத்தாப்லெ திட்டம் போட்டுடறாங்க இல்லே ?  இன்றைக்கு நாம் பார்த்த இடங்களெல்லாம்  ஒரு பதினைஞ்சு கிமீ சுத்துவட்டாரத்துலேதான் !  
Sky ride (Ropeway ) கட்டடம், மலைக்கு எதுத்தாப்லெ இருக்கு. எல்லோரையும் அங்கே கூட்டிப்போன கைடு,  மொத்தக்குழுவுக்கும் டிக்கெட் வாங்கிவந்து எல்லோருக்கும் கொடுத்தாங்க.  டிக்கெட்லே கரடி !   என்னைப்பார்த்தால் சின்னப்புள்ளெயாட்டமா இருக்கு ?  இருக்குமோ !!!   கரடி வுட்ருக்காங்க பாருங்க.....  அட்ஜஸ்ட்மென்ட்டா இருக்க வாய்ப்பில்லை....   நம்மவருக்குக் கிடைச்சுருக்கே !  ஒருவேளை அடல்ட் டிக்கெட்ஸ் தீர்ந்துபோச்சோ என்னவோ !



ஒவ்வொரு காமணிக்கும் கேபிள்கார் பொட்டி கிளம்புதுன்னு சொன்னாலும், மேலே போய்ச் சேர எட்டு நிமிட் ஆகுதுன்ற கணக்கில்  இருவது நிமிட் ஆகும்தான். பொட்டி வந்து இறங்கும்போது பார்த்தால்... இதே மாதிரி ஒன்னில் நாம் பத்ரிநாத் பயணத்தில் ஜோஷிமட் என்ற இடத்தில் ஒளலிக்கு போயிருக்கொம்லெ  !!!

  https://thulasidhalam.blogspot.com/2017/06/15.html

மேலே போகும்போது பார்த்தால்... இன்னொரு லைன் போடும் வேலை நடக்கறது தெரியுது. சின்ன வீடியோ க்ளிப் எடுத்தது இங்கே. ஃபேஸ்புக்கில் போட்டதின் லிங்க்.

https://www.facebook.com/1309695969/videos/498466199316189/

பெருமாள் வந்துருக்கார் நம்ம கூடவே ! 


ஒரு பெஞ்சு மேலே ஏறி நின்னு, எங்களையெல்லாம் பார்த்து 'இந்தாண்டை  அந்தாண்டைன்னு எல்லாத் திசைகளிலும் என்ன இருக்குன்னு  சொன்னதோடு 'நீங்கெல்லாம் போய்ச் சுத்திப்பார்த்துட்டு இதே இடத்துக்கு நாலேகாலுக்கு வந்துருங்க. சரியான நேரத்துலே வந்தீங்கன்னா.... இன்னொரு இடத்துக்குப் போகலாம். சர்ப்ரைஸ்'னாங்க கைடு. 

க்ரிஸ்லி கரடி( Grizzly Bear )  இருக்குன்றதுதான்  எனக்கு சுவாரஸ்யம்.  முதலில் கரடி இருக்குமிடத்துக்கு... நடக்கறோம்.  ஷூ இருக்கும் நிலையில் ரொம்பக் கவனமா அடியெடுத்து வைக்கணும். மறந்துறக்கூடாதுன்னு  மனசுக்குள் சொல்லிக்கிட்டே போறேன்.  குளிர்காலத்தில் விழுந்த  பனித்துகள்கள் எல்லாம்,   பாதையைச் சுத்தப்படுத்த ஓரமாத்தள்ளிவிட்டதுலே கட்டிபிடிச்சுக்கிடக்கு.  உருகி விழும் பனிக்கட்டிகளை  ஒதுக்கித் தள்ளிக்கிட்டு இருக்கார் ஒரு ஊழியர். இன்னும் கொஞ்சம் உயரமா இருக்கும் மலைமுகடுகளில் பனியின் அடையாளம். அங்கே போய்வர ச்சேர்லிஃப்ட் லைன் இருக்கு. 

முழுமரத்தில் சிற்பச் செதுக்கல்கள் அங்கங்கே !  கைகாட்டி மரம் விவரம் காமிக்குது. 




கரடி வீட்டாண்டைச் சின்னக்கூட்டம்.....எதிரில் இருக்கும் மரக்கூட்டத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கு சனம். நாமும் ஜோதியில் கலந்தோம்.  குளிர்காலத்தில் தூக்கமான தூக்கமா 149 நாள் இருந்துட்டு,  இப்பதான் ஒரு வாரமா வெளியில் வந்துருக்குதுங்களாம். 


"ஹை.... என்னையா பார்க்க வந்தீங்க ? "

"ஆமாம்ப்பா !!!"

"வாங்க ......"

"ஏம்ப்பா... எங்கூர்ப்பக்கமெல்லாம் இருக்கும் கரடியும்  நீங்களும் ஒன்னுதானா ?"
"இல்லையே.... அதுங்க கொஞ்சம்  சின்னதுங்க. உடம்புலே ரோமம் கூட குட்டையா இருக்கும். இங்கே பாருங்க.... நான் எவ்ளோ நீளமான ரோமத்தோடு புசுபுசுன்னு இருக்கேன் !  அதுவும் அந்த ரோமத்தின் கடைசி நுனியில் தங்க நிறம் வேற இருக்கே ! ஏதோ தங்கத்தண்ணியில் தொட்டு எடுத்தாப்லே ! ஆங்.... அப்புறம்... காது..... எங்க காதெல்லாம் அழகா வட்டமா இருக்கும்.  அதுகளுக்கோ.... நாய்க்காது மாதிரிதான்..."

"அப்ப நீங்கதான் பெரிய உருவமாக்கும் ! என்ன எடையில் இருப்பீங்க ? "

"நான் ஒரு முன்னூறு கிலோவரை இருப்பேன். நம்மாளு.... ஒரு நூத்தறுபது கிலோ தாஜ்மஹல். ஆனாலும் நாங்கதான் உருவத்துலே பெருசுன்னுப் பெருமைப்பட்டுக்க முடியாது.  ப்ரவுன் வகைக்கரடி இருக்கு பாருங்க....  அவன் ஒரு அறுநூறு கிலோ வரை இருப்பான். உங்களைப்போல் ரெண்டு காலுலே  நின்னால் ஒரு பத்தடி உசரம்"

"அம்மாடியோவ்..."

ச்சும்மாக் கொஞ்சநேரம் அவனோடு பேசிக்கிட்டு இருந்தேன்.....


 இங்கே இப்போ இருவர் மட்டுமே இருக்காங்களாம்.  Grinder & Coola ன்னு பெயர். ஒரே ஜாடைதான் என்றாலும் ஒன்னு  வயசில் மூத்ததுன்னு தோணுச்சு.  பாதிக்கூட்டம் இங்கேதான். அதோ  அங்கே, இதோ இங்கேன்னு சனம் கைகாமிக்கும் இடத்தில் எல்லாம் பார்வையை ஓட்டிக்கிட்டு இருக்கு!

 கூட்டத்தைப் பார்த்துக் கோவம் வந்துருக்குமோ என்னவோ.... சரசரன்னு இறங்கித் தரைக்கு வந்தவன் 'இந்தா நல்லாப் பாத்துக்கோ'ன்னு ஒரு நிமிட்  நின்னு கண்ணை எங்க பக்கமெல்லாம் திருப்பிட்டு, ' இம்புட்டுதான்.  ஆட்டம் க்ளோஸ். கிளம்பு, காத்து வரட்டும்'னு..........சரசரன்னு மேலே ஏறிக் காட்டுக்குள் போயிட்டான். 

நீ சொன்னா.............. ஆச்சா.... எங்கே போறேன்னு  பார்க்கணுமே....  சின்னச் சின்ன குகை, மரக்கூட்டத்துக்கிடையில்.... யாரோ இருப்பதைப்போல் அசைவு தெரியுது ஆனாலும் ரெண்டுபேரையும் ஒன்னாப் பார்க்கணும் என்ற ஆசை  நிறைவேற வழியே இல்லை. தனித்தனியாத்தான் டர்ன் போட்டுக்கிட்டு வந்து காட்சி கொடுக்கறாங்க.
பெருமாள்னு சொன்னது சரிதான் போல.... பெரியதிருவடி தன் காலில் கொத்தாய் பிடிச்சுருக்கும் பாம்புகள் !  ஒரு பக்கம் ஆந்தைகள்,  தொழிலாளிகள் ன்னு...  மரத்துக்கு  ஒன்னு.....





ஒரு சின்னச் சதுக்கத்துலே  கொஞ்சம் விளையாடிக்கும் வகையில் சில....

Zipline லே தொங்கிக்கிட்டுப் போகலாமாம். போறவங்க போகட்டுமுன்னு  அந்தாண்டை இருக்கும் கட்டடத்துக்குள் போறோம்.  காஃபி, டீ, குடி, நினைவுப்பொருட்கள்னு  வியாபாரம். இப்ப நாம் நாலாயிரத்துச் சொச்சம் அடி உயரத்தில் இருக்கோம். தூரத்தில் வான்கூவர் நகரின்   காட்சி,  கொஞ்சம் மசமசன்னுதான்.... 
 



நேரமாச்சுன்னு கிளம்பினால்  கைடு , இங்கே காஃபி    குடிச்சுக்கிட்டு இருக்காங்க. அவுங்களோடு  சேர்ந்தே சொன்ன இடத்துக்கு வந்து, பொட்டியில் ஏறியாச்சு.  நல்ல கூட்டம்.  100 பேர்வரை ஒரு பொட்டியில் போகலாமாம். அதுலே ஒரு பொட்டி ஆப்பரேட்டரும் சேர்த்தி ! நூறா ?  எப்படி ? தீப்பெட்டிக்குள்  குச்சிகளை அடுக்கறாப்பலயா ?  மூச்சு முட்டாதோ ? இப்ப நூத்துக்கும் குறைவுதான் என்றாலும்   இடுக்கமாத்தானே இருக்கு !  

   முதல்லே உள்ளே வந்தவங்க     எல்லோருமே  கண்ணாடியாண்டை இடம் புடிச்சதால் நமக்கு நல்ல இடம் இல்லை. ஆனாலும்  கொஞ்சம்  கிடைச்ச இடுக்கில் ஒரு ஒன் நிமிட் வீடியோ க்ளிப் ஆச்சு :-) கடமை....

அடுத்து அந்த சர்ப்ரைஸ்க்குப் போறோம்.  வான்கூவர் நகரத்துக்குத் தண்ணீர் விநியோகம்  இங்கிருந்துதான் போகுது. க்ளீவ்லேண்ட் அணை.  இதைக் கட்டுனதாலேதான்  சால்மன் மீன் வளம் குறைஞ்சு போச்சுன்னு காலையில்  கைடு சொன்னாங்களே.. அதேதான்.  கபிலானா ஆற்றில் கட்டியிருக்கும் அணை.

தோட்டத்தின் அடுத்த கோடியில் அணை இருக்காம்.  காமணியில் போயிட்டு வர்றதா இருந்தா,  சீக்கிரம் போங்கன்னதும்.....   நம் ஷூ இருக்கும் நிலையில் 'நடக்கற ' வேலையா?  நம்மவரைப் போகச் சொன்னால்.....  நிறைய அணைகளைப் பார்த்தாச்சுன்னுட்டார்.  அதுவுஞ்சரிதான் :-)   
670 ஏக்கர் பரப்பில் நீர்த்தேக்கம்.....  இங்கிருந்தே பார்த்தாச்.   பெருசுதான் .

கொஞ்சம் அங்கே இங்கேன்னு க்ளிக்கிட்டு ஒரு பெஞ்சுலே உக்கார்ந்திருந்தோம். 

' ஹை.... இங்கியா இருக்கீங்க ?  என்ன நல்லாப் பார்த்து வச்சுக்குங்க.  உங்க ஊருக்கெல்லாம் நாங்க வரமாட்டோம்'னு சொல்லிட்டுக் கொஞ்சம் நடந்து காமிச்சது.    காகா......

கிளம்பி ஊருக்குள் வண்டி நுழைஞ்சப்பச் சரியா அஞ்சரை !   ஹொட்டேலுக்கு வரும்போது அஞ்சு அம்பது.   டூர் முடிஞ்சது !   
தொடரும்.......... :-

Monday, July 01, 2024

நீ வீரன்/ வீரி ! (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 9 )

கொஞ்சமா இந்த இடத்தைப் பற்றிச் சொல்லிட்டு, 'இப்ப மணி பனிரெண்டரை. உங்களுக்கு ரெண்டு மணி நேரம் தர்றேன். உள்ளே போய் நல்லாச் சுத்திப்பார்த்திட்டு ரெண்டேகால், ரெண்டரைக்குள்ளே வந்துருங்க. சீக்கிரம் வந்துட்டால் நாம் இன்னொரு சுவாரஸ்யமான  இடத்துக்குப் போகலாம்'னாங்க கைடு ! ஃபோட்டொ பாய்ன்ட் இருக்கே.... விடமுடியுமோ ?
உள்ளே போகும் ஆரம்பத்துலேயே பாலத்தின் வரலாறு இருக்கு. நின்னு அஞ்சு நிமிட் வாசிச்சதோடு , நாலு க்ளிக்கும் ஆச்சு.


இப்ப இந்தப் பாலத்துக்கு வயசு 135 ! 1888 லே ஸ்காட்டிஷ் ஸிவில் எஞ்சிநீயர் ஒருத்தர்  (George Grant Mackay, a Scottish civil engineer and land developer,  இந்தக் காட்டுப்பகுதியில்  ஆற்றையொட்டி ரெண்டு கரைகளையும்  சேர்ந்தாப்போல இருக்கும்  இடத்தில் ஒரு ஆறாயிரம் ஏக்கர் வாங்கிப்போட்டார்.    ஒரு பக்கம்  சின்னதா ஒரு மரவீடு கட்டிக்கிட்டார். ரெண்டு  பகுதி நிலத்துக்கும் நடுவில்  ஆறு நல்ல பாதாளத்தில் ஓடுது ! அக்கரைக்குப் போகணுமுன்னா  ......  வழி ?   
தண்ணீரில் இறங்கி ஆற்றைக் கடக்காமல், ஒரு  பாலம் கட்ட ஐடியா வந்ததும்  
  Hemp  என்ற செடிகளைப் பறிச்சுக் கயிறு திரிக்கிறார். இந்த ஹெம்ப்.... Marijuanaவோட சொந்தக்காரர். கூட்டுக்குடும்பத்தில் ஒரு அங்கம்.  உண்மையில் இந்தச் செடி ஆதியில் ஏராளமா விளைஞ்சது சீனத்தில்தானாம்.  சுமார் பனிரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயே சீனாவில் இதைவச்சுக் கயிறு திரிச்சுருக்காங்களாமே ! (எல்லாத்துலேயும் முன்னோடி இல்லே ?கொரோனா உட்பட.... )
Cedar மரத்துப் பலகைகளையும் ( இது நம்ம தேவதாரு மரம்தான். ஓங்குதாங்கா உசரமா வளரும் மரம்!) திரிச்ச கயிறுகளையும் வச்சு நூலேணி மாதிரி நீளமாத் தயாரிச்சு, அந்த ஏணியின் ஒரு பக்கத்தை மரவீடு கட்டுன பகுதியில் கட்டி விட்டுட்டு, மறு பகுதியை,  பள்ளத்துலே கீழே இறக்கி, அங்கிருந்து  குதிரைகள் மேலே  வச்சு ஆற்றைக் கடந்துபோய்த் திரும்ப அந்தப்பக்கம் மேலே ஏத்தி, அங்கிருந்து இழுத்துக் கட்டியிருக்கார். ஸிவில் எஞ்சிநீயர் ஆச்சே ! நிறையப்பேர் உதவியிருப்பாங்கதான்  !  இந்த வேலை முடிய ஒரு வருஷம் ஆகி இருக்கு ! 
பாலத்தின் புகழ், பரவாமலா இருந்துருக்கும் ! இந்தப் பாலமே ஒரு பதினாலு வருஷம் தாக்குப்பிடிச்சுருக்கு. 1903 இல் கயிறுக்குப் பதிலா இரும்புக் கம்பி மாத்தியிருக்காங்க. வேடிக்கை பார்க்க நிறைய மக்கள் வரத் தொடங்கியிருக்காங்க. 1911 இல் இந்த இடத்தை வாங்கியவர் (Edward Mahon ) வந்துபோற சனத்துக்காக ஒரு டீக்கடை (Tea House)ஆரம்பிச்சுருக்கார்.  டீன்னா வெறும் டீ மட்டுமா ? மசால் வடைக்குப் பதிலாக பன், ரொட்டி, பிஸ்கெட்ன்னு இருந்துருக்கும், இல்லே ? 
ஒரு மூணு வருஷம் ஆனதும் பாலம் இன்னும் கொஞ்சம் உறுதியா இருக்கட்டுமேன்னு  கூடுதல் இரும்புக்கம்பிகள் சேர்த்துக் கட்டியிருக்கார். அடுத்த இருவது வருஷத்தில் திரும்ப இடம் கைமாறியிருக்கு !  இப்ப வாங்குனவர் ஒரு முன்னாள் ஃபாரஸ்ட் ரேஞ்சர் (“Mac” MacEachran, a former forest ranger. ) காடு சமாச்சாரமெல்லாம் அத்துபடி ஆகிருக்கும்தானே ! 

உள்ளூரில் இடப்பெயற்சியில் வந்துருந்த ஃபர்ஸ்ட் நேஷன் குழுவிடம்,  உங்களுக்கு விருப்பம் என்றால் உங்க  குலச்சின்ன அடையாளமான டோடம்போல்(TotemPole)இங்கே வைக்கறீங்களான்னு கேட்டுருக்கார்.  கரும்பு தின்னக்கூலியா?  விதவிதமான கதைகள் சொல்லும் தூண்களைச் செஞ்சு கொண்டுவந்து வச்சுட்டாங்க !  இது நடந்தது 1935 இல்.  












மறுபடி பத்தே வருஷத்தில்  இடம் விற்பனைக்குப்போய்,  வாங்குனவர்,  எட்டே வருஷத்தில் Rae Mitchell என்பவருக்கு 1953 இல் வித்துட்டுப்போனார். 
Rae Mitchell , எப்படியாவது இந்த இடத்தை பொழுதுபோக்குக்கான  வசதிகளுடன்  மாத்தணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டார் போல !  சுற்றுலா வரும் மக்களைக் கவரும் விததில் கடைகண்ணிகள்,  விருந்து நடத்திக்கும் பெரிய  ஹால்கள், உணவு விடுதிகள் இப்படி நிறைய புதுமாற்றங்களைக் கொண்டுவந்ததுடன்,  ஒரு மூணு வருஷம் கழிச்சு அஞ்சுநாள் பாலத்துக்கு லீவு விட்டுட்டார்.  லீவா ? எதுக்கு ?   பாலத்தின் ரெண்டு முனைகளிலும் பதிமூணு டன் காங்க்ரீட் சேர்த்து,  ஸ்டீல்கம்பிகளை இணைச்சு  ரொம்பவே உறுதியான பாலமா மாற்றிவிடறதுக்குத்தான் !  இப்போ ஏழு யானை நடந்தாலும் ஒன்னுமே ஆகாதாமே !
அவருடைய மகள் நான்ஸி, 1983 முதல் இந்த  இடத்துக்கு உரிமையாளரா இருக்காங்க.  இடம் இப்போ அட்டகாசமான சுற்றுலாப்பயணிகள் நாள் முழுசும் பொழுதுபோக்கும் வகையில் இருக்கு.  Canadian Tourism Hall of Fame in 2000. அவார்ட் கிடைச்சுருக்கு !  இப்ப ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால்.... வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுத்துருக்காங்க. 
(அஞ்சு நிமிட்  வாசிச்சுட்டு இவ்வளவா ?   ஹிஹி.....மேற்படி சமாச்சாரங்களை வலைவீசிப்பிடித்தேன்.  கொஞ்சமா துல்ஸீ'ஸ் மசாலா சேர்த்து உங்களுக்கு விளம்பி இருக்கேன். எல்லோரும் பாலத்தை வித்தாங்க, பாலத்தை வித்தாங்கன்னு குறிப்பிட்டுருக்காங்க. பாலத்தை மட்டும் எப்படி விற்கமுடியும் ?  அந்த ஆறாயிரம் ஏக்கர் இடத்தையும்தானே ?  என்னவோ போங்க..... )

பாலத்துக்குப்போகுமுன் ,  செய்யக்கூடாதவை பட்டியல் போர்டு.  ஒருசில அபகடங்கள் நடந்தபிறகு.... வச்சுருக்காங்க போல ! 
பாலத்துக்குப்போய் நடந்துட்டு, அப்படியே சில வீடியோ க்ளிப்ஸ், க்ளிக்ஸ் எல்லாம்  ஆனதும், கடைகளில் ஒரு சுத்தும் ஆச்சு. செருப்புக்கடை ஒன்னும் இல்லை.  நினைவுப்பரிசுகள்தான் நிறைஞ்சுருக்கு.  எனக்கு வாழ்நாள் முழுசும் நினைவு வச்சுக்கும் சம்பவம் இருப்பதால் ஒன்னும் வாங்கிக்கலை.


ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாடு.  நம்மவருக்கு ரைஸ் & சப்பாத்தி ப்ளஸ் கறி. எனக்கு  ச்சீஸ் ச்சிப்ஸ்.  கூப்பானைக் கொடுத்துக் கூடக்கொஞ்சம்தான் ! 


வண்டி இருக்கும் இடத்துக்கு வந்தால்.... நம்ம கைடு பாலத்தில் நடந்துபோன வீரத்துக்கான சான்றிதழ் கொடுத்தாங்க.  பாலத்தின் நீளம் 450 அடி. கீழே தண்ணீரில் இருந்து 230 அடி உயரம். 


எனக்கு இந்த தொங்குபாலத்தின் த்ரில் இல்லாமப்போனதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒன்னாவது இங்கே எங்கூரிலேயே ஒரு அளவில் சின்ன தொங்குபாலம் இருக்கு. பலமுறை போய்வந்துருக்கோம். நீளம்தான் ஒரு நூத்தியம்பது அடி இருக்கலாம்.  கால்பதிக்கும் இடத்தில்கூடக் கம்பிகள்தான் !
ரெண்டாவது, இதே 450 அடி நீளப்பாலத்தில் ரிஷிகேஷில் போயிருக்கோம்.  லக்ஷ்மணஜூலான்னு பெயர்.  பாரதத்தில் வெள்ளையர் ஆட்சி நடந்த காலத்தில் கட்டுனது. 1930 வது வருஷம்.

இதே ரிஷிகேஷில் ராம்ஜூலா என்னும் சிவானந்தா பாலம், 750 அடி நீளம் &  கங்கைக்கு மேல் 450 அடி உயரம்.  கொஞ்சம் அகலமான பாலமும்கூட.  உள்ளூர் சனம்  மோட்டர்பைக்கிலும், மாடுகள் நடராஜா சர்வீஸிலும் பயணிக்கிறாங்க.  நாமும் ஒரு ஓரமா நடந்து போறோம் !  ( அதானே...  யாருகிட்டே ! )


நம்மூர் படங்களை உங்களுக்காகச் சேர்த்திருக்கேன் :-)

நேரம் இருந்தால் பார்க்க ரெண்டு சுட்டிகள் உமக்கு !

நம்ம ராம் ஜூலா பதிவு

https://thulasidhalam.blogspot.com/2011/02/blog-post_18.html

நம்ம லக்ஷ்மண் ஜூலா பதிவு

https://thulasidhalam.blogspot.com/2011/03/blog-post.html

அடுத்த இடம், நம்ம  கைடு சொன்னதைப்போல் சுவாரஸ்யமானதுதான் !  வாங்க போகலாம்.....


தொடரும்.... :-)