Wednesday, March 06, 2013

பரிமளரெங்கநாதர் என்னும் மருவினிய மைந்தனின் வீரசயனம்!


திருஇந்தளூர் போறோம். வழியை விசாரிச்சுக்குங்கன்னு நம்ம ட்ரைவர் சீனிவாசனிடம் சொன்னதும்  அக்கம்பக்கம் இருந்த யாரிடமோ போய் விசாரிச்சவர், அப்படி ஒன்னும் இங்கெ இல்லீங்களாமுன்னார்.  போச்சுரா.....  பரிமள  ரங்கநாதர் கோவில். 108 திவ்யதேசத்துலே  ஒன்னுன்னதும் திரும்பிப்போய் விசாரிச்சவர்  இங்கெ பக்கத்துலேதானாம். வழி  சொல்லிட்டார்னார்.


பதிவர் இனத்துக்குன்னு ஒரு நியமம் உண்டு.எந்தெந்த  ஊருக்குப்போறோமோ அதுக்குச் சம்பந்தமுள்ள  பதிவர்களை நினைச்சுக்கணும்.  இந்த சம்ப்ரதாயத்தின்படி சீமாச்சுவை நினைச்சுக்கிட்டேன்.  இந்தளூர்காரர். என் நெஞ்சில்பூத்தவை என்று ஒரு வலைப்பதிவு வச்சுருக்கார்.  சுருக்கத்தில் சொன்னால் குறிஞ்சி மலர்.  வருசத்துக்கு  ஒன்னு இல்லே ரெண்டுன்னு எழுதுவார்!  தான் படிச்ச இந்தவூர் பள்ளிக்கூடத்துக்கு  மாய்ஞ்சு மாய்ஞ்சு உதவிகள் செஞ்சுக்கிட்டே இருப்பார்.  அதையெல்லாம் வாசிக்கும்போதே .... நம்ம பள்ளிக்கூடத்துக்கு  நாம் ஒன்னும் செய்யலையேன்னு  இருக்கும்:( நாடோடி  வாழ்க்கையில் வருசாவருசம் புதுப்பள்ளிக்கூடமுன்னா எதுக்குன்னு செய்றது சொல்லுங்க?  அந்தவரை  பள்ளிக்கூடப் பெயர்களைக் கெடுக்காமல் இருக்கேனே..... அது போதும்!

திருவிழந்தூர் என்று இப்போதையப் பெயராம். கடைகளில் பெயர்ப்பலகை இப்படித்தான் சொல்லுது.  அப்ப... திரு இந்தளூர்?  இது புராணப்பெயராம்.  இந்து (சந்திரன்) வந்து பூஜித்த தலம்.  சந்திரனுக்கு தக்ஷன் சாபம் கொடுத்துட்டார்.  ஏராளமா (27)  மனைவிகளைக் கட்டிக்கிட்டு  அவர்களில் பாரபட்சம் காட்டுனதுக்கு தண்டனை.  முழுக்கதை வேணுமுன்னா இங்கே பாருங்க.

நம்ம  துணைக் கடவுளர்கள் அனைவரும் ,  சைவ வைணவப்பிரிவுகள்  வந்ததால்   எதுக்கு வம்புன்னு  ரெண்டு பேருக்கும் பொதுவில் இருக்காங்க. எடுத்துக்காட்டா.... சந்திரனுக்கு  ஒரு சாபவிமோசனம் வேணுமுன்னா  சைவத்துக்கு ஒரு தலம்,  வைணவத்துக்கு ஒரு தலம்னு  போய் நிவர்த்தி தேடிக்குவார். இந்தக் கதையில் சைவப்பிரிவுக்கு சோம்நாத்.  வைணவத்துக்கு  இந்தளூர்.

சந்நிதித்தெருவுக்குள் நுழையறோம்.   வழக்கமா எல்லாப் பெருமாள் கோவில்களிலும் இருப்பதைப்போலவே  முதல்லே நாலு கால் மண்டபம்.  அதுக்கு ஒரு அம்பதடி தள்ளி கோபுரவாசல்.

அழகான அஞ்சடுக்கு ராஜகோபுரம்.  அழகை  முழுமையா  கண்ணுக்குள் போகவிடாமல்  கோபுர வாசலுக்கு ஒரு தகரகூரை. ஐ ஸோர்:(

  கோபுரம் முழுசும்,  கதை சொல்லும் சுதைச்சிற்பங்கள். வெண்ணெய் திருடும் கண்ணனும், அவன் களித்தோழர்களும்கூட இருக்காங்க.  ஒரு அடுக்கில்  இடது புறம்   கருடவாகனத்தில் பெருமாளும்  வலதுபுறம் பள்ளிகொண்ட பரந்தாமனும்.  கொள்ளை அழகு!

திரு பரிமளரெங்கநாதர் சுவாமி திருக்கோயில் . உள்ளே நுழைகிறோம்.  தங்கக்கொடி மரத்தினருகில்  கோயில் பூனை!  நமக்கு சகுனம்  டபுள் ஓக்கே:-)))

இந்தக்கோவிலுக்கும் (வழக்கம்போலவே)  வயசு ரெண்டாயிரமுன்னு  சொல்லிட்டாங்க.  ஒரு காலத்துலே இந்த இடத்தைச்சுற்றி நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த  காடு இருந்ததாம். அதனால் பெருமாளுக்கு சுகந்தவனநாதர்ன்னும் ஒரு பெயர்  இருந்துருக்கு.  அந்த சுகந்தம்தான் பரிமளம் என்று எனக்கும் புரிஞ்சுருச்சு பாருங்க.

இந்தப்பெயர்க்காரணத்தின்  இன்னொரு வெர்ஷன் என்னன்னா.... ப்ரம்மனிடம் இருந்து  அசுரர்கள் வேதங்களைத் திருடிப்போய் கடலில் ஒளிச்சு வச்சுடறாங்க.   பதறிப்போன பிரம்மன் பெருமாளைச் சரணடைய,  அவர்  மத்ஸ்யாவதாரம்  எடுத்துப்போய்  அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டு வந்து அவைகளை மீண்டும் பரிமளிக்கச் செய்தார் என்பதே!
இவருக்கு இன்னுமொரு அழகிய தமிழ்ப்பெயரும் இருக்கு! மருவினிய மைந்தன் !


108 வைணவ திவ்யதேசங்களில்  பஞ்ச ரங்கதலங்கள்னு  ஒரு அஞ்சு கோவில்களுக்கு சிறப்பு இருக்கு. அதுலே இதுவும் ஒன்னு. பரிமள ரங்கம்  . மற்ற நான்கும்.... ஆதிரங்கம்   என்னும் ஸ்ரீரங்கப்பட்டினம்,  மத்ய ரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் , அப்பக்குடத்தான் இருக்கும் அப்பாலரங்கம் என்னும் கோவிலடி,  சதுர்த்தரங்கம் என்னும்  சாரங்கபாணி கோவில், கும்பகோணம் .

கோவில்  கருவறை விமானம் வேதச்சக்ர விமானம்.  கோவில்  குளம் சந்த்ரப் புஷ்கரணி.

திவ்யதேசம் வரிசைக்கிரமத்தில் இதுக்கு 22 வது இடம். பொதுவா நாம் கோவில்களுக்குப்போகும்போது  சீனுவாசனை ( நம்ம  ட்ரைவர்)  நீங்களும் உள்ளே வந்து சேவிச்சுக்குங்கன்னு கூப்பிடுவேன்.  எதுக்கு அநாவசியமா காரில் காத்திருக்கச் சொல்லணும்?  இந்த ட்ராவல்ஸ் வாகன ஓட்டிகள்  எல்லா ஊர்களுக்கும் போறாங்களே தவிர கோவில்களுக்குள் போவது ரொம்பக்குறைவுன்னு  ஒரு முறை இவரே சொல்லி இருக்கார். இது 108 லே ஒன்னு, அதுவும் 22 வது இடமுன்னதும்  இவருக்கும் சுவாரசியம் தொத்திக்கிச்சு. ஒவ்வொரு கோவிலுக்கும் போகும்போது  எத்தனாவது இடமுன்னு  நம்மகிட்டே கேட்டுப்பார்.

மூலவர் பாம்புப் படுக்கையில்   கிழக்கு நோக்கி, வீரசயனத் திருக்கோலத்தில் இருக்கார். பத்துவித சயனப்போஸில் இந்த சயனம் இங்கே மட்டும்தானோ என்னவோ?  காலடியில் சந்திரனும், தலைமாட்டில் சூரியனும் நின்று  வணங்குகிறார்கள். இதுவே ஒரு தனிச்சிறப்புதான். போதாக்குறைக்கு  இடப்புறம் வலப்புறங்களில் காவேரியும் கங்கையும்!    ஆனால் இன்னுமொரு சிறப்பா ஏகாதசி விரதத்தின் மகிமையைச் சொல்லும்  தலமாகவும் இருக்கு.

 அம்பரீக்ஷன் என்னும்  அரசர் ஏகாதசி விரதங்களை ஒழுங்காகக் கடைப்பிடித்து வர்றார். அவருடைய  நியமங்களைப்பார்த்து தேவர்களுக்கும் பயம், எல்லாம் நல்லபடியாச் செஞ்சு எங்கே இந்த மனுஷ்யர்  தேவர்கள் வரிசையில் சேர்ந்துருவாரோன்னு.... இந்த சமயம் அவர் விரதமிருக்கும் நூறாவது ஏகாதசித் திதியும் வருது.  பயந்து போன தேவர்கள் துர்வாசமுனிவரிடம் போய்  விரதபங்கம் செய்யும்படி வேண்டிக்கிறாங்க. அவரும் இதுக்கு சம்மதிச்சு அம்பரீக்ஷனின் அரண்மனைக்குப் போறார்.

முதல்நாள் முழுப்பட்டினியா ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசி திதி முடியுமுன்   உணவு உண்டு  விரதம் முடிக்கணும் என்பதே நியதி. அரசர் உணவு உண்ண தயாராகும் சமயம்  துர்வாசமுனிவர் அங்கே போய்ச் சேர்ந்தார். முனிவரை வரவேற்று உபசரித்த அரசர் கூடவே சாப்பிடணுமுன்னு அழைக்கிறார். சரி, நான் போய் குளிச்சுட்டு வரேன்னு   நதிக்குப்போனவர் சட்னு திரும்பாம  நேரங்கடத்திக்கிட்டே இருக்கார்.

இங்கேயோ மன்னருக்கு துவாதசி திதி எங்கே முடிஞ்சுருமோன்னு கவலையா இருக்கு.  அதன்பிறகு சாப்பிட்டால் விரத பலன் கிடைக்காதேன்னு  வருந்துகிறார்.  அப்ப அவரது ஆலோசகர்களான  மந்திரிகள்  சாப்பாடு சாப்பிட லேட்டானால் பரவாயில்லை.நீங்க  பெருமாள் தீர்த்தம்   உள்ளங்கையால் மூணு  முறை  குடிச்சுட்டால் விரதபலன் கிடைச்சுரும்.  முனிவர் வந்தபின் அவரோடு சேர்ந்தே உணவருந்தலாமுன்னு சொன்னாங்க.  நல்ல ஐடியா. விரதபங்கமில்லைன்னு அப்படியே செஞ்சுட்டார். துவாதசி திதியும் முடிஞ்சுருது.

ஞான திருஷ்டியால்  இதைத் தெரிஞ்சுக்கிட்ட முனிவர், ஆஹா....என்னை சாப்பிடக் கூப்புட்டுட்டு  எப்படி மரியாதை இல்லாமல் நீ  விரதம் முடிக்கப்போச்சுன்னு  கோபத்தோடு சாபமிட  வேகவேகமா அரண்மனைக்கு வந்து சேர்ந்து, பிடி சாபமுன்னு  பனிஷ்மெண்டைச் சொல்றதுக்குள் அரசர்  பரிமளரங்கனை  சரணடைஞ்சு காப்பாத்தணுமுன்னு வேண்டிக்கறார்.  பெருமாளும் முனிவரின் கர்வத்தையும் கோபத்தையும் அடக்கி, அரசருக்கு அருள் புரிந்து, 'பக்தா என்ன வேண்டுமோ கேள் ' என்று சொல்ல.... அம்பரீக்ஷனும்  தனக்காக ஒன்னுமே கேக்காமல், இங்கேயே இருந்து  மக்கள் அனைவருக்கும்  அருள்புரிய வேணுமுன்னு கேட்க, அப்படியே ஆச்சு.

பெருமாளைச் சேவிச்சுட்டு அப்படியே தாயார் பரிமள ரெங்கநாயகியையும்,  ஆண்டாளம்மாவையும்  வணங்கிட்டு கோவிலை வலம் வந்தோம். மண்டபத்தூண்களில் அற்புதமான சிற்பங்கள் . தசாவதாரம், ஆலிலைக்கண்ணன்  இப்படி  வகைவகையாய்! படம் எடுக்க  அனுமதி வாங்கலாமுன்னா அங்கே ஆபீஸ்ன்னு ஒன்னையும் காணோம்.   கோபுரவாசல் பக்கத்துலே அர்ச்சனை சீட்டுடன் உக்கார்ந்திருந்த நபர்  வெறும் சீட்டு விற்கும் ஆள் என்பது  பார்த்தவுடன் சட்னு புரிஞ்சது.  அவரிடம் போய்க் கேட்டால் நரிக்கு நாட்டாமை கொடுத்தமாதிரி ஆகிருமோன்னு  கேக்கலை. அதனால் உள்ளே படமும் எடுக்கலை. அதுக்காக சும்மா விட்டுற முடியுதா?

வலையில் தேடுனப்ப ஸ்ரீ (எந்தமிழ்) ன்னு ஒருத்தர் வளைஞ்சு வளைஞ்சு படம் எடுத்து வலையேத்தி இருக்கார். அவருடைய பதிவின் சுட்டி இது. விருப்பம் உள்ளவர்கள் அங்கே போய் பார்த்துக்கலாம் நோ ஒர்ரீஸ். அவருக்கு நம் நன்றிகள்.


தரிசனம்முடிஞ்ச கையோடு  மாயவரத்தில்  இரவு தங்கலாமா வேணாமான்னு ஒரு யோசனை.  இடம் ஒன்னும்  அதுவரை பார்த்து வைக்கலை.  மடிக்கணினியில் தேடுனதில்  ஒரு நாப்பது கிமீ தூரத்தில் காரைக்கால் என்றதும்  இருட்டுக்குமுன் போகமுடியுமான்னு சீனிவாசனைக்கேட்டால், நல்ல ரோடுதான்  ஒரு மணி நேரத்துலே போயிறலாமுன்னார்.   சரின்னு கிளம்பிட்டோம்.   கொஞ்ச தூரத்தில் தெருமுனையிலே  ஒரு  கோவில் கண்ணில்பட்டது. மேல் மாடியில்  கண்ணாடித்திரைக்குபின் கடவுளர்களின் சிலைகள்.  ராமலக்ஷ்மணர்கள் மாதிரி தெரிஞ்சது.
கண்ணால் கும்பிட்டு விடை பெற்றேன்.


ச்சலோ காரைக்கால்!

தொடரும்.........:-)






30 comments:

said...

Hello Thulasi Teacher,

The temple opposite that you mentioned is Anchaneyar Koil.

There is a interesting story about when this perumal closed the door for thirumangai azhvaar and how azhvaar got angry with Rangan.

You can read it here
http://madhavipanthal.blogspot.com/2009/04/blog-post_08.html

Once thanks for the excellent write up about mayiladuthurai. I wish I was there so that we could invited to our home.

Thanks,
Arun

said...

சைவம் ஆனா என்ன,வைஷணவம் ஆனால் என்னப்பா. நம்மக்கு வேண்டியது விமோசனம்:)
எத்தனை கோவில்களுக்குப் போகணுமோ.
பூனையார் அழகு. இங்க நம்ம வீட்டில் மாடி ஜன்னலில் பூனைம்மா குட்டிகள் போட்டு இருக்கின்றது. துணி உலர்த்த மாடிக்குப் போக முடியவில்லை.

பதிவுப் படங்களும் செய்திகளும் அருமைப்பா.

said...

காலை எழுந்ததும் பெருமாள் பரிமள ரெங்கனாதரை தரிசனம் கிடைக்கச்செய்த தங்களுக்கு என்னவாறு நன்றி சொல்வதென்றே
தெரியவில்லை.
ஆதலால், ஸ்ரீ வலையில் நான் படித்த இரண்டு திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் இந்தளூர் பெருமாளைப்பற்றி பாடியதை நானும்
பாடி உங்கள் வலைப்பதிவுக்கு பின்னூட்டமாக இங்கு சமர்ப்பிக்கின்றேன்.
HERE



சுப்பு ரத்தினம்
இங்கும் பார்க்கலாம். பாசுரங்கள் இங்கும் படிக்கலாம்.
www.menakasury.blogspot.com

said...

http://enthamizh.blogspot.com

பல அறியாத கோவில்களை இந்த தளத்தின் மூலம் அறியலாம்... கோவில்களின் சிறப்புகள் உட்பட...

said...

தெருமுனையிலே ஒரு கோவில் கண்ணில்பட்டது. மேல் மாடியில் கண்ணாடித்திரைக்குபின் கடவுளர்களின் சிலைகள். ராமலக்ஷ்மணர்கள் மாதிரி தெரிஞ்சது.
கண்ணால் கும்பிட்டு விடை பெற்றேன்.//

அங்கு ராமபக்தர் அனுமன் இருக்கிறார்.
கண்ணால் கும்பிட்டு விட்டீர்கள். ராமலக்ஷ்மணர் காலடியில் அனுமன் இருக்கிறார்.

said...

திரு இந்தளூர் பரிமளரங்கனின் தரிசனம் அருமை.

படங்கள் மிக அழகு.

said...

மூத்த பதிவர் எனது வலைப்பக்கத்தைக் குறிப்பிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். பின்னூட்டத்தில் என் தளத்தைக் குறிப்பிட்ட Sury Siva, திண்டுக்கல் தனபாலனுக்கும் என் நன்றிகள்.

ஸ்ரீ....

said...

"கதை சொல்லும் சுதைச்சிற்பங்கள்"

சுதைச் சிற்பங்கள் என்றால் என்ன?

said...

நிறைவான தரிசனம். அடுத்ததா போகப்போற இடத்தோட பேரைக் கேக்கையிலேயே ஜிலீர்ங்குது. அவங்களை சிவனே அம்மான்னு கூப்பிட்டிருக்காரே..

said...

பரிமள ரெங்கனாதர் தரிசனம் பரிமளமாய் மனதில் மணக்கிறது ,,பாராட்டுக்கள்.

said...

பரிமள ரங்கநாதர் ஸ்தலம் பற்றிய விவரங்கள் அருமை!.... இன்னும் எத்தனை ஜென்மாக்கள் எடுக்க வேண்டுமோ எல்லா தலங்களையும் தரிசிக்க?

said...

nice narration . good to read . ekaadesi patri pudhusaa therinjukitaen thanks :)

said...

வாங்க அருண்.

'வாழ்ந்தே போம் நீரே'ன்னு நிந்தாஸ்துதி செய்ததை எழுதணுமுன்னு நினைச்சு விட்டுப் போச்சு. அப்படியே பச்சை மேனியும் பார்க்கக்கிடைக்கலை:( புரட்டாசி மாசம் எண்ணெய்க்காப்பு!

கே ஆர் எஸ் ஆழ்வார் பதிவை நான் அப்பவே பார்த்து அங்ஜே பின்னூட்டியும் இருந்தேன். இப்போ உங்க தயவால் இன்னொருக்கில் வாசிச்சு ரசித்தேன்.

நன்றி.

said...

வாங்க வல்லி.

ஆஹா... பூனைக்கோவில் ஜன்னலில் இருக்க வேறு கோவில் எதுக்குப்பா?

எத்தனை குட்டிகள்? என்னென்ன நிறம்?

முடிஞ்சால் க்ளிக்கிட்டு வலையேத்துங்க.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

அருமை!

அங்கே சொன்னதுதான் இங்கேயும்:-)

தன்யளானேன்!!!!!

ஆழ்வாரும் இப்படித்தான் பாடி இருப்பார், அவர் ஏ ஆர் ரஹ்மானா என்ன? ஆயிரெத்தெட்டு இசைக்கருவிகளுடன் பாட!!!

நம்ம பதிவர் லதானந்த் 103 சேவிச்சுட்டார்!!!!!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உண்மைதான். ஸ்ரீ நல்லா அழகா விளக்கி இருக்கார். பல கோவில்கள் எனக்குப் புதுசுதான்.

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா...நினைச்சது போலவே அது நேயுடுவின் கோவிலா!!!

பழைய பொக்கிஷங்கள் இந்தியாவில் குமிஞ்சு கிடக்கும்போது அதுதான் மனசை ரொம்பவும் ஈர்க்குது.

புதுக்கோவில்கள் அழகா இருக்குன்னாலும் ரெண்டாம் பட்சமா ஆகிருதே:(

said...

வாங்க ரமா ரவி.

கூடவே வருவதற்கு நன்றிகள்.

said...

வாங்க ஸ்ரீ.

உங்க தளம் அருமையா இருக்கு. படங்களோ கொள்ளை அழகு!
தெரியாத கோவில்கள் பல!

நாந்தான் நன்றி சொல்லணும்.

said...

வாங்க கிரி.

சுதை என்றால் சுண்ணாம்புச் சாந்து.

அந்தக் காலத்து சிமெண்ட் இது! நல்ல உறுதியாக இருக்கு!

இப்போது ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் கொண்டு கோபுரச் சிற்பங்கள் செய்கிறார்கள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

முந்தி நவகிரக டூரில்இந்த ஊரைக்கடந்து போனபோதும் சுத்திப்பார்க்க நேரமில்லை.

இப்போ வாய்ச்சது!

'அம்மா'வை நானும் தரிசித்தேன்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ரங்கனைப்பற்றிச் சொன்னது உண்மையே. கமகம..கமகம!

பாராட்டுகளுக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


கோவில்களைப் பொறுத்தவரை இந்தியா ஒரு புண்ணிய பூமியேதான்.

கண்டது கடுகளவுன்னு தான் இருக்கு!

ஆனால்...இதுக்காக இன்னொரு ஜென்மம் வேணாம். 'அங்கே இருந்து' டைரக்ட்டா தரிசிக்கலாம்:-))))

said...

வாங்க சசி கலா.

பயனுள்ள பதிவா அமைஞ்சுருச்சு:-)))

said...

பரிமள ரங்கநாதனின் சிறப்புகளை அறிந்து கொண்டேன். கோபுர தரிசனமும் கிடைத்தது. நன்றி.


said...

பரிமளரங்கனின் தரிசனம் அருமை. பெருமாளே வெகு அழகு! நிறைய தடவை சேவித்திருந்தாலும் உங்கள் கட்டுரை படித்தவுடன் உடனே கிளம்பிப் போக மாட்டோமா என்று இருந்தது.

ஸ்ரீ அவர்களின் தளத்திற்கும் போய் ராமஸ்வாமியை சேவித்த புண்ணியமும் போகட்டும் துளசி டீச்சருக்கும், அன்பு கோபாலுக்கும்!

said...

நன்றி :-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

ரெங்கா ரெங்கா ரெங்கான்னு இருக்கோமோ:-)))

said...

வாங்க ரஞ்சனி.

நிறைய தடவை ஸேவிச்ச தலமா!!!!!

வாவ்...... அடுத்தமுறை போகும்போது நான் ரொம்ப விசாரிச்சதாச் சொல்லுங்கப்பா. நம்ம ரெங்கன் கேட்டுப்பார்!

புண்ணியப் பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீயின் பதிவில் படங்களருமையா இருக்குல்லே!!!! ரசிச்சுப்பார்ப்பேன் எப்பவும்!

said...

சுதைச் சிற்பங்கள் வண்ணயாலம் காட்டி சொக்கவைக்கிறது.