Friday, March 29, 2013

ரெங்கா... எனக்கே மூச்சு முட்டுதே.... உனக்கு எப்படி?


மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் எழுந்து நின்னு விஸ்வரூபம் காண்பிக்கும் ராஜகோபுரத்தைக் கண்ணால் கண்டதும்  மனசில் பரவசம்  உண்டானெதென்னமோ நிஜம்.  எத்தனை முறை பார்த்தாலும் இதே உணர்வுதான்!

காளிமுத்துவுக்குச் சொல்லணும் னு நினைச்சுக்கிட்டே ரெங்கவிலாச மண்டபத்துக்குள் நுழைஞ்சதும்  கண்ணில் பட்டார் அவர்!   கேமெராச் சீட்டு ஒன்னு வாங்கிக்கிட்டோம்.  முதல் ப்ரகாரத்துலே இருந்து ஆரம்பிக்கலாமென்பது போல கார்த்திகை கோபுரவாசலுக்குள்ளே நுழைஞ்சவரைப் பின் தொடர்ந்தோம்.  கருடமண்டபத்தையும்   தேவராஜன் குறடு ரெண்டு  பக்கமும்  இருக்கும் ஆழ்வார்கள் சந்நிதிகளை கிளிக்கிக்கிட்டே நானும்  போறேன்.  பொதுவாக எல்லா கைடுகளும் செய்வதைப்போலவே காளிமுத்துவும்  நம்ம கோபாலிடம்  கோவில்கதைகளைச் சொல்லிக்கிட்டே போறார். நம்மவரும் அந்தக்காதில் வாங்கி அதே காதில் வெளியேற்றிட்டு அவர் சொல்வதைக் கேட்டு(!!!) தலையை மட்டும்  ஆட்டிக்கிட்டே போறார். படம் எடுக்க ஒரு ரெண்டு விநாடி பின் தங்க வேண்டியிருக்கே!

(புதிய வாசகர்களுக்கு: இடப்பக்கம், நம்ம கோபால்!)

ஒவ்வொரு வாசலாக் கடந்து முன்நோக்கிப்போகும்போது  மேளச்சத்தம் கேட்டதும் காலை வீசிப்போட்டு உள்ளே ஓடினோம். புறப்பாடு!  ராஜமகேந்திரன் திருவீதியில் (கருவறையைச் சுற்றியுள்ள  பிரகாரம்) நல்ல கூட்டம். இடது புறம் இருக்கும் திண்ணை அமைப்புலே ஏறிப்போனவரைத் தொடர்ந்தோம்.  மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர்  குடும்பத்துடன் இருக்கும் கண்ணாடிப்பெட்டி ஓரமா  இருக்கும் கம்பியழி கிட்டே கிடைச்ச  இடத்தில்  நிக்கறோம்.  இங்கேயும் ஜனநெருக்கடிதான்.

கீழே ஒரு  ஆறேழடி தாழ்வா இருக்குமிடத்தில் மனிதத் தலைகள். எதிரில் சந்தனு மண்டபம் வழியா  நம்பெருமாள் தங்கக்குடை பிடிச்சு ஊர்வலம் வரத் தயாரா நிக்கறார். கெட்டிமேளம் கொட்டியதும் விநோதமான தலைப்பாகை அணிஞ்ச   ஒருத்தர்  (அரையர்?) படியேறிப்போய்  பெருமாள் முன் நிற்க, ஏதோ சம்ப்ரதாயம்  நடக்க, படியை  மறிச்சிருந்த  தண்டம்  விலகுனதும் மேளச்சத்தம் ஜோராய் ஒலிக்க, ரங்கா ரங்கான்னு மக்கள் கூட்டம் அழைக்க   அழகா இறங்கி வர்றார் அழகிய மணவாளர்,எம்பெருமாள் . எல்லாம் நம்ம கண்ணுக்கு முன்னால். நல்ல சமயத்துக்கு வந்து சேர்ந்துட்டோமுன்னு மனசு விம்முது!தினம் தினம் புறப்பாடுதான்.  இவனுக்கு(ம்) காலில்சக்கரம்.  ஊர்சுத்தக் கிளம்பக் காரணமே வேணாம். அதிலும் இன்னிக்கு ஏகாதசி, வாமன ஜயந்தி(யாம்)  கேக்கணுமா? தாயாருக்குப் 'படி தாண்டாப் பத்தினி'ன்னு பெருமையா ஒரு பட்டத்தைக் கொடுத்துட்டு   ஹாய்யா இவன் மட்டும் சுத்தலாம்.  பெண்ணுரிமைன்னு போர்க்கொடி உசத்திச் சண்டைபோட அவளுக்கும் தெரியலை பாருங்க:(


புறப்பாடுகளில் ஒன்னு:-) 

அடுத்த வீடியோ.    இதுவும் கோவில் தேவஸ்தானமே அவுங்க வெப்ஸைட்லே போட்டது. வைகுண்ட ஏகாதசி சமயம்நடந்த புறப்பாடு.  நாம் பார்த்தது இது இல்லை என்றாலும் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கட்டுமேன்னு இங்கே சேர்த்துருக்கேன்.ஏறத்தாழ இப்படித்தான் இருந்துச்சு. இந்தக் கோவில் வெப்ஸைட்லே ஏராளமான புறப்பாடுகள் கொட்டிக்கிடக்கு. ஆர்வம் இருப்பவர்கள் பார்த்து மகிழலாம்.   

அழைக்கின்றான் அரங்கன் (விஜய் டிவி)  தொடர் முந்திபார்த்துக்கிட்டு இருக்கும்போது  ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் சொல்வார்  குறைஞ்சதுஒரு வருசம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பாடுகள் உற்சவங்கள் எல்லாம் பார்க்கணும்னு.  நமக்கும் ஆசைதான்.  அதிர்ஷ்டம் வேணாமா?  வேலையில் இருந்து  ஓய்வு கிடைச்சதும்  போய் ஒரு வருசம் இருக்கலாமுன்னு எப்ப வும் நச்சரிப்பேன்.  காலப்போக்கில்   அது ஆறு மாசம், மூணு மாசமுன்னு  போய்  குறைஞ்சது ஒரு  மாசம் பூராவும் இருக்கணுமுன்னு இறங்கி இருக்கு.  16 மணி நேரப்  பவர்கட்டை நீ தாக்குப் பிடிக்கமாட்டேன்னுவார். உண்மைதான்.  சரி ஒரு பத்து நாள் போய் இருக்கலாமுன்னு  இப்போதைய நினைப்பு.  திருச்சியில் தங்கலாம். ஸ்ரீ ரங்கத்துலே நல்ல ஹொட்டேல் இல்லைன்னு சாதிக்கிறார்.

எனக்கு திருச்சி வேணாம்.  கோவிலாண்டையே தங்கணும். நினைச்சா ஓடிப்போய் கோவிலுக்குள் நிக்கணும். அதிகாலை இருள்பிரியா நேரத்தில்  கோபுரங்களை தரிசிக்கணும். சூரியனுடைய கதிர்கள்  மெள்ள மெள்ள  கோபுரத்தில் படர்வதைக் கண்டு பரவசமாகணும்.  தங்க விமானம் புலர்காலைப்பொழுதில் எப்படி இருக்குன்னு பார்க்கணும் இப்படி ஏராளமான ஆசைகள். நல்ல தங்குமிடங்கள் இருந்தால் தெரிஞ்சவுங்க  சொன்னால்  கோடி புண்ணியம்.

நம்பெருமாள் கிளம்பிப்போவதை  வடமேற்கில் இருக்கும் பெரிய நிலைக்கண்ணாடியில் பார்க்கும் வசதி உண்டு. பெருமாள் பின்னாடி முக்கால்வாசிக்கூட்டம் போனதும்  மூலவரைப் போய் சேவிக்கலாமான்னு  ஒரு ஆசை வந்தது. அங்கே  ஏற்கெனவே ஒரு பெரிய வரிசை தரிசனத்துக்குக் காத்திருக்கு.   தரிசனம் செய்யணுமான்னு கேட்டார் கே  எம்(நம்ம காளிமுத்துதான். இனிமேப்பட்டு கே எம். ஓக்கேவா?) வேணாம், நேத்து  ஆச்சுன்னோம்.

நாம் நிற்கும் திண்ணையில்  ஒரு பக்கம் பூட்டிய கதவுகளா இருக்கு பாருங்க.கருவூலங்கள். பெருமாளின் நகை நட்டு,  கவசங்கள்,  தங்க வெள்ளி பண்டபாத்திரங்கள் இப்படி  உள்ளே வச்சுருக்காங்க. என்னைக்கு,  எந்த நேரத்துக்கு  என்ன அலங்காரம்., அதுக்குத் தேவையான  நகைகள் என்னென்னன்னு  வளக்கமான அட்டவணை இருக்காம்.  அததுக்கு அதது  எப்போ வெளியே போகுது, எப்பத் திரும்பிக்கொண்டு வந்து ஒப்படைக்கிறாங்கன்னு எல்லாம் கணக்காக் கவனிக்க தனி அதிகாரி இருக்கார்.  முத்திரை போட்டு அனுப்பி முத்திரை வச்சு வாங்கணுமாம்.

கொஞ்சம் தள்ளி வடக்குப்பக்கம் இருக்கும் அறைகள்  பெருமாளின்  ப்ரைவேட் ரூம்ஸ். திருமஞ்சனத்துக்கு   வெந்நீர் வைக்க ( முந்தி நம்ம  வீடுகளில் பாய்லர் வச்ச வெந்நீருள்  ஞாபகம் வருதே! ), தோய்ச்ச  துணி உலர்த்த , சந்தனம் அரைக்க, வெள்ளிக்கிழமைகளில் மூலவருக்கு புனுகு சார்த்தவும், கஸ்தூரி திருமண்காப்பு தயாரிப்புகளுக்கும்  அரைச்ச சந்தனத்துக்கு  வாசனை திரவியம்  சேர்க்கவுமுன்னு  தனியா சுக்ரவார அறைன்ற பெயரில் ஒன்னு. பெரும் ஆளுக்கு  எததனையெல்லாமும் வேண்டி இருக்கு, பாருங்க.


கோவில் கணக்குகளில்  சோழ மன்னர்   முதலாம் பராந்தகன்  (கி பி 907 )பெருமாளுக்கு ஒரு வெள்ளிக்குத்துவிளக்கு  காணிக்கையாத் தந்துருக்கார்னு கோவில் கல்வெட்டு சொல்லுது. அந்த விளக்கு நிலயான முறையில் ஏத்தி வைக்கத் தேவையான  கற்பூரம், பஞ்சுத்திரி, எண்ணெய் எல்லாம் ஏற்பாடாக்க  51 பொற்காசுகளும்  வழங்கி இருக்கார்.  ரொம்பச் சரி.  நியாயமானவர்.  அந்தக்காலத்தில் யாரையாவது  அழிக்கணுமுன்னா  அரசர்  யானையை மட்டும் தானம் பண்ணிடுவாராம்.   ராஜா கொடுத்த யானையை காப்பாத்துவதுதானே முறை?  அதுலேயே எல்லா செல்வங்களும் கரைஞ்சு  நடுத்தெருவுக்கு வந்துருவானாம்  தானம் வாங்கியவன். இது எங்க பாட்டி சொல்லிய ஏராளமான  கதைகளில் ஒன்னு:-)

ஏழாம் எட்வர்ட் மன்னர் ரங்கனுக்கு ஒரு தங்கப் பாத்திரம்  1875  இல் கொடுத்திருக்கார். இதுக்கு மெயிண்டனன்ஸ் ஒன்னும் தேவை இல்லை:-))))

யானைன்னதும் இன்னொரு கதை நினைவுக்கு வருது.


பாண்டியர்களும் சோழர்களும் விஜயநகரப்பேரரசின் மன்னர்களும் நாயக்கர் கால அரசர்களும்  கோவிலுக்குக் கொடுத்த நன்கொடைகளும், செய்த திருப்பணிகளும் கணக்கில் அடங்காதவை!  செல்வச்செழிப்பு  கண்டு பொறுக்கமாட்டாமல்தான் தில்லி  அரசர்கள் கொள்ளையடிக்க வந்துருக்காங்க.

அதிலும் பாண்டிய மன்னர் முதலாம் சடைவர்ம சுந்தரபாண்டியன் (கிபி 1251-1268) கோவிலையே பொன்மயமாக்கினார்னு கல்வெட்டுகள் சொல்லுது. திருவரங்கன் சந்நிதி, விஷ்வக்ஸேனர் சந்நிதி, மஹாவிஷ்ணு சந்நிதி, விஷ்ணு நரசிம்மன் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளின்னு கட்டிக்கொடுத்ததுமில்லாம, கருட வாகனம், பிரபை, பீடம், மகர தோரணம்,ஆதிசேஷன் திருவுருவம் இப்படி  எல்லாத்தையும் பொன்னால் செஞ்சு கொடுத்தாராம்.

முத்துவிதானம், முத்தங்கி, மரகத மாலை, பட்டாடை, பொற்றேர் , கிரீடம் என்றெல்லாம்  கணக்கு வழக்கே இல்லாமல் வாரிக்கொடுத்துருக்கார்!  முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம் பெருமாள் இருக்காரே.... அதுகூட  இவர்தான் கொடுத்துருப்பார்,போல!

மேலும் தன்னுடைய யானையுடன்  ஒரு படகில் ஏறி, அதற்குப் பக்கத்தில் இன்னொரு படகை நிறுத்தி ரெண்டும் சரிசமமான நீர்மட்டத்துக்கு வரும்வரை பொன்னாலும் மணிகளாலும் நிரப்பி  எடைக்கு எடை கோவில்கருவூலத்தில் சேர்த்தாராம்.  தலவரலாறு நூல் இவரைப் போற்றிப் புகழ்கிறது.  ஒடிஸா நாட்டு மன்னரை போரில் வெற்றி கொண்டு அங்கே இருந்து கொண்டு வந்தவையாம் இத்தனை பொன்னும்! சிதம்பரம்  கோவில் கனகசபைக்கு பொன்னோடு வேய்ந்து பொன்வேய்ந்த பாண்டியன் என்ற பெயர் அடைந்தவரும் இவரே!


திருவரங்கம் திருக்கோவில் என்று  தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை போட்டிருக்கும் புத்தகத்தில் இருந்து கிடைத்த விவரங்கள் இவை. ஒரே ஒரு குறை  சடையவர்மனை,  சடா வர்மனாக்கி இருக்காங்க:(


கொடுத்த லிஸ்ட்டைப் படிச்சபோதும் சரி, இப்போ தட்டச்சு செஞ்சபோதும் சரி மூச்சு வாங்குது !  இவ்வளவா!!!  இவ்வளவா!!!!!


பிகு:  குலசேகரன் திருவீதி நுழைஞ்சதும்  படம் எடுக்கத்தடைன்னு கே எம். சொல்லிட்டார்:(  சில படங்களை சுட்டேன்.  சுட அனுமதி கொடுத்தவர்களுக்கு என் நன்றிகள்.39 comments:

said...

அழகிய தரிசனம்.

said...

நல்ல அழகிய படங்களுடன் ரங்கனைப்பற்றிய செய்திகள் தெரிந்து கொண்டேன். உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள்(ஒருமாதம் ரங்கனை தரிசனம்செய்யும் ஆசை)

said...

நிறைவான தரிசனம் ....

said...

அரங்கன் வெள்ளி பூணார் .. வெண்கலம் ஆளார் ..!
என்று சொல்வார்கள் ..

எல்லாமே தங்கம் தான் தங்கமானவருக்கு ,,,

said...

//ஒரே ஒரு குறை சடையவர்மனை, சடா வர்மனாக்கி இருக்காங்க:(//


சடைய வர்மனை சடாவர்மனாக்கவில்லை. அவன் பெயரே ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். "ஜ" தான் தமிழில் "ச" ஆகி இருக்கிறது. தில்லைக்குப் பொற்கூரை வேய்ந்ததும் முதலாம் பராந்தகவர்ம சோழன்னு படிச்சு, கேட்டு, எழுதின நினைவு. பாண்டியனும் செய்திருக்கான்னாலும் பொற்கூரையோ, பொன்னோடுகளோ போட்டதாய்த் தெரியலை. ஆதாரங்கள் இருக்கின்றன. சரி பார்த்துக்கறேன்.

said...

ஸ்ரீரங்கத்தைப் பற்றி எத்தனை தடவை படித்தாலும், அங்கு எத்தனை முறை போனாலும், நம்பெருமாளை எத்தனை தடவை சேவித்தாலும்,இதே மூச்சு முட்டல் தான்!

நல்ல அநுபவத்தை சிறப்பாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள், துளசி!

said...

//வேலையில் இருந்து ஓய்வு கிடைச்சதும் போய் ஒரு வருசம் இருக்கலாமுன்னு //

உச்சிப்பிள்ளையார், பெருவுடையார், திருவானைக்காவல், சமயபுரம், பத்தாததுக்கு ஸ்ரீரங்கம்.. ஒரு வருஷம் போதுமா?.. :-))))

said...

Thulsi Madam
Service Apts( Approx. Rs.1500/day) are available for short stay in Srirangam. Some Kalyana Madapams have a/c rooms for rent.

said...

பரிபூரண தரிசனம்... படங்கள் பொக்கிஷம்...

said...

மனம்குளிர தர்சனம்.

எத்தனைதடவை பார்த்தாலும் புதிய தர்சனம்தான்.....

said...

மனசு நிறஞசுருச்சுப்பா !!!!

said...

Tulasi Teacher,
whenever u decide to stay for any number of days, u r welcome and we will make all arrangements for your nice stay with all comfort

said...

எத்தனை நகைகள். அப்பப்பா! எளியோருக்கும் எளியோனாய் இருக்கும் இறைவனுக்குத்தான் எத்தனையெத்தனை நகைகள். :) ரங்கனுக்கு மூச்சு முட்டத்தான் செய்யும்.

இதுல எத்தனை போச்சோ? எத்தனை இருக்கோ?

said...

அரங்கனுக்கு எத்தனை நகை அமைஞ்சாலும், அதெல்லாம் குமைஞ்சது தான்!
மூச்சு முட்டும், மூச்சு குடுக்காது:)

அவன் விரும்பி அணிவது - அவன் மேனியை விட்டு நீங்கவே நீங்காத நகை - ரெண்டே ரெண்டு தான்! ரெண்டுமே very cheap:)

மூலவர் பெரிய பெருமாள் கழுத்தில் என்றும் தொங்கும் பொடிச் சங்கிலி
= "திரு-மறு-ஆரம்"
அது காதல் நகை! அவளை, அவன் மார்பில் இருத்தி வைக்கும் சங்கிலி!

(அல்லது)
அவளே, திரு மார்புப் பதக்கத்தில் இருந்து, தன் ரெண்டு கைகளையும், அவன் கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொள்கிறாளோ என்னவோ!

இளங்கோ அடிகளும், இதைச் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுவார் - அவள் "அமர்ந்த" மார்பன்

விரிதிரைக் காவிரி - வியன்பெரு துருத்தி
திரு அமர் மார்பன் - கிடந்த வண்ணமும்!

ஒரு அம்மாவும்-அப்பாவும் எப்பவும் எப்படி இருக்க வேணும்-ன்னு பல தலைமுறைப் பிள்ளைகளுக்கும் பாடஞ் சொல்லிக் குடுக்குறாங்க போல..

குட திசை முடியை வைத்துக்
குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டித்
தென் திசை இலங்கை நோக்கிக்

கடல் நிறக் கடவுள் - "எந்தை"
அரவணை துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்வேன் உலகத்தீரே!

said...

//காளிமுத்துவும் நம்ம கோபாலிடம் கோவில்கதைகளைச் சொல்லிக்கிட்டே போறார். நம்மவரும் அந்தக்காதில் வாங்கி அதே காதில் வெளியேற்றிட்டு//

:))
சிவனார் மனம் குளிர, உபதேச மந்திரம், "இரு செவி" மீதிலும் பகர் -ன்னு முருகன் பாட்டு தான் ஞாபகம் வருது;

மன்னிச்சிக்குங்க கோபால் சார்; இதுக்குத் தான் என் முருகன் அப்பவே ஒரு technique கண்டு புடிச்சான்; "இரு செவி" மீதிலும் பகர்

= ஒரு பாதி இந்தக் காதில்.. அட இது என்ன suspense ன்னு நினைக்குறக்குள்ள, மறு பாதி அந்தக் காதில்!
குறுக்கும் நெடுக்குமா காதுல Traffic Jam; அம்புட்டுச் சீக்கிரம் Clear ஆவாது:))

said...

//நம்பெருமாள் தங்கக்குடை பிடிச்சு ஊர்வலம் வரத் தயாரா நிக்கறார். கெட்டிமேளம் கொட்டியதும் விநோதமான தலைப்பாகை அணிஞ்ச ஒருத்தர் (அரையர்?) படியேறிப்போய் பெருமாள் முன் நிற்க, ஏதோ சம்ப்ரதாயம் நடக்க//

அரையரே தான்! = "விண்ணப்பம் செய்வார்" -ன்னு பேரு;

விண்-அப்பம் = சங்கீதா ஓட்டலில் இருந்து வந்த ஸ்பெசல் ஆப்பம்-ன்னு நினைச்சிக்காதீக:)

இது, அப்பத்தினும் இனிய அந்தமிழில்,
ஆழ்வாரின் ஈரத் தமிழைச் சொல்லி,
"வருக வருக" -ன்னு "எழுந்தருளப் பண்ணுதல்"; ("ஏளப் பண்ணுதல்" -ன்னு சுருக்கிட்டாய்ங்க:)
---

//தினம் தினம் புறப்பாடுதான். இவனுக்கு(ம்) காலில்சக்கரம். ஊர்சுத்தக் கிளம்பக் காரணமே வேணாம்//

உண்மை!
உங்களைப் போலவே "ஊர் சுத்தல்" பேர்வழி தான்!:)
அதான், காலில் செருப்பு எப்பவுமே போட்டிருப்பாரு; கருவறைக்குள் சென்றாலும் கழட்டுவதில்லை!

நம்பெருமாள், எப்போதும் பாதுகை அணிந்தே இருப்பாரு!
அதுவே அவருக்கு நடை அழகைக் கொடுப்பதாக வழக்கு!

காஞ்சிக்கு - குடை அழகு
திருப்பதிக்கு - வடை அழகு
திருவரங்கத்தில் - நடை அழகு!
---

அந்த விநோதமான தலைப்பாகை அரையர் சொல்வதும் இதுவே;
"இந்த மாதிரியான நடை போட்டுக்கிட்டு வாங்க" -ன்னு எழுந்தருளப் பண்ணுகிறார்;

1) கருவறையில் இருந்து வெளி வரும் போது = சர்ப்ப கதி (அரவ நடை); மெல்லீசா ஊர்ந்து வரல்

2) அம்ச கதி (அன்ன நடை) = உண்ணாழியுள் இருந்து, வெளி மண்டபம் வரும் போது, கிளி மண்டபம் தாண்டி, அன்னம் போல் தவழ்ந்து வரல்

3) கஜ கதி (யானை நடை) = இராச மகேந்திரன் திருச்சுற்றில் இருந்து, ஆலி நாடன் திருச்சுற்றுக்கு வரும் போது, யானை போல், மன்னரின் கம்பீரங் காட்டி, ஒய்யார நடை

4) சிம்ம கதி (சிங்க நடை) = சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு பாட்டு தான்:)
ஆலி நாடன் திருச்சுற்றில் இருந்து, அகளங்கன் வீதி வரை, சிம்மம் போல், பிடறி உலுக்கி வருதல்; எல்லா அறங்களும் சரியா நடக்குதா?-ன்னு உலுக்கிக் கேட்கும் காட்டு ராசா போல்..
(தூக்குகின்ற சீர்பாதம் தாங்கிகள் நெசமாலுமே பெருமாளை உலக்குவாங்க);

5) அஸ்வ கதி (பரி நடை) = குதிரை மேல் போவது போல், வெளி வீதிகளில், வேகமாக நகர்ந்து விடுதல்; பரி-மேல்-அழகர் என்கிற பட்ட வாசிப்பும் உண்டு;

6) இதெல்லாம், அப்படியே Reverse-இல் நடக்கும், திரும்பும் போது;

கடைசியில், ஒரு பாம்பு, புற்றுக்குள் போகும் போது, தலையைப் படக்-ன்னு வெளியே எட்டிப் பார்த்து, மொத்தமும் சுருட்டிக்கும்! அது போல் நம்பெருமாளை எட்டிப் பார்க்க வைத்து, கருவறைக்குள் படக்-ன்னு புகுந்துருவாரு!

இப்படி நடை அழகைப் பாக்கணும்-ன்னா, சீர் பாதம் தாங்கிகள் கூடவே போனாத் தான் உண்டு!

கோயில் பக்கமா நீங்க வீடு பாத்துக்கிட்டு போவும் போது, காலைப் பறவைகள் பண்ணிசைக்கும் மஞ்சள் கோல கோபுர வானத்தில், கார்த்திகைக் கோபுர வாசல் கிட்டக்க, இதையெல்லாம் நீங்க பார்க்கலாம்:))

உன் வென்றி வில்லும் வாளும், தண்டும்
- சங்கோடு சக்கரமும்
இன்று வந்து என் கண்ணுள் நீங்காது
- என் நெஞ்சுள்ளும் நீங்காது நீங்காதே!

உன் கோல நீள் கொடி மூக்கும்
- தாமரைக் கண்ணும், கனி வாயும்
நீல மேனியும்.... ஐய்யோ
- வந்தென் நெஞ்சம் நிறைந்ததுவே!!

said...

எல்லாஞ் சரி...

அம்மா மண்டபம், காவிரி-யில் குளிச்சீகளா இல்லையா? அதச் சொல்லலீயே?

சக்கரத்து ஆழ்வார் கோயிலை ஒட்டியும், தாயார் சன்னிதி ஒட்டியும், பூவிரிப்பு (பூக்கடை)
- மருக்கொழுந்து, செண்பகம், தாமரை, தவனம், அல்லி, அளரி, பிச்சிப்பூ -ன்னு விப்பாய்ங்களே? வாங்கினீகளா? அதச் சொல்லலீயே?

கம்ப நாடன் அரங்கேற்ற மண்டபம்; 21 கோபுரக் காட்சி..
வீடணன், சுக்கிரீவன், குகன் -ன்னு Adopted Brothers சிலையெல்லாம் பாத்தீகளா? அதைச் சொல்லலீயே?

எல்லாத்த விட முக்கியமா - "பெரிய அவசரம்" -ங்கிற நிவேதனச் சோறு;
கட்டைப் புளியோதரை, கார அடை, செலவுச் சம்பா, அரவணைப் பாயசம்

= அரங்கனை விட, இதானே முக்கியம்?:)
போட்டா போட்டீங்க-ன்னா "வாய்" குளுரப் பாத்துக்குவேன்:)

said...

* திருப்பதி-ன்னா = லட்டு
* அழகர் கோயில்-ன்னா = தோசை
* காஞ்சி வரதர் = இட்டிலி
அது போல, திருவரங்கம்-ன்னா?

"அடி பிடி பொங்கல்", "கருப்படிப் பொங்கல்" = இதான் விசேடம்!

என்னடா, ஸ்பெசல் பிரசாதமா? ஐயோ நாம வாங்கலையே-ன்னு பதற வேணாம்;

* பொங்கல் அடி பிடிச்சிப் போயிருக்கும் = அடி பிடி பொங்கல்
* கீழ, காந்தல் ஆகி, கருப்பு தட்டிப் போயிருக்கும் = கருப்படிப் பொங்கல்
:)))

பெருமாளுக்குச் சோறு, மண் வட்டிலில் தான்;
சமைக்கும் பாத்திரம் எல்லாம் புது மண் பானைகளே;
அதான் கொஞ்சம் அடிப் பிடிச்சீரும்; அதை இப்பிடி ஓட்டுவோம்:)

திருப்பதி போல், பிரசாத விசேடம் அரங்கனுக்கு இல்லை!
அவனே = பிரசாதம்! அம்புட்டுத் தான்!

நாவல் பழமும், இஞ்சி கலந்த சோறு மட்டுமே நிவேதனம்!
"பெரிய அவசரத் தளிகை" -ன்னு பேரு; என்ன அவசரமோ?:)
---

மத்தபடி, "பிரசாதம்" எல்லாம் சும்மா உள் கடையில் விக்குறது தான்;
பையில் வேற போட்டுத் தராங்க போல இப்பல்லாம்; தேன் குழல், முறுக்கு, அதிரசம் -ன்னு;

அதிரசம் மட்டும் சாப்பிடவே சாப்பிட்டுறாதீக...

என்னைப் போல உண்மையான அதிரசம் விரும்பி, தூக்கு மாட்டிக்க வேண்டியது தான், சீரங்கம் அதிரசத்தைத் தின்னுட்டு:)
அதிரசத்தின் கருப்பு - வெல்லத்தாலா? ஆட்டுன வெல்லத்தில் உள்ள கல்லாலா? -ன்னு அந்த அரங்கனே கண்டு புடிக்க முடியாது:))

நல்ல பொங்கல் வேணுமா? = பக்கத்துல திருவானைக்காவில் வாங்கிக்கிடலாம்! சூப்பரோ சூப்பர் சுவை!

அரங்கத்தில், கட்டைப் புளியோதரை மட்டும் நல்லா இருக்கும்;
அதுவும் வெளிக் கடையில் வாங்காதீக; பக்கத்துலயே கம்பி வச்ச சன்னலு, மடைப்பள்ளிச் சோறு; அங்கிட்டு வாங்கினாத் தான் அக்மார்க் புளியோதரை!

அரவணை அமுதும் = இனிது!
---

Of everything, I like "பீடா" பிரசாதம்:)
நம்பெருமாளுக்கு வெற்றிலை கண்டருளப் பண்ணி...
அதைக் கீழே "காளாஞ்சியில்" சேர்ப்பாங்க; Lotsa Ingredients & Fine Smell; Very Romantic & Sweet Beeda; I like it very much:)

இதப் போல என் முருகனுக்குப் பீடா நைவேத்தியம் பண்ண ரொம்ப ஆசை; ஆனா எவனும் விட மாட்டான்;
Hez missing lotsa romantic things, murugava:(

said...

அழகிய படங்களுடன்
அருமையான பதிவு.
ஆம் விஸ்வரூபமாய் ஓங்கி உயர்ந்து எழுந்து நிற்கும் கோபுரங்கள் முன் நாம் எம்மை அற்பமாகவே எண்ணத் தோன்றும்.

said...

ரங்கா ரங்கா..

உன் பாதங்களில் நான்
உறங்கிடவே என் மேல்
இரங்கி வா.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com

KRS comments form a superb blog by itself.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

ஒரு மாசம் இப்போதைக்கு ஒரு பத்து நாள் என்ற அளவில் இருக்கு.

அவன் கூப்பிடணும். சிபாரிசும் வேண்டி இருக்கே! ரெங்கனுக்குச் சொல்லுங்கோ.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

யானை எடை தங்கம் இருக்கும்போது அனாவசியமா வெள்ளியும் வெங்கலமும் என்னத்துக்குன்னேன்!!!

நம்பெருமாளே ஸ்வர்ண விக்ரஹம்தான்!

தங்கமான மாப்பிள்ளை!!!!

said...

வாங்க கீதா.

'சடா'வர்மனை ஹிந்தியில் நினைச்சுக்கிட்டு அடடான்னு ஆகி விட்டது.

சடையவர்மனை கூகுளிச்சால் தங்கமான சேதி அதிகம்:-)

அவனா இவன்னு எதுக்கும் சரி பார்த்துட்டுச் சொல்லுங்க.

said...

வாங்க ரஞ்ஜனி.

உள்ளூர்க்காரர்கள் கொட்ட என் தலை ரெடி. நல்ல ஹெல்மெட் ஒன்னு வச்சுருக்கேன்:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஒரு வருசம் கிடைக்குமா? கிடைச்சாலும் தாங்குமான்னு முதல்லே பார்க்கணும்.

இப்பதான் ஒன்னே முக்கால் வருசத்துக்கு முந்திய ரெண்டரை வருச விழுப்புண்கள் மறைய ஆரம்பிச்சு இருக்கு:-))))

said...

வாங்க உமா.

அருமையான தகவல் கொடுத்து என் வயிற்றில் பால் வார்த்தீர்கள்.

கல்யாண மண்டபம் வேணாம். சர்வீஸ் அபார்ட்மெண்ட்ஸ் ஓக்கேப்பா.

ஹொட்டேல் கிடைச்சா இன்னும் நல்லது.

வருகைக்கும் தகவலுக்கும் என் நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உண்மையான பொக்கிஷத்தின் ஒரு சின்னப் பகுதி காணக் கிடைச்சது.

கோவிலில் சாமி நகைக் ( old jewellery Archaeological Survey year 1896) கணக்கெடுப்பில் எடுத்த படங்கள் அவை!

said...

வாங்க மாதேவி.

உண்மைதான். இப்படி திருப்தி இல்லாத ஜென்மமா நம்மை ஆக்கிட்டானேப்பா இந்த ரெங்கன்!

மனசு நிறைஞ்சாலும் கண் நிறையலையேப்பா!!!

said...

வாங்க சசி கலா.

மனசு நிறைவு..... ஓக்கே!!!!

said...

வாங்க மலைக்கோட்டை மன்னன்.

நலமா? ரொம்ப நாளாச்சே உங்களைப் பார்த்து!!!

உங்க பின்னூட்டம் தந்த மனத் திருப்தியை விவரிக்க இயலாது.

இந்த அன்பு கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!!

வருமுன் தகவல் தரட்டுமா?


நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

நாம் போட்டுக்கிட்டா நாமே நல்லா இருக்கான்னு ஊரைக் கேக்கணும். இதே அவன் போட்டுக்கிட்டால்... ஊரே ஓடிவந்துல்லெ பாக்குது!!!!

படத்தில் உள்ள நகைகள் கணக்கெடுப்பில் காமிச்சது. அதனால் பத்திரமாக இருக்கும்தான்.

கணக்கில் வராததை ஆட்டையப் போடலைன்னு நிச்சயமா சொல்லும் நிலை இல்லையே:((((

said...

ஸ்ரீரங்கத்தில் ரெங்கனுக்கு வருடம் முழுவதுமே உற்சவங்கள் தான்.

பங்குனித் திருவிழாவில் சித்த்ரை வீதி வழியாக புறப்பாடு. கொட்டு சத்தம் கேட்டது நம்ம வீட்டிலிருந்து ஒரே ஓட்டமாக ஓடி பெருமாளை சேவித்தேன். மூச்சு வாங்கத் தான்...:)) இந்த வருடம் இங்கிருந்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது....:)

புறப்பாடின் போது பெருமாளும் சரி தாயாரும் சரி தன்னுடைய அலங்காரத்தை அழகு பார்த்துக் கொள்ளத் தான் அங்கு கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.

தங்கும் இடங்கள் நிறையவே இருக்கு. வேறெங்கு போக வேண்டும் நம்ம வீட்டுக்கு வந்துடுங்க...:)

said...

வாங்க கே ஆர் எஸ்.

இன்னொரு நகையை விட்டுட்டீங்களே.... இதழின் ஓரத்தில் லேசாகச் சிந்தும் புன்னகை!

ட்ராஃபிக் ஜாம் ஆகக்கூடாதுன்னுதானே ஒரு பக்கம் முழுசா அடைச்சு வைப்பது. இது சென்னை போக்குவரத்துலே கத்துக்கிட்ட டெக்னிக்:-))))

நடையழகை எங்கே பார்க்க விடுறாங்க?

கஜ கதியை மட்டும் ஒரு முறை அடையார் அநந்தபத்மநாபனிடம் பார்த்தேன். கண்ணில் கங்கை!

மற்றபடி அம்மா மண்டபம் காவிரிக் குளியல்...மூச்!!!

கங்கைக் கரைக்குப் போயே ஹொட்டேல் பாத்ரூமில் வரும் கங்கையில் குளிச்ச புண்ணியவதி நான்:(

கோபுரதரிசனம் கோடி புண்ணியம், சக்ரத்தாழ்வார் ரங்கநாச்சியார் எல்லாம் ஆச்சு. இது ரெங்கன் வரிசையில் மூணாவது இடுகை. இன்னிக்கு நாலு போட்டாச்சு.

மற்றபடி ப்ரசாதம்....... அவன் பெருமை பேச மட்டுமே இருக்கும் வாயைத் தொறக்கமாட்டேனாக்கும்:-)))))

பதிவுலக நண்பர் நம்பள்கி கேட்டுருந்தார் எங்கெங்கே என்ன ஸ்பெஷல்ன்னு.
அவருக்கான பதிளை நீங்க சொல்லியாச்சு. உமக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்

said...

வாங்க டொக்ட்டர் ஐயா.

உண்மைதான். யானைக்குப் பக்கத்தில் நிற்கும்போதே என்னை அற்பமாக உணர்வேன். கோபுரமுன்னா சொல்லணுமா?

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.


கே ஆர் எஸ் வந்தவுடன் பதிவுக்கே ஒரு தெய்வீகம் வந்துருதுன்னு நான் நினைப்பதில் தவறுண்டோ!!!!

ரெங்கா ரெங்கா........

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

இன்னிக்கு முழுசும் துளசிதளம் போல!!!!

நோ அர்ரியர்ஸ்ன்னு சொல்லுங்கோ:-))))

அலங்காரம் சரியா இருக்கான்னு பார்க்கத்தானே வேணும் இல்லையா?

அதுக்குத்தானே நாமும் வீடுகளில் வாசக்கதவுக்குப் பக்கத்தில் கண்ணாடி வைக்கிறோம். கிளம்பும் நேரம் பொட்டு சரியா இருக்கா? பவுடர் திட்டுதிட்டா இருக்கான்னு கடைசிப்பார்வை பார்க்க.

ஆனால் என் மலேசியத்தோழி சொன்னது வேற மாதிரி.

கெட்ட ஆவிகள் வீட்டுக்குள் நுழைஞ்சவுடன் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பம் பார்த்துட்டு தானே பயந்து ஓடிருமாம்!!!!

said...

Sure Teacher,

eagerly awaiting your visit

said...

இன்று படித்தேன். இனி உங்கள் பிளாக்கில் கோவிலைப் பற்றிப் படித்தால், எதையும் சேவிக்க விட்டுவிடமாட்டோம் என்று தோன்றுகிறது. நன்றி.