Friday, March 22, 2013

கலைக் கண்களுக்கு ஒரு விருந்து!


ஏராளமான பழங்கால ஓலைச்சுவடிகள் இருக்கு, அற்புதமான தகவல்கள் அடங்கிய நூலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்.  நம்ம வீடுதிரும்பல் மோகன் குமார் தன் பதிவிலும் ரொம்ப நல்லா விவரம் கொடுத்துருக்கார்.  இதையெல்லாம் வாசிச்சதுமுதல்  குறைஞ்சபட்சம் ஒரு காலடி எடுத்து வச்சுட்டு வரணுமுன்னு தவிப்பா இருந்துச்சு. இதைவிட்டால் வேற சான்ஸ் கிடைக்காதுன்னு  ஓடினேன்.  சரஸ்வதி  மஹால் , பெயர் பொருத்தம்  பேஷ் பேஷ்!



கையெழுத்துப்பிரதிகளும், ஓலைச்சுவடிகளும், தொட்டாலே நொறுங்கிப்போகும் நிலையில் இருப்பவைகளும்  கண்ணாடிக்குப்பின்! கங்கைகரையின்  படித்துறைகள் ஓவியங்களா இருக்கு.  மன்னரே வரைந்தவையாமே!  படம் எடுக்க அனுமதி இல்லைன்ற போர்டு பார்த்து மனம் ஒடிஞ்சது உண்மை.  (நம்ம மோகன்குமார் வலைப்பதிவில் இருந்து சுட்ட ஒன்னு இங்கே. நன்றி மோகன்)

கீழே உள்ள இந்தப்படம்  மருதம்சித்தா என்னும் வலைத்தளத்தில் இருந்து கூகுளாண்டவர் காண்பித்தார். நன்றி.

தஞ்சை மன்னரின் அரண்மனைகளும் நூலகமும் ஒரே வளாகத்துக்குள்தான் இருக்கு. அரண்மனையின் ஒரு பகுதி இப்போதைய கலைக்கூடம். நுழைவுச்சீட்டும் கெமெராச் சீட்டும் வாங்கிக்கிட்டோம்.  பஸ் கண்டக்டர் மாதிரிதான் இங்கே சீட்டு விற்பனை நபரும். எதுக்குமே மீதிச் சில்லறை தரமாட்டார். இல்லையாம்!!!  நல்ல கூட்டம்   மேயுது உள்ளே!  மற்றவர்கள் கொடுத்த ரூபாய்கள் எல்லாம் எங்கே போயிருக்கும்?

பெரியவர்களுக்கு 7 ரூபாய். இதைப்பேசாம பத்து ரூபாய்னு  ஆக்கினால் நமக்கும் சரியான கட்டணம் 'சில்லறை'யாக் கொடுத்த திருப்தி இருக்கும்.  நூல்வெளியீடுகளோ புகைப்பட அட்டைகளோ எதுவுமே  இல்லை(யாம்!)  அப்ப எதுக்கு போர்டு?ப்ச்... என்னவோ போங்க.....

மொத்த வளாகத்திலும் பழுதுபார்க்கும் வேலை நடக்கும் அடையாளம்.  சரி. எப்படியோ நன்னாயால் சரின்னு ஒரு திருப்தி.

கலைக்கூடத்தின் உள்ளே  முன் பகுதியிலும்  புல்தரையும் பூச்செடிகளும்  அழகா அமைச்சுருக்கும் உள்முற்றத்தைச்  சுற்றி இருக்கும் பகுதிகளிலும்  கற்சிலைகள்  தனித்தனி மேடைகளில் ,நின்னு  கவனிச்சுப் பார்க்கும்விதத்தில்  இருப்பது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு.  வலப்பக்கம் தர்பார் ஹால். வாசலில் நம்மாட்கள் ரெண்டு பேர்.  இருங்கடா மேலே போயிட்டு வரேன்னு மாடிக்குப்போனோம்.  திமிங்கிலத்தின்  எலும்புக்கூடு ஒன்னு தொங்குது! இந்த இடத்தில் இதன் தேவை என்ன?  கலைப் பொருளா அது?



மொட்டை மாடிக்குப்போய் கீழே முற்றம் பார்த்தால் அருமையா இருக்கு. பிரமாண்டமான தூண்களும் வளைவுநெளிவுகளும்  கண்ணை இழுத்தது உண்மை.  நாமிருக்கும் தளத்துக்கு மேல் கோபுரம் போல ஒன்னு. அஞ்சடுக்கு இருக்கு!   குறுகலான மாடிப்படிகள்.   அங்கே போக நமக்குதான்  தயக்கம். மூட்டுவலிக்காரருக்கு  புத்திமுட்டு:(    ஆனால்.... செடிகளுக்கு ஏது தடை?  கவனிச்சு உடனே அகற்றலைன்னா ஆபத்துதான்:(


ஹாலின் நடுவில் ஒருமேடை அமைப்பு. கால்களுக்கு ஓய்வு கொடுக்கலாமேன்னு உக்கார்ந்து   தலையை நிமிர்த்திப் பார்த்தால் அழகான விதானம்.  அட்டகாசமான பூ டிஸைன். அதுக்குள்ளே மேலே போய் வந்த ஒரு ஜோடியிடம் என்ன இருக்குன்னு விசாரிச்சால்  அங்கே இருந்து  ஊரைப் பார்க்கலாமாம்.  போகட்டும் வியூ!

அப்போதான் மோகன்குமாருடன்  அலைபேசிப் பேச்சு.   அதுக்குள்ளே நிறைய இடத்தைக் கவர் பண்ணிட்டீங்களேன்னார். காலில் சுடுகஞ்சி இல்லையோ நமக்கு:(

தர்பார் ஹால்  நாயக்கர்களின் காலத்தில் கட்டப்பட்டது.  செப்புப்படிவங்கள் எல்லாம் அருமையா  பெயர், காலக்கட்டம், கண்டெடுத்த  இடம் போன்ற தகவல்களுடன் அழகா  வச்சுருக்காங்க. உலோகச் சிற்பங்கள்  அவைகளுக்கான கண்ணாடி அலமாரிகளில். (படங்கள் எடுக்கும்போது  பிரதிபலிப்பு வர்றதைத் தவிர்க்க முடியலை)  லக்ஷ்மிநரசிம்மர் ஒருத்தர் சூப்பரா இருக்கார்.



இதே ஹாலில்   உயரமான மேடையில் மன்னர் செர்ஃபோஜி(SERFOJI)யின் ஆளுயரச் சிலை. சுற்றிவர இருக்கும் சுவர்களில் ஓவியங்கள் பிரமாதம்.  அவர் நிற்கும் மேடையே சிற்பங்களோடு அலங்காரமா இருக்கு!


  தஞ்சை பெருவுடையார் கோவிலின் ஆயிரத்தாவது பொறந்தநாள் விழாவுக்காக விசேஷமா உருவாக்கி இருந்த  மன்னர் ராஜராஜனின் சிலை இங்கே தேமேன்னு ஒரு ஓரத்தில்!!!!

கலைக்கூடம் விட்டு வெளியில் வந்தோம்.  இதுக்குப் பக்கத்தில்தான் வாட்ச் டவர் போல் உள்ள இன்னொரு கட்டிடம் இருக்கு.  அதற்கு எதிரில் கொஞ்ச தூரத்தில்  சின்னச்சின்னக் கும்பல்களா  பலர் உக்கார்ந்து கண்ணும் கருத்துமா  அந்த டவரை வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  கட்டிடக்கலை பயிலும்  மாணவர்களாம்.



எதிரில் இருந்த மற்றொரு  கட்டிடத்தில் கைவினைப்பொருட்கள் என்றதைப் பார்த்து அங்கே போனோம். வரப்போகும் கொலுவுக்குப் புது பொம்மைகள் வந்து இறங்கி இருக்குன்னு அவைகளைப் பிரித்து அடுக்கிக்கிட்டு இருந்தாங்க.  ஹைய்யோ!!!!!  என்ன ஒரு அழகு!  எல்லாம் காகிதக்கூழ்தான். கனமே இல்லை பாருங்கன்னு கோபாலுக்குக் குறிப்பால் உணர்த்தினேன்.

இந்த ஹிம்சையில் இருந்து தப்பிக்க கோபாலுக்கு ஒரு வழி கிடைச்சுருக்கு.  பொம்மை முகத்துலே  களையே இல்லையேம்மான்னுவார்!!!!  ஓஹோ......  அப்படியா?

எனக்கு ஒரு மாதிரி 'வின்' கிடைச்சது. தஞ்சாவூர் ஸ்பெஷலான தலையாட்டி பொம்மையைக் காணோம்.   ' வருத்தப்படாதே.   நான் இருக்கேனே'ன்னார் கோபால்.  அப்பப்ப ஆஃபீஸ் போயிடறாரேன்னு  இங்கே நம்மூரில் இதே கான்ஸப்ட்லே கிடைச்ச  விளக்கு ஒன்னை வாங்கினேன்:-))))) குழந்தைகள் தட்டிவிட்டாலும்  ஆபத்து இல்லாமல் எழுந்து உக்கார்ந்துக்குமாம்! பேட்டரி  லைட்தான்.

 நம்ம ஜீரா ஆசைப்படறாரேன்னு  நம்ம கொலுவுக்கு முருகனைத் தேடுனதில் ஒரு மாட்டுக்காரன் அகப்பட்டான்.   ஆண்டாள் ரங்கமன்னார் செட் ஒன்னு தோழிக்கு வாங்கினேன். இனி கொலுவில்  என்னை நினைச்சே ஆகணும்:-)


கலைக்கூடப் படங்களையெல்லாம் ஆல்பத்துலே போட்டுருக்கேன். பாருங்க.


 சீனிவாசனை சாப்பிட அனுப்பிட்டு அறைக்கு வந்து சேர்ந்தப்ப  மணி ஏறக்குறைய ரெண்டு. நல்லவேளையா காலையில் லேட் செக்கவுட் கேட்டதில்  பகல் மூணுவரை கிடைச்சது.  அப்பவே  இதே ஹொட்டேலின்  வேற ஊர் கிளையில்  அறைக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம்.

பகல் சாப்பாட்டுக்கு தஞ்சாவூர் ஸ்பெஷல் 'தாலி' மீல்ஸ் ஒன்னும்  ரெண்டு லஸ்ஸியும் ரூம் சர்வீஸா  கொண்டு வரச்சொன்னதும்  பத்து நிமிசத்தில் வந்தது. சோழநாடு சோறுடைத்து. தஞ்சைதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றெல்லாம் நாலாப்புலே வாசிச்சது நினைவுக்கு வந்துச்சு.  ஒரு அஞ்சு ஆள் தின்னும் அளவுக்கு குண்டான் நிறையச் சோறு!!!!

சரியா மூணு மணிக்குக் கிளம்பினோம்.  ஒன்னேகால்மணி நேரம். நேராத் திருச்சிதான்.  தங்கல் இதே சங்கம் ஹொட்டேலின் கிளை.

 அறைக்குப்போய்ச் சேர்ந்ததும் என்ன ப்ரோக்ராம் என்று கேட்ட கோபாலிடம்.....

வேறென்ன?  ஸ்ரீரங்கம் என்றேன்.



தொடரும்.............:-)))))





36 comments:

said...

//கனமே இல்லை பாருங்கன்னு கோபாலுக்குக் குறிப்பால் உணர்த்தினேன்.//

இதுக்கெல்லாம் அசந்தா எப்படி?

said...

இங்கே நம்மூரில் இதே கான்ஸப்ட்லே கிடைச்ச விளக்கு ஒன்னை வாங்கினேன்:-))))) குழந்தைகள் தட்டிவிட்டாலும் ஆபத்து இல்லாமல் எழுந்து உக்கார்ந்துக்குமாம்! பேட்டரி லைட்தான்.//

தஞ்சாவூர் பொம்மை போல் எழுந்து உட்காரும் விளக்கு அருமை.
உங்கள் பயணம் பகிர்வு நன்றாக இருக்கிறது.

நாங்கள் தஞ்சாவூர் சென்று அரண்மனைக்கு போய் அங்குள்ள ராஜாவுடன் தேநீர் அருந்தி வந்தோம் ஒருமுறை. அவர் இளம் வயதாய் இருந்தார். நாங்கள் அவரைப் பார்த்து 20 வருடங்கள் ஆகி விட்டது.
இப்போது சமீபத்தில் மகனுடன் தஞ்சை போனோம், கோவில் மட்டும் பார்த்து திரும்பி விட்டோம்.

சிவகங்கை பூங்கா போகவில்லையா?
அகழியும், ரோப் காரும் உண்டே ! தோட்டமும் அழகாய் இருக்கும்.

said...

படங்கள்.. எங்கள் கண்களுக்கும் விருந்து. தலையாட்டி விளக்கு, வாங்கிய பொம்மைகள் அழகு.

said...

பிரமாதமான படங்கள்... பார்த்துக் கொண்டே (இருந்தேன்...) இருக்கலாம் போலே...

முடிவில் சாப்பாடு வந்ததும் எல்லாம் மறந்து போச்சி... ஹிஹி...

சில படங்கள் பொக்கிசங்கள்... நன்றி...

said...

சில வருஷங்களுக்கு முன்னாடி நாங்களும் சூறாவளிப்பயணத்துல தஞ்சாவூர், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம்,சமயபுரம் எல்லாம் போயிட்டு வந்தோம். தஞ்சாவூர் அரண்மனையில அப்ப பராமரிப்பு வேலைகள் நடந்துட்டிருந்ததால் சில இடங்களுக்கு அனுமதியில்லாம இருந்தது. இப்ப அம்சமா இருக்கறதைப் பார்க்கறப்ப இன்னொருக்கா போகணும்போலிருக்கு.

தலையாட்டிப் பொம்மை பெருவுடையார் கோயில்லயே கிடைச்சதுன்னு வாங்கியாந்தேன். பேப்பர் கூழில் செஞ்சதுதான்.

தாமரை விதானம் அட்டகாசம் போங்க :-))

குண்டான் சோத்தைப் பார்த்து ஷில்பா ஷெட்டியே "ஆ.."ன்னு ஆச்சரியத்துல வாயை திறக்கறாங்க. நம்மாட்களோட விருந்தோம்பல்ன்னா சும்மாவா :-))))

said...

தஞ்சாவூர்ல தலையாட்டி கிடைக்கலியா. இதென்ன அநியாயமா இருக்கே.
சரஸ்வதி மஹால் வெகு அமைப்பாக இருக்கு.
மேலே தாமரைபோல விதான அமைப்பு வெகு அழகு.எங்களை மாதிரி அங்க போகாதவங்களுக்கு நல்ல காட்சிகள் கிடைக்கிறது.
உங்க தோழிக்கு வாங்கின ஸ்ரீவில்லிபுத்தூர் பொம்மைகள் அருமையான பரிசு. அதற்காக அதைப் பார்த்தால்தான் உங்க நினைவு வரும்னு சொல்றது த்ரீ மச்:)
நான் தினம் நினைச்சுக்கறேனே.!!விளக்கு தலையாட்டுவது சூப்பர்.

said...

சுத்துங்கப்பா! நல்லா சுத்துங்க!

said...

தலையாட்டிப் பொம்மை ஜோடி வாங்காமல் தஞ்சைப்பயணமா...!

said...

தஞ்சை சரஸ்வதி மஹால் அதன் விலை மதிப்பற்ற ஓலைச்சுவடிகளுக்கும் பல்வேறு மொழிகளில் பல்வேறு காலகட்டங்களில்
எழுதப்பட்ட நூல்கள் புத்தக வடிவாக இருந்தாலும் அவற்றினைப் படிக்க முடியாத அளவிற்கு செல்லரித்துப்போய் இருக்கின்றன.
இந்த மாதிரி நூல்களை திரும்பவும் ஃபோடோ காபியர் மூலமாக எடுத்து அவற்றினை தொகுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

2001ல் ஓய்வு பெற்ற பின் ஒரு நாள் தஞ்சை ச்ரஸ்வதி மஹாலில் சதாசிவ ஃப்ரமேந்திராள் பற்றிய தகவல் நிறைந்த புத்தகம் ஏதேனும்
கிடைக்குமா என்று பார்த்தபோது ஒரு நாலு புத்தகங்கள் கிடைத்தன. அதில் மூன்று கிரந்தத்தில் இருந்தன. அப்பொழுது எனது
தங்கையின் மகள் சம்ஸ்க்ருதத்தில் எம்.ஏ. லிட்ரெசர் முடித்தபின் அதிலெயே எம்.ஃபில் படிப்புக்காக ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தாள்.
அவளுக்காக, அந்த கிரந்த புத்தகங்களை நான் அங்கேயே உட்கார்ந்து ராப்பகலாக தேவ நாகரி லிபியில் எழுதி என் முதுகை உடைத்துக்
கொண்டது நினைவு இருக்கிறது.

நீங்கள் ஒரு அரண்மனை ஃபோடோ போட்டிருக்கிறீர்கள். அதிலே தான் அந்தக்காலத்திலே சிவாஜி சார் நடித்த கர்ணன் ஷூட்டிங் நடந்தது.
நினைவு இருக்கிறது. படம் வந்தப்பறம் அதைப் பார்த்தால் இவ்வளவு அழகாகவா இருக்கிறது இந்த தர்பார் என நாங்களே வியந்து போனோம்.
காமிரா மிகவும் நன்றாக அந்த தர்பார் ஹாலை எடுத்திருந்தது நினைவு இருக்கிறது.

தஞ்சை வாசம் எங்கள் வாழ்விலே ஒரு நஞ்சை நிலம்.



சுப்பு தாத்தா.

said...

போட் டோஸ் அருமை !!! நேரில் சென்று கண்டது போல் திருப்தி . புத்தர் சிலை நரசிம்ஹர் , தவழும் கண்ணனின் back pose simply superb!!!!

said...

தஞ்சாவூர் விளக்கு கவனிக்கவில்லையே நான் போனப்ப.. நல்லா இருக்கு..

said...

அருமையான படங்கள். விதானம் அழகோ அழகு. தலையாட்டி பொம்மை பெரிய கோயில் வாசல்லே நிறையக் கிடைக்குமே? இப்போ கிடைக்கிறதில்லையா? போன மாசம் தஞ்சாவூர் போனப்போ கூட நடைமேடைக்கடைகளில் பார்த்தேனே!

ம்ம்ம்ம்ம்? சரி, சரி, அதான் கோபால் இருக்காரேனு வேணாம்னு வந்துட்டீங்க, செரியா? :)))))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அதானே..... எப்படி? எப்படி:-)))

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா.... அரசருடன் தேநீரா!!!!!

கற்றார்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு!!!!

//சிவகங்கை பூங்கா போகவில்லையா?
அகழியும், ரோப் காரும் உண்டே ! தோட்டமும் அழகாய் இருக்கும்.//

ஊர் சுற்றிப்பார்க்க நேரம் தோதுப்படவில்லை:( சூறாவளிச் சுற்றுப்பயணமாப் போயிருச்சு:-)))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

விருந்தை ரசிச்சக் கலைக்கண்களுக்கு நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பசி வந்தால் பத்தும் பறந்துபோகுமாம். லஞ்ச் டைம்லே படம் பார்த்துருக்கீங்க போல:-)))

பொக்கிஷத்தைச் சேர்த்து வச்சு என் ஓய்வு வாழ்க்கையில் படம் பார்த்துப் பொழுது போக்குவேன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஷில்பா ஷெட்டிக்கு மட்டும் மத்ராஸீஸ் சாப்பாடுன்னா சும்மாவா? அதான், வந்து எட்டிப்பார்க்கறாங்க:-)))

பழுது பார்க்கும் வேலை இன்னும் முடியலைப்பா.நாங்களும் சில பகுதிகளைப் பார்க்க முடியலை:(

பொம்மை இப்படிக் கிடைக்காமப் போயிருச்சு பாருங்க:(

முந்தி ஒரு சமயம் தேடுனதில் கழுத்துலே ஸ்ப்ரிங் வச்ச ஜோடி கிடைச்சது. ரெண்டு பேருக்கும் தலையாட்டல் அதிகம்:-))

எனக்கும் இன்னொருக்காப்போனாத் தேவலைன்னு இருக்கு. கோவிலை நல்லாப் பார்க்கலைஎன்ற குறை தீர்க்கணும்.

said...

வாங்கப்பா வல்லி.

//நான் தினம் நினைச்சுக்கறேனே.!!// ஆஹா ஆஹா என்ன தவம் செய்தேன்!!!

ஆனால் நான் உங்களை நினைப்பதே இல்லை என்பதே நிஜம். மறந்தால்தானே நினைக்கணும், இல்லையோ!!!!

ஊருக்குள்ளே போய் இருந்தால் தலையாட்டி கிடைச்சிருக்குமோ என்னவோ? இங்கே பொம்மை வாங்குன கடையில்கூடக் கிடைக்கலைப்பா:(

கலைக்கூடத்தில் மாடிக்குப்போகும் படிகள் கொஞ்சம் டேஞ்சராத்தான் இருக்கு. அதைச் சரிப்படுத்தக்கூடாதோ? அட்லீஸ்ட் ஒரு கைப்பிடி?

said...

வாங்க அன்புடன் அருணா.

பூமி சுத்துது நானும் சுத்தறேன்:-)

காலில் சக்கரம்:-)))))))))))))

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

ஒருமுறை சென்னையில் காதிக்ராஃப்டில் உடலாடும் நடனமங்கை வாங்கி,உடையாமக் கொண்டு போக முடியாதுன்னு கோபால் ஒத்தைக்காலில் நின்னதால் இன்னொரு நண்பருக்குக் கொடுத்தேன்.

எனக்கு தலையாட்டி 'பொம்மை' ராசி இல்லையோ!!!

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

ஆஹா...ஓய்வு காலத்தில் நல்ல உருப்படியான வேலைதான் செஞ்சுருக்கீங்க!!!!

படங்களில் பல இடங்கள் அருமையாக வருவது எனக்கும் வியப்புதான்.

நம்ம வீட்டை ஒரு சமயம் வீடியோ எடுத்துப் பார்த்தால் இவ்ளோ அருமையாவா இருக்கு. சின்ன இடம்கூட இவ்ளோ பெரிசான்னு இருந்தது.

said...

வாங்க சசி கலா.

உங்கள் கலைக் கண்களுக்கு நன்றிகள்.

said...

வாங்க அப்பாதுரை.

விளக்கு....இங்கே நியூஸி, க்றைஸ்ட்சர்ச்சில் வாங்கி அதுக்குத் தஞ்சாவூர் விளக்குன்னு நாமகரணம் ஆச்சு:-)))

said...

வாங்க கீதா.

நடைமேடைகளில் நடக்கலையேப்பா... அதானே பிரச்சனை!!!

கோபாலுக்கு செலக்டிவ் தலையாட்டல்தான். சில குறிப்பிட்ட கடைகளுக்குப்போனால் கழுத்து அப்படியே உறைஞ்சு நின்னுரும்:-))) நோ ஆட்டம் அட் ஆல்!

said...

நீங்க சொல்லச் சொல்ல எனக்கு கொசுவத்தி சுத்துது. 2006ல் தஞ்சாவூர் போனது. அப்ப நூலகத்தைப் பாக்க முடியல. எதுக்கோ மூடி வெச்சிருந்தாங்க.

அரண்மனைக் காட்சிப் பொருட்கள் எதுவும் சிறப்பா காட்சிக்கழகா பராமரிப்போடு இல்லை. ஆனா நீங்க படம் பிடிச்சிருக்கிங்களே... இந்த மண்டபம், திமிங்கல எலும்புக்கூடு, மாடிகள், கலைப்பொருட்கள் கடை எல்லாம் நல்லாவே கொசுவத்தி சுத்துது.

அந்தத் திமிங்கிலம் கடற்கரையில் ஒதுங்கி இறந்த திமிங்கிலத்தில் எலும்புக்கூடு. எவ்வளவு பெருசு பாத்திங்களா?

மாடியிலிருந்து பாத்தா ஊர் அழகாத் தெரியுது. ஆனா முட்டுவலி இருந்தா ஏறுவது மிகச்சிரமம். உயரமான படிகள் வேற.

ஆகா.. நான் சொன்னத நினைவு வெச்சிருந்து முருகனைத் தேடுனிங்களா? நன்றி. நன்றி. முருகனருள் முன்னிற்கட்டும்.

மாட்டுக்காரப்பய மாட்டிக்கிட்டானா? ஏன் சின்னப் பொண்ண இழுத்துக்கிட்டு ஓடுனான்னு ரெண்டு அடி வெச்சுக் கேளுங்க. :)

said...

கலைக்கூடம் அழகாக இருக்கின்றது முன்பு பார்த்தது.

வோச்ரவர் நாங்கள் சென்ற நேரம் ஏறிப்பார்த்தோம் மன்னர் இங்கிருந்துதான் நாட்டுநடப்பை பார்ப்பதாகச் சொன்னார்கள்.நாங்களும் சில நிமிடம் மன்னரானோம்.:)) இப்பொழுது ஏறிப்பார்க்க அனுமதி இருக்கின்றதா?

said...

விளக்கு சூப்பர்.

படங்களும் வர்ணனைகளும் அருமை.

நாங்கள் சென்றது மாலை நேரமானதால் இவற்றை எல்லாம் பார்க்க முடியவில்லை!

சென்றுவிடுவோம் பகலில்!

said...

படங்களும், தகவல்களும் அருமை. நடைமேடையில் தஞ்சாவூர் பொம்மைகள் இருந்தனவே.....

விளக்கு அழகாக இருக்கிறது.

said...

வாங்க ஜிரா.

திமிங்கிலம் பெரூசுன்னாலும் இங்கே இந்த இடத்துலே பொருத்தமா இல்லைன்னு எனக்குத் தோணுது.

பழுதுபார்க்கும் வேலை இப்போதைக்கு முடியறமாதிரி தெரியலை...வேலை நடக்கும் வேகம் பார்த்தால்.....

பனீஷ்மெண்ட் கொடுத்தே ஆகணுமுன்னு மாட்டுக்காரப்பயலை நாடு கடத்திட்டேன்:-)

said...

வாங்க மாதேவி.

மேலே ஏறிப்பார்க்க அனுமதி இருக்கு. முட்டிவலி கேஸ் என்பதால் நான் போகலை. என்னால் கோபாலும்:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பகல் பொழுதே பெஸ்ட்:-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நடைமேடைக்கே போகலையேப்பா.

பார்க்கிங் இடத்துலே கொஞ்சம் கடைகள் இருப்பதை வண்டி பார்க் பண்ணும்போது கவனிச்சுருந்தேன்.

திரும்பிப்போக சீனிவாசன் காரை கோவில் வாசலுக்கே கொண்டு வந்துட்டார். எதாவது பதிவேலையா இருக்குமோன்னு இப்ப சந்தேகம்:-)))))

said...

கண்ணுக்கும்
கருத்துக்கும்
ஏன் வயிற்றுக்கும் ஒருசேர விருந்து படைத்துவிட்டீர்கள் .
பாராட்டுகள்

said...

வாங்க பட்டாபி ராமன்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் இனிய நன்றி.

மீண்டும் வருக.

said...

Pl. visit my blog- A write up about your blog is waiting for you. my ID ishttp://kankaatchi.blogspot.in/2013/09/blog-post_8457.html

said...


நன்றி.உங்கள் பதிவைப் பற்றி ஒரு கட்டுரை என் பதிவில் இட்டுள்ளேன். காண வேண்டுகிறேன். உங்கள் முகவரியை வைகோ அவர்களின் பதிவில் கண்டு
எனது கருத்துக்களை பதிவு செய்தேன்.



http://kankaatchi.blogspot.in/2013/09/blog-post_8457.html