காவிரிப்பாலம் கடந்து கொஞ்சதூரத்தில் இடதுபக்கம் திரும்பி இன்னும் கொஞ்சதூரத்தில் அம்மா மண்டபம் தாண்டி வலமெடுத்ததும் மனசெல்லாம் ஒரு பரவசம். தூரத்தே கண்முன்னே தெரியும் ராஜகோபுரம். எங்கெ சுத்தியும் ரங்கனை ஸேவிக்கணும் என்பதுதான் நம்முடைய இந்தப் பயணத்தின் மொத்த நோக்கமே! எங்கெ போய் சுத்தினாலும் ரங்கனை வந்து ஸேவிக்கணும். (எங்கும் சுற்றி ரங்கனைச் சேவி)அதான் பழமொழியைப் பொய்யாக்க வேணாமேன்னு சில ஊர்களைச் சுத்திச் சுத்தி வந்தப்பக் கிடைச்சதையெல்லாம் பார்த்து அனுபவிச்சுக்கிட்டே வந்திருக்கோம்.
( அம்மாமண்டபம் ரோடு பார்த்ததும் ஒரு தோழியின் நினைவு தவறாமல் வந்தது. (மீண்டும் )சந்திக்க முடியலை என்பது ஒரு மனக்குறைதான்)
வழக்கம்போல சீனிவாசன் கேட்ட எத்தனையாவதுக்கு நான், 'இதுதாம் நம்பர் ஒன் இன் த லிஸ்ட்'ன்னதும் அப்படியா அப்படியான்னு மாய்ஞ்சுபோயிட்டார்.
கம்பீரமா நிற்கும் தெற்கு கோபுரம் வழியா ஏழு வீதிகள் கடந்து ரங்கனை சேவிக்கணும். ஆனால்.... கோவிலுக்குப்போகும் வழின்னு அம்பு காட்டிய சாலையில் போனால் அது மேற்கு கோபுரம் வழியா வடக்கே போய் இன்னும் சில தெருக்களைக் கடந்து மறுபடி தெற்கே மதில்சுவரையொட்டியே போகும் சாலையில் வந்து இடமெடுத்து கிழக்கே போகும்வழியில் நமக்கிடப்பக்கம் இருக்கும் தெற்கு நோக்கிய கோபுரவாசலில் வந்து இறங்கினோம்.
நடுவில் ஒரு நாலு கால் மண்டபம். இடது பக்கம் பூராவும் கோவில்கடைகள். வலது பக்கமும் தொண்டரடிப்பொடியார் சந்நிதிக்கு ரெண்டு பக்கமும் கோவில் கடைகள்தான். நாலு கால்மண்டபம் தாண்டி முற்றம் அடைத்து ஒரு பெரிய மண்டபம். ரெங்கவிலாஸ் மண்டபம். இதில் ஒரு கொடிமரமும் நேயுடு சந்நிதியும் இருக்கு.
உள்ளே நுழைஞ்சதும் இடது பக்க ஓரத்தில் மேசைநாற்காலி. மேசையில் சில ரசீது புத்தகங்கள் பார்த்ததும் விசாரிக்கப் போனோம். கெமெரா டிக்கெட் அம்பது ரூ, கோவில் சரித்திரம் 20 ரூ, கோபுர தரிசனம் நபருக்கு 10 ரூ ன்னு வாங்கியதும் கோபுரதரிசனத்துக்கு வழி என்னன்னு விசாரிச்சால் இருக்கைக்குப் பின்புறம் கை காமிச்சாங்க. கண் உயர்த்திப் பார்த்தால் நேராக நம்ம ஆண்டாள் சந்நிதி. அடிச்சது ப்ரைஸ். உள் ஆண்டாள் சந்நிதியாகத்தான் இருக்கணும் இது.
அருமையான தரிசனம். ஆண்டாளுக்கு மாலை சார்த்தணுமுன்னா அம்பது ரூ கொடுத்தால்போதும். மறுநாள் காலையில் நம்ம பெயரில் மாலை சார்த்துவோமுன்னு (பார்த்தாலே ஏழ்மை நிலையில் இருக்கும் )பட்டர் சொன்னார். மாலையை வாங்குன ஆண்டாள் நம் மனக்குறையைத் தீர்த்து வைப்பாளாம். எழுதித்தாங்கோன்னு ஒரு லிஸ்ட் நீட்டுனார். அவரவர் மனக்குறைக்கு பெருமாள் பெயரில் நம் வகையில் ரெண்டு மாலை! காலையில் வந்து ப்ரஸாதம் வாங்கிக்குங்கோன்னார்
கோபுரதரிசனம் பார்க்க மாடிக்கு போகும் வழி கேட் மூடி இருந்துச்சு. ஒருத்தர் வந்து திறந்து விட்டார். கோவிலைச் சுத்திப் பார்க்கன்னு ஆரம்பிச்சவரை..... முதலில் மேலே போயிட்டு வர்றோம். இருட்டப்போறதுன்னு சொன்னதும் சரி அப்புறமா பேசறேன்னு போனார்.
மொட்டை மாடிக்குப்போனோம். கீழே உள்ள ரெங்கவிலாச மண்டபத்தின் தளம்தான் இது. 21 கோபுரம் இருக்காமே! எண்ணி எண்ணிப் பார்த்தபோதும் கணக்கு மிஸ்ஸாகிக்கிட்டே இருந்துச்சு. ப்ளஸ் குறி போல வடக்கு தெற்காவும் கிழக்கு மேற்காவும் கோபுரங்கள் ஒரே வரிசையில். கேமெராக் கண்ணுக்கு ஒரு ஒளிஞ்சாட்டம்! இதுகளுக்கிடையில் உசரம் குறைவாக இருந்தாலும் கண்ணில் தப்பாமல் ஜொலிக்கும் ரங்கவிமானம். தகதகன்னு............ தங்கம் போர்த்தியது! கெமெரா மூலம் கிட்டக்கக் கொண்டு வந்தால்.... ஹைய்யோ!!!!!
மேற்குப்பக்கம் வியூ பாய்ண்ட் / லுக் அவுட் போல இன்னொரு ஏழெட்டுப் படிகளோடு ஒரு இடம். அதுலே ஏறிப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நல்லாத் தெரியுமே தவிர ஒளிஞ்சாட்டாம், ஒளிஞ்சாட்டம்தானாக்கும் கேட்டோ!
ரெண்டு பெண்களும் ஒரு சிறுவனுமா இன்னும் மூணுபேர் படியேறி வந்து சேர்ந்துக்கிட்டாங்க. கையில் இருக்கும் செல்ஃபோன் கேமெராவில் பையன் வளைச்சு வளைச்சுப் படம் எடுத்துக்கிட்டு இருந்தான். அம்மாவும் பெரியம்மாவும் போஸ் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. பெயர் விஜய். சிவகெங்கையில் இருந்து பெரியம்மா வீட்டுக்கு விஸிட் வந்துருக்காங்களாம். செல்ஃபோனில் கேமெரா வந்த பிறகு, வளரும் ஒளி ஓவியர்கள் ஏராளம்!
ஃபொட்டோக்ராஃபர் கிடைச்சா விடமுடியுதா? நம்மையும் ஒரு படமெடுக்கச் சொன்னோம். ப்ராப்பர் கேமெரா பரிச்சயமில்லை. குழந்தைதானே! ஆனாலும் படம் நல்லா வந்துருச்சு:-)
கோபுர அமைப்பு விவரம் தேடுனதில் கிடைச்ச படம் இது. கூகுள் ஆண்டவருக்கு நன்றிகள்.
மணி ஆறு ஆனதும் சொல்லிவச்சமாதிரி இருட்டு சட்னு வந்து கவிழ்ந்தது. ட்வைலைட் எல்லாம் ஒன்னும் இல்லை. வெளிச்சம் டு டைரக்ட் இருட்டு. கவனமாக் கீழே இறங்கி வந்தோம். நபர் காத்துக்கொண்டிருந்தார். பெயர் காளிமுத்து. அரசு அங்கீகாரமுள்ள அஃபிஸியல் கைடு. சார்ஜ் இருநூறு ரூ தான். கோவிலைச் சுத்திக் காமிக்கவான்னார். இருட்டில் என்னன்னு பார்க்க? இன்னிக்கு நாங்களே கொஞ்ச நேரம் சுத்திப்பார்த்துட்டு போறோம். நாளைக் காலையில் திரும்ப வருவோம். அப்போ கைடு சேவை வேணும் என்றேன். நம்ம செல் நம்பரை வாங்கிக்கிட்டார்.
ரெங்கவிலாஸைத்தாண்டி அடுத்த பிரகாரம் வந்தோம். இதுவும் ஒரு தெருதான். அலிநாடன் திருவீதி. கண்ணெதிரே ஆர்யபட்டாள் கோபுரவாசல் . இடது பக்கம் சக்ரத்தாழ்வார் சந்நிதி. வலது பக்கம் ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி, கிழக்கு கோபுர வாசல், கோவில் அலுவலகம் இப்படி போர்டுலே எழுதிவச்சுருக்கு.
சக்ரத்தாழ்வாரையே பார்க்கலாமுன்னு இடது பக்கம் போனோம். அழகான மண்டபம், ஜொலிக்கும் விளக்கில் சக்ரத்தாழ்வார். அருமையான தரிசனம். வலது பக்கம் வசந்தமண்டபத்துக்கு வழின்னு பார்த்ததும் அதில் நுழைஞ்சோம். கோவில் நந்தவனத்திலூடே போகும் பாதையில் நடந்தால் கொஞ்சதூரத்தில் இன்னொரு சின்னகோபுரவாசலுக்குள் நுழைஞ்சு அந்தப் பக்கம் போனால் தாயார் ரங்கநாயகியின் சந்நிதி. பெரிய முன் மண்டபத்தில் செண்பகப்பூவும் தாமரையும் மல்லியுமா பூக்கள் விற்பனை.
எனக்கு செண்பகம் ரொம்பப் பிடிக்கும். ஒரு பத்துப்பூ சேர்த்து கோர்த்து வச்சுருக்கும் செண்டு ஒன்னை நம் தாயாருக்கு வாங்கிக்கிட்டு உள்ளே போனோம். சந்நிதிக்கதவு சாத்தி இருக்கு, ஆனால் கம்பிகள் வழியா தரிசிக்கலாம். கம்பியினூடே கையைவிட்டு செண்பகத்தை தாயாரிடம் சேர்ப்பித்தேன். சந்நிதிக் கதவை ஆறேமுக்காலுக்குத் திறப்பாங்களாம். தரிசன நேரம் இங்கே பார்த்துகுங்க.
திருமஞ்சனக்குட வரிசை!
தாயார் சந்நிதிக்கு நேரெதிரில் ஒரு அழகான மண்டபம். கம்பர் ராமாயண அரங்கேற்றம் நடந்த இடம். வலது பக்கம் உக்ர நரசிம்மர் சந்நிதி. அரங்கேற்றம் நடந்தபோது, ஒரு அதிசயம் நடந்ததாம். கம்பராமாயணத்தில் ஹிரண்யவதம் பகுதி வாசிக்கப்பட, சுற்றி இருந்தோர் அதை ஆட்சேபிக்கவும், யாம் ஏற்றுக்கொண்டோம் என்று விமானத்தின் மேலிருந்து சிம்மக்குரலில் நரசிம்ஹர் கர்ஜித்தாராம். ஓவர் ரூல்ட்!!! அப்புறம் வேற யாராவது வாயைத் திறக்க முடியுமோ!!!
அவர் சந்நிதியை நோக்கி ஒரு கும்பிடு. அடுத்த பக்கம் போறோம். மூடி இருக்கும் வைகுந்த வாசல், வைகுண்ட ஏகாதசிக்குக் காத்து நிக்குது. வாசலுக்கு முன்பக்கம் ஒரு பதினாறுகால் மண்டபம்.
சரியான வழி ஒன்னும் தெரியாமல் அரை இருட்டில் இங்கே அங்கேன்னு சுத்துனதில் நல்ல வெளிச்சம் இருக்கும் ஒரு சந்நிதி கண்ணில் பட்டது. உள்ளே பரவாசுதேவன். ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளுடன் எப்படி இருப்பாரோ அதேபடி காட்சி தர்றார்.
.
இந்தப்பக்கம் தலையைத் திருப்புனதும் அப்படியே 'ஆ' என் வாய் பிளந்தேன். கண்ணாடி முன் ஆண்டாள்! சர்வ அலங்கார பூஷிதையா இருக்காள். ட்ரெஸ்ஸிங் டேபிள் போல் இருக்கும் அடுக்கு வரிசைக் கண்ணாடியில் ராக்கொடி வச்சுப்பின்னிய ,பின்னம்பக்கத்து ஜடையும் சூடி இருக்கும் பூக்களும் கொண்டை அலங்காரமும் அப்படியே ஜொலிப்பு!
சுட்ட படம் ஒன்னு இங்கே. கூகுளாண்டவருக்கு நன்னி.
மனசு நிறைஞ்சு வழிய நடந்தால் இங்கே வாங்கோன்னு அழைப்பு. கோதண்டராமர் சந்நிதி. நல்ல தரிசனம். சேவிச்சுட்டுத் திரும்பும்போது ஒருத்தர் துளசிக்கொத்து ஒன்னை என் முன் நீட்டினார். கையில் கொடுக்க நீட்டிய கை மடங்கலை. எதாவது கொடுங்கோன்னார். அதான் சாமிக்கு முன் இருக்கும் தட்டில் போட்டாச்சேன்னதும், அது எனக்கு வராது. நீங்க கொடுங்கோன்றார். நாம் நடக்க நடக்கப் பின்னாலேயே வந்துண்டுருக்கார். எனக்கு தர்ம சங்கடமாப் போச்சு. ஒரு பத்து ரூபாயும் அந்த துளசிக் கொத்தையும் கொடுத்தேன். வேற யாருக்காவது கொடுங்கோன்னு சொல்லி நடையைக் கட்டுனேன்.
சில சமயம் கோவில்களில் சட் டென்று கைநீட்டும் நபர்களைப் பார்த்தால் என்ன செய்யறதுன்னு புரியாது. பொதுவா என் கையில் கேமெரா மட்டுமே இருக்கு. கைப்பை இருந்தாலுமே சில்லறை நோட்டா ஒன்னும் வச்சுக்கும் வழக்கம் இல்லை. கோபாலும் பொதுவாக் கோவிலுக்குள் நுழையும்போது கொஞ்சம் பத்துக்களாக் கொண்டு வருவார்தான். ஆனால் இங்கே ஸ்ரீரங்கம் பெரிய கோவில் என்பதால் சில பத்துகள் பத்தாது. ஒரு சில நூறு பத்தாவது வச்சுக்கிட்டால்தான் தேவலை.
எப்பவாவது வரும் பக்தர்களுக்கு இது பெரிய தொகை இல்லைன்னாலும் உள்ளூர்வாசிகளுக்கு அவஸ்தையா இருக்காதோ?
தொடரும்............:-)
பி.கு: இன்னும் சில இடுகைகள் ரங்கனைச் சுற்றியேதான் வரப்போகுது. ஒரு இடுகையில் அடங்கமாட்டான் நம்மவன்!!!!
30 comments:
உள்ளூர் வாசிகளிடம் கேட்பதில்லை! பார்த்தாலே தெரிந்து விடும் அவர்களுக்கு!
நல்ல படங்கள்.
பத்து ரூபா கட்டுகள் பல வேண்டும்...!
பரிபூர்ண கோபுர தரிசனம்... நன்றி...
http://www.dinamalar.com/360_view_detail.asp?id=290 இந்த சுட்டியிலும் பார்க்கலாம்... உதவி : தினமலர்
மேலும் தமிழ் நாட்டுக் கோவில்கள் பற்றி ஒரு சிறு தொகுப்பு - கீழே :
http://swamysmusings.blogspot.com/2012/10/blog-post_21.html
வாங்க வெங்கட் நாகாராஜ்.
//உள்ளூர் வாசிகளிடம் கேட்பதில்லை! பார்த்தாலே தெரிந்து விடும் அவர்களுக்கு!//
அதான் எப்படி?எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? நாமென்ன வெள்ளைக்காரகளா? பார்த்தவுடன் தெரிவதற்கு?
அச்சுஅசல் மத்ராஸி இல்லையோ!!!!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
சுட்டிகளுக்கு நன்றி.
நானும் வரும் பதிவுகளில் போடலாமுன்னு தினமலரில் பார்த்து வச்சுருந்தேன்.
கந்தசாமி ஐயா பதிவு இப்போதான் நீங்க சொன்னபிறகு பார்த்தேன்.
ஒன்னு விடலை அவர்:-)))))
கோபுரதரிசனம் போனதில்லை. அடுத்தவாட்டி போறப்போ நெனைவு வெச்சுக்கிறேன். :)
அலிநாடன்னு எழுதியிருக்கிங்க. அது ஆலிநாடன்னு நெனைக்கிறேன். கொள்ளையடிச்சு கோயில் கட்டியவரு. திருமால் பெருமை படத்தில் கூட இவர் கதை வருமே. திருமங்கையாழ்வான்னா சட்டுன்னு புரிஞ்சிரும்.
2006ல் இதே திருவரங்கம். ஆனால் நண்பர்களோடு. இராமன் சன்னதியில் எட்டிப் பார்த்துவிட்டு வெளியே வரப்போகும் போது ஒரு கை குறுக்கே வந்தது. ஒல்லியான உருவம். நீளமுகம். நீண்ட மூக்கு. யாசகம். எதுவும் கொடுத்ததாக நினைவில்லை. என்னுடன் வந்த கன்னட நண்பன் ஏதோ கொடுத்தான் என்று நினைக்கிறேன்.
வெளியே வந்ததும் “எந்த ஒரு பிராமணனும் கையேந்தும் நிலைக்கு வரக்கூடாது” என்று வருத்தப்பட்டான். “ஏன் பிராமணன் என்று மட்டும் நினைக்கிறாய்? எந்த மனிதனும் கையேந்தும் நிலைக்கு வரக்கூடாது என்று நினைக்கலாமே” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.
உள்ளூர்வாசிகளையும் விட மாட்டாங்க. கண்ணாடி அறை ஆண்டாள் எப்போவுமே அதி அழகு. பர வாசுதேவர் பக்கத்திலேயே இருக்கிறதாலேயோ! :)))
ரங்க விமானம் இல்லை தங்கத்தில் பார்க்கிற விமானம் ப்ரணவ விமானம்
ஶ்ரீரங்கம்
விபரங்கள் சுட்டியில் பார்க்க! ஹிஹி, சான்ஸ் கிடைச்சா விடுவோமா? இலவச விளம்பரமாச்சே! :))))
சீறி ரங்க ரங்க நாதன்.... காணக் கண்கோடி வேண்டும்.
வலம்வர வருகின்றோம்.
ரங்கனை நாங்களும் சேவிச்சோம்.. கண்ணாடி அறையில் அலங்காரமா வீற்றிருக்கும் ஆண்டாளையும் கண்டுக்கிட்டோம்.
இந்த மாதிரி பெரிய கோயில்களையெல்லாம் மாசக்கணக்கில் அங்கியே தங்கி துளித்துளியா ரசிக்கணும். ஆனா நடக்கிற காரியமா?..
அடுத்தாப்லயும் ரங்கராஜ்யம்தானா?.. நடக்கட்டும். சேவிக்கக் காத்திருக்கோம்.
உங்கள் படங்களால் அருமையான தரிசனம் கிட்டியது.
//சில சமயம் கோவில்களில் சட் டென்று கைநீட்டும் நபர்களைப் பார்த்தால் என்ன செய்யறதுன்னு புரியாது. //
ஆமாங்க , மனசு சஞ்சலப்பட்டு , திரும்ப கடவுளிடம் மனசை திருப்ப சற்று நேரம் தான் ஆயிடுதுப்பா .
படங்கள் அருமை கண்ணும் மனசும் நிறைஞ்சுருச்சு ..மேலும் மனம் மகிழ ஆவலுடன் காத்துருக்கிறோம்
வாங்க ஜிரா.
கோவிலின் லே அவுட் படத்தில் அலிநாடன் என்றுதான் போட்டுருக்கு!
திருமங்கை அங்கே ஒரு மதில் சுற்றும் எழுப்பினார்.
ராமன் சந்நிதியின் ஸ்பெஷாலிட்டியோ இதுன்னு சம்ஸயம். நீட்டல் எல்லாம் அங்கெதான் நடக்குது போல!
// எந்த மனிதனும் கையேந்தும் நிலைக்கு வரக்கூடாது என்று நினைக்கலாமே” //
இலவசம் இலவசமுன்னு சுயமரியாதையை விட்டுட்டு மக்களையெல்லாம் கைநீட்ட வச்ச அரசை என்னன்னு சொல்றது?
பிழைக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் அவனவன் தன் குடும்பத்தைக் காப்பாத்தமாட்டானா?
இதுலே ஊத்திக்கொடுக்கும் 'பணி'யை அரசே செஞ்சு அவனவன் கஷ்டப்பட்டுச் சம்பாரிச்சதை வீடுவரை கொண்டு போக விடவில்லை பாருங்க:(
வாங்க கீதா.
//ஸ்ரீரங்க விமானம்: இந்த விமானம் ஆதியில் தானாகவே உருவானது என்கின்றனர். இது பொன்னால் வேயப்பட்டு “ௐ” என்னும் பிரணவ வடிவில் உள்ளது.//
நீங்களே ஸ்ரீரங்க விமானம் என்றுதான் எழுதி இருக்கீங்க:-)))))
அது இருக்கட்டும். இந்த ஓம் என்ற ப்ரணவ வடிவம் விமானத்தில் என் கண்ணுக்குப் புலப்படலையேப்பா:(
படத்தில் இடது பக்கம் கொஞ்சம் உயர்ந்து கவிழ்த்த கிண்ணம் மாதிரியும் அதுக்கு முன்னால் கொஞ்சம் உயரம் குறைவா குறுக்கில் நீண்டும் இருக்கே!
பதிவில் இன்னொரு படம் கடைசியில் சேர்த்துருக்கேன் பாருங்க.
வாங்க மாதேவி.
கூடவே வருவதற்கு நன்றிப்பா.
வாங்க அமைதிச்சாரல்.
//இந்த மாதிரி பெரிய கோயில்களையெல்லாம் மாசக்கணக்கில் அங்கியே தங்கி துளித்துளியா ரசிக்கணும். ஆனா நடக்கிற காரியமா?..//
சொன்னது அப்பட்டமான உண்மை!
எப்பப் பார்த்தாலும் காலில் (சுடு) கஞ்சி:(
வாங்க ராமலக்ஷ்மி.
மிகவும் நன்றி.
எல்லாம் ரெங்கன் அருள்!!
வாங்க சசி கலா.
உண்மைதான்ப்பா.
ரெங்கன் விடமாட்டான். ஒரு மூணாவது வேணுங்கறான்:-))))
அப்பாடி, ஸ்ரீரங்கம் வந்தாச்சா.
நேற்று பூராவும் மின்சாரம் கண்ணாமூச்சி.அறுபத்துமூவர் எதிரொலி:)
படங்கள் அத்தனையும் அழகு அள்ளிக் கொண்டு போகிறது.கோபுரங்கள் தான் எத்தனை கம்பீரம் பா!!அதுவும் மேல ஏறி நான் பார்த்ததே இல்லை.
ப்ரணவாகார விமானமா அது. பேர் என்ன வா இருந்தால் என்ன. ராமன் கொடுத்தான்.விபீஷணன் கொண்டு வந்துவிட்டான். இப்ப நீங்க பார்க்க நானும் பர்த்தாச்சு.
தாயார் சந்நிதி கொள்ளை அழகு,. கண்ணாடி அறை சேவையும் அதிஅத்புதம். இன்னும் பத்து பதிவாவது போடணும் நீங்க.
ஒரு இடுகையில் அடங்கமாட்டான் நம்மவன்!!!
பெரிய பெருமாள் அல்லவா..!
இன்னும் சில இடுகைகள் ரங்கனைச் சுற்றியேதான் வரப்போகுது. ஒரு இடுகையில் அடங்கமாட்டான் நம்மவன்!!!!//
எத்தனை இடுகைகளில் அவர் புகழ் பாடினாலும் மனதுக்கு மகிழ்ச்சி தான்.படங்கள் எல்லாம் திவ்ய தரிசனம்.
துளசி, கோபால் படம் அருமை. சுட்டி அருமையாக எடுத்து இருக்கிறான்.
ரங்கா, ரங்கா, ரங்கா. நல்ல தரிசனம். அருமையான் கட்டுரை. நன்றி பல.
கடைசி படம்தானே (தங்க கோபுரம்) ரங்க விமானம்? முடிவாச்சா, இல்லியா?!
ரங்கா, ரங்கா, ரங்கா. நல்ல தரிசனம். அருமையான் கட்டுரை. நன்றி பல.
கடைசி படம்தானே (தங்க கோபுரம்) ரங்க விமானம்? முடிவாச்சா, இல்லியா?!
ரெங்க விலாஸ் மண்டபத்தில் பெருமாள் சில சமயம் எழுந்தருள்வார். அப்போது சென்று தரிசனம் செய்ததுண்டு.
சக்கரத்தாழ்வார் சன்னிதியில் சனிக்கிழமையைத் தவிர எல்லா நாளுமே சுலபமாக கருவறை வரை சென்று தரிசனம் செய்ய முடியும்.
வசந்த மண்டபம் வழி பூந்தோட்டங்களும், மயில்களுமாக அமைதியான சூழலில் அழகாக இருக்கும்.
எல்லா சன்னிதியுமே மாலை 6லிருந்து 7 வரை மூடி இருக்கும்.
ஆண்டாள் கண்ணாடி அறை சேவை எப்போதுமே பிரமாதமாக இருக்கும். ஆடிப்பூரம், மார்கழி போன்ற சமயங்களில் கண்களுக்கு விருந்தாக அமையும். பாசுரப்படி அமைத்திருப்பார்கள்.
கோதண்டராமர் சன்னிதி வாசலில் 6.30 7 மணிக்கு தரும் தத்தியோன்னம் நன்றாக இருக்கும்....:)
வாங்க வல்லி.
மூணுன்னு நினைச்சேன். நீங்க பத்தாது. அதனால் பத்துன்னு சொல்றீங்க.
ஆனா இன்னிக்கு வரை 4 . இன்னும் மூணு வரலாம்:-))))
அவனே எழுதிக்கட்டும். பார்க்கலாம்!
வாங்க வல்லி.
மூணுன்னு நினைச்சேன். நீங்க பத்தாது. அதனால் பத்துன்னு சொல்றீங்க.
ஆனா இன்னிக்கு வரை 4 . இன்னும் மூணு வரலாம்:-))))
அவனே எழுதிக்கட்டும். பார்க்கலாம்!
வாங்க இராஜராஜேஸ்வரி.
பெரிய பெருமாள் என்பது உண்மைதான். இடுகைகளைக்கூட நீட்டிக்கொண்டே போகிறான் பாருங்க:-))))
வாங்க கோமதி அரசு.
பதில் தர ரொம்பவும் பிந்திப்போச்சு. எங்களுக்கு 4 நாட்கள் விடுமுறை. ஈஸ்டர் ஸ்பெஷல்.
சுட்டி எதிர்கால ஒளிஓவியர் ஆகலாம்!!!!
வாங்க கலை.
ரங்க விமானத்துக்கு ப்ரணவ விமானம் என்று பெயர் இருக்குன்னு கீதா சொல்றாங்களே அது உண்மைதான்.
ஆனால் ரங்க விமானம் என்றதும் வேறயோசனை இல்லாமல் மனம் டக்ன்னு அங்கே போய் நிக்குதுதே!!!
என் எளிய மனசுக்கு அது ரங்க விமானம்தான்:-)))) வெல்லப் பிள்ளையார் போல!
வாங்க ரோஷ்ணியம்மா.
உள்ளூர்காரர்களுக்கு எல்லா சூட்ஷமும் எப்படித் தெரியுது பாருங்கன்னு வியப்புதான்!
அம்மா மண்டபம். இந்த பெயருக்கு காரணம் என்ன?
துளசி கோபால்...
எந்த இடம் எந்த கோயில் என்ற விவரம் ஒரு மூன்று நான்கு வரியில் முன்னுரையாக கொடுத்தால் நன்று.
Post a Comment