Wednesday, March 13, 2013

திருவாரூர் தியாகராஜர்



ஒரு  அருமையான  பொக்கிஷத்தை, அதோட அற்புதமும்,  அழகும் தெரியாமல்   எப்படியெல்லாம் சிதைச்சுப் பாழாக்கலாம் என்று தெரிஞ்சுக்கணுமுன்னா  திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள் போய் பாருங்க.

முப்பத்தி மூணு ஏக்கர்!  பரந்து விரிந்த பிரகாரங்கள்.  அழகுக்கு அழகு சேர்க்கும் கோபுரங்கள், பிரகாரம் முழுசும் அங்கங்கே இறைந்து கிடக்கும் சந்நிதிகள்  (ஒவ்வொன்னும்  ஒரு பெரிய அறை போல விஸ்தாரம்)  அதுகள்  மேலே  நாம் சிதம்பரத்தில் பார்த்த மாதிரியுள்ள மேற்கூரைகள் எல்லாம்  பொலிவு இழந்து,  மேலே அடிச்ச வண்ணங்கள் எல்லாம் உருக்குலைஞ்சு  ஐயோன்னு  கிடக்கு.   என்னதான்  காசு பணம் இருந்தாலும் இப்படி ஒன்னைக் கட்டி எழுப்ப முடியுமா?   ஆயிரவருசகாலத்துக்கு  முந்திய சமாச்சாரம்.  வயசு  ஆயிரம் முதல் ரெண்டாயிரம் வரையும்கூட இருக்கலாமாம்!
   மேலே உள்ளது சுட்ட படம்.


திருவாரூருக்குள் நுழைஞ்சு  அருள்மிகு தியாகராஜர் கோவிலுக்குள் நுழையும்போதே மணி பதினொன்னே முக்கால்.  உச்சிகால பூஜைகள் முடிஞ்சு சரியா 12 மணிக்குக் கோவிலைப் பூட்டிருவாங்களேன்னு அரக்கப்பரக்க மூலவரைத் தேடி ஓடறோம்.

மங்கிய விளக்கொளியில்  தரிசனம்  ஆச்சு. இவருக்கும் முந்தியவர் வால்மீகிநாதர்.  மணியாச்சேன்னு அவர் சந்நிதியைப்  மூடிட்டாங்களாம்.

தேவலோகத்தில்  இந்திரன் பூஜை செஞ்சுக்கிட்டு இருந்த  மரகத லிங்கத்தை பூலோக மன்னன் முசுகுந்தனுக்குத் தரவேண்டிய நிர்ப்பந்தம். அசுரர்களை எதிர்த்துப்போரிடும் சமயம் உதவுனவர் .

இந்திரனுக்குக் கொடுக்க மனசு வரலை. மயன்கிட்டே சொல்லி  அச்சு அசலா அரை டஸன் (போலி) லிங்கங்களை உருவாக்கி  'இந்தா வச்சுக்கோ'ன்னு  கைநிறையக் கொடுத்தான்.  முசுகுந்த சக்ரவர்த்திக்கு எல்லாம் போலின்னு புரிஞ்சு போச்சு.

இப்பக்கூடப்பாருங்க  இந்த நகை சமாச்சாரத்துலே  போலி நகைகளில் இருக்கும்  டிஸைன்களும் அழகும் அசல் தங்கத்துலே இல்லைன்றதைக் கவனிச்சீங்களா?

'என்னப்பா இந்திரா,  ஏமாத்தப் பாக்குறயா? இப்படிச் செஞ்சுட்டியே'ன்னதும்  இந்திரனுக்கு அசிங்கமாப்போச்சு.  அசல் அண்ட் அரை டஸன் போலி  எல்லாத்தையும்  ராஜாவுக்கே கொடுத்துடறார். அந்த அசல் இங்கே திருவாரூர் கோவிலில் இருக்கு. தினம் அபிஷேகம் அதுக்குத்தானாம். மற்ற ஆறு லிங்கங்களையும்  சுத்துவட்டாரத்துலே வெவ்வேற கோவில்களுக்கு   அனுப்பிட்டார்  முசுகுந்த சக்ரவர்த்தி.

இந்த ஏழு லிங்கங்களும் இருக்கும் கோவில்களுக்கு  ஸப்த விடங்கர் தலங்கள்ன்னு பெயர் இருக்காம்.

நால்வர் பாடிய திருத்தலம். மூணு பிரகாரம் ,  ஒன்பது ராஜகோபுரம், எண்பது விமானங்கள், பதிமூணு பெரிய மண்டபங்கள், பதினைஞ்சு தீர்த்தக்கிணறுகள், மூணு நந்தவனங்கள்,  கோவில் முழுவதும் அங்கே இங்கேன்னு  விரவி நிற்கும்  முன்னுத்தி அறுபத்தியஞ்சு சிவலிங்கங்கள் இப்படி எல்லாமே பெரிய ஸ்கேலில்!   ஒரு நாள் முழுதும் நின்னு நிதானமாச் சுற்றிப் பார்க்கவேண்டிய கோவில் இது.


சந்நிதிக் கதவைச் சாத்திய  கோவில் ஊழியர், இன்னும்  ஒரு பத்து நிமிசத்தில் அன்னதானம் இருக்கு. இருந்து சாப்பிட்டுபோங்கன்னு உபசரித்தார். கெமெராவுக்கு அனுமதி வாங்கலாமுன்னா  அலுவலகத்தையும் இழுத்து சாத்திட்டு போயே போயாச்சு!

நாங்களே  மெள்ள ஒவ்வொரு இடமாப் பார்த்துக்கிட்டே வந்தோம். மண்டப நிழலில் இருந்து பிரகாரங்களுக்கு போகும்போது .... தீமிதித் திருவிழாதான்.  கடுமையான  உச்சி வெய்யில். பிரகாரத்தில்  இருக்கும் சந்நிதி நிழல்களில் தாவித்தாவி  போய் நின்னு பார்த்துக்கிட்டே போய் ஒரு உசரமான மண்டபத்தில் ஏறி உக்கார்ந்தோம்.

 கண்ணைச் சுழற்றியதில் பட்டது, அடடடான்னு  கயிறு இழுக்கும் போட்டியில்  கலந்துக்கிட்ட ஆடுகளா இருக்கும்  சிற்ப வரிசை, கோபுரத்தில்! நியூஸிக்காரங்க சரியான இடமாப் பார்த்துத்தான் உக்காரவந்தோம்:-)

தமிழுக்கு அத்தாரிட்டின்னு   சொல்லிக்கும்  முன்னாள் முதல்வர் ஊரில் தமிழ் நல்லாத்தான் வாழுது போங்க!

பகல் சாப்பாட்டுக்காக  பிள்ளைகுட்டி சகிதம்  அங்கங்கே சின்னச்சின்னக் குழுவா  பலர் காத்திருந்தாங்க.


கொடிமரம்  நோக்கிப்போகும் மண்டபத்தின் ஆரம்பத்தில் மனுநீதி சோழர் தன் தேரை ஓட்டி வர்றார். ஒரு சமயம் தேவலோகத்தில்  நீதி தவறாமல் இருப்பவர் யார் என்ற விவாதம் வந்தப்ப எமதருமன் நாந்தான்  ஏழை பணக்காரன், நல்லவன் கெட்டவன், படிச்சவன் படிக்காதவன், அறிவுள்ளவன்,முட்டாள்  உசந்த சாதி தாழ்ந்த சாதி  இப்படி  எந்தவிதமான பாகுபாடும் பார்க்காமல்  என் கடமையைச் செஞ்சுக்கிட்டு வர்றேன் னு சொல்றார்.

பொழுதன்னிக்கும்  பயணம் போய் எல்லா லோகங்களையும்  சுத்திப்பார்த்துக்கிட்டே இருக்கும் நாரதர் அப்ப அங்கே வந்து. 'பூலோகத்தில் மனுநீதி சோழன் என்ற அரசன் இருக்கார். அவர்தான் நீதி தவறாமல் இருப்பவர்னு சொல்ல, தேவலோகவாசிகளுக்கு  நம்பிக்கை இல்லாமல் அதெப்படி ஒரு மானிடன் நம்மைவிட மேலானவனா இருக்கமுடியுமுன்னு  முழிக்க, சரி சோதிச்சே பார்த்துடலாமுன்னு  எமன் ஒரு பசுமாடு ரூபம் எடுத்து (ஒய் ,நோ எருமை மாடு?) ஒரு கன்றுக்குட்டியுடன் மனுநீதி சோழன் ஆட்சி செய்யும் ஊருக்கு வந்து சேர்கிறார்.

 ராஜவீதியில் அம்மாவும் மகனுமா மெல்ல உலாப்போகும்போது, மன்னரின் மகன் வீதிவிடங்கன் ஒரு தேரில் வேகமா வர்றார். துள்ளிக் குதிச்ச கன்று தேர்ச்சக்கரத்தில் சிக்கிச்  செத்துப்போச்சு. அடடா இப்படி ஆகிப்போச்சேன்னு  அரசகுமாரன் அரண்மனைக்குத் திரும்பிப்போறான்.

  மனுநீதி சோழன் தன் அரண்மனை வாசலில் ஒரு மணியைக்  கயிறு கட்டித் தொங்க விட்டுருக்கார். யாருக்காவது  குறை இருந்தால் அதை  இழுத்து அடிச்சால் உடனே என்ன குறைன்னு கேட்டு அதைத் தீர்த்து வைப்பார்.

கன்றை இழந்த தாய்ப் பசு அழுது புரண்டு கதறுச்சு. துக்கம் தாங்காமல் இது  என்ன அநீதின்னு  அரண்மனை வாசலுக்கு ஓடிப்போய்  மணியில் இருந்து தொங்கும் கயிறை தன் வாயினால் பிடிச்சு இழுத்து  மணியை அடிச்சது. மணி ஓசை   மன்னரில் காதில் விழுந்துச்சு.  அவருக்கு ஆச்சரியமாப் போயிருச்சு.

இதுவரை இந்த மணி யாராலுமே  அடிக்கப்படலை. யாருக்காவது  குறை இருந்தால்தானே அடிப்பாங்க? யாரா இருக்குமுன்னு  பார்க்க வாசலுக்கு வர்றார்.

அதுக்குள்ளே அரண்மனைப் பணியாளர்கள்  அரசரிடம் ஓடிப்போய் ஒரு பசு மணியை அடிக்குதுன்னு சொல்றாங்க. மெய்யாலுமான்னு  வந்து பார்த்தா.... கண்ணீர்  வழிய வழிய  வாயில் கயிற்றைக் கவ்வி தலையை ஆட்டும் பசுமாடு!  அடடா...பசுவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே ன்னு இருக்கும்போது  சம்பவம் நடந்ததைப் பார்த்த சிலர்  வந்து  சமாச்சாரத்தைச் சொல்றாங்க.மன்னர் போய்ப் பார்த்தார். உயிரிழந்த கன்று  தரையில் கிடக்கு. பசுவும்  அந்த இடத்துக்கு வந்து  கன்றை நக்கிக்கொடுத்துக்கிட்டே கண்ணீர் சிந்தி ம்மா...ம்மா ன்னு கதறுது.

யார் இப்படிச் செஞ்சதுன்னு அரசர் கேட்க, ' தங்கள் மகன் ஓட்டிவந்த தேரில் கன்று துள்ளிப் பாய்ஞ்சு விழுந்துருச்சு'ன்னு  சொல்றாங்க.

ஸ்பீட் கில்ஸ்ன்னு சரியாத்தான் சொல்லி இருக்காங்க. அதுவுமில்லாமல்  அரசகுமாரனுக்கு  ட்ரைவிங் லைசன்ஸ் வாங்கும் வயசு  வந்துருச்சா?  சின்னப்பயலா இருக்கானே!  ராஜவீதியில் (சிட்டி சென்ட்டர்) இவ்ளோ வேகமாப்போகலாமா?

கன்றை இழந்த பசு எவ்வளவு துக்கம் அனுபவிக்குதோ அதே துக்கத்தை  நானும் அனுபவிக்கணும். அதுதான் நியாயம். கூட்டிட்டு வாங்க அரசகுமாரனைன்னார்.  வீதிவிடங்கன் வந்ததும்  ஒரே கேள்வி.

"கன்றின் மரணத்துக்கு நீ காரணமா?"

"  ஆம் தந்தையே."

கன்றுவிழுந்து கிடந்த இடத்திலே மகனைக் கிடத்திவிட்டு  அவன் மீது தேரை செலுத்துங்கள்னு  சொல்றார்.  யாரும்  இடத்தைவிட்டு நகரலை. ஐயோ அரசகுமாரனை எப்படிக் கொல்வது....

அரசர் பார்த்தார்.  சரி நானே  தண்டனைகொடுக்கறேன்னு சொல்லி  மகன் மீது தேரை ஓட்டிப்போனார். மகனும் மரித்தான். பிள்ளை இறந்த சோகம் தாங்காமல்; அரசரும் கண்ணீரும் கம்பலையுமா இருக்கும்போது...

தாய்ப் பசு தன் சுய உருவம் எடுத்து எமதருமனா காட்சி கொடுத்துச்சு. கன்றும் ஒரு தேவதையா மாறி பக்கத்தில் நின்னுச்சு.'  மனுநீதி சோழரே,  நீரே  நீதியும் நியாயமும் உள்ளவர்'னு சொல்லி  அரசகுமாரன் வீதிவிடங்கனையும்  திரும்ப  உயிர்ப்பிச்சுக் கொடுத்துட்டு எமதருமன் எமலோகம் போறார்.


இந்தக் காட்சியை விளக்கும்  பெரிய கல்தேர் ஒரு இடத்தில் வச்சுருக்காங்க. சின்னதா ஒரு  பகுதி. அதுக்குள்ளே போய்ப்பார்க்க ஒரு ரூபாய் கட்டணம்!  மாடும் இறந்த கன்றும் ஒரு கற்சிலையாக.

தேர்ச்சக்கரத்தின் அடியில் கொல்லப்பட்ட அரசகுமாரன்.

1996 இல்லை 1998 ஆண்டோ இந்த  நினைவுச் சின்னத்துக்கு நுழைவாயில் கட்டுனாங்களாம் லட்சரூபாய் செலவில். கல்வெட்டு சொல்லுது.

 ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஒரு ஷெட்டில் மனுநீதி சோழர் சரிதம் படங்கள். அடிக்கும் வெய்யிலிலும் சூட்டிலும்  வண்ணங்கள் அதிகநாள் தாங்காது:(


சங்கீத மும்மூர்த்திகள்  பிறந்த ஊரும் இதே!  அட! ஒரே ஊரிலா!!!! வியந்தேன்!

நாம் போன நேரம் சரி இல்லை.  ஒன்னு அதிகாலை வெயிலுக்கு முன் போயிருக்கணும். இல்லைன்னா மாலை  நாலு நாலரைக்கு. ரெண்டுங்கெட்டானா உச்சி நேரத்துலே அங்கே இருந்ததால்  சரியாச் சுத்திப்பார்க்க  முடியலை. கிடைச்சவரை போதுமுன்னு கிளம்பவேண்டியதாப் போச்சு.

பகல் சாப்பாட்டு நேரம் பாருங்க. சீனிவாசனை  சாப்பிட அனுப்பணும். எனக்கு ஓய்வறை  போகணும். நல்ல இடமா ரெஸ்ட்டாரண்டு தேடுனதில் ஹோட்டல்  காசீஸ் இன் என்று ஒன்னு. வெளியே தோட்டம் அலங்காரச் சிலைகள் எல்லாம் ஓக்கே.  ஆனால் மற்ற வசதிகள்  சொல்லிக் கொள்ளும்படியா இல்லை:(


இந்தியப்பயணங்களில்  தடுமாறித் தத்தளிக்கும் நேரமென்றால் இவைதான்.  என்னத்தைச் சொல்றது  போங்க:(

என்னுடைய ஆதங்கம் என்னன்னா..... இது  முன்னாள் முதல்வர் பிறந்த ஊர். அவர் தொகுதி. அஞ்சு  முறை முதல்வர் பதவியிலே இருந்துருக்கார்.  அப்பவாவது சீர் செஞ்சுருக்கலாம் இல்லையா?  ஓடாமல் முடங்கிப்போன தேரை ஓடவச்சாருன்னு  வாசிச்ச நினைவு. திருவாரூர் தேரழகுன்னு ஒரு சொல்லிருக்கு! கடவுள் நம்பிக்கை இல்லைன்றதுக்காக இப்படி  ஒரு கலைப்பொக்கிஷத்தைக் கண்டும்காணாமலும் விட்டுடலாமா? இதை திராவிடர் கட்டிடக்கலை(Dravidian architecture) ன்னு  வகைப்படுத்தி இருக்கும்போது அட்லீஸ்ட் அந்த ஒரு சொல்லுக்காவது எதாவது செஞ்சுருக்கலாம்!

அதெல்லாம்முன்னே செஞ்சதுதான்னு யாராவது சொன்னாலும்.... இப்ப இருக்கும் நிலை பார்த்தால் கண்ணில் ரத்தம்தான் வரும்  நம்மூர் கால நிலைக்கு என்னதான் பெயிண்ட் அடிச்சு பராமரிச்சாலும்  ரெண்டே வருசத்துலே பல்லைக் காமிச்சுரும் என்பது உண்மைதானென்றாலும் இதையெல்லாம் பராமரிச்சுக்கிட்டே இருக்கவேண்டிய சமாச்சாரம் இல்லையோ?

இப்போதைய முதல்வராவது கவனிச்சால் நல்லது.ஆனால் இது ஸோ அண்ட் ஸோ பிறந்த தொகுதி என்பதால்....  கவனிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கை இல்லை!  நோ சான்ஸ்:(

பேசாம இதை தொல்பொருள்துறை எடுத்துக்கிட்டாக்கூடத் தேவலைன்னு எனக்குத் தோணிப்போகுது. குறைஞ்சபட்சம் பராமரிப்பாவது  நல்லா இருக்குமே!  தனியார் வசம் பராமரிப்பு வேலையைக்கொடுக்கலாம்தான். ஆனால் கமலாயக் குளக்கரை மண்டபத்தின் கூரையில் பெயிண்ட் அடிச்ச கையோடு   அதில் தங்கள்  விளம்பரத்தை எழுதி வச்ச கொடுமையை என்னவென்பது?

திரு முனிசாமி அவர்கள் வலையேற்றிய  வீடியோ க்ளிப். அவருக்கு என் நன்றிகள்.

தினமலர் 360 டிகிரியில் கோவிலைக் காமிக்கும் 10 க்ளிப்ஸ் போட்டுருக்காங்க.  சாம்பிளுக்கு ஒன்னு இங்கே! ஆர்வம் இருப்பவர்கள் மற்றவைகளையும் பார்த்து ரசிக்கலாம்.



இப்படியெல்லாம் புலம்பினபடியே மன்னார்குடி போய்ச் சேர்ந்தோம்.


தொடரும்............:-))))


சரணின் பின்னூட்டம் பார்த்ததும்தான்  இதையும் இங்கே போடலாமேன்னு தோணுச்சு.  இடிஞ்சு கிடக்கும்  சுவர். நக்கீரனுக்கு நன்றி.


24 comments:

said...

சின்ன ஊர் கோவில்கள் தவிர திருவாரூர் மாதிரியான பெரிய கோவில்களை சுற்றிப்பார்க்க காலை 6 மணி முதல் அல்லது மாலை 5 மணி முதல் உள்ளே நுழைவதுதான் சரியாக இருக்கும் மேடம். கோவிலின் தெற்கு கோபுர வாசலில் இருக்கும் தெருவில்தான் நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். சுமார் 3 வருடங்களாககத்தான் நான் தினமும் காலையில் இந்த கோவிலுக்கு செல்வது வழக்கம். அதுவே எனக்கு காலை 7 மணிக்குப் பிறகு என்றாவது போகும்படி ஆகிவிட்டால் தரிசனம் திருப்திகரமாக தெரியாது.

சுவற்றில் நாட்டியாஞ்சலி என்று எழுதியிருக்கும் இடத்தில்தான் மகாசிவராத்திரியின்போது ஒருவார காலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வெட்டில் இருக்கும் எழுத்துக்களைப்போல் முயற்சித்திருக்கிறார்கள். அதை தவறாக எண்ண வேண்டாம்.

ஆண்டு முழுவதும் தினமும் கோவிலுக்கு செல்லும் நான் பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரை அன்று போவதில்லை. அன்று பாததரிசனம் என்று நுழைவு கட்டணம் 50 ரூபாய் வசூலித்துவிடுகிறார்கள். தர்ம தரிசனம் என்றால் குறைந்தது 3 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்திருப்பு. எனக்கு பல நாட்களில் இந்த 50 ரூபாய் வருமானம் கூட இருக்காது. அதனால் மனதில் தியாகராஜரை நினைத்து கும்பிட்டுவிட்டு இருந்துவிடுவேன்.

என்னுடைய வருத்தம் என்னவென்றால் ஒவ்வொரு பாததரிசனம் அன்றும் வசூலாகும் தொகை பல லட்சம் இருக்குமாம். அதை வைத்து கமலாலய சுற்றுச்சுவர் இடிந்திருப்பதை அருமையாக சீரமைத்திருக்கலாம். ஆனால் ஸ்பான்சரை எதிர்பார்த்து சுவரை அப்படியே வைத்து கமலாலய வடகரையில் கனரக போக்குவரத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இப்படியே மேல்கரையும் தென் கரையும் பழுதடைந்தால் எல்லா பக்கமும் போக்குவரத்தை நிறுத்தி விட்டு அதிகமான மருத்துவமனைகள் இருக்கும் பகுதிக்கு ஆம்புலன்சையும் தீயணைப்பு துறை இருக்கும் பகுதியில் இருந்து அந்த வாகனத்தையும் எப்படி அனுப்புவார்கள் என்று தெரியவில்லை.

அடுத்த ஆட்சி வரும் வரை திருவாரூருக்கு விடிவுகாலம் இல்லை என்பதை ஊர்மக்கள் உணர்ந்தே இருக்கிறோம்.

said...

நாம் புலம்புவதற்கும் விஷயங்கள் வேண்டாமா?

said...

வாங்க சரண்.

உள்ளூர்க்காரர் முதல்லே வந்து கருத்து சொன்னது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

நம்மதளத்துக்கும் இதுதான் உங்கள் முதல் வருகைன்னு நினைக்கிறேன்.

தினம் தரிசிக்கும் கடவுளை விசேஷநாளின் போது அம்பது, நூறுன்னு கொடுத்து தரிசிப்பது எனக்கும் உடன்பாடில்லை.

நம்ம அடையார் அனந்தபத்மநாபன் கோவிலில் இப்படித்தான் வைகுண்ட ஏகாதசிக்கு தரிசனத்துக்கு பயங்கர டிமாண்ட்.

நல்லா இருடாப்பான்னு வெளியே இருந்தே சொல்லிட்டு சல்யூட் போட்டுருவேன்.மறுநாள் மாலை 4 மணிக்குப் போனால் அவர் பாட்டுக்கு அம்போன்னு தனியாக் கிடப்பார்!

ஆனால் ஒன்னு அடையார் கோவிலில் வசூலாகும் பணத்தை எனக்குத் தெரிஞ்சவரை நல்ல முறையில் கோவில் அபிவிருத்திக்குச் செலவு செய்கிறார்கள். சமீபத்தில் பார்த்தது சொர்க்கவாசலுக்கு தங்கக்கதவு!

உங்க பின்னூட்டம் பார்த்தபின் வலையில் எடுத்து வச்சுருந்த ஒரு படத்தை சேர்த்துருக்கேன். கமலாலயத்தின் இடிஞ்ச சுவர்:(

தங்கள் வருகைக்கு நன்றி.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அதானே.புலம்பலைன்னா எனக்குப் பொழுது போகாதே!!!

said...

எவ்வளவு பெரிய கோயில் !அப்பாடி. இரண்டு மூன்று நாட்களாவது தங்கி இருந்து பார்க்க வேண்டும்.
இடிந்த கரைச்சுவரைப் பார்த்தால் வருத்தம் தான் மேலிடுகிறது
மோஹனாங்கி எங்கயவது தென்படுகிறார்களா என்று பார்த்தான். காணோம்.
கைகூப்பியபடி துளசியானந்தா தான் இருக்கிறார்.இந்தக் கோவிலைத் தியாகேசாட் நீதான் மனசு வச்சுக் காப்பாத்தணும்னு சொல்கிற மாதிரி இருந்தது:(

கோவில் சரித்திரமும் ,மனுநீதிசோழன் வரலாறும் திருவாரூரின் பெருமை.

மற்றதைப் பற்றிச் சொல்லவேண்டாம்.
நன்றி துளசிமா.

said...

வருத்தப்பட வேண்டிய தகவல்கள்... கவனிக்க வேண்டிய புலம்பல்கள் கூட... படங்கள் அருமை என்று சொல்ல முடியவில்லை...

said...

வாங்க வல்லி.

இங்கே நியூஸியில் ஒருநூறு வருச சமாச்சாரத்தையே தலையில் தூக்கி வச்சு ஆடுவாங்க.

ஆனா நம்மூரில் பாருங்க ரெண்டாயிர வருசம் பழமையான பொக்கிஷத்தை அழிய விடும்போது மனசுக்கு வலிக்குதுப்பா:(

இப்படி ஒன்னு இந்தக் காலத்தில் கட்டுவதுபோல் கனவாவது காண முடியுமா??? ப்ச்......

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆதரவான சொற்களுக்கு நன்றி.

அரசின் காதில் விழுமா???

said...

இந்தியப்பயணங்களில் தடுமாறித் தத்தளிக்கும் நேரமென்றால் இவைதான். என்னத்தைச் சொல்றது போங்க:(//

:((((

said...

//என்னதான் காசு பணம் இருந்தாலும் இப்படி ஒன்னைக் கட்டி எழுப்ப முடியுமா?//

கட்டாயம் முடியாதுதான்.

//இப்படியெல்லாம் புலம்பினபடியே மன்னார்குடி போய்ச் சேர்ந்தோம்.//

நியாயமான புலம்பல்.இதற்கெல்லாம் விடிவு என்ன என்பதுதான் தெரியவில்லை.

படங்கள் அனைத்தும் மிக அழகு.

said...

ஓரளவு மொழுக்குன்னு இருக்கும் வட இந்தியக்கோயில்கள்லயே பராமரிப்புன்னு ஏதாவது நடந்துட்டிருக்கும்போது நுணுக்கமான நகாசு வேலைகளும் சிற்பப்பொக்கிஷங்களும் நிறைஞ்ச நம்மூர்க்கோயில்கள் அம்போன்னு விடப்படறது மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு.

துள்சி மாத்தாஜியின் ஆசிரமத்துக்கு பேனர் ரெடியாகுது போலிருக்கே :-))

ஆமாம்,.. மண்டபத்துல இல்லாம நந்தியார் எதுக்கு வெய்யில் காயறார். என்ன ஏதுன்னு கிட்ட போயிக்கேக்கலாம்ன்னா நாலஞ்சு கல்லை வேற பக்கத்துல குவிச்சு வெச்சிருக்கார். பயமாருக்கு :-)))

said...

புது புது கோவில் கட்டுபவர்கள் புதிதாக் கட்டாமல் இது போனற பழைய சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கு மராமத்து செய்யலாம். காலத்தை வென்ற பொக்கிஷங்களை பராமரிக்க முன் வந்தால் நல்லது.

வெயில் இல்லாமல் இருக்கும் போது போனால் தான் கோவிலின் ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். முன்பு கட்டணம் இல்லாமல் பாததரிசன்ம் பார்த்து இருக்கிறேன். இப்போது எல்லா கோவில்களிலும் கூட்டம் அலை மோதுவதால் காசு வசூல் செய்கிறார்கள்.

said...

கோவில்கள் சிதிலமடைந்து போவதை பார்க்கும்போது மனசு பதறித்தான் போகுது . கோமதி அரசு அவர்கள் சொல்வது போல் புது கோவில்கள் கட்டுவதை விட பராமரிப்பில்லாமல் இருக்கும் எவ்வளவோ கோவில்கள் பழுது பார்க்க
ஆளில்லாமல் உள்ளன , அவற்றை சரி செய்யலாம் என்று என் மனதிலும் தோணும் .
தமிழ் எழுத்துகள் .....அந்த நாள் ஸ்டைல்ல எழுத முயன்றிருப்பாங்களோ !!படங்கள் , விளக்கங்கள் அருமை . :)

said...

பிரம்மாண்டமான கோவில். இப்படி பராமரிப்பில்லாமல் இருப்பதை நினைத்தால் மனதுக்கு சங்கடமாக உள்ளது....:(((

மனுநீதி சோழனும், தேரும் சிறப்புகள்.

//இந்தியப்பயணங்களில் தடுமாறித் தத்தளிக்கும் நேரமென்றால் இவைதான். என்னத்தைச் சொல்றது போங்க:(//

இது பெரிய தொல்லை தான்....:(((

said...

கோமதிம்மா சொல்ற மாதிரி புது கோவில்களாக கட்டிக் கொண்டிருப்பவர்கள் இது போன்ற பழைய கோவில்களை புனருத்தாரணம் செய்ய முயற்சி செய்யலாம்.....

கோவில் அழிவு பார்க்கும்போது மனதுக்குக் கஷ்டமாகத் தான் இருக்கிறது.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

பல சமயம் பயணம் என்றாலே உள்ளூற ஒரு பயம் வருவதைத் தடுக்க முடியலையேப்பா:(

said...

வாங்க ரமா ரவி.

எல்லாம் விதிப்படின்னு விடமுடியலையேப்பா:(

அருமை தெரிஞ்சுக்கலையேன்னு ஆதங்கம்தான்:(

said...

வாங்க அமைதிச்சாரல்.

சிலகோவில்களில் சிலைகளைச் சுத்தப்படுத்தறோமுன்னு ஸேண்ட் ப்ளாஸ்டிங் முறையைப் பயன்படுத்தி மூக்கு முகரையை மொழுக்கி வச்சுருப்பதைப் பார்த்தால்...... ஐயோ:(

நந்திக்கே பொறுக்கலை போல..... டேய்....வாங்கடான்னு உக்கார்ந்துருக்கார்!

said...

வாங்க கோமதி அரசு.

பழசைப் புதுப்பிக்க யாரும் முன்வரலையேன்னா... செலவு கூடுதல். இந்தக் காசுக்குப் புதுசே கட்டிடலாம் என்ற எண்ணம். காசும் பார்க்கலாம் இல்லையா?

மேலும் இந்தக் கலையை முழுவதும் உள்வாங்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இருப்பாங்களா என்பதும்....

என்னவோ போங்க.... ஹூம்...

said...

வாங்க சசி கலா.

பழைய எழுத்துலே புள்ளி இடம் மாறுதா என்ன???? தெரியலையேப்பா:(

புனருத்தாரணம்..... நடந்தா நல்லது!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நீங்க சொன்னது அத்தனையும் உண்மைப்பா.

தீர்வு என்னன்னு தெரியலையே:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இதை ஒரு இயக்கமா சேர்ந்து சரிப்படுத்தினால் நல்லா இருக்காது?

நம்ம பதிவுலக நண்பர் மரபூர் சந்திரசேகர் பழங்காலக் கோவில்களைச் சுத்தப்படுத்தும் முயற்சியில் செயல்படறார்.

அநேக வார இறுதிகள் இவ்வகையில் அவருக்கு. ஆனால் இன்னும் மக்கள் சக்தி தேவைப்படுது.

said...

நான் இந்தப் பதிவை இப்பத்தான் படிக்கிறேன். செங்கமலப் பதிவில் சைவக் கோயில்களின் பராமரிப்பு மட்டம்னு சொல்லிட்டு இங்க வந்து பாத்தா... சொன்னது சரிதான்னு இருக்கு. சுடுகாட்டுல ஆடுறவன் இடிஞ்ச சொவரே போதும்னு நெனைக்கிறானோ என்னவோ! பொண்டாட்டி பிள்ளைகள்ளாம் ஆயாச்சு. கொஞ்சம் ஓரளவுக்கு நல்ல வீடா வெச்சுக்கிட்டாதான் என்னவாம்.

said...

இவ்வளவு பெரிய கோயில் கவனிப்பாரின்றி இருப்பது கவலை தருகின்றது.