Friday, March 15, 2013

செங்கமலத்துக்கு ரொம்ப Bபோரடிக்குதாம்!!!!!

உண்மைக்கும் இது நம்ம திட்டத்தில் இல்லாத ஊர். திருக்கண்ணபுரம்  எபிஸோட் மிஸ் ஆகிருச்சுன்னு  தாம்பரம் அத்தையைக் கூப்பிட்டுச் சொன்னதும்... இப்ப எங்கே இருக்கேன்னு கேட்டாங்க. திருவாரூர்.  அப்ப அப்படியே மன்னார்குடிக்குப்போய் ராஜகோபாலைக் கண்டுக்கோன்னு உத்தரவாச்சு.  எங்கம்மாத் தாத்தா பெயர்கூட ராஜகோபால்தான்.  நான் பிறக்குமுன் சாமிகிட்டே போயிட்டார். அதுக்காக இவரை விடமுடியுமா? எழுதிட்டேனே!!!

அவர் நினைவுக்காக இருக்கட்டுமுன்னு  வண்டியை மன்னார்குடிக்கு விடச் சொன்னோம்.  திருவாரூரில் இருந்து அதிக தூரமில்லை. வெறும்  30 கிலோமீட்டர்.  நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது  ரொம்ப தூரத்துலே இருக்கும் ஊர்ன்னு நினைச்சுப் போனதெல்லாம் இப்போ கூகுளில் பார்த்தால்  இருவது, இருவத்தியஞ்சு,  முப்பதுன்னு  இருக்கு.   திருமங்கலத்துலே  இருந்து மதுரைக்குப் போகும்போது   தொலைதூரப்பயணமுன்னு (only 25 KM!!!)ரயில் கூஜாவில் தண்ணி நிரப்பிக்கிட்டுப் போவோமுன்னா பாருங்களேன்!!!  வெறும் பஸ் பயணம்தானே அப்பெல்லாம்.

திருவாரூரை விட்டுக் கிளம்பி  சரியா முக்கால்மணி நேரத்தில் மன்னார்குடி கோவிலாண்டை வண்டி நின்னுச்சு. நெடுநெடுன்னு ஓங்கி நிற்கும் ராஜகோபுரம்! அதன் நிழலில் ஓய்வெடுக்கும்  வெள்ளாடுகள்.  கோவில் முகப்புக் கம்பி கேட்டை ப்பூட்டி வச்சுக்கிட்டு அந்தாண்டை  உக்கார்ந்துருக்கார்  வாட்ச்மேன். சீனிவாசன் போய் விசாரிச்சுக்கிட்டு வந்தவர் கோவில் திறக்கும் நேரம்  நாலரை என்றார்.


ஐயோ இன்னும்  ரெண்டரை மணி நேரம் உண்மையாவே தேவுடு காக்கணுமா? அதுவும் இந்த மொட்டை வெய்யிலில்:(   வண்டிக்குள் இருந்து காய்வதை விட குறைஞ்சபட்சம் உள்ளே போய் உக்காரலாமேன்னு கோபால் போய் கேக்கப்போனார்.  கோவிலில் அன்றைக்கு ஏதோ முக்கிய மீட்டிங் நடந்துக்கிட்டு இருக்கு.  எக்ஸிக்யூடிவ் ஆஃபீஸர் உள்ளே இருக்காருன்னு  சேதி கிடைச்சதும் அவரையே நேரில் போய் கேக்கறேன்னு  சொன்னதும்  காவல்காரர் கதவைத் திறந்து அவரை மட்டும் உள்ளே  விட்டார். இதையெல்லாம் வண்டிக்குள் இருந்தபடியே கவனிச்சுக்கிட்டு இருந்தேன். நம்ம பக்கத்துலே இன்னொரு வண்டியில் ஒரு  நாலுபேர் இருந்தாங்க.  சென்னையில் இருந்து வர்றாங்களாம்.

உள்ளே போன கோபால்  சிரிச்ச முகத்தோடு வந்தார்.  முன்மண்டபத்துலே வந்து உக்கார்ந்துக்க அனுமதி கிடைச்சதாம். அங்கே யானை இருக்குன்னார்!  ஹைய்யான்னு  இறங்கிப்போகும்போது பக்கத்து வண்டியில் இருந்தவர்களையும் வாங்கன்னு உள்ளே  கூட்டிக்கொண்டு  போனோம். நமக்குப்பின்  கம்பிக்கதவு அடைக்கப்பட்டது.

பகல் நேரத்துலே மக்கள்ஸ் கோவிலுக்குள்ளே போய்  கண்ட இடத்தில் தூங்குவதும் அசிங்கம் பண்ணுவதுமா இருந்ததால் இப்ப பகல் 12 மணிக்கு  கேட் பூட்டும் வழக்கம் வந்துருச்சுன்னு  சொன்னார் காவல் பணியாளர்.

ராஜகோபுரம் கடந்து உள்ளே போனால்  நேராக இருக்கும் மண்டபத்துக்கு ஒரு அஞ்சு நிலை கோபுரம்!  நடுவிலே அகலமான பாதை. ரெண்டு பக்கமும் ஒரு ஒன்னரை அடி உசரத்தில்  நெடூக திண்ணை அமைப்பு.

 ரெண்டு கோபுரங்களுக்கு இடையில் இருக்கும் வெளிப்பிரகாரத்தின்  தெற்கு மூலையில் ஒரு அரங்க மேடை.   அதுக்கு அந்தாண்டை  இன்னொரு பக்கத்தில்  ஹோஸ் போட்டு வச்சுருக்கும்  விஸ்தாரமான   ஓப்பன்  குளியலறை! ஸோ அண்ட் ஸோவுக்காம்.:-)

என்னைப்பார் என் அழகைப்பார்னு கம்பீரமா உசந்து நிக்கும் மன்னார்குடி மதிலழகு!  ஹைய்யோ!!!!!


மண்டபத்தின் வலது பக்கம் செங்கமலத்தின் குவார்ட்டர்ஸ். கூரை வேய்ந்து இன்னும்  கொஞ்சம்  விஸ்தரிச்சு, ஃபேன் எல்லாம் போட்டு வச்சுருக்கு.  சின்னக் கண்களால் கூர்ந்து பார்த்து  வாடிம்மா, எப்படி இருக்கேன்னு கேட்கும் பார்வை!



எதிர்பக்க மண்டபத்தில் வசதியா உக்கார்ந்து கவனிக்க ஆரம்பிச்சேன்.  அவளுக்கு ஒன்னும் தின்னக்கொடுக்காதேன்னு போர்டு. பாவம்....அவளுக்குப் படிக்கத் தெரியாதது நல்லாதாப்போச்சு. இல்லேன்னா எப்படி இருந்துருக்கும்?

யானைப் பராமரிப்பு  உண்டியல் ஒன்னு அங்கே வச்சுருக்காங்க.  இந்தா  உன் ஆளுக்குக் கொடுன்னு  கோபால் ஒரு நல்ல தொகையை என் கையிலே திணிச்சார்.  ஓடிப்போய் அவளுக்கு விஷயத்தைச் சொல்லி உண்டியலில் சேர்த்தேன்.  லேசா சிரிச்சாளோ?

செங்கமலத்தின் அறைக்குப் பக்கத்தில்  இன்னொரு தடுப்பு வச்சு சின்னதா ஒரு அறை. அதுலே நல்ல உறக்கத்தில் இருந்தார்  ஒருவர்.  இந்தப்பக்கம் மண்டபத்திலும்  முதலில் உக்கார்ந்து இருந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாச் சரிய ஆரம்பிச்சுருந்தாங்க. இதில் கோபாலும் சேர்த்தி:-)



வெய்யில் ஆளை அசத்துது. ஆனால்  வெட்டவெளியில் இருந்து கோபுரவாசல் வழியா  லேசான  இளங்காற்றும் வருது.  அதென்னவோ எல்லா  ஊர்களிலும் கோபுரவாசல் காற்று  அருமைதான்.



பயங்கர போர்! எனக்கில்லை செங்கமலத்துக்குதான். இந்த பாரேன் இந்தச் சங்கிலியை என் காலில் கட்டிப்போட்டுருக்குன்னு அப்பப்ப எடுத்துக் காமிக்கறதும் அதை அவிழ்க்க முயற்சிக்கறதுமா இருந்தாள். தாங்க முடியாமப்போனா.....  அவளுடைய  ஸ்நாக்ஸை வாரி எடுத்துத் தன் தலையில் போட்டுப்பாள். உடனே தலையை ஆட்டி அதை கீழே தள்ளுவாள்.  கொஞ்ச நேரத்தில் தும்பிக்கையால் எல்லாத்தையும் கூட்டிப்பெருக்கி  வாரி மீண்டும்  தலைக் குளியல்.   அஞ்சு நிமிசத்துக்கு ஒரு முறைன்னு கணக்கு வச்சுக்கிட்டது போல தாங்க முடியாமப் போய்க்கிட்டே இருந்துச்சு அவளுக்கு.




நானும் எதிரில் உக்கார்ந்தபடி அவளோடு  மனசால் பேசிக்கிட்டே க்ளிக்கும்  வேலையைச் செஞ்சுக்கிட்டு இருந்தேன். வளாகத்தில் அங்கங்கே  சின்ன மண்டபமும் குட்டிதேர் ஒன்னுமா இருக்கு.   எழுந்துபோய் எக்ஸ்ப்ளோர் செய்யலாமுன்னா.... வெறுங்காலில் தீ மிதிக்கணும்:(



சின்னதா அழகான ஒரு பார்க் செட்டிங் ஒரு பக்கம். அங்கே உக்கார மரத்தண்டுகளைப்போல்  உள்ள  பெஞ்சுகள்.

ராஜகோபுரம்  பதினோரு நிலை.  154  அடி  உசரம்!  கோபுரச் சிற்பங்கள் எல்லாம்   மேலே இருந்து  ஆரம்பிச்சு  அஞ்சு நிலை வரைதான்.  மற்ற ஆறு நிலைகளிலும்  வெறும் தூண்கள் நிற்பதுபோல் புதுமையா இருந்துச்சு. கிளிகளின் நடமாட்டம் உள்ளே கண்ணுக்குப் புலப்பட்டது. கண்ணை நட்டதில் குரங்கு (மாதிரி)ஒன்னு இங்கும் அங்குமா போகுது. ஒரு வேளை  மனுசனோ?

கோவிலுக்கு வயசு  ஆயிரத்துக்கும் மேலே!  முதலாம் குலோத்துங்க சோழர்  தன் ஆட்சி காலத்தில் ( கிபி 1072 -1122)இன்னும் விரிவாக்கிக் கட்டி இருக்கார்.  23 ஏக்கர் பரப்பளவு.   ஏழுப்ரகாரங்கள்.  ஏழு மண்டபங்கள். 24  சந்நிதிகள் . கோவில் பாதி குளம் பாதின்னு  சொல்ராங்க. அத்தனை பெரிய புஷ்கரணி.
குளத்தைக் குளமுன்னு சொல்லாம இதுக்கு ஹரித்ரா நதின்னு பெயராம்!

தக்ஷிண த்வாரகைன்னு புகழ் பெற்றதன் காரணம், கண்ணன் இங்கே மன்னன்!  வடக்கே போக முடியாத முனிவர்களுக்கு  தெற்கே  வந்து காட்சி கொடுத்துருக்கான்.

ஒரு நாலுமணியான சமயம், உறக்கத்தில் இருந்த  யானை ரூம்காரர் எழுந்துபோய்  முகம் கழுவி வந்தார்.  நானும் கொஞ்சம் பேச்சுக்கொடுக்கலாமுன்னு போனேன். இவர் பெயரைத்தான் எப்படியோ மறந்துபோயிருக்கேன். பாபுன்னு சொன்னதா நினைவு.  மறுபடி பெயர் நினைவு வரும்வரை பாபுன்னே வச்சுக்கலாம் சரியா?

உள்ளூர்க்காரர்கள் யாராவது இருந்தால்  பெயரை நினைவுபடுத்துங்க ப்ளீஸ்.

செங்கமலம்தான் இவருக்கு எல்லாமேன்னார். நான் உசிரோட இருக்கேன்னா அதுக்கு  செங்கமலம்தாங்க  காரணமென்றார்.  இவளான்னு என் பார்வை போனதைப் பார்த்துட்டு,   இந்த யானை  இப்போ கொஞ்ச வருசமாத்தான் இருக்கு. சசிகலா மேடம் கோவிலுக்குக் கொடுத்தாங்கன்னார்!

ஆஹா.... மன்னார்குடின்னதும் இந்தப்பேர் நினைவுக்கு வராம நம்ம மன்னார்குடி மைனர்வாள்  ஆர் வி எஸ் நினைவு எப்படி வரப்போச்சு?

அங்கிருந்த மரப்பெட்டி ஒன்னைத் திறந்து  ஃபோட்டோ ஆல்பம்  ஒன்னு எடுத்து என் கையில் கொடுத்தார்.  அங்கே  இருந்த (அவர் தூங்கின ) பெஞ்சில் உக்கார்ந்து பாருங்கன்னு உபசரிப்பு வேற.

கோவிலுக்குள்ளே இன்னொரு பிரகாரத்தில்   கைப்பிடிச்சுவர் இல்லாம மொட்டைக்கிணறு இருந்துருக்கு.  இவருடைய அம்மா சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு, இடுப்பில் உக்கார்ந்திருந்த ஒன்னரை வயசுக்குழந்தை பாபுவோடு  கை கழுவ கிணத்தாண்டை போறாங்க.  கொஞ்ச தூரத்தில் குழந்தையை இறக்கித் தரையில் உக்காரவச்சுட்டு  கிணற்றில்  வாளியை இறக்கி நீர் மொள்ளும் போது கால் தடுமாறி கிணத்துலே விழுந்துட்டாங்க. குழந்தையோ  திடீர்னு அம்மா கண்முன்னே இருந்து மறைஞ்சதில் பயந்து போய்  அழுதுக்கிட்டே தவழ்ந்து கிணத்தாண்டை  போகுது. இன்னும்  துளி இடம் பாக்கி. கிணத்துலே குறுக்கா போட்டுருந்த மூங்கிலைப் பிடிச்சுக்கிட்டு  எட்டிப்பார்க்குது. பாதி உடம்பு   பள்ளத்தை நோக்கி............இன்னும் ஒரு விநாடி......... தொபீல்ன்னு தண்ணீரில் விழவேண்டிய குழந்தையை யாரோ  அப்படியே அலாக்காத் தூக்கிடறாங்க. யாரு? செங்கமலம்!

ஆபத்தை உணர்ந்தவள் சத்தம் போடாம மெல்ல வந்து தும்பிக்கையால் குழந்தையைத் தூக்கிட்டாள்.  இதுக்குள்ளே கிணற்றில் விழுந்த அம்மாவின் அலறல் கேட்டு ஓடி வந்த அப்பா, மனைவியைக் காப்பாத்த தொபுக்கடீர்ன்னு கிணற்றில் குதிச்சுட்டார். அல்லோலகல்லோலம்!  ஆட்கள் ஓடி வந்து  கிணற்றில் இருந்த இருவரையும் காப்பாத்திடறாங்க. அம்மாவுக்கு முதுகில் கொஞ்சம் அடி. மற்றபடி  ஓக்கே!


குழந்தையைக் காப்பாத்துன செங்கமலம் இவுங்களுக்கு குலதெய்வமாப்போனதுலே என்ன வியப்பு. அப்பாதான்  கோவில் யானைப்பாகனா  அப்போ  வேலையில்  இருந்தவர்.  கோவில் யானையுடன் கூடவே வளர்ந்த பாபுவும்  பெரியவனாகி படிப்பை முடிச்சார். பி.காம் பட்டதாரி.  தந்தை மறைவுக்குப்பின் செங்கமலத்தைப் பார்த்துக்கும் பொறுப்பை இவர் ஏத்துக்கிட்டார்.

கோவில் விழாக்கள்,நித்யபடி பூஜையில் பங்கேற்புன்னு செங்கமலம் பயங்கர பிஸியானவள்.

2002 லே செங்கமலம்  பூவுலக வாழ்க்கையைமுடிச்சுக்கிட்டாள். மனசொடிஞ்சுட்டார் பாபு.  அப்புறம்தான்  இப்போ இருக்கும் செங்கமலம் வந்து சேர்ந்துருக்காள். கோவிலுக்கு  எந்த யானை வந்தாலும்  ஒரே பெயர்தான் செங்கமலம்.  இங்கத்துத் தாயார் செங்கமலவல்லி நாச்சியார்!

நாலரைக்குக் கோவில் திறந்துட்டாங்க, ஆட்கள் உள்ளே போகத் தொடங்கியாச்சு. வாவான்னு  கூப்புடறார் கோபால்.  செங்கமலத்துக்கும் பாபுவுக்கும்  இதோ போயிட்டு வர்றேன்னு  சொல்லி கோவிலுக்குள் நுழைஞ்சேன்.  நீண்ட நெடும்பயணம்!  என்னப்பா... இப்படிக் கட்டியிருக்காங்க! அதுபாட்டுக்கு  போய்க்கிட்டே இருக்கு!  சட்னு என்னமோ நாச்சியார் கோவில்  ஞாபகம் வந்துச்சு.

ஏழெட்டு படிகளேறி  அடுத்த மண்டபம் போனால் எல்லோரும் கூட்டமா நிக்கறாங்க. கருவறைச் சாவிப் பொறுப்பாளருக்குக் காத்திருக்காங்களாம்!  கொஞ்ச நேரத்தில் அரக்கப்பரக்கக் கலைஞ்சு ஓடும் கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம்.  எங்கே இருந்தாங்க இத்தனை பேர்?  எப்போ வந்தாங்க?  நானும் ரெண்டரை மணி நேரமா  முன்வாசலில்தானே இருந்தேன்?

கூட்டம் கொஞ்சம் குறையட்டுமுன்னு  'தேவுடு' காத்தோம்.  உள்ளே இருந்தவர்கள் வெளியேறுனதும் நாங்களும் எங்களைத்தொடர்ந்து இன்னொரு கூட்டமும்!  டூரிஸ்ட் பஸ் ஒன்னு வந்துருக்கு போல!

கண்முன்னே  பெரும் ஆளா   எம்பெருமாள் நிக்கிறார்.  12 அடி உசரமாம். பரவாசுதேவர்.   அவர் காலடியை சேவிச்சுக்குங்கோன்னார் பட்டர்!  அப்படியே நிக்கறார்ப்பா!  முன்பக்கம் உற்சவர்  ராஜகோபாலன்.  இடுப்பை  ஒரு பக்கமா  ஒடிச்சு  நிற்கும் ஒய்யாரம். வலது கையில்  முணு வளைவுள்ள சாட்டை! அதில் குலுங்கும் மணிகள்.  சின்னக்குழந்தைக்கு  இடுப்பில்  மணிச்சரம், காலில் தண்டை கொலுசு , கழுத்து நிறைய பதக்கமும் சங்கிலியுமா  நிறைஞ்சு கிடக்கு!  நகை பாரம்  பிடிச்சு இழுக்குமோ? இடது கை சப்போர்ட்டுக்கு பின்னம்பக்கம் நிற்கும் பசுமாடு.  ரெண்டு கன்னுக்குட்டிகள் தலை உயர்த்திக் கண்ணன் முகம் பார்க்கும் போஸில்.

 ஒரு  ட்ரே மாதிரி இருந்ததை  எடுத்துப் பட்டர்ஸ்வாமிகள்   என் கையில்  கொடுத்தார்.  வாங்கும்போதே தலையைக்குனிஞ்சு பார்த்தவள் அப்படியே ஆடிப்போயிட்டேன்.  அழகான க்ருஷ்ண விக்ரஹம். குழந்தை தொட்டிலில் கிடக்கும் போஸ்! ரெண்டு பேருமாத்  தாலாட்டுங்கோன்னு  ஆக்ஞை!  கோபாலும்  நானுமா  கையில் பிடிச்சுக்கறோம்.  அவ்ளோதான்.... ஏதோ ட்ரான்ஸ்லே போனமாதிரி  இருக்கு!  மனசு மட்டும் விம்முது.  கண்ணீர் பார்வைக்குத் திரை போட....

எப்ப, எப்படி  கருவறை விட்டு வெளியே வந்தேன்?  தாயார் சந்நிதியில்  என்ன பார்த்தேன்?  கருடனுக்குக் கை கூப்பினேனா?  ஒன்னுமே நினைவில் இல்லை.  மனசுலே ஒன்னுமே இல்லை. மூளையிலும்தான்!  இப்ப நினைச்சுப் பார்த்தாலும் சம்பவங்களை ரீகலெக்ட் செஞ்சுக்க முடியலை. கோபாலைத் தொடர்ந்து போய்க்கிட்டே இருக்கேன்.  ரெண்டாம் பிரகாரமோ இல்லை மூணாம் பிரகாரமோ  சுத்தும்போதுதான்   தரையில் பாவி இருக்கும் செங்கல்லில் கால் தட்டி  சுத்தும் முத்தும் பார்க்கிறேன்.

தரையெல்லாம்  களைகளும்  புல்லுமா  முளைச்சுக் கற்களைத் தூக்கி விட்டுருக்கு.  சீக்கிரம் சரி செய்யலைன்னா   பிரகாரம் பாழ்:(  எத்தனை பேர் கோவிலுக்குச் சிரமதானம் பண்ண  ஆர்வமா இருக்காங்க.... அவர்களைக் கேட்டாலாவது களை பிடுங்கி எடுக்க மாட்டார்களா?   பாருங்க, இன்னிக்குப் பகல் ரெண்டரை மணி நேரம் சும்மாத்தானே  வெளியே  உக்கார்ந்திருந்தோம்.  மக்களை மகேசன் சேவைக்குப் பயன்படுத்திக்கத் தெரியலையே:(

 (பழைய குறுக்கு புத்தி துளசி திரும்ப வந்துட்டாள்!!!)

சரி சரி வா. இருட்டுமுன்னே தஞ்சாவூர் போய்ச் சேரலாமுன்னு  கோபால் கிளப்பிக்கிட்டு வந்தார்.  இன்னிக்கு பகல்  திருவாரூரில் இருக்கும்போதே  தஞ்சையில் தங்க நல்ல இடம் எதுன்னு  (வீடு திரும்பல்) மோகன்குமாரிடம் கேளுன்னதால்  அலை பேசினோம்.  அவர்  சில இடங்களை எஸெமெஸ்  செஞ்சுருந்தார்.

குளிச்சு ஃப்ரெஷாயிட்டேனே!!!!

தொடரும்.........:-))))







29 comments:

said...

கோபால் தூங்கற படம்தான் என்னைக் கவர்ந்தது. இதுதான் சுகம்.

said...

மனதைத் தொட்ட செங்கமலம்!

விவரங்களும் படங்களும் மன்னைக்கு அழைப்பு விடுக்கின்றன!

said...

என்ன அழகு... என்ன அழகு...! கோவிலும் செங்கமலமும்...

said...

அஞ்சறிவுன்னு நாம கண்டுபிடிச்சு சொல்லிவெச்சிருக்கும் ஒரு விலங்கு. அதுக்கு அறிவிருந்து ஒரு மனிதக்குழந்தையக் காப்பாத்தியிருக்கு. மனிதன் என்னடான்னா.. நான் அது. நீ இதுன்னு சண்டை போடுறான். என்னடா உலகத்தைப் படைத்தாய் ஆண்டவா!

செங்கலம் மிக அழகு. குழிச்சு நிக்குற படத்துல பாருங்க. முகத்தில் ஒரு குழைவு. ஒரு பெண் குழந்தை குளிச்சி முடிச்சு நிக்கிறதப் பாக்குற மாதிரியே இருக்கு. முருகா, நல்லாருக்கட்டும். நல்லாருக்கட்டும்.

பொதுவாகவே சைவக் கோயில்களை விட வைணவக் கோயில்களில் பராமரிப்பு நன்றாகவே இருக்கிறது. இது மனமார்ந்த பாராட்டு. வாழ்க.

said...

அடக் கண்ணே செங்கமலம்.
துளசி எத்தனை படங்கள் எடுத்திருக்கிறீர்கள். மிக மிக நன்றி.
//திருமங்கலத்துலே இருந்து மதுரைக்குப் போகும்போது தொலைதூரப்பயணமுன்னு (only 25 KM!!!)ரயில் கூஜாவில் தண்ணி நிரப்பிக்கிட்டுப் போவோமுன்னா பாருங்களேன்!!! வெறும் பஸ் பயணம்தானே அப்பெல்லாம்.//

:))))))))))))))))))))))))))))))))))))
இது நாங்களும் செய்ததுதான். கூஜா தூக்கிய கையில் இப்ப அக்வாஃபீனா!!!!
கோபுரமும் ,ராஜகோபாலனும் அழகோ அழகு.
அனந்தசயனம் கோபால் நல்லாவே தூங்கறார்.நீங்க காலடியில் உட்கார்ந்திருந்தால் நான் படம் எடுத்துப் போட்டு இருப்பேன்.
மஹாலக்ஷ்மி ரங்கநாதர்னு தலைப்பு.
சுகமா இருக்கு துளசி உங்களோட பயணம் வருவது.

said...

ஹைய்யோ.. பிரம்மாண்டமா கம்பீரமா நிக்கும் கோபுரம் அசத்துது..

செங்கமலமும் ரொம்ப அழகாருக்கா.

என்னத்துக்குப் பஞ்சு மெத்தை, தலாணியெல்லாம் வேணும்?.. கல் திண்ணையில் இப்படி உறங்குறதுக்கு ஈடாகுமா அதெல்லாம்?????

said...

படங்கள், தகவல்கள் அனைத்தும் அற்புதம்.பாபு & செங்கமலம் பற்றிய தகவல் சிலிர்க்க வைத்தது.

அடுத்து ஒப்பில்லா அப்பனா?
சென்ற மாதம்தான் தஞ்சாவூருக்கு சென்று வந்தோம், நாதன் கோவில், மண்டங்குடி, புள்ளம்பூதங்குடி,திரு ஆதனூர்,நாச்சியார் கோவில், உப்பிலிஅப்பன்,திருச்சேறை என்று பல கோவில்களில் மிகவும் அற்புதமாக சேவை கிடைத்தது.

அடுத்த பதிவை படிக்க காத்திருக்கிறேன்.

said...

ஒரு ட்ரே மாதிரி இருந்ததை எடுத்துப் பட்டர்ஸ்வாமிகள் என் கையில் கொடுத்தார். வாங்கும்போதே தலையைக்குனிஞ்சு பார்த்தவள் அப்படியே ஆடிப்போயிட்டேன். அழகான க்ருஷ்ண விக்ரஹம். குழந்தை தொட்டிலில் கிடக்கும் போஸ்! ரெண்டு பேருமாத் தாலாட்டுங்கோன்னு ஆக்ஞை! கோபாலும் நானுமா கையில் பிடிச்சுக்கறோம். அவ்ளோதான்.... ஏதோ ட்ரான்ஸ்லே போனமாதிரி இருக்கு! மனசு மட்டும் விம்முது. கண்ணீர் பார்வைக்குத் திரை போட....//

கிருஷ்ண குழந்தையை கையில் கொடுத்து நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் நடக்கும் என்று கொடுப்பார். ஆனால் குழந்தை கையில் இருக்கும் போது ஒன்றும் கேட்க தோன்றாது.
நான்கு வருடம் (கயல் பெரியப்பா அந்த ஊரில் இருந்த போது அங்கு போனதால் ) ஜனவரி 1ம் தேதி ராஜகோபாலன் தரிசனம் கிடைத்தது.

செங்கமலம், பாபு கதை மனதை நெகிழவைத்தது.

said...

ராஜகோபாலனும் , குழந்தை கிருஷ்ணனும் ,செங்கமலமும் நினைத்தாலே இனிக்கிறது ..


http://jaghamani.blogspot.com/2012/08/blog-post_8.html

மதிலழகு மன்னார்குடி

said...

செங்கமலம் cho chuweet !!!!!!
21/2 மணிநேரம் பொழுது செங்கமலத்தொடு போனதில் எங்களுக்கும் செங்கமலத்தொடு விளையாடினாற்போல் ஒரு சந்தோசம் .
ராஜகோபாலன் அழகோ அழகு !!
ரொம்ப நல்லா விவரிச்சு இருக்கீங்க . நானும் ஒவ்வொரு கோவிலுக்கும் போயிட்டு வந்தாப்ல ஒரு திருப்தி. நன்றி பகிர்வுக்கு .
ப்ரெஷ் ஆயிட்டு அப்புறம்...... ஆவலுடன் காத்திருக்கிறோம்

said...

செங்கமலம் பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தது :-)

"சசிகலா மேடம் கோவிலுக்குக் கொடுத்தாங்கன்னார்!"

இவங்களுக்கு எல்லாம் ஏன் யானை மீது பற்று அதிகமாக இருக்கிறது என்று புரியவில்லை.. ஜெ யானைக்கு கேம்ப் நடத்துகிறார்.. நீர் யானைக்கு ஸ்பெஷல் கவனிப்பு என்கிறார்..

எப்படியோ இவங்க ஆர்வத்துல யானை இனம் எல்லாம் நன்றாக இருந்தால் சரி! :-)

said...

இந்த மாலை 4.30 மணி திறப்பு நேரம் என்பது வெளியில் இருந்து செல்பவர்களுக்கு நிறைய நேரமிழப்பு.

said...

மன்னார்குடி ராஜகோபாலன் தர்சனம் மனதுக்கு இதமளித்தது.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

முதுகு பிரச்சனை இல்லைன்னா எங்கே கிடந்தாலும் சுகமே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆஹா....நீங்க போகும்போது 'பாபு' பெயரை விசாரிச்சுக்கணும் கேட்டோ!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அழகை அழகுன்னுதான் சொல்லணும்:-))))

said...

வாங்க ஜிரா.

குழந்தை குளிச்சு முடிச்சுப் பளிச்ன்னு நிக்கறாளே!!!!

சைவ வைணவப் பாகுபாடு கோவில் அழிப்புலே இல்லை:(

பணம் கொட்டும் கோவிலுன்னா கவனிப்பு இருக்குமோ என்னவோ?

கோவில் சொத்தைக் கொள்ளையடிக்காம இருந்தால் எல்லாக் கோவில்களுமே நல்லா பராமரிக்கப்பட்டுருக்கும்! அதான் கல்லுன்னுட்டாங்களே அது வந்து சண்டை போடப்போகுதான்னு .... நினைப்பு போல:(

said...

வாங்க வல்லி.

அன்னிக்கு அங்கே எடுத்த படங்களில் 102 செங்கமலம்தான் :-)

ரங்கநாதருக்கு பாம்புன்னாலே பயமாச்சேப்பா:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

பதிவர் இல்லைன்னா படுத்தவுடன் தூக்கம்தான்:-))))

said...

வாங்க ரமாரவி.

ஒப்பிலியை இந்தமுறை தரிசிக்கலை. நாலு வருசம்முந்தி நவகிரகக்கோவில் விஸிட்டுலே கண்டுக்கிட்டதுதான்.

சுவாமிமலை ஆனந்தத்தில் தங்கியதே ஒரு ஆனந்தம்தான்:-)

said...

வாங்க கோமதி அரசு.

//கிருஷ்ண குழந்தையை கையில் கொடுத்து நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் நடக்கும் என்று கொடுப்பார். ஆனால் குழந்தை கையில் இருக்கும் போது ஒன்றும் கேட்க தோன்றாது.''

ஹைய்யோ.... சத்தியமான உண்மை நீங்க சொன்னது!

பிரமிப்புலே நிப்போம்!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அடடா.... உங்க பதிவில் படங்கள் எல்லாம் கண்ணில் ஒத்திக்கறது மாதிரி துல்லியமா இருக்கு!

அனுபவிச்சு ரசிச்சு வாசித்தேன்.

தலைப்பு சூப்பர்!

said...

வாங்க சசி கலா (மேடம்!)

உங்களை அப்போ எனக்குத் தெரியாதுப்பா. இல்லைன்னா உங்களையும் நினைச்சுக்கிட்டு இருந்துருப்பேன் கேட்டோ:-)

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க டாக்டர் புருஷோத்தமன்.

வணக்கம்.

முதல் வருகைக்கு நன்றி.

தொடர்ந்து வாசிப்பீர்கள்தானே?

said...

வாங்க கிரி.

புள்ளையார்தான் யானை என்ற அன்பாலும் நம்பிக்கையாலும் இருக்கலாம்.

ஆனால் என்னுடைய சொந்தக் கருத்து...

யானையை யானையா தன்னிச்சையா இருக்கவிடணும். எப்பேர்ப்பட்ட ஜீவன். அதை தனியா ஒற்றைப்படுத்தி வளர்ப்பதுகூட அநியாயமுன்னு தோணுது. பேச்சுத் துணைக்காவது அதுக்கொரு ஜோடி அதே இனத்துலே வேணும்தானே? எத்தனை நாளுக்கு மனுசப்பயல்களோடு போரடிச்சுக்கிட்டு இருக்கும்?

said...

வாங்க குமார்.

பகல் நேரம் சுற்றுலாவில் நாலரை மணி
உண்மையில் வீணாகுது.

கோவிலை காலை முதல் இரவு 9 வரைதொடர்ந்து திறந்து வச்சால் நல்லாத்தான் இருக்கும்.

பூஜாரிக்கு ரெஸ்ட் வேணுமுன்னா ஷிஃப்ட் போட்டுக்கலாம்.

ஆனால்...எல்லாத்துக்கும் ஆகம விதி ஒன்னு இருக்கும்போல இருக்கே!

அந்தக் காலத்தில் பகல்நேரம் எல்லோரும் நிலத்தில் இறங்கி உழைச்சுட்டு மாலையில்தான் கோவிலுக்கு வருவாங்க,இல்லே?

said...

வாங்க மாதேவி.

ராஜகோபால் அழகுப்பா!!!

said...

:))))))))

said...

மன்னையின் அழகைப் பற்றி நம்ம ஆர்.வீ.எஸ் பதிவுல படிச்சதுல இருந்தே போகணும்னு நினைத்துக் கொண்டிருந்தேன். இப்ப உங்க படங்கள் மேலும் என்னை கவர்ந்து விட்டது டீச்சர்.

செங்கமலம் கதை மனதை நெகிழ வைத்து விட்டது.