Monday, September 05, 2011

புதுசா ஒரு சொல்லைக் கத்துக்கிட்டோமுன்னு பெருமைப்படலாமா? Christchurch Earthquake 3

1918 வது ஆண்டு முதல்முதலில் இந்தச் சொல்லைப் பயன்படுத்துனாங்களாம். சரித்திரத்தில் இடம்பிடிச்ச இந்த லிக்யூஃபிகேஷன்'' என்ற சொல்லுக்கு என்ன விளக்கமுன்னு நேரிடையா டெமோ கொடுத்துருச்சு இந்த நிலநடுக்கம். ஊரின் பல பகுதிகளில் பயங்கரமா ஒரு துர்நாத்தம். அழுக்குத்தண்ணி திடீர்ன்னு நிலத்துக்குள்ளே இருந்து பீய்ச்சி அடிக்குது. தண்ணீர் வழிஞ்சு ஓடும்போது மண்ணும், கூடவே மனிதக் கழிவுகளுமா சேர்ந்து வந்தா மணக்கவா செய்யும்?

நிலநடுக்கத்தில் பூமிக்கடியில் உண்டான அழுத்தத்தினால் நிலத்தடி நீர் படுவேகமா நிலத்தைத் துளைச்சுக்கிட்டு பீறிடும் சமயம் தெருக்களில் வீடுகளில் உள்ள குடிநீர் பைப்லைன், சாக்கடைக் கழிவுக்காக போடப்பட்டுள்ள பெரும் குழாய்கள் எல்லாத்தையும் உடைச்சுக்கிட்டு வெளிவந்து கலீஜாப் பண்ணி இருக்கு. அங்குள்ள நிலங்களும் புதைமணல் ரேஞ்சுலே பலமில்லாம தன்மீது நிற்கும் வீடுகளை, கட்டிடங்களை அப்படியே பூமிக்குள்ளே இறக்கிக்கிட்டு மெள்ளப் புதைய ஆரம்பிச்சது.

குடிதண்ணீரில் கழிவுகள் கலந்து நோய் வரும் ஆபத்து ஒரு பக்கம், மக்களின் இயற்கைக்கடன் கழிக்க வீட்டுலே இருக்கும் கழிவறைகளைப் பயன்படுத்த முடியாமப்போவதால் அதுக்கான மாற்று ஏற்பாடு ஒரு பக்கமுன்னு..... அல்லாடவேண்டியதாப் போச்சு. நாலைஞ்சு வீட்டுக்கு ஒன்னுன்னு போர்ட்டபிள் (கெமிக்கல்)டாய்லட்டுகளைக் கொண்டுவந்து தெருக்களில் அங்கங்கே வச்சுக்கிட்டே போனாங்க. கொஞ்சம் காய்ஞ்சுபோன லிக்யூஃபேக்ஷன் மணல், வீட்டைச்சுத்தி இருப்பதைப் பார்த்தால் என்னவோ பீச்லே வீடு கட்டினமாதிரி இருக்கு:(
வீடு இடிஞ்சு விழுந்தா அதை நிரவிட்டு இன்னொரு வீடு அங்கே கட்டிக்கலாமுன்னாலும் வீடுகட்டும் நிலம் ஸ்ட்ராங்கா இல்லாம இப்படி புதைமணலா இருந்தால் என்னன்னு கட்டுவது? சிட்டிக் கவுன்ஸில் ( இதுதான் இங்கெல்லாம் நம்மூர் மாநில அரசுமாதிரி செயல்படும்) கலர் திட்டம் கொண்டு வந்துச்சு. சிகப்பு ஆரஞ்சு பச்சை வெள்ளை. நிலம் உறுதியா இல்லாத வீடுகள் சிகப்பு, நிலம் உறுதியா இருந்து இடிஞ்சு போன அல்லது இடியப்போகும் வீடுகள் ஆரஞ்சுன்னு இப்போதைக்கு வச்சுக்கிட்டாலும் இன்னொரு முறை நிபுணர்களை வச்சுப் பரிசோதிச்சு முடிவு செய்யணும். நிலமும் உறுதி, வீடுகளும் சின்னச்சின்ன பழுது (நம்ம வீடு மாதிரி) ப்ளாஸ்டரில் வீறல் வெடிப்பு அங்கங்கே ஆனால் மனித உயிருக்கு ஆபத்தா பொட்டுன்னு இடிஞ்சுறாமல் தாக்குப்பிடிச்சு நிக்கும் வீடுகள் பச்சை. இது எதுவும் இல்லாம ஒன்னும் ஆகாம நல்லபடியா இருக்கும் வெறும் நிலங்களும், துறைமுகத்துக்கு எதிரில் இருக்கும் போர்ட் ஹில்ஸ் ஏரியாக்களும் இப்போதைக்கு வெள்ளை.

இந்தக் கணக்குலே முதலில் அஞ்சாயிரம் வீடுகள் போயே போச் என்ற சிகப்பு. இவுங்களோட வீடுகள் இருக்கும் நிலங்களை மட்டும் Crown ( இன்னும் நாங்க மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் ராணியின் குடிகள்தானாக்கும்) அரசாங்கம் வரி வசூலுக்காக நிர்ணயம் செய்திருந்த விலையை ( 2007 வருச மதிப்பீடு. இங்கே நியூஸியில் நாலு வருசத்துக்கொரு தடவை மதிப்பீடு செய்வாங்க. புதுசு இந்த வருசம் வரவேண்டியது நிலநடுக்கக்குழப்பத்தால் நின்னு போயிருக்கு) கொடுப்பாங்க, கட்டிடத்துக்கும் வீட்டுச்சாமான்களுக்கும் காப்பீடு செஞ்சுருந்தால் அவுங்க இன்ஷூரன்ஸ் கம்பெனி அதைக் கொடுக்குமுன்னு பேச்சு. இன்றையக் கணக்கில் சிகப்பு பகுதியில் இன்னும் அஞ்சாயிரம் வீடுகள் கூடுதலாகி மொத்தம் பத்தாயிரம் வீடுகள் அழிஞ்சது. நகரின் கிழக்கு & வடகிழக்குப் பகுதிகளில்தான் சேதம் கூடுதல்.

இன்ஷூரன்ஸ் கொஞ்சமா எடுத்திருந்தாலோ இல்லை எடுக்காம விட்டிருந்தாலோ கதை கந்தல்:(

பட்டகாலிலே படும் என்ற மாதிரி நம்மூர் ஸ்டேடியத்திலும் இந்த லிக்யூஃபேக்ஷன் வந்துருச்சு. ஸ்டாண்ட் எல்லாம் அங்கங்கே இடிஞ்சு விழ ஆரம்பிச்சது. இந்த வருசத்து ரக்பி உலகக்கோப்பைப் பந்தயம் நடக்கப்போற இடம் இது. இந்த விளையாட்டரங்கத்தை இந்தியா இங்கே வந்து போட்டியில் கலந்துக்கும் க்ரிக்கெட் மேட்ச் சமயம் நீங்க தொலைக்காட்சியில் பார்த்திருப்பீங்க. ஏ எம் ஐ ஸ்டேடியம். பந்தயம் நடப்பதால் உள்ளூர் வியாபாரம் கொழிக்கப்போகுது. நல்ல வருமானமுன்னு நாலு வருசமாக் கண்ட கனவு அம்பேல்:(
ஆட அரங்கமும் இல்லை, வர்றவங்க தங்க இடமும் இல்லைன்னு ஆச்சு நிலமை! உலகக்கோப்பைப் போட்டி இடம் மாறி இன்னும் நாலைஞ்சு நாளில் ( செப்டம்பர் 9, 2011) ஆக்லாந்து நகரில் நடைபெறப்போகுது. என்ன செய்யறது? கொடுப்பனை இல்லை நமக்குன்னு நினைச்சுக்கணும். குறைஞ்சபட்சம் நியூஸி ஆல் ப்ளாக்ஸ் ஜெயிக்கட்டும்.

என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்......... ஆங்..... கலர் ஸ்கீம். ஆரஞ்சுப் பகுதியிலே பத்தாயிரம் வீடுகள்ன்னு கணக்கு. பச்சையில் ஒரு லட்சம் வீடுகள், ரிப்பேர் பண்ணிட்டால் பிரச்சனை இருக்காது. எர்த் க்வேக் கமிஷன் நிறைய எஞ்சிநீயர்களையும் கட்டிடத்தொழிலில் அனுபவப்பட்ட நிபுணர்களையும் வீடுகளைப் பரிசோதிக்க எல்லாப் பேட்டைகளுக்கும் பிரிச்சு அனுப்பிச்சது. ஒவ்வொரு வீடாப்போய்ப் பரிசோதிச்சு அறிக்கை கொடுக்கணும். பெரிய தலைவலிதான் அவுங்களுக்கு:(

நம்ம வீடு எந்த கலர்ப் பகுதியில் இருக்குன்னு மக்கள் மனசு அல்லாடுமே அதனால் ஒரு வலைத்தளம் திறந்து வச்சாங்க. அதுலே நம்ம விலாசம் கொடுத்துத் தேடுனா அது நம்ம நிறம் என்னன்னு சொல்லும்.

வீடு பழுது பார்த்து முடிக்கும்வரை அந்தந்தக் குடும்பங்களை நல்லா இருக்கும் காலி வீடுகளில் குடிவைக்கலாமுன்னு திட்டம். வீடுகளைப் பூட்டிக்கிட்டு வெளியூரில் இருக்கும் மக்களைத் தொடர்பு கொண்டு வீடிழந்த மக்களுக்கு உங்க வீட்டை வாடகைக்குக் கொடுங்க. வாடகையை அரசு தருமுன்னு சொல்லுச்சு. (நம்ம வீட்டில் கூட ஒரு குடும்பம் நாலு மாசம் தங்கிட்டுப் போனாங்க) எல்லாருக்கும் வீடு பார்த்துக் கொடுக்க முடியுமா? போதுமான வீடுகள் கிடைக்கணுமுல்லே? நிறைய குடும்பங்களை மோட்டலில் மாசக் கணக்கில் தங்க வச்சாங்க. மோட்டலுக்கான வாடகையை அரசு கொடுத்துச்சு.
நம்மூர்லே போர்ட் ஹில்ஸ்ன்னு சொன்னேன் பாருங்க அந்தப் பகுதியில் இருந்து தென்கிழக்காப்போகும் சில குன்றுகளில் 'மால்தாரி'கள் வீடு கட்டிக்கிட்டு போயிருந்தாங்க. காஷ்மீர்ன்னு கூட ஒரு குன்றுக்குப் பெயர் இருக்கு. நகரில் மெட்ராஸ் தெரு இருக்குன்னா பாருங்க. கதீட்ரல் இருக்கும் நகர மையம் கொழும்புத்தெரு. பிரிட்டிஷ் காலனிகளில் இருக்கும் பெயர்கள் எல்லாம் இங்கே வந்துருந்தது. மில்லியன் டாலர் வியூன்னு விளம்பரம் பண்ணுவாங்க அந்தக் குன்றின் மேல் உள்ள வீடுகள் விற்பனைக்கு வரும்போது. வீட்டுலே இருந்து பார்த்தால் கடல்! எனக்கோ கடலுன்னா ஒரு தனி ஆசை. கடலைப் பார்த்துக்கிட்டே காஃபி குடிப்பதுதான் வாழ்க்கைன்னு நினைப்பேன். ஒரு சமயம் நாம் கூட அந்த ஏரியாவில் வீடு தேடினோம். ஆனால் வீட்டுக்குப் போகும் பாதை வளைஞ்சு வளைஞ்சு போகும் ஏற்றம் என்பதால் வாங்கும் எண்ணம் வரலை. எனெக்கென்னமோ ஏற்றத்தில் போகும்போது வண்டி ப்ரேக் பிடிக்கலைன்னா.... ............ இப்படி ஒரு அல்ப பயம்:(
காஷ்மீர்
மில்லியன் டாலர் வ்யூ உள்ள மலைமுகடு வீடுகளில்சில'


கூடுதல் கவர்ச்சியா குன்றின் ஓரத்துலே கட்டி இருந்த வீடுகள் எல்லாம் மண் சரிய ஆரம்பிச்சதும் அபாயக் கட்டத்தை எட்டுச்சு. எல்லோரையும் அள்ளிக்கிட்டுப்போய் மோட்டல்களில் தங்க வச்சாங்க. நாம் சிங்கையில் பார்த்தோமுன்னு சொன்ன குடும்பமும் இதில் ஒன்னு.. சரிஞ்சு விழும் கல்லும் மண்ணும் இடிஞ்சு விழும் வீடுகளும் சாலையில் விழுந்து போறவர்ற வண்டிகள் விபத்துக்குள்ளாகி இன்னும் பல உயிர்கள் போகணுமா? சாலையை ஒட்டி ரெண்டு கண்டெய்னர்களை ஒன்னுமேலே ஒன்னு வச்சு மதில் சுவரை அமைச்சாங்க. தெறிச்சு விழும் கல் இந்தப் பக்கம் வராதுல்லே? கண்டெய்னர்களுக்கு இப்படி ஒரு பயன் இருக்குன்னு போனவாரம் அந்தப் பக்கமொரு விஸிட் அடிச்சப்பப் பார்த்தேன். இடிஞ்சு விழுந்த கற்கள் இல்லாம மேலும் இடியாமல் இருக்க சின்ன சைஸ் கண்டெயினர்களை அண்டக் கொடுத்து வச்சுருக்கறதைப்பாருங்க!

வீட்டுலே இருக்கும் வளர்ப்பு மிருகங்கள்தான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் போச்சு. நாய்ன்னா கையோடு கூட்டிக்கிட்டுப் போகலாம். இல்லைன்னா தெரிஞ்சவுங்க, சொந்தக்காரங்க வீட்டிலே கொண்டுபோய் கொஞ்ச நாள் வச்சுக்கச் சொல்லலாம். பூனைகள் பாடுதான் சிரமம். அதுகள் உலகம் தனி. ஆபத்துன்னதும் எங்கியாவது ஓடிப்போய் ஒளிஞ்சுக்கும். அதைத் தேடிக் கண்டு பிடிக்கலாமுன்னா....அபாய ஏரியாவில் யாரையுமே உள்ளே விடலையே:( உள்ளூர் நாய் பூனை ஹாஸ்டல்கள் எல்லாம் நிறைஞ்சுப்போய் இடமில்லை. SPCA நிறைய மிருகங்களைத் தாற்காலிகமா வச்சுப் பார்த்துச்சு. ஓனரைத் தேடி அனாதையாத் திரிஞ்சச் செல்லங்களைப் பார்த்த வேற ஏரியா மக்களும் சாப்பாடு கொடுத்துக் கருணையோடு பார்த்துக்கிட்டாங்க. ஆனாலும் நிறைய பூனைகள் இடிபாட்டை விட்டகலாமல் சாப்பாடில்லாமல் செத்துச்சுன்னு சேதி:( மனசுக்கு பேஜாராப்போயிருச்சு எனக்கு.
அப்போ


இப்போ

கடற்கரைப்பக்கம் இந்தப் பகுதிக்கே லேண்ட் மார்க்கா இருக்கும் Shag Rocks ஷேக் ஆகி உடைஞ்சுருச்சுன்னா பாருங்க எப்படி ஆடி இருக்கணும்! பாவம் அதன் மேலே கூடு கட்டி இருந்த Shag பறவைகளும் வீட்டை காவு கொடுத்துருச்சு:( அந்தப்பக்கம் தான் நம்ம பே வாட்ச் புள்ளையார் இருக்கார். அவருக்கு என்ன ஆச்சோன்னு போனால் சுத்திவர இடிபாடுகளுக்கிடையில் ஒளிஞ்சு உக்கார்ந்துருக்கார். 'உமக்கு ஆயுசு கெட்டி'ன்னேன்.
புள்ளையார் அப்போ

புள்ளையார் இப்போ

தொடரும்..............:(


20 comments:

said...

ரொம்ப திகிலா இருக்கு ...
வீடுகளுக்கு நிறங்கள் நல்ல ஐடியா..

ஒவ்வொரு விசயமும் துல்லியமா கவனிச்சு முன்ன பின்னன்னு ..அதும் பிள்ளையார் இப்ப அப்ப..ம்.

said...

இயற்கையின் கோர தாண்டவம்.

நியூசி அரசாங்கம் நல்ல முறையில் மக்களுக்கு தேவையானதை செய்து கொடுத்திருப்பது நீங்க எழுதியிருப்பதிலிருந்து புரிகிறது.
சீக்கிரமாக நிலமை சீர்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்.

said...

மிகவும் திகில் தரும் விஷயங்கள்.... அப்பா எத்தனை அழிவுகள்.. மக்களுக்கு அரசு தரும் பாதுகாப்புகள்... என்று எத்தனை விஷயங்கள்....

மனசு கனக்கிறது ஒவ்வொரு விஷயத்தினையும் படிக்கும்போதும்....

said...

திகிலான காட்சிகள் கண்முன்னே!

said...

அற்புதமான டாகுமெண்டரி...

said...

சில சம்பவங்களை சும்மா ஒரு வரியில் படிச்சுட்டுப் போயிடறோம். ஆனா, அதுக்குப் பின்னே இருக்கும் மக்களின் துயரங்கள், நிலைமை சீர்படுற வரைக்கும் அனுபவிக்கும் கஷ்டங்கள் இதெல்லாம் அனுபவிச்ச அவங்களுக்குத்தான் தெரியும்.. ரொம்ப பயங்கரமா இருக்குக்கா.

இப்படியொரு சம்பவம் இனி ஏற்படக் கூடாதுன்னும், நிலைமை சீராகணும்ன்னும் நானும் பிரார்த்திக்கிறேன்.

said...

மனதை கலங்க வைக்குது.நிலமை சீராக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

said...

வாங்க கயலு.

நல்ல காலம்......வீடுகளுக்கு நிறங்கள் அடிக்கலை! பகுதிகளை நிறங்களாப் பகுத்து வச்சுருக்காங்கப்பா.

உண்மையில் நடந்தவைகளை ஆவணப்படுத்துவதில் துல்லியம் வேணுமே! என்ன இருந்தாலும் சரித்திர டீச்சர் இல்லையோ:-)

said...

வாங்க ராம்வி.

நான் உணர்ந்தவரையில் அரசு நல்லமுறையில்தான் மக்களுக்கு உதவுகிறது.

பிரார்த்தனைக்கு நன்றிகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இதெல்லாமும்கூட ஒரு அனுபவப்பாடம்தான். ஆபத்தில் எப்படிச் செயல்படவேணுமுன்னு தெரிஞ்சுக்கறோம்.

அரசு என்பது மக்கள் நலனுக்காகத்தானே? அதைப் புரிஞ்சுக்கிட்ட நாடுகளில் இது ஒன்னு.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

மீண்டுவர முயற்சிகள் வேகமா நடக்குது என்பது ஆறுதல்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க சாணக்கியன்.

சம்பவங்களை ஆவணப்படுத்தும் சிறிய முயற்சி இது. (அப்படியே நம்ம 'சிறு முயற்சி' கயலுக்குக் கொடுத்த பதிலையும் பாருங்க)

வருகைக்கு நன்றி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பிரார்த்தனைக்கு நன்றிகள். கஜமுகனை எங்களுக்காக வேண்டிக்குங்க சீனக்கொழுக்கட்டையுடன்:-)

துன்பத்தை மனசில் சுமக்கும் மக்களை உற்சாகப்படுத்த நகரத்தந்தை இடைவிடா முயற்சிகள் செய்யறார். விரைவில் (?) எல்லாம் சீரடையும் என்ற நம்பிக்கையில் வாழ்கின்றோம்.

said...

வாங்க கோவை2தில்லி.

புரிதலுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நகரமக்கள் சார்பில் என் நன்றிகள்.

said...

இயற்கைக்கு இவ்வளவு கோபம் வந்தால் தான் மக்கள் உணருவார்களோ.

கலக்கம் தரும் காட்சிகள்.
மீண்டு சீக்கிரம் நிலைமை சரியாகணும்.

said...

வாங்க வல்லி.

பயணம் நல்லபடி முடிஞ்சு தேர் நிலைக்கு வந்தச்சா?;-))))

தான் இருப்பதை அப்பப்ப 'ஆடி'க் காமிக்குதே இந்த இயற்கை!

நிலமை ஓரளவுக்குச் சரியாச்சு. சின்ன ஆட்டங்களைப் பொருட்படுத்தாமல் அதனூடேயே தினப்படி வேலைகளைச் செய்ய மக்கள் பழகியாச்சு.

said...

நான் எப்போதும் ஆச்சரியப்படுவது மேலை நாடுகளில் மக்களின் அடிப்படை வாழ்க்கையில் செலுத்தும் அக்கறை. படத்தில் உள்ளது போல பெரிய கற்கள் சாலைக்கு வரக்கூடாது என்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையாகட்டும், அவசர கால நடவடிக்கையாகட்டும், விலைவாசி உயர்வுகள் ஒரு அரசு ஆணை மூலம் கட்டுக்குள் கொண்டு வருவது போன்ற பல விசயங்கள் எப்போது இந்தியாவுக்கு சாத்தியமாகும். இந்த கட்டுரை உங்க வழக்கமாக நடையில் இருந்து சற்று வித்யாசமாக இருந்தது. எனக்கு பிடித்துருந்தது.

said...

வாங்க ஜோதிஜி.

அரசு என்பதே மக்கள் நலனுக்காகத்தானே? அதைப்புரிஞ்சுக்கிட்டதால்தான் ஓரளவு எல்லாமே நியாயப்படி நடக்குது இங்கே.

அதே போல மக்களின் பிரதிநிதிகளா தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அரசாங்க வேலையாட்களே. நாந்தான் எல்லாமுன்னு தனியா மணிமுடி சூட்டிக்க முடியாது.

மேலும் எல்லாச் செயல்களும் வெளிப்படை. ஒளிச்சு வச்சால்தானே வம்பு.

போனவாரத்துலே இருந்து ஒரு பார்லிமெண்ட் ஆளுங்கட்சி அங்கத்தினர் (நம்மூர் ராஜ்ய சபா போல கட்சி தேர்ந்தெடுக்கும் அங்கம்) மேலே ஒரு புகார். அவர் வண்டி ஓட்டிக்கிட்டுச் சாலையில் போகும்போது எந்த லேன்லே மாரப்போறாருன்னு இண்டிகேட்டர் போடாம சட்னு லேன் மாத்தி அந்த லேனில் போய்க்கிட்டு இருந்த இன்னொரு வண்டிக்கு விபத்தை ஏற்படுத்தும்விதமா நடந்துக்கிட்டார். அந்த இன்னொரு வண்டியை ஓட்டிவந்த பெண்மணி யார் இது இப்படி ஆபத்தா வண்டி ஓட்டுவதுன்னு பார்த்தால் அவர் விரல் காமிச்சாராம்.( இங்கே இது ஒரு ஆபாசமான அருவருப்பான செயல்) அந்தம்மா பிரதமருக்கும் உள்ளூர் பத்திரிகை, காவல்துறை எல்லோருக்கும் கடிதம் எழுதிட்டாங்க. முழு விவரம் இந்தச் சுட்டிகளில் இருக்கு பாருங்க.

நம்மூர்லேன்னா.... ஒரு கார்பரேஷன் கவுன்ஸிலர் மேலே புகார் கொடுக்க முடியுங்கறீங்க?


http://nz.news.yahoo.com/a/-/mp/10212066/national-mp-in-road-rage-rant/

http://nz.news.yahoo.com/a/-/top-stories/10214608/henare-argues-road-rage-rant/

said...

கண்டெயினர்களும் காக்கும் தெய்வங்களாக மாறிவிட்டன.

said...

வாங்க மாதேவி.

ஆமாம்ப்பா. சரியாச் சொன்னீங்க! இப்படி ஒரு பயன் இதுக்கு இருக்குன்னே இப்பத்தான் தெரியுது!