Monday, September 19, 2011

பல்பு வாங்கினோம்:-)))))

மொட்டையா நின்னதுகளைப் பார்த்ததும் ரத்தக்கண்ணீர்.....' ச்சே...திருப்பித் திருப்பிக் கண்ணே வருது பாருங்க எதை எழுதுனாலும்...... பாலுள்ளது அவ்ளோ சீக்கிரம் சாகாதாமே...ஆனாலும் அதையும் சாகடிச்ச இளகிய மனசுகளை என்னன்னு சொல்றது:(

கொஞ்சமா ஒரு அரைக் கப் தண்ணி வாரம் ஒருக்கா ஊத்துனாலும் போதுமுன்னதுக்குப் பூம்பூம் மாடுபோலத் தலையை ஆட்டிக்கிட்டு 'எங்களுக்கு இதெல்லாம் வளர்க்கறது உயிர். நல்லாப் பார்த்துக்கறோமு'ன்னு கையில் அடிக்காமச் சத்தியம் செஞ்சது ரெண்டு ப்ளஸ் அஞ்சுன்னு ஏழுபேர் உள்ள குடும்பம். நான் மறக்காம அவுங்க ஈமெயில் ஐடி வாங்கி வச்சுக்கிட்டு ஊரில் இருந்து என்ன ஏதுன்னு விசாரிச்சு மெயில் அனுப்பினா..... கப்சுப்.
அப்பவே எனக்குப் புரிஞ்சுருக்கணும். மரமண்டையா இருந்துட்டேன்.
வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும் கண் நேரா ,கன்ஸர்வேட்டரிக்குப் போச்சு. எல்லாம் குச்சிக்குச்சியா மொட்டை மரமா(?) நிக்குது. துக்கத்தோடு அடுக்களைப்பக்கம் இருக்கும் காக்டெஸ் கன்ஸர்வேட்டரிக்குள்ளே எட்டிப்பார்த்தால் .... அடப்பாவிகளா.........கள்ளிவதம் நடத்திட்டீங்களே:(

சிந்தின (ரப்பர்) பாலை நினைச்சு அழுது பயனில்லை! மனசுக்கு அமைதி வேணுமுன்னு ஒரு 'அமைதி லில்லி' வாங்கிவந்து வச்சேன். இனி முதலில் இருந்து ஆரம்பிக்கத்தான் வேணும். கொஞ்சம் வெய்யில் வரட்டுமுன்னு காத்திருந்து செப்டம்பர் மாதம்......செப்டம்பர் மாதம்.... வசந்தகாலம் வந்துச்சு. எல்லாத் தொட்டிகளின் பாட்டிங் மிக்ஸையும் கிளறி எடுத்துக் கடாசி ( இதுக்கு 95 டாலர் டம்ப் கூலி) செடிச்சட்டிகளைக் கழுவிக் காய வச்சேன். சில தொட்டிகளில் லில்லி பல்புகள் கிடைச்சது. சிலதில் ட்யூலிப் பல்புகள்.


நொந்த மனசுக்கு ஆறுதலா சேதி வந்துச்சு நம்ம மலேசியத் தோழியிடமிருந்து. 'உங்க செடிகள் எல்லாம் அருமையா வளர்ந்துருக்குன்னாங்க. ஏதோ மனக்குரல் சொன்னதைக்கேட்டு அவுங்க வீட்டிலே ஒரு ஏழெட்டுச் செடிகளைக் கொடுத்து வச்சுட்டுப் போனோம். எல்லாமே 'இந்த ஊருக்கு' எக்ஸோட்டிக் ப்ளாண்ட்ஸ். வாழை(மரம்) காஃபி, கருவேப்பிலை, கொய்யா, போகன்வில்லா, சிலபல பெரணி, பனைவகைகள் இப்படி..... வீட்டுக்குள்ளே வைக்கும் வகைகளா இருப்பதால் போதுமான இடமில்லைன்னு மகள்களின் வீடுகளுக்கு சிலவற்றை அனுப்பி இருக்காங்க. அதெல்லாம் அங்கே அருமையா செட்டில் ஆகிருச்சாம். அங்கே போகும்போது எடுத்துக்கிட்டு வரேன்னு சொன்ன தோழிக்கு 'நோ' சொன்னேன். 'எங்கிருந்தாலும் வாழ்க'......... நல்லதுதானே?
அதி முக்கியத்தை அனுப்பலை. அதெல்லாம் பத்திரமா இங்கே இருக்குன்னாங்க. இடம் மாத்த பெரிய வண்டி வேணும். இலைகளும் கிளைகளும் உடையாமல் கொண்டுவரணுமுல்லே? நாளும் ஆளும் கிடைச்சது. வாழை தளதளன்னு பத்துபனிரெண்டு பெரிய இலைகளோடு பலே ஜோர். ஓப்பன் ட்ரக்லேவச்சுக் கொண்டு வந்தப்பக் காத்துலே இலைகள் அலைக்கழிஞ்சு ஒரு ஏழெட்டு மடங்கிப்போச்சு. போகட்டும் உயிர் இருக்கே அது போதும்.
கருவேப்பிலை நெடுநெடுன்னு நிக்குது. கூன்விழாமல் இருக்கக் குச்சிவச்சுக் கட்டினேன். வாழையைத் தொட்டி மாற்றம் செஞ்சு மடங்கியதால் பழுத்த இலைகளை வெட்டிப் புது பாட்டிங் மிக்ஸ் போட்டதில் இப்போ பச்சை புடிச்சுருச்சு. காஃபிச் செடியில் காய்கள். அது பழுக்கட்டும். இனிமேல் நம்ம வீட்டில் 'சொந்தக் கொட்டை'யில்தான் காஃபி கேட்டோ? நாலு இருக்கே:-)))))

மூணே மாசத்தில் பழம் பழுத்தது!  நாலு கொட்டைக்கு  ஒரு காஃபி  வராதா?


கோபாலின் உதவியோடு ஏழெட்டு பாட்டிங் மிக்ஸ்(Potting Mix) சாக்குப் பொதிகளை வாங்கி செடிச்சட்டிகளில் நிறைச்சுட்டேன். நல்ல திறந்தவெளியில் வச்சு பாட்டிங் மிக்ஸ் பொதிகளைத் திறந்து வை. உள்ளூர் ஸ்பகலேமி பீட்ஸாக் கடை ஓனர், தன்வீட்டுத் தோட்டத்துக்கு பாட்டிங் மிக்ஸ் மாத்திய சமயம் விஷவாயு தாக்கி போனவாரம் இறந்துட்டாருன்னு தோழி அதிர்ச்சி சேதி கொடுத்தாங்க. (போன எபிஸோட் கண்பிணிக்கு பாட்டிங் மிக்ஸ்தான் காரணமா இருக்கணுமுன்னு நினைச்சுதான் கோபால் 'ஆடி'னாராம்!) கன்ஸர்வேட்டரியை ஒருமாதிரி சரியாக்கியபின் வெளித்தோட்டத்தைக் கையில் எடுத்தேன். வேலியோரம் இருந்த மல்லியை சம்மர் கிராப் செஞ்சு பொழைச்சுக்கிடந்த ரெண்டு மூணு ரோஜாக்களை ட்ரிம் செஞ்சேன். சண்டே மார்கெட்டில் பாலியந்தஸ்கள், ரானன்குலஸ், லேவண்டர், பான்ஸி கிடைச்சது. இன்னொரு கடையில் மினி டாஃபோடில்ஸ் பெரிய பல்புகளுடன்!
லேவெண்டர்

பாலியந்தஸ்

ரானன்குலஸ் பிங்
ரானன்குலஸ் ஆரஞ்சு


நம்ம தாமரைத்தடாகத்தை, என்னமோ பாத்திரத்தைத் தேய்ச்சுக் கவுத்துனமாதிரி யாரோ(!!) கமர்த்திட்டுப் போயிருந்தாங்க. (அசப்புலே பார்த்தால் எதோ சமாதி போல இருக்கு. பேசாம ஒரு பட்டுத்துணியை அதன்மேல் போர்த்தி ஒரு மஹானின் சமாதின்னும் சொல்லிடலாம் இந்தியாவில் இருந்தோமுன்னா!! நாமும் நாலு காசு பார்த்திருக்கலாம். அமாவாசை பௌர்ணமிகளில் குறியும் சொல்லி இருப்பேன்! எல்லாம் போச்சு!) நாங்க ரெண்டுபேர் முயன்றும் நிமிர்த்த முடியலை. புல்வெட்ட வந்தவர் கை கொடுத்து அதை மீண்டும் தடாகமாக்கினோம். வாட்டர்லில்லி கடையில் சொல்லி வச்சுருந்த தாமரைக்கிழங்கு கிடைச்சது. கையோடு அதையும் நட்டாச்சு.
பான்ஸியும் டாஃபோடிலும் வாசலில்

காக்டெஸ் கன்ஸர்வேட்டரியில் கொஞ்சம் உழைச்சதும் நாலைஞ்சுக்கு உயிர் வந்து இப்பப் பரவாயில்லே. நம்ம ரமண் Bபாபியிடம் கொடுத்து வச்ச ஜெல்லிபீன்ஸ் அட்டகாசமா ஜொலிக்குது. உண்மையில் அவுங்ககிட்டே கொடுத்துவச்சதை மறந்தே போயிருந்தேன். தற்செயலா அவுங்களைச் சந்திக்க ஒரு நாள்போனால் கொண்டுவந்து நீட்டறாங்க!!!! ஹைய்யோ!!!!!
என் உயிரினும் மேலான செடிகளை அன்புடன் கவனிச்சுக்கிட்ட தோழிக்கும் Bபாபிக்கும் என் நன்றி கலந்த வணக்கங்களை இங்கே பதிவு செய்கிறேன்.


இப்போதைக்குக் காட்சிக்குச் சுமாரா இருக்கு தோட்டம். தொட்டடுத்துள்ள வேலி வழியா எட்டிப்பார்க்கும் கமீலியா ரோடோடோண்ட்ரன் வகைகள் பூத்துக்குலுங்குவதால் நமக்கு(ம்) நன்மை!

பறவைகள் இல்லாத தோட்டம் பாழ்! அவர்களுக்கான நீச்சல்குளத்தைச் சுத்தம் செஞ்சு தண்ணிர் நிரப்பி, தோட்டத்தில் ரொட்டித்துண்டுகளை இறைச்சதும் களபிளா களபிளா ஆரம்பிச்சது. புதுசா சில்வர் ஐ கூட குளிக்க வருது.
இன்னும் சில க்ளாடியோலஸ் பல்புகள் வாங்கிக்கணும். கிடைக்குதான்னு கண் நட்டு இருக்கேன்.

பூக்களைப் பார்த்து நாலு 'வாக்கு சொல்லுங்க. நன்றி.

22 comments:

சாந்தி மாரியப்பன் said...

வாங்கின பல்புகளை நட்டு வையுங்க. இன்னும் நிறைய பல்புகளை அறுவடை செஞ்சுடலாம் :-))

உங்க வாழை மரத்துலேர்ந்து பழம் பறிச்சுத்தரேன்னு வாக்கு கொடுத்திருக்கீங்க. ச்சும்மா,.. ஞாபகப்படுத்தினேன் ;-)

உங்க பதிவுப்பக்கம் வந்தா, ஓடியோடி வாசிக்கிறது தோட்டங்கலையும், ஜிகேயையும்தான். ரொம்ப நாளுக்கப்புறம் தோட்டத்தை இப்டி பார்த்ததும் பகீர்ன்னு ஆகிடுச்சு. புதுப்பூக்கள் நல்லாருக்குது. சட்னு வளர்ந்து தோட்டம் நிறைய பூக்கட்டும். ஆனாலும், தாமரையை கண்னுல கண்டாத்தான் மனசுக்கு ஒரு நிறைவு கேட்டோ ;-)

M.Rishan Shareef said...

அன்பின் டீச்சர்,

கள்ளிச் செடிகளுக்கு 'கண்' 'பட்டுப் போயிடுச்சு' போல..ரொம்ப வருத்தமா இருக்கு.. அதுங்க பத்தி நிறைய பேசியிருக்கோம்ல :-(

வாழை மரத்தை தொட்டியில நட்டிருக்குறதை இப்பதான் பார்க்கிறேன் டீச்சர்..ரொம்ப நல்லா இருக்கு.. நல்லா செழிப்பா வளரட்டும்..

கோப்பி மரம் வளர்த்தா நிறைய கொசு (Mosquitos) வருமாமே? எங்க பக்கத்து வீட்டில இருந்த மரத்தையெல்லாம் வெட்டிட்டாங்க.. அந்த மரம் பூக்கும் காலத்தில் மல்லிகைச் சரம் சூடிக்கிட்டது போல அவ்ளோ அழகா இருக்கும்.. பழம் பழுக்கும்போது சிவப்பும், மஞ்சளுமா கொள்ளையழகு போங்க...

தோட்டத்துல மாட்டுக் கொம்பு வச்சா திருஷ்டி வராதாம் டீச்சர்..இங்க ஒரு வாஸ்து நிபுணர் சொல்லிட்டிருக்கார்.. தேடிப் பாருங்க..

பெரணின்னா என்ன டீச்சர்? சில பூக்களை இன்னிக்குத்தான் பார்க்கிறேன்..ரொம்ப அழகு..'கண்ணு' படாம இருக்கணும். :-)

கோபிநாத் said...

டீச்சர் வீட்டுக்கு வந்தா வாழை இலை சாப்பாடு உறுதி ;-)

படங்களும் தோட்டமும் அழகு ;-)

சாந்தி மாரியப்பன் said...

சொல்ல நினைச்சு விட்டுப் போனது..

எங்க பில்டிங்கில் ஏழாவது மாடியில் தொட்டியில் வாழை மரம் வளருது. இன்னொரு கட்டிடத்தில் குலை தள்ளி நிற்கும் தாயுடன் நாலஞ்சு சேய்களையும் பார்த்தேன்.

அப்போ பழம் கிடைக்கிறது உறுதிதானே :-)))))

மாதேவி said...

முதலில் கள்ளிவடித்த பால் மனத்தை வாட்டிடுச்சு.

வசந்தம் பாடும் நந்தவனம். சிட்டுக்களின் வரவால் இசைக்கிறது....

காப்பிகுடிக்க நாங்க ரெடி :)

ILA (a) இளா said...

அடடா, கடைசி படத்துக்கு முன் படம் கண் கொள்ளாக்காட்சி

இராஜராஜேஸ்வரி said...

பசுமையாய் கண்நிறைந்த காட்சி அளித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

:) பூக்களும், செடிகளும் அருமை.....

ADHI VENKAT said...

உங்க வீட்டு தோட்டம் அழகா இருக்குங்க. இன்னும் தோட்டம் பெரிதாகி பூக்கள் பூத்து குலுங்கட்டும்.....

தொட்டியில் வாழை! இப்போ தான் படிக்கிறேன்.

நானும் வீடு மாறியதில் எங்க வீட்டு பால்கனி தோட்டத்தில் உள்ள துளசி ( மரம் மாதிரி இருக்கும்), கற்பூரவல்லி, கறிவேப்பிலையை மிஸ் பண்றேன்.

துளசி கோபால் said...

வாங்க அமைதிச்சாரல்.

பழத்துக்கு நேரம் இன்னும் வரலை. மரத்துக்கு வயசு வெறும் ஏழுதான்!

தாமரையை மனக்'கண்'ணுலே கண்டீங்கதானே?:-)))))

துளசி கோபால் said...

வாங்க ரிஷான்.

அந்த வீட்டுக் கள்ளியும் கடையில் போயே போச்:( அதன் துண்டங்களைப் பரிசோதனைக்கு மூணு வருசம் முன்னே நட்டது இப்போ வேர் வச்சு வளர்ந்துருக்கு!!!!!

இங்கே கொசு இல்லை என்பதால் காஃபி பிரச்சனை இருக்காதுன்ன்னு நினைக்கிறேன்.

வடகோளத்துக்கு மாட்டுக்கொம்பு. தென்கோளத்துக்கு வேற எதாவது இருக்குமே...ஒருவேளை குதிரைக் கொம்போ!!!!

Fern செடிகளைத்தான் தமிழில் பெரணின்னு சொல்வோம். இதுலே மட்டும் ஏகப்பட்ட வகைகள் இருக்கு!

துளசி கோபால் said...

வாங்க கோபி.

வாழை இலையைப் 'பாடம்' செஞ்சு வச்சுடவா:-)))))

துளசி கோபால் said...

அமைதிச்சாரல், நல்ல உயரம் போகணும் குலை தள்ள. இது 6 மீட்டர் வளரும் வகை. நம்ம கன்ஸர்வேட்டரி உயரம் போதாதே:(

துளசி கோபால் said...

வாங்க மாதேவி.

பழம் பழுக்குமுன் கிளம்பி வாங்க:-)

அப்படியே நம்ம சந்தனமுல்லையையும் கூட்டிக்கிட்டு வாங்க. முதல் காஃபியில் அவுங்களுக்கு முதல் பங்கு இருக்கு:-))))

துளசி கோபால் said...

வாங்க இளா.

விவசாயி சொன்னால் அதுக்கு அப்பீல் ஏது:-)))))

துளசி கோபால் said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

பாராட்டுகளுக்கு எங்கள் நன்றி.

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நன்றி நன்றி.

துளசி கோபால் said...

வாங்க கோவை2தில்லி.

தொட்டத்தில் இடமிருந்தாலும் பூமியில் நடமுடியாதே இங்கே:( குளிரில் மண்டையைப்போட்டுரும். க்ளாஸ் ஹவுஸ் சமாச்சாரம் இது.

ஆமாம். பால்கனிச் செடிகள் என்றால் கூடவே கொண்டு போயிருக்கலாமே! ஏன் விட்டுட்டுப்போனீங்க மரமா இருக்கும் 'என்னை'?

ராமலக்ஷ்மி said...

அடடா. பூக்களும் அழகு. எடுத்த கோணங்களும் அழகு.

Kajan said...

Your plants and flowers are beautiful, especially the last picture. A banana leaf tree is always refreshing to look at. And the last picture is

Appa has been trying to grow a banana tree in a pot, but it dies during winter time. A sad sight.

Parents recently got curry leaves plant(?) and are trying to grow curry leave tree inside. I hope it lasts through North American winter.:-)

I was very impressed that you were able to grow both. I will have to look into this glass house business.:-) Good information.

துளசி கோபால் said...

வாங்க ராமலக்ஷ்மி.

அழகான பூக்கள் அதுவாவே அதற்கான கோணத்தையும் மாத்திருச்சோ என்னவோ!!!!!!

துளசி கோபால் said...

வாங்க கஜன்.

சம்மர் முடிஞ்ச கையோட வாழையை வீட்டுக்குள்ளே கொண்டு வந்துடணும். நல்ல மறைப்புள்ள வெராந்தாவிலும் வைக்கலாம். நம்ம வீட்டுலே தாமரைக்குளம் குளிர்காலத்தில் உறையாமல் இருக்க தெர்மக்கோல் பலகையை மாலையில் மறக்காமல் வச்சு மூடுவோம். மறுநாள் சூரியனைப் பார்த்தால்தான் அதைக் கொஞ்சம் ஓரமா நகர்த்துவோம்.

கருவேப்பிலையை ஒரு 25 டிகிரியாவது சூடு உள்ள இடத்தில் வைக்கணும். கண்ணே கண்ணேன்னு கவனமா இருக்கணும். இங்கேயும் பொழுதன்னிக்கும் ஒரு சில்லிப்புக் காத்துதான்:(

நான் ஒரு போகன்வில்லாகூட வச்சுருக்கேன்.