Thursday, January 22, 2009

கடவுளே.... எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே......

எண்ணி இருபத்துநாலு மணி நேரம் ஆகுமுன்பே புதுவருசத் தீர்மானத்தில் ஒன்னு மண்டையைப் போட்டுருச்சு. இன்னிக்குத்தான் ஆங்கிலப்புத்தாண்டு ஆரம்பம். வருசப்பிறப்பன்னிக்கு எதாவது நல்லது நடந்தால் அது வருசம் பூராவும் தொடரும் என்ற (மூட) நம்பிக்கைக்கு உரம்போடலாமுன்னு வீட்டைச் சுத்தம் செஞ்சோம்.

உச்சிக்காலப் பூஜைக்கு நம்ம கோவிலுக்குப் போய்வந்தோம். சாமிக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு சுடிதாரை விட்டுட்டுப் புடவை கட்டிக்கிட்டேன்:-) நமக்கு வாழ்த்துச் சொல்லும்விதமா நம்மூட்டுலே அன்றலர்ந்த தாமரைப்பூக்கள் மூணு. கோபாலகிருஷ்ணனுக்கு மட்டும் விசேஷ விருந்து.


மூணுகுடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது:-)


கோயிலில் இப்பக் கொஞ்சநாளா , (ஒரு மாசம் இருக்கும்) ஒரு புதுப் பூசாரி வந்துருக்கார். அன்னிக்கொரு வாரம் கோயிலுக்குப் போக முடியலை, வேற நாட்டுக்குப் போயிருந்தேன். வந்த பிறகு வந்த சனிக்குப் போனால்....புதுமுகம் ஒருத்தர் பூஜை செய்யறார். எங்களைப் பார்த்ததும் வழக்கமா வரும் இன்னொரு 'பக்தர்' இவுங்க தமிழ்க்காரங்கன்னு அவருக்குச் சொன்னார். முகத்தின் புன்முறுவல் விரிந்து பற்கள் தெரிந்தன. பத்து நிமிசம் கழிச்சு வந்த வேறொரு அன்பர் 'இவுங்க....'ன்னு ஆரம்பிச்சவுடனே 'தமிழ்க்காரங்க'ன்னு முடிச்சுவச்சேன். பூசாரிக்கு இன்னொரு தமிழனைக் காமிக்க இப்படியாப் போட்டா போட்டி!!!!

பெயர் கிஷோர் சந்த். ஊர் கிருஷ்ணகிரி. இங்கே வந்து 10 நாளாச்சாம். ஊர்லே லைட்டிங் பிஸினெஸ். அதுவும் எந்த மாதிரி? சினிமாப் படப்பிடிப்புகளுக்கு லைட்டிங் ஏற்பாடு செஞ்சு கொடுக்கும் விஷயம். சொந்தக் கம்பெனி. அஞ்சாறு பேர் வேலைக்கு வச்சுருக்கார்/வச்சுருந்தார். எப்படி இந்தச் சின்ன வயசுலே..... ? இயக்கத்தில் சேர்ந்து நாடுவிட்டு வந்து .........

" அதுவா? ஒரு நாள் த்வாரகா கோயிலுக்குப் போயிருந்தேன். சாமி கும்பிட்டுட்டு வெளிவரும்போது தெருவில் கால் வச்சதும் நிலம் அப்படியே குலுங்குச்சு. பக்கத்துலே பூஜ் லே ஏற்பட்ட பூகம்பத்தின் ஆட்டம். மனசுக்குள்ளே இருந்த லௌகீகமெல்லாம் பட்னு தெரிச்சு விழுந்துச்சு. என்னடா வாழ்க்கைன்னு தோணுனதும் எல்லாத்தையும் விட்டுட்டு ஹரே க்ருஷ்ணா இயக்கத்தில் அப்படியே சேர்ந்துட்டேன்."

" எங்களாலே லௌகீகத்தையெல்லாம் சட்னு விடமுடியாது . சம்சார சாகரத்துலே உழன்றுகிட்டு இருக்கோம்." ( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)

"இங்கேயே ப்ரசாதம் சாப்புட்டுட்டுப் போங்க"

வாயைத் திறந்து எதையும் கேக்கவிடாம இந்த சாமி வேற ஆன்னா ஊன்னா சோத்தைப் போட்டே என் வாயை அடைச்சுரும்.

பரவாயில்லை. இன்னொரு சமயம் பார்க்கலாம்.

"இல்லீங்க. நான் சாம்பார் வச்சுருக்கேன். என் சமையல்தான். நீங்க சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க"

சாமீஈஈஈஈஈஈஈஈ....விடமாட்டயே........

முதல்முறையா இந்தக் கோவிலில் சமைச்சுருக்கார். எண்ணிப் பார்த்தால் 12 வகை. கத்தரிக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், முட்டைக் கோஸ் பச்சைப் பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு கறி, காலி ஃப்ளவர் கறி, காய்கறிகள் சேர்த்த ஒரு பஜ்ஜியா, பச்சைப் பயறு சாலட், சாதம், சப்பாத்தி, பால்பாயசம், பர்பி. ஹல்வா. குடிக்க எலுமிச்சம் ஜூஸ் வேற.

ஆர்வக் கோளாறு அதிகமா இருக்கே இவருக்குன்னு கோபால்கிட்டே முணுமுணுத்தேன். இத்தனை வகை தேவையே இல்லை. நாலைஞ்சு இருந்தாலே போதும். அதுவும் சாமிக்கு என்றதால். (வீட்டுலே ரெண்டே வகைதான். அதுக்கு மேலே செய்யமாட்டேன்)

கோயிலில் பூஜாரி வேலை இங்கே அவ்வளவு சுலபமில்லை. நைவேத்தியமுன்னு செஞ்சு கொடுக்க மடைப்பள்ளி ஆட்கள் யாரும் இருக்கமாட்டாங்க. மகாநைவேத்தியம் மட்டும் போதும்முன்னு விட்டுற முடியாது. அஞ்சாறு வகைகள் செஞ்சு ஒரு ட்ரேயில் விளம்பிக் கொண்டுவந்து சாமிமுன்னால் வச்சு நைவேத்தியம் சமர்ப்பியாமி. திரைன்னு தனியாப் போடாமல் சின்னதா மூணு மடிப்புள்ள ஒரு மீட்டர் உயரம்வரும் தடுப்பு ஒன்னைக் கொண்டுவந்து வச்சுட்டு அதுக்குப் பின்னால், சாமிக்கு முன்னால் ட்ரேயை வைப்பாங்க. இன்னொரு பூஜாரியும் இந்தியாக்காரர்தான். அவருக்கு ஊர் மாயாப்பூர். பெயர் கோவிந்தா. எல்லாம் சின்ன வயசுப் பசங்க. 23 இருந்தாலே அதிகம்.. ஒருத்தர் பூஜை செஞ்சா இன்னொருத்தர் சமைப்பார். ரெண்டு பேரும் மாறி மாறி பூஜை , சமையல்ன்னு நடக்குது.
இது நடந்து நாலைஞ்சு வாரமாச்சு. இடையில் ஒரு நாள் கிஷோர் சந்த் பூஜாரியைப் பார்த்தப்ப முகத்துலே 'தேஜஸ்' குறைவு. அடுத்து வந்த வாரங்களில் முகவாட்டம் கூடி இருந்துச்சு. நம்ம தொலைபேசி எண், விலாசமெல்லாம் கொடுத்துட்டு வீட்டுக்கு வாங்கன்னு அழைச்சோம். சமையல் ட்யூட்டி இல்லாத நாளில் பகல் 2 மணி முதல் அஞ்சரை வரை ஃப்ரீ டைம் இருக்குன்னார். வரணுமுன்னு தோணினால் ஒரு ஃபோன் அடிங்க. வந்து கூட்டிட்டு போறேன்னேன்.

வருசப் பிறப்புக்குக் கோயிலுக்குப் போனப்ப இவர் இருந்தார். கொஞ்ச நேரம் பேசிட்டு, புதுவருச வாழ்த்து(க்)களைச் சொல்லிட்டு வந்தோம். முகத்தில் சிரிப்பே இல்லை. உடம்பு சரி இல்லையோ என்னவோன்னு கேட்டதுக்கு நல்லா இருக்கேன்னார்.

'கோயிலில் வேலை நெட்டி முறியுது போல. வெளிநாடுன்னு வந்துட்டு இப்படித்தான் நம்மாளுங்க ப்ரெஷர் தாங்காம ஆயிடறாங்க'ன்னு கோபால்தான் வீட்டுக்கு வரும்போது சொல்லிக்கிட்டு இருந்தார். வீட்டு நினைவு வந்துருச்சோ என்னவோ பாவம்(-:


'போனவருச'ச் சாப்பாடே, இப்பப் பகலுக்குப் போதுமுன்னு இருந்ததால் ஒன்னும் சமைக்கலை. போனாப் போகட்டும். சாயங்காலத்துக்கு ஆக்குனால் ஆச்சு. இன்றொருநாள் நல்லதா ஆக்கிப்போட்டால் வருசம் முழுசும் ஆக்கிப்போட்டதுக்கு சமமாகுமேன்னு சமையலை முடிச்சேன்.
இந்த 34 அரை(?) வருச வாழ்க்கையில் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' ஒருமாதிரி செட் ஆகி இருக்குன்னு புரிஞ்சுக்கும் வாய்ப்பு ஒன்னும் வந்துச்சு. பேசாம சாப்பாட்டை, பீச்சுக்குக் கொண்டுபோய் சாப்பிடலாமே! (சிலநாள் வீட்டுலே டீ போட்டு எடுத்துக்கிட்டு பீச்சுலே உக்கார்ந்து குடிச்சுட்டு வர்றது உண்டு. என்னென்ன கொண்டு போகணுமுன்னு கோபாலுக்கு அத்துப்படி. நல்லாப் பழக்கியாச்சு)

கிளம்பியாச்சு. இங்கே ரெண்டு பீச் நல்லதா இருக்கு. ஒன்னு நியூ ப்ரைட்டன் பீச். கட்டிடங்கள் சூழ ரொம்பச் செயற்கையா இருக்கும். ஷாப்பிங் மால் வேற பீச்சுக்கு எதிரில். உள்ளூர் வாசகசாலையின் கிளை, புதுக் கட்டிடம் கட்டிவச்சுருக்குக் கடற்கரையிலே. கூட்டம் எப்பவும் ஜேஜேன்னு இருக்குமிடம். சரிப்படாது. இன்னொரு பீச் சம்னர் என்ற இடத்தில். கடற்கரை கிராமம்(?). இங்கேதான் நம்ம பே வாட்ச் புள்ளையார் இருக்கார். இயற்கையான சூழல். கடற்கரை, கடற்கரையா இருக்கும். போற வழியில் ஒரு திருப்பத்தில் கடலில் இருந்து எழுந்து நிற்கும் உயரமான பாறையின் பெயர் (Shag Rock) ஷாக் ராக். தமிழில் சொன்னாச் சரியான உச்சரிப்பு வரலையே.... நம்ம தருமியின் கஷ்டம் புரிஞ்சுதா இப்ப!!!!
இந்த shag rockகை மவொரி மொழியில் Rapanui னு சொல்றாங்க. (Rapanui means "the great sternpost")இந்தக் கல் தூணுக்குப் பொருத்தமான பெயர்தான். ஷாக் பறவைகள் கூட்டம்கூட்டமா இங்கே கூடுகட்டிவசிக்கிறதைப் பார்த்து வெள்ளையர்கள் வச்ச பெயர்தான் ஷாக் ராக்.

இதுலே இருந்து சுமார் ஒரு கி.மீ பயணிச்சால் Cave Rock. கேவ் ராக். கடற்கரையின் மணலிலேயே நடந்து போகலாம். இந்த கேவ்ராக்கை முதல்முதலில் பார்த்ததும் எனிட் ப்ளைடனின் ஃபேமஸ் ஃபைவ் கதைதான் நினைவுக்கு வந்துச்சு. பசங்களும் டிம்மியும் குகைக்குள்ளே போய்ப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது வில்லன் கூட்டம் வந்துரும்!!!! இந்தக் குகையின் மேலே கப்பல் கொடிமரம் மாதிரி ஒன்னு நட்டுவச்சுருக்காங்க. போட் ஆட்களுக்கு ரேடியோ சிக்னல் இதுவழியா அனுப்புறாங்கன்னு கேள்விப்பட்டேன்.

இந்த கல்லுக்கு மவொரி பெயர் Tuawera. கடல் அரசனா இருந்த திமிங்கிலம் ஒன்னு இங்கே வந்து செத்துப் போச்சு. அதோட பூதவுடல் இப்படிக் கல்லா மாறி இருக்குன்னு மவொரி கதை.

Tūrakipō என்ற மவொரித் தலைவர், பக்கத்துப்பேட்டை தலைவருடைய மகளைக் கல்யாணம் கட்ட ஆசைபட்டார். அந்தப் பொண்ணு, மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொன்னதும் தலைக்குக் கோபம் வந்து பொண்ணைச் சபிச்சுட்டார். பொண்ணோட அப்பா ச்சும்மா இருப்பாரா? அவர் கை என்ன மாங்காய் பறிச்சுக்கிட்டா இருந்துருக்கும்?

விடுவிடுன்னு கடலை நோக்கி நிக்கும் மலைமேலே ஏறுனார். ரொம்ப சக்தி வாய்ந்த karakia (மந்திரம்/ப்ரேயர்) ஒன்னை ஜெபிச்சார். கடல் அரசன் திமிங்கிலம் கரைக்கு வந்து சேர்ந்து ஒதுங்குச்சு. தரை தட்டுன கப்பலுக்கும் திமிங்கிலத்துக்கும் ஒரே கதிதானே?

விஷயம் தெரியாத Tūrakipō வும் அவர் குடிகளும் திமிங்கிலத்தை வெட்டி, ஆக்கித் தின்னாங்க. மந்திரத் திமிங்கிலமுல்லே..... எல்லாருக்கும் மயக்கம் வந்துச்சு. மயங்கி விழுந்த யாரும் பிறகு எந்திரிக்கவே இல்லை.

இந்தத் திமிங்கிலத்தின் மிச்சம்மீதிதான் இப்போ இங்கே கிடக்கும் கேவ்ராக்.

சம்னர் கிராமத்துக்கு லேண்ட் மார்க்காக இருக்கும் இந்த ரெண்டும். எப்பவோ இருந்து அணைஞ்சு அழிஞ்சுபோன எரிமலையின் மிச்சங்கள். கேவ் ராக்கிலிருந்து கடலை ஒட்டியே பீச் ரோடு ஒன்னு போகுது. வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதனால் நடைப்பயிற்சிக்குப் போகும் மக்களும் நாய்களும் நிரம்பி இருப்பாங்க. கட்டைச் சுவத்துலே உக்காந்து கடலைப் பார்த்துக்கிட்டே கடலையும் போடலாம் ரொம்ப ஏதுவான இடம். இருக்கைகளும் அங்கங்கே போட்டுவச்சுருக்காங்க.

இங்கே வந்தால் மட்டும், 'பெட்ஸ்ம் அதன் ஓனர்'களும் ஒரே மாதிரி இருக்காங்களான்னு ஆராய்தல் என் முக்கிய பொழுதுபோக்கு. 99 சதமானம் சரியாவே இருக்கும் என்பது வியப்பு. நீண்ட நடைக்குப் பிறகு இந்த ரெண்டு ராக்ஸ்க்கும் இடையில் இருக்கும் கார் பார்க்குக்கு வந்து கடலைப் பார்த்தபடியே சாப்பாட்டை முடிச்சோம். சூரியன் மறையத் தொடங்கி மசமசன்னு ரொம்பலேசா இருட்டு கவ்வும் நேரம். தற்செயலா கிழக்கே திரும்பினால்...... ஆகாயத்துலே இருந்து இறங்கி வந்தாப்லெ அந்தரத்துலே ஒளிக்கீற்றா ஒரு சிலுவை தொங்குது......

ஆ............. கடவுளே எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே..........

(பட உதவி. கோபால். ப்ளாக்பெர்ரியில் எடுத்தது)

கெமெரா எங்கே? ஆஹா.... புதுவருசத் தீர்மானம், இன்னிக்கே மண்டையைப் போட்டுருச்சே...... கெமெராவை எப்படி மறந்தேன்.....(-:

கேவ் ராக் மேலே மெலிசா ..... அடிவானத்துலே மறையும் சூரியனின் கதிர்கள் இப்படி இந்தக் கொடிமரத்துலே படுதோன்னு பார்த்தால் .....ஊஹூம் சூரியன் போய் பத்து நிமிசமாச்சே. மணி இப்போ ஒம்போதரை ஆகப்போகுதே.

அப்படியே விழுந்தாலும் கொடிமரம் முழுசும் வெளிச்சம் இல்லாம...... எப்படி? ஒருவேளை அந்த சிலுவை அளவு மட்டும் இருட்டில் ஒளிரும் பெயிண்ட் அடிச்சு வச்சுருப்பாங்களோ?

காரைக் கிளப்பிக் குகைவரை போய்ப் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தோம்.

சிலுவை அளவுக்குச் சின்னதாக் குட்டியா சீரியல் பல்ப் மாட்டிவச்சுருக்காங்க. புதுவரவு. இந்த வருசத்துக்கான கிறிஸ்மஸ் அலங்காரம்.

அல்லேலூயா அல்லேலூயா.....

32 comments:

said...

உள்ளேன் ரீச்சர்! பூசாரி சமைத்த விதங்களைப் பார்த்துப்புட்டு இப்போதைக்கு சைலண்ட்!

said...

நானும் உள்ளேன்

said...

( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)//

ஆண்டவா என்ன மட்டும் இந்த நோயிலிருந்து காப்பாத்து..

மீதி ரீடர்ல படிச்சிட்டு வரேன்

said...

// 12 வகை. கத்தரிக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், முட்டைக் கோஸ் பச்சைப் பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு கறி, காலி ஃப்ளவர் கறி, காய்கறிகள் சேர்த்த ஒரு பஜ்ஜியா, பச்சைப் பயறு சாலட், சாதம், சப்பாத்தி, பால்பாயசம், பர்பி. ஹல்வா. குடிக்க எலுமிச்சம் ஜூஸ் வேற.//

உங்க ‌ ஊருக்கோவிலுலே இத்த‌னை வ‌கை பிர‌சாத‌ம் தராக !!
அம்மாடியோவ் !! அட்ரஸ் கொடுங்க..
அடுத்த நிமிசம் நாங்களும்
ஆஜராயிடுரோம்.

முகுந்தா ! முகுந்தா ! கிருஷணா !
முகுந்தா ! முகுந்தா !!

வரந்தா ! வரந்தா உன்னோட‌
பிரசாதம் தினம் தா !!

சுப்பு ரத்தினம்
http://menakasury.blogspot.com

said...

//" எங்களாலே லௌகீகத்தையெல்லாம் சட்னு விடமுடியாது . சம்சார சாகரத்துலே உழன்றுகிட்டு இருக்கோம்." ( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)//

ஒருமித்த சிந்தனையிலேயே இருப்பதை (முயல்வதை) தியானம் யோகம் என்பார்கள், அப்படிப்பார்த்தால் நாளைக்கு என்ன பதிவு எழுதாலாம் என்று எப்போதும் நினைப்பதும் அதே தான்.

:)

said...

//அஞ்சாறு வகைகள் செஞ்சு ஒரு ட்ரேயில் விளம்பிக் கொண்டுவந்து சாமிமுன்னால் வச்சு நைவேத்தியம் சமர்ப்பியாமி//

அடுத்த ஜென்மத்துல பூசாரியாக பிறந்தால் பிடித்ததெல்லாம் சாமிக்கு செஞ்சு வச்சிட்டு...அப்படியே காலத்தை ஓட்டிடலாம்

:)))))))))))

said...

//( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)
//
:)))))))))))))))))))

said...

//ஒருமித்த சிந்தனையிலேயே இருப்பதை (முயல்வதை) தியானம் யோகம் என்பார்கள், அப்படிப்பார்த்தால் நாளைக்கு என்ன பதிவு எழுதாலாம் என்று எப்போதும் நினைப்பதும் அதே தான்.
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :))

said...

பதிவு எழுதும் சிந்தனை யை ஒரு தவமாக செய்வது .... ( தவம் செய்பவர்கள் மேல புத்து வளரும்னு பக்தி படத்துல வரும் ) தவறீல்லையா அப்ப.. (கண்ணனே வந்து சொல்லிட்டுப்போயிட்டாரே)
துளசி மாதா.. உங்க தவம் மெச்சித்தான் கடவுள் காட்சி தந்திருப்பார்.. அடியார்களை வணங்குவதே எங்க மரபு ...அப்பப்ப அருள் பாலிங்க..

said...

\\

( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)
\\

:))

வளர வளரத்தான் ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்களே...

said...

புல்லட் சாமியார் எப்படி இருக்கார். திரும்ப இந்தியா போயிட்டாரா என்ன

said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில் பதிவுகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.

said...

//இங்கேதான் நம்ம பே வாட்ச் புள்ளையார் இருக்கார்.//
:-)))

said...

கொடுத்துவைச்சவங்க ரீச்சர் நீங்க... 12 வகையா ??!
எனக்கும் இந்த கோவில் பிடிக்கும் இங்க ஒரு ரஷ்யன் சாமி ஒரு முறை குக் டியூட்டியில் இருந்ததால் மேஷ்ட் பொட்டேடோஸ்.. ஸ்பின்னாச்...ஸ்டூவ்ட் காலிபிளவர் .. ஆப்பிள் பை மைனஸ் க்ரஸ்ட்.. ஹெர்பல் டீ... அப்ப போனது தான் இன்னும் போகலை...

said...

//தற்செயலா கிழக்கே திரும்பினால்...... ஆகாயத்துலே இருந்து இறங்கி வந்தாப்லெ அந்தரத்துலே ஒளிக்கீற்றா ஒரு சிலுவை தொங்குது......//


கடவுள் எங்களுக்கு காட்சி கொடுத்தீரே !!

அப்படி ஒரு நாள் நமக்கு காட்சி கொடுக்கையிலே நாம் என்ன கேட்போம் ?

இங்கே ஒரு வழிப்போக்கன் கேட்க கடவுள் பதில் சொல்லும் காட்சிதனைப்
பாருங்கள்.
www.llerrah.com/godstimeframe.htm
மீனாட்சி பாட்டி.

said...

//மூணுகுடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது:-)//

ஒவ்வொரு குடத்துக்கும் ஒவ்வொரு பூ பூக்கும் பாடலை நினைவுபடுத்தியதற்கு நன்றி டீச்சர்.

கடவுள் காட்சிக்கொடுத்த மாதிரிதான் இருக்குது சிலுவையின் ஜொலிப்பு.

said...

வாங்க கொத்ஸ்.

எதுலேயும் தேங்காய் கிடையாது. தைரியமாச் சாப்புடலாம், வாங்க:-)

said...

வாங்க நசரேயன்.

உள்ளேன் என்பது நன்று.

said...

வாங்க குடுகுடுப்பை.

இந்த நோய்க்கு மருந்து இதுவரை கண்டுபிடிக்கலையாமே....

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

இது சாமிக்குன்னு இருக்கும் தனி அடுக்களை. ராதா'ஸ் கிச்சன்.

இது தவிர ஒரு பெரிய கமர்ஸியல் கிச்சன் ஒன்னு உண்டு. இங்கே தங்கி இருக்கும் அனைவருக்கும் சாப்பாடு அங்கேதான் தயாராகும்.

ஞாயிறுகளில் சிலசமயம் நாங்களும் போய் சமையலில் உதவி செய்வதுண்டு. அன்று மாலை ஆரத்தி முடிஞ்சதும் விருந்து .

முந்தி இலவசமா இருந்த இந்த விருந்து....கோயில் நிதிநிலமை சரியில்லாமப்போனது முதல் ரெண்டு டாலர் டொனேஷன் னு ஆரம்பிச்சு இப்போ 5 டாலரா ஆயிருக்கு. ஆனால் கட்டாயம் கொடுக்கணுமுன்னு இல்லை.
ஞாயிறு நல்ல கூட்டம் இருக்கும். நாங்களும் சொந்தக் கொண்டாட்டம் பிறந்தநாள், திருமணநாள், குழந்தை பொறந்தது இப்படிப்பட்ட சமயங்களில்
விருந்தை ஸ்பான்ஸார் செய்யரதும் வழக்கம்.

வாங்க. கட்டாயம் வாங்க. உங்க பெயர் அந்த அரிசி, கோதுமையில் எழுதாம விட்டுருப்பானா என்ன?

said...

வாங்க கோவியாரே.

இங்கே பூசாரியாக இருக்க எந்தத் தடையும் இல்லை. நியமம் படிச்சால் போதும். குலம் நோ பார்.

said...

வாங்க ஆயில்யன்.

இப்போதைக்கு இந்த நோயாளிகள் சுமார் நாலாயிரத்துச் சொச்சம் பேராம்.
தமிழ்மணம் சொல்லுது:-))))

said...

வாங்க கயலு.

அடியார்க்கு அடியார்தான் நாம் எல்லாம்.
(அடிக்கவும் ஒரு தைரியம் வேணுமே)

said...

வாங்க தமிழன் - கறுப்பி.

வளர்ந்தால் நல்லதுதான். ஆனா; பொருள்பட இருக்கணுமே. வெட்டிவளர்ச்சி நல்லாவா இருக்கு?

said...

வாங்க சின்ன அம்மிணி.

புல்லட் பூஜாரி இப்போ கோவிலில் தங்கலை. வெளியே ஒரு உணவகத்துலே வேலை செய்யறார். கோவிலுக்குப் பூஜை வேளைகளில் சாமி கும்பிட அப்பப்ப வர்றார்.

said...

வாங்க தமிழ்குறிஞ்சி.

நன்றிங்க. வாசக வட்டம் கூடுனால் வேணாமுன்னு சொல்வோமா?

மீண்டும் நன்றி.

said...

வாங்க பாகீ.

நினைவு இருக்காரா அவர்?

இல்லைன்னா

http://thulasidhalam.blogspot.com/2006/08/baywatch.htmlhttp://thulasidhalam.blogspot.com/2006/09/x-2.html

said...

வாங்க இலா.

சமயம் கிடைக்கும்போது அப்பப்பப் போய்வாங்க.

இல்லேன்னா சாமி கண்ணைக் குத்திரும்:-)

said...

வாங்க மீனாட்சி அக்கா.

//அப்படி ஒரு நாள் நமக்கு காட்சி கொடுக்கையிலே நாம் என்ன கேட்போம் ?//

உங்க வழிப்போக்கன் உஷாரா இருக்கார். இதே நானா இருந்தால்

கையும் ஓடலை,காலும் ஓடலை வாயும் ஓடலைன்னு நின்னுருப்பேன்.

திருப்பதி போகும்போது நிறைய மனுக்களை மனசிலே வச்சுக்கிட்டு வரிசையில் காத்திருப்பேன். உள்ளே போய் முன்னால் நிக்கும்போது எதுவுமே நினைவுக்கு வராது. சுத்தம். போயிட்டுப்போறது கண்ணார சேவிச்சுக்கலாமுன்னா....பாழும் கண்ணீர் திரை போட்டுரும்.

அப்புறம்.... அவ்ளோதான் ஜருகண்டி ஜருகண்டி.

said...

வாங்க ராஜநடராஜன்.

அந்த சூழ்நிலையில் சட்னு அந்தரத்தில் சிலுவை பார்த்தப்ப மனசு சிலிர்த்துப்போனதென்னவோ நிஜம்.

அறிவுக் கண்ணைத் திறக்காமல் இருந்தால் அத்தனையும் சுகமே.

said...

// 12 வகை. கத்தரிக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், முட்டைக் கோஸ் பச்சைப் பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு கறி, காலி ஃப்ளவர் கறி, காய்கறிகள் சேர்த்த ஒரு பஜ்ஜியா, பச்சைப் பயறு சாலட், சாதம், சப்பாத்தி, பால்பாயசம், பர்பி. ஹல்வா. குடிக்க எலுமிச்சம் ஜூஸ் வேற.//

இந்தக் கல்யாண விருந்துக்கு பேரு உங்கூருல ப்ரசாதமாஆஆஆஆ

டீச்சர்

பேசாம ஜாகையே உங்க ஊருக்கு மாத்திடலாம்னு இருக்கேன்.

" எங்களாலே லௌகீகத்தையெல்லாம் சட்னு விடமுடியாது . சம்சார சாகரத்துலே உழன்றுகிட்டு இருக்கோம்." ( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)//

இதை இதை இதைதான் எதிர்பார்த்தேன்

said...

வாங்க அமித்து அம்மா.

ஞாயிறுமாலைகளில் பார்க்கணுமே. அதுவும் எதாவது விசேஷமுன்னா......

ஒரு 20 அல்லது 25 வகை இருக்கும்.
இதுலே நம்ம மக்கள் டேக் அவே மாதிரி டிஃபன் கேரியர்லே வாங்கிக்கிட்டுப் போவாங்க.

வந்துருங்க. நாம் சேர்ந்தே போய் ப்ரசாதம் வாங்கிக்கலாம்:-)