நவராத்திரி சீஸன். குறளகத்தில் பொம்மைக்கொலு ரொம்ப நல்லா இருக்குன்னுன்னு, நானும் என் அறைத்தோழியும் சாயங்காலம் போய்ப் பார்த்துட்டு, அப்படியே ஹோட்டல், ஷாப்பிங்ன்னு சுத்தியடிச்சுட்டு ஒம்போது மணி இருக்கும்போது விடுதிக்கு வந்தோம். வந்து ஒரு அரைமணி நேரம் கழிச்சு, வார்டன் கூப்புடறாங்கன்னு போனா, அந்தம்மா எங்க மாமா பேரைச் சொல்லி, அவரை உனக்குத் தெரியுமான்னு கேட்டாங்க. அடடா....வந்துட்டுப் போயிருக்கார் போல! எங்க மாமாதான்னதும், ஒரு தந்தியை எடுத்துக் கொடுத்தாங்க. ' ஃபாதர் எக்ஸ்பையர்டு. ஸ்டார்ட் இம்மீடியெட்லி'
எப்ப வந்துச்சுன்னா, சாயங்காலம் நாங்க கிளம்பிப்போன கொஞ்ச நேரத்துலே வந்துருக்கு. "நாங்க திரும்பிவந்து இவ்வளோ நேரமாச்சே, உங்க அறையைத் தாண்டித்தானே போனோம். நீங்களும் பார்த்துக்கிட்டுத்தானே இருந்தீங்க. அப்பவே சொல்லக்கூடாதா?"
" சொன்னா உனக்கு ஷாக் ஆயிருமேன்னுதான் உடனே சொல்லலை. வண்டி எப்ப இருக்குமுன்னு தெரியுமா? "
"ரயில் இந்நேரம் போயிருக்கும் பஸ் இருக்கான்னு தெரியலை."
இங்கே அங்கேன்னு போன்லே விசாரிச்சுத், தனியார் பஸ் கிடைக்குமுன்னு தெரிஞ்சு, டாக்ஸி பிடிச்சு எக்மோர்வரை வந்து ஏத்திவிட்டாங்க என் அறைத்தோழியும் வார்டனும். என்ன, எப்படின்னு ஒன்னும் விவரம் தெரியாமக் குழப்பமா வண்டியிலே போய்க்கிட்டு இருக்கேன். அப்பத்தான் நினைவுக்கு வருது, சித்தப்பாச்சித்திக்குத் தெரியுமா..... சொல்லாமக் கிளம்பிட்டேனேன்னு. எங்கேன்னு போய்ச் சொல்றது? இருந்த அவசரத்துலே, மாத்திக்கட்ட ஒரு புடவை, பை ன்னு ஒன்னுமே எடுக்காம, வெறும் கைப்பையோட போய்க்கிட்டு இருக்கேன். காலையில் ஆறரைக்குப் போய்ச் சேர்ந்துச்சு பஸ். அங்கே இருந்து இன்னொரு வண்டி புடிச்சு பைபாஸ் ரோடுலே இறங்குனப்ப ஒம்போதேமுக்கால். வீட்டுக்குப் போனா .......
சாகறதுக்குன்னே ஒவ்வொருத்தரா இங்கே வர்றீங்களா''ன்னு அக்கா அழறாங்க. நல்லாத் தூங்குற மாதிரியே அப்பா. புள்ளைங்க எங்கேன்னு கண்ணைச் சுழட்டிப் பார்த்தால்......பெரியவ மட்டும் உள்ளே வந்து அம்மாகிட்டே உக்காந்தாள். மாமா, வெளியே இருந்து, இங்கே வான்னு கூப்புட்டாரேன்னு போனால்..... 'அண்ணன் கிளம்பிருச்சா'ன்றார். யாருக்குத் தெரியும்?
முகமாவது கழுவலாமுன்னு கிணத்தடிக்குப் போனால்..... மதீனாக்கா என் கையைப் புடிச்சு அவுங்க வீட்டுக்கு இழுத்துக்கிட்டுப் போனாங்க. எப்பக் கிளம்புனேன்னு கேட்டு சூடா ஒரு டீ போட்டுக் கொடுத்தாங்க. இருந்த தலைவலி, கண் எரிச்சலுக்கு இதமா இருந்துச்சு. மதீனாக்கா மகன் ஓடிப்போய் தலைவலி மாத்திரை வாங்கியாந்து கொடுத்தான். திரும்ப வந்து அக்கா பக்கத்துலே உக்காந்துக்கிட்டேன். சித்திதான் பழைய திண்ணையில் சாஞ்சு உக்காந்துருந்தாங்க. உடம்பு சரியில்லையாம் . வயசாகுதுல்லே.....
அப்பா எப்படிப் போனாருன்னு அவுங்க சொன்னதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நேத்துக் காலையில் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்குமுன்னு ஆப்பம் தேங்காய்ப்பால் செஞ்சு கொடுத்துருக்கு அக்கா. அவர் காலை ஆகாரத்தை முடிச்சுக்கிட்டுக் கடைவீதிவரை போயிட்டு வந்துருக்கார். (எல்லாம் சிகெரெட் வாங்கத்தான்) புதுவீட்டுலே தெருவைப் பார்த்து இருக்கும் அறையில்தான் அப்பாவுக்கு ஜன்னல்கிட்டே கட்டில். (ஜன்னலில் கை நீட்டிச் சிகெரெட் சாம்பலைத் தட்டறதுக்கு தோதா இருக்குமே) அப்பாவுக்குப் படிக்கும் பழக்கம் இருக்கு. மாமாதான் பள்ளிக்கூட நூலகத்தில் இருந்து புத்தகங்கள் நிறையக் கொண்டுவந்து கொடுப்பாராம். இப்ப மாமாதான் தலைமை ஆசிரியர். இவர் படிச்சுக்கிட்டே இருந்து அப்படியே தூங்கிட்டார். .
மத்தியானம் சாப்பாட்டுக்கு மாமா வந்துருக்கார். எப்பவும் மாமனாரும் மருமகனுமா ஒன்னா உக்காந்து சாப்புடுவாங்களாம். இன்னிக்கு மாமா வரும்போதே கொஞ்சம் நேரமாயிருச்சாம். பள்ளிக்கூடத்துலே ஒரு அவசர மீட்டிங். சீக்கிரம் சாப்புட்டுட்டு ஓடணுமுன்னு வந்துருக்கார். அப்பா அறையிலே எட்டிப் பார்த்தப்ப அவர் தூங்கறதைக் கவனிச்சுட்டு, இவர் மட்டும் தனியா உக்காந்து சாப்புட்டுட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பி இருக்கார். மணி ரெண்டு ஆகுதே. எழுப்பிச் சாப்புடச் சொல்லலாமுன்னு எட்டிப் பார்த்தப்ப அதே நிலையில் அப்பா. கண்ணுலே கண்ணாடி போட்டது போட்டபடி. புத்தகம் மார்மேலே விரிச்சபடிக் கிடந்துருக்கு இவர் போய், தொட்டு எழுப்புனா..... உடம்பு கொஞ்சம் சில்லுன்னு இருந்துருக்கு. உலுக்கிப் பார்த்துருக்கார். மூக்குக்கிட்டே கைவைச்சுப் பார்த்தா......ஊஹூம்........
அப்புறம் டாக்டருக்கு ஆள் அனுப்பி அவர்வந்து பார்த்து...... எல்லாம் முடிஞ்சுபோச்சு. புண்ணியவான், உறக்கத்துலேயே போயிட்டார்னு சொன்னாராம். எனக்கும் அண்ணனுக்கும் தந்தி கொடுத்துருக்கார். போனுலே கூப்புட்டுச் சொல்லி இருக்கலாமுல்லே?
சனிக்கிழமை. பள்ளிக்கூடம் லீவுன்றதாலே வாத்தியாருங்க எல்லாம் வந்து அங்கங்கே சின்னக் கூட்டமா நின்னு பேசிக்கிட்டு இருக்காங்க. அன்னு அண்ணன் வீட்டுலே சாப்பாட்டுக்கு என்னவோ ஏற்பாடு. புள்ளைங்களை அங்கே கூட்டிட்டுப்போய் சாப்புடவச்சாங்க. நேத்துச் சாயுங்காலத்துலே இருந்து அதுங்களும் பட்டினி.
இங்கே நேரமாகிட்டுப் போகுது. நாலுமணிக்கு எடுத்துறலாமுன்னு பேச்சு. அண்ணன் இன்னும் வரலை. போன் போட்டுச் சொல்லுங்கன்னா.... தபால் ஆபீஸ்க்கு அனுப்புன ஆள், அங்கே போன் ரிப்பேர். லைன் கிடைக்கலைன்னு வந்துட்டார். இந்தப் பக்க அறையிலே இருந்து அத்தையம்மா எந்திருச்சு வந்தாங்க. தளர்ச்சி இருந்தாலும், பார்வை கூர்மையா முந்திமாதிரியே இருக்கு. என்னைப் பார்த்து, வான்னு தலையை அசைச்சுட்டு, விடுவிடுன்னு நடந்து வெளியே போய் மாமாவைக் கூப்புட்டாங்க. நானும் எழுந்து போனேன்.
'தாய்க்குத்தான் தலைப்புள்ளை. தகப்பனுக்குக் கடைசிப் புள்ளை செய்யலாம். அதான் இவ வந்துருக்காளே. இவளை வச்சுச் சாங்கியம் இங்கே செஞ்சுட்டுக் கொள்ளியை நீயே வச்சுரு'ன்னாங்க. நாங்க பேசறதைப் பார்த்துட்டு அக்காவும் மெதுவா எழுந்து வந்துச்சு. அண்ணன் வரலைன்னதும் அதுக்கும் சேர்த்துக் கொஞ்சம் கண்ணீர் விட்டுட்டு, 'செய்யறதைச் செய்யுங்க'ன்னுட்டு வீட்டுக்குள்ளே போய் அப்பா தலைமாட்டுலே உக்காந்துக்கிச்சு.
மூணாகப்போகுது. நீ கிணத்தாண்டை போய் நில்லு. ரெண்டு வாளி சேந்தி ஊத்தறேன்னு அத்தையம்மா சொன்னதும் நான் கிணத்தாண்டை போறதுக்குத் திரும்பறேன்.......சின்னதா ஒரு பையைக் கையில் புடிச்சுக்கிட்டு அண்ணன்.
அப்பாடான்னு எனக்கு நிம்மதி. இவ எப்ப வந்தான்னு என்னைப் பார்த்து மொறைச்சதோ? அண்ணனைப் பார்த்துட்டு அக்கா, தலையில் அடிச்சுக்கிட்டு ஒரே அழுகை. பசங்க எல்லாம் பயந்துபோய் நின்னுக்கிட்டு வேடிக்கை பார்க்குதுங்க.
மளமளன்னு காரியங்கள் நடக்க ஆரம்பிச்சு, நாலரைக்கு எடுத்துட்டாங்க. வீட்டைக் கழுவித்தள்ள ஆரம்பிச்சதும், நானும் அக்காவுமா இந்தப் பக்கம்
திண்ணைக்கு வந்துட்டோம். என் கையைப் புடிச்சுக்கிட்டு கொஞ்சநேரம் சும்மா ஒன்னும் பேசாம இருந்துட்டு, 'நீ என்னத்துக்கு இப்படி அண்ணன் பேச்சை மீறி என்னென்னவோ செய்றே? என்னத்துக்குக் கண்காணாம இருந்தவரைப்போய் கூட்டிக்கிட்டு வந்தே? இப்பப் பாரு, இங்கே வந்து செத்துட்டார். இருக்கறது போதாதுன்னு இன்னும் பேச்சுக் கேக்கணுமுன்னு எனக்கு விதி. எல்லாம் உன்னாலவந்த வினை. சும்மா இருக்கமாட்டேங்கறே.... உன்னைவச்சுக்கிட்டுப் பட்டதெல்லாம் போதும். இன்னும் என்னென்ன செஞ்சு எங்களைக் கொல்லப்போறயோ?'
அக்கா முகமெல்லாம் எப்படியோ கருத்துப்போய், தலையெல்லாம் கலைஞ்சு, கண்ணெல்லாம் சிவந்து பார்க்க நல்லாவே இல்லை. பாவம். நேத்து இருந்து ஒன்னும் சாப்புட்டும் இருக்காது. தூக்கமும் இருந்துருக்காது. பாவம், இல்லே?
'பிள்ளை கையாலே கொள்ளீ வாங்கிக்க அவருக்கு நல்ல விதி இருந்துதானே இத்தனை வருசம் இல்லாம இப்பத் திடீர்னு வந்துசேர்ந்தார். அதுவும் எப்பேர்ப்பட்ட சாவு. கொடுத்துவச்சுருக்கணும்' னு சித்தி சொன்னாங்க.
'யார்கிட்டே அக்கா பேச்சுக் கேக்கும்? மாமியார் கிட்டேயா இல்லை மாமாகிட்டேயா?' அத்தையம்மா மட்டும் கிணத்தடியில் துவைக்கும் கல்லுமேலே உக்கார்ந்துக்கிட்டு எல்லாரையும் குளிக்க விரட்டிக்கிட்டு இருந்தாங்க. பெரிய அண்டாவுலே தண்ணி சேந்தி ஊத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு அம்மா. யாருன்னு எனக்குத் தெரியலை. புள்ளைங்க எல்லாம் சொம்புலே மொண்டு தலையிலே ஊத்திக்கிட்டு ஓடுச்சுங்க.
இதுக்குள்ளே ஆம்பளைங்க கூட்டம் திரும்பி வந்துட்டாங்க. அண்ணன் விடுவிடுன்னு கிணத்துக்கிட்டே போய் தானே நாலுவாளி தண்ணீர் சேந்தித் தலையில் ஊத்திக்கிச்சு. பையைக் கொண்டான்னதும் ராணி ஓடிப்போய்க் கொண்டுவந்து கொடுத்தாள்.
மாமாவைப் பார்த்ததும் அத்தையம்மா எழுந்து வந்தாங்க. 'இப்பவே திரும்பிப் போகறேன்றான்'னார். அதெப்படி? காரியம் முடியும்வரை இருக்கணுமுன்னாங்க அவுங்க. வந்தே இருக்கமாட்டேன். வரவே பிடிக்கலை. சித்தி வற்புத்தியதாலே வந்தேன். இவருக்கு இவ்வளோ செஞ்சதே அதிகம். என்னை வேற எதுக்கும் எதிர்பார்க்காதீங்க'ன்னு சொல்லிட்டாராம் அண்ணன்.
இதுக்குள்ளே அண்ணன் உடுப்பு மாத்திக்கிட்டு வந்தவர், அக்காகிட்டே வந்து போயிட்டுவரேன்னு சொல்லிட்டு நடந்தார். சாவு வீட்டுலேச் சொல்லிட்டுப் போகக்கூடாதுன்னாங்க அத்தையம்மா. தலையைத் திருப்பிப் பார்த்து 'தெரியும்'னு சொல்லிட்டு அண்ணன் போயிட்டார்.
அண்ணன் அங்கிருந்த மூணு மணி நேரத்துலே என்னை ஏறிட்டுக்கூடப் பார்க்கலை.
அக்காவைக் குளிக்கச் சொல்லிச் சித்தி கூட்டிட்டுப் போனாங்க. சின்னத் தள்ளாட்டத்தோட அக்கா, குளியலறைக்குள்ளே நுழையறதைப் பார்த்தப்ப எனக்கு மனசு என்னவோ போல வெறுமையா இருந்துச்சு. சாவு வீட்டுலேதான் சொல்லிட்டுப் போக வேணாமேன்னு ..................... நானும் கிளம்பிட்டேன்.
இதுதான் அக்காவை நான் கடைசியாப் பார்த்தது.
இனி தொடராது.............
என் உரை:
வர்ற வழியில் எல்லாம் என்னாலேதான் எல்லாருக்கும் தொந்திரவு. நான் பிறந்தே இருக்க வேணாம் அழுகையா வந்துச்சு. பஸ்ஸுலே ஏறிக் கொஞ்ச நேரம் ஆனபிறகுதான் முன்னாலே ட்ரைவருக்கு இடதுபக்கம் இருக்கும் ஸீட்டுலே, அண்ணன் தலையை ஜன்னல் கம்பியிலே சாய்ச்சுக்கிட்டுக் கண்ணை மூடி உக்கார்ந்து இருந்ததைக் கவனிச்சேன். சே..... தெரிஞ்சுருந்தா வேற வண்டியில் ஏறி இருக்கலாம்.
கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் பாராமல் வேற பக்கம் வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்தேன். என்னையும் மீறி அப்பப்பக் கண்ணு அங்கே போய்க்கிட்டு இருந்துச்சு. இன்னும் அதே தூக்கம்? எனக்குத்தான் துக்கமாத் தொண்டை அடைப்பு. சின்னப் புள்ளையா இருந்தப்ப எவ்வளவு அன்பா சிநேகமா இருந்தோம். அதெல்லாம் எங்கே போச்சு? 'தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்' னு ரத்த உறவுகளுக்குப் பழமொழியெல்லாம் சொல்லிவச்சுருக்கே அதெல்லாம் நெசந்தானா? உறவு, பாசம், சொந்தம் இப்படியான சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லாத ஒரு பெருவெளியில் நான் அப்படியே மிதந்து போறேனோ?
மெட்ராஸுக்கு ரயில் புடிக்க ஸ்டேஷனுக்குள்ளே போனப்பவும் அண்ணன் டிக்கெட்டு கவுண்ட்டர்கிட்டே நின்னுகிட்டு இருந்தார். அதே ரயிலுக்குத்தானே நானும் போகணும். அவர் நகர்ந்து போகட்டுமுன்னு இருந்துட்டு நானும் போய் டிக்கெட்டு வாங்கிக்கிட்டு வண்டி வந்ததும் லேடீஸ் பெட்டியிலே ஏறிட்டேன். அதுக்குப்பிறகு அவரையும் நான் பார்க்கவே இல்லை.
உண்மைக்கதைகளை எழுதும்போது மகிழ்ச்சியான முடிவுகள் பெரும்பாலும் வர்றதில்லை. இந்த முடிவு பிடிக்காதவங்களுக்காக ஒரு
கற்பனை முடிவையும் வச்சுக்கலாமா?
அழுவாச்சிக் காவியங்கள் பிடிக்காதவங்க...கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம். இதோ......இது உங்களுக்காகவே.
அப்பாவின் எரியூட்டலுக்குப் பிறகு அண்ணனும் மாமாவும் சேர்ந்துவந்து திண்ணைகிட்டே நின்னாங்க. கோவமா இருந்த அண்ணனுக்கு மாமாவும் அக்காவும் சமாதானம் செஞ்சு, என்னையும் ரெண்டு திட்டுத் திட்டி அண்ணன்கூடச் சமாதானமாப் போகச் சொன்னாங்க. அன்னிக்கு மாலையே கிளம்பி நானும் அண்ணனுமா மெட்ராஸ் வந்தோம். வழியெல்லாம் சின்ன வயசுலே நானும் அண்ணனும் செஞ்ச குறும்புகளையெல்லாம் ஒவ்வொன்னா நினைச்சு நினைச்சுப் பேசிக்கிட்டு இருந்தோம். நடுவில் எதோ ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்னப்ப, அண்ணன் போய் சாப்பிட என்னவோ வாங்கிவந்தார். இருந்த கொலைப்பசியில் என்னன்னு தெரியாமலேயே முழுங்கி வச்சேன். 24 மணி நேரம் ஆகி இருந்துச்சு நான் கடைசியாச் சாப்புட்டு. அண்ணனும் அதேதானாம்.
மறுநாள் காலையில் செண்ட்ரல் வந்து இறங்குனோம். வாராவாரம் வீட்டுக்கு வரணுமுன்னு கண்டிப்பாச் சொல்லிட்டுச் சிரிச்சார். நானும் வராம எங்கே போறதுன்னு முணுமுணுத்துட்டு விடுதிக்குப் பஸ் பிடிக்கப் போயிட்டேன். அவரும் பாட்டி வீட்டுக்குப் போகும் பாசெஞ்சர் வண்டிக்கு போயிருப்பார்,
வாராவாரம் ஞாயித்துக்கிழமை அண்ணனைப் பார்க்கப் போகும் வழக்கம் வந்துச்சு. சித்தியும் சொன்னாங்க அண்ணனுக்குக் கலியாணம் செஞ்சு வச்சுறலாமுன்னு. ஒரு நல்ல இடத்துலே பொண்ணு அமைஞ்சது. கலியாணம் ஜோரா நடந்துச்சு. அக்கா, மாமா குழந்தைங்க எல்லோரும் வந்துருந்தாங்க. பொண்ணு வீடு காஞ்சீபுரம். எங்களுக்கெல்லாம் நல்ல பட்டுப்புடவைகள் எடுத்துக் கொடுத்தார் அண்ணன். அதுக்குப்பிறகு அண்ணனுக்குன்னு தனியா வீடு வாடகைக்குப் பார்த்து அண்ணனும் அண்ணியும் புதுக்குடித்தனத்தை ஆரம்பிச்சாங்க.
அண்ணிக்கு என் மேலே உயிர். ரொம்ப நட்பாப் பழகுனாங்க. எனக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டாப் பொறுப்பு விட்டுச்சு அண்ணன் நினைச்சார். கோபாலுக்கும் எனக்கும் திருமணம் ரொம்ப விமரிசையா நடந்துச்சு. பெரியக்கா குடும்பம் முழுசும் அத்தையம்மா, சித்தி எல்லோரும் வந்துருந்தாங்க. சித்தப்பாச்சித்தியும் வரணுமுன்னு அண்ணன்கிட்டே தயங்கித் தயங்கிக் கேட்டதுக்கு , சரின்னு அண்ணன் தலையாட்டுனார். அண்ணி வந்தபிறகு அண்ணன் கொஞ்சம் மாறித்தான் இருக்கார். பழைய மென்மையான சுபாவம் வந்துருக்கு. அண்ணியும் இப்போ கர்ப்பமா இருக்காங்க.
பெண் குழந்தை பிறந்துச்சு அண்ணிக்கு. நாங்க எல்லாரும் காஞ்சீபுரம் போனோம். குழந்தை அச்சு அசல் எங்க அம்மாவைப்போலவே இருந்தாள்.
போதுமா? இப்படிச் சொல்லிக்கிட்டேப் போகலாம். எல்லை ஏது?
அக்காவின் கூடவே வந்து வாசிச்சுப், பின்னூட்டி ஆதரவு கொடுத்த அன்புள்ளங்களுக்கு நன்றி.
Monday, December 22, 2008
அக்கா ( பாகம் 15 ) கடைசிப் பகுதி.
Posted by துளசி கோபால் at 12/22/2008 09:51:00 PM
Labels: அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
61 comments:
/*உறவு, பாசம், சொந்தம் இப்படியான சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லாத ஒரு பெருவெளியில் நான் அப்படியே மிதந்து போறேனோ?*/
இப்படி எல்லாம் சொல்லக்கூடாது ஆமா? அதுக்குப்பிராயச்சித்தமா கடவுள் உங்களுக்கு அப்பாவிக்கோபாலையும், அன்பான மகளையும் கொடுத்திருக்கார்:-)...அப்புறம் வலைப்பதிவுச் சொந்தங்கள் நாங்கள்லாம் இருக்கோமில்ல:-))
பயந்த மாதிரியே கனக்க வெச்சிட்டீங்க.
நீங்க எழுதின மாற்று முடிவை படிக்க முடியலை...அதுக்கு முன்னாடியே மனசு கனமாயிடுச்சு! கதைய ரொம்ப ஜாலியா கொண்டு போயிட்டு சோகமா முடிச்சிட்டீங்க...
எனக்கு ஒண்ணு புரியலை...யார் எவ்வளவு நாள் இருப்பாங்கன்னு யாருக்கும் தெரியாது...இதுல இவங்க கூட பேசமாட்டேன்....இவங்களை பார்க்க மாட்டேன்னுட்டு எப்படி தான் இருக்காங்க...அப்படி இருந்து என்ன சாதிக்கப் போறாங்க....எனக்கு கொஞ்சம் கூட புரியாத விஷயத்தில இதுவும் ஒண்ணு!
*** இதுதான் அக்காவை நான் கடைசியாப் பார்த்தது. ***
அக்காவை கூட மறுபடியும் பாக்கலைங்கறது ரொம்பவுமே வருத்தத்தை தரக்கூடியது....
***அண்ணன் தலையை ஜன்னல் கம்பியிலே சாய்ச்சுக்கிட்டுக் கண்ணை மூடி உக்கார்ந்து இருந்ததைக் கவனிச்சேன். சே..... தெரிஞ்சுருந்தா வேற வண்டியில் ஏறி இருக்கலாம். ***
உங்களுக்குமா அண்ணன் மேல வெறுப்பு...
நீங்களாவது போய் பேசி இருக்கலாம்
***உறவு, பாசம், சொந்தம் இப்படியான சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லாத ஒரு பெருவெளியில் நான் அப்படியே மிதந்து போறேனோ?***
எல்லோருமே அதை நோக்கித் தான் போகிறோமோ?
இதுதான் அக்காவை நான் கடைசியாப் பார்த்தது....
அக்கா என்ன பண்ணீனாங்க, இன்னும் பேசாம இருக்க...இப்பக்கூட ஒன்னும் கெட்டுப் போகலை...நீங்க பெரியவங்க, டீச்சர் வேற...சரியானத செய்யுங்க டீச்சர்...
வழியெல்லாம் சின்ன வயசுலே நானும் அண்ணனும் செஞ்ச குறும்புகளையெல்லாம் ஒவ்வொன்னா நினைச்சு நினைச்சுப் பேசிக்கிட்டு இருந்தோம்.// இந்த வரி இந்த பாடலுக்கு மு வரிசையை பிடிச்சிகிச்சி ரீச்சர் **** ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு****எனக்கும் ஒரு பாசக்கார அண்ணா இருந்தான் :-((
வாங்க தங்ஸ்.
உண்மைதான். இப்போ வலைப்பதிய ஆரம்பித்தபின் தனிமை என்பதே இல்லை. சொந்தங்கள் கூடிப்போயிருக்கு:-)))))
உண்மை சுடும் என்பதைவிட கனக்கும் என்று சொல்லலாமா?
வாங்க அதுசரி.
மனுச ஜென்மத்துக்கு மட்டுமா இந்த ஈகோ இருக்கு????
நடமாடும் எல்லா உயிருக்கும் இது பொது.
ஒருவேளை செடிகொடிகளுக்கும் இருக்கோ என்னவோ!!!
வாங்க நரேன்.
மனுசங்களுக்கு 'பயம்' இருக்கு. எந்த ஒரு காரியத்துக்கும் இப்படி நடந்துருமோன்னு எதிர்மறையா நினைச்சு, அதையே மனசுலே வச்சுக்கிட்டுப் படும் வேதனை இருக்கே....அப்பப்பா...........
நானாகப் போய்ப் பேசி, அவர் ஏதாவது சொல்லிட்டாருன்னா..... அதுவும் எல்லார் முன்னாலேயும்......
நம்ம தன்மானம் அடிவாங்கிருமே..........
இது இந்தக் கதைக்கு மட்டுமில்லை....பொதுவாவே பலவிஷயங்களில் நாம் நினைப்பதற்கு மாறா நடந்துருமோ என்ற பயம்தான்(-:
வாங்க பாண்டியன் புதல்வி.
சரியானதுன்னு மனசு நினைப்பதைத்தான் எப்பவும் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.
நியாயங்கள் என்று நாம் சொல்வது ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு மாதிரி.
அதுவுமில்லாமல், மேலே நரேனுக்குச் சொன்னதையும் சேர்த்துப் படிங்க.
வாங்க ஹேமா.
எனக்கு அண்ணன் தங்கைகள் ஏராளமா இருக்காங்க.
ஒரு அண்ணனைக் கோட்டை விட்ட பின் நிறைய அண்ணன்கள் கிடைச்சாச்சு.
கூடப்பிறந்தால் தான் உறவா?
வாங்க இலா.
நல்ல பாட்டா இருக்கே! எந்தப் படம்?
துளசி,
எல்லா பகுதிகளையும் தொடர்ந்து படித்துக் கொண்டு வந்தேன். மிகவும் நுணுக்கமாக பதிந்திருந்தீர்கள். படிக்க படிக்க கண் முன் விரியும் காட்சிகள். உங்கள் ஞாபக சக்தியும், வழுக்கிக் கொண்டு போகும் எழுத்து நடையும் இந்த அனுபவங்களை அப்படியே படிப்பவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.
//மனுச ஜென்மத்துக்கு மட்டுமா இந்த ஈகோ இருக்கு????//
குறிப்பா ஆசியர்கள், அதிலும் இந்தியர்கள், அதிலும் தென் இந்தியர்கள் கலாச்சாரத்தில் ஊறிப் போன ஒன்று தான் இந்த ஈகோ.
எல்லாத்துக்கும் உதாரணம் சொல்ற அமெரிக்காவ எடுத்துக்குவோம். இங்கு எல்லாம் ஸ்ரைட் ஃபார்வர்ட். உனக்குப் பிடிச்சிருக்கா நீ செய், என்னை தொந்திரவு பண்ணாதே. கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் என யாவருக்கும் பொதுவாய் இருக்கிறது.
இந்த ஈகோ இல்லை என்றால், உங்கள் கற்பனை முடிவு இன்னும் சிறப்பாக நிஜத்தில் இருந்திருக்கும்.
வீட்டுக்கு வீடு வாசப்படி. ஹிம்ம்ம்ம் மனதைக் கனக்க வைத்துவிட்டீர்கள்.
வாங்க ஸ்ரீதர்.
உங்க பின்னூட்டங்களைப் படிக்கும்போது, இன்னும் நன்றாக எழுதணும், எழுத்துநடையை மேம்படுத்திக்கணும் என்ற ஆதங்கமும் கூடவே வருது.
முயற்சிதான் திருவினை ஆக்கும்.
ஆதரவுக்கு நன்றி.
வாங்க சதங்கா.
நம்ம ஆன்மீகத்துலே ஒவ்வொருவரும் தனி ஆத்மா ன்னு சொல்றோமே அதை அவுங்க கடைப்பிடிக்கறாங்க இல்லே!!!
அதான் நீங்க சொல்லிட்டீங்களே...நம்ம கலாச்சாரத்தில் ஊறிப்போச்சுன்னு அதுதான் உண்மை.
எப்படியோ அந்தச் சங்கிலியில் இருந்து விடுபட்டக் கடைசிக் கண்ணியாக நான். வரும் தலைமுறை வேறுமாதிரி வளருது. நல்லா இருக்கட்டும்.
உங்கள் கற்பனை முடிவை நான் படிக்கலை. முதலில் இதை எல்லாம் துளசி ஏன் எழுதுறாங்கன்னு ஒரு எரிச்சல் (sorry) வந்தது. நிறுத்த முடியாம முழுதும் படிச்சேன். நான் உண்மைக் கதைகளை எழுதறதே இல்லை. அதைவிட சம்பவங்களை லேசா திரிச்சு சில சமையம் கொடூரமாக்கூட எழுதிறுவேன்.
நமது மகிழ்ச்சி, சுகம், துயரம், காயங்கள், அவமானங்கள் எல்லாமே நெருங்கிய உறவுகளோடுதான். எது எப்படியானாலும் நம்மில் அவர்கள் பகுதி, அவர்களில் நாம் பகுதி. அதனாலேயே நான் உறவுகளிடம் பேசாமல் இருப்பத்ல்லை.
அப்புறம் வெறுப்பு, கோபம் இரண்டும் ரொம்ப கனம்.
என் அப்பா மரணம்கூட ரொம்ப வித்தியாசம்தான். ஒரு நாள் அதைப்பற்றி எழுதனும்...
(எழுத்து பிழைகள் இருந்தால் மண்ணிக்கவும்)
கடைசியில் அண்ணன் உங்களுடன் பேசினாரா விரிசல் சரியானதா எனத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன். ஆனால் அக்காவைப் பார்த்ததும் அதுதான் கடைசி எனக் கடைசிப் பாகத்தை மனசுக்கு கனமான பாகமாகவே தந்து விட்டீர்கள். அக்கா பெண்களாவது தொடர்பில் இருக்கிறார்களா?
உண்மை தெரிந்த பின் கற்பனை முடிவு ஒட்டவேயில்லை, போங்க.
அக்கா இன்னும் இருக்காங்களா, கற்பனைக்கதை மனசுல ஒட்ட மாட்டேங்குது நிஜக்கதை படிச்சப்பறம்.
டீச்சர், சொல்வது சரியான்னு தெரியலை... பேசாமல் இருப்பதைவிட அபப்ப சண்டை போட்டாலாவது நல்லா இருக்காது?
துளசி, அன்னிக்கு பஸ்ஸில நீங்க அழுததை நினைச்சூ இப்ப எனக்கு கலக்கமா இருக்கு. மனசைப் பிசையற மாதிரி இப்படி ஒரு கஷ்டமா
எதுக்குத்தான் துவேஷம் வளருதோ. தெரியலை.
நல்லா இருங்கப்பா.
கற்பனை முடிவை படிக்கனும்னு தோணலை டீச்சர்..:(
சரி விடுங்க நடந்தவை நடந்தவைகளாக மாறிடுச்சே.. இனி விடலாம்.
அந்த மதினா பாட்டி அட்ரஸ் கொடுங்க... நாளை மறுநாள் ஊருக்கு போகும் போது நலம் விசாரிச்சிட்டு வர்ரேன்.. ;)
:(
இப்படி ஒரு கடைசிப்பகுதியை எதிர்பார்க்கலை!!!!!ஒரு பகுதியில் அடைத்துகொள்கிற கதவு இன்னொரு பக்கம் திறக்க தான் செய்யுது டீச்சர். தங்ஸ் மிகச்சரியா சொல்லி இருக்காங்க.
ஒவ்வொரு பாகம் படிச்சு முடிச்சவுடன் என்னோட அக்காவுக்கு போன் பண்ணிருவேன்.....ஆனா இன்னைக்கு?????
என்னென்னு சொல்ல....;(
எப்படியும் கஷ்டமான முடிவாக தான் இருக்குமுன்னு நினைச்சேன் அதே போல தான் இருக்கு.
கற்பனை எல்லாம் வேண்டாம் டீச்சர்..
அக்காவையும், அண்ணனையும் பற்றிய இப்போதைய நிஜம் என்ன?? அதுக்கு பிறகு அக்காவை பார்க்கவேல்லன்னு சொல்லியிருக்கிங்க ஏன்னு தெரிஞ்சிக்க வேண்டும் போல இருக்கு.
\\உறவு, பாசம், சொந்தம் இப்படியான சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லாத ஒரு பெருவெளியில் நான் அப்படியே மிதந்து போறேனோ?\\
அப்படி எல்லாம் ஒன்னும் போகல நீங்க...அதான் கூட இம்புட்டு பேரு இருக்கோம்ல...அப்புறம் எதுக்கு இப்படி எல்லாம் பேசுறிங்க.
அடுத்த அனுபவத்துக்கு வெயிட்டிங் ;)
//உண்மைக்கதைகளை எழுதும்போது மகிழ்ச்சியான முடிவுகள் பெரும்பாலும் வர்றதில்லை. இந்த முடிவு பிடிக்காதவங்களுக்காக ஒரு
கற்பனை முடிவையும் வச்சுக்கலாமா?//
மனம் பாரமாகி விட்டது.இந்த வரிகளுக்கும் கீழே நகர முடியவில்லை.
இப்படித்தான் சில உறவுகள் கண்ணை விட்டு மறைந்தாலும், நெஞ்சை விட்டு அகலாது இருக்கும்... மற்றுமொரு சாட்சி....(எப்பவும் போல இப்பவும் ஆச்சரியமா இருக்கு எப்படி இப்படி எளிமையா கோர்வையா எழுதறீங்களோ)
சரி பகிர்ந்துகிட்டதால லேசாகிட்டீங்கள்ள... அத சொல்லுங்க இத சொல்லுங்கன்னு கேக்கறப்ப சொல்லும்போதான உங்க கஷ்டத்தை கவனிக்கவிட்டுபொயிடறேன்..
துளசி,
கடந்த இரண்டு மணிநேரம் உங்களுடன், துளசியாய் மாறி அக்காவை முதன் முதல் மணப்பெண்ணாக பார்த்து, அக்காவுடன் சிரித்து பேசி, சினிமாவுக்கு போய், திண்ணையில் அமர்ந்து, நானும் பயணித்தேன்.
( இதில் சின்னக்கா அண்ணன் சண்டை, பூ ஜடை பின்னியது எல்லாம் நீங்கள் முன்பு இட்டிருந்த குழுமப்பதிவுகளில் படித்த நினைவு வந்தது. )
நீங்களாகவே மாறி நான் உங்களுடன் பயணித்தேன் என்றால் அது உங்கள் எழுத்து நடைக்கு வெற்றி.
இதை என்னால் ஒரு பதிவாக பார்க்க முடியவில்லை. என் பாட்டி, அம்மாக்கள் சொல்லும் பழைய கதை கேட்கும் சுவாரஸ்யத்துடன், it took me to a diff world.
இப்பொழுது, இந்த கடைசி அத்தியாத்தில், கற்பனை அத்தியாயத்தை படிக்கப் பிடிக்காமல், நிஜத்துடன் நிறுத்திவிட்டேன்.
கண்ணின் நீர் பெருக்கு மட்டும் இன்னும் நிற்கவில்லை.
அன்புடன்,
ஷக்தி.
Teacher,(This is how everyone calls you, I also would like to call u in the same way)
I am reading your blog for quite sometime. Really amazing,your way of writing.
Never expected you would give this kind of ending for 'AKKA'.
You are really a good narrator.
Thanks
Jomma
வாங்க சுகு.
//அப்புறம் வெறுப்பு, கோபம் இரண்டும் ரொம்ப கனம்.//
இது 1000% உண்மை.
//டீச்சர், சொல்வது சரியான்னு தெரியலை... பேசாமல் இருப்பதைவிட அபப்ப சண்டை போட்டாலாவது நல்லா இருக்காது?//
தெரியலையே..... சண்டை வேகத்தில் கோபமான வார்த்தைகள் வந்து விழுவது சகஜம் என்றாலும், சொன்னச் சொல்லை அள்ள முடியுமா? நாவினால் சுட்ட வடு.
இதுவும் ஒருவகை மானபங்கம் மாதிரி(-:
எழுதிகிட்டே இருங்க எழுத்துப்பிழைகளைக் குறைச்சுக்கலாம்.
வாங்க ராமலக்ஷ்மி.
கற்பனை முடிவை முதலில் சேர்த்துருக்கணும். அப்புறம் அது கனவு ஸீன்னு சொல்லி இருக்கலாமோ:-)
வாங்க சின்ன அம்மிணி.
தப்பு செஞ்சுட்டேன்.
கற்பனையை முதலில் போட்டு நிஜம் பின்னாலே வந்துருக்கணும்.
படிக்கலைன்னு சொன்னா.....கஷ்டப்பட்டு யோசிச்சக் கற்பனை வீணாப் போச்சே:-))))
வாங்க வல்லி.
உண்மை உணர்வைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றிப்பா.
வாங்க தமிழ் பிரியன்.
மதீனா பாட்டியா? உதைக்கப் போறாங்க:-)))))
வேணுமுன்னா... மதீனாப் பெரியம்மான்னு சொல்லலாம்.
அவுங்க அந்த ஏரியா இல்லை.
வாங்க கொத்ஸ்.
வாங்க சிந்து.
அடைச்சது ஒரு கதவு மட்டுமே.
இந்தப் பக்கம் அரங்கமே திறந்துகிடக்கு:-))))
வாங்க கோபி.
நோ டெம்ப்ளேட் பின்னூட்டம்?
இப்படி அதிர்ச்சி கொடுத்தால் எப்படி?:-)))
//அப்படி எல்லாம் ஒன்னும் போகல நீங்க...அதான் கூட இம்புட்டு பேரு இருக்கோம்ல...அப்புறம் எதுக்கு இப்படி எல்லாம் பேசுறிங்க. //
இது ரொம்பப் பிடிச்சிருக்குப்பா. ரொம்ப நன்றி. ச்சும்மாப் பேச்சுக்காகச் சொல்லலை. உண்மையாவே மனசின் உள்ளில் இருந்து வருது, நன்றி.
வாங்க ராஜ நடராஜன்.
//மனம் பாரமாகி விட்டது.இந்த வரிகளுக்கும் கீழே நகர முடியவில்லை.//
புரிதலுக்கு நன்றி.
வாங்க கிருத்திகா.
//இப்படித்தான் சில உறவுகள் கண்ணை விட்டு மறைந்தாலும், நெஞ்சை விட்டு அகலாது இருக்கும்... //
இதேதான். ஒரு வரியில் சொல்லிட்டீங்க. உண்மைதான்.
நன்றிப்பா.
வாங்க கயலு.
கஷ்டத்துக்கு என்ன பஞ்சமா?
நிறையக் கிடக்கு.
பகிர்ந்துட்டால் ஆச்சு:-)
வாங்க ஷக்தி.
இப்படி எழுதி உங்க அன்புக்கு அடிமையா ஆக்கிட்டீங்களே.
கூடவே வந்ததுக்கு நன்றிப்பா. துணை என்பது வாழ்க்கையில் (அது எழுத்தே ஆனாலும் சரி ) ரொம்ப முக்கியம்.
நீங்க சொன்னது உண்மைதான்ப்பா. அது வேறு ஒரு உலகம்!!!
வாங்க ஜோம்மா.
புதுவரவு.
நலமா? டீச்சர்ன்னே கூப்பிடலாம். பிரச்சனையே இல்லை:-))))
உண்மையை மட்டுமே சொல்லணுமுன்னா அந்த முடிவுதான் சரி.
வருகைக்கு நன்றி.
//அழுவாச்சிக் காவியங்கள் பிடிக்காதவங்க...கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம். இதோ......இது உங்களுக்காகவே.//
இல்ல டீச்சை நான் இத படிக்கவே இல்லை. எனக்கு அழுகாச்சி கதைகள் பிடிக்காதுதான். ஆனா அது தான் ஆழமா உள்ளத்தில பதிய செய்யும். அது போல தான் இந்த கதையும். ஸாரி நிஜமும். உண்மையிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப சுவாரஸமா படிச்ச ஒரு உண்மை கதை இது.
ஆனாலும் அண்ணன் இவ்வளவு ரோஷக்காரரா இருக்ககூடாது. அவரோட கோணத்தில இதே கதையை கேக்கனும் டீச்சர்
துளசி டீச்சர்,
உங்க கதை மிகவும் அருமை. ஆனா இப்போ உங்க அக்கா அண்ணா எல்லாம் எப்படி இருக்காங்க? கதையின் நாயகி அக்கா அவுங்க பசங்க என்ன பண்ணுறாங்க எப்படி இருக்காங்க? ( அவுங்கள பாக்கட்டிலும் அவுங்கள பத்தின விசயங்கள கட்டாயம் நீங்க தெரிஞ்சுகிட்டு இருப்பீங்க? அக்காக்கு உங்க மேல என்ன கோவம்? எதோ மன வருத்தத்துல அப்படி சொல்லிட்டாங்க. பிறகு ஏன் நீங்க அவுங்கள பாக்க முடியாம போச்சுங்குரத ஒரு பதிவ போட்டிங்ஙணா ரொம்ப புண்ணியமா போகும் ) அப்படிங்குறத கட்டாயம் சொல்லுங்க உங்க கதைய நான் தொடர்ந்து படிச்சாலும் இதுதான் நான் உங்களுக்கு (மட்டுமில்ல பதிவுலகத்துகே ) எழுதுற முதல் பின்னூட்டம். அது எதுக்குன்னா? நீங்க அவுங்கள பத்தி கட்டாயம் சொல்லனும்குரதுக்காக. தயவுசெய்து உங்க அக்கா அண்ணா குடும்பத்துகூட இன்னைக்கு உங்க தொடர்பு எப்படி இருக்குங்குரத சொல்லணும்
கற்பனை முடிவ நான் படிக்கல அது அவசியமும் இல்ல நீங்க இத உண்மை கதைனு சொல்லாம இருந்திருந்த இத்தன கேள்வி வந்து இருக்காதுன்னு நினைக்கிறேன்
கணேஷ் குமார் கோ
அக்காவின் இறுதிப் பகுதி மனதை மிகவும் கனக்கவைத்தது டீச்சர். விழி கசிய இதை எழுதவேண்டியதாயிருக்கிறது.
அக்கா, அன்றிருந்த மன அழுத்தத்தில், கவலையில், ஆதங்கத்தில் அப்படிச் சொல்லியிருப்பாரென நினைக்கிறேன். திரும்பவும் அவரைச் சந்தித்திருக்கலாம். சிறுவயதிலிருந்து உங்களைத் தன் குழந்தைகளிலொருவராகப் பார்த்தவர் இல்லையா?
அண்ணனுடனான உங்கள் உறவு முறிந்தது குறித்தும் கவலையாக உள்ளது. சிறுவயதில் உங்கள் கைப் பிடித்து பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றவரல்லவா?
இப்பொழுது நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பது அவர்களுக்குத் தெரியுமா? இப்பொழுதாவது அவரை,அக்காவை, ராணியை, மாமாவை சந்திக்க முயற்சி செய்யலாமே டீச்சர் ?
இப்பொழுது எல்லோருமே பெரியவர்கள். பழைய கோபதாபங்களெல்லாம் காலத்தோடு கரைந்து போயிருக்கும்.
நீங்கள், கோபால் அண்ணா, மகள் எல்லோரும் ஒருமுறை இந்தியா செல்லவேண்டும்.
அக்கா, அவரது பிள்ளைகளின் குடும்பம், அண்ணா, அவரது பிள்ளைகளின் குடும்பம் எல்லோரையும் ஒன்றாக சந்தித்து, விரைவில் அது குறித்து புகைப்படங்களோடு பதிவிட்டு, எங்களை மகிழ்விக்கவேண்டும்.
இதுதான் எனது ஒரே விருப்பம் டீச்சர்..!
அப்படியே வெளில வந்துடுங்க டீச்சர்.
அதுக்கு மேல சொல்லத்தெரியல.
வேணும்னா இனைப்புல இருக்கிற என் முருங்கை மர பதிவபடிங்க..
மிச்ச பகுதிகளையும் சேர்த்துப் படிச்சு முடிச்சேன். ரொம்ப பாரமா இருந்தது.
எனக்கு விருப்பமில்லாத உறவுகளை நான் தொடர்வதில்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டதால, உங்க சோகம் கொஞ்சம் புரியுது. ஆனா(/எனவே), உங்க நிலைமையில் இருந்திருந்தா, "அப்பா"வை என்னோடு தங்க வச்சிருக்க மாட்டேன், என் பிறவிக் குணம் அது.
உங்கள் புதிய உறவுகள் தொடர/வளர வாழ்த்துகள்.
உங்களோட அந்தச் சிரிப்புக் கற்பனையை நான் படிக்கலை டீச்சர்.
நீங்க முடிச்சவிதம் என்னை ஏதோ பண்ணியது.
இதுதான் அக்காவை நான் கடைசியாப் பார்த்தது.
இனி தொடராது.............
இதுவரை வந்ததே போதும் என்றாகிவிட்டது,
இதைப்படித்தபின் எனக்கு.//
உன்னைவச்சுக்கிட்டுப் பட்டதெல்லாம் போதும். இன்னும் என்னென்ன செஞ்சு எங்களைக் கொல்லப்போறயோ?'
எனக்குத்தான் துக்கமாத் தொண்டை அடைப்பு. சின்னப் புள்ளையா இருந்தப்ப எவ்வளவு அன்பா சிநேகமா இருந்தோம். அதெல்லாம் எங்கே போச்சு? 'தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்' னு ரத்த உறவுகளுக்குப் பழமொழியெல்லாம் சொல்லிவச்சுருக்கே அதெல்லாம் நெசந்தானா? உறவு, பாசம், சொந்தம் இப்படியான சொற்களுக்கெல்லாம் பொருளே இல்லாத ஒரு பெருவெளியில் நான் அப்படியே மிதந்து போறேனோ?/./
இதைப்படித்தபின் எனக்கும் துக்கம் வந்துவிட்டது.
தப்பா எடுத்துக்காதீங்க மேடம்//
இப்போ உங்க அண்ணன் அக்கா குடும்பத்தோட பேச்சுத்தொடர்பு இருக்கா.
உங்க மாமா எப்படியிருக்கார்.
எனக்கு ஒண்ணு புரியலை...யார் எவ்வளவு நாள் இருப்பாங்கன்னு யாருக்கும் தெரியாது...இதுல இவங்க கூட பேசமாட்டேன்....இவங்களை பார்க்க மாட்டேன்னுட்டு எப்படி தான் இருக்காங்க...அப்படி இருந்து என்ன சாதிக்கப் போறாங்க....எனக்கு கொஞ்சம் கூட புரியாத விஷயத்தில இதுவும் ஒண்ணு!//
அதுசரி சொன்னதையே நானும் மறுமொழிகிறேன்.
வாங்க நான் ஆதவன்.
அண்ணனோட வெர்ஷனும், அக்காவோட வெர்ஷனுமா அவுங்க பார்வையில் இருந்து பார்த்தால் இன்னும் புதுசுபுதுசா விஷயங்கள் கிடைக்கலாம்.
என் பார்வையில் இருந்து எழுதும்போது 'நான் குற்றம் அற்றவள்' என்றுதானே சொல்வேன்:-)))))
வாங்க கணேஷ் குமார் கோ.
பதிவுலகத்துக்கே முதல் பின்னூட்டமா?
அடடே...... வாங்க. வாங்க. அடிக்கடி வந்து போங்க.
//நீங்க இத உண்மை கதைனு சொல்லாம இருந்திருந்த இத்தன கேள்வி வந்து இருக்காதுன்னு நினைக்கிறேன்//
எந்த உண்மைக் கதையிலும் கொஞ்சம் கற்பனை கலந்துதானே இருக்கும்? விகிதாச்சாரம் கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம்.
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரத்து நூறு' எழுதும்போது வரும்.
கொஞ்சம் நாள் ஆகும், மனதை ஒருமுகப்படுத்திக்க வேணுமில்லையா?
வாங்க ரிஷான்.
அருமையான பின்னூட்டம்.
காலம் எல்லா ரணங்களையும் மற்றும் என்பது உண்மைதான்.
வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் விட்டுட்டேன். இனிமேலாவது, கொஞ்சம் 'பயத்தை' எடுத்தெறிஞ்சுட்டு
என்ன செய்யலாமுன்னு பார்க்கணும்.
வாங்க குடுகுடுப்பை.
முருங்கை மரம் படிச்சேன்.
அதே அதே......
நடப்பது நடக்கும். நாம் ஒன்னும் மெனெக்கெட வேணாம்.
துக்கத்தைச் சுமக்கணுமுன்னு பிரார்த்தனையா?
வேணாம். வெளியில் வந்தாச்சு. நன்றி
வாங்க கெக்கேபிக்குணி.
கெக்கேபிக்கேன்னு உளராமக் கடைசியாச் சொன்னவரிகளுக்கு நன்றி:-)))
எது நடக்கணுமோ அது நடந்தேவிட்டது!
வாங்க அமித்து அம்மா.
எத்தனை பெரிய கஷ்டம், துக்கம் வந்தாலும் 'இதுவும் கடந்து போகும்' என்பதுதானே விதி.
துக்கப்பட ஒரு காலம் மகிழ்ந்திருக்க ஒரு காலம் இப்படி ஒரு சுழற்சிக்குள்ளே ஓடுவதுதான் வாழ்க்கை.
பொறுத்திருந்து பார்க்கணும், நடக்கப்போவது என்னன்னு.
dear sister
namasthe
it is really touching
memories dont leave like people do
they always stay with you
whether they be good or bad
they are something glad to have
wish to hear that at least the next generation are in touch
affectionately
r radhakrishnan
வாங்க ராதாகிருஷ்ணன்.
வணக்கம். நலமா? முதல்முறையா வந்துருக்கீங்கபோல.
நீங்க சொல்வது ரொம்பச் சரி. இளைய தலைமுறைகள் இந்தமாதிரி இல்லாம நல்லமுறையில் உறவை வளர்ப்பாங்க என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கு.
வருகைக்கு நன்றி.
அக்கா...
நீங்க சொன்னதே தான்.. சின்ன வயசுல இல்லாத..ஈகோ, நான் நீ என்கிற நிஜ போட்டி, வருஷக்கணக்குல பார்க்காட்டியும் பெர்ரிய அளவுல பாதிப்பின்மை.. இது எல்லாம் ஏன் ஏழு கழுத வயசானதும் வருது..
மீண்டும் ஒரே மூச்சுல விட்டதை படிச்சேன்... ஆல்ரெடி நான் ஹோம்சிக் ல சிக்கீட்டு இருக்கேன்... இந்த தொடரை தொடுவதுக்கே எனக்கு பயமா இருக்கும் எப்பவும்... ம்ம்ம்ம்ம்
அப்பாவின் நியாபகம் எனக்கும் இப்போ... ம்ம்ம்ம்..
என்னமோ என்னமோ சொல்லத் தோனுது... ஆனா முடியலை...
அடி மனசில் இருந்து சொல்றேன்... நீங்க நல்லா இருக்கனும்...
வாங்க மங்கை.
//இது எல்லாம் ஏன் ஏழு கழுத வயசானதும் வருது..//
இதுவா....? ஏனா?
ரொம்ப சிம்பிள்.
போறகாலம் வந்துக்கிட்டு இருக்குன்னு காமிக்கத்தான்:-)
Post a Comment